அதிகாரம் பத்து
“என்றென்றைக்கும் அழியாத” ஒரு ராஜ்யம்
யெகோவாவின் பேரரசுரிமையை புறக்கணித்து தாங்களே ஆட்சியமைக்க முயன்றதால், மனிதர் மகிழ்ச்சியைக் காணவில்லை என்பதை உலக சம்பவங்கள் தினந்தினம் பறைசாற்றுகின்றன. எந்தவொரு மனித அரசாங்கமும் மானிடருக்கு பாரபட்சமற்ற விதத்தில் பயன் தரவில்லை. விஞ்ஞான அறிவில் மனிதர் விண்ணை எட்டியிருந்தாலும், வியாதியை வெல்ல முடியவில்லை, அல்லது சாவை—ஒருவருடைய சாவையாவது—முறியடிக்க முடியவில்லை. போர், வன்முறை, குற்றச்செயல், ஊழல், வறுமை போன்றவற்றை மனித ஆட்சி ஒழித்துக்கட்டவில்லை. கொடுங்கோன்மை அரசாங்கங்கள் இன்றும் பல நாடுகளில் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. (பிரசங்கி 8:9) தொழில்நுட்பமும் பேராசையும் அறியாமையும் கைகோர்த்து நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துகின்றன. அதிகாரிகள் பொருளாதாரத்தை சரிவர நிர்வகிக்காததால் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை அநேகர் பெற முடிவதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தப்படும் மனித ஆட்சி, “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும்” வெளிப்படுத்தியிருக்கிறது.—எரேமியா 10:23.
2 பரிகாரம்தான் என்ன? கடவுளுடைய ராஜ்யமே பரிகாரம். ஆகவே, அதற்காக இவ்வாறு ஜெபிக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய பரலோக ராஜ்யத்தை ‘புதிய வானங்கள்’ என 2 பேதுரு 3:13 விவரிக்கிறது; அது ‘புதிய பூமியை,’ அதாவது நீதியுள்ள மனித சமுதாயத்தை ஆட்சி செய்கிறது. கடவுளுடைய பரலோக ராஜ்யம் மிக முக்கியமானதாக இருப்பதால், இயேசு அதை தம் போதகத்தின் மையப் பொருளாக்கினார். (மத்தேயு 4:17) நம்முடைய வாழ்க்கையில் அது வகிக்க வேண்டிய பாகத்தை குறித்து அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.”—மத்தேயு 6:33.
3 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இப்போதே கற்றுக்கொள்வது மிக மிக அவசரம்; ஏனெனில் இந்தப் பூமியின் ஆட்சியை என்றென்றைக்குமாக மாற்றுவதற்கு அந்த ராஜ்யம் விரைவில் நடவடிக்கை எடுக்கும். தானியேல் 2:44 இவ்வாறு முன்னுரைக்கிறது: “அந்த ராஜாக்களின் [இப்போது ஆளும் அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை [மனிதர் மீண்டும் ஒருபோதும் பூமியை ஆளுவதில்லை]. . . . அது அந்த [தற்போதைய] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” இவ்வாறாக, இப்பொல்லாத ஒழுங்குமுறை முழுவதையும் அந்த ராஜ்யம் அழிப்பதன் மூலம் இந்தக் கடைசி நாட்களை முடிவுக்குக் கொண்டுவரும். அப்போது இந்தப் பூமியை ஆட்சி செய்யும் பரலோக ராஜ்யத்திற்கு எவ்வித எதிர்ப்புகளும் இராது. அது கொண்டுவரும் விடுதலை, இப்போது வெகு சமீபத்தில் இருப்பதால் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!
