“சமாதானபிரபு”வின் கீழ் உலகளாவிய பாதுகாப்பு
“தாவீதின் சிங்காசனத்தையும் அவன் ராஜ்யத்தையும் அவர் பலப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்கென, அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை. சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”—ஏசாயா 9:7, NW.
பரிபூரண மனித-குழந்தையாகிய இயேசுவின் பிறப்பு எப்படி அசாதாரணமான சந்தோஷத்திற்குரிய ஒரு சம்பவமாக இருந்ததோ, அதே விதமாக வெகு நாட்களுக்கு முன்பு வாக்குகொடுக்கப்பட்ட அவருடைய ராஜ்யத்தின் பிறப்பும் அளவிடமுடியாத மகிழ்ச்சிக்குக் காரணமான ஒரு சம்பவமாக இருக்கும். (சங்கீதம் 96:10-12) நவீன சரித்திரத்தின் உண்மைகளின்படி, அந்த அரசாங்கம் மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவின் தோள்களின் மீது 1914-ல் வைக்கப்பட்டது. இன்று ஐக்கிய நாட்டுச் சங்கம் இருப்பதானது அந்த உண்மையைப் பெய்யாக்கிவிடாது. ஐ.நா.-வின் 159 அங்கத்தினர்களின் அரசர்களில் ஒருவரும் தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆகிலும் கூட்டுச் சதிசெய்யும் அந்த உலக அமைப்பின் சாசனமானது, மனிதவர்க்கத்திற்குச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் உத்தரவாதத்தை அவர்களுக்கு நியமித்திருக்கிறது.
2 ஆனால் ராஜ்யத்திற்கான யெகோவாவின் உடன்படிக்கை இதுவரை ஒருபோதும் நீக்கப்படவில்லை. ஏசாயா 9:7-ல் “தாவீதின் சிங்காசனத்தை” என்ற சொல், தாவீதுடன் கடவுள் செய்திருக்கும் முடிவில்லா ராஜ்யத்திற்கான உடன்படிக்கையைத் திடப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், அதை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவருவார் என்பதையும் வாக்குகொடுத்திருக்கிறார். யெகோவா தமது உடன்படிக்கைக்கு உண்மையாக இருப்பார் என்பது சங்கீதம் 89:3, 4, 35, 36-ல் தெளிவுபடுத்தப்படுகிறது: “என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி: என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன். ஒருவிசை என் பரிசுத்தத்தின் பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய் சொல்லேன். அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைத்திருக்கும்.” அந்த உடன்படிக்கையும், அதோடுகூட “சமாதானபிரபு” என்ற பட்டமும், உலகளாவிய பாதுகாப்பைக் கொண்டுவரும் உத்தரவாதத்தை இயேசு கிறிஸ்துவுக்கு நியமிக்கிறது.
3 ஆகிலும், யெகோவா தேவன் தமது வாரிசுரிமையுள்ள இளவரசனின் தோள்களின்மீது அரசாங்கத்தை வைப்பதற்கான அந்த நேரம், மேலே பரலோகத்திலோ கீழே பூமியிலோ சமாதானம் ஏற்படுவதற்கான ஆண்டாக இல்லை. வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தின்படி, ராஜ்யத்தின் பிறப்பைப் பின்தொடர்ந்து பரலோகத்தில் யுத்தம் உண்டாகும். பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய்களும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு விரோதமாக சண்டை செய்தார்கள், மேலும் புதிதாக முடிசூட்டப்பட்ட அரசன் தம்முடைய பரிசுத்த தூதர்களோடுகூட அந்தப் பேய்களின் சேனைகளுக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இது சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து நம்முடைய பூமிக்குத் தள்ளப்படுவதில் விளைவடைந்தது. ஆகவே, “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்ற கூக்குரல் எழும்பிற்று. (வெளிப்படுத்துதல் 12:12) பிசாசு கீழே தாழ்த்தப்பட்டது முதற்கொண்டு, வருந்தத்தக்க விதமாக நம்முடைய பூமி ஒப்பற்ற வன்முறையும் யுத்தமும் நடைபெறுவதற்கான இடமாகிவிட்டிருக்கிறது. “சமாதானபிரபு”வின் ஆட்சி மனிதவர்க்கத்திற்கு எவ்வளவாக தேவைப்படுகிறது, ஏனெனில் அது உலகளாவிய பாதுகாப்பில் விளைவடையும்!
