அதிகாரம் இருபத்து ஆறு
“வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை”
“இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது” என அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (ரோமர் 8:22) மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவுதான் முன்னேற்றம் அடைந்திருக்கிறபோதிலும், வியாதியும் மரணமும் தொடர்ந்து மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கின்றன. அப்படியென்றால், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதிக்கு உச்சக்கட்டமாக அமைந்துள்ள பின்வரும் வாக்குறுதி மிக மிக அருமையானதல்லவா! “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” அந்த காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். (ஏசாயா 33:24) இந்த வாக்குறுதி எப்போது, எப்படி நிறைவேறும்?
2 கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்கள் ஆவிக்குரிய நோயில் வாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் ஏசாயா இந்த வார்த்தைகளை எழுதுகிறார். (ஏசாயா 1:5, 6) அந்தளவுக்கு விசுவாச துரோகத்திலும் ஒழுக்கக்கேட்டிலும் அவர்கள் புதைந்து போயிருப்பதால், யெகோவா தேவனிடமிருந்து கடுமையான சிட்சை அவர்களுக்கு தேவை. அசீரியாவே அந்த சிட்சையை கொடுக்கும் யெகோவாவின் ‘கோல்.’ (ஏசாயா 7:17; 10:5, 15) முதலாவதாக, பொ.ச.மு. 740-ல் பத்து கோத்திர வடதிசை ராஜ்யமாகிய இஸ்ரவேல் அசீரியர்களிடம் வீழ்ச்சியுறுகிறது. (2 இராஜாக்கள் 17:1-18; 18:9-11) சில வருடங்களுக்குப் பிறகு, அசீரிய ராஜா சனகெரிப், தென்திசை ராஜ்யமாகிய யூதாவை முற்றுகையிடுகிறான். (2 இராஜாக்கள் 18:13; ஏசாயா 36:1) கொடூரமான அசீரியப் படைகள் தேசத்தை தாக்கவே, யூதாவின் அழிவு நிச்சயம் என்பதுபோல் தோன்றுகிறது.
3 ஆனால், தம்முடைய ஜனங்களை சிட்சிப்பதற்காக கடவுள் கொடுத்த அதிகாரத்திற்கும் மிஞ்சி அசீரியா செயல்படுகிறது. உலகத்தையே தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரவேண்டுமெனும் பேராசையில் அது போரிடுகிறது. (ஏசாயா 10:7-11) தம் ஜனங்களை கொடூரமாக நடத்தியவர்களை யெகோவா தண்டிக்காமல் விட்டுவிடுவாரா? இஸ்ரவேல் தேசத்தின் ஆவிக்குரிய நோய் குணப்படுத்தப்படுமா? இந்தக் கேள்விகளுக்கான யெகோவாவின் பதில்களைத்தான் ஏசாயா 33-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம்.
கொள்ளையடிப்பவனை கொள்ளையிடுதல்
4 தீர்க்கதரிசனம் இவ்வாறு தொடங்குகிறது: “கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம் பண்ணுவார்கள்.” (ஏசாயா 33:1) கொள்ளையடிக்கும் அசீரியாவைப் பற்றி ஏசாயா நேரடியாக பேசுகிறார். தன் ஆதிக்கத்தின் சிகரத்தில் இருக்கையில், அந்த கொடூரமான தேசம் எவராலுமே வீழ்த்தப்பட முடியாததாக தோன்றுகிறது. ‘கொள்ளையிடப்படாதிருந்தும் அது கொள்ளையிடப்படுகிறது.’ யூதாவின் பட்டணங்களை சூறையாடுகிறது. அதுமட்டுமா! யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொன்னையும் வெள்ளியையும்கூட வேட்டையாடுகிறது! தன்னைத் தட்டிக்கேட்க ஆளே இல்லை என்பதுபோல் அசீரியா நடந்துகொள்கிறது. (2 இராஜாக்கள் 18:14-16; 2 நாளாகமம் 28:21) ஆனால், நிலைமை சீக்கிரத்தில் தலைகீழாய் மாறிவிடும். ‘நீ கொள்ளையிடப்படுவாய்’ என ஏசாயா வெகு தைரியமாக அறிவிக்கிறார். விசுவாசமுள்ளவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் தரும் தீர்க்கதரிசனம் இது!
