யெகோவா—நம்முடைய பெலன்
“யா யெகோவா என் பெலனும் என் வல்லமையுமானவர்.”—ஏசாயா 12:2, NW.
நீங்கள் யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்குப் போகிறீர்களா? அங்கு மற்றவர்களிலிருந்து வெகுவாய் வித்தியாசப்பட்ட மக்களை நீங்கள் காண்கிறீர்கள்! இந்த மக்கள் யார்? அவர்கள் ஏன் வித்தியாசப்பட்டவர்களாயிருக்கிறார்கள்? நாம் கடவுளுடைய சொந்த ஜனம், நாம் வித்தியாசப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் எல்லா பெயர்களையும்விட மிக மகத்துவமான பெயரை நாம் தாங்கியிருக்கிறோம்—அது நம்மைச் சூழ இருக்கும் சர்வலோகத்தின் அற்புதப் படைப்புகளின் மகிமை பொருந்திய சிருஷ்டிகரின் பெயர். அவருடைய பெயர் நம்மீதிருக்கிறது. அவருடைய அமைப்பின் மூலம் ஏற்ற வேளையில் அளிக்கும் விசேஷமான ஆவிக்குரிய ஆகாரத்தில் பங்குகொள்வதற்காக நாம் அவருடைய பெயரில் ஆனந்தமாய்க் கூடுகிறோம். (லூக்கா 12:42) யெகோவாவின் சாட்சிகளாக நாம் அவருடைய ஈடிணையற்ற பெயரை ஏசாயா 12-ம் அதிகாரம் 2-ம் வசனத்தின் வார்த்தைகளால் நன்றியோடு துதிக்கிறோம். அது வாசிப்பதாவது: “இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; ஏனென்றால் யா யெகோவா என் பெலனும் என் வல்லமையுமானவர்; அவரே என்னுடைய இரட்சிப்புமானவர்.” நம்முடைய தேவன் நம்மை அநேக சோதனைகளிலிருந்து விடுவித்திருக்கிறார். இப்பொழுதோ நம்முடைய கடைசி இரட்சிப்பு சமீபத்திலிருக்கிறது—மற்றும் யா யெகோவாவின் கரத்திலிருக்கிறது!
2 “யா யெகோவா” என்ற இந்தக் கூற்று தெய்வீக நாமத்தின் இரட்டை உபயோகமாகும், பைபிளில் இது இரண்டு முறைதான் வருகிறது, அதாவது இங்கும் ஏசாயா 26:4-லும் வருகிறது. கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பாளருங்கூட இந்தக் கூற்றை “கர்த்தராகிய யெகோவா” என்று பயன்படுத்துவதைத் தகுதியாகக் கண்டனர். புதிய உலக மொழிபெயர்ப்பு மேற்கோள் பைபிள் (ஆங்கிலம்) அடிக்குறிப்பு ஒன்றின்படி ஏசாயா 12:2-ல் “வல்லமை” என்பதற்கு பதில் வசனிப்பு “கீதம்” மற்றும் “துதி.” தம்முடைய வணக்கத்தாருக்கு மகா பெலத்தை அளித்திடும் சர்வவல்லமையுள்ள யா யெகோவா நம்முடைய துதியின் கீதங்களுக்குப் பாத்திரமானவர் என்பது எவ்வளவு உண்மை!—ஏசாயா 40:28-31.
3 யெகோவாவின் வல்லமை அவருடைய ஞானம், நீதி மற்றும் அன்பு ஆகிய பண்புகளோடு சமமாகச் செல்கிறது. இந்தத் தெய்வீக பண்புகளை வெளிப்படுத்துகிறவராய், இயேசுவின் மீட்கும் பலியில் நம்பிக்கை வைக்கும் மனிதவர்க்கத்துக்கு இரட்சிப்பின் வழியைத் திறந்திருக்கிறார். இது சம்பந்தமாக, அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னான்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்கு பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும், அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக ஆமென்.” (ரோமர் 11:33-36) எனவே, நாம் யா யெகோவாவை உறுதியாகப் பற்றியிருந்து, நம்முடைய சர்வவல்ல தேவனும் பேரரசருமாக அவரில் முழு நம்பிக்கைக் கொண்டிருப்பது எவ்வளவு பொருத்தமானது!—எபிரெயர் 3:14-ஐ ஒப்பிடவும்.
