அதிகாரம் இருபத்து ஐந்து
ராஜாவும் அவரது பிரபுக்களும்
பாலஸ்தீனாவில், 1940-களின் முடிவில், சவக்கடலுக்கு அருகே உள்ள குகைகளில் குறிப்பிடத்தக்க சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை சவக்கடல் சுருள்கள் என அழைக்கப்பட்டன. சுமார் பொ.ச.மு. 200-க்கும் பொ.ச. 70-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவை எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவற்றுள் நன்கு அறியப்பட்ட ஒன்று ஏசாயாவின் சுருள் ஆகும். அது எபிரெய மொழியில் தோல் சுருள்களில் எழுதப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஏசாயா புத்தகம் முழுவதும் இந்தச் சுருளில் காணப்படுகிறது. இந்தச் சுருள்கள் எழுதப்பட்டு சுமார் 1,000 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டவையே மசோரிட்டிக் கையெழுத்துப்பிரதிகள். இவற்றின் வாசகங்களோடு ஒப்பிட்டால், சவக்கடல் சுருள்களின் வாசகங்களில் பெரிதான மாற்றம் ஏதுமில்லை. எனவே, பைபிள் வாசகங்களைத் துல்லியமாக நாம் பெற்றிருக்கிறோம் என்பதற்கு இந்தச் சுருள்களே மிகச் சிறந்த அத்தாட்சி.
2 ஏசாயாவின் சவக்கடல் சுருள் பற்றிய தனிச்சிறப்பு வாய்ந்த தகவல் என்னவென்றால், இன்று ஏசாயா அதிகாரம் 32 என அறியப்படும் பகுதியை “X” என வேதபாரகர் ஒருவர் ஓரத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த வேதபாரகர் ஏன் அப்படி குறித்தார் என்பதற்கான காரணம் நமக்கு தெரியவில்லை. ஆனால், பரிசுத்த பைபிளின் அந்த பகுதியைப் பற்றி ஏதோ சிறப்பு அம்சம் இருக்கிறதென்பது மட்டும் நமக்கு தெரிகிறது.
நீதியான, நியாயமான ஆட்சி
3 ஏசாயா 32-ம் அதிகாரம் பரபரப்பூட்டும் ஒரு தீர்க்கதரிசனத்தோடு ஆரம்பிக்கிறது. அந்த வார்த்தைகள் இன்று சிறப்பான முறையில் நிறைவேற்றம் அடைந்து வருகின்றன. “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள்.” (ஏசாயா 32:1) ‘இதோ!’ என வியப்புடன் ஒலிக்கும் இந்த வார்த்தை எதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறது? இதேமாதிரி வியப்பை தெரிவிக்கும் வார்த்தை, பைபிளின் கடைசி தீர்க்கதரிசன புத்தகத்தில் இருப்பது ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? ‘சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.’ (வெளிப்படுத்துதல் 21:5) பைபிளிலுள்ள ஏசாயா புத்தகமும் வெளிப்படுத்துதல் புத்தகமும் வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்பட்டவை. இரு புத்தகங்களுக்கும் இடையே சுமார் 900 வருடங்கள் இடைவெளி உள்ளது. என்றபோதிலும், இரு புத்தகங்களுமே ‘புதிய வானத்தைப்’ பற்றி, அதாவது புதியதோர் ஆட்சிமுறையைப் பற்றி விவரிக்கின்றன. 1914-ல் பரலோகங்களில் ராஜாவாக அமர்த்தப்பட்ட கிறிஸ்து இயேசுவும், “பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட” அவருடைய உடன் அரசர்களான 1,44,000 பேரும் சேர்ந்ததே இந்தப் புதிய ஆட்சிமுறை. அதோடு, ‘புதிய பூமியை’ அதாவது ஐக்கியப்பட்ட, உலகளாவிய மனித சமுதாயத்தைப் பற்றியும் அந்த இரு புத்தகங்கள் விவரிக்கின்றன.a (வெளிப்படுத்துதல் 14:1-4; 21:1-4; ஏசாயா 65:17-25) இந்த ஏற்பாடு முழுவதுமே கிறிஸ்துவின் கிரய பலியால்தான் சாத்தியம்.
