அதிகாரம் பதினொன்று
கலகக்காரருக்கு ஐயோ!
யெகோவாவின் மக்கள் இரு ராஜ்யங்களாக பிரிந்த காலம். பத்துக் கோத்திர வடதிசை ராஜ்யம் யெரொபெயாமின் கைக்கு சென்றது. திறமையிலும் தீரத்திலும் சிறந்து விளங்கினான் இந்தத் துடிப்புமிக்க புதிய அரசன். ஆனால் யெகோவாவை திடமாக நம்பத் தவறினான். இதனால் பாவப் படுகுழியில் விழுந்து, வடதிசை ராஜ்யத்தின் சரித்திரத்தையே இருளாக்கினான். இஸ்ரவேலர்கள் வருடத்திற்கு மும்முறை எருசலேம் ஆலயத்திற்கு சென்று வரவேண்டும் என்பது நியாயப்பிரமாண கட்டளை. எருசலேம் இருந்ததோ தென்திசை ராஜ்யமான யூதாவில். (உபாகமம் 16:16) தன் குடிமக்கள் அங்கு தவறாமல் சென்று எங்கே தென் திசைக்காரரோடு சேர்ந்துகொள்ளப் போகிறார்களோ என்ற அச்சம் யெரொபெயாமுக்கு. ஆகவே அவன் ‘பொன்னால் இரு கன்றுக்குட்டிகளை செய்து, மக்களை நோக்கி, நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்! என்றான். இவற்றுள் ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றை தாணிலும் வைத்தான்.’—1 இராஜாக்கள் (அரசர்கள்) 12:28, 29, பொ.மொ.
2 யெரொபெயாம் போட்ட திட்டம் அப்போதைக்கு பலித்தது. அவன் மக்கள் எருசலேமுக்கு செல்வதை நிறுத்திவிட்டு அந்த இரு கன்றுக்குட்டிகளை வழிபட ஆரம்பித்தனர். (1 இராஜாக்கள் 12:30) இருந்தாலும் இந்தத் துரோகச் செயல் பத்து கோத்திர ராஜ்யம் முழுவதையும் சீரழித்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகும், இஸ்ரவேலிலிருந்து பாகால் வணக்கத்தை வைராக்கியத்தோடு துடைத்தழித்த யெகூவும்கூட பொன் கன்றுக்குட்டிகளுக்கு தலைவணங்கினான். (2 இராஜாக்கள் 10:28, 29) யெரொபெயாம் விதைத்த வினையால் வேறென்ன விளைந்தது? ராஜாங்கம் நிலைகுலைந்தது, மக்களும் நிலைகுலைந்தனர்.
3 யெரொபெயாம் இவ்வாறு துரோகம் செய்ததால் அவன் சந்ததி ஆட்சி பீடத்தில் அமராது என யெகோவா சொன்னார். அதுமட்டுமல்ல, முழு தேசமும் பூண்டோடு அழியும் என்றார். (1 இராஜாக்கள் 14:14, 15) யெகோவா சொன்னது சொன்னபடியே நடந்தது. இஸ்ரவேலின் ஏழு ராஜாக்கள் இரு வருடங்களுக்கு அல்லது அதற்கும் குறைவாகவே ஆண்டனர், இவர்களில் சிலர் நாள்கணக்கில் மட்டுமே ஆண்டனர். ஒருவர் தன் உயிரையே மாய்த்துக்கொண்டார், மற்ற ஆறு பேர் பதவி வெறிபிடித்தவர்களால் கொல்லப்பட்டனர். முக்கியமாக சுமார் பொ.ச.மு. 804-ல் இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி முடிவுற்ற பிறகு இஸ்ரவேலில் கலகமும் வன்முறையும் கொலையும் தலைவிரித்தாடின. அப்போது உசியா யூதாவை ஆண்டுவந்தார். இப்படிப்பட்ட கட்டத்தில்தான் வடதிசை ராஜ்யத்திற்கு “வார்த்தையை,” அதாவது நேரடியான எச்சரிப்பை யெகோவா ஏசாயா மூலம் அனுப்புகிறார். “ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார்; அது இஸ்ரவேலின்மேல் இறங்கிற்று.”—ஏசாயா 9:8.a
அகந்தையும் ஆணவமும் ஆண்டவருக்கு பகை