4 கிறிஸ்து 1914-ல் ராஜாவாக அமர்த்தப்பட்டார்; ‘[தம்முடைய] சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யவும்’ அதிகாரம் அளிக்கப்பட்டார். (சங்கீதம் 110:1, 2) அந்த வருடத்தில்தான் இப்பொல்லாத ஒழுங்குமுறையின் ‘கடைசி நாட்களும்’ ஆரம்பமாயின. (2 தீமோத்தேயு 3:1-5, 13) அதே சமயத்தில்தான், தீர்க்கதரிசன காட்சியில் தானியேல் கண்ட சம்பவங்களும் உண்மையில் பரலோகத்தில் நடந்தேறின. ‘நீண்ட ஆயுசுள்ளவராகிய’ யெகோவா தேவன், மனுஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு, “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி,” ‘ஆட்சியுரிமையையும் மாட்சிமையையும் அரசையும்’ வழங்கினார். தரிசனத்தில் கண்டதை தானியேல் இவ்வாறு எழுதினார்: “அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.” (தானியேல் 7:13, 14; பொ.மொ.) பரதீஸில் முதல் மனித பெற்றோரை குடிவைத்தபோது, அவர்கள் எண்ணிறந்த நல்ல காரியங்களை அனுபவித்து மகிழ வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கமாக இருந்தது. ஆகவே, நீதியை நேசிப்பவர்கள் கிறிஸ்து இயேசுவால் ஆளப்படும் இந்தப் பரலோக ராஜ்யத்தின் மூலமாக அவற்றை அனுபவிப்பதற்கு அவர் வாய்ப்பளிப்பார்.
5 அந்த ராஜ்யத்தின் உண்மைப் பற்றுறுதியுள்ள பிரஜையாக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், அந்தப் பரலோக ராஜ்யத்தின் அமைப்பையும் அது செயல்படும் விதத்தையும் அறிந்துகொள்ள அதிக ஆவலாய் இருப்பீர்கள். அது தற்போது என்ன செய்து வருகிறது, வருங்காலத்தில் என்ன செய்ய போகிறது, அது உங்களிடத்தில் எதை எதிர்பார்க்கிறது என்றெல்லாம் அறிந்துகொள்ள நீங்கள் விரும்புவீர்கள். அந்த ராஜ்யத்தைப் பற்றி அதிகமாக ஆராய ஆராய, அதனிடம் உங்கள் மதித்துணர்வும் அதிகரிக்க வேண்டும். அதன் ஆட்சியுரிமைக்கு ஆதரவு காட்டுவீர்களானால் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு கடவுளுடைய ராஜ்யம் செய்யப்போகும் அற்புதமான காரியங்களைப் பற்றி பிறருக்கு அறிவிக்க நீங்கள் அதிக தகுதி பெறுவீர்கள்.—சங்கீதம் 48:12, 13.
கடவுளுடைய ராஜ்யத்தின் ஆட்சியாளர்கள்
6 மேசியானிய ராஜ்யம் யெகோவாவுடைய பேரரசுரிமையின் வெளிக்காட்டு என்பதே அந்த ஆராய்ச்சி முதலில் வெளிப்படுத்தும் விஷயங்களில் ஒன்று. யெகோவாவே தம் குமாரனுக்கு “ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும்” வழங்கினார். ராஜாவாக ஆட்சியை தொடங்குவதற்கு கடவுளுடைய குமாரனுக்கு அதிகாரமளிக்கப்பட்ட பின்பு பரலோகத்திலிருந்து ஒலித்த சத்தம் பொருத்தமாகவே இவ்வாறு அறிவித்தது: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவா தேவனுக்கும்], அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் [யெகோவா] சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.” (வெளிப்படுத்துதல் 11:15) ஆகவே இந்த ராஜ்யத்தைக் குறித்து நாம் அறிந்துகொள்ளும் விஷயங்கள் அனைத்தும், அது நிறைவேற்றப்போகும் அனைத்தும் யெகோவாவிடமே நம்மை நெருங்கி வரச் செய்யும். நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் அவரது பேரரசுரிமைக்கு என்றென்றுமாக கீழ்ப்பட்டிருக்கும் ஆவலை நம்மில் ஏற்படுத்த வேண்டும்.