4 ஏசாயா 9:6-ன் பிரகாரம், “சமாதானபிரபு,” என்ற பட்டத்தோடுகூட இயேசு கிறிஸ்துவின் மகிமைபொருந்திய நாமத்துடன் வேறு பட்டங்களும் சேர்க்கப்பட இருந்தன. அதில் ஒன்று “வல்லமையுள்ள கடவுள்.” அவர் திருத்துவத்தில் சமநிலையிலுள்ள ஒருவர் போல் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று அழைக்கப்படவில்லை. அவர் உயிரித்தெழுப்பப்பட்ட தினத்தன்றுங்கூட, இன்னமும் யெகோவாவுக்குக் கீழ்ப்பட்டவராக இருக்கிறார் என்பதைத் தெரிவித்தார். மகதலேனா மரியாளுக்குத் தோன்றி, கவலைப்பட்டுகொண்டிருந்த தம்முடைய சீஷர்களிடம் அவளை அனுப்பி, அவர்களுடைய பிதாவினிடமும் தம்முடைய பிதாவினிடமும், அவர்களுடைய தேவனிடமும் தம்முடைய தேவனிடமும் ஏறிப்போகிறார் என்பதைத் தெரிவிக்கும்படி சொன்னார். (யோவான் 20:17) இந்நாள்வரை அவர், “தேவாதிதேவனாகிய” யெகோவாவின் வணக்கத்தில் எல்லா சிருஷ்டிகளையும் தலைமைதாங்கி வழிநடத்தி வருகிறார். (தானியேல் 11:36) ஆம், இயேசுவுக்கு ஒரு கடவுள் இருக்கிறார், இயேசு தாமே அந்தக் கடவுள் அல்ல, ஆனால் பரம பிதாவாகிய யெகோவாவே அவர். சர்வலோகத்தின் நிரந்தரமான சமாதானத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் எவ்வளவு மகத்தான விதத்தில் அந்த “சமாதானபிரபு” முன்னோடியாக சேவை செய்கிறார்.!
5 நித்திய காலத்துக்கும், மகிமைப்படுத்தப்பட்ட தேவ குமாரன் எல்லா புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிப்புகளையும் இந்த ஒரே உயிருள்ள தேவனாகிய யெகோவா தேவனின் வணக்கத்தில் தொடர்ந்து தலைமைதாங்கி வழிநடத்துவார். உயர்த்தப்பட்ட தேவ குமாரன் இதைச் செய்வதற்குப் பிரசித்திப்பெற்ற விதத்தில் தகுதிபெற்றவராய் இருக்கிறார். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லா சிருஷ்டிப்புகளிலும் மகிமைப்படுத்தப்பட்ட தேவ குமாரன் மட்டுமே யெகோவாவை இவ்வளவு நீண்ட காலமும் இவ்வளவு நெருங்கிய விதத்திலும் அறிய வந்திருக்கிறார். 1 கொரிந்தியர் 2:11-ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறான்: “மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?” இயேசு கிறிஸ்துவின் காரியத்திலும் இது உண்மையாக இருக்கிறது. முதல் மனிதனின் சிருஷ்டிப்பில் அவரால் உபயோகிக்கப்பட்ட போதிலும், அவர்தாமே மனிதனாகி, இவ்வுலகத்திற்குரிய சூழ்நிலைகளால் சூழப்படுவதும், முதல்தரமாக மனிதனின் உணர்ச்சிகளை அவர்தாமே அனுபவிப்பதும் மற்றொரு காரியமாக இருந்தது. ஆகவே, பூமியில் மனிதனாக இருக்கையில், “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்”டார் என்று எழுதப்பட்டிருக்கிறது. (எபிரெயர் 5:8) ‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்படவும்’ “வல்லமையுள்ள கடவுள்” என்ற பட்டம் கொடுக்கப்படவும் அவர் நிச்சயமாகவே நம்பத்தகுந்தவராகவும் தகுதியுள்ளவராகவும் தம்மை நிரூபித்திருந்தார்.—மத்தேயு 28:18; பிலிப்பியர் 2:5-11-ஐ ஒப்பிடவும்.