4 யெகோவாவின் “வார்த்தையை” புறக்கணிக்க முடியாது. ‘எப்பிராயீமியரும் சமாரியாவின் குடிகளுமாகிய சகல ஜனங்களுக்கும் இது தெரியவரும். அவர்கள் அகந்தையும் மனப்பெருமையுமாய் பேசுவார்கள்.’ (ஏசாயா 9:9, தி.மொ.) “யாக்கோபு,” ‘இஸ்ரவேல்,’ ‘எப்பிராயீம்,’ “சமாரியா” ஆகிய அனைத்தும் இஸ்ரவேலின் வடதிசை ராஜ்யத்தைக் குறிக்கின்றன. இவற்றில் எப்பிராயீமே பிரதான கோத்திரம், சமாரியா அதன் தலைநகரம். அந்த தேசத்திற்கு எதிராக யெகோவா கடும் நியாயத்தீர்ப்பை சொல்கிறார். ஏனெனில் அதன் மக்களின் மனம் விசுவாச துரோகத்தில் இறுகியிருக்கிறது, யெகோவாவுக்கு எதிராக செருக்கில் விம்மிப் புடைத்திருக்கிறது. அவர்கள் விதைத்த வினையை அறுத்தே ஆக வேண்டும். கடவுள் உதவிக்கு வர மாட்டார். ஆகவே அவரது வார்த்தையைக் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.—கலாத்தியர் 6:7.
5 தேசத்தின் நிலைமை, கேட்டின் பாதாளம் நோக்கி சரிகிறது. மக்களுக்கு இழப்புக்கு மேல் இழப்பு. மதிப்பற்ற செங்கல் வீடுகளும் மர வீடுகளும்கூட பறிபோகின்றன. இப்போதாவது வீம்பை விட்டொழித்து திருந்துவார்களா? யெகோவாவுடைய தீர்க்கதரிசிகளின் சொல் கேட்டு நடந்து உண்மை கடவுளிடம் சரணாகதி அடைவார்களா?b அதுதான் இல்லை. “செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது; எனினும், செதுக்கிய கற்களால் நாங்கள் கட்டியெழுப்புவோம். காட்டத்தி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன; எனினும், அவற்றிற்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம்” என தலைக்கனத்தோடு அவர்கள் சொல்வதாக ஏசாயா பதிவு செய்கிறார். (ஏசாயா 9:10, பொ.மொ.) ஏன் கஷ்டப்படுகிறார்கள் என எடுத்துச் சொல்லும் தீர்க்கதரிசிகளையே எடுத்தெறிந்து பேசுகிறார்கள். ‘செங்கல் வீடு போனால் என்ன, மர வீடு போனால் என்ன, எல்லாம் கால் தூசுக்கு சமானம். விலையுயர்ந்த கற்களாலும் கேதுரு மரங்களாலுமே கட்டிக் காண்பிப்போம்!’ என்றல்லவா யெகோவாவிடம் சவால் விடுகிறார்கள். (யோபு 4:19-ஐ ஒப்பிடுக.) அவர்களை மேலும் தண்டிப்பதைத் தவிர யெகோவாவிற்கு வேறு வழியே இல்லை.—ஏசாயா 48:22-ஐ ஒப்பிடுக.
6 ‘கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்துவார்’ என்கிறார் ஏசாயா. (ஏசாயா 9:11அ) இஸ்ரவேலின் ராஜா பெக்காவும் சீரியாவின் ராஜா ரேத்சீனும் கூட்டாளிகள். அவர்கள் இரண்டு கோத்திர ராஜ்யமாகிய யூதாவை வென்று, எருசலேமிலுள்ள யெகோவாவின் அரியணையில் தங்களுக்கு இஷ்டமான ஒருவரை—‘தபேயாலின் குமாரனை’—ராஜாவாக அமர்த்த சதித்திட்டம் தீட்டுகின்றனர். (ஏசாயா 7:5) ஆனால் திட்டம் தோல்வியைத் தழுவப்போவது உறுதி. ரேத்சீனின் பலத்த சத்துருக்களை யெகோவா “அவர்கள்மேல்,” அதாவது இஸ்ரவேலர்கள் மேல் ‘உயர்த்துவார்.’ அப்படியென்றால் சீரிய-இஸ்ரவேல கூட்டணியையும் அவர்கள் திட்டங்களையும் முறியடிக்கும்படி போரில் ஜெயங்கொள்ள சத்துருக்களை அனுமதிப்பார் என அர்த்தம்.
