அதிகாரம் இருபது
யெகோவாவே ராஜா
பாபிலோன், பெலிஸ்தியா, மோவாப், சீரியா, எத்தியோப்பியா, எகிப்து, ஏதோம், தீரு, அசீரியா—யெகோவாவின் கோபக் கணைகளை சந்திக்கப் போகும் தேசங்கள். இந்த எதிரி நாடுகளுக்கும் அதன் தலைநகரங்களுக்கும் ஏற்படப்போகும் பயங்கரத்தை ஏசாயா முன்னறிவித்திருக்கிறார். அழியப்போகும் இந்த நாடுகளின் பட்டியலில் யூதா இல்லையே! அப்படியானால், அது கடவுளுக்கு எதிராக செய்த அட்டூழியங்களுக்கு தண்டனை கிடையாதா? சரித்திரப் பதிவுகளை கொஞ்சம் பொறுமையாக புரட்டினால் நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.
2 பத்து கோத்திர ராஜ்யமாகிய இஸ்ரவேலின் தலைநகரம் சமாரியா. அந்நகரம் எந்த கதிக்குள்ளானது என்பதை கவனியுங்கள். அந்த தேசம் கடவுளோடு செய்திருந்த உடன்படிக்கையை உதறித்தள்ளிவிட்டது. அண்டை தேசத்தாரின் காமவெறி பிடித்த பழக்கங்களை வெறுப்பதற்கு பதில் அவற்றில் லயித்தது. சமாரியாவின் குடிகள் ‘யெகோவாவுக்கு கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்தனர், . . . ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்.’ எனவே, “இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்கு” அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். (2 இராஜாக்கள் 17:9-12, 16-18, 23; ஓசியா 4:12-14) இஸ்ரவேலுக்கு நேர்ந்த அதே கதிதான் அதன் அண்டை ராஜ்யமாகிய யூதாவுக்கும் ஏற்படும் என்பதற்கு இது அடையாளம்.
யூதாவின் பாழ்க்கடிப்பை ஏசாயா முன்னறிவிக்கிறார்
3 யூதாவை ஆண்ட ராஜாக்களில் வெகு சிலரே கடவுளுக்கு உண்மையாக இருந்தார்கள். யோதாம் ராஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கடவுளுக்கு உண்மையுள்ளவராக நிரூபித்தார். இருந்தாலும், அவருடைய ஆட்சியின்போது மக்கள் பொய்மத சேற்றில்தான் புரண்டு கொண்டு இருந்தனர். (2 இராஜாக்கள் 15:32-35) இரத்தவெறி கொண்ட ராஜாவாகிய மனாசேயின் ஆட்சியில் கொடுமை தலைவிரித்தாடுகிறது. இந்த கொடுங்கோலனே ஏசாயா தீர்க்கதரிசியின் மரணத்திற்கு காரணம். மனாசேயின் ஆணைப்படி தீர்க்கதரிசியாகிய ஏசாயா வாளால் அறுக்கப்பட்டார் என யூத பாரம்பரியம் சொல்கிறது. (எபிரெயர் 11:37-ஐ ஒப்பிடுக.) “கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய்,” இந்தக் கொடிய ராஜாவாகிய “மனாசே அவர்களை வழிதப்பிப்போகப் பண்ணினான்.” (2 நாளாகமம் 33:9) கானானியர்களுடைய ஆட்சியில் இருந்ததைவிட, மனாசேயின் ஆட்சியில் தேசம் மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. எனவேதான், யெகோவா அறிவிக்கிறார்: “இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி, . . . ஒருவன் ஒரு தாலத்தைத் [“கிண்ணத்தைத்,” NW] துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்து வைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன். . . . இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்திரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். தங்கள் பகைஞருக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாய்ப் போவார்கள்.”—2 இராஜாக்கள் 21:11-15.
