கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பிரகடனம் செய்யப்பட்டே தீர வேண்டும்
“நீ நின்று நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.”—எரேமியா 1:17.
“படுகொலை ராஜ்யத்தில் [நாசி ஜெர்மனி] யெகோவாவின் சாட்சிகளின் துன்புறுத்தல் அவர்களுடைய சரித்திரத்தின் மற்ற கடுஞ்சோதனையான காலங்களின் மத்தியில் இடம் பெற்றுவிட்டது.” (படுகொலை ஆராய்ச்சிகள் ஆண்டிதழ், புத்தகம் II—படுகொலைக்குச் சர்ச்சுகளின் பிரதிபலிப்பு) ஜெர்மன் தேசத்து சாட்சிகளைப் பற்றி ஜூலை 15, 1939 தேதியிட்ட தென் ஆப்பிரிக்க தினசரி செய்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “ஒருபோதும் அணைந்தணைந்து எரியாத ஒரு விளக்கைப் போல, கிறிஸ்தவ ஆண்களும் பெண்களுமடங்கிய இந்தச் சிறிய தொகுதியினர் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கிறவர்களாக, மியூனிச் முடிமன்னனின் [அடால்ப் ஹிட்லர்] ஓயாத உறுத்தலுக்குக் காரணமாக, அவனுடைய அற்ப ஆயுசுக்கு உயிருள்ள அத்தாட்சியாக இருக்கிறார்கள்.” இயேசு, தம்மைப் பின்பற்றுகிறவர்கள், “உலகத்துக்கு வெளிச்ச”மாயிருப்பார்கள் என்பதாகவும், இழப்பு என்னவாகயிருப்பினும் அவர்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்க வேண்டும் என்று அவர் சொன்னதையும் இந்த வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன.—மத்தேயு 5:11, 12, 14-16.
2 டேவிட் குணரத்தினம் என்ற தமிழினத்தைச் சேர்ந்த ஓர் இளம் சாட்சி உண்மையான எரேமியா பாணியில், இராணுவ அதிகாரிகளுக்குத் தைரியமாக பிரசங்கித்ததைக் குறித்து, பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்ட இலங்கையிலிருந்து வரும் மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. மற்ற இளைஞர்களோடுகூட விசாரணைக்காக அவன் கைது செய்யப்பட்டிருந்தான். அறிக்கை பின்வருமாறு வாசிக்கிறது: “அதிகாரிகளும், அந்த ஆட்களும் இந்த மனிதனின் ஆழமான அறிவினால் வெகுவாக கவரப்பட்டார்கள், அதற்கும் மேலாக, குறிப்பாக, ‘பயங்கரவாதிகள் என்றழைக்கப்படும் எவரையாவது நான் சந்தித்தாலும் இதே காரியத்தைத்தான் நான் அவர்களுக்குப் பிரசங்கிப்பேன்’ என்று அவன் சொன்னபோது தெளிவாக புலனான அவனுடைய கபடமின்மையினால் அவர்கள் கவரப்பட்டார்கள்.”
3 அதே இரவில் அவனை இராணுவத்துக்கு உடந்தையாயிருப்பதாக குற்றஞ்சாட்டிய பயங்கரவாதிகள் அவனுடைய வீட்டிலிருந்து அவனை கடத்திக்கொண்டு போனார்கள். அவன் நடுநிலைமை வகிப்பதில் உறுதியாக இருந்து கடவுளுடைய ராஜ்யத்தின் செய்தியை மாத்திரமே பிரசங்கித்துக் கொண்டிருந்ததை அவன் சொன்னான். “நான் கடவுளுடைய வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். எந்தவித பாகுபாடுமில்லாமல் செவிகொடுத்துக் கேட்கும் எவருக்கும் நான் பிரசங்கிக்கிறேன்.” தைரியமுள்ள இந்தச் சாட்சி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் ஓர் இளம் விதவையையும் ஓர் ஆண் குழந்தையையும் விட்டுச் சென்றான்.—அப்போஸ்தலர் 7:51-60 ஒப்பிடவும்.