7 இயேசு கிறிஸ்துவை யெகோவா தம்முடைய துணை அரசராக முடிசூட்டியிருப்பதையும் கவனியுங்கள். பூமியையும் மனிதரையும் படைக்க கடவுள் பயன்படுத்திய கைதேர்ந்த வேலையாள் என்ற முறையில் இயேசுவுக்கு நம்முடைய தேவைகளைப் பற்றி மற்ற எவரையும்விட நன்றாகவே தெரியும். அதோடு, மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே, அவர் ‘மனுபுத்திரரின் மீது தம் பாசத்தை’ மெய்ப்பித்து காட்டியிருக்கிறார். (நீதிமொழிகள் 8:30, 31, NW; கொலோசெயர் 1:15-17) மனிதரிடம் அளவு கடந்த அன்பு இருந்ததால் அவரே பூமிக்கு வந்து நமக்காக தம் உயிரை மீட்கும் பொருளாக கொடுத்தார். (யோவான் 3:16) இவ்வாறு, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வழியையும், நித்திய ஜீவனைப் பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தார்.—மத்தேயு 20:28.
8 கடவுளுடைய ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் அரசாங்கமாகும். அது என்றென்றும் நிலைத்திருப்பது யெகோவா சாவைக் காண்பதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. (ஆபகூக் 1:12, NW) மனித அரசர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக, கடவுளிடமிருந்து ராஜ்யத்தைப் பெற்ற இயேசு கிறிஸ்துவும் சாவாமையுடையவர். (ரோமர் 6:9; 1 தீமோத்தேயு 6:15, 16) “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” வரும் கடவுளுடைய ஊழியர்களான உண்மைப் பற்றுறுதியுள்ள 1,44,000 பேரும் கிறிஸ்துவுடன் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார்கள். இவர்களுக்கும் அழிவில்லா வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-4; 1 கொரிந்தியர் 15:42-44, 53) இவர்களில் பெரும்பான்மையோர் ஏற்கெனவே பரலோகத்திற்கு சென்றுவிட்டார்கள், மீதியானோர் இன்னும் பூமியில் இருக்கிறார்கள். இந்த மீதியானோரே இன்றைய “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாராவர்; இவர்கள் ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களை முன்னின்று நடத்துகிறார்கள்.—மத்தேயு 24:45-47, NW.
9 வெகு சீக்கிரத்தில், தம் குறித்த காலத்தில், பூமியை சுத்திகரிப்பதற்கு தண்டனை தீர்ப்பை நிறைவேற்றும் தம் சேனைகளை யெகோவா அனுப்புவார். அவருடைய பேரரசுரிமையை ஏற்க மறுக்கிறவர்களையும் இயேசு கிறிஸ்துவின் மூலம் தருகிற அன்பான ஏற்பாடுகளை அவமதிக்கிறவர்களையும் அவை என்றென்றைக்கும் அழித்துவிடும். (2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10) அதுவே யெகோவாவின் நாள், அவரே சர்வலோகத்தின் பேரரசர் என நிரூபிப்பதற்கு வெகு காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட நாள். “இதோ, . . . பாவிகளை அதிலிருந்து [தேசத்திலிருந்து] அழிப்பதற்காகக் கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது.” (ஏசாயா 13:9) “அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.”—செப்பனியா 1:15.
10 இந்த உலகின் காணக்கூடாத பொல்லாங்கனால் அடக்கி ஆளப்படுகிற அனைத்து பொய் மதங்களும், மனித அரசாங்கங்களும், அவற்றின் படைத்துறைகளும் நித்தியத்துக்குமாக அழிக்கப்படும். சுயநலமான, நேர்மையற்ற, ஒழுக்கங்கெட்ட முறையில் வாழ்வதன் மூலம் இந்த உலகத்தாராக தங்களை அடையாளம் காட்டுகிறவர்கள் அனைவரும் அழிக்கப்படுவர். பூமியில் குடியிருப்பவர்களிடம் நெருங்க முடியாதபடிக்கு சாத்தானும் அவனுடைய பேய்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு செயலற்ற நிலையில் சிறைபடுத்தப்படுவார்கள். அப்போது பூமியின் விவகாரங்கள் அனைத்தும் கடவுளுடைய ராஜ்யத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும். நீதியை நேசிக்கும் அனைவருக்கும் அது எப்பேர்ப்பட்ட விடுதலை!—வெளிப்படுத்துதல் 18:21, 24; 19:11-16, 19-21; 20:1, 2.
