அதிகாரம் இருபத்து இரண்டு
யெகோவாவின் ‘விந்தையான செயலை’ ஏசாயா முன்னறிவிக்கிறார்
யூதாவும் இஸ்ரவேலும் பாதுகாப்பில் மகிழ்வது கொஞ்சக் காலத்திற்குத்தான். அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பைத் தேடுகின்றனர்; எனவே பலத்த, வல்லமையான நாடுகளோடு அவர்களுடைய தலைவர்கள் அரசியல் ஒப்பந்தங்களை செய்கின்றனர். இஸ்ரவேலின் தலைநகராகிய சமாரியா, அண்டை நாடான சீரியாவிடம் புகலிடம் தேடுகிறது. யூதாவின் தலைநகராகிய எருசலேமோ, கொடிய அசீரியாவின்மேல் தன் நம்பிக்கையை வைக்கிறது.
2 பொன் கன்றுக்குட்டிகளை வணங்கிக்கொண்டும், புதிய அரசியல் கூட்டுறவுகளில் தங்கள் நம்பிக்கையை வைத்துக்கொண்டும், அதேசமயம் யெகோவா தங்களை பாதுகாப்பார் என இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்தில் சிலர் நினைத்திருந்திருக்கலாம். யெகோவாவின் பாதுகாப்பு தனக்கு நிச்சயம் உண்டு என யூதாவும் இதைப்போல் நினைத்திருக்கலாம். தங்களுடைய தலைநகரமாகிய எருசலேமில் யெகோவாவின் ஆலயம் இருக்கிறதென அவர்கள் பெருமிதமாக கருதினர். ஆனால், இரு தேசங்களுக்குமே எதிர்பாரா சம்பவங்கள் பல காத்திருக்கின்றன. உண்மையிலேயே விந்தையான செயல்கள் பல, வழிமாறிச் சென்ற தம் மக்களுக்கு காத்திருப்பதை ஏசாயா மூலம் யெகோவா முன்னறிவிக்கிறார். இன்று நம் ஒவ்வொருவருக்கும் தேவையான முக்கிய பாடங்கள் அவருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ளன.
‘எப்பிராயீமின் குடிவெறியர்கள்’
3 ஏசாயா தன்னுடைய தீர்க்கதரிசனத்தை அதிர்ச்சியூட்டும் இந்த வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறார்: “எப்பிராயீமுடைய வெறியரின் [“குடிவெறியர்களின்,” NW] பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே! இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும் . . . வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான். எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும்.”—ஏசாயா 28:1-3.
4 பத்து கோத்திர வடராஜ்யத்தில் பிரதானமானது எப்பிராயீம் கோத்திரம். எனவே, எப்பிராயீம் கோத்திரம் என்பது இஸ்ரவேல் ராஜ்யம் முழுவதையும் அர்த்தப்படுத்துகிறது. அதன் தலைநகரமாகிய சமாரியா, ‘செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியில்’ முதன்மையாகவும் கம்பீரமாகவும் வீற்றிருக்கிறது. எப்பிராயீமின் தலைவர்கள் எருசலேமில் அரசாண்ட தாவீதின் வம்சத்திலிருந்து பிரிந்துவந்து ஆட்சி செய்கின்றனர். தங்கள் ‘பெருமையான கிரீடமாகிய’ இந்த சுதந்திரத்தைக் குறித்து மிகவும் மேட்டிமையாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் ‘குடிவெறியர்கள்.’ ஆவிக்குரிய விதத்தில் மதுமயக்கத்தில் உள்ளனர். ஏனென்றால், யூதாவுக்கு எதிராக சீரியாவுடன் அரசியல் கூட்டுறவு வைத்துள்ளனர். எப்பிராயீமின் தலைவர்கள் மிகவும் அருமையானதாக எண்ணி போற்றிப் பாராட்டிவந்த அனைத்தையும் பகைவர்கள் காலால் மிதித்துப்போட இருக்கின்றனர்.—ஏசாயா 29:9-ஐ ஒப்பிடுக.
5 எப்பிராயீம் தனக்கு வரவிருக்கும் ஆபத்தான நிலையை சிறிதும் உணராமல் இருக்கிறது. ஏசாயா தொடர்கிறார்: “செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவ காலத்துக்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.” (ஏசாயா 28:4) ஒரே வாயில் டக்கென்று விழுங்கப்படும் இனிப்புப்பண்டம்போல, எப்பிராயீம் அசீரியாவால் விழுங்கப்படும். அப்படியென்றால், இதிலிருந்து மீள வழியே இல்லையா? அப்படியல்ல. ஏசாயாவின் நியாயத்தீர்ப்பு தீர்க்கதரிசனங்கள் பல நம்பிக்கையின் வார்த்தைகளை கொண்டிருப்பதுபோல இந்த தீர்க்கதரிசனத்திலும் நம்பிக்கையளிக்கும் செய்தி உள்ளது. தேசம் பகைவர்களின் கையில் வீழ்ந்தாலும், யெகோவாவின் உதவியோடு உண்மையுள்ள நபர்கள் தப்பிப்பிழைப்பார்கள். “அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும், நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும் [“நீதியின் உணர்வாகவும்,” பொ.மொ.] யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.”—ஏசாயா 28:5, 6.
