படிப்புக் கட்டுரை 29
மிகுந்த உபத்திரவம்—சந்திக்க நீங்கள் தயாரா?
‘நீங்கள் தயாராக இருங்கள்.’—மத். 24:44.
பாட்டு 150 மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
இந்தக் கட்டுரையில்...a
1. பேரழிவுகள் வருவதற்கு முன்னாடியே தயாராக இருப்பது ஏன் புத்திசாலித்தனம்?
தயாராக இருப்பது உயிரைக் காப்பாற்றும். உதாரணமாக, யாரெல்லாம் ஒரு பேரழிவு வருவதற்கு முன்னாடியே தயாராக இருக்கிறார்களோ, அவர்கள் அதிலிருந்து தப்பிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களுக்கும் அவர்களால் உதவ முடியும். “முன்பே தயாராக இருப்பது உயிரைப் பாதுகாக்கும்” என்று ஐரோப்பாவில் இருக்கிற ஒரு சேவை அமைப்பு சொல்கிறது.
2. மிகுந்த உபத்திரவத்தைச் சந்திக்க நாம் ஏன் தயாராக இருக்க வேண்டும்? (மத்தேயு 24:44)
2 திடீர் என்று “மிகுந்த உபத்திரவம்” தொடங்கும். (மத். 24:21) பொதுவாக, பேரழிவுகள் வரப்போவது யாருக்கும் தெரியாது. ஆனால், மிகுந்த உபத்திரவம் வரப்போவது தெரியும். அதைச் சந்திக்கத் தயாராக இருக்கச் சொல்லி கிட்டத்தட்ட 2,000 வருஷத்துக்கு முன்னாடியே இயேசு எச்சரித்தார். (மத்தேயு 24:44-ஐ வாசியுங்கள்.) நாம் தயாராக இருந்தால் அந்தக் கஷ்டமான காலத்தைத் தாண்டுவது சுலபம். அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கும் கைகொடுத்து உதவ முடியும்.—லூக். 21:36.
3. மிகுந்த உபத்திரவத்தை சந்திக்க நாம் தயாராக இருப்பதற்கு சகிப்புத்தன்மையும் கரிசனையும் அன்பும் எப்படி உதவி செய்யும்?
3 மிகுந்த உபத்திரவத்தை சந்திக்கத் தயாராவதற்கு நமக்கு மூன்று குணங்கள் உதவும். கடுமையான நியாயத்தீர்ப்பு செய்தியை சொல்லச் சொல்லும்போதும், அப்படிச் சொல்வதால் எதிரிகள் நம்மை எதிர்க்கும்போதும் நாம் என்ன செய்வோம்? (வெளி. 16:21) யெகோவா நம்மைப் பாதுகாப்பார் என்று அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்றால் நமக்குச் சகிப்புத்தன்மை தேவைப்படும். நம்முடைய சகோதர, சகோதரிகள் அவர்களுடைய பணம் பொருளை இழந்து நிற்கும்போது, ஒருவேளை எல்லாமே போய்விடும்போது, என்ன செய்வோம்? (ஆப. 3:17, 18) அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவதற்கு நமக்குக் கரிசனை தேவைப்படும். தேசங்களுடைய கூட்டணி நடத்துகிற தாக்குதலால், ஒருவேளை நம் சகோதர சகோதரிகளுடன் கொஞ்ச காலத்துக்கு ஒன்றாகக் கூடியிருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வோம்? (எசே. 38:10-12) அந்தக் கஷ்டமான சூழ்நிலையைக் கடந்து வருவதற்கு சகோதர, சகோதரிகள்மீது நமக்குப் பலமான அன்பு தேவைப்படும்.