7 அசீரியா சீரியாவை தாக்கியபோது கூட்டணி கலையத் துவங்கியது. ‘அசீரியா ராஜா தமஸ்குவுக்குப் [சீரியாவின் தலைநகர்] போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்கு சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.’ (2 இராஜாக்கள் 16:9) வலிமைமிக்க கூட்டாளிமீது பெக்கா வைத்த நம்பிக்கை குலைகிறது. யூதாவை பதம்பார்க்க போட்ட சதித்திட்டமும் குலைக்கப்படுகிறது. ஏன், கொஞ்ச நாளில் பெக்காவே குத்திக் கொல்லப்படுகிறார். சமாரிய அரியணைமீது வேட்கைகொண்ட ஓசெயாவால் கொல்லப்படுகிறார்.—2 இராஜாக்கள் 15:23-25, 30.
8 இஸ்ரவேலுக்கு கைகொடுத்துவந்த சீரியா இப்போது பெரும் அதிகாரம் செலுத்தி வந்த அசீரியாவின் கையில். இந்த அரசியல் மாற்றத்தை யெகோவா எவ்வாறு சாதகமாக்கிக் கொள்வார் என்பதை ஏசாயா முன்னுரைக்கிறார்: யெகோவா “அவர்களுடைய [இஸ்ரவேலருடைய] மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார். முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்த வாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.” (ஏசாயா 9:11ஆ, 12) இப்போது சீரியாவின் கை இஸ்ரவேலுக்கு எதிராக ஓங்கியிருக்கிறது. ஆக, இஸ்ரவேல் அசீரியாவோடு மட்டுமல்ல சீரியாவோடும் மல்லுக்கட்ட வேண்டிய நிலை. இருந்தாலும் தோல்வியே மிஞ்சுகிறது. பதவி வெறிகொண்ட ஓசெயாவை அசீரியா அடிமையாக்கி, பெருந்தொகையை கப்பங்கட்ட வைக்கிறது. (சில ஆண்டுகளுக்கு முன் இஸ்ரவேலின் மெனாகேம் ராஜாவிடமிருந்து அசீரியா பெருந்தொகையை கப்பமாக பெற்றது.) “அந்நியர் அவனுடைய [எப்பிராயீமுடைய] பலத்தைத் தின்கிறார்கள்” என ஓசியா தீர்க்கதரிசி சொன்னது எவ்வளவு உண்மை!—ஓசியா 7:9; 2 இராஜாக்கள் 15:19, 20; 17:1-3.
9 பெலிஸ்தர்கள் ‘பிற்புறத்திலிருந்து’ தாக்குவார்கள் என்றும் ஏசாயா சொல்கிறார் அல்லவா? ஆம். அந்தக் காலத்தில் காந்த திசைமானிகள் கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆகவே எபிரெயர்கள் சூரிய உதயத்தைப் பார்த்து நின்றவாறே திசைகளை நிர்ணயித்தனர். ஆகவே கிழக்குப் பகுதியே ‘முற்புறம்,’ பெலிஸ்தரின் கடற்கரையோர குடியிருப்பாகிய மேற்கு பகுதியே ‘பிற்புறம்.’ ஏசாயா 9:12-ல் ‘இஸ்ரவேல்’ என்பது யூதாவையும் குறிக்கலாம். ஏனெனில் பெக்காவின் காலத்தில், யூதாவை ஆகாஸ் ஆண்டுவந்தபோது பெலிஸ்தர்கள் பல யூதேய நகரங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றி ஆக்கிரமித்தனர். எப்பிராயீமைப் போலவே யூதாவும் யெகோவாவின் தண்டனையைப் பெறத்தான் வேண்டும். ஏனெனில் யூதாவிலும் விசுவாச துரோகமே தழைத்தோங்குகிறது.—2 நாளாகமம் 28:1-4, 18, 19.
