உத்தமத்தைக் காக்கும் ஜனம்
“உண்மையுள்ள நடத்தையைக் காக்கும் நீதியுள்ள ஜனம் உள்ளே பிரவேசிக்கும்படி . . . வாசல்களைத் திறவுங்கள்.”—ஏசாயா 26:2, NW.
1. ‘நீதியுள்ள ஜனத்தைப்’ பற்றிய ஏசாயாவின் கூற்று ஏன் ஆச்சரியமாக இருக்கலாம்?
இன்று, எல்லா ஜன வகையும் உள்ளன. சில குடியாட்சியைக் கொண்டவை, சில சர்வாதிகார ஆட்சியைக் கொண்டவை. சில செல்வம் மிகுந்தவை, சில ஏழ்மையானவை. ஒரு காரியம் எல்லாருக்கும் பொதுவாயுள்ளது: எல்லாம், சாத்தான் கடவுளாயிருக்கும் இந்த உலகத்தின் பாகமாயுள்ளன. (2 கொரிந்தியர் 4:4) இதைக் கருதுகையில், ஏசாயா பின்வருமாறு சொல்லும்போது, அவருடைய வார்த்தைகள் சிலருக்கு ஆச்சரியமுண்டாக்குவதாக இருக்கலாம்: ‘உண்மையுள்ள நடத்தையைக் காக்கும் நீதியுள்ள ஜனம் உள்ளே பிரவேசிக்கும்படி, மனிதரே நீங்கள் வாசல்களைத் திறவுங்கள்.’ (ஏசாயா 26:2, NW) நீதியுள்ள ஒரு ஜனமா? ஆம், நீதியுள்ள ஒரு ஜனம் இருக்கிறது, ஏனென்றால் நம்முடைய நாளில் அது இருப்பதைத் தீர்க்கதரிசனம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த அசாதாரணமான ஜனத்தை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளக்கூடும்?
2. இந்த “நீதியுள்ள ஜனம்” எது? நாம் எவ்வாறு அறிகிறோம்?
2 புதிய உலக மொழிபெயர்ப்பு ஏசாயா 26:2-ஐ மொழிபெயர்த்திருப்பதில், இந்த ஜனம் ‘உண்மையுள்ள நடத்தையைக் காப்பதாகச்’ சொல்லப்பட்டிருக்கிறது. கிங் ஜேம்ஸ் வர்ஷன் (ஓரக்குறிப்பு) இந்த வசனத்தை, “சத்தியங்களைக் கைக்கொள்ளும் நீதியுள்ள ஜனம்” என்று மொழிபெயர்க்கிறது. இரண்டும் பொருத்தமான விவரிப்புகளே. உண்மையில், இந்த நீதியுள்ள ஜனத்தை அடையாளம் கண்டுகொள்வது எளிது, ஏனெனில், பூமியில், அரசராகிய கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருக்கிற ஜனம் இது ஒன்றே, ஆகவே சாத்தானுடைய உலகத்தின் பாகமானதல்ல. (யோவான் 17:16, NW) இத்தகையதாக, இதன் உறுப்பினர் ‘ஜாதிகளுக்குள்ளே நல்நடக்கையைக் காத்துக்கொள்வோராக’ அறியப்படுகின்றனர். கடவுளை மகிமைப்படுத்தும் ஒரு வாழ்க்கைமுறையை அவர்கள் பின்பற்றுகின்றனர். (1 பேதுரு 2:12) மேலும், உலகத்தில் அவர்கள் எங்கிருந்தாலும், ‘ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறதன்’ பாகமாக உள்ளனர். (1 தீமோத்தேயு 3:15) சத்தியத்தை ஆதரிப்போராக அவர்கள், கிறிஸ்தவமண்டலம் கற்பிக்கும் புறமத தத்துவஞானங்களை மறுத்துத் தள்ளி, ‘திருவசனமாகிய—கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின்—களங்கமில்லாத ஞானப்பாலையே’ ஆதரிக்கின்றனர். (1 பேதுரு 2:3) மேலும், ராஜ்ய நற்செய்தியை “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” ஆர்வத்துடன் பிரசங்கிக்கின்றனர். (கொலோசெயர் 1:23) இந்த ஜனம், அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையாகிய ‘தேவனுடைய இஸ்ரவேலரின்’ மீதிபேராலாகியவர்கள் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்க முடியுமா? இல்லவேயில்லை!—கலாத்தியர் 6:16.