“வழிதப்பிப் போகிறார்கள்”
6 சமாரியாவுக்கு கணக்கு தீர்க்கும் நாள் பொ.ச.மு. 740-ல் வருகிறது. அப்போது அசீரியர்கள் தேசத்தை நிர்மூலமாக்கி, பத்து கோத்திர வட ராஜ்யம் இனியும் ஒரு தேசமாக தனித்து விளங்காதபடி முற்றிலுமாக அழிக்கின்றனர். யூதாவைப் பற்றி என்ன சொல்லலாம்? அந்த தேசம் அசீரியப் படைகளால் தாக்கப்படும், பின்னர் பாபிலோன் அதன் தலைநகரத்தை அழிக்கும். ஆனால், ஏசாயாவின் வாழ்நாளிலே, யூதாவின் ஆலயமும் ஆசாரியத்துவமும் இருக்கும், அத்தேசத்தின் தீர்க்கதரிசிகள் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். தன் அண்டை நாடாகிய வட தேசத்துக்கு வரப்போகிற அழிவைப் பார்த்து யூதா கொக்கரிக்கலாமா? நிச்சயமாகவே கூடாது! யூதாவுக்கும் கணக்கு தீர்க்கும் நாள் வர இருக்கிறது. அப்போது, அவர்களுடைய தலைவர்களின் கீழ்ப்படியாமைக்கும் விசுவாசக்குறைவுக்கும் யெகோவா கணக்கு கேட்பார்.
7 யூதாவைக் குறித்து ஏசாயா இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப் போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.” (ஏசாயா 28:7, 8) எவ்வளவு அருவருப்பு! கடவுளுடைய வீட்டில் குடித்து வெறித்திருப்பது என்பது மகா பாவம். அந்த ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஆவிக்குரிய விதத்தில் குடித்து வெறித்திருக்கின்றனர். மனித ஒப்பந்தங்களில் அளவுக்குமீறி நம்பிக்கை வைத்து, தங்கள் மனங்களை இருளடைய செய்துள்ளனர். ஒருவேளை யெகோவாவின் பாதுகாப்பு இல்லாவிட்டாலும், தங்களை காத்துக்கொள்ள மற்றொரு திட்டம் இப்போது இருக்கிறதென நம்புகிறார்கள். இப்படி நினைத்து, தங்களுடைய போக்குதான் மிக ஞானமானது என தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர். ஆவிக்குரிய விதத்தில் குடித்து வெறித்த நிலையில், அந்த மதத்தலைவர்கள் வெறுப்பூட்டும், அருவருப்பான வார்த்தைகளை உமிழ்கின்றனர். கடவுளுடைய வாக்குறுதிகளில் உண்மையான விசுவாசம் வைக்கவில்லை என்பதை இவர்களுடைய வார்த்தைகள் வெளிக்காட்டுகின்றன.
8 யெகோவாவின் எச்சரிக்கைகளுக்கு யூதாவின் தலைவர்கள் எப்படி பிரதிபலிக்கின்றனர்? அவர்கள் ஏசாயாவை ஏளனம் செய்கின்றனர். அவர்களை ஏதோ சிறு குழந்தைகள்போல நினைத்து பேசுவதாக அவரை பழிகூறுகின்றனர். “‘இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்? யாருக்குச் செய்தியைப் புரியுமாறு எடுத்துரைப்பான்? பால்குடி மறந்தோர்க்கா? தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா? ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை; அளவு நூலுக்குமேல் அளவுநூல், அளவு நூலுக்குமேல் அளவு நூல்; இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்’ என்கின்றனர்.” (ஏசாயா 28:9, 10, பொ.மொ.) சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளைப்போலத்தான் ஏசாயாவின் வார்த்தைகள் அவர்களுக்கு இருக்கின்றன. அந்த வார்த்தைகள் அவர்களுடைய காதுகளில் விநோதமாக ஒலிக்கின்றன! ‘யெகோவா கட்டளையிட்டது இதுதான்! யெகோவா கட்டளையிட்டது இதுதான்! யெகோவாவின் தராதரம் இதுதான்! யெகோவாவின் தராதரம் இதுதான்!’ என ஏசாயா மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.a ஆனால், வெகு சீக்கிரத்தில் யூதாவின் குடிகளோடு யெகோவா “பேசுவார்.” எப்படி? தகுந்த நடவடிக்கை எடுப்பதன்மூலம். அவர்களுக்கு எதிராக பாபிலோனியப் படைகளை அனுப்புவார். வேறே மொழி பேசும் அந்நியர்களை அனுப்புவார். அந்தப் படைகள் யெகோவாவின் ‘கட்டளைமேல் கட்டளையை’ நிச்சயமாகவே நிறைவேற்றுவார்கள். யூதா அழியும்.—ஏசாயா 28:11-13-ஐ வாசிக்கவும்.
இன்று ஆவிக்குரிய குடிவெறியர்கள்
9 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் பூர்வ இஸ்ரவேல், யூதாமேல் மட்டும்தான் நிறைவேறியதா? இல்லை! இயேசுவும் பவுலும் அவருடைய வார்த்தைகளை மேற்கோள் காட்டி, தங்களுடைய நாட்களிலிருந்த தேசத்திற்கு அவற்றை பொருத்தினர். (ஏசாயா 29:10, 13; மத்தேயு 15:8, 9; ரோமர் 11:8) ஏசாயாவின் நாட்களில் இருந்ததைப்போலவே இன்றும் நிலைமைகள் உள்ளன.
