அதிகாரம் இருபத்து நான்கு
இந்த உலகிலிருந்து உண்மையான உதவி கிடைக்காது
எருசலேமின் குடிமக்கள் கதிகலங்கியிருக்கின்றனர். அதற்கு நல்ல காரணமும் இருக்கிறது! வல்லரசாக திகழும் அசீரியா, “யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப்” பிடித்திருக்கிறது. அடுத்தபடியாக, அசீரியப் படைகள், யூதாவின் தலைநகராகிய எருசலேமைத் தாக்க தயாராய் இருக்கின்றன. (2 இராஜாக்கள் 18:13, 17) இந்த நிலையில், எருசலேமின் குடிகளும் அவர்களுடைய ராஜாவாகிய எசேக்கியாவும் என்ன செய்வார்கள்?
2 எசேக்கியாவின் ஆட்சியின்கீழ் இருந்த பல பட்டணங்கள் ஏற்கெனவே அசீரியாவின் வலிமை மிக்க படைகளுக்கு இரையாகியிருக்கின்றன. அதனால், அந்தப் படைகளுக்கு எதிராக எருசலேம் எதுவுமே செய்ய முடியாது என்பதும் எசேக்கியாவுக்கு தெரியும். அதுமட்டுமல்ல, அசீரியர்கள் குரூரமாக சித்திரவதை செய்வதற்கும் வன்முறைக்கும் பெயர்போனவர்கள். அந்த தேசத்தின் படைகளுக்கு மற்ற எதிரிகள் அவ்வளவு நடுநடுங்கியதால், அந்தப் படைகளை எதிர்த்து போரிடாமலேயே புறமுதுகிட்டு ஓடுவர்! இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில், எருசலேமின் குடிகள் உதவிக்காக எங்கே செல்ல முடியும்? அசீரியப் படைகளிடமிருந்து தப்ப ஏதும் வழி உள்ளதா? கடவுளுடைய மக்கள், இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் எப்படி தள்ளப்பட்டனர்? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலைப் பெற, சரித்திரத்தின் ஏடுகளைப் பின்னோக்கிப் புரட்டிப் பார்க்க வேண்டும். பூர்வ காலங்களில், தாம் உடன்படிக்கை செய்துகொண்ட தேசத்தை யெகோவா எப்படி நடத்தினார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்ரவேலின் விசுவாச துரோகம்
3 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட சமயத்திலிருந்து தாவீதின் குமாரன் சாலொமோன் இறந்தது வரையாக, கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு மட்டுமே, இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும் ஐக்கியமாக ஒரே தேசமாக இருந்தன. சாலொமோனின் மரணத்திற்குப் பிறகு, வட திசையிலிருந்த பத்து கோத்திரத்தை தாவீதின் வீட்டாருக்கு எதிராக கலகம் செய்யும்படி யெரொபெயாம் தூண்டினான். அதுமுதல், இஸ்ரவேல் தேசம் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிந்தது. இது பொ.ச.மு. 997-ல் நடந்தது.
4 வடதிசை ராஜ்யமாகிய இஸ்ரவேலின் முதல் அரசன் யெரொபெயாம். அவன், ஆரோனிய ஆசாரியத்துவத்திற்கு பதிலாக முறைகேடான ஆசாரியத்துவத்தை ஆரம்பித்தான். நியாயப்பிரமாண சட்டத்திற்குட்பட்ட யெகோவாவின் வணக்கத்திற்கு பதில் கன்றுக்குட்டி வணக்கத்தை துவக்கினான். இப்படியாக, அவன் தன் குடிமக்களை விசுவாச துரோகத்திற்கு வழிநடத்தினான். (1 இராஜாக்கள் 12:25-33) இது யெகோவாவுக்கு அருவருப்பாய் இருந்தது. (எரேமியா 32:30, 35) இந்த காரணத்திற்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும், அசீரியா இஸ்ரவேலை அடக்கி கீழ்ப்படுத்த யெகோவா அனுமதித்தார். (2 இராஜாக்கள் 15:29) அசீரியாவின் நுகத்தடியை முறிக்க ஓசெயா ராஜா எகிப்தோடே இரகசிய ஒப்பந்தம் செய்தான். ஆனால், அந்த இரகசிய திட்டம் தோல்வியடைந்தது.—2 இராஜாக்கள் 17:4.