4 ‘நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்,’ என்று ஏசாயா அறிக்கை செய்ததற்கு நல்ல காரணமிருந்தது. இந்தத் தீர்க்கதரிசி பின்னால் கடவுளுடைய இரட்சணிய செயல்களை நன்கு அறிய வந்தான். அசீரியாவையும் அதன் பெருமையுள்ள அரசனாகிய சனகெரிபையும் தாழ்த்துவதன் மூலம் யெகோவா தம்முடைய வார்த்தையை நிறைவேற்றின சமயத்தில் அவன் கண்கண்ட சாட்சியாக இருந்தான். நம்முடைய சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவா அனுப்பிய ஒரே தூதனால் ஒரே இரவில் 1,85,000 அசீரிய வீரர்கள் அழிக்கப்பட்டார்கள்! இந்த மகத்தான இரட்சிப்புக்குக் காரணம், எசேக்கியா அரசனும் யூதா முழுவதும் யா யெகோவாவுக்கு முழு கீழ்ப்படிதலைக் காண்பித்தது. (ஏசாயா 37:6, 7, 21, 36-38)) இந்த 20-ம் நூற்றாண்டில்கூட யெகோவா தம்முடைய மக்களை ஒடுக்குதல்களிலிருந்தும், தடையுத்தரவுகளிலிருந்தும், துன்புறுத்தல்களிலிருந்தும் கான்ஸன்ட்ரேஷன் முகாம்களிலிருந்தும் விடுவித்திருக்கிறார். ஏசாயாவின் காலத்திலிருந்த அந்தத் தற்பெருமை கொண்ட அசீரியர்களைப் போன்று நாஸி ஆட்சித் தலைவன் அடால்ப் ஹிட்லர் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக செயல்பட்டான். “இந்த இனம் ஜெர்மனியிலிருந்து முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படும்!” என்று ஒரு முறை மூர்க்கமாகச் சொன்னான். ஆனால் நிர்மூலமாக்கப்பட்டதோ ஹிட்லரும் அவனுடைய நாஸி மக்களும். அன்றிருந்த யெகோவாவின் சாட்சிகளின் அந்தச் சிறு தொகுதி இன்று 1,21,200-க்கும் அதிகமாக அதிகரித்திருக்கின்றனர்!—சங்கீதம் 27:1, 2; ரோமர் 8:31,37.
5 துன்புறுத்தல் ஏற்படும் இடங்களிலெல்லாம் யெகோவாவில் நம்பிக்கையுடைய மக்கள் ஜீவனளிக்கும் சத்தியத்தின் தண்ணீரைப் பருகுவதன் மூலம் புத்துயிர் பெற்று பெலனடைந்திருக்கிறார்கள். ஏசாயா 12:3-5-ல் கடவுளுடைய தீர்க்கதரிசி சொன்னவிதமாகவே இருக்கிறது: “நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரை [யெகோவாவை, NW] துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள், கர்த்தரை [யெகோவாவை, NW] கீர்த்தனம் பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.” நாம் ராஜ்ய சத்தியத்தை ஆழ்ந்து பருகி, நம்முடைய பேரரசரும் ஆண்டவருமாகிய யெகோவாவின் நாமத்தை நன்றியோடு தொடர்ந்து மகிமைப்படுத்துவோமாக. யெகோவாவில் முழு நம்பிக்கையுடையவர்களாய் நாம், வார்த்தையைப் பிரசங்கிப்போமாக, சாதகமான காலத்திலும் கடினமான காலத்திலும் அதை அவசர உணர்வுடன் செய்வோமாக.” (2 தீமோத்தேயு 4:2, NW] எதிர்ப்பவர்கள் என்ன செய்தாலும், யா யெகோவா நம்மை அன்போடு இரட்சிப்பின் வழியிலே நடத்துவார்!