10 இப்போது, அரசியலில் தங்களுடைய முழு நம்பிக்கையையும் வைத்திருப்பவர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் மதத்தலைவர்கள். இஸ்ரவேல், யூதாவின் குடிவெறியர்களைப் போலவே இவர்களும் நிதானத்தை இழந்து தள்ளாடுகிறார்கள். அரசியலில் தலையிடுகின்றனர். அதோடு, இவ்வுலகின் பெரும்புள்ளிகளோடு அரசியல் கூட்டுறவு வைத்துக் கொண்டிருப்பதால் மிகவும் பெருமிதம் கொள்கின்றனர். பைபிளின் சுத்தமான சத்தியத்தை பேசுவதற்கு பதிலாக, அருவருப்பான விஷயங்களை பேசுகின்றனர். இதனால், அவர்களுடைய ஆவிக்குரிய பார்வை தெளிவில்லாமல், மங்கலாக இருக்கிறது. அவர்கள் மனிதகுலத்திற்கு பாதுகாப்பான வழிகாட்டிகளும் அல்ல.—மத்தேயு 15:14.
11 மனிதகுலத்தின் ஒரே உண்மையான நம்பிக்கையாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் சொல்லும்போது கிறிஸ்தவமண்டலத்தின் குருமார்கள் எப்படி பிரதிபலிக்கிறார்கள்? அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை. அவர்களுக்கு சாட்சிகள் பேசுவது அனைத்தும் ஏதோ குழந்தைகளைப்போல திரும்பத் திரும்ப எதையாவது பிதற்றிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சாட்சிகளை இகழ்ச்சியாக பார்க்கின்றனர், ஏளனம் செய்கின்றனர். இயேசுவின் நாட்களிலிருந்த யூதர்களைப்போலவே, இவர்களும் கடவுளுடைய ராஜ்யத்தை வரவேற்பதில்லை. இவர்களுடைய மந்தைகளும் அதைப் பற்றி கேட்க விரும்புகிறதில்லை. (மத்தேயு 23:13) எனவே, யெகோவா எப்போதும் தம்முடைய தீங்கிழைக்காத தூதுவர்கள் மூலமாக பேசிக்கொண்டு மட்டுமே இருக்க மாட்டார் என்பது அவர்களுக்கு தெளிவாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடவுளுடைய ராஜ்யத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் அனைவரும் ‘நொறுக்கப்பட்டு, சிக்குண்டு பிடிபடும்’ காலம் வரும். அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் காலம் வரும்.
“மரணத்தோடே உடன்படிக்கை”
12 ஏசாயா தன் தீர்ப்பைத் தொடருகிறார்: “நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டு வந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே.” (ஏசாயா 28:14, 15) தோல்வி ஏதும் ஏற்படாதவாறு தாங்கள் செய்த அரசியல் ஒப்பந்தங்கள் தங்களை பாதுகாக்கும் என யூதாவின் தலைவர்கள் பெருமையடித்துக் கொள்கின்றனர். ‘மரணத்தோடு உடன்படிக்கை’ செய்துகொண்டதால், சாவு தங்களை அணுகாது என நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பாதுகாப்பின் கோட்டை ஸ்திரமற்றது. எனவே, அது அவர்களை பாதுகாக்காது. அவர்களுடைய அரசியல் ஒப்பந்தங்கள் அனைத்துமே பொய், உண்மையே கிடையாது. அதைப்போலவே, கிறிஸ்தவமண்டலம் இன்று உலகத் தலைவர்களோடு மிக நெருங்கிய உறவு வைத்திருக்கிறது. ஆனால், யெகோவா கணக்கு தீர்க்கும்போது இந்த உறவு எந்தவிதத்திலும் அதை பாதுகாக்காது. சொல்லப்போனால், அதுவே அதன் அழிவுக்கு காரணமாய் நிரூபிக்கும்.—வெளிப்படுத்துதல் 17:16, 17.
13 அப்படியானால், பாதுகாப்பிற்காக இந்த மதத் தலைவர்கள் எங்கே நோக்கியிருக்க வேண்டும்? யெகோவாவின் வாக்குறுதியை ஏசாயா இப்போது பதிவு செய்கிறார்: “இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப் பெற்றதும் திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். நான் நியாயத்தை நூலும் [“அளவு நூலும்,” பொ.மொ.], நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டு போகும்.” (ஏசாயா 28:16, 17) ஏசாயா, இந்த வார்த்தைகளைப் பேசிய சிறிது காலத்திலேயே, உண்மையுள்ள அரசனாகிய எசேக்கியா சீயோனிலே அரியணை ஏறுகிறார். அவருடைய ராஜ்யம் பகைவர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. அண்டை நாடுகளோடு வைக்கும் அரசியல் கூட்டுறவுகளால் அல்ல, யெகோவாவின் தலையீட்டினாலே பாதுகாக்கப்படுகிறது. எனினும், ஏவப்பட்ட இந்த வார்த்தைகள் எசேக்கியாவில் நிறைவேறவில்லை. எசேக்கியாவின் வம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவே அந்த ‘பரீட்சிக்கப்பட்ட கல்’ என்றும், அவரில் விசுவாசம் வைக்கும் எவருமே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோளாக அப்போஸ்தலனாகிய பேதுரு சுட்டிக்காட்டினார். (1 பேதுரு 2:6) கிறிஸ்தவமண்டல குருமார்களின் நிலை எவ்வளவு பரிதாபமானது! கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக் கொண்டாலும் இயேசு எதை செய்ய மறுத்தாரோ அதை அவர்கள் செய்கிறார்கள். ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் யெகோவா கொண்டுவரும் ராஜ்யத்திற்காக அவர்கள் காத்திராமல், இந்த உலகில் பதவிக்காகவும் புகழுக்காகவும் ஆலாய்ப் பறக்கின்றனர்.—மத்தேயு 4:8-10.