இஸ்ரவேல் பொய்யான புகலிடம் தேடி செல்லுதல்
5 இஸ்ரவேலர்கள் மனந்திரும்பி அவரிடமாக மறுபடியும் வரவேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார்.a எனவே, பின்வரும் எச்சரிக்கையோடு ஏசாயா தீர்க்கதரிசியை அவர் அனுப்புகிறார்: “சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப் போய், குதிரைகள்மேல் நம்பிக்கை வைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 31:1) எவ்வளவு பரிதாபமான நிலை! ஜீவனுள்ள தேவனாகிய யெகோவாவின்மேல் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக குதிரைகள், இரதங்கள்மீது இஸ்ரவேலர் அதிக நம்பிக்கை வைக்கின்றனர். இஸ்ரவேலர்களுடைய கருத்தில், எகிப்தின் குதிரைகள் அநேகமாயும் வலிமை வாய்ந்தவையாயும் உள்ளன. அசீரியப் படைகளை எதிர்ப்பதற்கு ஏற்ற படையாக நிச்சயம் எகிப்து இருக்கும்! என்றாலும், எகிப்தோடு தாங்கள் செய்த இரகசிய கூட்டுறவு ஒன்றுக்கும் உதவாது என்பதை இஸ்ரவேலர்கள் விரைவில் கற்றுக்கொள்வர்.
6 நியாயப்பிரமாணச் சட்டத்தின் மூலம், இஸ்ரவேல் மற்றும் யூதாவின் குடிமக்கள் யெகோவாவோடு ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவுக்குள் இருக்கின்றனர். (யாத்திராகமம் 24:3-8; 1 நாளாகமம் 16:15-17) உதவிக்காக எகிப்திடம் சென்றதிலிருந்து, இஸ்ரவேலர்களின் விசுவாசக் குறைவு அப்பட்டமாக தெரிகிறது. பரிசுத்த உடன்படிக்கையின் பாகமாக இருந்த சட்டங்களுக்கு அவமரியாதையையும் காட்டுகின்றனர். ஏன்? ஏனென்றால், யெகோவாவுக்கு அவர்கள் தனிப்பட்ட பக்தியை செலுத்தினால், காப்பாற்றப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் அந்த உடன்படிக்கையின் விதிகளில் உட்பட்டிருந்தது. (லேவியராகமம் 26:3-8) அந்த வாக்குறுதிக்கு இசைவாக, ‘இக்கட்டுக்காலத்திலே அவர்களுடைய அடைக்கலமாய்’ யெகோவா பலமுறை நிரூபித்திருக்கிறார். (சங்கீதம் 37:39; 2 நாளாகமம் 14:2, 9-12; 17:3-5, 10) மேலும், இஸ்ரவேலை ஆளப்போகும் அரசர்கள் தங்களுக்காக குதிரைகளை சம்பாதித்துக்கொள்ள வேண்டாம் என நியாயப்பிரமாண சட்டத்தின் மத்தியஸ்தராக இருந்த மோசேயின்மூலம் யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (உபாகமம் 17:16) பாதுகாப்பிற்காக ‘இஸ்ரவேலின் பரிசுத்தரையே’ நம்பி இருப்பதை இந்த சட்டத்திற்கு கீழ்ப்படிவதன்மூலம் அந்த அரசர்கள் காண்பிக்க முடியும். ஆனால், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், இஸ்ரவேலின் அரசர்கள் அப்படிப்பட்ட விசுவாசத்தைக் காண்பிக்கவில்லை.