4 ஒரு கிண்ணத்தை தலைகீழாய் கவிழ்த்தால் அதிலுள்ள எல்லாம் கீழே சிந்தி சிதறிப்போகும். அதுபோல, அந்த தேசத்தின் குடிகளெல்லாம் சிதறடிக்கப்படுவார்கள். யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வரும் அழிவைப் பற்றிய செய்தியே ஏசாயா தீர்க்கதரிசனத்தின் முக்கிய அம்சம். அவர் இவ்வாறாக தொடங்குகிறார்: “இதோ, கர்த்தர் [“யெகோவா,” NW] தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிகளைச் சிதறடிப்பார்.” (ஏசாயா 24:1) இந்த தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறுகிறது. ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் தலைமையின்கீழ் பாபிலோனிய படைகள் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிக்கின்றன. யூதாவின் குடிகள் பட்டயத்திற்கும் பஞ்சத்திற்கும் கொள்ளைநோய்க்கும் பலியாகிறார்கள். இவை எல்லாவற்றிலிருந்தும் தப்பிய யூதர்களில் பெரும்பாலானோர் பாபிலோனுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்படுகின்றனர். சிலரோ எகிப்துக்கு ஓடிப்போகிறார்கள். இப்படியாக யூதா தேசம் அழிக்கப்பட்டு, முற்றிலுமாக குடியற்று போகிறது. வளர்ப்புப் பிராணிகளும் விட்டுவைக்கப்படவில்லை. மனித சஞ்சாரமில்லாத அந்த தேசம், கொடிய காட்டு மிருகங்களும் பறவைகளும் குடியிருக்கும் இடிபாடுகள் நிறைந்த வறண்ட பாலைவனமாக காட்சியளிக்கிறது.
5 இதுதான் யூதாவின்மேல் வரப்போகிற அழிவின் காட்சி. இதிலிருந்து யூதாவின் குடிமக்களில் யாராவது தப்ப முடியுமா? பதிலை ஏசாயாவே தருகிறார்: “அப்பொழுது, ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும், வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும், எல்லாருக்கும் சரியாக நடக்கும். தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் [“யெகோவா,” NW] சொன்ன வார்த்தை.” (ஏசாயா 24:2, 3) பணம் படைத்தவர்களாய் இருப்பதாலோ, ஆலய சேவையிலிருப்பதாலோ எந்தவிதமான விசேஷ சலுகையும் கிடைக்காது. தேசம் அந்தளவுக்கு சீர்கெட்டு கிடப்பதால், யாரும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. ஆசாரியனோ, வேலைக்காரனோ அல்லது எஜமானனோ, வாங்குபவனோ அல்லது விற்பவனோ யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
6 இதைப் புரிந்துகொள்வதில் எந்தவிதக் குழப்பமும் இருக்கக்கூடாதென, வரப்போகிற அழிவையும் அதற்கான காரணத்தையும் ஏசாயா விலாவாரியாக வருணிக்கிறார்: “தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள். தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது. அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள், சிலர் மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.” (ஏசாயா 24:4-6) கானான் தேசம் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டபோது, அது ‘பாலும் தேனும் ஓடுகிற தேசமாய் இருந்தது.’ (உபாகமம் 27:3) இருந்தாலும், அந்த நிலை தொடர வேண்டுமானால் அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தின்மேல் சார்ந்திருக்க வேண்டும். அவருடைய கட்டளைகளுக்கும் கற்பனைகளுக்கும் அவர்கள் தொடர்ந்து உண்மையாய் கீழ்ப்படிந்தால்தான், பூமி ‘தன் பலனை தரும்.’ அதற்கு மாறாக, அவருடைய சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் கீழ்ப்படிய மறுத்தார்களானால், அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் ‘பெலனின்றி விருதாவாகப் போகும்.’ பூமி ‘தன் பலனைத் தராது.’ (லேவியராகமம் 26:3-5, 14, 15, 20) யெகோவாவின் சாபம் ‘தேசத்தைப் பட்சிக்கும்.’ (உபாகமம் 28:15-20, 38-42, 62, 63) அந்த சாபத்தை யூதா இப்போது எதிர்ப்பட வேண்டும்.