இந்த ஜனம் பிறந்திருக்கிறது
3. “நீதியுள்ள ஜனம்” எவ்வாறு பிறக்கலாயிற்றென்பதை விவரியுங்கள்.
3 இந்த “நீதியுள்ள ஜனம்” எப்போது பிறந்தது? இதன் தொடக்கம் ஏசாயாவின் புத்தகத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. ஏசாயா 66:7, 8-ல் நாம் வாசிப்பதாவது: “பிரசவவேதனைப்படுமுன் [சீயோன்] பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். . . . சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.” வழக்கத்துக்கு மிக மாறாக, கடவுளுடைய பரலோக அமைப்பாகிய சீயோன் கர்ப்ப வேதனைகளை அனுபவிப்பதற்கு முன்பாக ஓர் “ஆண்பிள்ளையை” பெறவேண்டியிருந்தது. 1914-ல் மேசியானிய ராஜ்யம் பரலோகங்களில் பிறப்பிக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 12:5) அதன் பின்பு முதல் உலகப் போர் அதிகமதிகமான தேசங்களை உட்படுத்தியது. அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் கடும் துயரத்தையும் துன்புறுத்தலையும் அனுபவித்தனர். முடிவில், 1919-ம் ஆண்டில், அந்த ‘ஆண்பிள்ளையாகிய’ ஆவிக்குரிய ஜனம் பூமியில் பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சீயோன், அந்தப் புதிய ‘நீதியுள்ள ஜனத்தின்’ அபிஷேகம் பண்ணப்பட்ட உறுப்பினர்களாகிய ‘தன் குமாரரைப் பெற்றது.’ இவர்கள் விரிவாகிக்கொண்டேயிருக்கும் சாட்சி வேலைக்கு ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டனர்.—மத்தேயு 24:3, 7, 8, 14; 1 பேதுரு 2:9.
4. கடவுளுடைய நீதியுள்ள ஜனம் உத்தமத்தைக் காப்பதற்கு ஏன் போராட வேண்டியிருந்தது?
4 அதன் தொடக்கத்திலிருந்தே, இந்த ஜனம், அதன் உத்தமத்தைப் பரீட்சிக்கும் கடும் சோதனைகளை எதிர்ப்பட்டிருக்கிறது. ஏன்? பரலோக ராஜ்யம் பிறப்பிக்கப்பட்டபோது, சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து கீழே இந்தப் பூமிக்குத் தள்ளப்பட்டனர். ஓர் உரத்தக் குரல் இவ்வாறு அறிவித்தது: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.” சம்பவங்கள் இவ்வாறு மாறினதன்பேரில் சாத்தான் மிகுந்த கோபங்கொண்டு செயல்பட்டு, “அவன் [ஸ்திரீயின்] சந்ததியாரில் மீதியானவர்களோடு யுத்தம்பண்ணப்போ[னான்]. இவர்கள் கடவுளின் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் இயேசுவின் சாட்சியத்தையுடையவர்களுமாம்.” சாத்தானின் கடும் தாக்குதல்களை எதிர்ப்பட்டும், அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் உறுதியாய் நிலைநின்றனர். இந்நாள்வரையாக, கடவுளுடைய நீதியுள்ள ஜனத்தின் ஆர்முள்ள உறுப்பினர், இயேசுவின் மீட்கும் இரத்தத்தில் விசுவாசம் காட்டி, ‘மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும்’ உத்தமத்தைக் காப்பதன்மூலமாக, அந்தப் பெரும் நிந்திப்பவனுக்குக் கொடுக்க யெகோவாவுக்கு ஒரு பதிலைத் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.—வெளிப்படுத்துதல் 12:1, 5, 9-12, 17; நீதிமொழிகள் 27:11.
5. தற்கால சாட்சிகளின் எந்தச் சிறந்த மனப்பான்மை உத்தமத்தைக் காக்கும்படி அவர்களுக்கு உதவிசெய்திருக்கிறது?