“கொடூரமான ஜாதிகளின் நகரம்”
6 நாம் இப்பொழுது ஏசாயா 25-ம் அதிகாரத்துக்குத் திருப்புவோம். முதலாம் வசனத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “யெகோவாவே, நீரே என் தேவன். உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவகள் [நம்பத்தகுந்தவைகள், NW] யெகோவாவின் வணக்கத்தார், தங்கள் மத்தியில் அவர் செய்திருக்கும் மகத்தான செயல்களுக்காக அவரை மகிமைப்படுத்துகிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து ஏசாயா முரண்படுத்தி காண்பிக்கும் வகையில் யெகோவாவிடம் பின்வருமாறு சொல்லுகிறான்: “நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர். அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும் என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர் . . . கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்கு [யெகோவாவுக்கு] பயப்படும்.”—ஏசாயா 25:2, 3.
7 பெயர் சொல்லப்படாத இந்தக் கொடூரமான நகரம் எது? ஏசாயா ஒருவேளை மோவாபின் தலைநகராகிய ஆர் நகரைக் குறிப்பிடக்கூடும். மோவாப் எப்பொழுதுமே கடவுளுடைய மக்களின் எதிரி. ஆனால் இந்த சந்தர்ப்ப சூழ்நிலை சாத்தானுடைய அமைப்பின் இன்னொரு கிளைக்கு நன்கு பொருத்தமாக இருப்பதாய்த் தெரிகிறது—பிரதான எதிரி பாபிலோன். உரிய காலம் வரும்போது பாபிலோன் யூதாவையும் எருசலேமையும் பாழாக்கி யெகோவாவின் வணக்க வீட்டை அழித்து, தப்பித்திருப்போரை சிறைபிடித்துச் செல்லும். பாபிலோனின் அரசன் பின்வருமாறு சொன்ன பெருமையான வார்த்தைகளை ஏசாயா மேற்கோளாகக் குறிப்பிடுகிறான்: “நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் . . . உன்னதமானவருக்கு ஒப்பாவேன்.” ஆனால் யெகோவா பெர்சியாவின் கோரேசை எழுப்பி பாபிலோனை அழித்து கடவுளுடைய மக்களை அவருடைய தேசத்தில் நிலைநிறுத்துவார். தீர்க்கதரிசனமுறைக்கப்பட்டதுபோல, பூர்வ பாபிலோன் பிரதேசம் “மண்மேடும்” “பாழுமாக்கப்”பட்டது.—ஏசாயா 14:12-14; 13:17-22.
8 என்றபோதிலும், பாபிலோன் வீழ்ச்சிக்குப்பின் 2,500 ஆண்டுகளுக்கும் அதிகமாக கடந்து சென்றபோதிலும், யெகோவாவின் வணக்கத்தார் இன்னொரு பாபிலோனுக்கு எதிராகப் போராட வேண்டியதாயிருக்கிறது, அதுதான் “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்.” (வெளிப்படுத்துதல் 17:5) அவள்தான் பொய் மத உலகப் பேரரசு. நோவாவின் நாளில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்துக்கு சற்று பின்பு அவள் உருவானாள், அதாவது நிம்ரோது முதல் பாபிலோனைக் கட்டியபோது, அது பொய்யான பிரிவுகளையுடைய மதத்தின் பிறப்பிடமாயிருந்தது. இயேசுவாலும் அவருடைய அப்போஸ்தலராலும் கிறிஸ்தவ மதம் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, விசுவாச துரோகிகள் புறமத பாபிலோனிய “பிசாசுகளின் உபதேசங்களை” கொண்டுவருவதன் மூலம் பைபிள் சத்தியத்தைக் களங்கப்படுத்தினர், மற்றும் கிறிஸ்தவ மண்டலத்தின் மத ஒழுங்குமுறை உதவாது போனது. (1 தீமோத்தேயு 4:1) இந்தப் போலி கிறிஸ்தவம் பூமி முழுவதும் மனிதவர்க்கத்தின் எல்லா தேசங்களினூடேயும் பரவியிருக்கும் “மகா பாபிலோனின்” பிரதான பாகமாக ஆகியிருக்கிறது. ‘கொடூரமான ஜாதிகளின் நகரம்’ என்று ஏசாயா அவளை அழைக்கிறான்.