4 1,44,000 உடன் அரசர்களை முத்திரை போட்டு முடிப்பதை தரிசனத்தில் கண்ட பிறகு, அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரள்கூட்டமாகிய ஜனங்கள் . . . சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.’ புதிய பூமியின் அஸ்திவாரமாக அமைவது இவர்களே. இப்போது லட்சக்கணக்கில் இருக்கும் இந்த திரள்கூட்டத்தார், 1,44,000 பேரில் மீதியாய் இருப்பவர்கள் பக்கமாக கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்த மீதியானவர்களில் பெரும்பாலானோர் இப்போது மிகவும் வயதானவர்களாக இருக்கின்றனர். விரைவில் வர இருக்கிற மகா உபத்திரவத்தை திரள்கூட்டத்தார் தப்பிப்பிழைப்பார்கள். புதிய உலகில் உயிர்த்தெழுந்து வரும் விசுவாசிகளை இவர்கள் வரவேற்பார்கள். மேலும், உயிர்த்தெழுப்பப்படும் கோடிக்கணக்கானோரும் தங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள சந்தர்ப்பத்தைப் பெறுவர். விசுவாசமுள்ள அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவர்.—வெளிப்படுத்துதல் 7:4, 9-17.
5 என்றபோதிலும், இந்தப் பகை நிறைந்த உலகம் இருக்கும்வரை, திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு தேவை. ‘நியாயமாகத் துரைத்தனம் பண்ணும் பிரபுக்களால்’ இந்த பாதுகாப்பு பெருமளவில் கிடைக்கிறது. என்னே மகத்தான ஏற்பாடு! ஏசாயா தீர்க்கதரிசியின் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகள், இந்த ‘பிரபுக்கள்’ பற்றி விவரிக்கின்றன: ‘அவர்கள் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பர்.’—ஏசாயா 32:2.
6 உலகளாவிய நெருக்கடியின் இந்தக் காலத்தில் ‘பிரபுக்கள்,’ அதாவது ‘மந்தை முழுவதையும் கவனமாய்க் காத்துக்கொள்ளும்’ மூப்பர்கள் மிக அவசியம். இவர்கள், யெகோவாவின் ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பர்கள். மேலும், யெகோவாவின் நீதியான நியமங்களுக்கு இசைவாக நியாயமாய் விசாரிக்கிறவர்கள். (அப்போஸ்தலர் 20:28) இப்படிப்பட்ட ‘பிரபுக்கள்’ 1 தீமோத்தேயு 3:2-7, தீத்து 1:6-9 வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை உடையவர்களாய் இருக்க வேண்டும்.
7 துன்பங்களும் துயரங்களும் குவிந்துகிடக்கும் இந்த ‘உலகத்தின் முடிவை’ விவரிக்கும் முக்கியமான தம் தீர்க்கதரிசனத்தில் “கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்” என இயேசு சொன்னார். (மத்தேயு 24:3-8) ஆபத்து நிறைந்த இன்றைய உலக நிலைமைகளைப் பார்த்து இயேசுவை பின்பற்றுபவர்கள் ஏன் கலங்குவதில்லை? ஏனென்றால், அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும்சரி, ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி இந்த ‘பிரபுக்கள்’ மந்தையை உத்தமமாய் காத்து வருகிறார்கள். (யோவான் 10:16) ஜாதி கலவரம், இனப்படுகொலை போன்ற பயங்கரமான சூழ்நிலைகளிலும், தங்கள் சகோதரர்களையும் சகோதரிகளையும் அவர்கள் தைரியமாக காத்து வருகிறார்கள். ஆவிக்குரிய பஞ்சத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் இந்த உலகில், மனச்சோர்வடைந்திருப்போரை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் இருக்கும் சத்தியத்தின் மூலம் உற்சாகப்படுத்தியும் வருகிறார்கள்.