ராஜ்யத்தின் குறிக்கோள்கள்—அடைவது எப்படி
11 பூமியைக் குறித்த கடவுளுடைய ஆரம்ப நோக்கத்தை மேசியானிய ராஜ்யம் முழுமையாக நிறைவேற்றும். (ஆதியாகமம் 1:28; 2:8, 9, 15) இந்நாள் வரையாக, அந்த நோக்கத்தை ஆதரிக்க மனிதகுலம் தவறியிருக்கிறது. என்றாலும், ‘இனிவரும் உலகம்’ மனுஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருக்கும். இந்தப் பழைய ஒழுங்குமுறைக்கு வரும் யெகோவாவின் தண்டனை தீர்ப்பிலிருந்து தப்பிப்பிழைக்கிற அனைவரும் அரசராகிய கிறிஸ்துவின் கீழ் ஒற்றுமையுடன் வேலை செய்வர்; இந்தப் பூமியை ஒரு பூகோள பரதீஸாக மாற்றுவதற்கு அவர் கட்டளையிடுகிற அனைத்தையும் அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்வர். (எபிரெயர் 2:5-9) அனைத்து மனிதரும் தங்கள் கரத்தின் கிரியையை மகிழ்வுடன் அனுபவிப்பர்; பூமி தரும் ஏராளமான விளைச்சலிலிருந்து முழுமையாக நன்மை அடைவர்.—சங்கீதம் 72:1, 7, 8, 16-19; ஏசாயா 65:21, 22.
12 ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டபோது அவர்கள் பரிபூரணராக இருந்தார்கள்; அவர்களுடைய சந்ததியாரால் பூமியை நிரப்பி, உடலிலும் உள்ளத்திலும் அனைவரும் பரிபூரணத்தை அனுபவிப்பதே பூமியைக் குறித்ததில் கடவுளுடைய நோக்கமாக இருந்தது. இந்த நோக்கம் ராஜ்ய ஆட்சியின்கீழ் மகத்தான விதத்தில் நிறைவேறும். அப்படியெனில் பாவத்தின் எல்லா பாதிப்புகளும் நீக்கப்பட வேண்டும்; இதற்காகவே கிறிஸ்து அரசராக மட்டுமல்ல பிரதான ஆசாரியராகவும் சேவிக்கிறார். தம்முடைய கீழ்ப்படிதலுள்ள குடிமக்கள், பாவநிவர்த்தி அளிக்கும் தம் சொந்த மனித உயிர்ப்பலியின் மதிப்பிலிருந்து நன்மை பெறுவதற்கு அவர் பொறுமையோடு உதவுவார்.