‘தலைமுதல் வால்வரை’ கலகக்கார தேசம்
10 பலமுறை அடிபட்டும் வடதிசை ராஜ்யத்திற்கு புத்தி வரவில்லை. யெகோவாவின் தீர்க்கதரிசிகள் கடும் சொற்களால் எச்சரித்தும் கலகத்தனத்தை விட்டுப் பிரிய மனமில்லை. “ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.” (ஏசாயா 9:13) ஆகவே தீர்க்கதரிசி சொல்கிறார்: “கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார். மூப்பனும் கனம் பொருந்தினவனுமே தலை, பொய்ப் போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசியே வால். இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.”—ஏசாயா 9:14-16.
11 ‘தலையும்’ ‘கிளையும்,’ ‘மூப்பரையும் கனம் பொருந்தியவர்களையும்’ குறிக்கின்றன; இவர்கள் தேசத்தின் தலைவர்கள். ‘வாலும்’ ‘நாணலும்,’ தேசத் தலைவர்களுக்கு பிரியமாக பேசும் பொய் தீர்க்கதரிசிகளைக் குறிக்கின்றன. பைபிள் கல்விமான் ஒருவரின்படி, “பொய் தீர்க்கதரிசிகள் வால் என அழைக்கப்படுவதற்குக் காரணம், ஒழுக்கத்தில் அவர்கள்தான் கீழ்த்தரமான மக்கள். பொல்லாத அரசர்களுக்கு வால்பிடித்த கபடதாரிகள்.” இதே பொய் தீர்க்கதரிசிகளைக் குறித்து பேராசிரியர் எட்வர்ட் ஜே. யங் இப்படிச் சொல்கிறார்: “தலைவர்கள் என சொல்வதற்கே தகுதியற்றவர்கள், அரசியல் தலைவர்களின் புகழ்பாடி துதிபாடி அவர்கள் பின்னே செல்பவர்கள், ஆடிக்கொண்டே செல்லும் நாய்வால்கள்.”—2 தீமோத்தேயு 4:3-ஐ ஒப்பிடுக.
‘தகப்பனற்ற பிள்ளைகளும் விதவைகளும்கூட’ விதிவிலக்கல்ல
12 யெகோவா விதவைகளையும் தகப்பனற்ற பிள்ளைகளையும் காக்கும் கடவுள் என்பது யாவரும் அறிந்ததே. (யாத்திராகமம் 22:22, 23) இருந்தாலும் ஏசாயா இப்போது சொல்வதைக் கேளுங்கள்: “ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற [“தகப்பனற்ற,” NW] பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் [“மதிகேட்டையே,” பொ.மொ.] பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.” (ஏசாயா 9:17) விசுவாச துரோகம் எல்லா தரப்பு மக்களையும் பீடித்திருக்கிறது, விதவைகளையும் தகப்பனற்ற பிள்ளைகளையும்கூட விட்டுவைக்கவில்லை! இருந்தாலும் அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் பொறுமையே உருவான யெகோவா தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். உதாரணத்திற்கு, “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்” என கெஞ்சுகிறார் ஓசியா. (ஓசியா 14:1) விதவைகளுக்கும் தகப்பனற்ற பிள்ளைகளுக்கும் உறுதுணையாய் இருப்பவரே அவர்கள் உயிரைப் பறிக்க வேண்டுமென்றால் அவர் மனம் எந்தளவு வலியால் துடிக்கும்!
13 ஏசாயாவைப் போலவே நாமும் இப்போது ‘கொடிய காலங்களில்’ வாழ்கிறோம். யெகோவா பொல்லாதவர்களை அழிக்கும் நாள் அருகில் இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) ஆகவே உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளின் தயவை இழக்காதிருக்க சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் எப்போதுமே சுத்தமாக இருப்பது எவ்வளவு அவசியம்! நாம் ஒவ்வொருவரும் யெகோவாவுடன் உள்ள உறவை பொக்கிஷமாக பொத்திப் பாதுகாப்போமாக. ‘மகா பாபிலோனை’ விட்டு தப்பிவந்த எவரும் மீண்டும் ‘அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல்’ இருக்கக்கடவர்கள்.—வெளிப்படுத்துதல் 18:2, 4.