8 கடந்த 50 வருடங்களில், இந்த ‘பிரபுக்கள்’ யார் என்பது தெளிவாக தெரிய வந்திருக்கிறது. வேறே ஆடுகளைச் சேர்ந்த ‘பிரபுக்கள்’ நன்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள். “அதிபதி” வகுப்பார் இவர்களே. மிகுந்த உபத்திரவத்திற்குப் பிறகு, ‘புதிய பூமியில்’ நிர்வகிப்பு சம்பந்தமான பொறுப்புகளை வகிக்க, இவர்களில் தகுதி வாய்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள். (எசேக்கியேல் 44:2, 3; 2 பேதுரு 3:13) முன்நின்று ராஜ்ய சேவையில் ஈடுபடுவதால், ஆவிக்குரிய வழிநடத்துதலையும் புத்துணர்ச்சியையும் இவர்கள் கொடுக்கின்றனர். இப்படியாக, இவர்கள் ‘பெருங்கன்மலையின் நிழலாக’ இருந்து, மெய் வணக்கம் எனும் எல்லைக்குள் மந்தைக்கு ஆறுதல் அளிக்கின்றனர்.b
9 சாத்தானுடைய துன்மார்க்க உலகின் கொடிய கடைசி நாட்களில், ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இப்படிப்பட்ட பாதுகாப்பு மிகமிக அவசியம். (2 தீமோத்தேயு 3:1-5, 13) பொய்க் கோட்பாடுகளும், திரித்து சொல்லப்பட்ட பொய்ப் பிரச்சாரமும் சூறாவளி போல் தாக்குகின்றன. நாட்டுக்கு நாடு நடக்கும் போர்கள், உள்நாட்டுப் போர்கள், நேரடியான தாக்குதல்கள் போன்ற கடும் சூறைக்காற்றால் யெகோவா தேவனின் உண்மையுள்ள வணக்கத்தார் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆவிக்குரிய பஞ்சத்தில் பரிதவிக்கும் இந்த உலகில், சத்தியத்தின் சுத்தமான நீர் கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும். கலப்படமில்லாத இந்த சத்தியத்தின் நீரோடை அவர்களுடைய ஆவிக்குரிய தாகத்தை தணிக்கிறது. இந்தக் காலப்பகுதியில் மனச்சோர்வு அடைந்தும், உற்சாகமிழந்தும் இருப்போருக்கு உற்சாகத்தையும் வழிநடத்துதலையும் யெகோவா தருகிறார். அரசராக பரலோகங்களில் ஆளுகை நடத்திக்கொண்டிருக்கும் ராஜாவின் மூலமாகவும், அபிஷேகம் செய்யப்பட்ட அவருடைய சகோதரர்கள் மூலமாகவும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேறே ஆடுகளின் ‘பிரபுக்கள்’ மூலமாகவும் யெகோவா இந்த உதவியை அளிக்கிறார். இவ்வாறு நீதியும் நியாயமும் நிலவும்படி யெகோவா செய்வார்.
கண், காது, இருதயம் ஒருமிக்க கவனித்தல்
10 யெகோவாவின் தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு திரள்கூட்டத்தார் எப்படி பிரதிபலித்திருக்கின்றனர்? தீர்க்கதரிசனம் தொடருகிறது: “அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.” (ஏசாயா 32:3) பல வருடங்களாக, யெகோவா அறிவுரைகளை கொடுத்து வந்திருக்கிறார். அருமையான தம் ஊழியர்களை அனுபவசாலிகளாகவும் ஆக்கியிருக்கிறார். உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடக்கும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி, மற்ற கூட்டங்கள், மாவட்ட, தேசிய, சர்வதேச மாநாடுகள், மந்தையை அன்போடு பராமரிப்பதற்கு ‘பிரபுக்களுக்கு’ கொடுக்கப்படும் விசேஷித்த பயிற்சிகள் போன்றவை லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் ஓர் ஐக்கியப்பட்ட குடும்பமாக செயல்படுவதற்கு வழிவகுத்திருக்கின்றன. இந்த மேய்ப்பர்கள், பூமியின் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும், சத்தியத்தை புரிந்துகொள்வதில் வரும் படிப்படியான மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்கின்றனர். அதற்காக அவர்கள் காதுகளை தீட்டி வைத்திருக்கின்றனர். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி இருப்பதால், சத்தியத்தின் வார்த்தைகளை செவிசாய்த்து கேட்பதிலும் அவற்றிற்கு கீழ்ப்படிவதிலும் எப்போதும் தயாராக இருக்கின்றனர்.—சங்கீதம் 25:10.