4. சகிப்புத்தன்மை, கரிசனை, அன்பு என்ற இந்த மூன்றும் நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்கள் என்று பைபிளில் இருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
4 சகிப்புத்தன்மையையும் கரிசனையையும் அன்பையும் நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. “சகித்திருப்பதன் மூலம் உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வீர்கள்” என்று லூக்கா 21:19 சொல்கிறது. ‘கரிசனையை . . . அணிந்துகொள்ளுங்கள்’ என்று கொலோசெயர் 3:12-ன் அடிக்குறிப்பில் பார்க்கிறோம். “ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி நீங்களே கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் . . . சகோதரர்களே, அதை இன்னும் அதிகமாகக் காட்டும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம்” என்று 1 தெசலோனிக்கேயர் 4:9, 10-ல் படிக்கிறோம். இந்த வார்த்தைகள் யாருக்காக எழுதப்பட்டவை? ஏற்கெனவே சகிப்புத்தன்மையையும் கரிசனையையும் அன்பையும் காட்டிவந்த சீஷர்களுக்காக எழுதப்பட்டவை. அவர்கள் தொடர்ந்து இந்தக் குணங்களை எல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. நாமும் இன்று அதைத்தான் செய்ய வேண்டும். அதற்கு, ஆரம்ப காலத்தில் வாழ்ந்த அந்தக் கிறிஸ்தவர்கள் எப்படி இந்த ஒவ்வொரு குணத்தையும் காட்டினார்கள் என்று நாம் பார்க்கலாம். அதற்குப் பிறகு, நாம் எப்படி அவர்களைப் போலவே நடந்துகொள்ளலாம் என்றும், மிகுந்த உபத்திரவத்தை சந்திக்கத் தயாராக இருக்கலாம் என்றும் பார்க்கலாம்.
உங்கள் சகிப்புத்தன்மையை பலப்படுத்துங்கள்
5. ஆரம்பகால கிறிஸ்தவர்கள், அவர்களுக்கு வந்த சோதனைகளை எப்படி சகித்திருந்தார்கள்?
5 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் சகித்திருக்க வேண்டியிருந்தது. (எபி. 10:36) எல்லாருக்கும் பொதுவாக வரும் பிரச்சினைகளோடு சேர்த்து அவர்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் வந்தது. அவர்களில் நிறைய பேர் துன்புறுத்தப்பட்டார்கள். யூத மதத் தலைவர்களும் ரோம அதிகாரிகளும் மட்டுமல்ல, அவர்களுடைய சொந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களை துன்புறுத்தினார்கள். (மத். 10:21) சபைக்கு உள்ளேயும், பிரிவினை உண்டாக்குகிற விசுவாச துரோகிகளுடைய கருத்துகளை எதிர்த்து அவர்கள் போராட வேண்டியிருந்தது. (அப். 20:29, 30) இருந்தாலும், இந்தக் கிறிஸ்தவர்கள் சகித்திருந்தார்கள். (வெளி. 2:3) அவர்களால் எப்படி முடிந்தது? சகிப்புத்தன்மைக்கு பேர்போன யோபு மாதிரியான ஆட்களைப் பற்றி கடவுளுடைய வார்த்தையில் இருந்து படித்து, அதைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்த்தார்கள். (யாக். 5:10, 11) பலத்துக்காக ஜெபம் செய்தார்கள். (அப். 4:29-31) அதோடு, சகித்திருந்தால் யெகோவா பலன் கொடுப்பார் என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தார்கள்.—அப். 5:41.
6. எதிர்ப்பைச் சகித்திருக்க மெரிட்டா செய்த விஷயத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
6 சகிப்புத்தன்மைக்கு பேர்போனவர்களைப் பற்றி பைபிளில் இருந்தும் நம்முடைய புத்தகங்களில் இருந்தும் நாம் படித்துப் பார்க்க வேண்டும்; அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது, நம்மாலும் சகித்திருக்க முடியும். அல்பேனியா நாட்டில் இருக்கிற மெரிட்டா என்ற நம் சகோதரியும் அப்படித்தான் செய்தார். அதனால்தான், குடும்பத்தில் இருந்து வந்த பயங்கரமான எதிர்ப்பை அவரால் சமாளிக்க முடிந்தது. அவர் இப்படிச் சொல்கிறார்: “யோபுவைப் பற்றி பைபிளில் படித்தது என் நெஞ்சைத் தொட்டுவிட்டது. படாத பாடு பட்டிருக்கிறார். இவ்வளவு கஷ்டம் யாரிடமிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும், ‘சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்’ என்று சொன்னார். (யோபு 27:5) அவர் பட்டதையெல்லாம் நினைத்துப் பார்த்தால், என்னுடைய கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லையென்று தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு பின்னாடி இருப்பவன் யாரென்றுகூட எனக்குத் தெரியுமே.”
7. இப்போது நமக்குப் பெரிய பிரச்சினை இல்லாவிட்டாலும் என்ன செய்வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்?