9 ஆரம்ப பாபிலோன் உண்டானது முதல் இன்று வரையுமாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொடூரமான சர்வாதிகாரிகள் பொதுமக்களை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் கொடூரமான குருவர்க்கத்தினரைக் கையாட்களாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இப்படியாக “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டு” வந்திருக்கிறான். (பிரசங்கி 8:9) இயேசு மக்களைப் பார்த்து மனதுருகினார், ஏனென்றால், அப்படிப்பட்ட பொய் மத மேய்ப்பர்களால் அவர்கள் “தோய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தார்கள்.” இன்று, பெருங் குற்றஞ்சாட்டுக்கேதுவான தொகுதி “அக்கிரமக்காரன்” என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இது தன்னை உயர்த்திக்கொள்ளும் கிறிஸ்தவ மண்டல குருமார்களாலானது. அவர்கள் யெகோவாவின் சாட்சிகளை எதிர்த்து துன்புறுத்துவதில் முன்நிலையில் இருந்துவந்திருக்கின்றனர்.—மத்தேயு 9:36; 2 தெசலோனிக்கேயர் 2:3, 4.
10 1919-ம் ஆண்டில் யெகோவா தம்முடைய உண்மையான மக்களை “மகா பாபிலோனின்” ஆதிக்கத்திலிருந்து விடுவித்தார். அந்தக் “கொடூரமான ஜாதிகளின் நகரம்” யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டி வற்புறுத்தப்பட்ட நிலைக்குள் வந்தது. எப்படியெனில் மகா வல்லமை வாய்ந்த செயல்களை நடப்பிப்பதற்காக அவர் தம்முடைய வணக்கத்தாரை திரும்ப நிலைப்படுத்திய அந்த “அதிசயமானவைகளைக்” கசப்போடு பார்க்க வேண்டியதாயிருந்தது. பொய் மதத்தாரும் தங்களுக்காக எதிர்காலத்தில் வைக்கப்பட்டிருக்கும் காரியங்களை எதிர்நோக்கியவர்களாய் யெகோவாவுக்கு பயப்பட வேண்டிய வற்புறுத்தப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது. கொடூரமான குருமார்கள் பல நூற்றாண்டுகளாகத் தங்களைப் பாமரருக்கு மேல் உயர்த்தி வந்திருக்கின்றனர். ஆனால் இப்பொழுதே ஏசாயா யெகோவாவைக் குறித்து பின்வருமாறு சொல்லுகிறான்: “-கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப் போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும் நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். வரட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியப் பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.”—ஏசாயா 25:4, 5.
