அதிகாரம் பதினைந்து
தேசங்களுக்கு எதிரான யெகோவாவின் ஆலோசனை
யெகோவா, பொல்லாப்பு செய்யும் தம் மக்களை சிட்சிக்க மற்ற தேசங்களைப் பயன்படுத்துகிறார். ஆனாலும் அந்தத் தேசங்கள் தேவையில்லாமல் கொடூரமாகவும் ஆணவத்தோடும் நடந்துகொண்டு உண்மை வணக்கத்தை எதிர்ப்பதை அவர் பொறுத்துக்கொள்வதில்லை. ஆகவே அவர் ‘பாபிலோனுக்கு எதிரான தீர்ப்பை’ வெகு காலத்துக்கு முன்னதாகவே பதிவுசெய்யும்படி ஏசாயாவை ஏவுகிறார். (ஏசாயா 13:1, NW) இருந்தாலும் பாபிலோன் கடவுளது மக்களைத் தாக்கப்போவது எதிர்காலத்தில்தான். இப்போது ஏசாயாவின் நாட்களில் அசீரியாவே அவர்களை ஒடுக்குகிறது. அது இஸ்ரவேலின் வடதிசை ராஜ்யத்தை அழித்து யூதாவின் பெரும்பகுதியை பாழாக்குகிறது. ஆனால் அசீரியாவின் வெற்றிக் களிப்பு வெகு காலத்திற்கு நிலைக்காது. ஏசாயா எழுதுவதாவது: “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும் . . . என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார். அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள் மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.” (ஏசாயா 14:24, 25) ஏசாயா இந்தத் தீர்க்கதரிசனத்தை சொல்லி சிறிது காலத்திற்குள், யூதாவை அச்சுறுத்தாதபடி அசீரியா அடக்கப்படுகிறது.
2 கடவுளது மக்களின் மற்ற எதிரி தேசங்களைப் பற்றியென்ன? அவர்களும் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். ஏசாயா அறிவிப்பதாவது: “பூமியனைத்திற்கு எதிராகவும் ஆலோசிக்கப்பட்டிருக்கும் ஆலோசனை இதுவே; அனைத்து தேசங்களுக்கு எதிராகவும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே. சேனைகளின் யெகோவா இப்படி ஆலோசித்திருக்கிறார், அதை சீர்குலைக்க வல்லவன் யார்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்க அதை மடக்க வல்லவன் யார்?” (ஏசாயா 14:26, 27, NW) இங்கே யெகோவாவின் “ஆலோசனை” என சொல்லப்பட்டிருப்பது, அறிவுரையை மட்டும் குறிப்பதில்லை. அது அவரது உறுதியான தீர்மானத்தை, தீர்ப்பைக் குறிக்கிறது. (எரேமியா 49:20, 30) கடவுள் வெளிக்காட்டும் வல்லமையே அவரது “கை” என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பெலிஸ்தியா, மோவாப், தமஸ்கு, எத்தியோப்பியா, எகிப்து ஆகிய தேசங்களுக்கு எதிராக யெகோவாவின் தீர்ப்பு கொடுக்கப்படுகிறது. இது, ஏசாயா 14-ஆம் அதிகாரத்தின் கடைசி வசனங்களிலும், 15 முதல் 19 வரையான அதிகாரங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
3 இருந்தாலும் யெகோவாவின் கை “அனைத்து தேசங்களுக்கு” எதிராகவும் நீட்டப்பட்டிருப்பதாக ஏசாயா சொல்கிறார். ஆகவே இந்த தீர்க்கதரிசனங்கள் பூர்வ காலத்தில் முதலில் நிறைவேற்றம் அடைந்தன என்றாலும், அவை ‘முடிவு காலத்திற்கும்’ பொருந்துகின்றன. இன்று பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கு எதிராகவும் யெகோவாவின் கை நீட்டப்பட்டிருக்கிறது. (தானியேல் 2:44; 12:9; ரோமர் 15:4; வெளிப்படுத்துதல் 19:11, 19-21) சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா தமது ஆலோசனையை வெகு காலத்திற்கு முன்பாகவே நம்பிக்கையோடு வெளிப்படுத்துகிறார். நீட்டப்பட்டிருக்கும் அவரது கையை மடக்க யாராலும் முடியாது.—சங்கீதம் 33:11; ஏசாயா 46:10.
பெலிஸ்தியாவிற்கு எதிராக ‘பறக்கிற அக்கினி சர்ப்பம்’
4 முதலாவதாக பெலிஸ்தர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படுகிறது. “ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் [“தீர்ப்பு,” NW] என்னவென்றால்: முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.”—ஏசாயா 14:28, 29.
5 பெலிஸ்தியாவின் அச்சுறுத்தலை எதிர்க்கும் பலம் உசியா ராஜாவுக்கு இருந்தது. (2 நாளாகமம் 26:6-8) இந்த எதிரிகளுக்கு அவர் ஒரு சர்ப்பமாக தோன்றினார்; அவரது கோல் அவர்களை அடித்து வந்தது. உசியா இறந்தபோது ‘அவரது கோல் முறிந்தது.’ அதன்பின் உத்தமமுள்ள யோதாம் ஆளத் துவங்கினார், ஆனால் “ஜனங்கள் இன்னும் கேடானவைகளையே செய்துவந்தார்கள்.” அடுத்ததாக ஆகாஸ் ராஜாவானார், நிலைமையும் மாறியது. பெலிஸ்தர்கள் யூதாமீது படையெடுத்து வெற்றிகண்டனர். (2 நாளாகமம் 27:2; 28:17, 18) இப்போதோ மறுபடியும் நிலைமை மாறுகிறது. பொ.ச.மு. 746-ல் ஆகாஸ் ராஜா உயிரிழக்கவே, இளம் எசேக்கியா அரியணை ஏறுகிறார். இப்போதும் தங்களை அடக்க ஆளில்லை என பெலிஸ்தர்கள் நினைத்தால், அந்தோ பரிதாபம்! எசேக்கியா பராக்கிரமசாலியாக நிரூபிக்கிறார். உசியாவின் வம்சத்தைச் சேர்ந்தவரான (அவரது ‘வேரின்’ ‘கனியான’) எசேக்கியா, ‘பறக்கிற அக்கினி சர்ப்பம்போல்,’ எதிரிகள்மீது மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து தாக்குகிறார். சர்ப்பம் கொத்தி விஷமேற்றுவதுபோல் செயல்படுகிறார். இந்த விஷம் அக்கினி தகிப்பதைப் போன்ற எரிச்சலை ஏற்படுத்துகிறது.
6 மேற்கண்ட வர்ணனைக்கு பொருத்தமாகவே ‘[எசேக்கியா] பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும் . . . முறியடித்தார்.’ (2 இராஜாக்கள் 18:8) அசீரிய ராஜா சனகெரிபின் சரித்திரப் பதிவுகளின்படி பெலிஸ்தர்கள் எசேக்கியா ராஜாவின் ஆதிக்கத்திற்கு ஆளானார்கள். “எளியவர்கள்,” அதாவது பலவீனமாக்கப்பட்ட யூதா ராஜ்யம் பாதுகாப்பையும் செல்வசெழிப்பையும் அனுபவித்த அதேசமயத்தில் பெலிஸ்தியா பஞ்சத்தால் வாடியது.—ஏசாயா 14:30, 31-ஐ வாசியுங்கள்.