7 நம்முடைய சகிப்புத்தன்மையை பலப்படுத்துவதற்கு வேறு என்னவும் செய்ய வேண்டும்? யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும். நம்முடைய எல்லா கவலையையும் மனம்விட்டு அவரிடம் கொட்ட வேண்டும். (பிலி. 4:6; 1 தெ. 5:17) ஒருவேளை இப்போது உங்களுக்குப் பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், எப்போதெல்லாம் நீங்கள் கவலையாக இருக்கிறீர்களோ, குழப்பத்தில் இருக்கிறீர்களோ, வழி தெரியாமல் தவிக்கிறீர்களோ, அப்போதெல்லாம் யெகோவாவிடம் உதவி கேட்டு வேண்டுகிறீர்களா? தினம்தினம் வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவாவிடம் தவறாமல் உதவி கேளுங்கள். அப்போதுதான், பின்னாடி பெரிய பெரிய பிரச்சனைகள் வரும்போது நீங்கள் அவரிடம் உதவி கேட்கத் தயங்க மாட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்தால், கடவுள்மேல் உங்களுக்கு முழு நம்பிக்கை வரும். உங்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும், சரியாக எந்த நேரத்தில் அதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்று உறுதியாக நம்புவீர்கள்.—சங். 27:1, 3.
8. இன்றைக்கு சகித்திருந்தால் நாளைக்கும் சகித்திருப்போம் என்பதை மீராவுடைய உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (யாக்கோபு 1:2-4) (படத்தையும் பாருங்கள்.)
8 இப்போது வருகிற பிரச்சினைகளைச் சகித்து யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தால், மிகுந்த உபத்திரவம் சமயத்தில் வருகிற பிரச்சினைகளையும் பெரும்பாலும் சகித்திருக்க முடியும். (ரோ. 5:3) இப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சினையைச் சகித்திருக்கும்போது, அடுத்து வரும் பிரச்சினையைச் சகித்திருப்பதற்குத் தேவையான பலம் கிடைக்கிறது. நிறைய சகோதர சகோதரிகள் அதைத்தான் சொல்கிறார்கள். யெகோவாவுடைய உதவியோடு பிரச்சினையைச் சகித்திருக்கும்போது, தங்களுக்கு உதவி செய்ய அவர் தயாராக இருக்கிறார் என்ற விசுவாசம் அவர்களுக்கு அதிகமாகியிருக்கிறது. அந்த விசுவாசம், அடுத்து வருகிற சோதனையைச் சகிக்க அவர்களுக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள். (யாக்கோபு 1:2-4-ஐ வாசியுங்கள்.) அல்பேனியா நாட்டில் இருக்கிற மீரா என்ற சகோதரியைப் பற்றிப் பார்க்கலாம். அவர் பயனியராக இருக்கிறார். முன்னாடி தன்னுடைய வாழ்க்கையில் வந்த பிரச்சினைகளைச் சகித்திருந்ததால்தான், இப்போது வரும் பிரச்சினைகளைச் சகித்திருக்க முடிகிறது என்று அவர் சொல்கிறார். ஆனாலும், சிலசமயம் தனக்கு மட்டும்தான் தலைக்கு மேலே பிரச்சினை இருக்கிறது என்றும் நினைத்திருக்கிறார். அந்த நினைப்பு வரும்போதெல்லாம் கடந்த 20 வருஷமாக யெகோவா அவருக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதை அவர் யோசித்துப் பார்ப்பார். அப்புறம், அவரே மனதுக்குள் இப்படிச் சொல்லிக்கொள்வார்: ‘உண்மையாக இரு! இத்தனை வருஷமாக எத்தனைப் போராட்டங்களை நீ சந்தித்திருக்கிறாய்! யெகோவாவுடைய உதவியால் எல்லாவற்றையும் ஜெயித்திருக்கிறாய். அதெல்லாம் வீணாய் போக விட்டுவிடாதே.’ சகித்திருப்பதற்கு உங்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று நீங்களும் யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு தடவையும் நீங்கள் சோதனையை சகிக்கும்போதும், யெகோவா அதைக் கவனிக்கிறார்... அதற்குப் பலன் கொடுப்பார்... என்ற நம்பிக்கையோடு இருங்கள். (மத். 5:10-12) அந்த நம்பிக்கை இருந்தால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது எப்படிச் சகித்திருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தொடர்ந்து சகித்திருப்பதற்கும் நீங்கள் உறுதியோடு இருப்பீர்கள்.
