யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ஏசாயா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி
“யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்”? யெகோவா தேவனுடைய இந்த அழைப்புக்கு, ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா இவ்வாறு பதில் அளிக்கிறார்: “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்.” (ஏசாயா 1:1; 6:8) அப்போது அவர் ஒரு தீர்க்கதரிசியாக நியமிப்பைப் பெறுகிறார். தீர்க்கதரிசியாக அவர் செய்த காரியங்கள் அவருடைய பெயரிலுள்ள பைபிள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்புத்தகத்தை எழுதியவர் ஏசாயா தீர்க்கதரிசி. 46 வருட காலப்பகுதியில், அதாவது சுமார் பொ.ச.மு. 778-லிருந்து பொ.ச.மு. 732-க்கும் சற்று கூடுதலான காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. யூதா, இஸ்ரவேல், சுற்றியுள்ள பிற தேசங்கள் ஆகியவற்றிற்கு எதிரான பிரகடனங்கள் இதில் அடங்கியிருந்தாலும், இதன் முக்கிய பொருள் கண்டன தீர்ப்புகள் அல்ல. மாறாக, ‘யெகோவா தேவன் அருளும் இரட்சிப்பு’ ஆகும். (ஏசாயா 25:9, NW) சொல்லப்போனால், ஏசாயா என்ற பெயரின் அர்த்தமே “யெகோவாவின் இரட்சிப்பு” என்பதாகும். இக்கட்டுரையில் ஏசாயா 1:1–35:10 வரையான வசனங்களின் சிறப்பு குறிப்புகள் ஆராயப்படும்.
‘மீதியாயிருப்பவர்கள் திரும்புவார்கள்’
ஏசாயா புத்தகத்தின் முதல் ஐந்து அதிகாரங்களிலுள்ள தீர்க்கதரிசன செய்தி, தீர்க்கதரிசியாக ஏசாயா நியமிக்கப்படுவதற்கு முன்பே சொல்லப்பட்டதா அல்லது பிறகு சொல்லப்பட்டதா என்பதை பைபிள் குறிப்பிடுவதில்லை. (ஏசாயா 6:6-9) ஆனால், ஆன்மீக ரீதியில் யூதாவும் எருசலேமும் “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும்” வியாதிப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. (ஏசாயா 1:6) விக்கிரகாராதனை எங்கும் காணப்படுகிறது. தலைவர்கள் ஊழல் செய்கிறார்கள். பெண்கள் அகம்பாவத்துடன் நடந்துகொள்கிறார்கள். மெய்க் கடவுளுக்குப் பிரியமான முறையில் ஜனங்கள் அவரைச் சேவிப்பதில்லை. உணராமலும் அறிய விரும்பாமலும் இருக்கிற அந்த ஜனங்களிடம் “திரும்பத் திரும்ப” (NW) போய் பேசுவதற்கு ஏசாயா கட்டளையிடப்படுகிறார்.