7 ஏசாயாவின் நாட்களுக்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரவேலர்கள் யெகோவாவுடன் ஓர் உடன்படிக்கைக்குள் வந்தனர். அதன் எல்லா சட்டதிட்டங்களுக்கும் தாங்கள் கீழ்ப்படிவோம் என மனப்பூர்வமாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். (யாத்திராகமம் 24:3-8) எனவே, யெகோவாவின் கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தால், அவருடைய அபரிமிதமான ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்; மாறாக, நியாயப்பிரமாணத்தை மீறினால், யெகோவாவின் ஆசீர்வாதங்களை இழப்பர். அதோடு, எதிரிகளால் கைதிகளாக கொண்டு செல்லப்படுவர். இதைத்தான், நியாயப்பிரமாண சட்டத்தின் விதிமுறைகள் வரையறுத்தன. (யாத்திராகமம் 19:5, 6; உபாகமம் 28:1-68) இந்த நியாயப்பிரமாண சட்டம் மோசே மூலமாக கொடுக்கப்பட்டபோது, வரையறையற்ற காலத்திற்கு அதாவது திட்டவட்டமாக குறிப்பிடப்படாத காலத்திற்கு அமலில் இருக்கவே கொடுக்கப்பட்டது. மேசியா தோன்றுமளவும் அது இஸ்ரவேலர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும்.—கலாத்தியர் 3:19, 24.
8 ஆனால், ஜனங்கள் அந்த ‘நித்திய உடன்படிக்கையை முறித்திருக்கிறார்கள்.’ கடவுளால் கொடுக்கப்பட்ட சட்டங்களை அசட்டை செய்து, மீறியிருக்கிறார்கள். யெகோவா கொடுத்த சட்டங்களை விட்டுவிட்டு, தாங்களாகவே சில சட்டங்களை வகுத்துக்கொண்டு, கடவுளுடைய ‘கட்டளையை மாறுபாடாக்கியிருக்கிறார்கள்.’ (யாத்திராகமம் 22:25; எசேக்கியேல் 22:12) எனவே, தேசத்திலிருந்து ஜனங்கள் அகற்றப்படுவார்கள். வரப்போகும் அழிவில் அவர்களுக்கு இரக்கம் காட்டப்பட மாட்டாது. யெகோவா தம்முடைய தயவையும் அரவணைக்கும் கரத்தையும் எடுத்துவிட்டதால் ஜனங்கள் ‘தவித்து’ தத்தளிப்பார்கள். இவர்களில் “உயர்ந்தவர்கள்,” அதாவது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களுமே முதலாவது பாதிக்கப்படுவார்கள். இதன் நிறைவேற்றமாக, எருசலேமின் அழிவு நெருங்கும் காலப்பகுதியில், முதலில் எகிப்தியர்களும் பிறகு பாபிலோனியர்களும் யூதாவின் ராஜாக்களை தங்களுக்கு சிற்றரசர்களாக ஆக்குகிறார்கள். அதைத் தொடர்ந்து, பாபிலோனுக்கு முதலாவதாக சிறைகொண்டு போகப்படுகிறவர்கள் ராஜாவாகிய யோயாக்கீனும் அரச குடும்பத்தினருமே.—2 நாளாகமம் 36:4, 9, 10.
தேசத்திலிருந்து சந்தோஷம் நீங்குதல்
9 இஸ்ரவேல் தேசம் விவசாயத்தையே நம்பியிருக்கிறது. இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறியதிலிருந்து, பயிர்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பதே அவர்களுடைய வாழ்க்கைத் தொழில். எனவேதான், இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட சட்டங்களில் விவசாயம் முதலிடத்தைப் பெறுகிறது. மண்ணின் வளத்தை மனதில் கொண்டே ஏழாம் வருஷம் நிலத்தில் பயிர் ஏதும் செய்யாமல் சும்மா விடவேண்டும் என கட்டளை கொடுக்கப்படுகிறது. (யாத்திராகமம் 23:10, 11; லேவியராகமம் 25:3-7) வருடத்தில் மூன்று பண்டிகைகள் கொண்டாடும்படி இஸ்ரவேலர்களுக்கு கட்டளை கொடுக்கப்படுகிறது. இவை மூன்றுமே அறுப்பின் சமயத்தில் வரும்படி குறிக்கப்படுகின்றன.—யாத்திராகமம் 23:14-16.