கரிசனை காட்டுங்கள்
9. சீரியாவில் இருந்த அந்தியோகியாவில் இருக்கிற சகோதர சகோதரிகள் எப்படிக் கரிசனை காட்டினார்கள்?
9 யூதேயாவில் ஒரு பெரிய பஞ்சம் வந்தபோது, அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு என்ன நடந்ததென்று பார்க்கலாம். பஞ்சத்தைப் பற்றி சீரியாவின் அந்தியோகியாவில் இருக்கிற சகோதர சகோதரிகள் கேள்விப்பட்டார்கள். யூதேயாவில் இருந்த சகோதர சகோதரிகளுக்காக மனதுருகினார்கள். ஆனால் அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவர்கள்மேல் இருந்த கரிசனையை செயலிலும் காட்டினார்கள். அவர்கள் “ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்குச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.” (அப். 11:27-30) பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் ரொம்ப தூரத்தில் இருந்தாலும், அந்தியோகியாவில் இருந்த கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.—1 யோ. 3:17, 18.
10. சகோதர சகோதரிகள் பேரழிவினால் பாதிக்கப்படும்போது நாம் எப்படிக் கரிசனை காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.)
10 பேரழிவினால் நம் சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரும்போது, இன்று நம்மாலும் கரிசனை காட்ட முடியும். எப்படி? அவர்களுக்கு உதவி செய்ய நாம் தயாராக இருக்கலாம். ஒருவேளை, நிவாரண வேலையில் கலந்துகொண்டு ஏதாவது உதவி செய்யலாமா என்று மூப்பர்களிடம் கேட்கலாம்... உலகளாவிய வேலைக்காக நன்கொடை கொடுக்கலாம்... அல்லது பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜெபம் செய்யலாம்.b (நீதி. 17:17) உதாரணத்துக்கு, 2020-ல் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக உலகம் முழுவதும் 950-க்கும் அதிகமான பேரழிவு நிவாரணக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது. இந்த நிவாரணக் குழுக்களில் சேவை செய்த சகோதர சகோதரிகளுக்கு நாம் நன்றி சொல்லலாம். அவர்களுக்கு கரிசனை இருந்ததால், நிவாரணப் பொருள்களை சகோதர சகோதரிகளுக்குக் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கும் உதவி செய்திருக்கிறார்கள். சில சமயங்களில், வீடுகளையும் வணக்கத்துக்குப் பயன்படுத்தும் இடங்களையும் சரிசெய்து கொடுத்திருக்கிறார்கள் அல்லது திரும்பக் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 8:1-4-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
11. கரிசனை காட்டும்போது நாம் எப்படி நம் பரலோக அப்பாவுக்குப் புகழ் சேர்க்கிறோம்?
11 ஒரு பேரழிவு வந்த பின்பு நாம் காட்டுகிற கரிசனையையும், செய்கிற தியாகங்களையும் மற்றவர்கள் கவனிக்கிறார்கள். உதாரணத்துக்கு, 2019-ல் டோரியன் என்ற சூறாவளி பஹாமாஸ் நாட்டை தாக்கினபோது, அங்கிருந்த ராஜ்ய மன்றம் நாசமாகிவிட்டது. சகோதரர்கள் அந்த மன்றத்தைத் திரும்ப கட்டும்போது, அதில் செய்ய வேண்டிய சில வேலைகளுக்கு எவ்வளவு செலவாகும் என்று வெளியில் இருக்கிற ஒரு காண்ட்ராக்டரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “இந்த வேலையை செய்வதற்குத் தேவையான கருவிகளையும் பொருள்களையும் நான் இலவசமாகத் தருகிறேன். அதைச் செய்வதற்குத் தேவையான ஆட்களையும் அனுப்புகிறேன். . . . உங்கள் அமைப்புக்காக இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் உங்கள் ஆட்களை எவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொள்கிறீர்கள் என்று பார்த்தபோது நான் அசந்துபோய்விட்டேன்” என்று சொன்னார். இன்று இந்த உலகத்தில் நிறைய பேருக்கு யெகோவாவைத் தெரியாது. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் எப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள் என்று தெரியும். நாம் மற்றவர்களிடம் கரிசனை காட்டும்போது, “மகா இரக்கமுடைய” யெகோவாவிடம் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். (எபே. 2:4) இதைத் தெரிந்துகொள்வது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!