“பாபிலோனில்” மகிழ்ச்சிப் பாடல் இல்லை
11 ஆம், அதுதான் “மகா பாபிலோன்” முழுவதும் இன்றைய நிலை. அங்கு மகிழ்ச்சிப் பாடல் எதுவும் இல்லை. தாங்கள் வணங்க வேண்டிய தெய்வங்களைக் குறித்து அவளுடைய மதத் தலைவர்கள் குழம்பியிருக்கிறார்கள். இது இத்தாலியிலுள்ள அஸிஸியில் அக்டோபர் 27, 1986-ல் நடைபெற்ற கலப்பு மத கூட்டத்தில் தெளிவாகத் தெரியவந்தது. அங்கு, ஐக்கிய நாடுகளின் சர்வதேச சமாதான ஆண்டு சம்பந்தமாக, போப் ஜான் பால் II “மகா பாபிலோனின்” முக்கியமான மதங்களின் தலைவர்களைக் கூட்டினார். அவர்கள் எல்லாருமே சமாதானத்துக்காக ஜெபித்தனர், புத்த மதத் துறவிகள் சிலர் ஒரே நாளில் 12 மணிநேரம் ஜெபித்தார்கள். ஆனால் யாரிடம் ஜெபித்தார்கள்? மரியாளிடமா அல்லது கிறிஸ்தவ மண்டலத்தின் பரிசுத்த திரித்துவமிடமா? அல்லது இந்து மத திரித்துவமிடமா? அல்லது புத்த மதத்தின் ஆயிரக்கணக்கான தெய்வங்களிடமா? அல்லது அல்லாவிடமா? அல்லது ஷின்டோ மதவணக்கத்தாரின் அந்தக் கீழ்த்தர மிருகமாகிய நரியினிடமா? அல்லது காகம் இனம் சார்ந்த ஒரு அமெரிக்க இந்தியனின் ஜெபங்கள்தான் பேரளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா? அவர் ‘கம்பீரமான தலைப் பாகையுடன் மகிமை பொருந்தியவராய்க்’ காணப்பட்டார் என்றும், தன்னுடைய சமாதான புகைக் குழாயைப் புகைக்க, “அந்தக் குளிர்ந்த காற்றில், புகை தூபம்போன்று எழும்பும்போது, தன்னுடைய ஜெபங்களை செய்தார்,” என்றும் அறிக்கை செய்யப்பட்டது.
12 ஒரு காரியம் நிச்சயம்: புத்த மதத்தின் தலாய் லாமா முதல் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் “உயர்திரு” மெத்தோடியஸ் வரை அந்த மதத்தலைவர்களில் ஒருவர்கூட மீகா 4:5-லுள்ள பைபிள் வார்த்தைகளுக்கு ஆதரவு காண்பிப்பதில்லை: “நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.” ஏசாயா 42-ம் அதிகாரம் வசனங்கள் 5 மற்றும் 8-லுள்ள பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட கூற்றின் உண்மைக்குத் தங்கள் ஆதரவைக் காண்பிப்பதில்லை: “வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும் அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும் அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான யெகோவாவாகிய தேவன் சொல்லுகிறதாவது: ‘நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.”
13 அஸிஸியில் ஆரவாரமான விழாக் கோலமும், தனித்துப் பிரித்துக் காட்டும் உடைகளும், திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட ஜெபங்களும் பகட்டான வெளிக்காட்டாகவுமே அமைந்தது. அதைத்தான் யெகோவாவின் குமாரன் இயேசு பூமியிலிருந்தபோது கண்டனம் செய்தார். தம்முடைய நாளைய மதத் தலைவர்களைக் குறித்து அவர் பின்வருமாறு சொன்னார்: “தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள். “மேலும் அவர்களிடம் நேரடியாக சொன்னார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை; பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.” (மத்தேயு 23:5, 13; மத்தேயு 6:1-8-யும் பாருங்கள்.) கடவுளைப் பொருத்ததில் வெளிப்படையான பகட்டான ஆராதனையோ அல்லது வணக்கத்துக்குரிய இடமோ முக்கியமானதல்ல. இயேசு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார்; அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.”—யோவான் 4:21, 24.
சமாதானத்தின் உண்மையான ஊற்று
14 உலக மதங்களில் காணப்படும் குழப்பத்தைப் பார்க்கும்போது, மதத் தலைவர்களின் ஜெபங்கள் உலக சமாதானத்தைக் கொண்டுவரும் என்று நினைப்பதில் ஒருவர் அவ்வளவு அறிவற்றவராக இருக்க முடியுமா? அவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மாய்மாலமாக ஜெபித்து வந்திருக்கிறார்கள், அதே சமயத்தில் தேசத்துக்கு தேசம் போர்களிலும் சிலுவைப் போர்களிலும், துன்புறுத்துதல்களிலும் முழுமையான பங்கை வகித்து வந்திருக்கிறார்கள். யெகோவாவின் தீர்க்கதரிசி பின்வருமாறு கேட்டார்: “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமை செய்யப் பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும்.” (எரேமியா 13:23) பொய்மத உலகப் பேரரசாகிய “மகா பாபிலோனின்” பிரதான பாகமாகிய கிறிஸ்தவ மண்டல மதங்கள் குறிப்பாக தெய்வீகத் தராசுகளில் நிறுக்கப்பட்டு வெகுவாய்க் குறையக் காணப்பட்டிருக்கிறது. அது அழிவுக்காகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது!—எரேமியா 2:34, 35, 37; 5:29-31; தானியேல் 5:27.