10 தேசத்தின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் முதலில் கண்களில் படுபவை திராட்சைத் தோட்டங்களே. திராட்சைப் பழங்களிலிருந்து எடுக்கப்படுவதே திராட்சரசமாகிய மது. இது, ‘மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்க’ கடவுள் கொடுத்த பரிசு என பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 104:15) ‘அவரவர் தங்கள்தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய் குடியிருப்பது’ கடவுளுடைய நீதியான ஆட்சியின்கீழ் செழுமையும் சமாதானமும் பாதுகாப்பும் இருக்கும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. (1 இராஜாக்கள் 4:25; மீகா 4:4) திராட்சைப் பழ விளைச்சல் அமோகமாக இருப்பது ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. அது ஆடிப்பாடி மகிழ்வதற்கான காரணம். (நியாயாதிபதிகள் 9:27; எரேமியா 25:30) ஆனால், திராட்சைக் கொடிகள் உலர்ந்து போனாலோ அல்லது திராட்சைப் பழங்கள் ஏதும் இல்லையென்றாலோ, திராட்சைத் தோட்டங்கள் முள் நிறைந்த பாழிடமானாலோ, அது மகா துயரத்தின் காலம். யெகோவா தம் ஆசீர்வாதத்தை நிறுத்தியிருப்பதற்கு இதுவே அத்தாட்சி.
11 யெகோவா, தேசத்தின்மீது தம் ஆசீர்வாதத்தை நிறுத்தி விட்டால் நிலைமை என்னவாகும்? இதை விளக்க, திராட்சைத் தோட்டங்களையும் அவற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களையும் ஏசாயா பயன்படுத்துவது பொருத்தமானதே: “திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சு விடுவார்கள். மேளங்களின் [“கஞ்சிராக்களின்,” NW] சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் [“யாழின்,” NW] களிப்பு நின்றுபோம். பாடலோடே திராட்சரசம் குடியார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும். வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக் கிடக்கும். திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போம். நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.”—ஏசாயா 24:7-12.
12 காதுக்கினிய இசையை வழங்கும் கஞ்சிரா, யாழ் போன்ற கருவிகள் யெகோவாவை துதிக்கவும் சந்தோஷத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. (2 நாளாகமம் 29:25; சங்கீதம் 81:2) ஆனால், கடவுளுடைய தண்டனையின் காலத்தில் அவற்றின் இசையைக் கேட்க முடியாது. மகிழ்ச்சி ஆரவாரத்தோடுகூடிய திராட்சை அறுவடையும் இருக்காது. பாழாக்கப்பட்ட எருசலேமிலே சந்தோஷத்தின் நிழல்கூட தென்படாது. யாரும் அதற்குள் போகாதபடி, அதன் வாசல்கள் “இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.” மேலும் அதிலுள்ள வீடுகளெல்லாம் “அடைபட்டுக்கிடக்கும்.” இயற்கையிலேயே மிக செழிப்பாக விளங்கிய அந்த தேசத்திற்கும் அதன் குடிகளுக்கும் மிக இருண்ட எதிர்காலம் காத்திருக்கிறதல்லவா!
மிஞ்சினோர் ‘சத்தமிட்டுக் கெம்பீரிக்கிறார்கள்’
13 இஸ்ரவேலர்கள், ஒலிவ மரத்தை கழியால் அடித்து உதிர்த்து ஒலிவ பழங்களை அறுவடை செய்வது வழக்கம். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின்படி, உதிராமல் கிளையில் ஒட்டிக்கொண்டிருக்கும் மீதிப்பழங்களை அவர்கள் பறிக்கக் கூடாது. எடுக்காமல் கீழே விட்ட மீதிப்பழங்களை மறுபடியும் போய் பொறுக்கக் கூடாது. அறுவடை செய்தபின் மீதியிருப்பவற்றை ஏழைகளுக்காகவிட வேண்டும். ‘அன்னியரும் திக்கற்ற பிள்ளையும் விதவையும்’ எடுத்துக்கொள்ள விட்டுவிட வேண்டும். (உபாகமம் 24:19-21) யூதர்கள் நன்கு அறிந்த இந்த சட்டங்களை சுட்டிக்காட்டி, யெகோவா கொண்டு வரப்போகிற நியாயத்தீர்ப்பில் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள் என்ற ஆறுதலான செய்தியை ஏசாயா அழகாக வருணிக்கிறார்: ‘ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்துக்குள்ளும் இந்த ஜனங்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும். அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிப்பார்கள். ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள். நீதிபரருக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்.’—ஏசாயா 24:13-16அ.