14 பொய்யான அரசியல் அடைக்கலம் தேடி யூதா செல்கிறது. “பாய்ந்துவரும் பெருவெள்ளம்” போல பாபிலோனிய படைகள் தேசத்தை கடந்து செல்கையில், யூதா தேடிச் சென்ற அடைக்கலம் பொய்யென யெகோவா வெளிக்காட்டுவார். “மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை நிச்சயமாக முறிந்து போகும்” என யெகோவா சொல்கிறார். “பாய்ந்துவரும் பெருவெள்ளம் கடக்கும்போது நீங்களும் அதன்கீழ் மிதிக்கப்படுவீர்கள். அது கடக்கும் பொழுதெல்லாம், . . . கேட்டதை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படியாக நடுக்கம் உண்டாகும்.” (ஏசாயா 28:18, 19, NW) யெகோவாவை சேவிப்பதாக உரிமை பாராட்டிக்கொண்டு, அரசியல் கூட்டுறவுகளில் தங்கள் நம்பிக்கையை வைத்தோருக்கு நேரிட்டதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள மிகச் சிறந்த பாடம் இருக்கிறதல்லவா!
15 இப்போது யூதாவின் தலைவர்களுடைய நிலையை சற்று சிந்தியுங்கள். “கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.” (ஏசாயா 28:20) அசதி நீங்க, இளைப்பாற நினைத்து படுக்கிறார்கள், ஆனால் களைப்பு நீங்கியபாடில்லை. ஒன்று, படுக்கை நீளமாக இல்லாததால் குளிரில் கால் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கிறது அல்லது கதகதப்பாக இருக்க நினைத்து காலைக் குறுக்கி போர்த்துக்கொள்ள நினைத்தாலும் போர்வை மிகவும் சிறியதாக இருக்கிறது. ஏசாயாவின் நாட்களிலிருந்த அசெளகரியமான நிலை இதுவே. இன்று, பொய்யான அடைக்கலமாகிய கிறிஸ்தவமண்டலத்தில் நம்பிக்கை வைக்கும் எவருடைய நிலையும் இதுதான். அரசியலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதால், இனப்படுகொலை போன்ற கொடிய அட்டூழியங்களுக்கு கிறிஸ்தவமண்டலத்தின் குருமார்களில் சிலர் காரணமாக இருந்திருக்கின்றனர். இது மிகவும் அருவருக்கத்தக்க விஷயமல்லவா!
யெகோவாவின் ‘விந்தையான செயல்’
16 யூதாவின் மதத்தலைவர்கள் எதிர்பார்ப்பதற்கு முற்றிலும் எதிர்மாறான முடிவுதான் அவர்களுக்கு காத்திருக்கிறது. யூதாவின் ஆவிக்குரிய குடிவெறியர்களுக்கு விந்தையான காரியத்தைத்தான் யெகோவா செய்வார். “ஆண்டவர் பெராசிம் [பிராசீம்] மலைமேல் கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்! கிபியோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல் செயலாற்றக் கொதித்தெழுவார்! தம் பணியை நிறைவேற்றுவார்! விந்தையானது அவர் தம் செயல்! புதிரானது அவர்தம் பணி!” (ஏசாயா 28:21, பொ.மொ.) தாவீது ராஜாவின் நாட்களிலே, பிராசீம் மலையிலும் கிபியோன் பள்ளத்தாக்கிலும் பெலிஸ்தருக்கு எதிராக தம் மக்களுக்கு யெகோவா மகத்தான வெற்றியை தந்தார். (1 நாளாகமம் 14:10-16) யோசுவாவின் நாட்களில், கிபியோன்மேல் சூரியன் அப்படியே நிற்கும்படி யெகோவா செய்தார். அதனால், இஸ்ரவேலர்கள் அமோரியர்களை முழுமையாக முறியடித்தனர். (யோசுவா 10:8-14) அது உண்மையிலேயே அற்புதமான செயல்! மறுபடியும் யெகோவா போரிடுவார். ஆனால் இந்த சமயம் தம்முடைய ஜனங்களாக உரிமை பாராட்டுகிறவர்களுக்கு எதிராக போரிடுவார். இதைவிட விந்தையான அல்லது விநோதமான செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா? எருசலேம், யெகோவாவினுடைய வணக்கத்தின் மைய இடமும் யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவின் நகரமும் ஆகும். அதுமட்டுமல்ல, எருசலேமில் தாவீதின் வம்சத்தில் வந்த ஆட்சி அதுவரை கவிழ்க்கப்படவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் எடுத்துக்கொண்டால், இதைவிட விந்தையான செயல் வேறு எதுவுமே இருக்க முடியாது. இருந்தாலும், யெகோவா தம் ‘விந்தையான செயலை’ நிச்சயம் நிறைவேற்றுவார்.—ஆபகூக் 1:5-7-ஐ ஒப்பிடுக.