5 திகில் நிறைந்த அந்தக் காலப்பகுதியில், யெகோவாவின் உத்தம வணக்கத்தார் உதவிக்காக அவரையே நாட வேண்டும். எனவேதான், ஏசாயா இப்படி ஜெபிக்கிறார்: “ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும்; நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்; அதிகாலைதோறும் எங்களைக் [“பலப்படுத்தி, ஆதரித்துக்,” NW] காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக! ஆரவாரப் பேரொலி கேட்க மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன; நீர் கிளர்ந்தெழும்போது வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர்.” (ஏசாயா 33:2, 3, பொ.மொ.) பூர்வ காலங்களில், அநேகந்தடவை யெகோவா தம் மக்களைக் காத்தது போலவே இப்போதும் காக்கும்படி ஏசாயா ஜெபிக்கிறார். (சங்கீதம் 44:3; 68:1) இந்த ஜெபத்தை முடித்ததுமே அதற்கான யெகோவாவின் பதிலையும் ஏசாயா முன்னறிவிக்கிறார்!
6 “வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் [அசீரியர்கள்] கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.” (ஏசாயா 33:4) பூச்சிகள் படைப்படையாக வந்து தேசம் முழுவதையுமே நாசப்படுத்துவது யூதாவுக்கு புதிய விஷயமல்ல. ஆனால், இம்முறை அப்படி அழிக்கப்படப்போவது யூதாவின் எதிரிகளே. மிக இழிவான தோல்வியை அசீரியா தழுவப் போகிறது. அதன் வீரர்கள் புறமுதுகிட்டு ஓடப்போகிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற மிகுதியான கொள்ளைப்பொருட்களை யூதாவின் குடிகள் எடுத்துக்கொள்வர்! குரூர சித்திரவதைக்கு பெயர்போன அசீரியா கொள்ளையிடப்படுவது பொருத்தமானதே.—ஏசாயா 37:36.
நவீன கால அசீரியா
7 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நம் நாளைக்கு எப்படி பொருந்துகிறது? ஆவிக்குரிய விதத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கும் இஸ்ரவேல் தேசத்தை விசுவாசமற்ற கிறிஸ்தவமண்டலத்திற்கு ஒப்பிடலாம். இஸ்ரவேலை தண்டிக்க, யெகோவா அசீரியாவை ‘கோலாக’ பயன்படுத்தினார். அதுபோலவே, கிறிஸ்தவமண்டலத்தையும் பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனின்’ பாகமாக இருக்கும் மற்ற மதங்களையும் தண்டிக்க, யெகோவா ஒரு ‘கோலை’ பயன்படுத்துவார். (ஏசாயா 10:5; வெளிப்படுத்துதல் 18:2-8) ஐக்கிய நாட்டு சங்கத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் நாடுகளே அந்த ‘கோல்.’ ஏழு தலை, பத்து கொம்புகளுடைய சிவப்புநிறமுள்ள மூர்க்க மிருகமாக வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அமைப்பே இது.—வெளிப்படுத்துதல் 17:3; 15-17.
8 நவீன கால அசீரியா, பொய் மதம் முழுவதையும் மூர்க்கத்தனமாக தாக்கும்போது அதனை அடக்க யாருமே இல்லை என்பதுபோல் தோன்றும். சனகெரிப் காட்டிய அதே மனப்பான்மையைத்தான் பிசாசாகிய சாத்தானும் காட்டுவான். தண்டனைக்குரிய விசுவாச துரோக அமைப்புகளை மட்டுமல்ல, உண்மை கிறிஸ்தவர்களையும் பிசாசாகிய சாத்தான் துணிந்து தாக்குவான். அப்போது யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஆவிக்குரிய குமாரர்களில் மீதியாய் இருப்பவர்களோடு சேர்ந்து லட்சக்கணக்கானோர் யெகோவாவின் ராஜ்யத்தின் சார்பாக நிலைநிற்கை எடுப்பர். மகா பாபிலோன் உட்பட, சாத்தானின் உலகத்திலிருந்து வெளியே வந்த உண்மை கிறிஸ்தவர்களான இவர்கள், ‘இந்த பிரபஞ்சத்தின் தேவனாகிய’ சாத்தானுக்குத் தலை வணங்க மறுப்பர். அதனால் சாத்தான் மிகுந்த கோபமடைந்து அவர்களை அழிக்கும் நோக்கத்தோடு தாக்குவான். (2 கொரிந்தியர் 4:4; எசேக்கியேல் 38:10-16) இந்த தாக்குதல் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பது நிச்சயம். இருந்தாலும், யெகோவாவின் மக்கள் பயத்தில் முடங்கிப்போக வேண்டியதில்லை. (ஏசாயா 10:24, 25) ‘இக்கட்டுக்காலத்தில் அவர்களுடைய இரட்சிப்பாய்’ கடவுள் இருப்பார் என்ற உறுதியை அவர்கள் பெற்றிருக்கின்றனர். அவர் தலையிட்டு, சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் அழிவைக் கொண்டுவருவார். (எசேக்கியேல் 38:18-23) பூர்வ காலங்களில் நடந்ததுபோலவே, கடவுளுடைய ஜனங்களைக் கொள்ளையிட முயலுவோர் கொள்ளையிடப்படுவர்! (நீதிமொழிகள் 13:22ஆ-ஐ ஒப்பிடுக.) யெகோவாவின் பெயர் பரிசுத்தம் பண்ணப்படும். தப்பிப்பிழைப்பவர்கள் ‘ஞானத்தையும் அறிவையும் கர்த்தருக்கு பயப்படுதலையும்’ நாடியதால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.—ஏசாயா 33:5, 6-ஐ வாசிக்கவும்.