7 யூதாவில் வேறு நாட்டு தூதுவர்கள் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் அசீரியாவை எதிர்த்து கூட்டணி அமைக்க யூதாவை நாடியிருக்கலாம். அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்? “அந்த நாட்டுத் தூதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்?” (பொ.மொ.) பாதுகாப்பிற்காக எசேக்கியா புறதேசத்தாரோடு கூட்டணி சேர வேண்டுமா? கூடாது! “யெகோவா சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள்” என அவர் தூதுவர்களிடம் சொல்ல வேண்டும். (ஏசாயா 14:32, தி.மொ.) எசேக்கியா ராஜா, யெகோவாவை முழுமையாக நம்ப வேண்டும். சீயோனின் அஸ்திவாரம் உறுதியானது. அது அசீரியாவின் தாக்குதலை சமாளித்து நிற்கும்.—சங்கீதம் 46:1-7.
8 பெலிஸ்தியாவைப் போன்ற சில தேசங்கள் இன்றும் கடவுளது வணக்கத்தாரை கடுமையாக எதிர்க்கின்றன. யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் சிறைச்சாலைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களது ஊழியம் தடை செய்யப்பட்டிருக்கிறது. அநேகர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிரிகள் தொடர்ந்து ‘நீதிமானுடைய ஆத்துமாவுக்கு எதிராக கடுமையாக தாக்குகின்றனர்.’ (சங்கீதம் 94:21, NW) அவர்களுக்கு கிறிஸ்தவர்கள் ‘எளியவர்களாக,’ ‘ஏழைகளாக’ தெரியலாம். இருந்தாலும் யெகோவாவின் துணையால் ஆன்மீக செழிப்பை அவர்கள் அனுபவிக்கிறார்கள், அவர்களது எதிரிகளே பஞ்சத்தில் தவிக்கிறார்கள். (ஏசாயா 65:13, 14; ஆமோஸ் 8:11) நவீன நாளைய பெலிஸ்தர்களுக்கு எதிராக யெகோவா தமது கையை நீட்டும்போது, இந்த “எளியவர்கள்” பாதுகாப்பாக இருப்பார்கள். யாரோடு? ‘தேவனுடைய வீட்டாரோடு.’ இவ்வீட்டிற்கு இயேசுவே அஸ்திவார மூலைக்கல்லாவார். (எபேசியர் 2:19, 20) மேலும், இயேசுவை ராஜாவாகக் கொண்ட யெகோவாவின் பரலோக ராஜ்யமாகிய ‘பரம எருசலேமின்கீழ்’ அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.—எபிரெயர் 12:22; வெளிப்படுத்துதல் 14:1.
மோவாப் அடக்கப்படுகிறது
9 சவக்கடலுக்கு கிழக்கே அமைந்திருந்ததுதான் இஸ்ரவேலின் மற்றொரு அண்டை தேசமான மோவாப். பெலிஸ்தர்களாவது இஸ்ரவேலரோடு எவ்விதத்திலும் உறவுமுறை இல்லாத அந்நிய தேசத்தினர். ஆனால் மோவாபியர்களோ இஸ்ரவேலரின் உறவினர்கள். ஏனெனில் இவர்கள் ஆபிரகாமின் அண்ணன் மகனான லோத்துவின் வம்சத்தினர். (ஆதியாகமம் 19:37) இருந்தபோதிலும் இவர்கள் எப்போதும் இஸ்ரவேலரோடு மோதினர். உதாரணத்திற்கு, மோசேயின் நாட்களில், மோவாபின் அரசன் தீர்க்கதரிசியாகிய பிலேயாமை அழைத்து இஸ்ரவேலை சபிக்கச் சொன்னான். ஆனால் அது நடக்காதபோது, ஒழுக்கக்கேட்டையும் பாகால் வணக்கத்தையும் பயன்படுத்தி மோவாபியர்கள் இஸ்ரவேலர்களை கண்ணியில் சிக்க வைத்தனர். (எண்ணாகமம் 22:4-6; 25:1-5) ஆகவேதான் ‘மோவாபுக்கு எதிரான தீர்ப்பை’ பதிவுசெய்யும்படி யெகோவா ஏசாயாவை ஏவுகிறார்.—ஏசாயா 15:1அ, NW.
10 ஆர், கீர் (அல்லது கிராரேசேத்), தீபோன் உட்பட மோவாபின் பல நகரங்களுக்கும் பகுதிகளுக்கும் எதிராக தீர்ப்புரைக்கிறது ஏசாயாவின் தீர்க்கதரிசனம். (ஏசாயா 15:1ஆ, 2அ) மோவாபியர்கள் கிராரேசேத்தின் திராட்ச அடைகளுக்காக அழுது புலம்புவார்கள். (ஏசாயா 16:6, 7, தி.மொ.) திராட்சத்தோட்டங்களுக்கு பெயர்போன சிப்மாவும் யரசேரும் திடீரென பேரழிவை சந்திக்கும். (ஏசாயா 16:8-10) “மூன்று வயது கிடாரி” என அர்த்தப்படுத்தும் எக்லத்-ஷெலிஷீயா என்ற பகுதி, கட்டுறுதிமிக்க இளம் பசு வேதனையால் அலறுவதுபோல் பரிதாபமாக காட்சியளிக்கும். (ஏசாயா 15:5, தி.மொ.) புல்லெல்லாம் உலர்ந்துபோகும்; மோவாபியர்கள் குத்திக் கொல்லப்படுவதால் “தீமோனின் ஜலமெல்லாம்” இரத்தமாக மாறும். “நிம்ரீமின் நீர்நிலைகள் பாழாய்ப்போம்.” இது, எதிரி படைகள் மோவாபின் ஓடைகளுக்கு அணைபோட்டுத் தடுத்து நகரத்திற்கு தண்ணீர் பாயாதபடி செய்யும் கருத்தில் சொல்லர்த்தமாக நிறைவேறலாம், அல்லது அடையாள அர்த்தத்திலும் நிறைவேறலாம்.—ஏசாயா 15:6-9, தி.மொ.
11 மோவாபியர்கள் துக்கத்திற்கு அடையாளமாக இரட்டு உடுத்திக்கொள்வார்கள். அவமானப்பட்டு புலம்புவதற்கு அடையாளமாக தலைகளை மொட்டையடித்துக் கொள்வார்கள். கடுந்துயரத்தையும் வெட்கக்கேட்டையும் காட்ட தாடிகளை ‘கத்தரித்துவிடுவார்கள்.’ (ஏசாயா 15:2ஆ-4) இந்த நியாயத்தீர்ப்புகள் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதியாக நம்பிய ஏசாயா மிகுந்த கலக்கமடைகிறார். மோவாபுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு செய்தியின் நிமித்தம் அவரது உள்ளம் சுரமண்டல நரம்புகள்போல் துடிக்கிறது, இரக்கம் சுரக்கிறது.—ஏசாயா 16:11, 12.