“ஆலோசனைக் கர்த்தா,” ”நித்திய பிதா”
6 இந்த எல்லா பலத்த காரணங்களினிமித்தம், கடவுளுடைய பரலோக பிரபு மனிதவர்க்கத்தை “ஆலோசனைக் கர்த்தா”வாக மனிதவர்க்கத்துக்குச் சேவை செய்யக்கூடும். (ஏசாயா 9:6) அவருடைய ஆலோசனை எப்போதுமே ஞானமுள்ளது, பரிபூரணமுள்ளது, பிழையற்றது. யெகோவா தேவனுக்கும் புதிய உடன்படிக்கைக்குள் எடுக்கப்பட்டவர்களுக்கும் இடையே மத்தியஸ்தராக, கடந்த 19 நூற்றாண்டுகளாக அவர் நிச்சயமாகவே ஆலோசனைக் கர்த்தாவாக சேவை செய்துவந்திருக்கிறார். இப்பொழுது, 1935 முதற்கொண்டு, “வேறே ஆடுகளின்” ஒரு “திரள் கூட்டம்” அவருடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, மிகச்சிறந்த போதனையையும் வழிநடத்துதலையும் பெற்றுவருகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9-17; யோவான் 10:16) இந்த ஆலோசனை அளிக்கும் வேலைக்கு ஒரு ஏதுவாக, “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு காலத்தில்” அவர் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பை எழுப்பி, அவர்களைத் தம்முடைய பூமிக்குரிய ஆஸ்திகளின் மீது, அல்லது ராஜ்ய அக்கறைகளின் மீது வைத்திருக்கிறார். (மத்தேயு 24:3, 45-47; லூக்கா 12:42-44) “திரள் கூட்டத்”தினர் இப்பொழுது உண்மையிலேயே மகத்தானதும் நம்பத்தகுந்ததுமான ஆவிக்குரிய ஆலோசனையைப் பெற்று வருகின்றனர், ஏனெனில் அது கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் பேரில் சார்ந்திருக்கிறது.
7 அவர்கள் அந்த ஆலோசனைக்குப் பிரதிபலிப்பதன் விளைவாக, யெகோவாவின் ஜனங்களாகிய நமக்கு, “இப்பிரபஞ்சத்தின் தேவனாகிய” பிசாசாகிய சாத்தான், இனிமேலும் ஒரு வல்லமையுள்ள தேவனாக இல்லை. (2 கொரிந்தியர் 4:4) நாம் கீழ்ப்படிதலுடன் பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோனிலிருந்து வெளியே வந்திருக்கிறோம், அவளுடைய துஷ்ட பாவங்களில் நமக்கு இனிமேலும் பங்கு கிடையாது. அசைக்கமுடியாத வண்ணம் நாம் கடவுள் தம்முடைய அரசாங்கத்தை யாருடைய தோள்களின் மேல் வைத்திருக்கிறாரோ அவருடைய பக்கமாக நிலைநிற்கை எடுத்திருக்கிறோம்.
8 “நித்திய பிதா” என்ற பட்டப்பெயர் ஒரு அருமையான பெயர். “வேறே ஆடுகளைச்” சேர்ந்த “திரள் கூட்டத்”தினர் இந்தச் சொல்லை விசேஷமாக பாராட்டுகின்றனர். பிசாசாகிய சாத்தானைத் தங்களுடைய பிதாவாக கொண்டிருப்பது தங்களுக்கு வசீகரமானதாக இல்லை. இயேசுவை எதிர்த்த யூத மதத்தலைவர்களைப் பற்றியும் இயேசு அவர்களிடம் பின்வருமாறு சொன்னதையும் நினைவுகூருகையில் அவர்கள் நடுக்கமெடுக்கிறார்கள்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள். அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.” (யோவான் 8:44) “திரள் கூட்டத்”தினர் பிசாசாகிய சாத்தானின் ஆவிக்குரிய பிள்ளைகளின் மத்தியிலிருந்து வெளியே வந்துவிட்டிருக்கிறார்கள். விழுந்துபோன மனிதவர்க்கத்தின் மீது அவன் தகப்பனாக இருப்பது நித்தியமாக நீடிக்கும் ஒன்றாக இருக்காது. பிசாசு தங்களுடைய ஆவிக்குரிய தகப்பனாக இருக்க அனுமதிப்பவர்கள், அவனோடுகூட ஒழிந்துபோவார்கள். மத்தேயு 25:41-ல் அடையாள அர்த்தத்தில் பேசப்பட்டிருக்கும், “நித்திய அக்கினி”யால் சித்தரிக்கப்படும் நித்திய அழிவானது, பிசாசுக்கும் அவனைத் தங்களுடைய தகப்பனாக கொண்டிருப்பதிலிருந்து தப்பித்து வெளியே வராத மானிடருக்கும் காத்திருக்கிறது.—மத்தேயு 25:41-46.
