“இதோ! இவரே நம் கடவுள்”
இந்த இரண்டு படிப்புக் கட்டுரைகளிலும் கலந்தாலோசிக்கப்படும் தகவல்கள் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இப்புத்தகம் 2002/03-ல் உலகெங்கும் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் போது வெளியிடப்பட்டது.—“இது என் இருதயத்திலிருந்த வெறுமை உணர்வை நீக்கியது” என்ற தலைப்பில் பக்கம் 20-லுள்ள கட்டுரையைக் காண்க.
“இதோ! இவரே நம் கடவுள்; இவரில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே யெகோவா.”—ஏசாயா 25:9, Nw.
1, 2. (அ) முற்பிதாவாகிய ஆபிரகாமை யெகோவா எப்படி குறிப்பிட்டார், எதைக் குறித்து இது நம்மை யோசிக்க வைக்கிறது? (ஆ) கடவுளுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள முடியுமென பைபிள் நமக்கு எப்படி உறுதியளிக்கிறது?
‘என் சிநேகிதன்.’ வானத்தையும் பூமியையும் படைத்த படைப்பாளராகிய யெகோவா அப்படித்தான் முற்பிதாவாகிய ஆபிரகாமைக் குறிப்பிட்டார். (ஏசாயா 41:8) சாதாரண மனிதன் சர்வலோக பேரரசருடன் அப்படிப்பட்ட நட்பை அனுபவிப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! ‘கடவுளுடன் அந்தளவுக்கு நெருக்கத்தை என்னால் வளர்த்துக்கொள்ள முடியுமா?’ என நீங்கள் யோசிக்கலாம்.
2 கடவுளுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள முடியுமென பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. ஆபிரகாம் ‘யெகோவாவை விசுவாசித்ததால்’ அந்தளவுக்கு அவரிடம் நெருங்கியிருக்க முடிந்தது. (யாக்கோபு 2:23, NW) இன்றும்கூட யெகோவாவின் ‘அந்தரங்க சிநேகம் நேர்மையாளரோடு’ இருக்கிறது. (நீதிமொழிகள் 3:32, திருத்திய மொழிபெயர்ப்பு) “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என யாக்கோபு 4:8-ல் (NW) பைபிள் நம்மை தூண்டுவிக்கிறது. யெகோவாவிடம் நெருங்கி வர நாம் நடவடிக்கை எடுத்தால் அவரும் அதே போல நெருங்கி வருவார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆம், அவர் நிச்சயம் நம்மிடம் நெருங்கி வருவார். ஆனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், பாவிகளும் அபூரணர்களுமாகிய நாம் முதல் படியை எடுப்பதாக அர்த்தப்படுத்துகின்றனவா? இல்லவே இல்லை. நம்முடைய அன்புள்ள கடவுளாகிய யெகோவா இரண்டு முக்கிய படிகளை எடுத்திருப்பதால்தான் அவருடன் இந்த நெருக்கத்தை அனுபவிக்க முடிகிறது.
3. யெகோவாவுடன் நட்பை அனுபவிப்பதை சாத்தியமாக்கும் என்ன இரண்டு படிகளை அவர் எடுத்திருக்கிறார்?
3 முதலாவதாக, “[இயேசு] அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” யெகோவா ஏற்பாடு செய்தார். (மத்தேயு 20:28) அந்த மீட்பின் பலி நாம் கடவுளோடு நெருக்கமாக இருப்பதை சாத்தியமாக்குகிறது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” என பைபிள் குறிப்பிடுகிறது. (1 யோவான் 4:19) ஆம், கடவுள் “முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால்,” அவருடன் நாம் நட்புகொள்ள அவரே வழிவகுத்தார். இரண்டாவதாக, யெகோவா தம்மையே நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் யாரிடம் நட்பை வளர்த்துக்கொண்டாலும், அவரைப் பற்றி அறிகையிலும் அவருக்கே உரிய குணாதிசயங்களை போற்றுகையிலும் மதிக்கையிலும்தான் அவரோடு பிணைப்பு ஏற்படுகிறது. இது எதை அர்த்தப்படுத்துகிறது என சிந்திப்போம். ஒருவேளை யெகோவா மறைவான, அறிந்துகொள்ள முடியாத ஒரு கடவுளாக இருந்தால் நாம் ஒருபோதும் அவரிடம் நெருங்கி வர முடியாது. ஆனால் தம்மை மறைத்துக் கொள்வதற்கு மாறாக, தம்மைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டுமென யெகோவா விரும்புகிறார். (ஏசாயா 45:19) தம்முடைய வார்த்தையாகிய பைபிளில், நாம் புரிந்து கொள்ளும் விதங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார்; இது, அவர் நம்மை நேசிப்பதற்கு மட்டுமல்லாமல் நம்முடைய பரலோக பிதாவாக நாம் அவரை அறிந்து நேசிக்கும்படி விரும்புகிறார் என்பதற்கும் நிரூபணம் அளிக்கிறது.