12 இந்தத் தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறும்? விரைவில். “இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு [“தீர்ப்பு,” NW]. ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர்.” (ஏசாயா 16:13, 14, பொ.மொ.) இதற்கு இசைவாக, பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், மோவாப் பெரும் அழிவை சந்தித்ததற்கும் அதன் பல்வேறு பகுதிகள் குடியிருப்பின்றி பாழாக்கப்பட்டதற்கும் தொல்பொருள் அத்தாட்சி உண்டு. மோவாபிய அரசர் சாலமனு தனக்கு கப்பங்கட்டியதாக அசீரிய ராஜா மூன்றாம் திகிலாத்பிலேசர் குறிப்பிட்டார். மற்றொரு மோவாபிய அரசர் கம்முசுநாத்பி, சனகெரிபுக்கு கப்பங்கட்டினார். மோவாபிய அரசர்கள் முசூரியும் கமாஷால்துவும் தங்கள் ஆதிக்கத்தில் இருந்ததாக அசீரிய ராஜாக்களான எசரத்தோனும் அஷூர்பானிப்பாலும் குறிப்பிட்டனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், மோவாபியர்களின் வம்சம் முடிவுக்கு வந்தது. மோவாபிய நகரமாக ஊகிக்கப்படும் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒருகாலத்தில் இஸ்ரவேலின் பலமிக்க எதிரியாக இருந்த இந்த தேசத்திற்கு உறுதியான அத்தாட்சியாக ஒரு சின்ன பொருள்கூட இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
நவீனநாளைய “மோவாப்” அழிகிறது
13 பூர்வ மோவாபுக்கு ஒப்பான ஓர் உலகளாவிய அமைப்பு இன்றும் உள்ளது. அதுவே, ‘மகா பாபிலோனின்’ முக்கிய பாகமாகிய கிறிஸ்தவமண்டலம். (வெளிப்படுத்துதல் 17:5) மோவாப், இஸ்ரவேல் ஆகிய இரண்டுமே ஆபிரகாமின் தகப்பனாகிய தேராவின் வம்சத்தைச் சேர்ந்தவை. அதேவிதமாக கிறிஸ்தவமண்டலம், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையைப் போலவே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையிலிருந்து தோன்றியதாக சொல்லிக்கொள்கிறது. (கலாத்தியர் 6:16) ஆனால் கிறிஸ்தவமண்டலம் மோவாபைப்போல் சீர்கெட்டிருக்கிறது. ஒரே உண்மையான கடவுளாகிய யெகோவாவிற்குப் பதிலாக மற்ற கடவுட்களை வணங்கி ஆவிக்குரிய ஒழுக்கக்கேட்டில் ஈடுபட அது மக்களைத் தூண்டியிருக்கிறது. (யாக்கோபு 4:4; 1 யோவான் 5:21) ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்போரை கிறிஸ்தவமண்டல குருமார் எதிர்த்திருக்கின்றனர்.—மத்தேயு 24:9, 14.
14 மோவாப் இறுதியில் அழிக்கப்பட்டது. அதே கதிதான் கிறிஸ்தவமண்டலத்திற்கும் ஏற்படும். நவீனநாளைய அசீரியாவை பயன்படுத்தி யெகோவா கிறிஸ்தவமண்டலத்தை அழிப்பார். (வெளிப்படுத்துதல் 17:16, 17) ஆனால் இந்த நவீனநாளைய ‘மோவாபின்’ அங்கத்தினர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மோவாபுக்கு எதிரான தீர்ப்பை விவரிக்கையில் ஏசாயா சொல்வதாவது: “கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.” (ஏசாயா 16:5) 1914-ல், தாவீது வம்சத்தின் ராஜாவான இயேசுவின் சிங்காசனத்தை யெகோவா உறுதியாக ஸ்தாபித்தார். இயேசுவின் ராஜ்யபாரம் யெகோவாவினுடைய கிருபையின் வெளிக்காட்டாகும். தாவீது ராஜாவோடு அவர் செய்த உடன்படிக்கையின் நிறைவேற்றமாக அது என்றென்றும் நிலைநிற்கும். (சங்கீதம் 72:2; 85:10, 11; 89:3, 4; லூக்கா 1:32) மனத்தாழ்மையுள்ள அநேகர் ஜீவனைப் பெறுவதற்காக நவீனநாளைய ‘மோவாபை’ விட்டு வெளியேறி இயேசுவுக்கு கீழ்ப்பட்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 18:4) “நீதி என்னவென்பதை [இயேசு] தேசங்களுக்கு தெளிவாக்குவார்” என்பதை அறிந்து அவர்கள் மிகுந்த ஆறுதலடைகின்றனர்.—மத்தேயு 12:18, NW; எரேமியா 33:15.
தமஸ்கு பாழடைகிறது
15 அடுத்ததாக, ‘தமஸ்குவுக்கு எதிரான தீர்ப்பை’ (NW) ஏசாயா பதிவு செய்கிறார். (ஏசாயா 17:1-6-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலின் வடக்கே உள்ள தமஸ்குவே “சீரியாவின் தலை.” (ஏசாயா 7:8) ஆகாஸ் யூதாவை ஆளும் காலத்தில், தமஸ்குவின் ராஜா ரேத்சீனும் இஸ்ரவேலின் ராஜா பெக்காவும் யூதாவின்மீது படையெடுக்கின்றனர். இருந்தாலும் ஆகாஸின் வேண்டுகோளுக்கு இணங்க அசீரிய ராஜா மூன்றாம் திகிலாத்பிலேசர், தமஸ்குவுக்கு எதிராக போரிட்டு அதைக் கைப்பற்றி அநேக குடிமக்களை நாடுகடத்திச் செல்கிறார். அதன் பிறகு தமஸ்கு யூதாவுக்கு அச்சுறுத்தலாக இல்லை.—2 இராஜாக்கள் 16:5-9; 2 நாளாகமம் 28:5, 16.
16 இஸ்ரவேலும் தமஸ்குவும் கைகோர்த்துக் கொண்டபடியால், தமஸ்குவுக்கு எதிராக மட்டுமல்லாமல் விசுவாசமற்ற வடதிசை ராஜ்யத்திற்கு எதிராகவும் ஒரேசமயத்தில் யெகோவா நியாயத்தீர்ப்பு அளிக்கிறார். (ஏசாயா 17:3-6) இஸ்ரவேல், வெகு சொற்ப மகசூலே தரும் வயலைப் போலும் கிட்டத்தட்ட எல்லா ஒலிவபழங்களும் உதிர்க்கப்பட்ட ஒலிவமரத்தைப் போலும் ஆகும். (ஏசாயா 17:4-6) யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்திருப்போருக்கு என்னே சிறந்த எச்சரிக்கை! அவர் தனிப்பட்ட பக்தியை எதிர்பார்க்கிறார், இதயப்பூர்வ சேவையை மட்டுமே ஏற்கிறார். சகோதரர்களுக்கு விரோதமாக எழுவோரை அவர் வெறுக்கிறார்.—யாத்திராகமம் 20:5; ஏசாயா 17:10, 11; மத்தேயு 24:48-50.