14 அறுவடைக்குப் பின் ஒலிவ மரத்திலோ அல்லது திராட்சைக் கொடியிலோ இன்னும் சில பழங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதைப்போல, யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நிறைவேறிய பின்பும் சிலர் மீந்திருப்பார்கள். ‘திராட்சப்பழங்களை அறுத்துத் தீர்ந்தப்பின்பும் பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதைப்போல’ சிலர் தப்பிப்பிழைப்பார்கள். இவர்களைப் பற்றி தீர்க்கதரிசி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார். அதாவது, ‘சிலர் மாத்திரம் மீந்திருப்பார்கள்’ என 6-ம் வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் மிக மிக கொஞ்சமே. இருந்தாலும், எருசலேம், யூதா தேசங்களின் அழிவை தப்பிப்பிழைப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். பின்னர், சிறையிருப்பிலிருந்து திரும்பி வரும் சிலரும் தேசத்தை மறுபடியும் சுதந்தரித்துக்கொள்வார்கள். (ஏசாயா 4:2, 3; 14:1-5) நல் இருதயமுடைய மக்களும் சோதனையின் இருண்ட காலத்தை அனுபவிப்பர். இருந்தாலும், விடுதலையும் ஆர்ப்பரிப்பும் காத்திருக்கிறது என்பதில் அவர்கள் உறுதியாய் இருக்கலாம். யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறுவதை தப்பிப்பிழைப்போர் கண்கூடாக பார்ப்பார்கள். ஏசாயா, கடவுளுடைய உண்மையான தீர்க்கதரிசி என்பதை அப்போது புரிந்துகொள்வார்கள். மீண்டும் நிலைநாட்டுவதை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் காணும்போது அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பார்கள். மேற்கிலுள்ள மத்தியதரைக்கடல் தீவுகளில் இருந்தாலும்சரி, “வெளுக்குந்திசை”யிலுள்ள (சூரியன் உதிக்கும் திசையிலுள்ள, அல்லது கிழக்கு திசையிலுள்ள) பாபிலோனில் இருந்தாலும்சரி, அல்லது இந்த பூமியின் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும்சரி, எங்கெல்லாம் சிதறி போயிருக்கிறார்களோ அங்கெல்லாம் கடவுளை துதிப்பார்கள். ஏனென்றால், கடவுள் அவர்களை காப்பாற்றியிருக்கிறார். அதனால், ‘நீதிபரருக்கே மகிமை’ என பாடுவார்கள்.
யெகோவாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது
15 ஆனால், இப்போதே களிகூரமுடியாது. ஏசாயா அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்களை மறுபடியும் நிகழ்காலத்திற்கு அழைத்து வருகிறார்: “நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம்பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன். தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும். அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும். தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும். வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோம், இனி எழுந்திராது.”—ஏசாயா 24:16ஆ-20.