5 1919-ல், கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய தற்கால சாட்சி ஊழியம் தொடங்கப்பட்டபோது, பைபிள் மாணாக்கர் என்று அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள், எண்ணிக்கையில் சொற்பப்பேரே இருந்தனர் ஆனால் விசுவாசத்தில் உறுதியாயிருந்தனர். அவர்கள் ‘இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாகக் கொண்ட பலத்த நகரத்தின்’ அஸ்திபார உறுப்பினராயினர். அவர்களுடைய நம்பிக்கை ‘வரையறையில்லா காலங்களின் அந்தக் கற்பாறையாயிருக்கிற யா யெகோவாவில்’ இருந்தது. (ஏசாயா 26:1, 3, 4, NW) பூர்வகால மோசேயைப்போல், அவர்கள்: “யெகோவா திருநாமம் பிரசித்தம்பண்ணுவேன்; நமது கடவுளுக்கு மகத்துவம் செலுத்துக. அவரே கன்மலை, அவர் செயல் உத்தமம்; அவர் வழிகளெல்லாம் நியாயம். நம்பத்தக்க கடவுள் அவரே; மோசஞ்செய்யார். அவர் நீதியும் நேர்மையுமுள்ளவர்” என்று யாவரறிய அறிவித்தனர்.—உபாகமம் 32:3, 4, தி.மொ.
6. எவ்வகையில் யெகோவா தம்முடைய ஜனத்தை இந்தக் கடைசி நாட்களில் ஆசீர்வதித்திருக்கிறார்?
6 அப்போதிருந்து, கடவுளுடைய ராஜ்ய ஏற்பாட்டின் வாசல்கள் விரிவாய்த் திறந்தவையாகத் தொடர்ந்திருந்து வந்திருக்கின்றன. முதலாவதாக, அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களான 1,44,000 பேரின் மீதிபேர் கூட்டிச்சேர்க்கப்பட்டனர், இப்போது ‘மற்றச் செம்மறியாடுகளின்’ ஒரு திரள் கூட்டத்தார் யெகோவாவின் ராஜ்ய நோக்கங்களை யாவரறிய அறிவிப்பதில் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். (யோவான் 10:16, NW) ஆகவே, மகிழ்ச்சியுடன் இவ்வாறு அறிவிக்கலாம்: “யெகோவாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; இந்த ஜாதியைப் பெருகப்பண்ணி உமது மகத்துவத்தை விளங்கச்செய்தீர், தேசத்தின் எல்லையை எப்புறமும் நெடுந்தூரம் அகலமாக்கினீர்.” (ஏசாயா 26:15, தி.மொ.) இன்று உலகப் பிராந்தியத்தை நாம் கவனித்துப் பார்க்கையில், அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையாயிருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம்! வந்துகொண்டிருக்கும் கிறிஸ்துவின் ராஜ்யத்தைப் பற்றிய சாட்சி, பரிசுத்த ஆவியின் வல்லமையால், ‘பூமியின் மிகத் தொலைதூரப் பாகம் வரையாகக்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. (அப்போஸ்தலர் 1:8, NW) அது விரிவாகியுள்ள பரப்பளவை, 12-லிருந்து 15 வரையான பக்கங்களில் காணும், உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 1994 ஊழிய ஆண்டு அறிக்கையிலிருந்து மதிப்பிடலாம்.
பிரஸ்தாபிகளின் ஒரு புதிய உச்சநிலை
7, 8. (அ) கடவுளுடைய ஜனங்கள் ‘தங்கள் கூடாரக் கயிறுகளை நீளமாக்கியிருக்கின்றனர்’ என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது? (ஆ) 1994-ன் ஊழிய ஆண்டு அறிக்கையைப் பார்க்கையில், எந்தப் பகுதிகள் சிறந்த முறையில் ‘தங்கள் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டிருப்பதைக்’ காண்கிறீர்கள்?
7 இந்த அறிக்கையின் சிறப்புக்குறிப்புகள் சிலவற்றைக் கவனியுங்கள். வெளி ஊழியத்தில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை 49,14,094 எண்ணிக்கையை எட்டிற்று! இடைவிடாது கூட்டிச்சேர்க்கப்பட்டு வரும் “திரள்கூட்டம் . . . சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலுமிருந்து வந்தவர்கள். வெள்ளையங்கிகளைத் தரித்து . . . சிங்காசனத்திற்கு முன்னும் ஆட்டுக்குட்டிக்கு முன்னும் நின்றுகொண்டி”ருப்பதைக் கவனிப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது! ஆம், இவர்களுங்கூட உத்தமத்தைக் காப்போராக நிரூபித்திருக்கின்றனர். “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்,” இயேசுவின் மீட்பின் கிரய பலியில் விசுவாசம் காட்டுவதனால் நீதிமான்களாகக் கருதப்படுகின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:9 (தி.மொ.), 14.