11 அடுத்துவரும் வார்த்தைகளில் இந்த தீர்க்கதரிசனம் எச்சரிக்கை விடுக்கிறது: “பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.” (ஏசாயா 32:4) எது சரி எது தவறு என்ற முடிவுக்கு வருவதில் நாம் யாருமே அவசரப்படாதிருப்போமாக. பைபிள் சொல்கிறது: “தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப் பார்க்கிலும் மூடனை நம்பலாம்.” (நீதிமொழிகள் 29:20; பிரசங்கி 5:2) 1919-க்கு முன், பாபிலோனிய கருத்துகளால் யெகோவாவின் மக்களும் கறைபட்டவர்களாய் இருந்தனர். ஆனால் அந்த வருடத்திலிருந்து, தம் நோக்கங்களைப் பற்றிய இன்னும் தெளிவான புரிந்துகொள்ளுதலை யெகோவா தம் மக்களுக்குக் கொடுத்து வருகிறார். யெகோவா இதுவரை வெளிப்படுத்தி இருக்கிற சத்தியங்களை பதற்றமோ அவசரமோ படாமல், நன்கு நிதானமாக அவர்கள் கற்றிருக்கிறார்கள். அந்த சத்தியங்களை திக்கித்திணறியோ அல்லது அவநம்பிக்கையோடோ அல்ல, தெளிவாகவும் நம்பிக்கையோடும் பேசுகிறார்கள்.
“மூடன்”
12 அடுத்ததாக, ஏசாயாவின் தீர்க்கதரிசனம் ஒரு முக்கியமான வித்தியாசத்தை தெளிவுபடுத்துகிறது: “மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி [“கயவர்,” பொ.மொ.] இனி உதாரன் [“உயர்ந்தோர்,” NW] என்று சொல்லப்படுவதுமில்லை. ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்.” (ஏசாயா 32:5, 6அ) யார் இந்த “மூடன்”? இதைத் திட்டவட்டமாக தெரிவிக்கும் வகையில் தாவீது ராஜா இருமுறை இந்தக் கேள்விக்கான பதிலைத் தருகிறார்: “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் [“மூடன்,” NW] தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்து வருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.” (சங்கீதம் 14:1; 53:1) நாத்திகத்தில் ஊறிப்போன ஒருவர், யெகோவா இல்லை என சொல்கிறார். இதைப்போலவே, ‘அறிஞர்களும்’ மற்றவர்களும் கடவுள் என ஒருவர் இல்லை என்பது போலத்தான் செயல்படுகிறார்கள். யாருக்குமே கணக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் சத்தியம் இல்லை. அவர்கள் இருதயங்களில் தயாள குணமும் இல்லை. அதோடு, அன்பின் நற்செய்தியும் அவர்களிடத்தில் இல்லை. உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு முற்றிலும் எதிர்மாறாக, இக்கட்டில் தவித்துக்கொண்டிருப்போருக்கு உதவி செய்ய தாராளமாக முன்வருவதில்லை அல்லது முற்றிலுமாக எந்த உதவியுமே செய்வதில்லை.
13 இப்படிப்பட்ட மூடர்களில் பலர், கடவுளுடைய சத்தியத்தை முனைப்பாய் மற்றவர்களுக்குச் சொல்லுபவர்களை வெறுக்கின்றனர். ‘அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசுவான்.’ (ஏசாயா 32:6ஆ) இன்றிருக்கும் விசுவாச துரோகிகளைக் குறித்ததிலும் இது உண்மையல்லவா! ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள பல நாடுகளில், இப்படிப்பட்ட விசுவாச துரோகிகள் சத்தியத்தை எதிர்க்கும் மற்றவர்களோடு கைகோர்த்துக்கொண்டு, அதிகாரிகளிடம் பொய்களை சொல்லி யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை கட்டுப்படுத்தி இருக்கின்றனர் அல்லது முழுவதுமாக தடை செய்திருக்கின்றனர். இப்படியாக இவர்கள் ‘பொல்லாத ஊழியக்காரனுடைய’ மனப்பான்மையை வெளிக்காட்டியிருக்கின்றனர். இந்தப் பொல்லாத ஊழியக்காரனைப் பற்றி இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன் வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.”—மத்தேயு 24:48-51.