விசுவாசமற்றவர்களுக்கு எச்சரிக்கை
9 யூதாவிலிருக்கும் விசுவாசமற்றவர்களின் நிலை என்னவாகும்? அசீரியாவின் படைகளால் வெகு சீக்கிரத்தில் வர இருக்கிற அழிவைப் பற்றிய துயரமான காட்சியை ஏசாயா தீட்டுகிறார். (ஏசாயா 33:7-ஐ வாசிக்கவும்.) அசீரியப் படைகள் முன்னேறிவருவதைப் பார்க்கும் யூதாவின் “பராக்கிரமசாலிகள்” பயத்தில் அலறுவர். போர் வெறிகொண்ட அசீரியர்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணிக்கொள்ள அனுப்பப்பட்ட “சமாதானத்து ஸ்தானாபதிகள்,” அதாவது தூதுவர்கள் அவமானத்தையும் ஏளனத்தையுமே எதிர்ப்படுவர். தங்கள் முயற்சி அனைத்தும் தோல்வி அடைந்ததற்காக மனம் வெதும்பி அழுவர். (எரேமியா 8:15-ஐ ஒப்பிடுக.) ஆனால், கொடூரமான அசீரியப் படைகளோ அவர்களுக்காக கொஞ்சம்கூட இரக்கம் காட்டாது. (ஏசாயா 33:8, 9-ஐ வாசிக்கவும்.) யூதாவின் குடிகளோடு செய்த ஒப்பந்தங்களை அசீரிய ராஜா ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டான். (2 இராஜாக்கள் 18:14-16) அசீரியன், யூதாவின் ‘நகரங்களை இகழ்ச்சிபண்ணி,’ அவற்றை அவமதித்து, வெறுப்பான். அங்கிருந்த மனித உயிர்களை துச்சமாக எண்ணி, சூறையாடுவான். அங்கு நிலைமை அந்தளவு நாசகரமாய் இருப்பதால், தேசமே துக்கித்து அழும் என சொல்லலாம். லீபனோன், சாரோன், பாசான், கர்மேல் ஆகியவையும் தங்களுடைய அழிவைக் குறித்து புலம்பும்.
10 வெகு சீக்கிரத்தில், தேசங்கள் மதத்தின்மீது தங்கள் தாக்குதலை ஆரம்பிக்கையில், இதேபோன்ற நிலைமைகள்தான் ஏற்படும். எசேக்கியாவின் நாட்களில் இருந்ததைப்போலவே, அழிவுண்டாக்கும் இந்த சக்திகளுக்கு எதிராக வரும் எந்த மனித உதவியும் நிலைக்காது. கிறிஸ்தவமண்டலத்தின் “பராக்கிரமசாலிகள்,” அதாவது அதன் அரசியல்வாதிகள், பணமுதலைகள், செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ள மற்ற மக்கள் யாருமே அதைக் காப்பாற்ற முடியாது. கிறிஸ்தவமண்டலத்தை காப்பாற்றுவதற்காக திட்டமிடப்படும் எந்தவொரு அரசியல், நிதி ‘உடன்படிக்கையோ’ அல்லது ஒப்பந்தமோ முறிந்துபோகும். (ஏசாயா 28:15-18) அரசியல் ‘ஒப்பந்தங்கள்’ மூலமாக அழிவை தடுத்து நிறுத்த எடுக்கும் எந்த முயற்சியுமே எடுபடாது. வியாபார நடவடிக்கைகள் அனைத்துமே ஸ்தம்பித்து நின்றுவிடும். கிறிஸ்தவமண்டலத்துக்கு சொந்தமான சொத்துக்களும் முதலீடுகளும் பறிமுதல் செய்யப்படும் அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுப்போகும். கிறிஸ்தவமண்டலத்துக்காக பரிவுகாட்டும் ஆட்கள் இருப்பார்களே என்றால், அதனுடைய அழிவை தூரத்தில் நின்று பார்த்து, புலம்புவதைத் தவிர வேறே எதுவும் செய்ய முடியாது. (வெளிப்படுத்துதல் 18:9-19) பொய்க் கிறிஸ்தவத்தோடு சேர்ந்து உண்மை கிறிஸ்தவமும் அழிக்கப்படுமா? இல்லவே இல்லை! ஏனென்றால், யெகோவாவே இந்த உறுதியை அளிக்கிறார்: “இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 33:10) முடிவில், எசேக்கியா போன்ற விசுவாசமுள்ளவர்கள் சார்பாக யெகோவா செயல்பட்டு, அசீரியனுடைய படையை முறியடிப்பார்.—சங்கீதம் 12:5.