12. இப்போதே கரிசனை காட்டுவது மிகுந்த உபத்திரவத்துக்கு நம்மை எப்படித் தயார்படுத்தும்? (வெளிப்படுத்துதல் 13:16, 17)
12 மிகுந்த உபத்திரவம் சமயத்தில் நாம் ஏன் கரிசனையைக் காட்ட வேண்டியிருக்கும்? ஏனென்றால், இந்த உலக அரசாங்கங்களை ஆதரிக்காதவர்களுக்கு இப்பவும் சரி, மிகுந்த உபத்திரவம் நடக்கிற சமயத்திலும் சரி, பிரச்சினைகள் வரும் என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 13:16, 17-ஐ வாசியுங்கள்.) அந்த சமயத்தில், உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் கிடைப்பதற்கு நம் சகோதர சகோதரிகளுக்கு உதவி தேவைப்படும். நம் ராஜாவான இயேசு இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வரும் சமயத்தில் அவருடைய பார்வையில் நாம் கரிசனை உள்ளவர்களாகத் தெரிவோமா? அப்படித் தெரிந்தால், ‘வாருங்கள் . . . அரசாங்கத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்று இயேசு நம்மிடம் சொல்வார்.—மத். 25:34-40.
சகோதர சகோதரிகள்மேல் உங்களுக்கு இருக்கும் அன்பை பலப்படுத்துங்கள்
13. ரோமர் 15:7 சொல்வதுபோல், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படி ஒருவர்மேல் ஒருவர் அன்பை பலப்படுத்திக் கொண்டார்கள்?
13 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஒருவர்மேல் ஒருவர் ரொம்ப அன்பு வைத்திருந்தார்கள் என்பது எல்லாருக்கும் ரொம்ப ‘பளிச்’ என்று தெரிந்தது. ஆனால், அந்த அன்பைக் காட்டுவது அவர்களுக்கு ரொம்ப சுலபமாக இருந்ததா? இப்போது, ரோமில் இருந்த சபையை எடுத்துக்கொள்ளலாம். அதில் வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த மக்கள் இருந்தார்கள். சிலர் யூதர்களாக இருந்தார்கள். சின்னதிலிருந்தே திருச்சட்டத்தைப் படித்துதான் வளர்ந்தார்கள். ஆனால் மற்றவர்கள், வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. சிலர் அடிமைகளாக இருந்திருப்பார்கள். மற்றவர்கள் சுதந்திர மக்களாக இருந்திருப்பார்கள். அதில் சிலர் அடிமைகளை வைத்திருந்த எஜமான்களாகக்கூட இருந்திருப்பார்கள். அன்று இருந்த கிறிஸ்தவர்களால் ஒருவர்மேல் ஒருவர் எப்படித் தொடர்ந்து அன்பு காட்ட முடிந்தது? “ஒருவரை ஒருவர் வரவேற்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் அவர்களிடம் சொன்னார். (ரோமர் 15:7-ஐ வாசியுங்கள்.) “வரவேற்க” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த வார்த்தைக்கான அர்த்தம், ஒருவரை அன்பாக வரவேற்று உபசரிப்பது, அதாவது, ஒருவரை தன்னுடைய வீட்டுக்குள் அல்லது நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்வதைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, ஓடிப்போன அடிமையான ஒநேசிமுவை எப்படி வரவேற்க வேண்டும் என்று பிலேமோனிடம் பவுல் சொன்னபோது, அவனை “அன்புடன் . . . ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். (பிலே. 17) அதே மாதிரி, பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும், தங்களைவிட கிறிஸ்தவத்தைப் பற்றி குறைவாகத் தெரிந்து வைத்திருந்த அப்பொல்லோவை வரவேற்று “தங்களோடு கூட்டிக்கொண்டு” போனார்கள். (அப். 18:26) அவர்களுக்குள் இருந்த இந்த வித்தியாசங்கள், பிரச்சினைகளை உருவாக்குவதற்கு அவர்கள் விடவில்லை. அதற்குப் பதிலாக, ஒருவரை ஒருவர் வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள்.
14. ஆன்னாவும் அவர் கணவரும் எப்படி அன்பு காட்டினார்கள்?