யெகோவாவில் முழு நம்பிக்கை
17 ஏசாயா இப்போது சொல்வதாவது: “அக்காலத்திலே மனுஷன் தன் கைகளின் கிரியையாகிய பீடங்களை நோக்காமலும், தன் விரல்கள் உண்டுபண்ணின தோப்பு விக்கிரகங்களையும், சிலைகளையும் நோக்காமலும், தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக்கொண்டிருக்கும்.” (ஏசாயா 17:7, 8) ஆம், சில இஸ்ரவேலர்கள் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு எச்சரிப்புக்கு செவிசாய்க்கின்றனர். உதாரணத்திற்கு, யூதாவோடு சேர்ந்து பஸ்கா பண்டிகையை ஆசரிக்க இஸ்ரவேலர்களை எசேக்கியா அழைக்கையில், சிலர் அழைப்பை ஏற்று தங்கள் சகோதரர்களோடு உண்மை வணக்கத்தில் ஈடுபட தெற்கு நோக்கி பயணம் செய்கின்றனர். (2 நாளாகமம் 30:1-12) இருந்தாலும் பெரும்பாலான இஸ்ரவேலர்கள் அழைப்பு விடுத்த தூதுவர்களை ஏளனம் செய்கின்றனர். விசுவாச துரோகத்தில் புரண்டுகொண்டிருக்கும் இந்தத் தேசத்தாரை திருத்தவே முடியாது. ஆகவே அதற்கு எதிரான யெகோவாவின் ஆலோசனை நிறைவேறுகிறது. அசீரியா இஸ்ரவேல் நகரங்களை அழிக்கிறது; தேசம் பாழாகி, புல்வெளிகள் வறண்டுபோகின்றன.—ஏசாயா 17:9-11-ஐ வாசியுங்கள்.
18 இன்றைய நிலைமை என்ன? உண்மை வணக்கத்திற்கு திரும்ப விசுவாச துரோக இஸ்ரவேலருக்கு எசேக்கியா உதவிய விதம், இன்று உண்மை கிறிஸ்தவர்கள் விசுவாச துரோக கிறிஸ்தவமண்டலத்தினருக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. 1919 முதற்கொண்டு ‘தேவனுடைய இஸ்ரவேலரின்’ தூதுவர்கள் கிறிஸ்தவமண்டலத்தாரை உண்மை வணக்கத்திற்கு அழைத்திருக்கின்றனர். (கலாத்தியர் 6:16) பெரும்பான்மையர் மறுத்திருக்கின்றனர். அநேகர் இந்தத் தூதுவர்களை பரிகாசம் செய்திருக்கின்றனர். ஆனால் சிலர் சாதகமாக பிரதிபலித்திருக்கின்றனர். இப்போது லட்சக்கணக்கில் இருக்கும் இவர்கள், ‘இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கியிருப்பதிலும்’ அவரால் போதிக்கப்படுவதிலும் மகிழ்ச்சி காண்கின்றனர். (ஏசாயா 54:13) அவர்கள் பரிசுத்தமற்ற பீடங்களில் வணக்கம் செலுத்துவதை விட்டுவிட்டு—மனிதன் உண்டாக்கிய கடவுட்களை நம்பி அவற்றிற்கு பக்தி காட்டுவதை விட்டுவிட்டு—மிகுந்த ஆர்வத்தோடு யெகோவாவிடம் திரும்புகின்றனர். (சங்கீதம் 146:3, 4) ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்த மீகாவைப் போலவே அவர்கள் ஒவ்வொருவரும் இப்படிச் சொல்கின்றனர்: “நானோ யெகோவாவை நோக்கிய வண்ணமாய் என் ரட்சிப்பின் கடவுளுக்குக் காத்திருப்பேன், என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருளுவார்.”—மீகா 7:7, தி.மொ.
19 சொற்ப ஆயுசுள்ள மனிதன்மீது நம்பிக்கை வைப்போருக்கும் இவர்களுக்கும் என்னே வித்தியாசம்! இந்தக் கடைசி நாட்களில் வன்முறையும் எழுச்சியும் அலைகளாய் குமுறி எழும்பி மனிதவர்க்கத்தின்மீது பலமாக மோதுகின்றன. அமைதியற்ற, அடங்காத மனிதவர்க்கம் என்ற ‘கடல்’ அதிருப்தியையும் புரட்சியையும் கிளறிவிடுகிறது. (ஏசாயா 57:20; வெளிப்படுத்துதல் 8:8, 9; 13:1) அமளி ஏற்படுத்தும் இந்தக் கூட்டத்தாரை யெகோவா “அதட்டுவார்.” இம்சை தரும் எல்லா அமைப்புகளையும் ஆட்களையும் அவரது பரலோக ராஜ்யம் அழிக்கும். “அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; . . . சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.”—ஏசாயா 17:12, 13; வெளிப்படுத்துதல் 16:14, 16.
20 அதன் விளைவு என்ன? ஏசாயா சொல்வதாவது: “இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.” (ஏசாயா 17:14) பலர் யெகோவாவின் மக்களை கொடூரமாகவும் அவமரியாதையாகவும் நடத்தி அவர்களை சூறையாடுகிறார்கள். உண்மை கிறிஸ்தவர்களான அவர்கள் உலகின் பிரபல மதங்களின் பாகமாக இல்லாததாலும்—இருக்க விரும்பாததாலும்—விமர்சகர்களும் வெறிகொண்ட எதிரிகளும் அவர்களை சுலபமாக வீழ்த்தலாம் என நினைக்கின்றனர். ஆனால், கடவுளது மக்களோ, உபத்திரவங்கள் முடிவுக்கு வரும் ‘விடியற்காலம்’ வேகமாக நெருங்கிக்கொண்டிருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்.—2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10; 1 பேதுரு 5:6-11.
எத்தியோப்பியா யெகோவாவிற்கு நன்கொடை கொண்டுவருகிறது
21 எகிப்திற்கு கிழக்கே உள்ள எத்தியோப்பியா இரண்டு சந்தர்ப்பங்களிலாவது யூதாவிற்கு எதிரான போரில் கலந்துகொண்டிருக்கிறது. (2 நாளாகமம் 12:2, 3; 14:1, 9-15; 16:8) இப்போது அந்தத் தேசத்திற்கு எதிரான நியாயத்தீர்ப்பை ஏசாயா முன்னறிவிக்கிறார்: “எத்தியோப்பியாவின் ஆறுகளுள்ள பகுதியில் அமைந்திருக்கும், சிறகடித்து ஒலியெழுப்பும் பூச்சிகளின் தேசத்திற்கு ஐயோ!” (வாசியுங்கள்: ஏசாயா 18:1-6, NW.)a எத்தியோப்பியா ‘அறுத்தெறியப்படும், அகற்றப்படும், வெட்டி வீசப்படும்’ என யெகோவா தீர்ப்பளிக்கிறார்.
22 எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எத்தியோப்பியா எகிப்தை கைப்பற்றி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சிசெய்ததாக சரித்திரம் சொல்கிறது. அதற்கு பிறகு அசீரிய ராஜாக்களான எசரத்தோனும் அஷூர்பானிப்பாலும் அதை எதிர்த்து படையெடுத்தனர். திபிஸ் நகரை அஷூர்பானிப்பால் அழித்தபோது எகிப்து அசீரியாவின் கைக்கு வந்தது. இவ்வாறு நைல் பள்ளத்தாக்குமேல் எத்தியோப்பியா செலுத்திய ஆதிக்கம் முற்றுப்பெற்றது. (ஏசாயா 20:3-6-ஐயும் காண்க.) நவீன காலத்தைப் பற்றியென்ன?