7 இன்று கிறிஸ்தவர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள ஒரு பாடம் உள்ளது. கண்முன்னால் இருந்த எகிப்திடமே உதவிக்காக இஸ்ரவேல் தேசம் சென்றது. ஆனால், அதைவிட பலமடங்கு சக்திவாய்ந்த யெகோவாவின் உதவியையோ அது அசட்டை செய்தது. அதைப் போலவே இன்றும், யெகோவாவின்மேல் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக, மாம்சப்பிரகாரமான பாதுகாப்பு பெட்டகங்களாகிய வங்கி சேமிப்பு, சமூக அந்தஸ்து, உலகத்தில் பிரபலமானவர்களோடு வைத்துக்கொள்ளும் சிநேகம் ஆகிய இவற்றின் மேலேயே கிறிஸ்தவர்களும் தங்கள் நம்பிக்கையை வைக்கும்படி சோதிக்கப்படலாம். தங்கள் குடும்பங்களுடைய பொருள் சம்பந்தமான தேவைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கிறிஸ்தவ குடும்பத் தலைவர்களுக்கு இருக்கிறதென்பது உண்மையே. (1 தீமோத்தேயு 5:8) ஆனாலும், அவர்கள் தங்கள் நம்பிக்கையை பணத்தின்மீதும் பொருளின்மீதுமே வைப்பதில்லை. மேலும், “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு” அவர்கள் எச்சரிக்கையாய் இருக்கின்றனர். (லூக்கா 12:13-21, பொ.மொ.) ‘நெருக்கப்படும் காலங்களில் தஞ்சமாய்’ இருப்பவர் யெகோவா தேவனே.—சங்கீதம் 9:9; 54:7.
8 இஸ்ரவேலின் தலைவர்கள் எகிப்தோடு செய்த இரகசிய ஒப்பந்தத்தை ஏசாயா ஏளனம் செய்கிறார். அவர் சொல்வதாவது: “அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல் [“வாபஸ்பெறாமல்,” NW], தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.” (ஏசாயா 31:2) தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என யூதாவின் தலைவர்கள் நினைக்கலாம். ஆனால், சர்வத்தையும் படைத்தவரே ஞானத்தில் நிகரற்றவர் அல்லவா? மனிதர்களுடைய கருத்தில் பார்க்கப்போனால், எகிப்திடமிருந்து உதவி பெறும் இஸ்ரவேலின் திட்டம் மிகச் சிறந்த போர் தந்திரங்களுள் ஒன்று. ஆனால், யெகோவாவின் பார்வையிலோ, இப்படிப்பட்ட அரசியல் கூட்டுறவு ஆவிக்குரிய விபசாரத்திற்கு சமம். (எசேக்கியேல் 23:1-10) அதன் விளைவாக, யெகோவா ‘தீங்கை வரப்பண்ணுவார்’ என ஏசாயா குறிப்பிடுகிறார்.
9 மனித வாக்குறுதிகள் அனைத்தும் நம்ப முடியாதவை. மனித பாதுகாப்பு நிச்சயமற்றது. மறுபட்சத்தில், யெகோவாவோ ‘தம்முடைய வார்த்தைகளை வாபஸ்பெற வேண்டியது’ இல்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் சொன்னது கட்டாயம் நடக்கும்.—ஏசாயா 55:10, 11; 14:24.
10 எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு நம்பத்தக்க பாதுகாப்பாக நிரூபிப்பார்களா? இல்லை. ஏசாயா இஸ்ரவேலர்களுக்கு சொல்வதாவது: “எகிப்தியர் தெய்வம் அல்ல; மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.” (ஏசாயா 31:3) உதவி செய்தவனும் (எகிப்து) உதவியைப் பெற்றவர்களும் (இஸ்ரவேல்) இடறி விழுந்து, அழிந்துபோவார்கள். அசீரியப் படைகளைக்கொண்டு யெகோவா நியாயத்தீர்ப்பை வழங்கும்போது இப்படியாகும்.