8 “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து,” என்ற கட்டளை, யெகோவாவின் அமைப்புக்கு, முக்கியமாய் 1919 முதற்கொண்டே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. (ஏசாயா 54:2) இதற்குக் கீழ்ப்படிதலாக, பிரசங்க ஊழியம் அலாஸ்காவின் எல்லையிலுள்ள பனிமூடிய யுகானிலுங்கூட முழு ஆற்றலுடன் தொடர்ந்து செய்யப்படுகிறது. அங்கே திடத்துணிவுள்ள பயனியர்களின் ஒரு தொகுதியினர், ஒரே சமயத்தில் பல வாரங்கள், 0 டிகிரி செல்ஷியஸுக்குக் கீழ் 45-லிருந்து 50 டிகிரிகள் குறைவாயிருக்கக்கூடிய குளிர்நிலையைச் சகிக்கின்றனர். சமீப ஆண்டுகளில், தொடர்ந்து கூட்டம் கூட்டமாக ஜனங்கள், உத்தமத்தைக் காக்கும் யெகோவாவின் ஜனத்தோடு கூடிவந்து சேர்ந்துகொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவமண்டலத்துக்குப் புறம்பான ஆசிய நாடுகளிலிருந்தும், முன்னாள் கம்யூனிஸ கட்டுப்பாட்டு அரண்களிலிருந்தும், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலிருந்தும், இத்தாலி, ஸ்பெய்ன், போர்த்துகல், தென் அமெரிக்கா போன்ற கத்தோலிக்க ஆதிக்கத்தைக் கொண்ட நாடுகளிலிருந்தும் வரும் இவர்களை ஏற்றுக்கொள்வதற்கு வாசல்கள் மேலும் விரிவாகத் திறக்கப்பட்டிருக்கின்றன. வேறு எல்லைக்குள் வந்திருக்கிற ஆட்கள் மற்றொரு பிராந்தியத்தைத் திறந்திருக்கின்றனர். உதாரணமாக, இங்கிலாந்தில், 13 அந்நிய மொழி மரபினத் தொகுதிகளின் தேவைகளைச் சாட்சிகள் கவனித்து வருகின்றனர்.
“இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருங்கள்”
9. (அ) 1994-ல் நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களின் எண்ணிக்கை எதைக் காட்டுகிறது? (ஆ) நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோரின் பொதுநிலை மிஞ்சிய எண்ணிக்கைகளைக் கொண்ட சில நாடுகள் யாவை?
9 வருடாந்தர அறிக்கையின் மற்றொரு சிறப்புக் குறிப்பு நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கையாகும். இயேசு தாம் மரிக்கவிருந்ததற்கு முன்பு, தம்முடைய மரணத்தை நினைவுகூரும் இந்த ஆசரிப்பைத் தொடங்கி வைத்து: ‘என்னை நினைவுகூரும்படிக்கு இதைத் தொடர்ந்து செய்யுங்கள்’ என்று கூறினார். (1 கொரிந்தியர் 11:24, NW) 1994-ல் 1,22,88,917 பேர்—செயல்படும் பிரஸ்தாபிகளின் இரட்டிப்பான எண்ணிக்கையைப் பார்க்கிலும் மிகப் பலர்—பங்குகொள்வோராகவோ கூர்ந்து கவனிப்போராகவோ அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஒன்றுகூடி வந்ததைக் காண்பது கிளர்ச்சியூட்டுவதாயிருந்தது. சில நாடுகளில் நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களின் எண்ணிக்கை பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் அதிகமாயிருந்தது. எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியாவிலுள்ள 4,049 பிரஸ்தாபிகள், 12,876 பேர் நினைவு ஆசரிப்புக்கு வந்ததில் மகிழ்ந்தனர், இது பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் மூன்று மடங்கு அதிகம். பெனினில் நினைவு ஆசரிப்புக்கு வந்த 16,786 பேர், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் ஏறக்குறைய ஐந்து மடங்கைக் குறித்தனர். ஏறக்குறைய 45 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு சபையில் 831 பேர் வந்திருந்தனர்!