16 தன் தேசத்தாருக்கு நேரிடப் போகிறதை நினைத்து ஏசாயா துக்கிக்கிறார். அவரைச் சுற்றியிருக்கும் நிலைமைகள் அவருக்கு மனவேதனையையும் வருத்தத்தையும் தருகின்றன. துரோகிகள் பெருகுகின்றனர். தேசத்தின் குடிகளுக்கு திகில் உண்டாக்குகின்றனர். யெகோவாவின் பாதுகாப்பு இல்லாதபோது, உண்மையற்ற யூதாவின் குடிகளை இரவும் பகலும் திகில்தான் ஆக்கிரமிக்கும். அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதமே இருக்காது. யெகோவாவின் கட்டளைகளையும் அவருடைய ஞானமான வழிகளையும் புறக்கணித்ததால், வரப்போகிற நாசத்திலிருந்து அவர்கள் தப்பவே முடியாது. (நீதிமொழிகள் 1:24-27) எந்த கேடும் எந்த நாசமும் நம்மை அண்டாது என துரோகிகள் சொல்லி என்னதான் மக்களை நம்ப வைத்தாலும் அழிவு நிச்சயம் வரும். அவர்கள் சொல்லும் பொய்யும் வஞ்சகமும் அழிவுக்குத்தான் வழிநடத்தும். (எரேமியா 27:9-15) மற்ற நாடுகளிலிருந்து எதிரிகள் வந்து, அவர்களை கொள்ளையடித்து, கைதிகளாக கொண்டு செல்வர். இவை எல்லாம் ஏசாயாவுக்கு கடும் வேதனையை தருகிறது.
17 இருந்தாலும், வரும் அழிவிலிருந்து தப்ப வழியே இல்லை என்பதை ஏசாயா அறிவிக்க வேண்டும். தப்பிப்பதற்காக எங்கு ஓடினாலும்சரி அவர்கள் பிடிபடுவார்கள். ஒருவகை நாசத்தை தப்பிப் பிழைத்தாலும் வேறொரு வகை நாசத்தில் அவர்கள் பிடிபடுவார்கள். பாதுகாப்பு என்பதே அவர்களுக்கு கிடையாது. வேட்டையாடப்படும் மிருகம் குழியில் விழாமல் தப்பியோடி, கடைசியில் கண்ணியில் மாட்டிக்கொள்வதுபோல அவர்களுக்கும் நேரிடும். (ஆமோஸ் 5:18, 19-ஐ ஒப்பிடுக.) யெகோவாவின் நியாயத்தீர்ப்பு பரலோகங்களிலிருந்து வரும். பூமியின் அஸ்திவாரங்கள் அசைக்கப்படும். குடிகாரனைப்போல தேசம் தள்ளாடி விழும். அக்கிரமத்தின் பாரம் அவ்வளவு மிகுதியாய் இருப்பதால் அந்த தேசம் மறுபடியும் எழுந்திருக்கவே முடியாது. (ஆமோஸ் 5:2) யெகோவாவின் நியாயத்தீர்ப்பே முடிவானது. படுநாசமும் பாழ்க்கடிப்பும் தேசத்திற்கு வரும்.
யெகோவா மகிமையில் அரசாளுவார்
18 ஏசாயாவின் தீர்க்கதரிசன காட்சி இப்போது மிகப் பரந்த அளவில் செல்கிறது. யெகோவாவின் நோக்கங்கள் அனைத்தும் இறுதியில் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது: “அக்காலத்தில் கர்த்தர் வானத்தின் சேனையை வானத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார். அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால் [“ராஜாவாக ஆனதால்,” NW] சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.”—ஏசாயா 24:21-23.
19 “வானத்தின் சேனை” என்பது ‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளையும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளையும்’ குறிக்கலாம். (எபேசியர் 6:12) உலக வல்லரசுகள் இவற்றின் ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன. (தானியேல் 10:13, 20; 1 யோவான் 5:19) யெகோவாவிடமிருந்தும் அவருடைய தூய வணக்கத்திலிருந்தும் ஜனங்களை வழிவிலகச் செய்வதே அவற்றின் குறிக்கோள். இஸ்ரவேலர்களுடைய விஷயத்திலும் அவை இதைத்தான் செய்கின்றன. சுற்றியிருந்த தேசங்களின் ஒழுக்கக்கேடான பழக்கங்களை பின்பற்றும்படி அவை இஸ்ரவேலர்களை வஞ்சிக்கின்றன. இதனால், இஸ்ரவேல் தேசம் கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகிறது. இப்படியாக, அவை தங்கள் குறிக்கோளை சாதிக்கின்றன! இன்றும் இதுவே உண்மை. “பூமியின் ராஜாக்களை” கடவுளுக்கு எதிராக வழிநடத்தி, அவருடைய சட்டங்களை மீறும்படி தூண்டுகின்றன. ஆனால், முடிவில் கடவுள் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில், சாத்தானும் அவனுடைய பேய்களும் அவற்றோடு கைகோர்த்து சென்ற ராஜாக்களும் தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்கும் கடவுளுக்கு கணக்கு கொடுத்தாக வேண்டும். (வெளிப்படுத்துதல் 16:13, 14) அவை கூட்டி சேர்க்கப்பட்டு, ‘காவலில் அடைக்கப்படும்’ என ஏசாயா அடையாள அர்த்தத்தில் பேசுகிறார். “அநேகநாள் சென்றபின்பு,” (“பூமியின் ராஜாக்கள்” அல்ல) சாத்தானும் அவனுடைய பேய்களும் விடுவிக்கப்படுவார்கள். அதாவது, இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் கொஞ்ச காலத்திற்கு விடுதலை பண்ணப்படுவார்கள். இறுதியாக கடவுள் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் அழிப்பார்.—வெளிப்படுத்துதல் 20:3, 7-10.