13 ராஜ்ய ஆட்சியில் பூமியின் குடிமக்கள் அற்புதமான சரீர நன்மைகளையும் அனுபவித்து மகிழ்வார்கள். “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:5, 6) முதுமையாலோ, வியாதியாலோ உருக்குலைந்துபோன மேனி குழந்தையின் மேனியைவிட புதுப்பொலிவுறும்; தீரா வியாதிகளும் நீங்கி துடிப்புமிக்க ஆரோக்கியம் கிடைக்கும். “அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.” (யோபு 33:25) அந்த நாள் வரும்போது “வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த காரணமும் இருக்காது. ஏன்? ஏனெனில் கடவுள் பயமுள்ளவர்கள் பாவத்தின் சுமையிலிருந்தும் அதன் பயங்கரமான பாதிப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருப்பர். (ஏசாயா 33:24; லூக்கா 13:11-13) ஆம், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
14 என்றாலும், பரிபூரணத்தை அடைவதற்கு குறைவற்ற உடலும் உள்ளமும் இருந்தால் போதாது. நாம் ‘கடவுளுடைய சாயலிலும், ரூபத்திலும்’ படைக்கப்பட்டிருப்பதால், அவருடைய பண்புகளை சரிவர வெளிக்காட்ட வேண்டும். (ஆதியாகமம் 1:26) அதற்கு அதிகளவு கல்வியறிவு தேவைப்படும். அதுமட்டுமல்ல, புதிய உலகில், “நீதி வாசமாயிருக்கும்.” ஆகவே, ஏசாயா முன்னறிவித்த விதமாகவே, “பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (2 பேதுரு 3:13; ஏசாயா 26:9) இப்பண்பு எல்லா இனத்தாரோடும், நெருங்கிய நண்பர்களோடும், குடும்பத்தாரோடும், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளோடும் சமாதானமாக இருப்பதற்கு வழிநடத்துகிறது. (சங்கீதம் 85:10-13; ஏசாயா 32:17) நீதியை கற்றுக்கொள்கிறவர்களுக்கு கடவுளுடைய சித்தத்தைப் பற்றி படிப்படியாக போதிக்கப்படும். யெகோவா மீதுள்ள அன்பு தங்கள் இருதயங்களில் ஆழமாக வேர்கொள்கையில் அவர்கள் அவருடைய வழிகளை தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பின்பற்றுவார்கள். ‘பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என இயேசு சொன்ன விதமாகவே அவர்களாலும் சொல்ல முடியும். (யோவான் 8:29) மனிதகுலம் அனைத்தும் அவ்வாறு செய்யும்போது வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்!
ஏற்கெனவே தெளிவாக தெரிகிற சாதனைகள்
15 கடவுளுடைய ராஜ்யமும் அதன் குடிமக்களும் சாதித்த சிறந்த சாதனைகள் தெள்ளத் தெளிவாக தெரிகின்றன. பின்வரும் கேள்விகளும் வசனங்களும் இந்த சாதனைகளில் சிலவற்றை உங்களுக்கு நினைப்பூட்டும்; அந்த ராஜ்யத்தின் குடிமக்கள் அனைவராலும் இப்போது செய்ய முடிகிற காரியங்களையும் அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களையும்கூட உங்களுக்கு நினைப்பூட்டும்.
முதலில் அந்த ராஜ்யம் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, அதன் விளைவு என்ன? (வெளிப்படுத்துதல் 12:7-10, 12)
கிறிஸ்து முடிசூட்டப்பட்டது முதற்கொண்டு எந்த வகுப்பாரின் மீதியானோரை கூட்டிச் சேர்ப்பதற்கு கவனம் செலுத்தப்படுகிறது? (வெளிப்படுத்துதல் 14:1-3)
மத்தேயு 25:31-33-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி மிகுந்த உபத்திரவத்திற்கு பின்பு இயேசு எந்த வேலையை செய்ய போவதாக முன்னறிவித்தார்?