4. யெகோவாவின் பண்புகளைப் பற்றி அதிகமதிகமாக தெரிந்துகொள்ளும்போது நாம் அவரைப் பற்றி எப்படி உணருவோம்?
4 ஒரு சிறு பிள்ளை நண்பர்களிடம் தன் அப்பாவைக் காட்டி “அதுதான் என் அப்பா” என சந்தோஷப் பெருமிதத்தோடு கள்ளங்கபடம் இல்லாமல் சொல்வதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? யெகோவாவைக் குறித்தும் அவரது வணக்கத்தார் அவ்வாறே உணர தகுந்த காரணம் உண்டு. “இதோ! இவரே நம் கடவுள்” என உண்மையுள்ள மக்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கும் ஒரு காலத்தைப் பற்றி பைபிள் முன்னறிவிக்கிறது. (ஏசாயா 25:8, 9, NW) யெகோவாவின் பண்புகளை எவ்வளவு ஆழமாக புரிந்துகொள்கிறோமோ அவ்வளவு அதிகமாக அவரே தலைசிறந்த தகப்பன், உற்ற நண்பர் என்பதை உணருவோம். யெகோவாவின் பண்புகளை புரிந்துகொள்வது, அவரிடம் நெருங்கி வர நமக்கு அநேக காரணங்களை அளிக்கிறது. ஆகவே யெகோவாவின் முக்கிய குணங்களான வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றைப் பற்றி பைபிள் வெளிப்படுத்துவதை ஆராய்வோம். அதில் முதல் மூன்று குணங்களை இந்தக் கட்டுரையில் கலந்தாலோசிப்போம்.
‘வல்லமையில் பெருத்தவர்’
5. யெகோவா மட்டுமே ‘சர்வவல்லமையுள்ளவர்’ என அழைக்கப்படுவது ஏன் பொருத்தமானது, தம்மிடமுள்ள வியத்தகு வல்லமையை அவர் எந்த வழிகளில் பயன்படுத்துகிறார்?
5 யெகோவா ‘வல்லமையில் . . . பெருத்தவர்.’ (யோபு 37:23) “கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது” என எரேமியா 10:6 சொல்கிறது. வேறெந்த சிருஷ்டியையும் போல் அல்லாமல், யெகோவாவிடம் எல்லையில்லா வல்லமை உள்ளது. அதனால் அவர் மட்டுமே ‘சர்வவல்லமையுள்ளவர்’ என அழைக்கப்படுகிறார். (வெளிப்படுத்துதல் 15:3) யெகோவா தம்மிடமுள்ள வியத்தகு வல்லமையை படைப்பதற்கும், அழிப்பதற்கும், காப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் பயன்படுத்துகிறார். அவருடைய படைக்கும் வல்லமை, காக்கும் வல்லமை ஆகிய இரண்டு உதாரணங்களை மட்டும் கவனியுங்கள்.
6, 7. சூரியன் எவ்வளவு சக்தி வாய்ந்தது, அது என்ன முக்கியமான உண்மைக்கு அத்தாட்சி அளிக்கிறது?