4 சில கத்தோலிக்க மற்றும் பிரிஸ்பிட்டேரியன் மத குருமார்களின் ஒப்புதலோடு யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படும் ஓர் இலத்தீன் அமெரிக்க தேசத்திலிருந்து இந்த அறிக்கை வருகிறது: “இராணுவ தளம் ஒன்றில் ஐந்து யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள் . . . அடிக்கடி அவர்கள் அடிக்கப்பட்டு உணவின்றி தனிமையில் வைக்கப்பட்டார்கள். மற்ற படைவீரர்களுக்கு அவர்கள் பிரசங்கித்ததன் காரணமாக எங்கள் தொகுதியில் எங்களுக்கு வகுப்புகளை நடத்திய அரசியல் அதிகாரி, அவர்களைத் தண்டித்தார். திருச்சபையினின்று பிரிந்து சென்ற அனைவரிலும் யெகோவாவின் சாட்சிகளே மிகவும் ஆபத்தானவர்கள் என்பதாக அவர் சொன்னார்.”
தூண்டுதலும் பிரதிபலிப்பும்
5 ஆம், எரேமியா அவனுடைய நாளில் மதத்தலைவர்களாலும் அரசியல் தலைவர்களாலும் துன்புறுத்தப்பட்டது போலவே யெகோவாவின் சாட்சிகள் இதே ஆட்களிடமிருந்து எதிர்ப்பை உலகம் முழுவதிலும் எதிர்படுகிறார்கள். இந்தச் செயல்களைத் தூண்டுவது என்ன? எந்த ஒரு சமுதாயத்திலும் சாட்சிகள் மிகவும் சமாதானமுள்ளவர்களும், சட்டத்தைக் கடைபிடித்து வாழும் ஆட்களாகவும் இருந்தபோதிலும், அவர்களுடைய சத்துருக்கள், கடவுளுடைய வார்த்தையை ஆபத்தானதாக கருதுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய அதன் செய்தியை வெறுத்து, வேண்டாமென்று தள்ளிவிடுகிறார்கள். ஒத்திணங்கிப் போகாமல் இவர்கள் பிரசங்கிப்பதும், இவர்களுடைய நியமங்களும் சாத்தானிய உலகின் அரசியல் வர்த்தக மற்றும் மத பிரிவுகளின் சுயநலத்தையும் மாய்மாலத்தையும் வெளிப்படுத்திக் காண்பிக்கிறது.—யோவான் 15:18, 19; 1 யோவான் 5:19.
6 என்றபோதிலும், சிறையிருப்பையும், அடிகளையும் மரணத்தையும் பொருட்படுத்தாமல், உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் பூர்வ கால எரேமியாவைப் போலவே பிரதிபலித்திருக்கிறார்கள். அன்பையும் சாதுரியத்தையும் காண்பித்து, அவர்கள் ஜாதிகளுக்கு விரும்பப்படாத கடவுளின் நியாயத்தீர்ப்புகளைத் தொடர்ந்து பிரசங்கித்து வருகிறார்கள். (2 தீமோத்தேயு 2:23-26) மனிதர்களைக் காட்டிலும் அரசராக கடவுளுக்கே கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். (அப்போஸ்தலர் 4:19, 20; 5:29) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நிலைத்திருக்கும்படியாக எபிரேய கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதிய புத்திமதியைக் குறித்து அவர்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் நித்திய ஜீவனின் வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்தைக் காண்பார்கள். ஆகவே பவுலையும் எரேமியாவையும் போலவே நாம் பின்வருமாறு சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்: “நாமோ கெட்டுப் போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல் ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.”—எபிரெயர் 10:35-39.