9 மறுபட்சத்தில், “நித்திய பிதா”வை தங்கள் பிதாவாக கொண்டிருப்பதன் அனுபவத்தை “திரள் கூட்டத்”தினர் முன்கூட்டியே ருசித்துப்பார்க்கிறார்கள்.a எப்படி? அவருடைய குரலுக்குச் செவிகொடுத்து, அவருடைய “வேறே ஆடுகளில்” ஒருவராக ஆவதன் மூலமும் ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோரோடு கூட்டுறவு கொள்வதன் மூலமும். இந்த அனலூட்டும் குடும்ப உறவு சமாதானத்தை எடுத்துக்காட்டுகிறது. ஏவுதலின் கீழ் எழுதுபவனாக, அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 16:20-ல் யெகோவா தேவனை “சமாதானத்தின் தேவன்,” என்பதாக அழைக்கிறான். அப்படியானால், அவருடைய ஒரே பேறான குமாரன் “சமாதானபிரபு” என்றழைக்கப்படுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! சர்வலோகத்துக்கும் மீண்டும் சமாதானத்தை நிலைநாட்டுவதன் மூலம், “சமாதானபிரபு” தவறாத வண்ணம் தம்முடைய மகத்தான பட்டப்பெயரின் அர்த்தத்துக்கு உண்மையுள்ளவராக தம்மை நிரூபிப்பார்.
“சமாதானப்பிரபு”வின் ராஜரீக அரசாங்கம்
10 முன்பு ஒருபோதும் நடைபெறாத ஒரு பிள்ளைப் பிறப்பைக் குறித்து ஏசாயா முன்னறிவித்தப் பிறகு—ஆம் “சமாதானபிரபு” என்ற பட்டத்தால் கனப்படுத்தப்படும் தேவ குமாரனின் பிறப்பை முன்னறிவித்தப் பிறகு—தீர்க்கதரிசி பின்வருமாறு சொல்வதற்கு யெகோவாவின் ஆவியால் ஏவப்பட்டார்: “அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும், சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் யெகோவாவுனுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”—ஏசாயா 9:7.
11 “அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும்” என்று சொல்வதன் மூலமாக, “சமாதானபிரபு”வின் ஆட்சி பூமி முழுவதையும் உட்படுத்தும் என்பதைத் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. அவருடைய ஆட்சிவரம்பை கட்டுப்படுத்த பூமியில் எல்லைகள் இருக்காது. அது பூகோள முழுவதையும் மூடும். மேலுமாக, வரப்போகும் பரதீஸிய பூமியில், சமாதானத்துக்கு முடிவு இராது. சமாதானம் பூமி முழுவதும் பரவியிருக்கும், எப்பொழுதுமே பெருகும். (சங்கீதம் 72:7) இந்தச் சந்தர்ப்பத்தில் சமாதானம் என்பது வெறுமென யுத்தம் இராத நிலையைவிட அதிகத்தைக் குறிக்கிறது. அது நீதியையும் நியாயத்தையும் உட்படுத்துகிறது, ஏனெனில், அவருடைய கர்த்தத்துவம் “இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்”தப்படும் என்று ஏசாயா கூறினான். மனிதவர்க்கத்திற்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் இருக்கும். ஒருபோதுமே களைப்படையாத யெகோவாவின் வைராக்கியம் இதை நம்முடைய காலத்திற்குள் நிறைவேற்றும்.