6 கோடையில் பளிச்சென்ற பகற்பொழுதில் வெளியில் நிற்கும்போது நீங்கள் எதை உணருகிறீர்கள்? சூரிய வெப்பத்தை உணருகிறீர்கள். இன்னும் சரியாகச் சொன்னால், யெகோவாவின் படைக்கும் வல்லமையின் வெளிக்காட்டையே நீங்கள் உணருகிறீர்கள். சூரியன் எவ்வளவு சக்தி வாய்ந்தது? மையப்பகுதியில், அதன் வெப்பநிலை சுமார் 1.5 கோடி டிகிரி செல்சியஸாகும். சூரியனின் மையத்திலிருந்து குண்டூசியின் தலையளவு பகுதியை எடுத்து பூமியில் வைக்க முடிந்தால், அந்த மிகச் சிறிய வெப்ப மூலத்திலிருந்து 140 கிலோமீட்டர் தூரம் தள்ளி நின்றால்தான் நீங்கள் பொசுங்காமல் தப்ப முடியும்! ஒவ்வொரு விநாடியும் சூரியன் வெளிவிடும் ஆற்றல், நூறு கோடிக்கணக்கான அணுகுண்டுகள் வெடிப்பதற்கு சமமாகும். இருந்தாலும், பிரமிக்கத்தக்க இந்த வெப்ப அணு உலையை பூமி மிகச் சரியான தூரத்தில் சுற்றிவருகிறது. வெகு அருகில் சுற்றினால் பூமியின் நீரெல்லாம் ஆவியாகிவிடும்; வெகு தூரத்தில் சுற்றினால் அதன் நீரெல்லாம் உறைந்துவிடும். மிதமிஞ்சிய இந்த இரண்டுமே நம் கிரகத்தை உயிர்வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக்கிவிடும்.
7 தங்கள் வாழ்க்கையே சூரியனை சார்ந்திருக்கிற போதிலும், பெரும்பாலோர் அதை பொருட்படுத்துவது இல்லை. இவ்வாறு, சூரியன் கற்பிக்கும் பாடத்தை புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். யெகோவாவை பற்றி சங்கீதம் 74:16 இவ்வாறு சொல்கிறது: “தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.” ஆம், ‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கின’ யெகோவாவிற்கு சூரியன் மகிமை சேர்க்கிறது. (சங்கீதம் 146:6) யெகோவாவின் அளவிலா ஆற்றலைப் பற்றி நமக்குப் பாடம் புகட்டும் எத்தனையோ படைப்புகளில் அது ஒன்றே ஒன்றுதான். யெகோவாவின் படைக்கும் வல்லமையைப் பற்றி அதிகமதிகமாய் கற்றுக்கொள்கையில், நம் பயபக்தி அதிகரிக்கிறது.
8, 9. (அ) தம் வணக்கத்தாரை யெகோவா பேணிப் பாதுகாக்க விரும்புவதை எந்த வர்ணனை மென்மையாக படம் பிடித்துக் காட்டுகிறது? (ஆ) பைபிள் காலங்களில் மேய்ப்பர் தனது ஆடுகளை எப்படி பராமரித்தார், நம்முடைய மகத்தான மேய்ப்பரைப் பற்றி இது நமக்கு என்ன கற்பிக்கிறது?
8 தம் ஊழியர்களை பாதுகாக்கவும் அவர்களிடம் கரிசனை காட்டவும்கூட தம்மிடமுள்ள ஏராளமான வல்லமையை யெகோவா பயன்படுத்துகிறார். காத்துப் பராமரிப்பதாக யெகோவா கொடுத்த வாக்குறுதிகளை வெகு அழகாகவும் அதே சமயத்தில் உள்ளத்தைக் கனிவிக்கும் வகையிலும் பைபிள் விவரிக்கிறது. உதாரணத்திற்கு, ஏசாயா 40:11-ஐக் கவனியுங்கள். யெகோவா தம்மை ஒரு மேய்ப்பனுக்கும் தம்முடைய ஜனங்களை செம்மறியாடுகளுக்கும் ஒப்பிடுகிறார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மேய்ப்பனைப் போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.” இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளதை உங்கள் மனக்கண்களால் காண முடிகிறதா?