இஸ்ரவேல் மற்றும் சீரியா படைகள் ஒன்றுசேர்ந்து தாக்குவதால் யூதா அச்சுறுத்தலை எதிர்ப்படுகிறது. ஆனால், இந்தக் கூட்டணி படைகள் வெற்றி பெறாது என்பதை ஏசாயாவையும் அவருடைய பிள்ளைகளையும் “அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும்” பயன்படுத்தி யூதாவுக்கு யெகோவா உறுதி அளிக்கிறார். (ஏசாயா 8:18) என்றாலும், “சமாதானப்பிரபு” மூலமாக மட்டுமே முடிவில்லா சமாதானம் வரும். (ஏசாயா 9:6, 7) யெகோவா தம் “கோபத்தின் கோலாக” பயன்படுத்துகிற அசீரியாவையும் நியாயந்தீர்ப்பார். கடைசியில், யூதா மக்கள் சிறைபிடித்துச் செல்லப்படுவார்கள்; ஆனால், ‘மீதியாயிருப்பவர்களே திரும்பி வருவார்கள்.’ (ஏசாயா 10:5, 21, 22) அடையாள அர்த்தத்தில் ‘ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றும் துளிரின்’ ஆட்சியில் உண்மையான நீதி கிடைக்கும்.—ஏசாயா 11:1.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:8, 9—சீயோனின் குமாரத்தி, “திராட்சத் தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும்” இருப்பதன் அர்த்தம் என்ன? அசீரிய படையெடுப்பின்போது, திராட்சத் தோட்டத்திலுள்ள ஒரு சிறிய குச்சுபோல அல்லது வெள்ளரித் தோட்டத்திலுள்ள வலுவற்ற குடிசைபோல எருசலேம் சற்றும் ஆதரவின்றி நிர்க்கதியாய் நிற்பதுபோல் இருக்கும். ஆனால், தக்க சமயத்தில் யெகோவா கைகொடுத்து உதவுகிறார்; இவ்வாறு சோதோம் கொமோரா போல் அது ஆகாதிருக்கும்படி அவர் பார்த்துக்கொள்கிறார்.
1:18—“வழக்காடுவோம் வாருங்கள்” என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? இது ஒருவருக்கொருவர் பேசி விட்டுக்கொடுத்து, ஓர் ஒப்பந்தத்திற்குள் வருவதற்கான அழைப்பை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, நீதியை நிலைநாட்டுவதற்கான ஏற்பாட்டை அர்த்தப்படுத்துகிறது; இச்சந்தர்ப்பத்தில், நீதியுள்ள நியாயாதிபதியான யெகோவா, இஸ்ரவேலர் தங்களுடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்வதற்கும் தங்களைச் சுத்திகரிப்பதற்கும் வாய்ப்பு அளிக்கிறார்.
6:8அ—இந்த வசனத்தில் “நான்,” “நமது” என்ற சுட்டுப்பெயர்கள் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளன? “நான்” என்ற சுட்டுப்பெயர் யெகோவா தேவனைக் குறிக்கிறது. “நமது” என்ற பன்மை சுட்டுப்பெயர், யெகோவாவுடன் இன்னொரு நபரும் இருப்பதைக் காட்டுகிறது. இவர், கடவுளுடைய ‘ஒரேபேறான குமாரனே.’—யோவான் 1:14; 3:16.
6:11—“ஆண்டவரே, எதுவரைக்கும்” என ஏசாயா கேட்டதன் அர்த்தம் என்ன? உணர்வற்ற ஜனங்களுக்கு யெகோவாவின் செய்தியை எதுவரைக்கும் அறிவிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்காக ஏசாயா கேட்கவில்லை. மாறாக, கடவுளுடைய பெயருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் விதத்தில் ஜனங்கள் எதுவரைக்கும் ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டிருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கே அவர் கேட்டார்.
7:3, 6—பொல்லாத அரசனாகிய ஆகாசுக்கு யெகோவா ஏன் இரட்சிப்பை அளித்தார்? சீரியா மற்றும் இஸ்ரவேலின் ராஜாக்கள், யூதாவின் ராஜாவாகிய ஆகாசை அரியணையிலிருந்து இறக்கி, தங்களுடைய கைப்பாவையாக அந்த இடத்தில் தபேயாலின் மகனை ராஜாவாக்கத் திட்டமிட்டார்கள். இவர் தாவீதின் பரம்பரையில் வந்தவரல்ல. பிசாசாகிய சாத்தானால் தூண்டிவிடப்பட்ட இந்தத் திட்டத்தில், தாவீதோடு செய்யப்பட்ட ராஜ்ய உடன்படிக்கை முறிந்துபோக வாய்ப்பிருந்தது. ஆகவே, வாக்குப்பண்ணப்பட்ட ‘சமாதானப் பிரபுவின்’ வம்ச பரம்பரையைக் காப்பதற்காக ஆகாசுக்கு யெகோவா இரட்சிப்பை அளித்தார்.—ஏசாயா 9:6.