14 நம் சகோதர சகோதரிகளை நம்முடைய நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களிடம் நேரம் செலவழிப்பது மூலமாக அவர்கள்மேல் நாமும் அன்பு காட்டலாம். அப்படிச் செய்தால், பெரும்பாலும் அவர்களும் நம்மீது அன்பு காட்டுவார்கள். (2 கொ. 6:11-13) ஆன்னா மற்றும் அவருடைய கணவருடைய அனுபவத்தை இப்போது பார்க்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு புது இடத்துக்கு அவர்கள் மிஷனரியாகப் போனார்கள். அவர்கள் அங்கு போன கொஞ்ச நாளில் கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்துவிட்டது. அவர்கள் புதிதாக வந்திருந்ததால், சபையில் இருந்த சகோதர சகோதரிகளை நேரில் பார்த்து பழக முடியவில்லை. இருந்தாலும், அந்தத் தம்பதி அன்பு காட்டினார்கள். வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக அவர்கள் சகோதர சகோதரிகளிடம் பேசினார்கள். அவர்களைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள ஆசையாக இருப்பதையும் சொன்னார்கள். இந்தத் தம்பதி காட்டின அன்பு சபையில் இருக்கிறவர்களுடைய மனதை ரொம்பத் தொட்டுவிட்டது. அதனால், அவர்களும் அடிக்கடி இவர்களிடம் போன் செய்து பேசினார்கள், மெசேஜ் அனுப்பினார்கள். சகோதர சகோதரிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள இந்தத் தம்பதி ஏன் முயற்சி எடுத்தார்கள்? ஆன்னா இப்படிச் சொல்கிறார்: “சந்தோஷமான சமயத்திலும், கஷ்டமான சமயத்திலும், என் மேலயும் என் குடும்பத்து மேலயும் நிறைய சகோதர சகோதரிகள் அன்பு காட்டியிருக்கிறார்கள். அதை நான் என்றும் மறக்க மாட்டேன். அதுதான் மற்றவர்கள் மேல் அன்பு காட்டுவதற்கு என்னைத் தூண்டியது.”
15. எல்லா விதமான சகோதர சகோதரிகள்மேலும் அன்பு காட்டுவதைப் பற்றி வெனிசாவிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)
15 நிறைய சபைகளில், வித்தியாசமான பின்னணியைச் சேரந்த சகோதர சகோதரிகள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டும் பார்க்கும்போது அவர்கள்மேல் இருக்கும் அன்பு பலமாகும். நியுசிலாந்து நாட்டில் சேவை செய்யும் வெனிசா என்ற சகோதரியைப் பற்றி இப்போது பார்க்கலாம். சபையில் இருக்கும் சிலரோடு ஒத்துப்போவது அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர்கள் நடந்துகொள்ளும் விதம் இவருக்கு எரிச்சலாக இருக்கும். இருந்தாலும், அவர்களைவிட்டு விலகிப்போவதற்குப் பதிலாக, அவர்களோடு சேர்ந்து நிறைய நேரம் செலவழிக்க முடிவு செய்தார். அப்படிச் செய்ததால், யெகோவா அவர்கள்மேல் ஏன் அன்பு வைத்திருக்கிறார் என்று வெனிசா புரிந்துகொண்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “என் கணவர் ஒரு வட்டாரக் கண்காணியாக ஆனதுக்கு அப்புறம், வித்தியாச வித்தியாசமான சகோதர சகோதரிகளோடு நேரம் செலவழிக்கிறோம். அவர்களோடு ஒத்துப்போவது இப்போதெல்லாம் எனக்கு கஷ்டமாகவே இல்லை. வித்தியாசமான ஆட்களோடு இருப்பதை இப்போது நான் ரொம்ப ரசிக்கிறேன். விதவிதமான ஆட்களை சபைக்குள் கூட்டிச் சேர்த்ததே யெகோவாதான். அப்படியென்றால், அவருக்கு இவர்கள் எல்லாரையும் ரொம்பப் பிடிக்கும்தானே!” மற்றவர்களை யெகோவா பார்க்கிற மாதிரியே பார்ப்பதற்கு நாமும் கற்றுக்கொண்டால், அவர்கள்மேல் நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும்.—2 கொ. 8:24.
16. மிகுந்த உபத்திரவம் சமயத்தில் நம் சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுவது ஏன் அவசியம்? (படத்தையும் பாருங்கள்.)