9 விலங்குகளில் வீட்டில் வளர்க்கும் செம்மறியாட்டைப் போல் அப்பாவி விலங்குகள் வெகு குறைவுதான். பைபிள் காலங்களில், செம்மறியாடுகளை ஓநாய்களிடமிருந்தும் கரடிகளிடமிருந்தும் சிங்கங்களிடமிருந்தும்கூட காப்பாற்ற மேய்ப்பனுக்கு அதிக தைரியம் தேவைப்பட்டது. (1 சாமுவேல் 17:34-36; யோவான் 10:10-13) அதே சமயத்தில் செம்மறியாடுகளைப் பேணிப் பாதுகாக்க கனிவு தேவைப்பட்ட சமயங்களும் இருந்தன. உதாரணமாக, மந்தையிலிருந்து வெகு தூரத்தில் ஒரு செம்மறியாடு குட்டியை ஈன்றால், தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் குட்டியை அந்த மேய்ப்பன் எப்படி பாதுகாப்பார்? ஒருவேளை நாட்கணக்கில் தன் “மடியில்”—தன் மேலங்கியில் உள்ள மடிப்புகளில்—வைத்து சுமந்து செல்வார். என்றாலும், மேய்ப்பனின் ‘மடிக்கு’ அந்த ஆட்டுக்குட்டி வருவது எவ்வாறு? ஆட்டுக்குட்டி மேய்ப்பரின் அருகே சென்று, அவரது காலை செல்லமாக இடிக்கலாம். ஆனாலும் மேய்ப்பர்தான் குனிந்து, ஆட்டுக்குட்டியை தூக்கி, தனது மடியிலே பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய மகத்தான மேய்ப்பர் தம்முடைய ஊழியர்களைப் பேணிப் பாதுகாக்க விரும்புவதை எவ்வளவு மென்மையாக படம் பிடித்துக் காட்டும் வர்ணனை இது!
10. இன்று என்ன பாதுகாப்பை யெகோவா அளிக்கிறார், குறிப்பாக அத்தகைய பாதுகாப்பு ஏன் முக்கியம்?
10 பாதுகாப்பு அளிப்பதாக வாக்குறுதியை மட்டுமே யெகோவா கொடுக்கவில்லை. பைபிள் காலங்களில், “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க” முடியும் என்பதை அவர் செயலிலும் காட்டினார். (2 பேதுரு 2:9) இன்று எப்படி? எல்லா துன்பங்களிலிருந்தும் நம்மை பாதுகாக்க இப்பொழுது தம் வல்லமையை அவர் பயன்படுத்துவதில்லை என்பதை நாம் அறிவோம். என்றாலும் மிக முக்கியமான பாதுகாப்பை, அதாவது ஆவிக்குரிய பாதுகாப்பை அவர் நமக்கு அளிக்கிறார். நம் அன்புள்ள கடவுள், சோதனைகளை சகித்துக்கொள்வதற்கும், அவருடன் நமக்கிருக்கும் மதிப்பு வாய்ந்த உறவை காத்துக் கொள்வதற்கும் தேவையானவற்றை நமக்குத் தந்து ஆவிக்குரிய தீங்கிலிருந்து பாதுகாக்கிறார். உதாரணமாக, லூக்கா 11:13 இவ்வாறு குறிப்பிடுகிறது: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.” அந்த வல்லமைமிக்க ஆவி, எந்த சோதனையையும் பிரச்சினையையும் சமாளிக்க நமக்கு உதவும். (2 கொரிந்தியர் 4:7) இவ்வாறு நம்முடைய ஜீவனை கொஞ்ச காலத்திற்கு அல்ல, ஆனால் நித்தியத்திற்கும் காப்பதற்கு யெகோவா செயல்படுகிறார். அதை மனதில் வைத்து, இந்த உலகில் எதிர்ப்படும் எந்த துன்பத்தையும் “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான” ஒன்றாக நாம் நிச்சயமாகவே கருதலாம். (2 கொரிந்தியர் 4:17) நம் சார்பாக அன்புடன் கடவுள் தம்முடைய வல்லமையைப் பயன்படுத்துவதைக் காண்கையில் அது நம்மை அவரிடம் நெருங்கி வர செய்கிறதல்லவா?