10. (அ) நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களின் உயர்ந்த எண்ணிக்கை என்ன பொறுப்பை நம்மீது வைக்கிறது? (ஆ) ஞாபகார்த்த ஆசரிப்புக்கு வந்த ஒருவர் மேலுமான உதவியைப் பெறுகையில் என்ன நடக்கக்கூடும் என்பதை விவரியுங்கள்.
10 அக்கறை காட்டும் ஆட்களாகிய அத்தனை மிகப் பலர், அந்த உகந்த நிகழ்ச்சியில் தங்களோடு சேர்ந்துகொண்டதன்பேரில் யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியடைகின்றனர். இப்போது இவர்கள் சத்தியத்தைப்பற்றிய தெளிந்துணர்விலும் அன்பிலும் மேலுமாக முன்னேறும்படி, உதவிசெய்ய அவர்கள் விரும்புகின்றனர். ரஷ்யாவிலுள்ள ஆல்லாவைப்போல் சிலர் சாதகமாகப் பிரதிபலிக்கலாம். விசேஷித்தப் பயனியர் சகோதரி ஒருவரோடு ஆல்லா படித்துக்கொண்டிருந்தாள் ஆனால் அதிகம் முன்னேறவில்லை, ஆகவே படிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஆல்லா நினைவு ஆசரிப்புக்கு வரும்படியான ஓர் அழைப்பை ஏற்றாள். அவ்வளவு உட்கருத்தைக்கொண்ட அந்தக் கூட்டம் அவள் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, அவள் தன் புனித உருவச் சிலைகள் எல்லாவற்றையும் வீசியெறிந்துவிட்டு, உதவிக்காக யெகோவாவிடம் ஜெபித்தாள். இரண்டு நாட்களுக்குப் பின்பு அந்தப் பயனியர் சகோதரி, நினைவு ஆசரிப்பை ஆல்லா எவ்வாறு மகிழ்ந்தனுபவித்தாள் என்பதைக் காண அவளைப் பார்க்க வந்தாள். பயன்தரும் கலந்தாலோசிப்பு நடந்தது. ஆல்லாவின் படிப்பு திரும்பத் தொடங்கப்பட்டது. சீக்கிரத்தில் அவள் சாட்சிபகரும் ஊழியத்தில் பங்குகொண்டாள். இந்த அனுபவமானது, நினைவு ஆசரிப்புக்கு வருவோரைத் திரும்பச் சென்று சந்திப்பதன் பயன்மதிப்பைக் காட்டுகிறது. ஆல்லா செய்ததுபோல் பலர் ஆதரவாகச் செயல்படலாம்.
‘சபைகூடிவருதலை விட்டுவிடாமல்’
11-13. (அ) எது நீதியுள்ள ஜனத்தினுடைய உண்மையுள்ள நடத்தையின் பாகமாக உள்ளது? (ஆ) ஏன் கூட்டங்களுக்கு வருவது உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அவசியமானது?
11 ஞாபகார்த்த ஆசரிப்பு, யெகோவாவின் சாட்சிகளின் காலண்டரில் மிக அதிக முக்கியமானக் கூட்டமாகக் குறிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அதுவே ஒரே கூட்டம் அல்ல. அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதலாக, யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு வாரமும் கூடிவருகின்றனர்: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்துச் சபைகூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவு அதிகமாய் உற்சாகப்படுத்தக்கடவோம்.” (எபிரெயர் 10:24, 25, தி.மொ.) அதன் உண்மையுள்ள நடத்தையால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிற யெகோவாவின் நீதியுள்ள ஜனத்துடன் அவர்கள் கூட்டுறவு உடையவர்கள். உண்மையுள்ள நடத்தை உண்மையுடன் கூட்டங்களுக்கு வருவதையும் உட்படுத்துகிறது.
12 பிலிப்பைன்ஸில் இது நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அங்கே நாடெங்கும் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்கு வருவோரின் சராசரி எண்ணிக்கை, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையின் 125 சதவீதமாக உள்ளது. அர்ஜன்டினாவிலுள்ள சாட்சிகளின் ஒரு தொகுதியாலும் அக்கறைகாட்டும் ஆட்களாலுங்கூட இது நன்றாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள், ராஜ்ய மன்றத்திலிருந்து ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தூரத்தில் வாழ்கின்றனர். இருப்பினும், நோய்ப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, அவர்களில் ஒருவரும் ஒருபோதும் கூட்டங்களுக்கு வரத் தவறுவதில்லை. ஒற்றைக் குதிரைவண்டியில் அல்லது குதிரைமீது நான்கு மணிநேரங்கள் பயணப்படுகின்றனர், பனிக்காலத்தில் இரவின் இருளினூடே வீட்டுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.