என்ன ஆரம்ப வேலை இன்று நடைபெறுகிறது? அதில் பங்குகொள்கிறவர்கள் யார்? (சங்கீதம் 110:3; மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 14:6, 7)
மத, அரசியல் விரோதிகளால் இந்தப் பிரசங்க வேலையை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? (சகரியா 4:6; அப்போஸ்தலர் 5:38, 39)
ராஜ்ய ஆட்சிக்கு கீழ்ப்படிகிறவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன? (ஏசாயா 2:4; 1 கொரிந்தியர் 6:9-11)
ஆயிர வருட ராஜ்யம்
16 சாத்தானையும் அவனுடைய பேய்களையும் செயலற்ற நிலைக்குள்ளாக்கிய பின்பு, இயேசு கிறிஸ்துவும் அவருடைய உடன் சுதந்திரவாளிகளான 1,44,000 பேரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் ஆட்சி செய்வார்கள். (வெளிப்படுத்துதல் 20:6) அந்தக் காலப்பகுதியில் பாவமும், ஆதாமிலிருந்து சுதந்தரித்த மரணமும் என்றென்றைக்குமாக நீக்கப்பட்டு மனிதகுலம் பரிபூரண நிலைக்கு உயர்த்தப்படும். ஆயிர வருட ஆட்சியின் முடிவில், மேசியானிய அரசரும் ஆசாரியருமாய் இயேசு தம்முடைய நியமிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்பு, “தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு” தம் பிதாவிடம் ‘ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.’ (1 கொரிந்தியர் 15:24-28) அந்த சமயத்தில், மீட்கப்பட்ட மனிதகுலம் யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமைக்கு காட்டும் ஆதரவை சோதிக்க, சாத்தான் சிறிது காலத்திற்கு விடுதலை செய்யப்படுவான். கடைசி சோதனை முடிவடைந்த பின்பு, சாத்தானையும் அவன் பக்கம் சேர்ந்துகொண்ட கலகக்காரர்களையும் யெகோவா அழித்துவிடுவார். (வெளிப்படுத்துதல் 20:7-10) யெகோவாவின் பேரரசுரிமைக்கு—அவரது ஆளும் உரிமைக்கு—ஆதரவு காட்டுபவர்கள் தங்களது அசைக்க முடியாத உண்மைப் பற்றுறுதியை முழுமையாக மெய்ப்பித்து காட்டியிருப்பார்கள். அதற்குப்பின் குமாரரும் குமாரத்திகளுமாய் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு யெகோவாவுடன் சரியான உறவுக்குள் கொண்டுவரப்படுவார்கள்; நித்திய ஜீவனை அடைவதற்கான தெய்வீக அங்கீகாரத்தையும் பெறுவார்கள்.—ரோமர் 8:20.
17 அதன் பிறகு பூமி சம்பந்தப்பட்டதில் இயேசுவும், 1,44,000 பேரும் செய்து வந்த பணியில் மாற்றம் ஏற்படும். அடுத்து அவர்கள் என்ன பணியில் ஈடுபடுவார்கள்? பைபிள் அதைக் குறித்து சொல்வதில்லை. ஆனால் நாம் யெகோவாவின் பேரரசுரிமையை உண்மையுடன் ஆதரித்தால், அவர்களையும் பிரமிப்பூட்டும் பிரபஞ்சத்தையும் குறித்ததில் யெகோவாவின் நோக்கத்தைக் காண்பதற்கு ஆயிர வருட ஆட்சியின் முடிவில் உயிருடன் இருப்போம். இருந்தாலும், கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியுரிமை “என்றுமுளதாகும்”; அவரது ராஜ்யம் “அழிந்து போகாது.” (தானியேல் 7:14, பொ.மொ.) என்ன கருத்தில்? யெகோவாவே ஆட்சியாளராக இருப்பதால், வித்தியாசமான குறிக்கோள்களை உடையவர்களுக்கு இந்த ஆட்சியுரிமை வழங்கப்படுவதில்லை என்ற கருத்தில் அது அழியாது. மேலும் அந்த ராஜ்யத்தின் நிறைவேற்றங்கள் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் என்ற கருத்திலும் அது “அழிந்து போகாது.” (தானியேல் 2:44) மேசியானிய ஆசாரிய அரசரும் உடன் ஆசாரிய அரசர்களும் யெகோவாவை உண்மையோடு சேவித்ததற்காக நித்தியத்துக்குமாக கனப்படுத்தப்படுவார்கள்.
மறுபார்வை
• மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே பரிகாரமாக இருப்பது ஏன்? கடவுளுடைய ராஜ்யத்தின் அரசர் ஆட்சி செய்ய துவங்கியது எப்போது?