தற்கால எரேமியா கிறிஸ்தவ மண்டலத்தை வெளிப்படுத்துகிறது
7 இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் யெகோவா தொடர்ந்து தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பியது போலவே, வரப்போகிற அவருடைய நியாயத்தீர்ப்பின் செய்தியை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்குத் தம்முடைய சாட்சிகளை அவர் அனுப்பியிருக்கிறார். (எரேமியா 7:25, 26; 25:4, 8, 9) விசேஷமாக ஆவிக்குரிய விதத்தில் கிளர்ச்சி மிக்கதாயிருந்த 1919-ம் ஆண்டு முதற்கொண்டு, கிறிஸ்துவின் சகோதரர்களின் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை, அழிவைப் பற்றிய வலிமையான செய்திகளைக் கிறிஸ்தவ மண்டலத்துக்குத் தைரியமாகச் சொல்லிவந்திருக்கிறார்கள். (எரேமியா 11:9-13 ஒப்பிடவும்.) அந்த வருடத்தில் பொற்காலம் (Golden Age) என்ற பத்திரிகை பிரசுரிக்கப்பட ஆரம்பித்தது. ஆறுதல் (Consolation) (1937) மற்றும் பின்னால் விழித்தெழு! (Awake!) (1946) என்பதாக மாற்றப்பட்ட பெயர்களோடு இந்தப் பத்திரிகை கடந்த பல ஆண்டுகளினூடே அது கிறிஸ்தவ மண்டல மத சம்பந்தமான பொய்களையும் அதன் போலியான கிறிஸ்தவத்தையும் வெளிப்படுத்தும் கருவியாக இருந்து வந்திருக்கிறது.
8 உதாரணமாக 1922 அக்டோபர் 11 தேதியிட்ட பொற்காலம் பொய் மதத்தைத் பின்வரும் இந்த வார்த்தைகளில் வெளிப்படையாக கண்டனம் செய்திருந்தது: “பூமியில் காரியங்களின் ஒழுங்கை காப்பாற்றி மீண்டும் நிலைநாட்டுவதற்கு மதப் பிரிவுகளைச் சேர்ந்த சர்ச் அமைப்புகளும் அவர்களுடைய மத குருமார்களும் அவர்களுடைய தலைவர்களும் அவர்களுடைய நண்பர்களும் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் கட்டாயமாகவே தோல்வியடைய வேண்டும். ஏனென்றால் அவை மேசியானிய ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் உண்டுபண்ணுவதில்லை. மறுபட்சத்தில் முதல் உலக யுத்தத்தின்போது, இந்தப் பல்வேறு சர்ச் பிரிவுகளின் மதகுருமார்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஏனென்றால் உலகப் போரை ஆதரிப்பதில் அவர்கள் முறைகேடாக பகட்டான வியாபாரத்தோடும் பெரிய அரசியல்வாதிகளோடும் ஐக்கியப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
9 கண்டன உரை மேலும் பின்வருமாறு தொடர்ந்து அறிவித்தது: “மேலுமாக கர்த்தரையும் அவருடைய ராஜ்யத்தையும் மறுதலித்து, சாத்தானுடைய அமைப்பை விரும்பி சேர்ந்துகொண்டு சர்வ தேசீய சங்கம், பூமியின் மீது கடவுளுடைய ராஜ்யத்தின் அரசியல் வெளிக்காட்டாக இருப்பதாக உலகத்துக்குத் தைரியமாக அறிவிப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய உண்மையற்றத் தன்மையைக் காண்பித்திருக்கிறார்கள்.” கடைசியாக, “அழிவு” அல்லது நியாயத்தீர்ப்பின் செய்தி இவ்வாறாக இருந்தது: “இப்பொழுது கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளின்படி, பூமியின் தேசங்களின்மீது, ‘உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்’ வர இருக்கிறது.”
10 எரேமியாவின் வேலையானது,In English-the Jeremiah role was excpanded காவற்கோபுரம் பத்திரிக்கை, சிறு புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் போன்ற மற்ற பிரசுரங்களின் உபயோகத்தின் மூலம் விரிவாக்கப்பட்டது. உதாரணமாக 1926-ல் மீட்பு (Deliverance) என்ற புத்தகம் கிறிஸ்தவ மண்டலத்தின் தவறான போதகங்களை மிக வலிமையோடு வெளிப்படுத்திக் காண்பித்தது. பக்கம் 203-ல் அது பின்வருமாறு சொன்னது: “சத்தியத்துக்குப் பதிலாக பொய்யான கோட்பாடுகள் [விசுவாச துரோக கிறிஸ்தவ மண்டலத்திற்குள்] தாராளமாக அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டது. திருத்துவம், எல்லா ஆத்துமாக்களின் அழியாமை, பொல்லாதவர்கள் நித்தியமாக வாதிக்கப்படுதல், ஆட்சி செய்வதற்கு மதகுருமார்களின் தெய்வீக உரிமை, ராஜாக்களின் தெய்வீக உரிமை ஆகியவை இதில் இடம்பெற்றன. காலப் போக்கில் குழந்தை இயேசுவின் தாயாகிய மரியாள் தெய்வமாக்கப்பட்டு, அவளைக் கடவுளின் தாயாக வணங்கும்படி ஜனங்கள் அழைக்கப்பட்டனர்.”