வன்முறையை வளமாக்கும் வணக்கம்
14 பொய் வணக்கத்தை பேய் வணக்கம் என சொல்லலாம். (1 கொரிந்தியர் 10:20) பேய்கள் வன்முறைக்கு வழிவகுக்கின்றன என்பதற்கு ஜலப்பிரளயத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களே சாட்சி. (ஆதியாகமம் 6:11, 12) ஆகவே இஸ்ரவேல் விசுவாச துரோகத்திடம் சாய்ந்து பேய்களை வணங்க ஆரம்பித்தவுடன் தேசமெங்கும் வன்முறையும் துன்மார்க்கமும் செழித்தோங்கியது ஏன் என புரிந்துகொள்ள முடிகிறது.—உபாகமம் 32:17; சங்கீதம் 106:35-38.
15 இஸ்ரவேலில் வன்முறையும் பொல்லாப்பும் பரவியிருந்ததை ஏசாயா தத்ரூபமாக விவரிக்கிறார்: “ஆகாமியமானது [“துன்மார்க்கம்,” NW] அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய [“அடர்ந்த,” NW] காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும். சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான். வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன் தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான். மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.”—ஏசாயா 9:18-21.
16 தீப்பொறி செடி செடியாக புதர் புதராக பரவி முழு காட்டையே கொளுத்திவிடுவதுபோல் வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி ‘அடர்ந்த காடு’ முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த வன்முறையை பைபிள் விமர்சகர்களான கைலும் டெலிஷும் இவ்வாறு விவரித்தனர்: “இது உள்நாட்டுப் போர்களிலேயே மிகக் கோரமானது. கொஞ்சமும் மனிதநேயமில்லாமல் சண்டையிட்டு கொலையுண்டார்கள். மனிதத்தன்மையே இல்லாமல் ஒருவரையொருவர் காட்டுத்தனமாக பட்சித்தார்கள்.” எப்பிராயீம் கோத்திரத்தாரும் மனாசே கோத்திரத்தாரும் மட்டுமே வசனத்தில் குறிப்பிடப்படுவதற்குக் காரணம், அவர்கள் வடதிசை ராஜ்யத்தின் முக்கிய பிரதிநிதிகளாக இருந்தனர். அதுமட்டுமல்ல, யோசேப்பின் இரு குமாரரது சந்ததியினராக, பத்துக் கோத்திரங்களிலேயே அவர்கள்தான் நெருங்கிய உறவினர்கள். இருந்தாலும் சதா மோதிக்கொண்ட இவர்கள், தெற்கே யூதாவோடு சண்டைபுரியும் போது மட்டும்தான் ஒன்றுசேர்ந்தார்கள்.—2 நாளாகமம் 28:1-8.
நீதிபதிக்கு முன் பொல்லாத நீதிபதிகள்
17 இஸ்ரவேலின் அநியாய நீதிபதிகளையும் மற்ற அதிகாரிகளையும் யெகோவா தமது நியாயத்தீர்ப்புக் கண்களால் காண்கிறார். இவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, தங்களிடம் நியாயம் கேட்டுவரும் ஏழை எளியோரை சுரண்டிப் பிழைக்கிறார்கள். ஏசாயா சொல்வதாவது: “அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு! மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு! அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல், அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்; எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்; கைம்பெண்களைக் கொள்ளைப் பொருளாய் எண்ணிச் சூறையாடுகிறார்கள்; திக்கற்றோரை [“தகப்பனற்ற பிள்ளைகளை,” NW] இரையாக்கிக் கொள்கின்றார்கள்.”—ஏசாயா 10:1, 2, பொ.மொ.
18 “நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக” என சொல்லி, அநீதியின் சிறு தடயத்தையும் தடை செய்கிறது யெகோவாவின் சட்டம். (லேவியராகமம் 19:15) அதிகாரிகளோ இச்சட்டத்தை பொருட்படுத்துவதில்லை. அவர்கள் செய்வது அசல் திருட்டு, அதுவும் மிகக் கொடூரமான திருட்டு. ஏனெனில் விதவைகளிடமும் தகப்பனற்ற பிள்ளைகளிடமும் உள்ள கொஞ்சநஞ்சத்தையும் சுரண்டுகிறார்கள். போதாக்குறைக்கு, ‘அநீதியான சட்டங்களை’ இயற்றி தங்கள் திருட்டுக் குற்றத்தை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரவேலின் பொய் கடவுட்கள்தான் இந்த அநீதியைக் கண்டும் காணாதவர்களாய் இருக்கிறார்கள் என்றால், யெகோவாவுமா அப்படி இருப்பார்! நிச்சயம் இல்லை. ஏசாயா மூலம் அவர் இந்த அயோக்கியமான நீதிபதிகளைக் குறித்து சொல்கிறார்.