23 எத்தியோப்பியாவும் லிபியாவும் ‘வடதிசை ராஜாவுக்கு’ ‘பின்செல்லுவார்கள்,’ அதாவது அவனை பின்பற்றுவார்கள் என ‘முடிவுகாலத்தைப்’ பற்றிய தானியேல் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (தானியேல் 11:40-43) ‘மாகோகு தேசத்தானான கோகின்’ படைகளிலும் எத்தியோப்பியா இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. (எசேக்கியேல் 38:2-5, 8) வடதிசை ராஜா உட்பட கோகின் படைகள் அனைத்தும் யெகோவாவின் பரிசுத்த தேசத்தை தாக்கும். அப்போதே அவற்றிற்கு முடிவும் வரும். ஆகவே, யெகோவாவின் பேரரசுரிமையை எதிர்க்கும் நவீனநாளைய ‘எத்தியோப்பியாவுக்கு’ எதிராகவும் யெகோவாவின் கை நீட்டப்பட்டிருக்கிறது.—எசேக்கியேல் 38:21-23; தானியேல் 11:45.
24 இருந்தாலும் தீர்க்கதரிசனம் இப்படியும் சொல்கிறது: ‘பளபளப்பான வளர்ந்த தேகமுடையதும் சுற்றுப்புறமெங்கும் திகில் விளைத்ததுமான . . . ஒரு ஜனம் சேனைகளின் யெகோவாவினுடைய நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில், சேனைகளின் யெகோவாவுக்கு, அக்காலத்திலே ஒரு காணிக்கையைப் படைக்கும்.’ (ஏசாயா 18:7, தி.மொ.) தேசங்கள் யெகோவாவின் பேரரசுரிமையை மதிக்காதபோதும், சிலசமயங்களில் யெகோவாவின் மக்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் செயல்பட்டிருக்கின்றன. சில தேசங்களில் புதிய சட்டங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாருக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்கியிருக்கின்றன. (அப்போஸ்தலர் 5:29; வெளிப்படுத்துதல் 12:15, 16) மற்ற காணிக்கைகளும் படைக்கப்படுகின்றன. “ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். . . . பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி [காணிக்கைகளை] கையெடுக்கத் தீவிரிக்கும்.” (சங்கீதம் 68:29-31) இன்று, யெகோவாவிற்கு பயப்படும் ஆயிரக்கணக்கான நவீனநாளைய “எத்தியோப்பியர்கள்,” வணக்கம் என்ற ரூபத்தில் “காணிக்கை” செலுத்துகின்றனர். (மல்கியா 1:11) ராஜ்யத்தின் நற்செய்தியை பூமியெங்கும் பிரசங்கிக்கும் மாபெரும் வேலையில் அவர்கள் பங்குகொள்கின்றனர். (மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 14:6, 7) என்னே சிறந்த காணிக்கையை யெகோவாவிற்கு செலுத்துகிறார்கள்!—எபிரெயர் 13:15.
எகிப்தின் இருதயம் கரைகிறது
25 தெற்கே யூதாவை தொட்டாற்போல் அமைந்திருப்பதுதான் எகிப்து. இது வெகு காலமாகவே கடவுளுடைய மக்களை எதிர்த்து வந்திருக்கிறது. ஏசாயாவின் வாழ்நாளில் எகிப்திலிருக்கும் அமைதியற்ற நிலைமையை ஏசாயா 19-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. அங்கே உள்நாட்டுப் போரில் ‘பட்டணத்தோடே பட்டணமும், ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணுகிறது.’ (ஏசாயா 19:2, 13, 14) எதிரும் புதிருமான அரசவம்சங்கள் ஒரேசமயத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டுவந்ததைக் குறித்து சரித்திராசிரியர்கள் அத்தாட்சி அளிக்கின்றனர். எகிப்தின் பெருமைக்குரிய ஞானமும் ‘பயனற்ற கடவுட்களும் மந்திரவாதிகளும்’ (NW) அவளை ‘கடினமான அதிபதியின் கையிலிருந்து’ காப்பாற்ற முடியவில்லை. (ஏசாயா 19:3, 4) அசீரியா, பாபிலோன், பெர்சியா, கிரீஸ், ரோம் ஆகிய சாம்ராஜ்யங்கள் எகிப்தை அடுத்தடுத்ததாக கைப்பற்றுகின்றன. இந்த எல்லா சம்பவங்களும் ஏசாயா 19:1-11-ல் உள்ள தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகின்றன.
26 இருந்தாலும் சாத்தானின் உலகைக் குறிக்க எகிப்து என்ற பதத்தை பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. (எசேக்கியேல் 29:3; யோவேல் 3:19; வெளிப்படுத்துதல் 11:8) ஆகவே ஏசாயா அறிவிக்கும் ‘எகிப்துக்கு எதிரான நியாயத்தீர்ப்பு’ பெரியளவில் நிறைவேறுமா? ஆம், நிச்சயமாக! தீர்க்கதரிசனத்தின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டு அனைவரும் உஷாராக வேண்டும்: “இதோ, யெகோவா வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருகிறார். அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் [“பயனற்ற தெய்வங்கள்,” NW] அவருக்கு முன்பாக நடுங்கும், எகிப்தின் இருதயம் அதனுள்ளே கரைந்துபோகும்.” (ஏசாயா 19:1, தி.மொ.) யெகோவா விரைவில் சாத்தானின் அமைப்பிற்கு எதிராக வருவார். அப்போது இந்த உலகின் தெய்வங்கள் பயனற்றவையாக நிரூபிக்கும். (சங்கீதம் 96:5; 97:7; NW) பயத்தில் ‘எகிப்தின் இருதயம் கரைந்துபோகும்.’ அச்சமயத்தைக் குறித்து இயேசு இப்படி முன்னறிவித்தார்: “பூமியில் சமுத்திரமும் அலைகளும் முழங்குவதால் ஜனங்கள் தத்தளித்து மனங்கலங்குவார்கள். . . . பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.”—லூக்கா 21:25, 26, தி.மொ.
27 நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன்பு தாம் செய்யப்போவதை யெகோவா முன்னறிவிக்கிறார்: “சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும், ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.” (ஏசாயா 19:2) 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் நிறுவப்பட்டது முதற்கொண்டு ‘[இயேசுவின்] வந்திருத்தலின் அடையாளமாக’ தேசத்திற்கு விரோதமாக தேசமும் ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பியிருக்கிறது. இன ஒழிப்பு என்ற பெயரில் நடந்திருக்கும் படுகொலையும் இரத்தம் சிந்துதலும் இந்தக் கடைசி நாட்களில் லட்சக்கணக்கானோரின் உயிரை காவு கொண்டிருக்கின்றன. முடிவு நெருங்க நெருங்க இப்படிப்பட்ட ‘வேதனைகள்’ அதிகரிக்கத்தான் செய்யும்.—மத்தேயு 24:3, 7, 8.