பிரிந்திருக்கும் கிறிஸ்தவமண்டலம் எச்சரிக்கப்படுகிறது
11 யுத்தங்களில் மதகுருமார் உடந்தையாக இருந்திருப்பதை இதே பிரசுரம் இவ்விதமாக வெளிப்படுத்தியது: “வர்த்தக மற்றும் அரசியல் அணிகளால் அனுப்பி வைக்கப்படும் இராணுவங்களை இந்தப் பல்வேறு திருச்சபை அமைப்புகளின் குருமார் ஆசீர்வதித்து, இந்த இராணுவப்படைகள் எந்தக் பக்கத்தில் போர் செய்தாலும் அவர்களுக்கு ஆசியை வழங்குகிறார்கள். இரு பக்கங்களிலும் போரிட்டுக் கொண்டிருக்கும் படைகளின் மீது ஆசீர்வாதத்தை அருளும்படி ஒரே கடவுளிடமாக ஜெபிப்பதாக மதகுருமார் பாசாங்கு செய்கிறார்கள்.” (எரேமியா 7:31 ஒப்பிடவும்.) பின்னர் உடனடியாக வரப்போகும் ஒரு நியாயத்தீர்ப்பு குறிப்பாக சுட்டிக் காண்பிக்கப்பட்டிருந்தது: “சாத்தானின் காணக்கூடிய அமைப்பை உண்டுபண்ணும் இந்த எல்லா அடிப்படை பாகங்களும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்பட்டு, அர்மகெதோன் மகா யுத்தத்துக்காக ஒன்றாக கூட்டப்படுகிறார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 16:14-16.
12 எரேமியாவின் நாளில் தலைவர்கள் அவர்கள் பாதுகாப்பாயும் கடவுளோடு சமாதானமாயுமிருப்பதாக சொன்னது போலவே, “இந்த மதத் தலைவர்களும், அவர்கள் பாதுகாப்பாயிருப்பதாயும் தொடர்ந்து அவர்கள் பிசாசின் தீயோடு விளையாடிக் கொண்டிருந்தாலும் கிறிஸ்துவின் பெயரால் அழைக்கப்படுவது மாத்திரமே அவசியமாயிருப்பதாகவும் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த கண்களிலும் உடன்மானிடரின் கண்களிலும் மண்ணைப் போட்டுக்கொண்டு உண்மையான நிலையை புரிந்துகொள்ளாதபடி தங்களைக் குருடாக்கிக் கொள்கிறார்கள்.” (Survival, பக்கம் 270) அவர்கள் தங்களை இவ்விதமாக ஏமாற்றிக்கொண்டதை அப்பொழுது பைபிள் மாணாக்கர் என்றழைக்கப்பட்ட வைராக்கியமுள்ள யெகோவாவின் சாட்சிகள் வெளிப்படுத்தினார்கள்.—மத்தேயு 7:21-23.