16 மிகுந்த உபத்திரவம் சமயத்தில் சகோதர சகோதரிகள்மேல் நாம் அன்பு காட்ட வேண்டியிருக்கும். மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கிற சமயத்தில் யெகோவா நம்மை எப்படிப் பாதுகாப்பார்? பழங்கால பாபிலோன்மேல் தாக்குதல் நடந்த சமயத்தில், தன்னுடைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா இப்படிச் சொன்னார்: “என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள். கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய கோபம் தீரும்வரை கொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.” (ஏசா. 26:20) மிகுந்த உபத்திரவத்தைச் சந்திக்கப் போகிற நமக்கும்கூட இந்த வார்த்தைகள் பொருந்தலாம். ‘உள்ளறைகள்’ என்று இங்கே சொல்லியிருப்பது நம்முடைய சபைகளைக் குறிக்கலாம். மிகுந்த உபத்திரவம் சமயத்தில் நம்முடைய சகோதர சகோதரிகளோடு ஒன்றுசேர்ந்து இருந்தால், நம்மை பாதுகாப்பதாக யெகோவா வாக்கு தந்திருக்கிறார். அதனால், நம் சகோதர சகோதரிகளைப் பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல, அவர்கள்மேல் ஆழமான அன்பை காட்டுவதற்கும் இப்போதே நாம் கடினமாக உழைக்க வேண்டும். நாம் உயிர் தப்பிப்பதே இதைப் பொறுத்து இருக்கலாம்!
இப்போதே தயாராகுங்கள்
17. இப்போதே நாம் தயாராக இருந்தால் மிகுந்த உபத்திரவம் சமயத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?
17 “யெகோவாவின் மகா நாள்” மனிதர்கள் சமாளிக்க முடியாதளவுக்கு பிரச்சினைகள் நிறைந்த கஷ்டமான காலமாக இருக்கும். (செப். 1:14, 15) யெகோவாவுடைய மக்களுக்கும் கஷ்டங்கள் வரும். ஆனால், இப்போதே நாம் தயாராக இருந்தால் அந்தச் சமயத்தில் நாம் பதட்டம் அடையாமல் இருக்க முடியும். மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடியும். என்ன பிரச்சினைகள் வந்தாலும் அதையெல்லாம் நாம் சகித்திருப்போம். நம் சகோதர சகோதரிகள் கஷ்டப்படுகிற சமயத்தில் அவர்கள்மேல் கரிசனை காட்டுவதற்கும் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்கும் நம்மால் முடிந்ததை செய்வோம். நம் சகோதர சகோதரிகள்மேல் இப்போதே அன்பு காட்ட கற்றுக்கொண்டதால், எதிர்காலத்திலும் அவர்கள்மேல் அன்பு காட்டுவோம். இப்படியெல்லாம் செய்தால், புதிய உலகத்தில் என்றென்றும் வாழும் வாழ்க்கையை யெகோவா நமக்குப் பரிசாகக் கொடுப்பார். பேரழிவுகளும் கஷ்டங்களும் நம்முடைய ஞாபகத்திலிருந்து மறைந்தே போய்விடும்.—ஏசா. 65:17.
பாட்டு 144 கண் முன் பரிசை வைப்போம்!
a மிகுந்த உபத்திரவம் சீக்கிரம் தொடங்கும். மனிதர்கள் இதுவரைக்கும் அனுபவிக்காத பயங்கரமான கஷ்டகாலமாக அது இருக்கும். நமக்குச் சகிப்புத்தன்மை, கரிசனை, அன்பு இருந்தால்தான் அந்தக் காலத்தைச் சமாளிக்க முடியும். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்தக் குணங்களைக் காட்ட எப்படிக் கற்றுக்கொண்டார்கள்? அந்தக் குணங்களைக் காட்ட இன்று நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? மிகுந்த உபத்திரவத்தை சமாளிக்க இந்தக் குணங்கள் எப்படி உதவி செய்யும்? பார்க்கலாம்.
b பேரழிவு நிவாரண வேலையில் உதவி செய்ய விரும்புகிறவர்கள், முதலில், உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வாலண்டியர்களுக்கான விண்ணப்பத்தை (DC-50) அல்லது வாலண்டியர் சேவைக்கான விண்ணப்பத்தை (A-19) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்புறம், அந்த வேலைக்கு கூப்பிடும் வரை காத்திருங்கள்.