28 “எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப் பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.” (ஏசாயா 19:3) பார்வோனுக்கு முன்பாக மோசே செய்த அற்புதங்களால் எகிப்திய பூசாரிகள் தலைகுனிய வேண்டியதாயிற்று; யெகோவாவின் சக்தியோடு அவர்களால் போட்டிபோட முடியவில்லை. (யாத்திராகமம் 8:18, 19; அப்போஸ்தலர் 13:8; 2 தீமோத்தேயு 3:8) அதேவிதமாக, நியாயத்தீர்ப்பு நாளின்போது இந்தப் பொல்லாத உலகை காப்பாற்ற பொய் மதத்தால் இயலாமல் போகும். (ஏசாயா 47:1, 11-13-ஐ ஒப்பிடுக.) இறுதியில் எகிப்து ‘கடினமான அதிபதியாகிய’ அசீரியாவின் ஆதிக்கத்திற்கு ஆளானது. (ஏசாயா 19:4) இது, இன்றைய உலகிற்கு காத்திருக்கும் இருண்ட எதிர்காலத்தை சுட்டிக் காட்டுகிறது.
29 அரசியல் தலைவர்களின் நிலை என்ன? அவர்களால் உதவ முடியுமா? “சோவான் பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று.” (ஏசாயா 19:5-11-ஐ வாசியுங்கள்.) நியாயத்தீர்ப்பு நாளின்போது மனித ஆலோசகர்கள் உதவுவார்கள் என நம்பியிருப்பது என்னே மதியீனம்! உலக அறிவில் அவர்கள் வல்லவர்கள் என்றாலும் தெய்வீக ஞானத்தை பொறுத்தவரை அவர்கள் ஒன்றும் அறியாத பேதைகளே. (1 கொரிந்தியர் 3:19) அவர்கள் யெகோவாவை புறக்கணித்துவிட்டு அறிவியல், தத்துவம், பணம், சுகபோகம் போன்ற பலவற்றை கடவுட்களாக வழிபடுகின்றனர். ஆகவே கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய அறிவு அவர்களுக்கு அறவே இல்லை. அவர்கள் மோசம்போக்கப்பட்டு குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் செயல்களெல்லாம் வீண். (ஏசாயா 19:12-15-ஐ வாசியுங்கள்.) “ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள்; அவர்களுக்கு ஞானமேது?”—எரேமியா 8:9.
யெகோவாவிற்கு அடையாளமும் சாட்சியும்
30 ‘எகிப்தின்’ தலைவர்கள் “பெண்டிரைப்போல்” பலவீனர்களாக இருந்தாலும், சில நபர்கள் தெய்வீக ஞானத்தை தேடுகிறார்கள். யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களும் அவர்களது கூட்டாளிகளும் ‘கடவுளது புண்ணியங்களை அறிவிக்கிறார்கள்.’ (ஏசாயா 19:16, பொ.மொ.; 1 பேதுரு 2:9) சாத்தானது அமைப்புக்கு வரவிருக்கும் அழிவைக் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்க அவர்கள் தங்களாலான அனைத்தையும் செய்கிறார்கள். இந்த நிலைமையை பற்றி முன்கூட்டியே ஏசாயா இப்படிச் சொல்கிறார்: “சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான்.” (ஏசாயா 19:17) யெகோவாவின் உண்மையுள்ள தூதுவர்கள் மக்களுக்கு சத்தியத்தை அறிவிக்கின்றனர், யெகோவா முன்னறிவித்திருக்கும் வாதைகளைக் குறித்தும் அறிவிக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 8:7-12; 16:2-12) இது இந்த உலகின் மதத் தலைவர்களை கலக்கமடையச் செய்கிறது.
31 இந்த அறிவிப்பினால் என்ன ஆச்சரியமான விளைவு ஏற்படும்? “அக்காலத்திலே எகிப்து தேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும்.” (ஏசாயா 19:18) பூர்வ காலங்களில், எகிப்திய நகரங்களுக்கு தப்பியோடிய யூதர்கள் அங்கு எபிரெய பாஷையை பேசியபோது இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றம் அடைந்திருக்கும். (எரேமியா 24:1, 8-10; 41:1-3; 42:9–43:7; 44:1) இன்று நவீனநாளைய ‘எகிப்தில்,’ பைபிள் சத்தியமென்ற ‘சுத்தமான பாஷையை’ பேசக் கற்றுக்கொண்டிருப்போர் உண்டு. (செப்பனியா 3:9) அடையாளப்பூர்வ ஐந்து நகரங்களில் ஒன்று “நிர்மூலமான நகரம்” என அழைக்கப்படுகிறது. ‘சுத்தமான பாஷையின்’ ஒரு அம்சம், சாத்தானின் அமைப்பை அம்பலப்படுத்துவதோடும் ‘நிர்மூலமாக்குவதோடும்’ சம்பந்தப்பட்டிருப்பதை அது அர்த்தப்படுத்துகிறது.
32 யெகோவாவின் மக்கள் செய்யும் ஊழியத்தால் அவரது மகத்துவமுள்ள நாமம் உலகெங்கும் நிச்சயம் அறியப்படும். “அக்காலத்திலே எகிப்து தேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் [“தூணும்,” NW] உண்டாயிருக்கும்.” (ஏசாயா 19:19) இந்த வார்த்தைகள், கடவுளோடு உடன்படிக்கை செய்திருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் ஸ்தானத்தைக் குறிக்கிறது. (சங்கீதம் 50:5) அவர்களே ஒரு ‘பலிபீடம்’போல் தங்கள் பலிகளை அளிக்கின்றனர்; ‘சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாக,’ யெகோவாவிற்கு சாட்சி பகருகின்றனர். (1 தீமோத்தேயு 3:15; ரோமர் 12:1; எபிரெயர் 13:15, 16) அவர்கள் ‘தேசத்தின் நடுவிலே’—‘வேறே ஆடுகளான’ தங்கள் கூட்டாளிகளோடு—230-க்கும் அதிகமான நாடுகளிலும் தீவுகளிலும் காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் “உலகத்தாரல்ல.” (யோவான் 10:16; 17:15, 16) இவர்கள் இந்த உலகத்திற்கும் கடவுளுடைய ராஜ்யத்திற்கும் இடையே உள்ள எல்லையில் நிற்கிறார்கள் என சொல்லலாம்; இந்த எல்லையைத் தாண்டி கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் வெகுமதியைப் பெற தயாராக இருக்கிறார்கள்.
33 ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.” (ஏசாயா 19:20) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், ‘அடையாளமாகவும்’ ‘சாட்சியாகவும்’ பிரசங்க வேலையை முன்நின்று நடத்தி, யெகோவாவின் பெயரை மேன்மைப்படுத்துகின்றனர். (ஏசாயா 8:18; எபிரெயர் 2:13) ஒடுக்கப்படுகிறவர்களின் கூக்குரல் உலகெங்கும் கேட்கிறது, மனித அரசாங்கங்களால் அவர்களுக்கு உதவ முடிவதில்லை. இருந்தாலும் யெகோவா பலம்பொருந்திய இரட்சகரும் ராஜாவுமான இயேசு கிறிஸ்துவை அனுப்பி தாழ்மையுள்ளவர்கள் அனைவரையும் விடுவிப்பார். இந்தக் கடைசி நாட்கள் அர்மகெதோன் யுத்தத்தில் உச்சக்கட்டத்தை எட்டும். அப்போது தேவபக்தியுள்ள மனிதருக்கு இயேசு விடுதலையளித்து நித்திய ஆசீர்வாதங்களைப் பொழிவார்.—சங்கீதம் 72:2, 4, 7, 12-14.