சமாரியாவின் வீழ்ச்சி
11 இஸ்ரவேல் மனந்திரும்பி, மெய் வணக்கத்துக்கு திரும்பும்படி, யெகோவா இரக்கத்தோடு மறுபடியும் மறுபடியும் தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். (2 இராஜாக்கள் 17:13) இருந்தாலும், கன்றுக்குட்டி வணக்கத்தோடு, குறிபார்த்தல், ஒழுக்கக்கேடான பாகால் வணக்கம், மேடான இடங்களில் பாகாலுக்கு பலி செலுத்துவது, விக்கிரகத் தோப்புகளை உண்டாக்குவது என்று பாவத்துக்குமேல் பாவங்களாக இஸ்ரவேலர்கள் அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அக்கிரமங்களின் உச்சக்கட்டமாக இஸ்ரவேலர்கள் “தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி,” தங்கள் மாம்சத்தின் பலனை பேய்க் கடவுட்களுக்கு பலி செலுத்துகிறார்கள். (2 இராஜாக்கள் 17:14-17; சங்கீதம் 106:36-39; ஆமோஸ் 2:8) இஸ்ரவேலின் துன்மார்க்கத்திற்கு முடிவு கொண்டுவர, யெகோவா பிறப்பிக்கும் ஆணை இதுவே: “சமாரியாவும் அதன் ராஜாவும் தண்ணீரின்மேல் இருக்கிற கிள்ளியெறியப்பட்ட சிறுகிளைபோல அடங்கி ஒடுங்கிப்போவான்.” (ஓசியா 10:1, 7, NW) பொ.ச.மு. 742-ல், இஸ்ரவேலின் தலைநகர் சமாரியாவை அசீரியப் படைகள் தாக்குகின்றன. மூன்று வருட முற்றுகைக்குப்பின், அது வீழ்கிறது. பொ.ச.மு. 740-ல், பத்து கோத்திர ராஜ்யம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகிறது.
12 நம்முடைய நாட்களில், உலகளாவிய பிரசங்க வேலையை யெகோவா கட்டளையிட்டிருக்கிறார். ‘எங்குமுள்ள மனுஷரெல்லாரும் மனந்திரும்ப’ எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். (அப்போஸ்தலர் 17:30; மத்தேயு 24:14) கடவுளுடைய இரட்சிப்பின் மார்க்கத்தை மறுப்போர், “கிள்ளியெறியப்பட்ட சிறுகிளைபோல” ஆவார்கள்; விசுவாச துரோக இஸ்ரவேல்போல அழிக்கப்படுவார்கள். மறுபட்சத்தில், யெகோவாவில் நம்பிக்கை வைப்போரோ, “பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) பூர்வ இஸ்ரவேல் ராஜ்யம் செய்த தவறுகளை தவிர்ப்பது எவ்வளவு ஞானமானது! இரட்சிப்புக்காக யெகோவாவையே முழுமையாய் நம்புவோமாக!
யெகோவாவின் இரட்சிக்கும் வல்லமை
13 யூதாவின் தலைநகராகிய எருசலேம் இஸ்ரவேலின் தெற்கு எல்லையிலிருந்து ஒருசில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சமாரியாவுக்கு நேர்ந்த அவலத்தை எருசலேமின் குடிகள் நன்கு அறிந்திருக்கிறார்கள். வடதிசையிலிருந்த தங்கள் அண்டை தேசத்தை அடியோடு நாசமாக்கிய அதே எதிரி இப்போது இவர்களுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்கிறான். சமாரியாவுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து அவர்கள் ஏதாவது கற்றுக்கொள்வார்களா?
14 அடுத்தபடியாக வரும் ஏசாயாவின் வார்த்தைகள் எருசலேம் குடிகளுக்கு ஆறுதலை தருகின்றன. தம் உடன்படிக்கையின் ஜனங்களை யெகோவா இன்னும் நேசிக்கிறார் என்பதை ஏசாயா உறுதிசெய்கிறார்: “கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.” (ஏசாயா 31:4) பாலசிங்கம் தன் இரையை காப்பதுபோல, தம் பரிசுத்த நகராகிய சீயோனை யெகோவா தேவன் மிக வைராக்கியமாக காப்பார். அசீரியப் படை பெருமை அடித்துக்கொள்வதோ, அதன் பயமுறுத்தும் வார்த்தைகளோ, அல்லது அது உண்டாக்கும் வேறே எந்த கலவரமோ யெகோவாவின் நோக்கத்தை மாற்ற முடியாது.
15 எருசலேமின் குடிகளை எப்படி கனிவோடும் கரிசனையோடும் யெகோவா நடத்துவார் என்பதை அடுத்து வரும் வார்த்தைகள் விளக்குகின்றன: “பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார் [“தண்டிக்காமல் தப்புவிப்பார்,” பொ.மொ.].” (ஏசாயா 31:5) தாய்ப்பறவை, தன் குஞ்சுகளை எப்போதும் கண்ணும்கருத்துமாய் காக்கும். தன் குஞ்சுகளின்மேல் தன் செட்டைகளை படபடத்து விரிக்கும். எந்த ஆபத்தும் வந்துவிடாதபடி உன்னிப்பாய் கவனிக்கும். குஞ்சுகளைத் தாக்க ஏதும் எதிரிகள் வந்தால், உடனடியாக பாய்ந்து விரட்டும். அதைப்போலவே, யெகோவாவும் எருசலேமின் குடிகளை பரிவோடு காப்பார். அவர்களை தாக்க வரும் அசீரியப் படைகளிடமிருந்து விடுவிப்பார்.