7:8—எப்பிராயீம் 65 வருடங்களுக்குள் எவ்வாறு ‘நொறுங்குண்டுபோனது’? இந்தத் தீர்க்கதரிசனத்தை ஏசாயா உரைத்த பிறகு, “இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில்,” பத்துக் கோத்திர ராஜ்யத்திலுள்ள ஜனங்கள் சிறைபிடித்துச் செல்லப்படுவதும் அத்தேசத்தில் அந்நியர்கள் குடிவைக்கப்படுவதும் ஆரம்பமாயின. (2 இராஜாக்கள் 15:29) இது சனகெரிப்புக்குப்பின் அசீரிய ராஜாவாக ஆன அவருடைய மகன் எசரத்தோனின் நாட்கள்வரை நீடித்தது. (2 இராஜாக்கள் 17:6; எஸ்றா 4:1, 2; ஏசாயா 37:37, 38) சமாரியாவில் 65 வருடங்களாக அசீரியர்கள் இவ்வாறு செய்துகொண்டிருந்தார்களென ஏசாயா 7:8-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
11:1, 10—இயேசு கிறிஸ்து எவ்வாறு ‘ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றிய துளிராகவும்,’ ‘ஈசாயின் வேராகவும்’ இருக்க முடியும்? (ரோமர் 15:12) மனித வம்சப் பரம்பரைப்படி இயேசு, ‘ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றியவராக’ இருந்தார். அவர் ஈசாயின் சந்ததியாகவும் ஈசாயின் மகனான தாவீதின் பரம்பரையில் வந்தவராகவும் இருந்தார். (மத்தேயு 1:1-6; லூக்கா 3:23-32) என்றாலும், ராஜ்ய அதிகாரத்தைப் பெறுவதால், முன்னோர்களோடு இயேசுவுக்கு உள்ள உறவில் மாற்றம் ஏற்படுகிறது. எப்படியெனில், கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு பூமியில் நித்திய வாழ்க்கையை அளிப்பதற்கான வல்லமையும் அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால், இயேசு அவர்களுடைய ‘நித்திய பிதாவாக’ ஆகிறார். (ஏசாயா 9:6) எனவே ஈசாய் உட்பட, தம் முன்னோர்களின் ‘வேராகவும்’ அவர் ஆகிறார்.
நமக்குப் பாடம்:
1:3. நம் படைப்பாளர் எதிர்பார்க்கிறபடி வாழ மறுப்பது, ஒரு மாட்டையோ கழுதையையோவிட நாம் அறிவில் மட்டமானவர்களாக இருப்பதைக் காட்டும். மறுபட்சத்தில், யெகோவா நமக்குச் செய்திருக்கிற எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளவர்களாய் இருப்பது நாம் உணர்வில்லாதவர்களைப்போல் நடந்துகொள்ளாதிருக்கவும் அவரைவிட்டு விலகாதிருக்கவும் செய்யும்.
1:11-13. மாய்மாலமான மதச் சடங்குகளும், சம்பிரதாயப்படியான ஜெபங்களும் யெகோவாவுக்கு வெறுப்பானவை. நம்முடைய செயல்களும் ஜெபங்களும் இருதயத்தின் நல்லெண்ணத்தால் தூண்டப்பட்டதாய் இருக்க வேண்டும்.
1:25-27; 2:2; 4:2, 3. மனந்திரும்பிய மீதியானோர் மீண்டும் எருசலேமுக்கு வந்து மெய் வணக்கத்தில் ஈடுபட ஆரம்பித்தபோது, யூதாவின் அடிமைத்தனமும் பாழ்க்கடிப்பும் முடிவுக்கு வந்தன. ஆம், தவறுசெய்தவர்கள் மனந்திரும்புகையில் யெகோவா இரக்கங்காட்டுகிறார்.