34 இதற்கிடையில் எல்லா மக்களும் திருத்தமான அறிவைப் பெற்று இரட்சிப்படைய வேண்டும் என்பதே கடவுளுடைய சித்தம். (1 தீமோத்தேயு 2:4) ஆகவே ஏசாயா இப்படி எழுதுகிறார்: “அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள். கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.” (ஏசாயா 19:21, 22) சாத்தானிய உலகின் எல்லா தேசத்து மக்களும், அதாவது தனிப்பட்ட ‘எகிப்தியர்களும்’ யெகோவாவை அறிந்துகொண்டு “உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை” செலுத்துகின்றனர். (எபிரெயர் 13:15) அவர்கள் யெகோவாவிற்கு தங்களை ஒப்புக்கொடுப்பதன் மூலம் அவருக்கு பொருத்தனை செய்கின்றனர். உத்தமமாக வாழ்ந்து அவருக்கு சேவை செய்வதன் மூலம் அந்தப் பொருத்தனையை நிறைவேற்றுகின்றனர். அர்மகெதோனில் இந்த உலகை யெகோவா ‘அடித்த’ பிறகு தமது ராஜ்யத்தின் மூலம் மனிதவர்க்கத்தை குணமாக்குவார். இயேசுவின் ஆயிரவருட அரசாட்சியில் மனிதவர்க்கம் ஆன்மீக, மன, ஒழுக்க, சரீர ரீதியில் பரிபூரணத்திற்கு உயர்த்தப்படும். எப்பேர்ப்பட்ட குணம் கிடைக்கும்!—வெளிப்படுத்துதல் 22:1, 2.
‘என் ஜனம் ஆசீர்வதிக்கப்பட்டது’
35 அதன்பின் ஏற்படும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பற்றி தீர்க்கதரிசி முன்னறிவிக்கிறார்: “அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள். அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும். அவர்களைக் குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.” (ஏசாயா 19:23-25) எகிப்திற்கும் அசீரியாவிற்கும் நிச்சயம் ஒருநாள் நட்புறவு ஏற்படும். எவ்வாறு?
36 கடந்த காலங்களில் யெகோவா விடுதலைக்கான பெரும்பாதைகளை அடையாளப்பூர்வமாக அமைத்து தம் மக்களை காப்பாற்றினார். (ஏசாயா 11:16; 35:8-10; 49:11-13; எரேமியா 31:21) பாபிலோனின் வீழ்ச்சிக்குப் பிறகு, நாடுகடத்தப்பட்டவர்கள் அசீரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் பாபிலோனிலிருந்தும்கூட வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு மீண்டும் திரும்பியபோது இந்தத் தீர்க்கதரிசனம் ஓரளவு நிறைவேறியது. (ஏசாயா 11:11) நவீன நாட்களைப் பற்றியென்ன?
37 இன்று, அபிஷேகம் செய்யப்பட்ட ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோர் ‘பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கின்றனர்.’ அவர்கள் உண்மை வணக்கத்தை முன்னேற்றுவித்து எல்லா தேசத்தாருக்கும் ராஜ்ய செய்தியை அறிவிக்கின்றனர். இந்தத் தேசங்களில் சில அசீரியாவைப் போல் முழுக்க முழுக்க ராணுவ பலத்தையே சார்ந்தவை. மற்ற தேசங்களோ, அந்தளவு ராணுவ பலத்தை சார்ந்தவை அல்ல. இக்கருத்தில் இவை, தானியேல் தீர்க்கதரிசனத்திலுள்ள ‘தென்றிசை ராஜாவாக’ ஒருசமயம் ஸ்தானம் வகித்த எகிப்தைப் போன்றவை. (தானியேல் 11:5, 8) ராணுவ பலத்தை சார்ந்த தேசங்களிலிருந்தும் மற்ற தேசங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் உண்மை வணக்கத்தை ஏற்றிருக்கின்றனர். இவ்வாறு, எல்லா தேசத்தினரும் ஒன்றுபட்டு ‘ஆராதனை செய்கிறார்கள்.’ இவர்களிடையே எந்தத் தேசப் பிரிவினைகளும் இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். ஆகவே, ‘அசீரியா எகிப்துக்கும், எகிப்து அசீரியாவுக்கும் வருவதாக’ சொல்வது கச்சிதம். இரண்டுக்கும் இடையே ஒரு பெரும்பாதை அமைக்கப்பட்டதுபோல் இருக்கிறது.—1 பேதுரு 2:17.
38 என்றாலும் இஸ்ரவேல் எவ்வாறு ‘எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக’ இருக்கும்? ‘முடிவுகாலத்தின்’ ஆரம்பத்தில் யெகோவாவை பூமியில் சேவித்துவந்தவர்களில் பெரும்பான்மையோர் ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ அங்கத்தினர்கள். (தானியேல் 12:9; கலாத்தியர் 6:16) 1930 முதற்கொண்டு பூமிக்குரிய நம்பிக்கையுடைய ‘வேறே ஆடுகளான’ திரள் கூட்டத்தினர் ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றனர். (யோவான் 10:16அ; வெளிப்படுத்துதல் 7:9) எகிப்தும் அசீரியாவும் அடையாளப்படுத்தும் தேசங்களிலிருந்து வந்தவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்கு திரண்டு செல்கிறார்கள், மற்றவர்களையும் தங்களோடு சேர்ந்துகொள்ளும்படி அழைக்கிறார்கள். (ஏசாயா 2:2-4) இவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் செய்யும் அதே பிரசங்க வேலையைச் செய்கிறார்கள், அதே சோதனைகளை சகிக்கிறார்கள், அதே விசுவாசத்தையும் உத்தமத்தையும் காட்டுகிறார்கள், அதே ஆவிக்குரிய மேஜையில் உணவருந்துகிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் ‘வேறே ஆடுகளும்’ சந்தேகமில்லாமல் ‘ஒரே மேய்ப்பனின்கீழ் ஒரே மந்தையாக’ இருக்கிறார்கள். (யோவான் 10:16ஆ) அவர்களது வைராக்கியத்தையும் சகிப்புத்தன்மையையும் கண்டு யெகோவா பிரியப்படுகிறார் என்பதில் சிறு சந்தேகமாவது இருக்க முடியுமா? ஆகவேதான் ‘என் ஜனம் ஆசீர்வதிக்கப்பட்டது’ என யெகோவா அவர்களுக்கு ஆசி வழங்குவதில் ஆச்சரியம் இல்லை!
[அடிக்குறிப்பு]
a ‘சிறகடித்து ஒலியெழுப்பும் பூச்சிகளின் தேசம்’ என்ற சொற்றொடர், எத்தியோப்பியாவில் அவ்வப்போது திரண்டுவரும் வெட்டுக்கிளிகளை குறிப்பதாக சில நிபுணர்கள் சொல்கின்றனர். ஆனால், “ஒலியெழுப்பும்” என்பதற்கான எபிரெய பதம் (tsela·tsalˈ), நவீன எத்தியோப்பியாவில் வாழும் ஹாமிட்டிக் மக்களான காலா இனத்தவர் செட்ஸி ஈக்கு தந்திருக்கும் பெயர்போல் (tsaltsalya) ஒலிப்பதாக மற்றவர்கள் சொல்கின்றனர்.