13 காலங்கள் சென்றபோது, எரேமியாவோடு பைபிள் மாணாக்கர்கள் இன்னும் அதிக நெருங்கிய விதத்தில் அடையாளங் கண்டுகொள்ளப்பட்டார்கள். 1931-ல் அ.ஐ.மா. ஒஹையோவிலுள்ள கொலம்பஸில் ஒரு மாநாட்டில், தைரிய மிக்க இந்தக் கிறிஸ்தவர்களின் தொகுதியினுடைய பைபிள் பூர்வமான பெயர் யெகோவாவின் சாட்சிகள் என்பதாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. (ஏசாயா 43:10-12) அந்தப் பெயரை, யெகோவா இஸ்ரவேலுக்கு பொ.ச.மு. 8-ம் நூற்றாண்டில், பொருத்தி காண்பித்தபோது அது முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டது. ஆகவே சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்பு, எரேமியா ஒரு தீர்க்கதரிசியாக சேவித்தபோது அவனும்கூட யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக இருந்தான். (எரேமியா 16:21) அதே விதமாகவே இயேசு ஒரு யூதனாக பூமிக்கு வந்தபோது, தம்முடைய பிதாவாகிய யெகோவாவுக்கு சாட்சியாக இருந்தார். (யோவான் 17:25, 26; வெளி. 1:5; 3:14) ஆகவே கடவுளுடைய குறிப்பிட்ட காலத்தில், அவருடைய ஜனங்கள் தேவனால் நியமிக்கப்பட்ட இந்தப் பெயருக்கு—“யெகோவாவின் சாட்சிகள்” என்ற பெயருக்குக் கடைசியாக தகுதியுள்ளவர்களாவது பொருத்தமாக இருந்தது.—யோவான் 17:6, 11, 12.
14 கடந்த ஏழு பத்தாண்டுகளுக்கும் மேலாக, யெகோவாவின் வர இருக்கும் ராஜ்யத்தைப் பற்றிய மகிமையான நம்பிக்கையை அறிவிப்பதோடுகூட உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவித்து வந்திருக்கிறார்கள். ஒளிவு மறைவில்லாமல் கடுமையாக தாக்கும் பைபிள் ஆதாரமுள்ள ஆயிரக்கணக்கான பிரசுரங்களின் மூலமாக, வெளிப்படுத்தின விசேஷம் 17 மற்றும் 18-ம் அதிகாரங்களில், கண்டனம் செய்யப்பட்டிருக்கும் மதசம்பந்தமான வேசியாகிய “மகா பாபிலோனில்” கிறிஸ்தவ மண்டலம் மிகவும் வல்லமைவாய்ந்த சக்தியாக இருப்பதாக அவர்கள் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். (உவாட்ச் டவர் பைபிள் & டிராக்ட் சொஸையிடியால் 1963-ல் வெளியிடப்பட்ட “மகா பாபிலோன் வீழ்ந்தது, கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி செய்கிறது!” என்ற புத்தகத்தில் பக்கங்கள் 576-615 பார்க்கவும்.)
15 1955-ல் யெகோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ மண்டலமா கிறிஸ்தவமா—இதில் உலகத்துக்கு வெளிச்சமாயிருப்பது எது? என்ற சிறு புத்தகத்தை இலட்சக்கணக்கில் விநியோகித்தார்கள். கிறிஸ்தவ மண்டல மதகுருமார்களுக்கு ஆயிரக்கணக்கில் இவை நேரடியாக கொடுக்கப்பட்டன. அந்தச் சிறு புத்தகம் அவர்களுக்கு என்ன சொன்னது? மெய்யான எரேமியா பாணியில் அது பின்வருமாறு சொன்னது: “பொருளிலும், மனதிலும், வலிமையிலும் அதனை முன்னணிக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் எல்லா அனுகூலமான நிலைமைகளின் மத்தியிலும் கிறிஸ்தவ மண்டலம் தன்னை உலகத்துக்கு வெளிச்சமாக நிரூபிக்கவில்லை. ஏன் இல்லை? . . . அவள் [பைபிளின்] கிறிஸ்தவத்தைப் பிரசங்கிப்பதோ நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிப்பதோ இல்லை.” பின்னர் அது, இந்தக் கேள்வியை எழுப்பியது: “பொய் மதங்களை வெளிப்படுத்துவது அதை பின்பற்றுகிறவர்களைத் துன்புறுத்துவதாக இருக்கிறதா? அது கிறிஸ்தவத்துக்கு எதிரான மதவெறியாக இருக்கிறதா?”