“இஸ்ரவேல் புத்திரரே . . . திரும்புங்கள்”
16 தம் மக்கள் பாவம் செய்ததை நினைப்பூட்டி, தங்கள் கேடான வழிகளைவிட்டு மனந்திரும்பும்படி யெகோவா அவர்களை உற்சாகப்படுத்துகிறார்: “இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.” (ஏசாயா 31:6) யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்வது பத்து கோத்திர இஸ்ரவேல் ராஜ்யம் மட்டுமே அல்ல. ‘இஸ்ரவேல் புத்திரராகிய’ யூதாவின் மக்களும் ‘முற்றிலுமாக விட்டுவிலகியிருக்கின்றனர்.’ ஏசாயா இந்த தீர்க்கதரிசன செய்தியை சொல்லி முடித்த சிறிது காலத்திலேயே அதாவது எசேக்கியாவின் மகன் மனாசே ராஜாவாகும்போது அது வெளிப்படையாக தெரியும். பைபிள் பதிவின்படி, “கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப் பண்ணினான்.” (2 நாளாகமம் 33:9) இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்! பொய் வணக்கத்தில் ஊறிப்போயிருந்த தேசங்களை அவற்றின் அருவருப்பான செயல்களுக்காக யெகோவா அழிக்கிறார். யெகோவாவோடு ஓர் உடன்படிக்கைக்குள் இருக்கும் யூதாவின் குடிகளோ, அந்த தேசங்களைவிட மிக மோசமான காரியங்களை செய்கின்றனர்.
17 மனாசேயின் நாட்களில் யூதாவில் நிலவிய அதேநிலைதான் இப்போதும், அதாவது இந்த 21-ம் நூற்றாண்டில் காலெடுத்து வைத்திருக்கும் இந்த சமயத்திலும் இருக்கிறது. மதம், ஜாதி, இனம் போன்றவற்றின் அடிப்படையில் உள்ள துவேஷத்தால் உலகமே இன்று சின்னாபின்னமாகி இருக்கிறது. குரூரமான கொலைகள், சித்திரவதை, கற்பழிப்பு, இனப்படுகொலை போன்ற கொடூர செயல்களுக்கு லட்சக்கணக்கானோர் பலியாகி இருக்கின்றனர். இப்படியாக, ஜனங்களும் தேசங்களும், முக்கியமாக கிறிஸ்தவமண்டல நாடுகள் எல்லாம் கடவுளை ‘முற்றிலுமாக விட்டுவிலகி இருக்கின்றனர்.’ இதில் சிறுதுளிகூட சந்தேகமே இல்லை. என்றாலும், காலவரையறையின்றி துன்மார்க்கம் தொடரும்படி யெகோவா அனுமதிக்க மாட்டார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். ஏன்? ஏனென்றால், ஏசாயாவின் நாட்களில் என்ன நடந்ததோ அது நமக்கு உறுதியை அளிக்கிறது.