11 விசுவாசமற்ற எவருமே இப்படிப்பட்ட பாதுகாப்பை பெறலாம் என எதிர்பார்க்க முடியாது. யெகோவா சொல்கிறார்: “பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள் [“வைக்கோலைக் கர்ப்பந்தரித்துப் பதரைப் பெறுவீர்கள்,” NW]; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப் பட்சிக்கும். ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள் [“பொசுக்கப்படுவார்கள்,” NW]; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள். தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார். சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம்பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்குமுன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்தியஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.” (ஏசாயா 33:11-14) யூதாவுக்கு எதிராக பாபிலோன் புதிதாக முளைத்தெழும்புகையில் இந்த வார்த்தைகள் வெகுவாக பொருந்துகின்றன. எசேக்கியா மரித்த பிறகு, யூதா மறுபடியும் தன் துன்மார்க்க வழிக்கே திரும்புகிறது. அதற்கடுத்து வந்த சில வருடங்களில், யூதாவின் நிலை படுமோசமாகிறது. அந்த தேசம் முழுவதுமே கடவுளுடைய கோபாக்கினையை சந்திக்கும் அளவுக்கு மோசமாகிறது.—உபாகமம் 32:22.
12 கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவதற்காக கீழ்ப்படியாதவர்கள் செய்யும் எந்த தீய, இரகசிய சூழ்ச்சி திட்டங்களும் அவர்களை காப்பாற்றாது. அவை அனைத்தும் பதரைப்போல் ஒன்றுக்கும் உதவாமல்போகும். அந்த தேசத்தின் அகங்காரமும் கலகத்தனமும்தான் அதன் அழிவுக்கே வழி வகுக்கும். (எரேமியா 52:3-11) துன்மார்க்கர் ‘சுண்ணாம்பைப்போல் பொசுக்கப்படுவார்கள்.’ முற்றிலுமாக துடைத்தழிக்கப்படுவர்! வெகு சீக்கிரத்தில் வர இருக்கிற இந்த அழிவை நினைத்தாலே கலகத்தனமான யூதாவின் குடிகளை நடுக்கம் பிடித்துக்கொள்ளும். விசுவாசமற்ற யூதா குறித்து யெகோவா சொன்ன வார்த்தைகள் இன்று கிறிஸ்தவமண்டலத்தின் அங்கத்தினர்களுடைய நிலையை அப்பட்டமாக விவரிக்கின்றன. கடவுளுடைய எச்சரிக்கைக்கு அவர்கள் செவி கொடுக்கவில்லையென்றால், இருண்ட எதிர்காலம்தான் அவர்களுக்காக காத்திருக்கிறது.
‘தொடர்ந்து நீதியாய் நடத்தல்’
13 இதுவரை சொன்னவற்றிற்கு எதிர்மாறான வார்த்தைகளை யெகோவா அடுத்ததாக சொல்லுகிறார்: ‘தொடர்ந்து நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.’ (ஏசாயா 33.15, 16) அப்போஸ்தலனாகிய பேதுரு பின்னர் விவரிக்கிறபடி “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” (2 பேதுரு 2:9) இப்படிப்பட்ட மீட்பை எரேமியா அனுபவித்தார். பாபிலோனிய முற்றுகையின்போது, ஜனங்கள் “அப்பத்தை நிறைபார்த்துக் கவலையோடு” சாப்பிட வேண்டியதாயிற்று. (எசேக்கியேல் 4:16, பொ.மொ.) தாங்கள் பெற்ற பிள்ளைகளின் மாம்சத்தையே சில பெண்கள் சாப்பிட்டனர். (புலம்பல் 2:20) இருந்தாலும், எரேமியாவுக்கு எந்த குறைவும் இல்லாதபடி யெகோவா பார்த்துக்கொண்டார்.