17 எனவே, ஏசாயா எச்சரிக்கிறார்: “உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம் பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.” (ஏசாயா 28:22) அப்போதிருந்த யூத மதத்தலைவர்கள் பரியாசம் பண்ணியபோதிலும், ஏசாயாவின் வார்த்தைகள் முழுக்க முழுக்க உண்மையே. ஏனென்றால், அந்தத் தலைவர்கள் யாரிடம் உடன்படிக்கையின் உறவிற்குள் இருக்கிறார்களோ அவரிடமிருந்தே, அதாவது யெகோவாவிடமிருந்தே ஏசாயா இந்த செய்தியைப் பெற்றுள்ளார். இன்றும், யெகோவாவின் ‘விந்தையான செயலைப்’ பற்றி கேள்விப்படும்போது கிறிஸ்தவமண்டலத்தின் குருமார்களும் பரியாசம் பண்ணுகிறார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக கனல் பறக்கும் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். ஆனால், சாட்சிகள் அறிவிக்கும் செய்தி உண்மையானது. பைபிளிலேயே அந்த செய்தி இருக்கிறது. இதைத்தான் பிரதிநிதித்துவம் செய்வதாக குருமார்கள் உரிமை பாராட்டுகின்றனர்.
18 அந்த மதத்தலைவர்களை பின்பற்றாமல், உண்மை மனதுடன் இருக்கும் நபர்களை யெகோவா திருத்தி, தம்முடைய தயவிற்குள் மறுபடியும் கொண்டு வருவார். (ஏசாயா 28:23-29-ஐ வாசிக்கவும்.) வித்தியாசமான தானியங்களுக்கு வித்தியாசமான போரடிக்கும் முறையை விவசாயிகள் உபயோகிப்பர். உதாரணமாக, சீரகம் போன்ற மென்மையான தானியத்திற்கு மிகவும் மென்மையான முறையை பயன்படுத்துவர். அதுபோலவே, ஒவ்வொருவருடைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சிட்சையை யெகோவா பயன்படுத்துகிறார். அவர் ஒரு கொடுங்கோலராகவோ அல்லது ஒடுக்குபவராகவோ எப்போதுமே செயல்படுவதில்லை. தவறு செய்தவர்களும் திருந்த வேண்டும் என்பதற்காகவே அவர் சிட்சிக்கிறார். யெகோவாவின் அழைப்பிற்கு தனிநபர் சாதகமாக பிரதிபலிப்பாரானால், நம்பிக்கைக்கு வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே இன்றும், கிறிஸ்தவமண்டலத்திற்கு ஒட்டுமொத்தமாக அழிவு நிச்சயம். ஆனாலும், யெகோவாவின் ராஜ்யத்திற்கு கீழ்ப்படியும் தனிநபர் ஒவ்வொருவருமே வரப்போகும் அவரது கடும் நியாயத்தீர்ப்பை தவிர்க்கலாம்.
எருசலேமுக்கு ஐயோ!
19 இப்போது யெகோவா எதைக் குறித்து பேசுகிறார்? “தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்து வந்தாலும், அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு கடவுளுடைய பலிபீடமாகத்தான் இருக்கும்.” (ஏசாயா 29:1, 2 NW) ‘அரியேல்’ என்பது ‘கடவுளுடைய பலிபீடம்’ என ஒருவேளை அர்த்தப்படுத்தலாம். இங்கு அது எருசலேமையே திட்டவட்டமாக குறிக்கிறது. பலிகளை செலுத்துவதற்கான பலிபீடம் இருக்கும் ஆலயம் அங்குதான் இருக்கிறது. யூதர்கள் கடமைக்காக பண்டிகைகளை அனுசரித்து, பலிகளையும் அங்கு செலுத்துகின்றனர். ஆனால், அவற்றில் எல்லாம் யெகோவா பிரியப்படவே இல்லை. (ஓசியா 6:6) மாறாக, வித்தியாசமான அர்த்தத்தில், அந்த நகரமே ‘பலிபீடமாக’ மாறும் என தீர்ப்பு கொடுக்கிறார். பலிபீடத்தைப் போன்றே, அதில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடும். அக்கினிக்கு இரையாக்கப்படும். இது எப்படி நடக்கும் என்பதையும் யெகோவா விளக்குகிறார்: “உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்; உன்னைப் போர்க் கோபுரங்களால் சூழ்ந்து வளைப்பேன்; உனக்கெதிராய் முற்றுகைத் தளங்களை எழுப்புவேன். தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்; நலிந்த உன் குரல் புழுதியிலிருந்து எழும்பும்.” (ஏசாயா 29:3, 4, பொ.மொ.) பொ.ச.மு. 607-ல், இது நிறைவேறுகிறது. பாபிலோனியப் படைகள் எருசலேம் நகரத்தை அழித்து, அதன் ஆலயத்தை சுட்டெரிக்கையில், இந்த வார்த்தைகள் அனைத்தும் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் நிறைவேறுகின்றன. எருசலேம் தரைமட்டமாக்கப்படுகிறது.
20 இப்படிப்பட்ட நாசம் ஏற்படுவதற்குமுன், யெகோவாவுடைய சட்டத்திற்கு கீழ்ப்படியும் அரசர்கள் யூதாவை அவ்வப்போது அரசாளுகிறார்கள். அப்போது நிலைமை என்ன? அந்த சமயங்களில், யெகோவா தம்முடைய ஜனங்களுக்காக போரிடுகிறார். எதிரிகள் தேசத்தை முற்றுகையிட்டபோதிலும், அவர்கள் ‘பொடித்தூளாகவும்,’ ‘பதர்களாகவும்’ ஆகின்றனர். உரிய காலத்தில் யெகோவா அவர்களை “இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும்” சிதறடிக்கிறார்.—ஏசாயா 29:5, 6.