20 ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதி யூதர்களுக்கு அருமையான எதிர்பார்ப்பை அளித்தது. உரிய காலத்தில், பூர்வ பாபிலோனை வீழ்த்தி, யூதர்களை மறுபடியும் தங்கள் தேசத்தில் யெகோவா நிலைநாட்டுவார் என்பதையே அது உறுதி செய்தது. பொ.ச.மு. 537-ல், தம் மக்கள் சார்பாக யெகோவா தம் வல்லமையையும் அரசுரிமையையும் வெளிக்காட்டுகையில், ‘எங்கள் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார்!’ என அவர்கள் சொல்லலாம். (ஏசாயா 52:7) நவீன காலங்களில், அதாவது 1914-ல், இயேசு கிறிஸ்துவை தம் பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக்கியபோது, யெகோவா ‘ராஜாவானார்.’ (சங்கீதம் 96:10, NW) ஆவிக்குரிய இஸ்ரவேலர்களை மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுவித்து தம் அரசுரிமையை நிலைநாட்டியபோது 1919-ல் மறுபடியும் யெகோவா ‘ராஜாவானார்.’
21 மகா பாபிலோனை அழித்து, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு அழிவு கொண்டு வருகையில், யெகோவா மறுபடியும் ‘ராஜாவாக’ ஆவார். (சகரியா 14:9; வெளிப்படுத்துதல் 19:1, 2, 19-21) அதன்பின், யெகோவாவின் ஆட்சி மிக உன்னதமாய் விளங்கும். இரவையே பகலாக்கும் பெளர்ணமியின் ஒளியோ, நடுப்பகலில் பிரகாசிக்கும் சூரியனின் கண்ணைப் பறிக்கும் ஒளியோ அதன் மகிமைக்கு ஈடாகாது. (வெளிப்படுத்துதல் 22:5-ஐ ஒப்பிடுக.) சொல்லப்போனால், சேனைகளின் யெகோவாவினுடைய மகத்துவத்தோடு ஒப்பிட்டால், சூரியனும் சந்திரனும் வெட்கி நாணும். யெகோவாவே சர்வத்திற்கும் உயர்வாய் அரசாளுவார். அவருடைய சர்வ வல்லமையும் மகிமையும் எல்லாருக்கும் புலனாகும். (வெளிப்படுத்துதல் 4:8-11; 5:13, 14) என்னே மகத்தான எதிர்பார்ப்பு! அந்த சமயத்தில், சங்கீதம் 97:1-ல் (NW) உள்ள அழைப்பு பூமி முழுவதிலும் மிகச் சிறப்பான முறையில் தொனிக்கும்: “யெகோவா ராஜாவாகியிருக்கிறார்! பூமி மகிழட்டும். திரளான தீவுகள் களிகூரட்டும்.”
[கேள்விகள்]
1, 2. (அ) யெகோவாவின் கோபத்தை எந்த தேசங்களெல்லாம் அனுபவிக்கும்? (ஆ) யூதா தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா, இது நமக்கு எப்படி தெரியும்?