16 இதற்குப் பதில்: “இல்லை, அப்படியென்றால் இயேசு கிறிஸ்து மதவெறியனாக, யூதர்களைத் துன்புறுத்தியிருக்கிறார் . . . இயேசுவுக்கு முன்னால் பூர்வ காலங்களிலிருந்த [எரேமியா உட்பட] யெகோவாவின் தீர்க்கதரிசிகள் அனைவரும் துன்புறுத்துகிறவர்களாயும் மதவெறியர்களாயும் இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே விசுவாச துரோக யூதர்கள் மற்றும் புறமத தேசங்களின் பொய் மதத்தை வெளிப்படுத்தினார்கள்.” நிச்சயமாகவே, மெய் கிறிஸ்தவர்கள், “உலகத்துக்கு வெளிச்சமாயிருக்க” வேண்டுமாயின் ஆவிக்குரிய “இருள்“ வெளிப்படுத்தப்பட்டே தீர வேண்டும். (2 கொரிந்தியர் 6:14-17) இது தனிப்பட்டவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று அர்த்தமாகாது. ஆனால் அவர்களை அடிமையாக வைத்திருக்கும் அமைப்பே தாக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, எரேமியாவுக்கு யெகோவா பின்வரும் கட்டளையைக் கொடுத்தார்: “நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல் . . . நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.”—எரேமியா 1:17, 19.
எரேமியா வேலை முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது
17 கடவுளுடைய நியாயத்தீர்ப்பை அறிவிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் குரலை தாழ்த்திக்கொண்டுவிட்டார்களா? மற்றொரு மதத்தில் குறை கண்டுபிடிப்பது சரியல்ல என்பதாக கருதப்படும் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்ந்து வருவது உண்மைதான். என்றபோதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள், கிறிஸ்தவமண்டலத்துக்கு அதே நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவித்துக்கொண்டே வருகின்றன. உதாரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில், யெகோவாவின் சாட்சிகள் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 76 மொழிகளில் 320 இலட்சம் பிரதிகள் அச்சிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரசுரம், “மரணத்தில் என்ன நேரிடுகிறது” “கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்” “உண்மையான மதத்தை அடையாளங் கண்டுகொள்ளுதல்” போன்ற அநேக இன்றைய நாளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. ஆனால் பொய் மத உலகப் பேரரசின் சம்பந்தமாக தெளிவான எச்சரிப்பையும்கூட அது கொடுக்கிறது.
18 “சாத்தானுடைய உலகத்தின் சார்பாகவா, அல்லது கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாகவா?” என்ற தலைப்பையுடைய 25-ம் அதிகாரத்தில் அது இவ்விதமாகச் சொல்லுகிறது: “பைபிளில் பொய் மதமானது ‘மகா பாபிலோன்’ என்ற பெயரைக் கொண்ட ஒரு “மகா வேசி”யாக அல்லது விலைமகளாகக் குறிக்கப்பட்டிருக்கிறது . . . சரித்திரம் முழுவதிலும் மதம் அரசியலோடு கலந்து வந்திருப்பதும், அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை அடிக்கடி சொல்லி வந்திருப்பதும் உண்மையான காரியமாயிருக்கிறது.” ஆகவே என்ன நடவடிக்கையை புத்தகம் பரிந்துரைச் செய்கிறது? அது கேட்கிறது: “நீங்கள் சாத்தானுடைய உலகத்தின் பாகமாயிருக்க விரும்புகிறீர்களா? அல்லது கடவுளுடைய புதிய ஒழுங்கின் சார்பாக இருக்கிறீர்களா? நீங்கள் கடவுளுடைய புதிய ஒழுங்கின் சார்பாக இருக்கிறீர்களென்றால், இவ்வுலகத்தின் மதம் உட்பட, இவ்வுலகத்திலிருந்து விலகியவர்களாய் இருப்பீர்கள். ‘என் ஜனங்களே, அவளை விட்டு [மகா பாபிலோனை விட்டு] வெளியே வாருங்கள்’ என்ற இந்தக் கட்டளைக்குச் செவி கொடுப்பீர்கள்.—(வெளிப்படுத்தின விசேஷம் 18:4)”
19 இதே போன்ற, வெளியே வரும்படியான அழைப்பும் நியாயத்தீர்ப்பின் வலிமையான செய்தியும் 1986-ல் பிரசுரிக்கப்பட்ட “சமாதான பிரபுவின் கீழ் உலகளாவிய பாதுகாப்பு” புத்தகத்தில் தெளிவாக ஒலிக்கிறது. (60 இலட்சம் பிரதிகள் 25 மொழிகளில்) பிரசங்கம் செய்து முதல் உலகப் போரின்போது போர்களத்துக்குள் வாலிபர்களை அழைத்துச் சென்றதற்காக கிறிஸ்தவமண்டல மதகுருமார்களை அது வெளிப்படுத்துகிறது. அது தொடர்ந்து சொல்கிறது: “இந்நாள் வரையாகவும் கிறிஸ்தவமண்டலம் மகா உன்னதமான கடவுளின் சத்துருவாகவே தன்னை நடத்திக்கொண்டிருக்கிறது. நிச்சயமாகவே அவளுக்குத் தெய்வீக பாதுகாப்பு கிடையாது. இந்த முக்கியமான காரணத்துக்காக அவள் பாதுகாப்பில்லாமலே இருக்கிறாள்.” (பக்கம் 30-2) தற்கால எரேமியாவின் குரல் தாழ்ந்துவிடவில்லை. மதகுருமார்களும் அரசியல் வாதிகளும் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளைப் பிரசங்கிப்பதை மூடி மறைக்க முயற்சி செய்தபோதிலும் உண்மையுள்ள சாட்சிகள் எச்சரிப்பு வேலையை முற்று முடிய செய்ய தீர்மானித்தவர்களாய் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார்கள்.—எரேமியா 18:18.