12 இப்போதுங்கூட, “சமாதானபிரபு”வின் தோளின் மேலுள்ள இந்த அரசாங்கம் பூமியெங்கும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. அவருடைய ராஜரீக பரலோக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுதல் பூமியெங்கும் விரைவாக பரவுகிறது. ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் மீதியானவர்கள் ஜாதிகளிலிருந்து முழுவதுமாக கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். கூடுதலாக, “திரள் கூட்டத்”தார் சுமார் 200 வித்தியாசமான தேசங்களிலிருந்து கூட்டிச் சேர்க்கப்படுகின்றனர். இப்போது 32,29,022 யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள், மேலும் மகிழ்ச்சிதரும் கூட்டிச்சேர்க்கும் வேலை இன்னும் முடிவடையவில்லை. இந்தத் “திரள் கூட்டம்” “சமாதானபிரபு”வின் தோள்களின் மேலுள்ள அரசாங்கத்தை ஏற்று ஆர்ப்பரிக்கிறார்கள். அதன் அங்கத்தினர் அந்த அரசாங்கத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கவும் “கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாக” இருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானவர்களின் கூட்டுறவில் பூமியெங்கும் அதன் பிரதிநிதிகளாக இருக்கவும் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
நவீன கால ஏமாற்ற அமைப்பு நொறுக்கப்பட இருக்கிறது
13 ராஜ்ய பிரதிநிதிகள் தங்கள் மத்தியிலும் சமாதானத்தைக் காத்துக்கொள்கிறார்கள். அவர்கள், “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிரு”க்கிறார்கள். (எபேசியர் 4:3) பூமியெங்கும் எழும்பி பரவிக்கொண்டிருக்கும் எல்லா குழப்பநிலையின் மத்தியிலும் இதை அவர்கள் செய்துவருகிறார்கள். ஐக்கிய நாட்டுச் சங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஜாதிகள் உண்மையில் “சமாதானபிரபு”வுக்கு எதிராக தங்களை அணிவகுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களை நோக்குவது பிரகாரம், ஐக்கிய நாடுகள் மிகப் பெரிய உலகக் கூட்டுச் சதியாக இருக்கிறது. ஏன்? அது கடவுள் தம்முடைய “சமாதானபிரபு”வின் மீது மட்டுமே வைத்திருக்கும் அந்தக் குறிக்கோள்களை நிறைவேற்ற தான் ஆயத்தமாக இருப்பதாக அறிவிப்பதன் காரணமாக. மேலுமாக, மனிதனின் முயற்சியின் மூலமாக உலகளாவிய பாதுகாப்பை ஸ்தாபிப்பதில் எல்லா தேசங்களிலுள்ள ஜனங்களும் தன்னை ஆதரிக்கும்படி அழைக்கிறது. 1986-ஆம் ஆண்டை “சர்வதேச சமாதான ஆண்டு” என்பதாகவும் அறிவித்தது. இப்படியாக, அது “சமாதானபிரபு”வுக்கு எதிராகவும் அவரோடு யெகோவா செய்திருக்கும் யெகோவாவின் உடன்படிக்கைக்கு எதிராகவும் எழுப்பப்பட்டிருக்கும் ஏமாற்றும் கூட்டுச் சதித்திட்ட நடவடிக்கையாக நிரூபித்திருக்கிறது.
14 இதைப்போன்ற ஒரு காரணத்தினிமித்தமாக, தீர்க்கதரிசியாகிய ஏசாயா ஆகாஸ் ராஜாவையும் அவனுடைய பிரஜைகளையும் அசீரிய உலக வல்லரசோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம் சமாதானத்தையும் பாதுகாப்பையும் தேடுவதற்கு விரோதமாக எச்சரித்தான். இந்த எச்சரிப்பு ஏசாயா 8:9, 10-ல் காணப்படுகிறது: மகத்தான செய்யுள் நடையில், தீர்க்கதரிசி யெகோவாவுக்கும் அவருடைய ராஜ்ய உடன்படிக்கைக்கும் விரோதமாக இருக்கும் யாவரையும் பின்வருமாறு எச்சரிக்கிறான்: “ஜாதிகளே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூர தேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக் கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள். ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்!”