14 இதற்கிடையே, விசுவாச துரோகிகள் ‘பசித்தோரின் பசி போக்கமாட்டர்; தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பர்.’ (ஏசாயா 32:6இ, பொ.மொ.) சத்தியத்திற்காக பசியுடன் ஏங்கும் ஜனங்களுக்கு, சத்தியத்தின் எதிரிகள் ஆவிக்குரிய உணவை தர மறுப்பர். மேலும், சத்தியத்திற்கான தாகத்தோடு தவிப்போருக்கு ராஜ்ய செய்தியின் புத்துணர்வூட்டும் தண்ணீர் கிடைக்காதபடி தடை செய்வர். முடிவு என்னவாயிருக்கும்? அதைத் தம்முடைய மற்றுமொரு தீர்க்கதரிசி வாயிலாக யெகோவா அறிவிக்கிறார்: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்.”—எரேமியா 1:19; ஏசாயா 54:17.
15 இருபதாம் நூற்றாண்டின் மத்திப வருடங்களிலிருந்து, கிறிஸ்தவமண்டல நாடுகளில் ஒழுக்கக்கேடு தலைவிரித்தாடுகிறது. ஏன்? ஒரு காரணத்தை தீர்க்கதரிசியே முன்னறிவிக்கிறார்: “லோபியின் [“கயவரின்,” பொ.மொ.] எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.” (ஏசாயா 32:7) இந்த வார்த்தைகளின் நிறைவேற்றமாக, குறிப்பாக குருமார்களில் பலர், ‘வேசித்தனத்தையும் மற்றெல்லா அசுத்தத்தையும்’ கண்டனம் செய்யாமல் மெத்தனமாக இருக்கின்றனர். குறிப்பாக, திருமணத்திற்கு முன் பாலுறவு, திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்வது, ஓரினப்புணர்ச்சி போன்ற ஒழுக்கங்கெட்ட செயல்களை அனுமதித்திருக்கின்றனர். (எபேசியர் 5:3) இப்படியாக, தங்கள் பொய்யான வார்த்தைகளால் தங்கள் மந்தையை ‘கெடுக்கின்றனர்.’
16 இதற்கு முற்றிலும் மாறாக, தீர்க்கதரிசியின் அடுத்த வார்த்தைகளின் நிறைவேற்றம் எவ்வளவு புத்துணர்ச்சியைத் தருகிறது! “தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.” (ஏசாயா 32:8) தயாளகுணத்தை இயேசுவும் உற்சாகப்படுத்தினார். அவர் சொன்னார்: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” (லூக்கா 6:38) தயாளகுணம் படைத்தவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்களை சுட்டிக்காட்டி அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: ‘வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைவில் வையுங்கள்.’ (அப்போஸ்தலர் 20:35) பணம், பொருள் சேர்ப்பதோ சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதோ உண்மை கிறிஸ்தவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. மாறாக, தங்கள் கடவுளாகிய யெகோவாவைப்போல தயாளகுணத்தைக் காட்டுவதன் மூலமே அவர்கள் சந்தோஷத்தை அடைகிறார்கள். (மத்தேயு 5:44, 45) கடவுளுடைய சித்தத்தை செய்வதில்தான் அவர்களுடைய சந்தோஷம் இருக்கிறது. ‘நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தை’ மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, தங்களையே தாராளமாக கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியை பெறுகிறார்கள்.—1 தீமோத்தேயு 1:11.
17 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் மேலும் தொடர்கிறது: “சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவி கொடுங்கள். நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது. சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்.” (ஏசாயா 32:9-11அ) இந்த பெண்களுடைய மனப்பான்மை, இன்று கடவுளை சேவிப்பதாக பெருமை பாராட்டிக்கொண்டு, ஆனால் அவருடைய சேவையை வைராக்கியமாக செய்யாமல் இருப்போரை நினைவுபடுத்துகிறது. ‘வேசிகளின் தாயாகிய மகா பாபிலோனின்’ மதங்களில் இப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 17:5) உதாரணமாக, கிறிஸ்தவமண்டல மதங்களின் அங்கத்தினர்கள், ஏசாயா விவரித்துள்ள ‘ஸ்தீரிகளைப்’ போலவே இருக்கின்றனர். அவர்கள் ‘நிர்விசாரமாய்’ இருக்கிறார்கள். வெகு சீக்கிரத்தில் அவர்களை சூழ்ந்துகொள்ளப்போகிற நியாயத்தீர்ப்பையும் தத்தளிப்பையும் குறித்து கவலைப்படாமல் இருக்கின்றனர்.