எருசலேம் விடுவிக்கப்படுகிறது
18 போர்முனையில் தாங்கள் பெற்ற எல்லா வெற்றிகளுக்கும் காரணம் தங்கள் கடவுட்களே என அசீரிய ராஜாக்கள் அவற்றிற்கே பெருமை சேர்த்தனர். அஷூர்பானிபல் என்ற அசீரியப் பேரரசனின் பதிவுகள் ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ் என்ற புத்தகத்தில் உள்ளன. “மிகப் பெரிய போரில் . . . (போர் நுணுக்கங்கள் நன்கு அறிந்த) வீரர்களை [அவர்] வீழ்த்த, [அவருக்கு] பக்கபலமாய் (எப்போதும்) இருந்த, அஷூர், பெல், நேபோ போன்ற [அவருடைய] கடவுட்களே, மகா கடவுட்களே” காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏசாயாவின் நாட்களில், அசீரியாவின் ராஜா சனகெரிப்பின் பிரதிநிதியாக ரப்சாக்கே வருகிறான். மனிதர்களுக்கிடையே வரும் போர்களில் கடவுட்களுக்கும் பங்கு இருக்கிறதென்பதை எசேக்கியா ராஜாவிடம் பேசும்போது அவன் சுட்டிக்காட்டுகிறான். இரட்சிப்புக்காக யெகோவாவின்மேல் சார்ந்திருப்பது வீண் என யூதாவின் ராஜாவை அவன் எச்சரிக்கிறான். வலிமை மிக்க அசீரியப் படைகளிடமிருந்து காப்பதில் மற்ற தேசங்களின் கடவுட்கள் தோல்வியடைந்தன என்பதையும் அவன் சுட்டிக்காட்டுகிறான்.—2 இராஜாக்கள் 18:33-35.
19 எசேக்கியா ராஜா இதைக் கேட்கையில் என்ன செய்கிறார்? பைபிள் பதிவு சொல்கிறது: ‘ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்தார்.’ (2 இராஜாக்கள் 19:1) திகிலூட்டும் இந்த சமயத்தில், கடவுள் ஒருவரால் மட்டுமே தனக்கு உதவ முடியும் என்பதை எசேக்கியா அறிந்திருக்கிறார். அவர் தன்னைத்தானே தாழ்த்தி, வழிநடத்துதலுக்காக யெகோவாவை நாடுகிறார்.
20 அவர் நாடிய உதவியை யெகோவா அளிக்கிறார். ஏசாயா தீர்க்கதரிசி மூலம் அவர் சொல்கிறார்: “உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த பயனற்ற வெள்ளி விக்கிரகங்களையும், மதிப்பற்ற பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.” (ஏசாயா 31:7, NW) யெகோவா தம் மக்களுக்காக யுத்தம் பண்ணுகையில், சனகெரிப்பின் கடவுட்களுடைய முகத்திரை கிழிக்கப்படும். அவை ஒன்றுக்கும் உதவாதவை என்பது அம்பலமாக்கப்படும். யூதாவின் குடிகள் இந்தப் பாடத்தை இருதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். எசேக்கியா ராஜா விசுவாசத்தோடு இருந்தபோதிலும், இஸ்ரவேலைப் போலவே யூதாவும் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறது. (ஏசாயா 2:5-8) யெகோவாவோடு மறுபடியும் ஒரு நல்ல உறவிற்குள் வர வேண்டுமென்றால், யூதாவின் குடிகள் தங்கள் பாவங்களைவிட்டு விலகி மனந்திரும்ப வேண்டும். மேலும், ‘ஒவ்வொருவரும் தங்கள் பயனற்ற விக்கிரக’ கடவுட்களை வெறுத்துத் தள்ள வேண்டும்.—யாத்திராகமம் 34:14-ஐக் காண்க.
21 யூதாவை அச்சுறுத்திய எதிரிகளுக்கு எதிராக யெகோவா நிறைவேற்றப்போகிற நியாயத்தீர்ப்பைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாக விவரிக்கிறார். “அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; மனிதருடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.” (ஏசாயா 31:8) நியாயத்தீர்ப்பு நிறைவேறுகையில், தங்கள் பட்டயங்களை அவற்றின் உறையிலிருந்துகூட எருசலேமின் குடிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அசீரியப் படையின் சிறந்த வீரர்கள், வலிமை வாய்ந்த வீரர்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். மனிதனுடைய பட்டயத்தினால் அல்ல; யெகோவாவின் பட்டயத்தாலே. அசீரிய ராஜாவாகிய சனகெரிப்போ ‘பட்டயத்துக்குத் தப்ப ஓடுகிறான்.’ அவனுடைய வீரர்களில் 1,85,000 பேர், யெகோவாவின் தூதர் ஒருவரால் மடிந்துபோகவே, அவன் திரும்பி தன் நாட்டிற்கு போய்விடுகிறான். பின்னர், அவன் தன் கடவுளாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்கையில், அவனுடைய குமாரர்களாலேயே கொல்லப்படுகிறான்.—2 இராஜாக்கள் 19:35-37.