15 ஆகையால், இவ்வுலகத்தின் பிரபுவாகிய பிசாசாகிய சாத்தானின் கீழுள்ள ஜாதிகள், ராஜ்ய உடன்படிக்கைக்கு விரோதமாகவும் அதன் வாரிசாகிய பிரபுவும் அரசருமானவருக்கு எதிராகவும் கூட்டுச் சதிசெய்யட்டும். ஆகாஸ் ராஜாவின் நாட்களின்போது எழுப்பப்பட்ட சதிதிட்டத்தைப் போலவே இவர்களுடைய கூட்டுச் சதியும் நொறுக்கப்படும். சீரியாவின் அரசன் ரேத்சீனும் இஸ்ரவேலின் அரசன் பெக்காவும் சேனைகளின் கர்த்தராகிய யெகோவாவுக்குப் பயப்படவில்லை, ஆனால் ராஜ்யத்துக்காக அவருடைய உடன்படிக்கைக்கு விரோதமாக கூட்டுச் சதிசெய்தார்கள். அவர்களுடைய சதிதிட்டமோ நொறுக்கப்பட்டது. அதேவிதமாக, யூதாவின் அரசனாகிய ஆகாஸ் யெகோவாவுக்கு பயப்படாமல் உலக வல்லரசாகிய அசீரியாவுடன் கூட்டுச் சதிக்குள் நுழைந்தான். இது உண்மையில் ஆகாஸுக்கு உதவியாக இல்லை, அவனுக்குச் சமாதானமும் பாதுகாப்பும் கொண்டுவரவும் இல்லை. அதிக துயரத்தையும் அடிமைத்தனத்தையுமே கொண்டுவந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆகாஸ் யெகோவாவினுடைய பிரியத்தை இழந்துவிடும்படிச் செய்தது.
16 ஆகாஸின் மரணத்துக்குப் பிறகு, அவனுடைய குமாரனாகிய எசேக்கியாவின் நாட்களில், ராஜ்ய உடன்படிக்கைக்கு விரோதமான அசீரியாவின் கூட்டுச் சதியை யெகோவா அபத்தமாக்கிப்போட்டார். யெகோவாவினுடைய தூதன் அசீரியாவின் 185,000 போர்ச் சேவகர்களைக் கொன்றபிறகு, அசீரியாவின் அரசன் யூதாவைவிட்டு பின்வாங்கி வெளியேற வற்புறுத்தப்பட்டான். எதிரி எருசலேம் நகரத்துக்கு விரோதமாக ஒரு அம்பையுங்கூட எய்ய வாய்ப்பில்லாதவனாயிருந்தான். (ஏசாயா 37:33-36) யெகோவாவின் ராஜ்ய உடன்படிக்கைக்கும் “சமாதானபிரபு”வுக்கும் எதிராக செய்யப்படும் தற்கால உலக கூட்டுச் சதியும் அதே விதமாக முறியடிக்கப்படுவது நிச்சயம், ஏனெனில் தேவன் தம்முடைய பிரபுவாகிய இம்மானுவேலுடனும் அவரை ஆதரிக்கும் யாவருடனும் இருக்கிறார்!