21 எருசலேமை சூறையாடி, கொள்ளைப் பொருட்களை அபகரிக்க எதிரிப்படைகள் ஆவலாய் எதிர்பார்த்து இருக்கலாம். ஆனால், அவர்களுடைய எதிர்பார்ப்பு, திடுதிப்பென கானல்நீராய் மறைந்து போகும். உதாரணமாக, பட்டினியில் தவித்துக்கொண்டிருக்கும் ஒருவன் விருந்து சாப்பிடுவதுபோல் கனவு காண்கிறான். கனவு கலைந்து எழுந்தால், பசி அவன் குடலை வாட்டுகிறது. அதுபோலத்தான், யூதாவை சூறையாட வெகு ஆவலாய் காத்திருக்கும் எதிரிகளுடைய கனவுகளும் பொய்யாய் போகும். (ஏசாயா 29:7, 8-ஐ வாசிக்கவும்.) உண்மையுள்ள அரசனாகிய எசேக்கியாவின் நாட்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்! (ஏசாயா, அதிகாரங்கள் 36, 37) அப்போது சனகெரிப்பின் தலைமையில் வந்த அசீரிய படை எருசலேமை மிரட்டுகிறது. ஆனால் அந்த அச்சுறுத்தும் அசீரியப் படை தவிடுபொடியாகிறது. ஒரே இரவில் அதன் 1,85,000 வலிமைமிக்க வீரர்கள் கொல்லப்படுகின்றனர். வெற்றிக் கனவுகள் மறுபடியும் ஒருமுறை இதே மாதிரி தவிடுபொடியாக்கப்படும். எப்போது? வெகு சீக்கிரத்தில். யெகோவாவின் மக்களுக்கு எதிராக மாகோகின் கோகு யுத்தம் செய்ய வரும்போது இது நேரிடும்.—எசேக்கியேல் 38:10-12; 39:6, 7.
22 ஏசாயா தன் தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதியை சொல்கையில் வாழ்ந்த யூதாவின் தலைவர்களுக்கு எசேக்கியாவைப் போல விசுவாசம் இல்லை. தெய்வ பக்தியற்ற தேசங்களோடு அரசியல் கூட்டுறவுகள் வைத்து, ஆவிக்குரிய மந்தநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். “திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்; குருடரைப்போல் இருங்கள்; பார்வையற்றவராகுங்கள் [“வெறித்திருங்கள்,” NW]; ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல; தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.” (ஏசாயா 29:9, பொ.மொ.) இந்தத் தலைவர்கள் ஆவிக்குரிய விதத்தில் குடித்து வெறித்திருப்பதால், யெகோவாவின் உண்மையுள்ள தீர்க்கதரிசிக்கு கொடுக்கப்பட்ட தரிசனத்தின் அர்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏசாயா சொல்கிறார்: “கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானத்திருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார். ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான். அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.”—ஏசாயா 29:10-12.
23 ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடன் இருப்பதாக யூதத் தலைவர்கள் உரிமை பாராட்டுகின்றனர். ஆனால், அவர்கள் யெகோவாவை அடியோடு மறந்துவிட்டனர். தங்கள் சொந்தக் கருத்துக்களையே அவர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். சரியெது, தவறெது என்பதை திரித்துச் சொல்லி, தங்களுடைய விசுவாசமற்ற, ஒழுக்கக்கேடான செயல்களை சரியென பூசிமெழுகுகின்றனர். ஜனங்கள் கடவுளுடைய தயவை இழக்கும்படி அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். ‘அற்புதமான’ ஒரு காரியத்தால்—அவருடைய ‘விந்தையான செயலால்’—அவர்களுடைய மாய்மாலமான காரியங்களுக்கு யெகோவா கணக்கு கேட்பார். அவர் சொல்கிறார்: “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. ஆதலால், இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.” (ஏசாயா 29:13, 14) யூதாவின் விசுவாச துரோக மத அமைப்பு முழுவதும் பாபிலோனிய உலக வல்லரசால் அழிக்கப்படும்படி யெகோவா வழிநடத்தும்போது, யூதாவின் ஞானமும் விவேகமும் ஒன்றுமில்லாமல் அழிந்துபோகும். முதல் நூற்றாண்டிலும் இதுதான் நடந்தது. தங்கள் மனம்போன போக்கில் தறிகெட்டு நடந்த யூதாவின் தலைவர்களுடைய ஞானமும் விவேகமும் யூத தேசம் முழுவதையுமே அழிவுக்கு வழிநடத்தின. நம்முடைய நாட்களிலும், கிறிஸ்தவமண்டலத்திற்கு இதுதான் காத்திருக்கிறது.—மத்தேயு 15:8, 9; ரோமர் 11:8.
24 உண்மை வணக்கத்தை குலைத்துப்போடும் யூதாவின் தலைவர்கள், அதற்கான தண்டனையிலிருந்து தந்திரமாக தப்பிக்கொள்ளலாம் என பெருமையடித்துக் கொள்கிறார்கள். அது முடியுமா? அவர்களுடைய முகத்திரையை ஏசாயா கிழித்தெறிகிறார். உண்மையான கடவுள் பயம் அவர்களுக்கு இல்லை என்பதையும், அதனால் அவர்களிடத்தில் உண்மையான ஞானம் இல்லை என்பதையும் அவர் வெட்டவெளிச்சமாக்குகிறார்: “தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ! ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக் குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக் குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?” (ஏசாயா 29:15, 16; சங்கீதம் 111:10-ஐ ஒப்பிடுக.) மற்றவர்கள் கண்ணில் படாதபடி, தாங்கள் எவ்வளவுதான் மறைவிடத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டாலும், கடவுளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுடைய செயல்கள் அனைத்தும் ‘நிர்வாணமாயும் வெளியரங்கமாயும்’ இருக்கின்றன.—எபிரெயர் 4:13.