2:2-4. ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் பக்திவைராக்கியத்துடன் நாம் ஈடுபடுவது, அநேக நாடுகளைச் சேர்ந்தவர்கள் சமாதான வழிகளைக் கற்றுக்கொள்ளவும், ஒருவரோடொருவர் சமாதானமாய் இருக்கவும் உதவுகிறது.
4:3. யெகோவா ஒழுக்க ரீதியிலான அழுக்கைக் கழுவி, இரத்தப்பழியை நீக்கிப்போடுவார்.
5:11-13. பொழுதுபோக்கைத் தெரிவுசெய்வதில் கட்டுப்பாடும் சமநிலையும் இல்லாதிருப்பது, அறிவுக்கிசைய நடக்காததைக் காட்டும்.—ரோமர் 13:13.
5:21-23. கிறிஸ்தவ மூப்பர்கள், அதாவது கண்காணிகள் ‘தங்கள் பார்வைக்கு ஞானிகளாய்’ இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் ‘திராட்ச மது’ (NW) குடிப்பதில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும், பாரபட்சம் காட்டாதவர்களாயும் இருக்க வேண்டும்.
11:3அ. யெகோவாவுக்குப் பயப்படுவதில் சந்தோஷம் உண்டு என்பதை இயேசுவின் முன்மாதிரியும் போதனைகளும் காட்டுகின்றன.
‘யெகோவா யாக்கோபுக்கு இரங்குவார்’
மற்ற தேசத்தாருக்கு எதிரான பிரகடனங்கள் 13-23 அதிகாரங்களில் காணப்படுகின்றன. என்றாலும், இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்தாரையும் அவர்களுடைய தாயகத்திற்குத் திரும்பிவர செய்வதன்மூலம் ‘யெகோவா யாக்கோபுக்கு இரங்குவார்.’ (ஏசாயா 14:1) இப்புத்தகத்தின் 24-27 அதிகாரங்களில், யூதா தேசம் பாழாக்கப்படுவதைப் பற்றிய செய்தியும் அதைத் தொடர்ந்து அது திரும்பவும் புதுப்பிக்கப்படுவதைப் பற்றிய வாக்குறுதியும் கொடுக்கப்பட்டுள்ளன. ‘எப்பிராயீமுடைய [இஸ்ரவேலருடைய] வெறியர்’ சீரியருடன் கூட்டுச்சேர்ந்ததாலும், யூதாவின் “ஆசாரியனும் தீர்க்கதரிசியும்” அசீரியருடன் கூட்டுச்சேர வழிதேடியதாலும் யெகோவா தம் கோபத்தை வெளிக்காட்டுகிறார். (ஏசாயா 28:1, 7) பாதுகாப்பு தேடி எகிப்துக்குப் போகிறதினிமித்தம் ‘அரியேலுக்கு [எருசலேம்]’ ஆபத்து என பிரகடனம் செய்யப்படுகிறது. (ஏசாயா 29:1; 30:1, 2) இருந்தாலும், யெகோவாவில் விசுவாசம் வைப்போருக்கு இரட்சிப்பு கிடைக்குமென முன்னறிவிக்கப்படுகிறது.
‘பாலசிங்கம் தன் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சிக்கிறதுபோல,’ யெகோவா ‘சீயோன் மலையை’ காப்பார். (ஏசாயா 31:4) “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்” என்ற வாக்குறுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. (ஏசாயா 32:1) யூதாவின்மீது அசீரியரின் அச்சுறுத்தல் ‘சமாதானத்து ஸ்தானாபதிகளைக்கூட’ மனங்கசந்து அழவைக்கிறது; என்றாலும், தமது ஜனங்கள் குணமடைவார்கள் என்றும் ‘அவர்களுடைய அக்கிரமம் மன்னிக்கப்படும்’ என்றும் யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (ஏசாயா 33:7, 22-24) “சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது.” (ஏசாயா 34:2) யூதா பாழான நிலையில் விடப்படுவதில்லை. “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.”—ஏசாயா 35:1.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
13:17—மேதியர்கள் என்ன அர்த்தத்தில் வெள்ளியை மதியாமலும் பொன்னின்மேல் பிரியப்படாமலும் இருந்தார்கள்? மேதியர்களும் பெர்சியர்களும், போரில் கிடைக்கும் கொள்ளைப்பொருள்களைவிட தங்களுக்குக் கிடைக்கும் வெற்றியின் மகிமையையே மிக உயர்வாய் கருதினார்கள். கோரேசுவின் விஷயத்தில் இது உண்மையாய் இருந்தது; யெகோவாவின் ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் கொள்ளையடித்து வந்திருந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களை சிறையிருப்பிலிருந்து தாயகம் திரும்பியவர்களிடத்தில் அவர் கொடுத்தனுப்பினார்.