18 அடுத்தபடியாக, பொய் மதத்திற்கு விடுக்கப்படும் அழைப்பு இதுவே: “உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள். செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள். என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலும் சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.” (ஏசாயா 32:11ஆ-13) “உடையை உரிந்து களைந்துபோட்டு” என்ற வார்த்தைகள், ஆடையை முழுவதுமாக களைந்துவிட்டு நிர்வாணமாக இருப்பதை அர்த்தப்படுத்தவில்லை. ஏனென்றால், பூர்வ காலங்களில், உள்ளாடை அல்லது உள்வஸ்திரங்களுக்கு மேலே மற்றுமோர் வஸ்திரத்தை அல்லது வெளியாடையை உடுத்திக்கொள்வதே வழக்கம். ஒருவரை அடையாளப்படுத்தும் சின்னமாக வெளி ஆடை அடிக்கடி பேசப்படுகிறது. (2 இராஜாக்கள் 10:22, 23; வெளிப்படுத்துதல் 7:13, 14) பொய் மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய வெளி ஆடையை, அதாவது கடவுளுடைய ஊழியர்களாக தங்களை போலியாக அடையாளப்படுத்தும் வஸ்திரங்களைக் களையும்படி தீர்க்கதரிசனம் கட்டளையிடுகிறது. அதோடு, வெகு சீக்கிரத்தில் அவர்கள்மீது வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறிக்கும் துக்கத்தின் அடையாள வஸ்திரமாகிய இரட்டுடுத்திக் கொள்ளும்படி சொல்லப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 17:16) கடவுளுடைய ‘களிகூரும் நகரமாக’ தங்களை பெருமை பாராட்டிக்கொள்ளும் கிறிஸ்தவமண்டலத்தின் மத அமைப்புகளிலோ அல்லது பொய் மத உலகப் பேரரசின் பாகமாக இருக்கும் மற்ற மதங்களிலோ தேவபக்தியால் வரும் நல்ல பலன்களைக் காண முடிவதில்லை. அவர்களுடைய ஆதிக்கத்தில், கைவிடப்படுதல் அல்லது புறக்கணிப்பின் ‘முட்செடியும் நெரிஞ்சிலும்தான்’ காணப்படுகிறது.
19 விசுவாச துரோக “எருசலேமின்” எல்லா பாகங்களிலும் இந்த சோகக் காட்சிதான் தெரிகிறது: “அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் [ஓபேலும்] துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக் கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.” (ஏசாயா 32:14) ஓபேலும் தப்பவில்லை. ஓபேல் என்பது எருசலேமிலிருக்கும் மிகவும் உயரமான பகுதி. அது பலத்த பாதுகாப்பான நிலையில் உயரத்தில் இருக்கிறது. ஓபேலும் கெபிகளாக மாறும் என்பது அந்த நகரத்திற்கு வரவிருந்த முழுமையான அழிவை குறிக்கிறது. விசுவாசதுரோக “எருசலேம்,” அதாவது கிறிஸ்தவமண்டலம், கடவுளுடைய சித்தத்தை செய்ய கவனம் செலுத்தவில்லை என்பதைத்தான் ஏசாயாவின் வார்த்தைகள் காட்டுகின்றன. ஆவிக்குரிய விதத்தில் அது வறண்ட, பாழ்நிலமாக இருக்கிறது. சத்தியம், நீதியின் சுவடு சிறிதுகூட அதில் இல்லை. மொத்தத்தில் இது மிருகத்தன்மையை காட்டுகிறது.
மகத்தான வித்தியாசம்!
20 யெகோவாவின் சித்தத்தை செய்யும் அனைவருக்கும் மிக அருமையான, நேர்த்தியான நம்பிக்கையை ஏசாயாவின் அடுத்த வார்த்தைகள் விவரிக்கின்றன. கடவுளுடைய மக்களுக்கு வரும் அழிவு, ‘உன்னதத்திலிருந்து ஆவி ஊற்றப்படுமட்டுமே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.’ (ஏசாயா 32:15) 1919-ம் வருடத்திலிருந்து, யெகோவாவின் ஆவி அவருடைய மக்கள்மீது அபரிமிதமாக பொழியப்பட்டு வருவது சந்தோஷமான விஷயம். நல்ல கனிதரும் பழத்தோட்டமாக அபிஷேகம் செய்யப்பட்ட சாட்சிகள் மாற்றப்பட்டனர். பெருகிவரும் காடுபோன்ற வேறே ஆடுகளும் இந்தப் பழத்தோட்டத்தை பின்பற்றி வர ஆரம்பித்தனர். பூமியில் இன்று கடவுளுடைய அமைப்பின் முக்கிய அம்சங்களாக விளங்குவது செழிப்பும் வளர்ச்சியுமே. திரும்ப நிலைநாட்டப்பட்ட ஆவிக்குரிய பரதீஸில் ‘யெகோவாவின் மகிமையும் நமது தேவனுடைய மகத்துவமும்’ அவருடைய ஜனங்களால் பிரதிபலிக்கப்படுகிறது. வரவிருக்கும் ராஜ்யத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிவிப்பதன் வாயிலாக இது நிறைவேற்றப்படுகிறது.—ஏசாயா 35:1, 2.