22 அசீரியப் படைகளிடமிருந்து எருசலேமை என்ன வழியில் யெகோவா காப்பாற்றுவார் என்பதை எசேக்கியா உட்பட, யாருமே யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. என்றபோதிலும், அந்த இக்கட்டான சூழ்நிலையில் எசேக்கியா எப்படி நடந்துகொண்டார் என்பது, இன்று சோதனைகளை எதிர்ப்படும் அனைவருக்கும் மிகச் சிறந்த உதாரணம். (2 கொரிந்தியர் 4:16-18) எருசலேமை அச்சுறுத்திக்கொண்டிருந்த அசீரியப் படைகள் எந்தளவு கொடூரமானது என்பதை எசேக்கியாவும் அறிந்திருந்ததால், அவர் மிகவும் கலங்கியிருந்தார். (2 இராஜாக்கள் 19:3) இருந்தபோதிலும், அவர் யெகோவாவில் விசுவாசம் வைத்தார். மனிதனுடைய வழிநடத்துதலையல்ல, கடவுளுடைய வழிநடத்துதலையே நாடினார். அவர் அவ்வாறு செய்தது எருசலேமுக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக முடிந்தது! இன்றும் கடவுள் பயமுள்ள கிறிஸ்தவர்கள், இக்கட்டான சூழ்நிலையில் உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவதிப்படலாம். அநேக சந்தர்ப்பத்தில், பயம் நம்மை ஆட்டிப்படைக்கலாம். இருந்தாலும், ‘நம் கவலைகளையெல்லாம் யெகோவாவின்மேல் வைத்து’ விட்டோமானால், அவர் நம்மை பாதுகாப்பார். (1 பேதுரு 5:7) பயத்தை மேற்கொள்ளவும் எவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையாய் இருந்தாலும் அதை சமாளிக்கவும் பலத்தைத் தருவார்.
23 முடிவில், பயந்து நடுங்குவது எசேக்கியா அல்ல, சனகெரிப்தான். உதவிக்காக யாரிடம் அவன் திரும்புவான்? ஏசாயா பதிலைத் தருகிறார்: “அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 31:9) ஆபத்தில் அடைக்கலமாய், அதாவது ‘கன்மலையாய்’ உதவும் என நம்பிய சனகெரிப்பின் கடவுட்கள், அவனைக் கைவிட்டுவிடுகின்றன. அவை ‘பயத்தினால் ஒழிந்துபோகின்றன’ என்றே சொல்லலாம். அது மட்டுமா, சனகெரிப்பின் பிரபுக்களும் உதவவில்லை. அவர்களும் பயத்தில் கலங்கிப்போகிறார்கள்.
24 ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதி, கடவுளை எதிர்க்கும் எல்லாருக்குமே தெளிவான ஒரு செய்தியை அளிக்கிறது. யெகோவாவின் நோக்கங்களை எந்த ஆயுதமோ, எந்த சக்தியோ, எந்த சூழ்ச்சியோ முறியடிக்க முடியாது. (ஏசாயா 41:11, 12) அதேசமயம், கடவுளை சேவிப்பதாக பெருமை பாராட்டிக்கொண்டு, மனித திட்டங்களில் பாதுகாப்பைத் தேடி, கடவுளைவிட்டு விலகும் அனைவருமே ஏமாற்றத்தைத்தான் எதிர்ப்பட வேண்டும். ‘சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காதோர்’ அனைவருக்குமே யெகோவா ‘தீங்கைதான் வரப்பண்ணுவார்.’ (ஏசாயா 31:1, 2) மெய்யான, நிரந்தரமான அடைக்கலம் யெகோவா தேவன் ஒருவரே.—சங்கீதம் 37:5.
[அடிக்குறிப்பு]
a ஏசாயா 31-ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்கள் முக்கியமாக இஸ்ரவேலுக்கும் கடைசி ஆறு வசனங்கள் யூதாவுக்கும் பொருந்துவதுபோல் தோன்றுகிறது.
[கேள்விகள்]
1, 2. (அ) எருசலேமின் குடிகள் ஏன் கலங்குகின்றனர்? (ஆ) எருசலேமின் இக்கட்டான சூழ்நிலையில், என்ன கேள்விகள் எழுகின்றன?