15 “சமாதானத்தின் தேவனாகிய” யெகோவா இரத்தப்பழிக்குரிய எல்லாரையும் அழிப்பதன் மூலமும் சத்தியத்தையும் நீதியையும் உண்மையிலேயே விரும்பும் மனிதரால் இந்தப் பூமியை நிரப்புவதன் மூலமும் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவருவார். (பிலிப்பியர் 4:9) அரசனாகிய தாவீது சொல்லுகிறபடி, “யெகோவாவை நம்பி நன்மை செய்”கிற சாந்த குணமுள்ளவர்கள்தான் “பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:3, 11) முரண்பட்ட தெய்வங்களுக்கும், விக்கிரகங்களுக்கும் சொரூபங்களுக்கும் ஏறெடுக்கப்படும் கலப்பு ஜெபங்களைச் செய்கிறவர்கள் செய்ய முடியாத ஒரு வழியில், இப்பொழுது யெகோவாவை நம்பி நன்மை செய்கிறவர்கள் சமாதானத்தின் நோக்கத்தை சேவிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.”—சங்கீதம் 115:2-8; ஏசாயா 44:14-20.
16 கடவுளுடைய சொந்த ஜனங்களின் ஜெபங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் “மகா பாபிலோனின்” ஆதரவாளர்களுடைய ஜெபங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் என்னே ஒரு முரண்! ‘அந்நியரின் மும்முரம் [கீதம், NW] தணியப்படுகிறது’ என்பதை நாம் எவ்வளவாகப் போற்றுகிறோம்! (ஏசாயா 25:5) ஆனால் “கொடூரமான அந்நியரின் நகரத்”திலிருந்து கூட்டிச் சேர்க்கப்படுகிற சாந்த குணமுள்ளவர்களைக் குறித்து பேசும்போது, ஏசாயா தொடர்ந்து சொல்லுகிறான்: “சேனைகளின் யெகோவா இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும் . . . தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.” (ஏசாயா 25:6) இன்று யெகோவாவைத் தொழுதுகொள்ள வருகிறவர்கள் பங்குகொள்ளும் ஆவிக்குரிய விருந்து மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அளிப்பவை, நிச்சயமாகவே ஒரு மகா விருந்து! புதிய பூமிக்காக யெகோவா வாக்களித்திருக்கும் நன்மையான காரியங்களின் புத்துணர்வையும் விருந்தையும் எதிர்நோக்கியவர்களாய் வைராக்கியத்துடன் அவரை சேவிக்கையில் நாம் சகித்து நிலைத்திருக்க நம்முடைய இருதயங்கள் திடன் கொள்கின்றன, நம்முடைய மகிழ்ச்சி பொங்கி வழிகிறது.—சங்கீதம் 104:1, 14, 15; மத்தேயு 19:28.