13 இந்த ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவருகையில், வாழ்க்கை கடினமாகிக்கொண்டிருக்கிறது, பிரச்சினைகள் பெருகுகின்றன, கூட்டங்களுக்குத் தவறாமல் வருவது அதிகப்படியானச் சவாலாக இருக்கலாம். ஆனால் அத்தகைய சூழ்நிலைமைகளில், அப்படிப்பட்ட கூட்டங்களில் மாத்திரமே கண்டடையக்கூடிய ஆவிக்குரிய உணவும் அன்பான கூட்டுறவும் முன்னொருபோதும் இராத முறையில் அதிகமாய்த் தேவைப்படுகின்றன.
‘அதில் அவசரமாக ஈடுபடுங்கள்’
14. யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ஊழியத்தைக் குறித்ததில் ஏன் ஓர் அவசர உணர்வுடையோராக இருக்கின்றனர், என்ன பலன்கள் இதை மெய்ப்பித்துக் காட்டுகின்றன?
14 சென்ற ஆண்டில், இத்தாலியிலுள்ள கத்தோலிக்க சபை, யெகோவாவின் சாட்சிகளின் ஊழியத்தைக் “காட்டுமிராண்டித்தனமான மதமாற்றஞ்செய்தல்” எனக் குறிப்பிட்டது. எனினும் உண்மையில், சாட்சிகள் செய்யும் ஊழியத்தைப் பற்றியதில் காட்டுமிராண்டித்தனம் எதுவும் இல்லை. மாறாக, அவர்களுடைய ஊழியம் தங்கள் அயலாரின்பேரிலுள்ள ஆழ்ந்த அன்பின் ஒரு வெளிக்காட்டாக உள்ளது. மேலும் பவுலின் பின்வரும் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதன் ஒரு அத்தாட்சியாகவும் உள்ளது: “வார்த்தையைப் பிரசங்கி, ஆதரவான காலத்திலும் தொந்தரவான காலத்திலும் அதில் அவசரமாக ஈடுபடு.” (2 தீமோத்தேயு 4:2, NW) ஓர் அவசர உணர்வு யெகோவாவின் சாட்சிகளைத் தங்கள் ஊழியத்தில் ஆர்வமுள்ளோராக இருக்கும்படி தூண்டியியக்குகிறது. இது 1994-ல் அவர்கள் தங்கள் அயலாருக்குப் பிரசங்கிப்பதிலும், மறுசந்திப்புகள் செய்வதிலும், வாரந்தோறும் 47,01,357 பைபிள் படிப்புகள் நடத்துவதிலும் மொத்தம் 109,60,65,354 மணிநேரங்கள் செலவிட்டதில் காணப்படுகிறது. பலர் பயனியர் சேவையில் பங்குகொள்வோராக இருந்தனர். இது பயனியர் மனப்பான்மை நன்றாய்ச் செழித்தோங்குகிறதென்று காட்டுகிறது. உலகமெங்கும் சராசரி 6,36,202 பயனியர்கள் இருப்பது இதை நிரூபிக்கிறது.
15, 16. (அ) எவ்வாறு இளைஞரும் முதியோரும் பயனியர் மனநிலையைக் காட்டியுள்ளனர்? (ஆ) 1994 ஊழிய ஆண்டு அறிக்கையில் தனி நாடுகளைக் கவனிக்கையில், பயனியர்களின் சிறந்த எண்ணிக்கைகளை எங்கே காண்கிறீர்கள்?