14 கிறிஸ்தவர்களும் இன்று ‘தொடர்ந்து நீதியாய் நடக்க’ வேண்டும். தினமும் யெகோவாவின் தராதரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். (சங்கீதம் 15:1-5) “செம்மையானவைகளைப் பேசி,’ சத்தியமில்லாததையும் பொய்யையும் வெறுத்துத் தள்ள வேண்டும். (நீதிமொழிகள் 3:32) அநேக நாடுகளில், மோசடியும் லஞ்சமும் சர்வ சாதாரணமாய் இருக்கலாம். ஆனால், ‘தொடர்ந்து நீதியாய் நடப்பவர்கள்’ அவற்றை முழுமையாய் வெறுக்கின்றனர். வியாபார விஷயங்களில், சந்தேகத்திற்குரிய அல்லது மோசடியான திட்டங்களை தவிர்ப்பதில் கவனமாய் இருப்பதன்மூலம் கிறிஸ்தவர்கள் ‘நல்மனச்சாட்சி உள்ளவர்களாய்’ இருக்க வேண்டும். (எபிரெயர் 13:18; 1 தீமோத்தேயு 6:9, 10) ‘இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடிக்கொள்கிறவர்கள்,’ பொழுதுபோக்கு, இசை போன்றவற்றை தேர்ந்தெடுப்பதில் கவனமாய் இருப்பர். (சங்கீதம் 119:37) யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளிலே, தம் தராதரங்களுக்கு இசைவாக வாழும் தம் வணக்கத்தாரை அவர் பாதுகாத்து, காப்பாற்றுவார்.—செப்பனியா 2:3.
அவர்கள் ராஜாவை காணுதல்
15 ஏசாயா அடுத்ததாக எதிர்காலத்தைப் பற்றி பிரகாசமான காட்சியை அளிக்கிறார்: “உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும். உள் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? [“திறைப்பொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே?,” பொ.மொ.] கோபுரங்களை எண்ணினவன் எங்கே? உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.” (ஏசாயா 33:17-19) பாபிலோனில் நீண்டகால சிறையிருப்பில் இருக்கும் விசுவாசமுள்ள யூதர்களுக்கு எதிர்காலத்தில் வரப்போகிற மேசியானிய ராஜாவையும் அவரது ராஜ்யத்தையும் குறித்த வாக்குறுதியே நங்கூரமாக இருக்கும். அந்த ராஜ்யத்தை அவர்கள் தூரத்திலே, அதாவது தங்கள் மனக்கண்களிலேதான் பார்க்க முடிகிறது. இருந்தாலும், அவர்கள் விசுவாசத்தைக் காட்டுகின்றனர். (எபிரெயர் 11:13) முடிவாக, மேசியானிய ஆட்சி வருகையில், பாபிலோனிய கொடுங்கோல் ஆட்சி பற்றிய நினைவுகள் மறந்துவிட்டிருக்கும். அசீரிய தாக்குதலை தப்பிப்பிழைத்தவர்கள் இப்படித்தான் கேட்பார்கள்: “நம்மேல் வரி விதித்து, தீர்வையை நிர்ணயித்து, கப்பங்களையெல்லாம் வசூலித்த அந்த கொடுங்கோலனின் அதிகாரிகள் எங்கே?”—ஏசாயா 33:18, மொஃபட்.
16 பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து பெறும் விடுதலையை ஏசாயாவின் வார்த்தைகள் உறுதிசெய்கின்றன. என்றபோதிலும், தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதியின் முழுமையான நிறைவேற்றத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், நாடு கடத்தப்பட்ட யூதர்கள் காத்திருக்க வேண்டும். எதற்காக? உயிர்த்தெழுதலுக்காக. இன்று கடவுளுடைய ஊழியர்களைப் பற்றியதென்ன? 1914 முதற்கொண்டு, மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவை, ஆவிக்குரிய எல்லா மகிமையோடும் செளந்தரியத்தோடும்கூட யெகோவாவின் மக்கள் ‘காண்கிறார்கள்’ அல்லது உணருகிறார்கள். (சங்கீதம் 45:2; 118:22-26) அதன் விளைவாக, சாத்தானுடைய பொல்லாத ஒழுங்குமுறையின் ஒடுக்குதலிலிருந்தும், கட்டுப்பாட்டிலிருந்தும் விடுதலையை அனுபவித்து வருகின்றனர். கடவுளுடைய ராஜ்யத்தின் சிங்காசனமாகிய சீயோனின்கீழ் மெய்யான ஆவிக்குரிய பாதுகாப்பை அவர்கள் அனுபவிக்கின்றனர்.