17 விரைவில் “மகா பாபிலோனை” அழித்துப்போடுவதன் மூலமாக மட்டுமல்ல, ஆனால் ஆதாமின் பாவத்தால் மனிதவர்க்கத்தை மூடியிருக்கும் “மூடலையும்” நீக்கிப்போடும் “அதிசயமான காரியங்களை” யா யெகோவா செய்வார். (ஏசாயா 25:7) ஆம், இயேசுவின் பலியின் அடிப்படையில் நம்முடைய தேவன் ஏசாயா 25:8-ஐ நிறைவேற்றுவார்: “அவர் மரணத்தை ஜெயமாக விழங்குவார்; யெகோவாவாகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார். யெகோவாவே இதைச் சொன்னார்.” ஆதாமிய பாவமும் மரணமும் நீக்கப்பட்டிருப்பதைக் காண்பதும், மரணத்தின் பிடியிலிருந்து திரும்பி வரும் அன்பானவர்களை வரவேற்பதும் எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய காரியமாயிருக்கும்! யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகள் மகா நிந்தனைக்காரனாகிய பிசாசாகிய சாத்தானுக்கு முழு அளவில் உத்தரவளித்திருக்கின்றனர் என்பதை அறிய வருவதில் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது! (நீதிமொழிகள் 27:11) இனிமேலும் அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கொண்டுவர முடியாது, ஏனென்றால் தங்கள் உத்தமத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள். தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட காரியங்களை—யெகோவா தாமே “சத்தியமாக, உறுதியாக” நிறைவேற்றியிருப்பார். பூமி முழுவதும் நீதியுள்ள மக்கள் நிரம்பிய நீதியான பரதீஸாக ஆகியிருக்கும். உண்மையிலேயே ஒரு மகத்தான எதிர்பார்ப்பு!
18 இந்த இருண்ட நாட்களினூடே நாம் யெகோவாவை எப்பொழுதும் நம்பியிருப்பது அதன் பலன்களை நிச்சயமாய்க் கொண்டிருக்கும். நம்முடைய அன்றாடக வாழ்க்கையில் என்ன விதமான அழுத்தங்களை எதிர்த்துப் போராட வேண்டியதாக இருந்தாலும்—நம்முடைய குடும்பத்தாரைப் பராமரிப்பது, பள்ளியில் பைபிள் நியமங்களை உறுதியாகப் பற்றியிருப்பது, அல்லது கடினமான பிராந்தியங்களில் சாட்சிகொடுப்பது போன்ற எதுவாயிருந்தாலும்—நாம் எப்பொழுதுமே யெகோவாவை நம்பியிருப்போம். “ஜெபத்தைக் கேட்கிற” யெகோவாவோடு ஒரு நெருங்கிய உறவைக் காத்துக்கொள்வது நமக்கு நிச்சயமாய் இரட்சிப்பைக் குறிக்கும். (சங்கீதம் 65:2) எனவே ஏசாயா 25:9-லுள்ள வார்த்தைகளைச் சொல்லுகிறவர்களோடு நிலைத்திருக்கத் தீர்மானமாயிருக்கக் கடவோம்: “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே யெகோவா, இவருக்காக காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்.” (w88 1⁄15)
[கேள்விகள்]
1. (எ) யெகோவாவின் சாட்சிகள் ஏன் இவ்வளவு வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்? (பி) தம்முடைய மக்களுக்கு யெகோவா என்ன செய்திருக்கிறார் என்பதை ஏசாயா 12:2 எப்படி விவரிக்கிறது?
2. (எ) “யா யெகோவா” என்ற கூற்று பைபிளில் எத்தனை முறை வருகிறது? எங்கே? (பி) ஏசாயா 12:2-ல் “வல்லமை” என்பதற்கான பதில் வசனிப்புகள் என்ன? அவையும் ஏன் பொருத்தமாக இருக்கின்றன?
3. (எ) யா யெகோவா எதற்கு வழியைத் திறந்திருக்கிறார்? எதன் அடிப்படையில்? (பி) ரோமர் 11:33-36-லுள்ள பவுலின் வார்த்தைகள் யெகோவாவின் சாட்சிகள் மீது என்ன பலனையுடையதாயிருக்கிறது?
4. (எ) ‘நான் பயப்படாமல் நம்பியிருப்பேன்,’ என்று அறிக்கையிட ஏசாயாவுக்கு என்ன நல்ல காரணங்கள் இருந்தன? (பி) இந்த இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் மக்கள் யா யெகோவாவில் நம்பிக்கையாயிருப்பதற்கு என்ன நல்ல காரணம் இருக்கிறது?
5. ஏசாயா 12:3-5-ன் வார்த்தைகள் எப்படி கடவுளுடைய நம்பிக்கையின் மக்களுக்குப் பொருந்துகின்றன?