15 அந்தப் பயனியர்கள் மத்தியில் இளைஞர் பலர் இருக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களிலுள்ள சிலர், உயர்நிலைப் பள்ளி படிப்பின்போது, தங்கள் வகுப்புத் தோழர்களையே முக்கிய பிராந்தியமாகக் கொண்டு ஒழுங்கான பயனியராக இப்போது சேவித்துக்கொண்டிருக்கின்றனர். அந்நாட்டிலுள்ள பள்ளிகள் பலவற்றில் பரவியிருந்துவரும் போதைப் பொருட்கள், ஒழுக்கக்கேடு மற்றும் வன்முறைச் செயல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு பயனியர் சேவையே மிகச் சிறந்த வழியென இந்த இளைஞர் கண்டிருக்கின்றனர். வேறு பல இளைஞர், தங்கள் பள்ளிப் படிப்பை முடிக்கையில் பயனியர் சேவையைத் தங்கள் இலக்காகக் கொண்டுள்ளனர். உக்ரேனில் ஐரீனா, தன் பள்ளிப் படிப்பில் தேறி முடிந்தப் பின்பு பயனியர் சேவை செய்வதற்குத் தன்னை ஆயத்தம் செய்யும்படி, தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு கால முழுவதிலும் துணைப் பயனியர் சேவை செய்துகொண்டிருந்தாள். தன் பள்ளிப் படிப்பை முடித்தபோது, ஒழுங்கானப் பயனியர் சேவையில் அவள் தன் குடும்பத்தாரைப் பிரதிநிதித்துவம் செய்யும்படி, உலகப்பிரகாரமான வேலையைக் குறித்தவரையில் அவளுடைய குடும்பம் அவளோடு ஒத்துழைக்க முன்வந்தனர். பொருளாதாரத்தைக் குறித்ததில், உக்ரேனில் காரியங்கள் எளிதாக இல்லை. ஆனால் ஐரீனா சொல்வதாவது: “எனக்கு மட்டுமேயல்ல நான் பிரசங்கிப்போருக்குங்கூட உயிரைக் குறிக்கிற ஓர் ஊழியத்தை செய்கிறேனென்று அறிந்திருக்கிறேன்.” இன்று இளைஞரான மிகப் பலர் ஐரீனாவைப்போல் சிந்திப்பதைக் காண்பது உண்மையாகவே மகிழ்ச்சியாயுள்ளது. ‘தங்கள் வாலிபப்பிராயத்திலே தங்கள் சிருஷ்டிகரை நினைப்பதற்கு’ இதைப் பார்க்கிலும் மேம்பட்ட வழி அவர்களுக்கு என்ன இருக்கிறது?—பிரசங்கி 12:1.
16 பயனியர்கள் பலர் வயது முதிர்ந்தவர்களாக இருக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின்போது தன் தகப்பனும் சகோதரனும் அந்தப் போரில் ஈடுபட்டிருக்கையில் கொல்லப்பட்டனரென்றும், தன் தாயும் சகோதரியும் யூதர்கள் குடியிருப்பில் சுட்டுக்கொல்லப்பட்டனரென்றும் ஒருவர் அறிவிக்கிறார். பின்னால் தன் மகனை இழந்தாள். இப்போது, தன் உடல் தளரும் ஆண்டுகளில் சுகவீனத்தை அனுபவிக்கிறாள். அவள் இழந்த குடும்பத்தைப் பார்க்கிலும் மிகப் பெரிய குடும்பத்தைக் கிறிஸ்தவ சபையில் யெகோவா அவளுக்குக் கொடுத்திருக்கிறார். மேலும் ஒழுங்கான பயனியராக மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் அவள் மகிழ்ச்சியைக் கண்டடைகிறாள்.
17, 18. பயனியராக இருந்தாலும் இல்லாவிடினும், நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு பயனியர் மனப்பான்மையைக் காட்டலாம்?
17 நிச்சயமாகவே, எல்லாரும் பயனியர்களாயிருக்க முடியாது. யெகோவா முழுமையான தசமபாகத்தை ஏற்கிறார், நம்முடைய தனிப்பட்ட காரியத்தில் இது என்னவாயினும், நாம் செலுத்தக்கூடிய மிகச் சிறந்ததை அவர் ஏற்கிறார். (மல்கியா 3:10) நிச்சயமாகவே, நாம் எல்லாரும் இந்த ஆர்வமுள்ள பயனியர்களின் மனப்பான்மையை வளர்த்து, நற்செய்தியைப் பிரசங்கிப்பதை முன்னேறச் செய்ய நம்முடைய சூழ்நிலைமைகள் அனுமதிக்கும் எல்லாவற்றையும் செய்யலாம்.