“யெகோவா நீதியை விரும்புகிறவர்”
11, 12. (அ) யெகோவாவின் நீதி ஏன் நம்மை அவரிடம் நெருங்கி வர செய்கிறது? (ஆ) யெகோவாவின் நீதி சம்பந்தமாக தாவீது என்ன முடிவுக்கு வந்தார், ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் நமக்கு எப்படி ஆறுதலளிக்கலாம்?
11 யெகோவா நீதியையும் நியாயத்தையுமே நடப்பிக்கிறார், அதுவும் தொடர்ந்து, பாரபட்சமின்றி நடப்பிக்கிறார். கடவுளுடைய நீதி, அவரிடமிருந்து நம்மை விலகச் செய்யும் ஓர் உணர்ச்சியற்ற, முரட்டுத்தனமான பண்பல்ல; ஆனால் யெகோவாவிடம் நம்மை நெருங்கச் செய்யும் அருமையான ஒரு பண்பாகும். இந்தப் பண்பின் கனிவான தன்மையை பைபிள் தெளிவாக விவரிக்கிறது. ஆகவே யெகோவா நீதியை நடப்பிக்கும் மூன்று வழிகளை நாம் கலந்தாலோசிப்போம்.
12 முதலாவதாக, யெகோவாவின் நீதி உண்மைத்தன்மையையும் உண்மைப் பற்றுறுதியையும் தம் ஊழியர்களிடம் காட்ட அவரை உந்துவிக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது யெகோவாவுடைய நீதியின் இந்த அம்சத்தை தனிப்பட்ட விதமாய் மதித்துணர்ந்தார். தன் சொந்த அனுபவத்திலிருந்தும் கடவுள் காரியங்களைச் செய்யும் விதங்களை ஆராய்ந்ததிலிருந்தும் தாவீது என்ன முடிவிற்கு வந்தார்? “யெகோவா நீதியை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்” என அவர் அறிவித்தார். (சங்கீதம் 37:28, NW) எவ்வளவு ஆறுதலளிக்கும் உறுதி! தம்மிடம் உண்மைப் பற்றுறுதியுடன் நடந்துகொள்பவர்களை ஒருபோதும் நம் கடவுள் கைவிட மாட்டார். ஆகவே நம்மிடம் அவருக்குள்ள நெருக்கத்தையும் அவருடைய அன்பான கவனிப்பையும் நாம் நம்பியிருக்கலாம். அவருடைய நீதி இதற்கு உத்தரவாதம் அளிக்கிறது!—நீதிமொழிகள் 2:7, 8.
13. ஒடுக்கப்பட்டவர்களிடம் யெகோவா காட்டும் அக்கறை, இஸ்ரவேலருக்குக் கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்தில் எப்படி தெளிவாக காணப்படுகிறது?
13 இரண்டாவதாக, கடவுளின் நீதி, ஒடுக்கப்படுபவர்களின் தேவைகளை உணரும் தன்மையுள்ளது. தேவையில் இருப்பவர்களிடம் கடவுள் காட்டும் அக்கறை, இஸ்ரவேலுக்கு அவர் கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்தில் தெளிவாக காணப்படுகிறது. உதாரணமாக, அனாதைகளும் விதவைகளும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்துகொள்ள நியாயப்பிரமாண சட்டம் வழி செய்தது. (உபாகமம் 24:17-21) அப்படிப்பட்ட குடும்பங்கள் எவ்வளவு கஷ்டப்படும் என்பதை உணர்ந்து, யெகோவாவே அவர்களது தகப்பனின் நிலையில் இருக்கும் நியாயாதிபதியாகவும் பாதுகாப்பாளராகவும் ஆனார். (உபாகமம் 10:17, 18) ஆதரவற்ற பெண்களையும் குழந்தைகளையும் கஷ்டப்படுத்தினால் அப்படிப்பட்டவர்களின் கூக்குரலை தாம் கேட்டு நீதி வழங்குவதாக இஸ்ரவேலரை அவர் எச்சரித்தார். யாத்திராகமம் 22:22-24-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, ‘கோபம் மூண்டவராவேன்’ என்று அவர் குறிப்பிட்டார். கோபம் கடவுளின் முக்கிய பண்புகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், வேண்டுமென்றே அநியாயம் செய்கையில், முக்கியமாக பலவீனமானோர் பாதிக்கப்படுகையில், நியாயமான கோபத்தைக் காட்ட அவர் தூண்டப்படுகிறார்.—சங்கீதம் 103:6.