யெகோவாவின் சர்வதேச அரசுரிமைக்காக பயமின்றி தைரியமாக நிற்பது
17 அரசியல் தொகுதிகள் சீக்கிரத்தில் கிறிஸ்தவமண்டலத்திற்கு விரோதமாக மட்டுமல்ல, பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோன் முழுவதற்கும் விரோதமாக அதை முற்றிலும் இராதபடி ஒழித்துக்கட்டுவதற்கு, அதன் முயற்சிகளைத் திருப்பும். இந்த நெருக்கடியான கட்டத்தில், யெகோவாவின் ஜனங்களுக்கு அசாதாரணமான அளவில் அவரிடமிருந்து தெய்வீக பாதுகாப்பு நிச்சயமாக தேவைப்படும். இரத்தம் சிந்துவதன் மூலம் மகா பாபிலோனுக்கு எதிராக பெற்ற வெற்றியினால் தூண்டப்பட்டவனாக, கடவுள் நம்பிக்கையற்ற ஆட்சியாளர்கள் இயேசு கிறிஸ்துவின் கீழுள்ள கடவுளுடைய ராஜ்யத்தின் பக்கமாக இருப்பவர்களுக்கு விரோதமாக மிருகத்தனமாகத் திரும்புவார்கள். அப்பொழுது யெகோவா “சர்வவல்லமையுள்ள தேவனின் மகா நாளில் நடக்கும் யுத்தத்தை” நடத்த தம்முடைய “சமாதானபிரபு”வை உபயோகிப்பார். (வெளிப்படுத்துதல் 16:14) இயேசு கிறிஸ்து வெல்லப்படமுடியாத போர்வீரனாக தன்னை நிரூபிப்பார். அவருடைய அரசாங்கம் எவ்விதத்திலும் குறைவுபடாது. ஜெயங்கொண்ட சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவின் கீழ் அவர் “வல்லமையுள்ள தேவனாகத்” தம்மை நிரூபிப்பார். “வல்லமையுள்ள தேவ”னாகிய இவர் தம்முடைய பிரகாசமான வாழ்க்கைப் போக்கை அர்மகெதோனில் வெற்றிகரமாக முடிப்பார். இந்நிகழ்ச்சி நித்திய காலத்திற்கும் மங்கிப்போகாமல் எதிரொலித்துக் கொண்டிருக்கும். ஈடற்ற அந்த வெற்றியை எல்லோரும் ஆரவாரத்துடன் வாழ்த்துவோமாக!
18 ஆகையால், யெகோவாவுக்கு சாட்சிகளாக இருக்கும் நீங்கள் யாவரும், உங்கள் கடவுளின் பேரிலும் “சமாதானபிரபு”வாகிய அவருடைய ஆளுகைசெய்யும் அரசரிலும் முழு நம்பிக்கையுடன், முன்பு ஒருபோதும் அனுபவித்திராத உலக மேன்மையினிடமாக முன்நோக்கி செல்லுங்கள்! தற்போதைய உலக கூட்டுச் சதிக்கு எதிராக சிறிதும் தடையில்லாத தைரியத்தை வெளிக்காட்டுங்கள். ராஜ்யத்தைப்பற்றியும் அர்மகெதோனில் உலக கூட்டுச் சதியின் பேரில் அது பெற இருக்கும் வெற்றியைக் குறித்தும் நீங்கள் எங்கும் அறிவிப்பதன் மூலம், யெகோவாவின் மகிமைக்காக நீங்கள் யாவரும் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருப்பீர்களாக. உலக அரசர்களை நமக்கு விரோதமாக பிசாசு திருப்பும்போது, “சமாதானபிரபு”வாகிய இம்மானுவேலின் ராஜ்யத்தின் சார்பாக உண்மையுடனும் விசுவாசத்துடனும் நிற்பவர்களின் பக்கமே வெற்றி இருக்கும்! (மத்தேயு 1:23; ஏசாயா 8:10-ஐ ஒப்பிடவும்.) முடிவில்லா பாதுகாப்புடன், வானத்திலும் பூமியிலும் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றின் மேலும் யெகோவாவின் சர்வாதிகாரம் நியாயமென நிரூபிக்கப்படுகையில், பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் யாவரும் மற்றும் பூமியிலுள்ள உத்தமத்தைக் காத்துக்கொண்டிருக்கும் மனிதவர்க்கத்தினர் யாவரும் அதற்கு “ஆமென்!” என்று சொல்லக்கடவர்கள். (w87 4/1)
[அடிக்குறிப்புகள்]
a “நித்திய பிதா” என்ற ஸ்தானத்தை இயேசு கிறிஸ்து வகிப்பதைப்பற்றிய கலந்தாலோசிப்புக்கு உவாட்ச் டவர் சங்கத்தால் பிரசுரிக்கப்படும் “சமாதானபிரபு”வின் கீழ் உலகளாவிய பாதுகாப்பு (Worldwide Security Under the “Prince of Peace”) என்ற ஆங்கில புத்தகத்தில் அதிகாரம் 20-ஐ பார்க்கவும்.