19 “தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்? தொலைநாட்டிலிருந்து அழிவாகிய சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்? உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை [“மகிமையை,” NW] எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்? கட்டுண்ட கைதிகளிடையே தலை கவிழ்ந்து வருவீர்கள்; இல்லையேல் வெட்டுண்டு மடிந்தோரிடையே வீழ்வீர்கள்.” (ஏசாயா 10:3, 4அ, பொ.மொ.) விதவைகளையும் தகப்பனற்ற பிள்ளைகளையும் விசாரிக்க நேர்மையான நீதிபதிகள் எவரும் இல்லை. ஆகையால் யெகோவா பொல்லாத நீதிபதிகளை கேள்வி கேட்கிறார். அவர் அவர்களை கணக்குக் கேட்பதால் இனி உதவிக்கு யாரிடம் செல்வார்கள் என கேட்கிறார். ‘ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது பயங்கரமானது’ என்பதை அவர்கள் இப்போது கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.—எபிரெயர் 10:31.
20 இந்தப் பொல்லாத நீதிபதிகளின் ‘மகிமை,’ அதாவது கௌரவம், மதிப்பு, அதிகாரம், செல்வம், ஸ்தானம் ஆகிய அனைத்தும் கொஞ்ச நாட்களுக்குத்தான். சிலர் சிறைக்கைதிகளாகி, மற்ற கைதிகளோடு “தலை கவிழ்ந்து” செல்வார்கள். மற்றவர்களோ கொல்லப்பட்டு மற்ற சடலங்களோடு சடலமாக கிடப்பார்கள். அந்த ‘மகிமை,’ குறுக்கு வழியில் அவர்கள் ஈட்டிய செல்வத்தையும் குறிக்கும். இதுவும் எதிரியால் சூறையாடப்படும்.
21 ஏசாயா தனது கடைசி பத்தியை கடும் எச்சரிப்போடு முடிக்கிறார்: “இவையெல்லாவற்றிலும் [இதுவரை தேசம் அனுபவித்த எல்லா தண்டனைகளிலும்] அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.” (ஏசாயா 10:4ஆ) யெகோவா இஸ்ரவேலுக்கு இன்னும் அதிகத்தை சொல்லப் போகிறார். கலகக்கார வடதிசை ராஜ்யத்தை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வரும்வரை யெகோவாவின் கை நீட்டியபடியே இருக்கும்.
பொய்யருக்கும் சுயநலக்காரருக்கும் இரையாகாதீர்
22 ஏசாயா மூலம் யெகோவா சொன்ன வார்த்தைகள் இஸ்ரவேல் மீது கனமழைபோல் கொட்டியது, அவை ‘வெறுமையாய் அவரிடத்தில் திரும்பவில்லை.’ (ஏசாயா 55:10, 11) இஸ்ரவேலின் வடதிசை ராஜ்யத்திற்கு வந்த பரிதாப முடிவு பற்றி சரித்திரம் சொல்கிறது. அதன் குடிமக்கள் என்னே பாடு அனுபவித்திருப்பார்கள்! இன்றைய உலகிற்கும், முக்கியமாக விசுவாச துரோக கிறிஸ்தவமண்டலத்திற்கும் அதைப்போன்ற அழிவு நிச்சயம், கடவுளுடைய வார்த்தை தவறாது. ஆகவே கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை காதுகொடுத்து கேட்காதிருப்பது எவ்வளவு அவசியம்! கடவுளுடைய வார்த்தை சாத்தானின் நயவஞ்சக சதித்திட்டங்களை வெகு காலமாக வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. பூர்வ இஸ்ரவேலரைப் போலவே நாமும் அவனால் மோசம்போகாதிருக்க உதவுகிறது. (2 கொரிந்தியர் 2:11) யெகோவாவை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குவதிலிருந்து எவரும் பின்வாங்காதிருப்போமாக! (யோவான் 4:24) அப்போது அவர் கையை நீட்டி கலகக்கார எப்பிராயீமை அழித்தது போல நம்மை அழிக்க மாட்டார்; மாறாக நம்மை பாசத்தோடு அரவணைப்பார், பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனைப் பெற உதவுவார்.—யாக்கோபு 4:8.