14:1, 2—யெகோவாவின் ஜனங்கள் எவ்வாறு ‘தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்குபவர்களாகவும்,’ ‘தங்களை ஒடுக்கினவர்களை ஆளுகிறவர்களாகவும்’ ஆனார்கள்? இது தானியேல் போன்ற சிலரின் விஷயத்தில் உண்மையானது. பாபிலோனில் மேதிய-பெர்சியர்களுடைய ஆட்சியின்கீழ் உயர் அதிகாரியாக தானியேல் நியமிக்கப்பட்டார்; பெர்சிய ராணியாக எஸ்தர் ஆனாள்; பெர்சிய சாம்ராஜ்யத்தின் பிரதம மந்திரியாக மொர்தெகாய் நியமிக்கப்பட்டார்.
20:2-5—ஏசாயா உண்மையிலேயே மூன்று வருடங்களுக்கு வஸ்திரமில்லாமல் நடந்தாரா? ஏசாயா தன் வெளி ஆடையை மட்டும் கழற்றிவிட்டு, உள்ளாடையை அணிந்து நடந்திருக்கலாம்.
21:1—எந்தப் பகுதி ‘கடல் வனாந்தரம்’ என அழைக்கப்படுகிறது? பாபிலோன் உண்மையிலேயே எந்தக் கடலுக்கும் பக்கத்தில் இல்லாவிட்டாலும், அது அவ்வாறு குறிப்பிடப்படுகிறது. அதற்குக் காரணம், யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வருடாவருடம் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சதுப்பான “கடல்” உருவாகிவிடும்.
24:13-16—யூதர்கள் எவ்வாறு ‘ஒலிவ மரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல ஜனங்களின் நடுவில் கொஞ்சம் மீந்திருப்பார்கள்’? அறுவடைக்குப் பின் ஒலிவ மரத்திலோ அல்லது திராட்சக் கொடியிலோ இன்னும் சில பழங்கள் இருப்பதைப்போல, எருசலேமும் யூதாவும் அழிக்கப்படும்போது சிலர் மட்டுமே தப்பிப்பிழைப்பார்கள். ‘வெளுக்குந்திசை [கிழக்கே பாபிலோன்],’ ‘சமுத்திர [மத்தியதரைக்கடலிலுள்ள] தீவுகள்’ என அவர்கள் எங்கு நாடுகடத்தப்பட்டிருந்தாலும், அங்கு யெகோவாவை மகிமைப்படுத்துவார்கள்.
24:21—‘உன்னதமான சேனையும்,’ ‘பூமியின் ராஜாக்களும்’ யார்? “உன்னதமான சேனை” பொல்லாத ஆவிகளின் சேனைகளைக் குறிக்கலாம். எனவே, ‘பூமியின் ராஜாக்கள்’ பூமியிலுள்ள ஆட்சியாளர்களைக் குறிக்கின்றன; இவர்கள்மீது பேய்கள் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்றன.—1 யோவான் 5:19.
25:7—‘சகல ஜனங்கள் மேலுமுள்ள முக்காடும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலும்’ எதைக் குறிக்கின்றன? இந்த ஒப்புமைகள், மனிதகுலத்தின் இரண்டு முக்கிய எதிரிகளான பாவத்தையும் மரணத்தையும் குறிக்கின்றன.