3, 4. (அ) இஸ்ரவேல் தேசம் எப்படி, எப்போது இரண்டு ராஜ்யங்களாகப் பிரிந்தது? (ஆ) பத்து கோத்திர வடதிசை ராஜ்யத்தை என்ன தீய வழிகளில் யெரொபெயாம் வழிநடத்தினான்?
5. உதவிக்காக யாரிடம் இஸ்ரவேல் திரும்புகிறது?
6. இஸ்ரவேல் எகிப்திடம் உதவிக்காக போவது, எப்படி யெகோவாவில் விசுவாசக்குறைவை அப்பட்டமாகக் காட்டுகிறது?
7. இஸ்ரவேலின் விசுவாசக் குறைவிலிருந்து இன்று கிறிஸ்தவர்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்?
8, 9. (அ) இஸ்ரவேலின் இரகசியத் திட்டங்கள் போர்முறைமையின்படி சிறந்ததாக இருந்தாலும், அதன் விளைவு என்னவாக இருக்கும், ஏன்? (ஆ) மனித வாக்குறுதிகளுக்கும் யெகோவாவின் வாக்குறுதிகளுக்கும் என்ன வித்தியாசம்?
10. எகிப்துக்கும் இஸ்ரவேலுக்கும் என்ன நேரிடும்?
11. பாவங்களின் என்ன பதிவை இஸ்ரவேல் பெருக்கிக்கொண்டே போகிறது, அதன் விளைவு என்ன?
12. என்ன வேலையை இன்று செய்யும்படி யெகோவா கட்டளையிட்டிருக்கிறார், எச்சரிக்கையை அவமதிப்போருக்கு என்ன நேரிடும்?
13, 14. சீயோனுக்கு என்ன ஆறுதலான வார்த்தைகளை யெகோவா கூறுகிறார்?
15. எருசலேமின் குடிகளோடு எப்படி கனிவாகவும் இரக்கத்தோடும் யெகோவா நடந்துகொள்கிறார்?
16. (அ) தம் மக்களுக்கு என்ன அன்பான அழைப்பை யெகோவா தருகிறார்? (ஆ) யூதாவின் குடிகளுடைய கலகத்தனம் எப்போது வெளிப்படையாக தெரிகிறது? விளக்கவும்.
17. மனாசேயின் ஆட்சியின்போது யூதாவில் நிலவிய நிலைமைகளையும் இன்றைய நிலைமைகளையும் எப்படி ஒப்பிடலாம்?
18. எசேக்கியாவுக்கு என்ன எச்சரிக்கையை ரப்சாக்கே கொடுக்கிறான்?
19. ரப்சாக்கேவின் நிந்தனைக்கு எசேக்கியா எப்படி பிரதிபலிக்கிறார்?
20. யூதாவின் குடிகள் சார்பாக யெகோவா எப்படி செயல்படுவார், இதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
21. அசீரியாவுக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பை ஏசாயா எப்படி தீர்க்கதரிசனமாக விவரிக்கிறார்?
22. அசீரியப் படைகள், எசேக்கியா உட்பட்ட சம்பவங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் இன்று என்ன கற்றுக்கொள்ளலாம்?
23. எசேக்கியா அல்ல, சனகெரிப் எப்படி பயந்து நடுங்குகிறான்?
24. அசீரியர்களுக்கு ஏற்பட்டதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளப்பட வேண்டும்?
[பக்கம் 319-ன் படம்]
பணத்தையும் பொருளையும் நம்புபவர்கள் நிச்சயம் ஏமாற்றம்தான் அடைவர்
[பக்கம் 322-ன் படம்]
சிங்கம் தன் இரையை காப்பதுபோல, யெகோவா தம் பரிசுத்த நகரத்தை காப்பார்
[பக்கம் 324-ன் படங்கள்]
மதம், ஜாதி, இனம் போன்றவற்றின் அடிப்படையில் எழும் துவேஷத்தால் உலகம் சின்னாபின்னமாகி இருக்கிறது
[பக்கம் 326-ன் படம்]
உதவிக்காக யெகோவாவின் ஆலயத்திற்கு எசேக்கியா சென்றார்