17 ஏசாயா மேலும் தொடருகிறார்: “நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை. மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.” (ஏசாயா 33:20, 21) கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் முடிவுராது அல்லது அழிக்கப்படாது என ஏசாயா உறுதியளிக்கிறார். மேலும், அந்த ராஜ்யத்தை விசுவாசத்தோடு ஆதரிப்போர் இன்று பூமி முழுவதிலும் இருக்கின்றனர். அவர்களுக்கும் இந்த ராஜ்யம் பாதுகாப்பை அளிக்கிறது. இவர்களில் அநேகர் கடுமையான சோதனைகளை எதிர்ப்படுகின்றனர். இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இவர்கள் எல்லாரையும் அழிப்பதற்காக எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்பதை கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்கள் உறுதியாக நம்புகின்றனர். (ஏசாயா 54:17) அகழியோ அல்லது பெரிய ஒரு கால்வாயோ நகரத்துக்கு அரணாக இருப்பதுபோல யெகோவா தம் மக்களை பாதுகாப்பார். அவர்களுக்கு எதிராக வரும் எந்த எதிரியும் அழிவைத்தான் சந்திக்க வேண்டும்! ‘வலிக்கிற படகோ’ அல்லது ‘பெரிய கப்பலோ’ எதுவாயிருந்தாலும் அழிவு நிச்சயம்.
18 கடவுளுடைய ராஜ்யத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், அவருடைய பாதுகாப்பில் எப்படி அவ்வளவு உறுதியாய் இருக்கிறார்கள்? ஏசாயா விளக்குகிறார்: ‘யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.’ (ஏசாயா 33:22) யெகோவாவே சர்வத்திற்கும் மேலானவர், சர்வ அதிகாரம் படைத்தவர். இந்த உண்மையை அறிந்திருக்கும் மக்களை காத்து வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்றிருக்கிறார். மேசியானிய ராஜாவின்கீழ் வரப்போகும் அவருடைய ஆட்சிக்கு மனமுவந்து கீழ்ப்படிகிறவர்கள், யெகோவாவே சட்டங்களை இயற்றவும் அவற்றை அமல்படுத்தவும் அதிகாரம் உடையவர் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதேசமயம், யெகோவா நீதியையும் நியாயத்தையும் நேசிப்பவராதலால், அவருடைய மகன் மூலம் வரப்போகும் ஆட்சி அவருடைய வணக்கத்தாருக்கு நிச்சயமாய் பாரமாக இருக்காது. மாறாக, அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதால் அவர்கள் ‘பிரயோஜனம் அடைகிறார்கள்.’ (ஏசாயா 48:17) உத்தமத்தோடு தம்மை சேவிப்போரை அவர் ஒருபோதும் கைவிட மாட்டார்.—சங்கீதம் 37:28.
19 யெகோவாவின் உண்மையுள்ள மக்களுடைய எதிரிகளைப் பற்றி ஏசாயா சொல்வதாவது: “உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும், பாயை விரிக்கவுங்கூடாமற்போம்: அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும். சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள்.” (ஏசாயா 33:23) ஒரு போர் கப்பலில் பாய்மரம் இல்லாதிருந்தாலோ, அது கம்பத்தோடு உறுதியின்றி லொடலொடவென்று ஆடிக்கொண்டிருந்தாலோ, அதன் நிலை எப்படியிருக்குமோ அதைப் போலவே, யெகோவாவுக்கு எதிராக வரும் எந்தவொரு எதிரியும் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் போவர். கடவுளுடைய எதிரிகள் அந்தளவு நாசமடையப் போவதால், முடவர்களும் கொள்ளையிடுவதில் சேர்ந்துகொள்வார்கள். வர இருக்கிற ‘மிகுந்த உபத்திரவத்தில்’ ராஜாவாகிய இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவா தம் எதிரிகளை அழித்து வெற்றிவாகை சூடுவார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.—வெளிப்படுத்துதல் 7:14.