நமக்குப் பாடம்:
13:20-22; 14:22, 23; 21:1-9. பாபிலோனைக் குறித்த யெகோவாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியதுபோலவே அவருடைய வார்த்தை எப்போதும் நிறைவேறும்.
17:7, 8. இஸ்ரவேலைச் சேர்ந்த பெரும்பாலோர் யெகோவாவுக்குச் செவிகொடாமற்போனாலும், சிலர் செவிகொடுத்தார்கள். அதுபோல, கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த சிலர் ராஜ்ய செய்திக்குச் செவிகொடுக்கிறார்கள்.
28:1-6. அசீரியாவின் கையில் இஸ்ரவேல் வீழ்ந்துவிடும், ஆனால், உண்மையுள்ளவர்கள் தப்பிப்பிழைப்பதற்கு யெகோவா வழிசெய்வார். அவருடைய நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
28:23-29. உண்மையுள்ள தனி நபர்களை அவரவருடைய தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் தகுந்தபடி யெகோவா சிட்சிக்கிறார்.
30:15. யெகோவாவினால் இரட்சிப்பைப் பெறுவதற்கு, ‘அமர்ந்திருப்பதன்’ மூலம், அதாவது மனித திட்டங்களைப் பயன்படுத்தி இரட்சிப்புக்கு வழிதேடுவதைத் தவிர்ப்பதன் மூலம், நாம் விசுவாசத்தைக் காட்டுவது அவசியம். ‘அமரிக்கையாய் இருப்பதன்’ மூலம், அதாவது பயப்படாமல் இருப்பதன் மூலம், யெகோவாவுடைய காக்கும் வல்லமையில் நாம் நம்பிக்கையையும் வெளிக்காட்டுகிறோம்.
30:20, 21. தம்முடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையான பைபிள் வாயிலாகவும் ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ வாயிலாகவும் யெகோவா சொல்பவற்றிற்குச் செவிசாய்ப்பதன் மூலம் நாம் அவரைப் ‘பார்க்கிறோம்,’ அவருடைய இரட்சிப்பின் சத்தத்தைக் ‘கேட்கிறோம்.’—மத்தேயு 24:45.
ஏசாயா தீர்க்கதரிசனம் கடவுளது வார்த்தையில் நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது
ஏசாயா புத்தகத்திலுள்ள கடவுளின் செய்திக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! ஏற்கெனவே நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள், ‘யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படும் வசனம் வெறுமையாய் அவரிடத்திற்குத் திரும்பாமல், அதை அவர் அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்’ என்பதில் நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன.—ஏசாயா 55:11.
ஏசாயா 9:7 மற்றும் 11:1-5, 10-ல் மேசியாவைக் குறித்து சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? நம்முடைய இரட்சிப்புக்காக யெகோவா செய்துள்ள ஏற்பாட்டின்மீது நம் விசுவாசத்தை அவை பலப்படுத்துகின்றன, அல்லவா? நம் காலத்தில் நிறைவேறுகிற அல்லது இன்னும் நிறைவேறவிருக்கிற முக்கியமான தீர்க்கதரிசனங்களும் இப்புத்தகத்தில் உள்ளன. (ஏசாயா 2:2-4; 11:6-9; 25:6-8; 32:1, 2) உண்மையிலேயே ‘தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது’ என்பதற்கு இன்னும் அதிகமான அத்தாட்சிகளை ஏசாயா புத்தகம் அளிக்கிறது.—எபிரெயர் 4:12.
[பக்கம் 8-ன் படம்]
ஏசாயாவும் அவருடைய பிள்ளைகளும் “இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும்” இருந்தார்கள்
[பக்கம் 9-ன் படம்]
எருசலேம் “திராட்சத் தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோல” ஆகவிருந்தது
[பக்கம் 10-ன் படம்]
மற்ற தேசத்தார் தங்கள் ‘பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பதற்கு’ எவ்வாறு உதவி பெறுகிறார்கள்?