20 இந்த வேலை ஏன் முடிக்கப்பட வேண்டும்? ஏனென்றால் பிரபஞ்சத்தின் ஜீவனுள்ள கர்த்தராகிய ஆண்டவருக்குத் தேசங்களோடும் அவர்களுடைய மதங்களோடும் வழக்கு இருக்கிறது. மாய்மாலம் பண்ணின யூதாவையும் எருசலேமையும் யெகோவா கேட்ட அதே கேள்வி இன்று கிறிஸ்தவ மண்டலத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது: “இவைகளை விசாரியதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியை சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.” ஆகவே, விரும்பப்படாத ஒரு நியாயத்தீர்ப்பாக, பெரும்பான்மையானோருக்கு வேதனைத் தரும் ஒரு செய்தியோடு தேசங்களின் ஜனங்களை யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிறுபான்மையான ஜனங்களுக்கு இது மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியாக—கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியாக இருக்கிறது.—எரேமியா 5:9, 29; 9:9; அப்போஸ்தலர் 8:4, 12.
21 எரேமியா அநேகமாக “அழிவின் செய்தியை கூவிக்கொண்டிருப்பவன்” என்பதாக அழைக்கப்பட்டபோதிலும் அவனுடைய செய்தி யூதர்களுக்கு நம்பிக்கையின் ஒளியை அறிமுகப்படுத்தியது என்பதும்கூட உண்மையாக இருக்கிறது. (எரேமியா 23:5, 6; 31:16, 17) அதேவிதமாகவே, யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய அர்மகெதோன் நியாயத்தீர்ப்போடு நெருங்கிவர இருக்கும் “மகா உபத்திரவத்தைப்” பற்றி அறிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில் நித்திய ஜீவனோடுகூட இந்தக் கிரகத்துக்கு நீதியையும் பரதீஸையும் கொண்டுவரும் “புதிய வானம்” மற்றும் “புதிய பூமி”யின் ஆசீர்வாதங்களையும்கூட அறிவித்து வருகிறார்கள். (மத்தேயு 24:21, 22; வெளிப்படுத்தின விசேஷம் 16:16; 21:1-4) ஆகவே யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் செய்திக்குச் செவிகொடுக்கவும் எரேமியாவின் மிகப் பெரிய வேலை முடிவடைவதற்கு ஆதரவைக் கொடுப்பதற்கும் இதுவே சமயமாக இருக்கிறது.—எரேமியா 38:7-13 ஒப்பிடவும். (w88 4/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ எரேமியாவைப் போலவே, யெகோவாவின் சாட்சிகள் எவ்விதமாக துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்?
◻ சாட்சிகள் விடாது தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருப்பது ஏன்?
◻ எரேமியா வேலை எவ்விதமாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது?
◻ கண்டனத் தீர்ப்பு மாறவில்லை என்பதை என்ன அண்மைக்கால உதாரணங்கள் காண்பிக்கின்றன?