[கேள்விகள்]
1. அசீரியாவிற்கு எதிரான என்ன நியாயத்தீர்ப்பை ஏசாயா பதிவுசெய்கிறார்?
2, 3. (அ) பூர்வ காலத்தில் யாருக்கு எதிராக யெகோவா தமது கையை நீட்டுகிறார்? (ஆ) “அனைத்து தேசங்களுக்கு” எதிராகவும் யெகோவா தமது கையை நீட்டுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
4. பெலிஸ்தியாவிற்கு எதிரான யெகோவாவின் தீர்ப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் சில விவரங்கள் யாவை?
5, 6. (அ) உசியா எந்த விதத்தில் பெலிஸ்தர்களுக்கு சர்ப்பம் போன்றிருந்தார்? (ஆ) எசேக்கியா பெலிஸ்தருக்கு எதைப் போன்று இருக்கிறார்?
7. எருசலேமிலிருந்த தூதுவர்களிடம் எசேக்கியா தன் விசுவாசத்தை எவ்வாறு அறிவிக்க வேண்டும்?
8. (அ) இன்று சில தேசங்கள் எவ்வாறு பெலிஸ்தியாவைப் போன்று இருக்கின்றன? (ஆ) பூர்வ காலங்களைப் போல் இன்றும் யெகோவா தமது மக்களை எப்படி பாதுகாக்கிறார்?
9. யாருக்கு எதிராக அடுத்த நியாயத்தீர்ப்பு சொல்லப்படுகிறது, இவர்கள் எவ்வாறு கடவுளது மக்களுக்கு எதிரிகளாக இருக்கின்றனர்?
10, 11. மோவாபியருக்கு என்ன நேரிடும்?
12. மோவாபுக்கு எதிரான ஏசாயாவின் வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறின?
13. இன்றுள்ள எந்த அமைப்பு மோவாபுக்கு ஒப்பாயிருக்கிறது?
14. நவீனநாளைய ‘மோவாபுக்கு’ எதிராக யெகோவா தீர்ப்பு வழங்கியிருந்தாலும், அதன் அங்கத்தினர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
15, 16. (அ) யூதாவுக்கு எதிராக தமஸ்குவும் இஸ்ரவேலும் என்ன செய்கின்றன, இதனால் தமஸ்குவுக்கு என்ன ஏற்படுகிறது? (ஆ) தமஸ்குவோடு வேறு எதற்கும் ஒரேசமயத்தில் நியாயத்தீர்ப்பு அளிக்கப்படுகிறது? (இ) இஸ்ரவேலின் உதாரணத்திலிருந்து இன்று கிறிஸ்தவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
17, 18. (அ) யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்திக்கு சில இஸ்ரவேலர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர், ஆனால் பெரும்பான்மையோர் எப்படி பிரதிபலிக்கின்றனர்? (ஆ) இன்றைய நிலைமை எவ்வாறு எசேக்கியா காலத்து நிலைமையோடு ஒத்திருக்கிறது?
19. யெகோவா யாரை அதட்டுவார், அவர்களுக்கு என்ன ஏற்படும்?
20. தேசங்களால் ‘சூறையாடப்பட்டாலும்’ உண்மை கிறிஸ்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
21, 22. எந்த தேசம் அடுத்ததாக நியாயத்தீர்ப்பு பெறுகிறது, ஏசாயாவின் ஏவப்பட்ட வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறின?
23. நவீனநாளைய “எத்தியோப்பியா” என்ன பாகம் வகிக்கிறது, அது ஏன் அழிக்கப்படும்?
24. எந்த விதங்களில் தேசங்கள் யெகோவாவிற்கு ‘காணிக்கைகள்’ செலுத்தியிருக்கின்றன?
25. ஏசாயா 19:1-11-ன் நிறைவேற்றமாக பூர்வ எகிப்திற்கு என்ன நடக்கிறது?
26. பெரியளவு நிறைவேற்றத்தில், நவீனநாளைய “எகிப்து” யெகோவாவின் நியாயத்தீர்ப்புக்கு எவ்வாறு பிரதிபலிக்கும்?
27. ‘எகிப்தில்’ எவ்வாறு சண்டைகள் நடக்கும் என முன்னறிவிக்கப்பட்டது, அது இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
28. நியாயத்தீர்ப்பு நாளின்போது பொய் மதத்தால் இந்த உலகை காப்பாற்ற முடியுமா?
29. யெகோவாவின் நாள் வரும்போது அரசியல் தலைவர்களால் பயன் இருக்குமா?
30. எந்த விதத்தில் “யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்”?
31. எகிப்திய நகரங்களில் “கானான் பாஷை” (அ) பூர்வ காலங்களிலும் (ஆ) நவீன காலங்களிலும் எவ்வாறு பேசப்படுகிறது?
32. (அ) எகிப்து தேசத்தின் நடுவிலே என்ன ‘பலிபீடம்’ இருக்கிறது? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எகிப்திய எல்லைக்கு அருகே எவ்வாறு ‘தூண்’ போல் இருக்கிறார்கள்?
33. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு ‘எகிப்தில்’ ‘அடையாளமாகவும்’ ‘சாட்சியாகவும்’ இருக்கின்றனர்?
34. (அ) எந்த விதத்தில் யெகோவா ‘எகிப்தியருக்கு’ அறியப்படுவார், அவர்கள் அவருக்கு என்ன பலிகளையும் காணிக்கைகளையும் அளிப்பார்கள்? (ஆ) யெகோவா எப்போது ‘எகிப்தை’ அடிப்பார், அதன்பிறகு எவ்வாறு அதை குணமாக்குவார்?
35, 36. ஏசாயா 19:23-25-ன் நிறைவேற்றமாக எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இஸ்ரவேலுக்கும் என்ன தொடர்பு ஏற்பட்டது?
37. இன்று ஆயிரக்கணக்கானோர் ஒன்றுபட்டிருப்பது, ‘அசீரியாவுக்கும்’ ‘எகிப்துக்கும்’ இடையே ஒரு பெரும்பாதை அமைக்கப்பட்டிருப்பது போல் உள்ளதாக ஏன் சொல்லலாம்?
38. (அ) இஸ்ரவேல் எவ்வாறு ‘எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக’ இருக்கிறது? (ஆ) ‘என் ஜனம் ஆசீர்வதிக்கப்பட்டது’ என யெகோவா சொல்லக் காரணமென்ன?
[பக்கம் 191-ன் படம்]
பெலிஸ்திய வீரர்கள் எதிரிகளைத் தாக்கும் காட்சி (பொ.ச.மு. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எகிப்திய செதுக்கோவியம்)
[பக்கம் 192-ன் படம்]
மோவாபிய வீரர் அல்லது தெய்வத்தின் சிற்பம் (பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டிற்கும் 8-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம்)
[பக்கம் 196-ன் படம்]
ஒட்டகத்தின்மீது சீரிய வீரர் (பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டு)
[பக்கம் 198-ன் படம்]
அடங்காத மனிதவர்க்கமென்ற ‘கடல்’ அதிருப்தியையும் புரட்சியையும் கிளறிவிடுகிறது
[பக்கம் 203-ன் படம்]
எகிப்திய பூசாரிகளால் யெகோவாவின் சக்தியோடு போட்டிபோட முடியவில்லை