[அடிக்குறிப்புகள்]
a ஏசாயா 9:8–10:4-ஐ நான்கு செய்யுட் கூறுகளாக (சந்த நடையில் அமைந்த பத்திகளாக) பிரிக்கலாம். அவை ஒவ்வொன்றும் தீமையைக் குறிக்கும் இந்த வரியோடு முடிகின்றன: “இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.” (ஏசாயா 9:12, 17, 21; 10:4) இந்த இலக்கிய நடையினால் ஏசாயா 9:8–10:4 முழுவதையும் ஒரே “வார்த்தை” என அழைக்க முடியும். (ஏசாயா 9:8) யெகோவாவின் கை தயவு காண்பிப்பதற்காக அல்ல, ஆனால் தண்டிப்பதற்காக “நீட்டினபடியே இருக்கிறது” என்பதை கவனியுங்கள்.—ஏசாயா 9:13.
b இஸ்ரவேலின் வடதிசை ராஜ்யத்திற்கு தீர்க்கதரிசிகளாக சேவித்தவர்கள் யெகூ (ராஜா அல்ல), எலியா, மிகாயா, எலிசா, யோனா, ஓதேத், ஓசியா, ஆமோஸ், மீகா.
[கேள்விகள்]
1. யெரொபெயாம் செய்த பொல்லாத பாவம் என்ன?
2, 3. யெரொபெயாம் செய்த பாவம் இஸ்ரவேலை எவ்வாறு பாதித்தது?
4. யெகோவா இஸ்ரவேலுக்கு என்ன “வார்த்தையை” அனுப்பினார், ஏன்?
5. யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நிறைவேறுகையிலும் இஸ்ரவேலர் எவ்வாறு மனந்திருந்தாது இருக்கிறார்கள்?
6. யூதாவிற்கு எதிராக சீரிய-இஸ்ரவேல கூட்டணி போடும் சதித்திட்டத்தை யெகோவா எவ்வாறு முறியடிக்கிறார்?
7, 8. அசீரியா சீரியாவைக் கைப்பற்றியதால் இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட கதியென்ன?
9. பெலிஸ்தர்கள் ‘பிற்புறத்திலிருந்து’ தாக்கியதாக ஏன் சொல்லலாம்?
10, 11. இஸ்ரவேல் தொடர்ந்து கலகம் செய்வதால் யெகோவா அளிக்கப் போகும் தீர்ப்பு என்ன?
12. இஸ்ரவேலில் விசுவாச துரோகம் எந்தளவு பீடித்திருக்கிறது?
13. ஏசாயாவின் நாட்களில் இருந்த இஸ்ரவேலின் நிலைமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14, 15. (அ) பேய் வணக்கத்தால் விளைவது என்ன? (ஆ) இஸ்ரவேல் தொடர்ந்து வேதனையை அனுபவிக்கும் என்பதை ஏசாயா எவ்வாறு முன்னுரைக்கிறார்?
16. ஏசாயா 9:18-21 எவ்வாறு நிறைவேறுகிறது?
17, 18. இஸ்ரவேலின் நீதிபதிகளும் அதிகாரிகளும் எவ்வாறு அநியாயம் செய்கிறார்கள்?
19, 20. பொல்லாத நீதிபதிகளின் நிலைமை எவ்வாறு மாறும், அவர்களது ‘மகிமை’ என்னவாகும்?
21. இஸ்ரவேல் அனுபவித்திருந்த எல்லா தண்டனைகளின் நிமித்தமும் யெகோவாவின் கோபம் அடங்கிவிட்டிருக்கிறதா?
22. இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 139-ன் படம்]
துன்மார்க்கமும் வன்முறையும் இஸ்ரவேலில் காட்டுத்தீயாய் பரவின
[பக்கம் 141-ன் படம்]
மற்றவர்களை மோசம்போக்குபவர்களை யெகோவா கணக்குக் கேட்பார்