3. (அ) இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்தை யெகோவா ஏன் கைவிடுகிறார்? (ஆ) என்ன செய்ய யெகோவா தீர்மானிக்கிறார்?
4. யூதாவை யெகோவா என்ன செய்ய போகிறார், இந்த தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும்?
5. யெகோவாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து யாராவது தப்பித்துக்கொள்ள முடியுமா? விளக்கவும்.
6. தேசத்தை ஆசீர்வதிப்பதை ஏன் யெகோவா நிறுத்திவிடுகிறார்?
7. நியாயப்பிரமாண சட்டம் இஸ்ரவேலர்களுக்கு எப்படி ஆசீர்வாதமாக இருக்கும்?
8. (அ) ஜனங்கள் எப்படி ‘நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கியிருக்கிறார்கள்’? (ஆ) தேசத்து ஜனத்திலே “உயர்ந்தவர்கள்” எப்படி முதலில் ‘தவிக்கிறார்கள்’?
9, 10. (அ) இஸ்ரவேலிலே விவசாயம் என்ன பாகத்தை வகிக்கிறது? (ஆ) ஒவ்வொருவரும் ‘தங்கள்தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய் குடியிருப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
11, 12. (அ) யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் விளைவுகளை ஏசாயா எப்படி விளக்குகிறார்? (ஆ) என்னவிதமான இருண்ட எதிர்காலத்தைப் பற்றி ஏசாயா வருணிக்கிறார்?
13, 14. (அ) அறுவடை சம்பந்தமாக யெகோவாவின் சட்டங்கள் என்ன? (ஆ) யெகோவாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து சிலர் தப்பிப்பிழைப்பர் என்பதை விளக்க அறுவடை சம்பந்தமான சட்டங்களை ஏசாயா எப்படி பயன்படுத்துகிறார்? (இ) சோதனைகள் நிறைந்த இருண்ட காலம் அவர்களுக்கு முன் இருந்தபோதிலும், உண்மையுள்ள யூதர்கள் எதைக் குறித்து உறுதியாய் இருக்கலாம்?
15, 16. (அ) தன் ஜனங்களுக்கு நேரிடப்போவதைப் பற்றி ஏசாயா எப்படி உணருகிறார்? (ஆ) உண்மையற்ற ஜனங்களுக்கு என்ன நேரிடும்?
17. (அ) அழிவிலிருந்து ஏன் தப்ப முடியாது? (ஆ) பரலோகங்களிலிருந்து யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வரும்போது, தேசம் என்னவாகும்?
18, 19. (அ) ‘வானத்தின் சேனை’ எதைக் குறிக்கிறது, இது எவ்வாறு கூட்டிச்சேர்க்கப்பட்டு ‘காவலில் அடைக்கப்படும்’? (ஆ) “அநேகநாள் சென்றபின்பு,” ‘வானத்தின் சேனையிடம்’ எப்படி நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும்? (இ) ‘பூமியின் ராஜாக்களிடம்’ யெகோவா எப்படி தம் கவனத்தை திருப்புகிறார்?
20. பூர்வ காலங்களிலும் நவீன காலங்களிலும், எப்போது, எப்படி யெகோவா ‘ராஜாவாகிறார்’?
21. (அ) எப்படி “சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்”? (ஆ) என்ன அழைப்பு மிகச் சிறப்பான முறையில் நிறைவேறும்?
[பக்கம் 262-ன் படம்]
இசையும் மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பும் தேசத்திலே இனி கேட்கப்படாது
[பக்கம் 265-ன் படம்]
அறுவடைக்குப்பின் மரத்திலே சில பழங்கள் மீந்திருப்பதுபோல, யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளிலும் தப்பிப்பிழைக்கும் சிலர் இருப்பர்
[பக்கம் 267-ன் படம்]
தன் ஜனங்களுக்கு நடக்கப் போவதை நினைத்து ஏசாயா வருந்துகிறார்
[பக்கம் 269-ன் படம்]
சூரியனும்சரி சந்திரனும்சரி யெகோவாவின் மகிமைக்கு ஈடாகாது