‘செவிடர் கேட்பர்’
25 என்றாலும், விசுவாசம் காண்பிக்கும் ஆட்களுக்கு இரட்சிப்பு உண்டு. (ஏசாயா 29:17-24-ஐ வாசிக்கவும்; லூக்கா 7:22-ஐ ஒப்பிடுக.) “செவிடர் புஸ்தகத்தின் வசனங்களை,” அதாவது கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் செய்தியை “கேட்பார்கள்.” காது கேட்காமல் இருப்போருக்கு காது கேட்கச் செய்யும் சரீர குணப்படுத்துதல் அல்ல இது; ஆவிக்குரிய குணப்படுத்துதலே. மேசியானிய ராஜ்யம் நிலைநாட்டப்படுவதையும் மேசியாவின் ஆட்சிமூலம் மெய் வணக்கம் பூமியில் திரும்பவும் புதுப்பிக்கப்படுவதையும் ஏசாயா மறுபடியும் சுட்டிக்காட்டுகிறார். இது நம்முடைய நாட்களில் நிகழ்ந்திருக்கிறது. உண்மை மனதுள்ள லட்சக்கணக்கானோர் யெகோவாவால் திருத்தப்படுவதற்கு தங்களை மனமுவந்து அளித்துள்ளனர். அதோடு, அவரை துதிப்பதற்கும் கற்றுவருகின்றனர். மெய்சிலிர்க்க வைக்கும் நிறைவேற்றமல்லவா! இறுதியாக, மனித குலத்தினர் எல்லாரும், சுவாசமுள்ள யாவும் யெகோவாவை துதித்து, அவருடைய பரிசுத்த நாமத்தை புனிதப்படுத்தும் நாள் வரும்.—சங்கீதம் 150:6.
26 கடவுளுடைய வார்த்தையிலுள்ள வசனத்தைக் கேட்கும் “செவிடர்” இன்று எதைக் கற்றுக்கொள்கிறார்கள்? எல்லா கிறிஸ்தவர்களும், முக்கியமாக சபையில் உள்ளவர்களுக்கு முன்மாதிரிகளாக திகழும் கிறிஸ்தவர்கள், “மதுபானத்தால் வழிதப்பிப்” போகாதபடி மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். (ஏசாயா 28:7) மேலும், கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை கேட்பதில் நாம் ஒருபோதும் சலிப்படையக் கூடாது. எல்லா விஷயங்களிலும் ஆவிக்குரிய நோக்குநிலையைக் கொண்டிருக்க உதவுவது கடவுளுடைய நினைப்பூட்டுதல்களே. கிறிஸ்தவர்கள், அரசியல் அதிகாரங்களுக்கு கீழ்ப்படிகிறார்கள். பொதுப்பணிகளுக்காக உலக அதிகாரங்களை எதிர்பார்த்தாலும், இரட்சிப்பு அவற்றிடமிருந்து கிடைக்காது. அது யெகோவா தேவனிடமிருந்துதான் வரும். அதோடு, விசுவாச துரோக எருசலேமின்மேல் வந்த நியாயத்தீர்ப்பை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அதுபோலவே, பொல்லாத ஜனங்களின்மீது வரப்போகும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பும் உறுதி. ஏசாயா செய்ததுபோலவே, எதிர்ப்புகள் வந்தாலும் யெகோவாவின் உதவியோடு அவருடைய எச்சரிக்கைகளை நாம் தொடர்ந்து அறிவிக்க முடியும்.—ஏசாயா 28:14, 22; மத்தேயு 24:34; ரோமர் 13:1-4.
27 யெகோவா சிட்சையளிக்கும் முறையிலிருந்து மூப்பர்களும் பெற்றோரும் நல்ல பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். தவறு செய்தவர்களை வெறுமனே தண்டிப்பது மட்டுமல்லாமல் அவர்களை மறுபடியும் கடவுளுடைய தயவிற்குள் கொண்டு வருவதையே நாட வேண்டும். (ஏசாயா 28:26-29; எரேமியா 30:11-ஐ ஒப்பிடுக.) மனிதர்களைப் பிரியப்படுத்துகிறவர்களாக, பெயருக்கு கிறிஸ்தவர்களாக இல்லாமல், முழு இருதயத்தோடு யெகோவாவை சேவிப்பது எவ்வளவு முக்கியம் என்பது இளைஞர் உட்பட நம் எல்லாருக்குமே நினைப்பூட்டப்படுகிறது. (ஏசாயா 29:13) விசுவாசமற்ற யூதாவின் குடிகளைப் போலன்றி, யெகோவாவிடம் நாம் ஆழ்ந்த மரியாதையும் பயபக்தியும் காட்ட வேண்டும். (ஏசாயா 29:16) மேலும், யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அவரால் திருத்தப்படவும் மனமுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதையும் நாம் காட்ட வேண்டும்.—ஏசாயா 29:24.