14. யெகோவாவின் பட்சபாதமற்ற தன்மைக்கு உண்மையிலேயே குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு எது?
14 மூன்றாவதாக, உபாகமம் 10:17-ல், யெகோவா “பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல” என்று பைபிள் உறுதியளிக்கிறது. பதவியும் பணமும் படைத்த அநேகரைப் போலல்லாமல், பொருட்செல்வத்தை அல்லது வெளித் தோற்றத்தைக் கண்டு யெகோவா மனம் மாறுவதில்லை. அவர் ஒருதலைப் பட்சமானவரோ அல்லது பட்சபாதம் காண்பிப்பவரோ அல்ல. அவருடைய பட்சபாதமற்ற தன்மைக்கு உண்மையிலேயே குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு உண்டு: நித்திய வாழ்வு என்ற எதிர்நோக்குடன் அவருடைய உண்மை வணக்கத்தாராகும் வாய்ப்பு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஒதுக்கப்படவில்லை. மாறாக, அப்போஸ்தலர் 10:34, 35 குறிப்பிடுவது போல, ‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.’ இந்த வாய்ப்பு சமுதாய அந்தஸ்து, தோலின் நிறம், வாழும் தேசம் இவற்றின் அடிப்படையில் அல்லாமல் எல்லாருக்குமே அளிக்கப்படுகிறது. உண்மையான நீதியை மிகச் சிறந்த விதத்தில் வெளிக்காட்டுவது என்றால் இதுவல்லவா? உண்மையில், யெகோவாவின் நீதியை இன்னும் நன்கு புரிந்துகொள்வது அவரிடம் நெருங்கி வர வைக்கும்!
‘ஆ! தேவனுடைய . . . ஞானத்தின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!’
15. ஞானம் என்றால் என்ன, யெகோவா அதை எவ்வாறு வெளிக்காட்டுகிறார்?
15 ரோமர் 11:33-ல் பதிவு செய்யப்பட்டபடி, ‘ஆ! தேவனுடைய . . . ஞானத்தின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!’ என்று வியந்து கூறும்படி அப்போஸ்தலன் பவுல் தூண்டப்பட்டார். ஆம், யெகோவாவின் எல்லையில்லா ஞானத்தின் வெவ்வேறு அம்சங்களை நாம் தியானிக்கையில், பயபக்தியால் நிரப்பப்படுவது உறுதி. இந்தக் குணத்தை நாம் எப்படி விவரிக்கலாம்? ஞானம் என்பது அறிவையும் பகுத்துணர்வையும் புரிந்துகொள்ளுதலையும் உபயோகித்து, விரும்புகிற பலனை பெறுவதைக் குறிக்கிறது. யெகோவா எப்போதுமே தமது பேரளவான அறிவையும் ஆழமான புரிந்துகொள்ளுதலையும் பயன்படுத்தி மிகச் சிறந்த தீர்மானங்களை எடுக்கிறார்; பிறகு தலைசிறந்த விதத்தில் அவற்றை செயல்படுத்துகிறார்.
16, 17. யெகோவாவின் படைப்புகள் அவருடைய எல்லையில்லா ஞானத்துக்கு எப்படி அத்தாட்சி அளிக்கின்றன? உதாரணம் கொடுங்கள்.