6, 7. (எ) ஏசாயா 25:1-க்கு இசைவாக, யெகோவாவின் வணக்கத்தார் அவரை எதற்காக மகிமைப்படுத்த வேண்டும்? (பி) ஏசாயா 25:2, 3 எப்படி ஒரு நகரத்தை விவரிக்கிறது? (சி) தீர்க்கதரிசி எந்த நகரத்தைக் குறித்துப் பேசுகிறான்? ஏன்?
8, 9. (எ) யெகோவாவின் வணக்கத்தார் வேறு எந்த பாபிலோனை எதிர்த்துப் போராட வேண்டியதாயிருக்கிறது? அவள் எப்படித் தோன்றினாள்? (பி) அவளை ஏசாயா எப்படி விவரிக்கிறான்? அந்தப் பதம் ஏன் பொருத்தமானது?
10. (எ) ஏசாயா 25:3-க்கு இசைவாக, “கொடூரமான ஜாதிகளின் நகரம்” எப்படி யெகோவாவை மகிமைப்படுத்தவும் அவருக்குப் பயப்படவும் வேண்டிய கட்டாய நிலைக்குள்ளாகிறது? (பி) ஏசாயா 25:4, 5-ல் “ஏழை” மற்றும் “கொடூரமானவர்கள்” சம்பந்தமாக ஏசாயா யெகோவாவிடம் எவ்விதம் பேசுகிறான்?
11. “மகா பாபிலோன்” முழுவதிலுமே ஏன் மகிழ்ச்சிப் பாடல் இல்லை? இத்தாலியிலுள்ள அஸிஸியில் நடைபெற்ற கலப்பு மதக் கூட்டத்தில் இது எப்படி எடுத்துக் காட்டப்பட்டது?
12. அந்த மதத்தார் மீகா மற்றும் ஏசாயாவின் எந்த வார்த்தைகளுக்கு ஆதரவு காண்பிக்கவில்லை?
13. அஸிஸியில் உண்மையில் நடந்தது என்ன? இயேசுவால் அவர் பூமியிலிருந்தபோது இது எப்படி கண்டனம் செய்யப்பட்டது?
14. (எ) சமாதானத்துக்கான உலக மதங்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள் ஏன் மாய்மாலமானது? (பி) கிறிஸ்தவ மண்டல மதத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்பு என்ன?
15. யெகோவா எப்படி நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவருவார்? அவரில் நம்பிக்கையாயிருப்பவர்கள் எப்படி சமாதானத்தின் நோக்கத்தை சேவிப்பவர்களாயிருக்கிறார்கள்?
16. “கொடூரமான ஜாதிகளின் நகரங்களிலிருந்து” கூட்டிச்சேர்க்கப்படுகிறவர்களுக்கு யெகோவா என்ன ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்?
17. யெகோவா என்ன “அதிசயமான காரியங்களை“ நிறைவேற்றுவார்? இது மகிழ்ச்சிக்குரிய என்ன காரியங்களைக் கொண்டுவரும்?
18. அழுத்தங்களின் மத்தியிலும் ஏசாயா 25:9-க்கு இசைவாக நாம் என்ன செய்ய தீர்மானமாயிருக்கிறோம்?
விமர்சனக் கேள்விகள்
◻ யெகோவா எப்படி நம்முடைய பெலனும் வல்லமையுமாய் இருக்கிறார்?
◻ “கொடூரமான ஜாதிகளின் நகரம்” எது?
◻ “கொடூரமான ஜாதிகளின் நகரம்” எப்படி யெகோவாவை மகிமைப்படுத்தவும், அவருக்கு பயப்படவும் வேண்டிய கட்டாய நிலைக்குள்ளாகிறது?
◻ “மகா பாபிலோனில்” எந்த ஒரு மகிழ்ச்சிப் பாடலும் இல்லை என்று எது காண்பிக்கிறது?
◻ தம்முடைய மக்களுக்கு என்ன “அதிசயமான காரியங்களை” யெகோவா செய்வார்?