குணப்படுத்துதல்
20 ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்த பாகம் அருமையான ஒரு வாக்குறுதியோடு முடிவுறுகிறது: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.” (ஏசாயா 33:24) இந்த வசனத்தில் ஏசாயா குறிப்பிடும் வியாதி முக்கியமாக ஆவிக்குரிய வியாதியையே அர்த்தப்படுத்துகிறது. ஏனென்றால், இது பாவத்தோடு அல்லது ‘அக்கிரமத்தோடு’ இணைத்துப் பேசப்படுகிறது. இந்த வார்த்தைகளின் முதலாவது நிறைவேற்றத்தில், பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தேசம் ஆவிக்குரிய குணமடைதலை அனுபவிக்கும் என யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (ஏசாயா 35:5, 6; எரேமியா 33:6; சங்கீதம் 103:1-5-ஐ ஒப்பிடுக.) அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டதால், நாடு திரும்பும் யூதர்கள் எருசலேமில் தூய வணக்கத்தை மறுபடியும் நிலைநாட்டுவார்கள்.
21 என்றபோதிலும், ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நவீன கால நிறைவேற்றத்தையும் உடையது. யெகோவாவின் மக்கள் இன்றும் ஆவிக்குரிய குணப்படுத்துதலை அனுபவித்து வருகின்றனர். ஆத்துமா அழியாமை, திரித்துவம், எரிநரகம் போன்ற பொய்ப் போதகங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒழுக்கக்கேடான பழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவும் நல்ல தீர்மானங்களை எடுக்கவும் தேவையான ஒழுக்க நெறிகளைப் பெறுகின்றனர். இயேசு கிறிஸ்துவின் பலியின் காரணமாக அவர்கள் கடவுளுக்கு முன்பாக நல்ல நிலைநிற்கையையும் சுத்தமான மனசாட்சியையும் பெற்றிருக்கின்றனர். (கொலோசெயர் 1:13, 14; 1 பேதுரு 2:24; 1 யோவான் 4:10) இந்த ஆவிக்குரிய குணப்படுத்துதலால் சரீரப்பிரகாரமான நன்மைகளும் உள்ளன. உதாரணமாக, ஒழுக்கக்கேடு மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பதால், கிறிஸ்தவர்கள் பாலுறவால் கடத்தப்படும் நோய்களிலிருந்தும் சில வகை புற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றனர்.—1 கொரிந்தியர் 6:18; 2 கொரிந்தியர் 7:1.
22 மேலும், அர்மகெதோனுக்குப் பிறகு, கடவுளுடைய புதிய உலகில் ஏசாயா 33:24-ல் உள்ள வார்த்தைகள் மிகப் பிரமாண்டமான முறையில் நிறைவேறும். மேசியானிய ராஜ்யத்தின் ஆட்சியின்கீழ், ஆவிக்குரிய குணப்படுத்துதல் மட்டுமின்றி சரீர குணப்படுத்துதலையும் மனித குலத்தார் அனுபவிப்பர். (வெளிப்படுத்துதல் 21:3, 4) சாத்தானுடைய ஒழுங்குமுறை அழிக்கப்பட்ட பிறகு, இயேசு பூமியிலிருந்தபோது செய்ததுபோன்ற அற்புதங்கள் உலகளாவிய அளவில் செய்யப்படும். குருடர்கள் பார்வையடைவர், செவிடர் கேட்பர், முடவர் நடப்பர்! (ஏசாயா 35:5, 6) மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும் அனைவரும் பூமியை ஒரு பூங்காவாக மாற்றும் வேலையில் பங்குகொள்ள இது உதவும்.
23 பின்னர், உயிர்த்தெழுதல் ஆரம்பிக்கையில், உயிரோடு வரும் அனைவரும் திட ஆரோக்கியத்தோடு வருவர். இயேசுவினுடைய பலியின் கிரயம் மனிதகுலத்திற்கு அதிகமாக அளிக்கப்படுகையில், இன்னும் பல சரீர நன்மைகளை பெற முடியும். மனிதகுலம் பரிபூரணத்தை அடையும் வரையாக இது தொடரும். முடிவில், முழுமையான அர்த்தத்தில், நீதிமான்கள் ‘உயிரடைவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 20:5, 6) அப்போது, ஆவிக்குரிய விதமாகவும் சரீரப் பிரகாரமாகவும் ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லமாட்டார்கள்.’ என்னே கிளர்ச்சியூட்டும் வாக்குறுதி! இந்த ஆசீர்வாதங்களை எல்லாம் அனுபவிக்கப் போகிறவர்களில் ஒருவராக இருக்க உண்மை வணக்கத்தாராகிய நாம் அனைவரும் உறுதியாய் முயற்சி செய்வோமாக!
[கேள்விகள்]
1. ஏசாயா 33:24-ல் உள்ள வார்த்தைகள் ஏன் ஆறுதலை அளிக்கின்றன?