16 யெகோவாவின் எல்லையில்லா ஞானத்திற்கு சில நிரூபணங்கள் யாவை? “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது” என சங்கீதம் 104:24 கூறுகிறது. உண்மையில், யெகோவா படைத்திருப்பவற்றைப் பற்றி அதிகமதிகமாய் கற்றுக்கொள்கையில், அவருடைய ஞானத்தைக் கண்டு மலைத்துப் போய்விடுவோம். விஞ்ஞானிகள்கூட யெகோவாவின் படைப்பை ஆராய்வதிலிருந்து ஏராளமானவற்றை கற்றிருக்கின்றனரே! பையோமிமெடிக்ஸ் என்ற பொறியியல் பிரிவு, இயற்கையில் காணப்படும் அமைப்புகளை காப்பியடித்து செயற்கையில் உருவாக்க முயலுகிறதே!
17 உதாரணமாக, சிலந்தி வலை ஒன்றை நீங்கள் ஆச்சரியத்தால் இமை கொட்டாமல் ஒருவேளை பார்த்திருப்பீர்கள். உண்மையில் அது ஆச்சரியமான வடிவமைப்பு. மென்மையாக காட்சியளிக்கும் சில இழைகளை எடைக்கு எடை ஒப்பிடுகையில் ஸ்டீலைவிட அவை வலிமைமிக்கவை, குண்டு துளைக்காத ஆடையின் இழைகளைக் காட்டிலும் வலிமையானவை. எந்தளவுக்கு வலிமைமிக்கவை? மீன்பிடி படகில் பயன்படுத்தப்படும் வலையின் அளவுக்கு சிலந்தி வலை ஒன்றை பெரிதாக்குவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு வலை, பயணிகளுடன் நடுவானில் பறக்கும் விமானத்தையே தடுத்துவிடும் அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கும்! ஆம், இப்படிப்பட்ட எல்லாவற்றையும் யெகோவா “ஞானமாய்ப்” படைத்திருக்கிறார்.
18. தம்முடைய வார்த்தையாகிய பைபிளைப் பதிவு செய்வதற்கு மனிதரைப் பயன்படுத்தியதில் யெகோவாவின் ஞானம் எப்படி வெளிப்படுகிறது?
18 யெகோவாவின் ஞானத்திற்கு மிகச் சிறந்த அத்தாட்சி, அவருடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படுகிறது. அதில் அடங்கியுள்ள ஞானமான புத்திமதி நம் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழியைக் காட்டுகிறது. (ஏசாயா 48:17) ஆனால் பைபிள் எழுதப்பட்ட விதத்திலும் யெகோவாவின் ஒப்பற்ற ஞானம் வெளிப்படுகிறது. எப்படி? யெகோவா தம்முடைய ஞானத்தால், தம் வார்த்தையை பதிவு செய்வதற்கு மனிதரைப் பயன்படுத்தினார். அவர்களுக்கு பதிலாக தேவதூதர்களைப் பயன்படுத்தியிருந்தால், பைபிள் இந்தளவுக்கு மனம் கவரத்தக்கதாக இருந்திருக்குமா? தேவதூதர்களால் உயர்ந்த கண்ணோட்டத்திலிருந்து யெகோவாவை சித்தரித்திருக்கவும் அவர் மீதிருக்கும் தங்கள் பயபக்தியைக் காட்டவும் முடிந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நம்மைவிட மேம்பட்ட அறிவையும் அனுபவத்தையும் பலத்தையும் கொண்ட பரிபூரண ஆவி சிருஷ்டிகளின் கண்ணோட்டத்தை நம்மால் கிரகிக்க முடிந்திருக்குமா?—எபிரெயர் 2:6, 7.
19. பைபிளை எழுதுவதற்கு மனிதர் பயன்படுத்தப்பட்டதால், அதில் கனிவும் வசீகரமும் காணப்படுகிறது என்பதை என்ன உதாரணம் காட்டுகிறது?