28 யெகோவாவிலும் அவரது வழிநடத்துதலிலும் விசுவாசமும் நம்பிக்கையும் வைப்பது எவ்வளவு முக்கியம்! (சங்கீதம் 146:3-ஐ ஒப்பிடுக.) நாம் பிரசங்கிக்கும் எச்சரிப்பின் செய்தி அநேகருக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றும். கடவுளை சேவிப்பதாக பெருமை பாராட்டும் அமைப்பாகிய கிறிஸ்தவ மண்டலத்திற்கு அழிவு வரப்போகிறது என்பது விநோதமாக, புதுமையாக தொனிக்கலாம். ஆனால், யெகோவா தம்முடைய ‘விந்தையான செயலை’ நிறைவேற்றுவார். அதைப் பற்றி கொஞ்சமும் சந்தேகமே வேண்டாம். எனவே, இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில், கடவுளுடைய ஊழியர்கள் அவருடைய ராஜ்யத்திலும் அவர் நியமித்திருக்கும் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவிலும் முழு நம்பிக்கை வைக்கின்றனர். யெகோவாவின் இரட்சிப்பின் செயல்கள், அதாவது அவருடைய ‘விந்தையான செயல்கள்’ கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர்.
[அடிக்குறிப்பு]
a மூல எபிரெயுவில், ஏசாயா 28:10-ல் ஒலிநயத்தோடுகூடிய சொற்கள் திரும்பத்திரும்ப வருவது செய்யுள் போன்று அமைந்துள்ளது. சிறுபிள்ளைகளின் நர்சரி பாடல்போன்று உள்ளது. எனவே, ஏசாயாவின் செய்தி அந்த மதத்தலைவர்களுக்கு திரும்பத்திரும்ப சொல்லும் சலிப்பூட்டும் வார்த்தைகளாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் ஒலித்தது.
[கேள்விகள்]
1, 2. இஸ்ரவேலும் யூதாவும் ஏன் பாதுகாப்பாய் உணருகின்றன?
3, 4. இஸ்ரவேலின் வட ராஜ்யம் எதைப் பற்றி பெருமைப்படுகிறது?
5. இஸ்ரவேலுக்கு என்ன ஆபத்தான நிலை உள்ளது, ஆனால் என்ன நம்பிக்கையை ஏசாயா கொடுக்கிறார்?
6. இஸ்ரவேல் எப்போது அழிக்கப்படுகிறது, ஆனால் அதைப் பார்த்து யூதா ஏன் கொக்கரிக்கக் கூடாது?
7. யூதாவின் தலைவர்கள் எந்த விதத்தில் குடித்து வெறித்திருக்கிறார்கள், அதன் விளைவு என்ன?
8. ஏசாயாவின் செய்திக்கு என்ன பிரதிபலிப்பு கிடைக்கிறது?
9, 10. எப்போது, எப்படி ஏசாயாவின் வார்த்தைகள் பின்வரும் சந்ததியினருக்கும் பொருத்தப்படுகின்றன?
11. கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்திக்கு, கிறிஸ்தவமண்டலத்தின் தலைவர்கள் எப்படி பிரதிபலிக்கின்றனர்?
12. யூதா ‘மரணத்தோடு வைத்திருந்த உடன்படிக்கை’ எது?
13. ‘பரீட்சிக்கப்பட்ட கல்’ யார், கிறிஸ்தவமண்டலம் அவரை ஏற்றுக்கொள்ள எப்படி மறுத்துள்ளது?
14. யூதா, ‘மரணத்தோடு வைத்திருந்த உடன்படிக்கை’ எப்போது விருதாவாக்கப்படும்?
15. யூதாவுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதை ஏசாயா எப்படி விளக்குகிறார்?
16. யெகோவாவின் ‘விந்தையான செயல்’ என்ன, அந்த செயல் ஏன் புதுமையானது?
17. பரியாசம் செய்தல், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் என்ன பாதிப்பை கொண்டிருக்கும்?
18. யெகோவா சரியான அளவில் சிட்சை அளிப்பதை ஏசாயா எப்படி விளக்குகிறார்?
19. எந்த விதத்தில் எருசலேம் “பலிபீடமாக” மாறும், எப்போது, எப்படி இது நிறைவேறுகிறது?
20. கடவுளுடைய எதிரிகளுக்கு முடிவில் என்ன நேரிடும்?
21. ஏசாயா 29:7, 8-லுள்ள உதாரணத்தை விளக்குங்கள்.
22. ஆவிக்குரிய விதத்தில் யூதா குடித்து வெறித்திருப்பதன் விளைவுகள் என்ன?
23. யெகோவா யூதாவிடம் ஏன் கணக்கு கேட்பார், அதை எப்படி நிறைவேற்றுவார்?
24. யூதாவின் குடிமக்கள் தங்கள் தேவபக்தியற்ற தன்மையை எப்படி வெளிக்காட்டுகின்றனர்?
25. “செவிடர்” என்ன அர்த்தத்தில் கேட்பர்?
26. என்ன ஆவிக்குரிய நினைப்பூட்டுதல்களை இன்று “செவிடர்” கேட்கின்றனர்?
27. ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து என்ன பாடங்களை கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்ளலாம்?
28. யெகோவாவின் இரட்சிப்பின் செயல்களை அவருடைய ஊழியர்கள் எப்படி கருதுகின்றனர்?
[பக்கம் 289-ன் படங்கள்]
கடவுள்மீது சார்ந்திருப்பதைவிட மனித ஆட்சியாளர்களோடு வைத்திருக்கும் அரசியல் கூட்டுறவுகளில்தான் கிறிஸ்தவமண்டலம் நம்பிக்கை வைத்துள்ளது
[பக்கம் 290-ன் படம்]
எருசலேமை அழிக்க பாபிலோனை அனுமதிக்கையில், யெகோவா தம்முடைய ‘விந்தையான செயலை’ நடப்பிக்கிறார்
[பக்கம் 298-ன் படம்]
ஆவிக்குரிய செவிடர்களால், கடவுளுடைய வார்த்தையை ‘கேட்க’ முடிகிறது