21 யெகோவாவின் மகத்தான வாக்குறுதியை இப்போது சற்று கவனியுங்கள்: “வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித் தரிக்கும். நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.” (ஏசாயா 32:16, 17) இன்று யெகோவாவின் மக்கள் அனுபவிக்கும் ஆவிக்குரிய நிலையை இந்த வார்த்தைகள் எவ்வளவு அழகாக விவரிக்கின்றன! மனிதகுலம் இன்று பெரும்பாலும் பகைமையாலும் வன்முறையாலும் ஆவிக்குரிய ஏழ்மையாலும் பிளவுபட்டு இருக்கிறது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, உண்மை கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதிலும் ஐக்கியப்பட்ட ஒரு குடும்பமாக இருக்கிறார்கள். அவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வந்திருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். கடவுளுடைய நீதிக்கு இசைவாக அவர்கள் வாழ்கிறார்கள், செயல்படுகிறார்கள், அவரை சேவிக்கிறார்கள். முடிவில், என்றென்றுமாக மெய்யான சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெறும் நம்பிக்கையோடு இதைச் செய்து வருகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 17.
22 ஆவிக்குரிய பரதீஸில் ஏசாயா 32:18 ஏற்கெனவே நிறைவேற்றம் அடைந்து வருகிறது. “என் ஜனம் சமாதானமான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.” ஆனால் போலி கிறிஸ்தவர்களுக்கோ “காடு அழிய கல்மழை பெய்யும். அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம்.” (ஏசாயா 32:19) பொய் மதம் எனும் போலி நகரத்தை யெகோவாவின் நியாயத்தீர்ப்பு, பயங்கரமான கல்மழைப்போலத் தாக்கும். அந்நகரத்தின் “காடு” போன்ற ஆதரவாளர்கள் தாழ்த்தப்பட்டு, இருந்த இடந்தெரியாமல் என்றைக்குமாக துடைத்தழிக்கப்படுவர்!
23 தீர்க்கதரிசனத்தின் இப்பகுதி முடிவுறுகிறது: “மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW].” (ஏசாயா 32:20) பூர்வ காலங்களில், கடவுளுடைய மக்கள் நிலத்தை உழுவதற்கும் விதைவிதைப்பதற்கும் பொதிசுமக்கும் விலங்குகளாகிய மாடுகளையும் கழுதைகளையும் பயன்படுத்தினர். இன்று, யெகோவாவின் மக்கள் அச்சு இயந்திரங்களையும், எலெக்ட்ரானிக் கருவிகளையும், நவீன கட்டிடங்களையும் போக்குவரத்தையும் பயன்படுத்துகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, கோடிக்கணக்கான பைபிள் பிரசுரங்களை அச்சிடவும் விநியோகிக்கவும் ஐக்கியப்பட்ட, தேவராஜ்ய அமைப்பை பயன்படுத்துகின்றனர். இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தி, தங்களை மனமுவந்து அளிக்கும் ஆட்கள் ராஜ்யத்தின் சத்தியம் எனும் விதையை, சொல்லர்த்தமாகவே “நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம்” விதைக்கின்றனர். ஏற்கெனவே, கடவுள் பயமுள்ள ஆண்களும் பெண்களும் லட்சக்கணக்கில் அறுவடை செய்யப்பட்டிருக்கின்றனர். இன்னும் லட்சக்கணக்கானோர் கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகின்றனர். (வெளிப்படுத்துதல் 14:15, 16) அவர்கள் எல்லாருமே அதிக “சந்தோஷமுள்ளவர்கள்”!