முடிவான கேள்விகள்
◻ “வல்லமையுள்ள தேவன்” என்ற பட்டப்பெயர் இயேசு கிறிஸ்துவுக்கு எப்படிப் பொருந்துகிறது?
◻ “ஆலோசனைக் கர்த்தாவாக” இயேசு எவ்வாறு சேவை செய்துவந்திருக்கிறார்?
◻ யாரை நம்முடைய தகப்பனாக கொண்டிருக்க நாம் நாடவேண்டும்? யாரை தகப்பனாக கொண்டிருப்பதை நாம் தவிர்க்கவேண்டும்?
◻ ஐக்கிய நாட்டுச் சங்கம் உண்மையில் என்னவாக இருக்கிறது?
◻ ராஜ்ய உடன்படிக்கைக்கும் அதன் உரிமையாளரான “சமாதானப்பிரபு”வுக்கும் விரோதமான இன்றைய கூட்டுச் சதிக்கு என்ன ஏற்படும்?
[கேள்விகள்]
1, 2. (எ) கடவுளுடைய ராஜ்யத்தின் பிறப்பு எதற்கு ஒரு சம்பவமாக இருக்கும், இந்தப் பிறப்பு எப்பொழுது நடைபெற்றது? (பி) ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் சாசனம் அந்த அமைப்புக்கு என்ன உத்தரவாதத்தை நியமித்திருக்கிறது, ஆனால் ராஜ்ய உடன்படிக்கை இயேசு கிறிஸ்துவுக்கு என்ன உத்தரவாதத்தை நியமித்திருக்கிறது? (சி) யெகோவா தவறாமல் தம்முடைய ராஜ்ய உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராக இருப்பார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
3. “சமாதானபிரபு” தம்முடைய ஆட்சியைத் துவங்குவதற்கான நேரம், பரலோகத்திலோ அல்லது பூமியிலோ சமாதானத்திற்கான நேரமாக ஏன் இல்லை?
4. “வல்லமையுள்ள கடவுள்” என்ற பட்டப்பெயர் ஏன் சர்வவல்லமையுள்ள தேவனோடு குழப்பிவிடப்படக்கூடாது?
5. உயிருள்ள மெய்த் தேவனாகிய யெகோவாவின் வணக்கத்தில் எல்லா புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளையும் தலைமைதாங்கி வழிநடத்த இயேசு கிறிஸ்து ஏன் மிக அதிக தகுதிவாய்ந்தவராக இருக்கிறார்?
6. இயேசு கிறிஸ்து எப்படி “ஆலோசனைக் கர்த்தா”வாக சேவை செய்துவந்திருக்கிறார், அவருடைய சிறந்த ஆலோசனைகளிலிருந்து “திரள் கூட்டத்”தினர் எப்படிப் பயனடைகிறார்கள்?
7. யெகோவாவின் ஜனங்களுக்கு ஏன் பிசாசாகிய சாத்தான் இனிமேலும் ஒரு வல்லமையுள்ள தேவனாக இல்லை?
8. (எ) “நித்திய பிதா” என்ற பட்டப்பெயர் “திரள் கூட்டத்”தாருக்கு ஏன் விசேஷமாக கவர்ச்சியுள்ளதாக இருக்கிறது? (பி) பிசாசாகிய சாத்தான் தங்களுடைய ஆவிக்குரிய தகப்பனாக இருக்க அனுமதிப்பவர்களுக்கு என்ன நேரிடும்?
9. “திரள் கூட்டத்”தினர் “நித்திய பிதா”வை தங்களுடைய தகப்பனாக கொண்டிருப்பதைப் பற்றி முன் அனுபவம் எப்படிப் பெறுகிறார்கள்?
10, 11. இதுவரை ஏற்பட்டிராத மிக மகத்தான குழந்தை பிறப்பை முன்னறிவித்தப் பிறகு, ஏசாயா தொடர்ந்து என்ன சொன்னான்? அவனுடைய வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
[பக்கம் 22, 23-ன் படம்]
சர்வலோகத்தின் அரசரின் சமாதானமுள்ள வணக்கத்தில் சர்வலோகம் முழுவதும் ஐக்கியப்பட்டிருக்கும்