19 பைபிளை எழுதுவதற்கு மனிதர் பயன்படுத்தப்பட்டதால், அதில் காணப்படும் கனிவிற்கும் வசீகரத்திற்கும் அளவில்லை. நம்மைப் போன்ற உணர்ச்சிகள் உள்ளவர்களே அதை எழுதினர். அபூரணர்களாக, நாம் சந்திப்பதைப் போன்ற சோதனைகளையும் பிரச்சினைகளையும் அவர்களும் எதிர்ப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில், அவர்களுடைய சொந்த உணர்ச்சிகளையும் மனப்போராட்டங்களையும் பற்றி தன்மையில் எழுதினார்கள். (2 கொரிந்தியர் 12:7-10) எனவே அவர்கள் எழுதியதைப் போல எந்தத் தேவதூதராலும் எழுதியிருக்க முடியாது. சங்கீதம் 51-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தாவீதின் வார்த்தைகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அந்த அதிகாரத்தின் தலைப்பின்படி, படுமோசமான பாவத்தை செய்த பிறகு இந்த சங்கீதத்தை தாவீது தொகுத்தார். தன் இதயத்தில் இருந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்து, பெரிதும் மனம் வருந்தி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சினார். இரண்டாம் மூன்றாம் வசனங்கள் இவ்வாறு சொல்கின்றன: “என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.” ஐந்தாம் வசனம் சொல்வதை கவனியுங்கள்: “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.” பதினேழாம் வசனம் மேலும் இவ்வாறு சொல்கிறது: “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” அந்த எழுத்தாளரின் உணர்ச்சிப்பூர்வ வேதனையை உங்களால் உணர முடிகிறதல்லவா? அபூரண மனிதனைத் தவிர வேறு யாரால் இப்படிப்பட்ட இதயப்பூர்வ உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்?
20, 21. (அ) மனிதரால் எழுதப்பட்டபோதிலும் பைபிளில் யெகோவாவின் ஞானம் உள்ளதென ஏன் சொல்லலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எது கலந்தாலோசிக்கப்படும்?
20 இப்படியாக அபூரண மனிதர்களைப் பயன்படுத்தி நமக்குத் தேவையானது எதுவோ அதையே யெகோவா அளித்திருக்கிறார்; அதுதான், ‘தேவ ஆவியினால் அருளப்பட்ட,’ அதே சமயத்தில் மனித வாடையுள்ள ஒரு பதிவு. (2 தீமோத்தேயு 3:16) ஆம், அந்த எழுத்தாளர்கள் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டார்கள். இவ்வாறு தங்கள் ஞானத்தை அல்ல யெகோவாவின் ஞானத்தை அவர்கள் பதிவு செய்தார்கள். அந்த ஞானம் முற்றிலும் நம்பத்தக்கது. நம் சொந்த ஞானத்தைவிட அது மிகவும் உயர்ந்தது; எனவே கடவுள் அன்புடன் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:5, 6) அந்த ஞானமான ஆலோசனைக்கு செவிசாய்க்கையில் சகல ஞானமும் நிறைந்த கடவுளிடம் நாம் நெருங்கி வருவோம்.
21 யெகோவாவின் பண்புகள் அனைத்திலும் மிகவும் விரும்பத்தக்கதும் கவரத்தக்கதுமான பண்பு அன்பு. யெகோவா எப்படி அன்பு காட்டியிருக்கிறார் என்பது அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• தம்முடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்வதை சாத்தியமாக்கும் என்ன படிகளை யெகோவா எடுத்திருக்கிறார்?
• யெகோவாவின் படைக்கும் வல்லமைக்கும் காக்கும் வல்லமைக்கும் என்ன சில உதாரணங்கள் உள்ளன?
• யெகோவா எந்த வழிகளில் தம்முடைய நீதியை வெளிக்காட்டியிருக்கிறார்?
• படைப்பிலும் பைபிளிலும் யெகோவாவின் ஞானம் எவ்வாறு வெளிப்படுகிறது?
[பக்கம் 10-ன் படம்]
ஆட்டுக் குட்டியைத் தன் மடியிலே சுமக்கும் மேய்ப்பனைப் போல், செம்மறியாடுகள் போன்ற தம்முடைய ஜனங்களை யெகோவா கனிவோடு பராமரிக்கிறார்
[பக்கம் 13-ன் படம்]
பைபிள் எழுதப்பட்ட விதத்தில் யெகோவாவின் ஞானம் வெளிப்படுகிறது