[அடிக்குறிப்புகள்]
a ஏசாயா 32:1-ல் குறிப்பிட்டுள்ள “ராஜா,” முதலில் எசேக்கியா ராஜாவை ஒருவேளை அர்த்தப்படுத்தி இருக்கலாம். ஆனாலும், ஏசாயா 32-ம் அதிகாரத்தின் முக்கிய நிறைவேற்றத்தில் அது ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவையே அர்த்தப்படுத்துகிறது.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, காவற்கோபுரம் பத்திரிகையின் 1999, மார்ச் 1 பிரதியில் பக்கங்கள் 13-18 வரை காண்க.
[கேள்விகள்]
1, 2. ஏசாயாவின் சவக்கடல் சுருளில் உள்ள வாசகங்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
3. ஏசாயா, வெளிப்படுத்துதல் புத்தகங்களில் என்ன ஆட்சிமுறை தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுள்ளது?
4. புதிய பூமியின் அஸ்திவாரமாக இப்போது இருப்பவர்கள் யார்?
5-7. முன்னறிவிக்கப்பட்ட ‘பிரபுக்கள்’ கடவுளுடைய மந்தையில் என்ன பாகத்தை வகிக்கின்றனர்?
8. வேறே ஆடுகளைச் சேர்ந்த ‘பிரபுக்களை’ யெகோவா எப்படி பயிற்றுவித்து, பயன்படுத்துகிறார்?
9. என்ன நிலைமைகள் இன்று ‘பிரபுக்களின்’ தேவையை அறிவுறுத்துகின்றன?
10. ஆவிக்குரிய விஷயங்களை தம் மக்கள் ‘காணவும், கேட்கவும்’ என்ன ஏற்பாடுகளை யெகோவா செய்திருக்கிறார்?
11. அவநம்பிக்கையோடு திக்கித்திணறாமல், கடவுளுடைய மக்கள் இன்று ஏன் நம்பிக்கையோடு பேசுகின்றனர்?
12. இன்று “மூடன்” யார், எந்த விதத்தில் அவர்கள் தயாளகுணத்தில் குறைவுபடுகிறார்கள்?
13, 14. (அ) நவீன கால விசுவாச துரோகிகள் எப்படி தீங்கான காரியத்தை செய்கிறார்கள்? (ஆ) பசியிலும் தாகத்திலும் வாடுபவர்களுக்கு எது கிடைக்காதபடி விசுவாச துரோகிகள் தடை செய்கின்றனர், ஆனால் இறுதியில் என்ன நடக்கும்?
15. இன்று, குறிப்பாக ‘கயவர்’ யார், என்ன ‘கள்ளவார்த்தைகளை’ அவர்கள் வளர்க்கின்றனர், அதன் விளைவு என்ன?
16. உண்மை கிறிஸ்தவர்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறது?
17. யார் இன்று, ஏசாயாவால் சொல்லப்பட்ட ‘நிர்விசாரமான குமாரத்திகள்’ போல் இருக்கின்றனர்?
18. ‘அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளும்படி’ யாருக்கு கட்டளை கொடுக்கப்படுகிறது, ஏன்?
19. விசுவாச துரோக “எருசலேமின்” என்ன நிலைமைகளை ஏசாயா அம்பலப்படுத்துகிறார்?
20. கடவுளுடைய ஆவி அவருடைய மக்கள்மீது பொழியப்படுவதன் விளைவு என்ன?
21. நீதி, அமரிக்கை, பாதுகாப்பு இன்று எங்கே கிடைக்கிறது?
22. கடவுளுடைய மக்களுக்கும் பொய் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
23. என்ன உலகளாவிய வேலை சீக்கிரத்தில் முடியப்போகிறது, அந்த வேலையை செய்பவர்கள் எப்படியிருக்கின்றனர்?
[பக்கம் 331-ன் படங்கள்]
சவக்கடல் சுருளில், ஏசாயா 32-ம் அதிகாரம் “X” என குறிக்கப்பட்டிருக்கிறது
[பக்கம் 333-ன் படங்கள்]
ஒவ்வொரு ‘பிரபுவும்’ காற்றுக்கு ஒதுக்கிடமாகவும், பெருவெள்ளத்துக்கு புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்கு நிழலாகவும் இருக்கின்றனர்
[பக்கம் 338-ன் படம்]
மற்றவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்வதில் கிறிஸ்தவர் பெருமகிழ்ச்சி அடைகிறார்