• கடவுளுடைய ராஜ்யத்தையும் அது சாதிக்கப்போகிறவற்றையும் குறித்ததில் உங்களை விசேஷமாக கவர்ந்தது எது?
• ராஜ்யத்தின் என்ன சாதனைகளை நாம் ஏற்கெனவே காணலாம், இதில் நம் பங்கு என்ன?
[கேள்விகள்]
1. உலக சம்பவங்கள் மனித சரித்திரம் முழுவதிலும் எதை பறைசாற்றியிருக்கின்றன?
2. மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு ஒரே பரிகாரம் எது?
3. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்றுக் கொள்வது ஏன் இப்போது மிக மிக அவசரம்?
4. ராஜ்யம் சம்பந்தமாக 1914-ல் பரலோகத்தில் என்ன நிகழ்ந்தது, அது நமக்கு ஏன் முக்கியம்?
5. ராஜ்யம் சம்பந்தப்பட்ட என்ன விஷயங்கள் நமக்கு அதிக அக்கறைக்குரியவை, ஏன்?
6. (அ) மேசியானிய ராஜ்யத்தின் மூலம் யாருடைய பேரரசுரிமை வெளிக்காட்டப்படுகிறது என்பதை வேதவசனங்கள் எப்படி காட்டுகின்றன? (ஆ) ராஜ்யத்தைப் பற்றி கற்றுக்கொள்வது நம்மை என்ன செய்ய தூண்ட வேண்டும்?
7. இயேசு கிறிஸ்து யெகோவாவின் துணை அரசர் என்பது நமக்கு ஏன் விசேஷித்த அக்கறைக்குரியது?
8. (அ) மனித ஆட்சிக்கு முற்றிலும் வேறுபட்டதாக, கடவுளுடைய அரசாங்கம் ஏன் நீடித்திருக்கும்? (ஆ) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” பரலோக அரசாங்கத்துடன் என்ன உறவை கொண்டிருக்கிறது?
9, 10. (அ) பிரிவினை உண்டாக்குவதும் கறைபடுத்துவதுமான என்ன செல்வாக்குகளை அந்த ராஜ்யம் ஒழித்துக் கட்டும்? (ஆ) கடவுளுடைய ராஜ்யத்தின் விரோதிகளாவதற்கு நாம் விரும்பவில்லை என்றால் என்ன கண்ணிகளை தவிர்க்க வேண்டும்?
11. (அ) பூமியைக் குறித்த யெகோவாவின் நோக்கத்தை மேசியானிய ராஜ்யம் எவ்வாறு நிறைவேற்றும்? (ஆ) அப்போது பூமியில் வாழ்பவர்களுக்கு ராஜ்ய ஆட்சி என்ன செய்யும்?
12. ராஜ்யத்தின் குடிமக்கள் உடலிலும் உள்ளத்திலும் பரிபூரணமாக்கப்படுவது எப்படி?
13. ராஜ்ய ஆட்சியில் என்னென்ன சரீர நன்மைகளை அனுபவித்து மகிழலாம்?
14. மனிதர் பரிபூரணத்தை அடைவதில் எது உட்பட்டுள்ளது?
15. இந்தப் பாராவில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்தி, ராஜ்யத்தின் சாதனைகளையும் நாம் இப்போது செய்ய வேண்டிய காரியங்களையும் சிறப்பித்துக் காட்டுங்கள்.
16. (அ) கிறிஸ்து எவ்வளவு காலத்திற்கு அரசாளுவார்? (ஆ) அப்போதும் அதன் பின்பும் என்னென்ன அற்புதமான காரியங்கள் நடக்கும்?
17. (அ) ஆயிரமாண்டின் முடிவில் ராஜ்யத்திற்கு என்ன சம்பவிக்கும்? (ஆ) அந்த ராஜ்யம் “அழிந்து போகாது” என்பதன் கருத்து என்ன?
[பக்கம் 92, 93-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தில் அனைவரும் நீதியை கற்றுக்கொள்வார்கள்