2, 3. (அ) என்ன விதத்தில் இஸ்ரவேல் தேசம் வியாதிப்பட்டிருக்கிறது? (ஆ) கடவுளுடைய சிட்சையின் ‘கோலாக’ அசீரியா எப்படி பயன்படுத்தப்படுகிறது?
4, 5. (அ) அசீரியாவின் நிலை எப்படி மாற்றப்படும்? (ஆ) யெகோவாவின் மக்களுக்காக ஏசாயா எப்படி ஜெபிக்கிறார்?
6. அசீரியாவுக்கு என்ன நேரிடும், இது ஏன் பொருத்தமானது?
7. (அ) ஆவிக்குரிய வியாதிப்பட்டிருக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கு இன்று எதை ஒப்பிடலாம்? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தை அழிக்க யெகோவாவின் ‘கோலாக’ எது பயன்படும்?
8. (அ) இன்று சனகெரிப்புக்கு யாரை ஒப்பிடலாம்? (ஆ) நவீன கால சனகெரிப் யாரை துணிந்து தாக்குவான், விளைவு என்ன?
9. (அ) யூதாவின் ‘பராக்கிரமசாலிகளும், சமாதான ஸ்தானாபதிகளும்’ என்ன செய்வார்கள்? (ஆ) யூதாவின் சமாதான ஒப்பந்தத்திற்கு அசீரியா எப்படி பிரதிபலிக்கும்?
10. (அ) கிறிஸ்தவமண்டலத்தின் “பராக்கிரமசாலிகள்” எப்படி பிரயோஜனமற்றவர்களாகப் போவார்கள்? (ஆ) கிறிஸ்தவமண்டலத்திற்கு வரும் இக்கட்டின்போது, உண்மை கிறிஸ்தவர்களை யார் பாதுகாப்பார்?
11, 12. (அ) ஏசாயா 33:11-14 வரையுள்ள வார்த்தைகள் எப்படி, எப்போது நிறைவேறும்? (ஆ) யெகோவாவின் வார்த்தைகள் இன்று என்ன எச்சரிக்கையை தருகின்றன?
13. ‘தொடர்ந்து நீதியாய் நடப்பவருக்கு’ என்ன வாக்குறுதி கொடுக்கப்படுகிறது, எரேமியாவின் விஷயத்தில் அது எப்படி நிறைவேறியது?
14. கிறிஸ்தவர்கள் இன்று எப்படி ‘தொடர்ந்து நீதியாய் நடக்கலாம்’?
15. நாடுகடத்தப்பட்ட, விசுவாசமுள்ள யூதர்களுக்கு எந்த வாக்குறுதி நங்கூரமாக அமையும்?
16. கடவுளுடைய மக்கள் எப்போதிலிருந்து மேசியானிய ராஜாவைக் ‘காண’ முடிகிறது, என்ன விளைவுகளோடு?
17. (அ) சீயோனைக் குறித்து என்ன வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன? (ஆ) சீயோனைக் குறித்த யெகோவாவின் வாக்குறுதிகள் எப்படி மேசியானிய ராஜ்யத்திலும், பூமியிலுள்ள அதன் ஆதரவாளர்களிலும் நிறைவேறுகிறது?
18. யெகோவா என்ன பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்?
19. யெகோவாவின் உண்மையுள்ள மக்களுடைய எதிரிகளின் உபயோகமற்றத்தன்மையை ஏசாயா எப்படி விவரிக்கிறார்?
20. கடவுளுடைய மக்கள் என்ன விதமான குணப்படுத்துதலை அனுபவிப்பர், எப்போது?
21. என்ன வழிகளில் யெகோவாவின் வணக்கத்தார் இன்று ஆவிக்குரிய குணப்படுத்துதலை அனுபவிக்கின்றனர்?
22, 23. (அ) ஏசாயா 33:24 என்ன பிரமாண்டமான முறையில் எதிர்காலத்தில் நிறைவேறும்? (ஆ) இன்று உண்மை வணக்கத்தார் அனைவரும் எதற்கு உறுதியாய் முயற்சி செய்ய வேண்டும்?
[பக்கம் 344-ன் படம்]
ஏசாயா நம்பிக்கையோடு யெகோவாவிடம் ஜெபிக்கிறார்
[பக்கம் 353-ன் படங்கள்]
இயேசுவின் பலியின் காரணமாகவே யெகோவாவின் மக்கள் அவருக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையை பெற்றிருக்கின்றனர்
[பக்கம் 354-ன் படம்]
புதிய உலகில், சரீர குணப்படுத்துதல் மாபெரும் அளவில் நடைபெறும்