18 உதாரணமாக, ஆஸ்திரேலியாவில், தெரு ஊழியம் செய்வதற்கு ஒரு விசேஷித்தத் தினமாக ஏப்ரல் 16 ஒதுக்கி வைக்கப்பட்டது. அந்த மாதத்துக்குரிய புதிய பிரஸ்தாபி உச்சநிலை 58,780 ஆக இருந்ததில் காட்டப்பட்டபடி, பிரஸ்தாபிகளும் பயனியர்களும் அதை நன்றாய் ஆதரித்தனர். மேலும், அதே மாதத்துக்குரிய முந்திய ஆண்டைவிட 90,000 அதிகப்படியான பத்திரிகைகள் அளிக்கப்பட்டன. அந்த விசேஷித்த நாளில், ஒரு சகோதரி ஒரு மனிதனிடம் பத்திரிகைகளை அளித்து, அந்த அக்கறையை வளர்க்க மறுசந்திப்பு செய்யும்படி அவருடைய பெயரையும் விலாசத்தையும் எழுதுகையில், தாங்கள் உறவினரென்று கண்டுபிடித்தாள்! அவர்கள் சித்தி, பெரியம்மா பிள்ளைகளாக இருந்தார்கள். 30 ஆண்டுகளாக அவர்கள் ஒருவரையொருவர் காணவில்லை. அது நிச்சயமாகவே மிக சந்தோஷமுள்ள மறுசந்திப்புகளுக்கு வழியைத் திறந்தது!
முடிவுவரை உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
19. யெகோவாவின் நீதியுள்ள ஜனம் முடிவுவரை உத்தமத்தைக் காப்பது ஏன் அவசரம்?
19 சாத்தானின் உலகம் அதன் முடிவான மரண வேதனைகளுக்கு உட்படுகையில், கடவுளுடைய நீதியுள்ள ஜனத்தார் எல்லாரும் தொடர்ந்து உத்தமத்தைக் காத்துவர வேண்டியது அவசரம். சீக்கிரத்தில், யெகோவாவின் பரிசுத்த ஜனம் இந்த அழைப்பைக் கேட்கும்: “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே புகுந்து உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.” இரத்தப்பழியையுடைய இந்த உலகம் தவிர்க்கமுடியாதபடி கடவுளின் ஆக்கினைத்தீர்ப்பை எதிர்ப்படும். “இதோ, பூமியில் குடியிருப்போரின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களைத் தண்டிப்பதற்கு யெகோவா தமது ஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டு வருகிறார்; பூமி தன்னில் சிந்துண்ட இரத்தத்தை மறையாதிருக்கும்; தன்னிடத்தில் கொல்லப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.” (ஏசாயா 26:20, 21, தி.மொ.) யெகோவாவின் நீதியுள்ள ஜனத்தோடு கூட்டுறவு உடைய உத்தமத்தைக் காக்கும் கிறிஸ்தவராக நாம் ஒவ்வொருவரும் உறுதியாய் நிலைநிற்போமாக. அப்போது கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய அல்லது பரலோக ஆட்சி எல்லையில் நித்திய ஜீவனை அடைவதில் களிகூருவோம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ “நீதியுள்ள ஜனம்” எப்போது பிறந்தது?
◻ இந்தக் கடைசி நாட்களின்போது கடவுளுடைய ஜனங்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை தேவைப்பட்டது?
◻ 1994 ஊழிய ஆண்டு அறிக்கையில் காணப்படுகிற பிரஸ்தாபிகளின் மற்றும் ஊழியத்தில் செலவிட்ட மணிநேரங்களின் உயர்ந்த எண்ணிக்கையால் எது மெய்ப்பித்துக் காட்டப்படுகிறது?
◻ இந்த உலகம் அதன் முடிவை நெருங்குகையில் கூட்டங்களுக்கு வருவது ஏன் அவ்வளவு முக்கியம்?
◻ கடவுளுடைய நீதியுள்ள ஜனத்தோடு கூட்டுறவுடைய எல்லாரும் ஏன் உத்தமத்தைக் காக்கவேண்டும்?
[பக்கம் 12-15-ன் வரைப்படம்]
உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய 1994 ஊழிய ஆண்டின் அறிக்கை
(See printed magazine)
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவின் நீதியுள்ள ஜனத்தில் உத்தமத்தைக் காப்போர் பரிபூரண நிலையில் நித்திய ஜீவனை அடைவர்