உங்களுக்குத் தெரியுமா?
தொல்பொருள் ஆய்வு பைபிளை ஆதரிக்கிறதா?
பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “குறைந்தபட்சம் 50 பேர்” வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதென பைபிள் சம்பந்தமான தொல்பொருள் ஆராய்ச்சி (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது. இந்த 50 பேரில், 14 பேர் இஸ்ரவேல் மற்றும் யூதா பகுதிகளை ஆட்சி செய்த ராஜாக்கள். இந்த 14 பேரில், தாவீது, எசேக்கியா போன்ற புகழ் பெற்ற ராஜாக்களைப் பற்றியும்... மெனோகேம், பெக்கா போன்ற பிரபலம் அடையாத ராஜாக்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. 5 எகிப்திய மன்னர்களைப் பற்றியும், அசீரியா, பாபிலோனியா, மோவாப், பெர்சியா, சீரியாவை ஆட்சி செய்த 19 ராஜாக்களைப் பற்றியும் இந்த பட்டியல் குறிப்பிடுகிறது. பைபிளும் வரலாற்றுப் பதிவுகளும் பிரபலம் அடையாத மற்ற நபர்களை பற்றியும் குறிப்பிடுகிறது. உதாரணமாக, தலைமை குருக்கள், வேத அறிஞர்கள், மற்ற அதிகாரிகள் பற்றி குறிப்பிடுகிறது.
அந்த 50 நபர்கள், பைபிளில் சொல்லப்பட்ட நபர்களைத்தான் குறிக்கிறார்கள் என்பதை “பெரும்பாலான வல்லுநர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று மேலே குறிப்பிடப்பட்ட புத்தகம் சொல்கிறது. அதுமட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கிற ஒரு சில நபர்கள்... உதாரணத்திற்கு ஏரோது, பொந்தியு பிலாத்து, திபேரியு, காய்பா, செர்கியு பவுல் போன்ற பிரபலமான நபர்கள் உண்மையிலேயே வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ▪ (w15-E 05/01)
பைபிள் குறிப்பிடும் நாடுகளில் சிங்கங்கள் எப்போது அழிந்துபோனது?
இன்றைக்கு இஸ்ரேல், பாலஸ்தீனா தேசங்களில் சிங்கங்கள் இல்லை. என்றாலும் பைபிள் எழுத்தாளர்களுக்கு சிங்கங்களை பற்றி நன்றாக தெரிந்திருந்தது. அதனால்தான் சுமார் 150 இடங்களில் சிங்கங்களை பற்றி அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலான பதிவுகளில், சிங்கங்களை உருவகமாக பயன்படுத்தி பேசியிருக்கிறார்கள். சில பதிவுகளில் மனிதர்கள் சிங்கங்களை நேரடியாக பார்த்திருக்கிறார்கள். உதாரணமாக, சிம்சோன், தாவீது, பெனாயா போன்றவர்கள் சிங்கங்களை கொன்றிருக்கிறார்கள். (நியாயாதிபதிகள் 14:5, 6; 1 சாமுவேல் 17:34, 35; 2 சாமுவேல் 23:20) ஒருசிலர் சிங்கங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.—1 இராஜாக்கள் 13:24; 2 இராஜாக்கள் 17:25.
பூர்வ காலங்களில், ஆசியா மைனர், கிரீஸ், பாலஸ்தீனம், சீரியா, மெசொப்பொத்தாமியா, இந்தியாவின் வடமேற்கு பகுதிகள் ஆகியவற்றில் ஆசிய சிங்கங்கள் (Panthera leo persica) காணப்பட்டன. மத்திய கிழக்கு நாடுகளில் சிங்கங்களுக்கு தனி மதிப்பு உண்டு. சிங்கங்களுடைய சிற்பங்களும், ஓவியங்களும் அங்கு அதிகளவில் இருந்தது. பாபிலோனில் இருக்கிற சுவர்களில் பளபளப்பான கற்கள் மேல் சிங்கத்தின் உருவத்தை தத்ரூபமாக வரைந்திருப்பார்கள்.
12-வது நூற்றாண்டின் முடிவில் பாலஸ்தீனா நாட்டில் நிறைய சிங்கங்கள் கொல்லப்பட்டன. அந்த நாட்டில் சிலுவை போர் நடந்தபோது போர்வீரர்கள் அதை வேட்டையாடினார்கள். கி.பி 1300-க்கு பிறகு சிங்கங்கள் முற்றிலும் அங்கு அழிந்துபோயிருக்கலாம். இருந்தாலும், 19-வது நூற்றாண்டு வரை மெசோபொத்தாமியா, சீரியா ஆகிய இடங்களில் சிங்கங்கள் இருந்ததாக அறிக்கைகள் சொல்கிறது; 20-வது நூற்றாண்டு வரை ஈரான், ஈராக் நாடுகளில் இருந்திருக்கிறது. ▪ (w15-E 05/01)