◻ அழிவின் செய்தியின் மத்தியில் என்ன நம்பிக்கையும்கூட அறிவிக்கப்பட்டு வருகிறது?
[கேள்விகள்]
1. நாசி ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய வெளிச்சத்தை எவ்விதமாக பிரகாசிக்கச் செய்தார்கள்?
2, 3. தைரியமான பிரசங்கிப்புக்கு உதாரணமாக இலங்கையில் என்ன நடந்தது?
4. ஓர் இலத்தீன் அமெரிக்க தேசத்தில் மதகுருமாரின் ஒப்புதலோடு யெகோவாவின் சாட்சிகள் எவ்விதமாக துன்புறுத்தப்பட்டனர்?
5. எரேமியாவின் விஷயத்திலிருந்ததுபோலவே, சாட்சிகளின் துன்புறுத்தலுக்குப் பின்னால் இருப்பது என்ன?
6. துன்புறுத்தலுக்கு யெகோவாவின் சாட்சிகள் எவ்விதமாக பிரதிபலித்திருக்கிறார்கள்?
7. 20-ம் நூற்றாண்டிலுள்ள சாட்சிகள் எவ்விதமாக இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் அனுப்பப்பட்டிருந்த யெகோவாவின் உண்மையுள்ள தீர்க்கதரிகளின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கிறார்கள்?
8, 9. (எ) 1922-ல் சர்ச்சுகள் ஏன் கண்டனம் செய்யப்பட்டன? (பி) என்ன அழிவு அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது?
10. 1926-ல் என்ன கண்டன தீர்ப்பு கொடுக்கப்பட்டது?
11, 12. (எ) மதகுருமார் போரில் நடுநிலைவகிக்கத் தவறியது எவ்விதமாக வெளிப்படுத்திக் காண்பிக்கப்பட்டது? (பி) எரேமியா வகுப்பால் என்ன எச்சரிப்பு கொடுக்கப்பட்டது?
13. 1931-ல் என்ன சம்பவம் நடந்தது? அது ஏன் பொருத்தமாக இருந்தது?
14. கிறிஸ்தவ மண்டலம் எவ்விதமாக கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது?
15. 1955-ல் கிறிஸ்தவமண்டலம் எவ்விதமாக வெளிப்படுத்தப்பட்டது?
16. கிறிஸ்தவ மண்டலத்தை வெளிப்படுத்துவது சாட்சிகளின் பங்கில் மதவெறியாக இருக்கிறதா? விளக்கவும்.
17, 18. (எ) யெகோவாவின் சாட்சிகள் எவ்விதமாக சமீப ஆண்டுகளில், எரேமியா வேலையை தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்கள்? (பி) நேர்மையான இருதயமுள்ளவர்களுக்கு என்ன புத்திமதி கொடுக்கப்பட்டு வருகிறது?
19. இந்நாள் வரையாகவும் தற்கால எரேமியாவின் குரல் தாழ்ந்துவிடவில்லை என்பதை நீங்கள் எவ்விதமாக காண்பிக்கலாம்?
20. யெகோவாவின் சாட்சிகள் ஏன் தொடர்ந்து யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளைத் தேசங்களுக்கு அறிவித்து வருவார்கள்?
21. அழிவு முன்னறிவிக்கப்பட்டாலும் எரேமியா வேலைக்குச் சாதகமாக பிரதிபலிப்பவர்களுக்கு முன்னால் என்ன மகத்தான நம்பிக்கை இருக்கிறது? (சங்கீதம் 37:9, 11, 18, 19, 28, 29)
[பக்கம் 12-ன் படம்]
காலப்போக்கில், மரியாள் வழிபாட்டுக்குரியவளாக கருதப்பட்டாள். மக்கள் அவளைக் “கடவுளின் தாயாக” வழிபடும்படியாக அழைக்கப்பட்டனர்
[பக்கம் 13-ன் படம்]
1931-ல் பைபிள் மாணாக்கர்கள், ஓஹையோவிலுள்ள கொலம்பஸில் நடைபெற்ற தங்களுடைய மாநாட்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்கள்
[பக்கம் 14-ன் படம்]
உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் எரேமியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி வருகிறார்கள்