கனிகள்—நல்லதும் கெட்டதும்
“அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார். ஒரு கூடையிலே [தக்க பருவத்தில் பழுத்த முதல் அத்திப்பழங்களைப் போன்ற, NW] மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.”—எரேமியா 24:1, 2.
1. யெகோவா தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு எப்படி இரக்கத்தைக் காண்பித்தார், ஆனால் அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
வருடம் பொ.ச.மு. 617. எருசலேமுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக யெகோவாவின் தகுதியான நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதற்கு பத்தே வருடங்கள் முற்பட்ட காலமாக அது இருந்தது. எரேமியா ஏற்கெனவே 30 வருடங்களாக விடாது தொடர்ந்து பிரசங்கித்திருந்தார். 2 நாளாகமம் 36:15-ல் காணப்படுகிறபடி, அந்த நிலைமையைக் குறித்த எஸ்றாவின் உயிர்ப்புள்ள விவரிப்பைக் கவனியுங்கள்: “அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார்.” இந்த எல்லா முயற்சியின் பலனும் என்ன? வருந்தத்தக்கவிதமாக, 16-ம் வசனத்தில் எஸ்றா தொடர்ந்து சொல்லுகிறார்: “ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது, சகாயமில்லாமல் போயிற்று.”
2, 3. யெகோவா எரேமியாவுக்குக் காண்பித்த முக்கியமான தரிசனத்தை விளக்கவும்.
2 யூதா தேசம் அறவே அழிக்கப்படும் என்பதை இது அர்த்தப்படுத்தியதா? பதிலைக் கண்டடைய, இப்போது எரேமியாவுக்குக் கொடுக்கப்பட்ட, அவருடைய பெயரைத் தாங்கிய புத்தகத்தின் 24-ம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிமுக்கியமான ஒரு தரிசனத்தைச் சிந்திப்போம். கடவுள் இந்தத் தரிசனத்தில் தம்முடைய உடன்படிக்கையின் மக்கள் மத்தியிலுள்ள முன்னேற்றங்களை அடையாளப்படுத்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைப் பயன்படுத்தினார். இவை நல்லதும் கெட்டதுமாகிய தெளிவாகத் தெரிகிற இரண்டு வகைகளான கனிகளால் குறிக்கப்படும்.
3 எரேமியா 24-ம் அதிகாரம், வசனங்கள் 1 மற்றும் 2, கடவுளுடைய தீர்க்கதரிசி என்ன பார்த்தார் என்பதை விவரிக்கின்றன: “பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார். ஒரு கூடையிலே [தக்க பருவத்தில் பழுத்த முதல் அத்திப்பழங்களைப் போன்ற, NW] மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.”
தரிசனத்தின் நல்ல அத்திப்பழங்கள்
4. உண்மையுள்ள இஸ்ரவேலருக்கு அந்த அத்திப்பழங்களைப் பற்றிய தரிசனம் என்ன ஆறுதலளிக்கும் செய்தியைக் கொண்டிருந்தது?
4 எரேமியா எதை பார்த்தார் என்பதைப்பற்றி கேள்வி கேட்டுவிட்டு, யெகோவா, 5 முதல் 7 வசனங்களில் தொடர்ந்து சொன்னார்: “நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப் போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன். அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன். நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள்.”
5, 6. (அ) சில இஸ்ரவேலர் எப்படி கல்தேயாவுக்கு ‘நன்மையுண்டாக அனுப்பப்பட்டனர்’? (ஆ) நாடுகடத்தப்பட்ட உண்மையுள்ள இஸ்ரவேலர்மேல் யெகோவா எவ்வாறு ‘நன்மையுண்டாக தம்முடைய கண்களை வைத்தார்’?
5 ஆகவே இங்கு யெகோவா சொன்னதிலிருந்து, நல்ல காலங்கள் முன்னிருந்தன என்றும் யூதா தேசம் அறவே அழிக்கப்படாது என்றும் தோன்றுகிறது. ஆனால் இந்த நல்ல அத்திப்பழங்களுள்ள கூடையின் உட்பொருள் என்ன?
6 அரசராகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் எருசலேமை மனமுவந்து ஒப்படைப்பதற்கு முன்பு எகொனியா அல்லது யோயாக்கீன் என்பவன் மூன்று மாதங்களும் பத்து நாட்களும் மட்டுமே யூதாவின்மீது அரசனாக இருந்தான். அவனோடுகூட நாடுகடத்தப்பட்டு சிறைப்பட்டவர்களாகக் கொண்டுபோகப்பட்டவர்களுக்குள் தானியேலும் அவருடைய மூன்று எபிரெய தோழர்களாகிய அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரும் எசேக்கியேலும் இருந்தனர். அவர்களுடைய உயிர்கள் பாபிலோன் அரசரால் பாதுகாக்கப்பட்டன; ஆகவே நன்மையுண்டாக கல்தேயர் தேசத்துக்குப் போகவிடப்பட்டது போல யெகோவா, இந்த எல்லா சிறைப்பட்டவர்களையும் நோக்கினார் என்று சொல்லப்படலாம். ‘அவர்களுக்கு நன்மையுண்டாக தம்முடைய கண்களை அவர்கள்மேல் வைப்பார்’ என்றும் யெகோவா வாக்குக்கொடுத்ததை நீங்கள் கவனித்தீர்களா? இது எப்படி நிறைவேறியது? பொ.ச.மு. 537-ல், 80 வருடங்களுக்குப் பிறகு, அவர்களுடைய சந்ததியாரில் ஒரு மீதியானோர் யூதா தேசத்துக்குத் திரும்பும்படி அனுமதிக்கும் ஒரு கட்டளையை அரசனாகிய கோரேசு பிறப்பிக்கும்படி யெகோவா செய்தார். இந்த உண்மையுள்ள யூதர்கள் எருசலேம் நகரத்தைத் திரும்பவும் கட்டினர்; தங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்குவதற்கு ஒரு புதிய ஆலயத்தைக் கட்டினார்கள்; மேலும் அவர்கள் முழு இருதயத்தோடும் அவரிடத்திற்குத் திரும்பினார்கள். ஆக இவை யாவற்றிலும், இந்தச் சிறைப்பட்டவர்களும் அவர்களுடைய சந்ததியாரும் யெகோவாவுக்கு மிகவும் நல்ல, தக்க பருவத்தில் பழுத்த முதல் அத்திப்பழங்களைப்போல் இருந்தார்கள்.
7. நவீன எரேமியா வகுப்பார்மீது யெகோவாவின் பார்வை எப்போது மற்றும் எப்படி ‘நன்மையுண்டாகும்படி’ இருந்தது?
7 எரேமியாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பற்றிய முந்தின கட்டுரையில், அவை நம்முடைய 20-ம் நூற்றாண்டிற்கு அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன என்று நாம் படித்தது உங்களுக்கு நினைவிருக்கக்கூடும். 24-ம் அதிகாரமும் அதற்கு விதிவிலக்காயில்லை. முதல் உலக போர் நடந்த அந்த இருண்ட வருடங்களில், யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களில் அநேகர் ஏதோ ஒரு விதத்தில் மகா பாபிலோனின் செல்வாக்கின்கீழ் வந்தனர். ஆனால் யெகோவாவுடைய கவனமுள்ள கண்கள் ‘அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்கள்மேல் இருந்தன.’ அதேபோலவே, மகா கோரேசாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் யெகோவா அவர்கள்மீதிருந்த மகா பாபிலோனின் அதிகாரத்தை நீக்கி படிப்படியாக அவர்களை ஓர் ஆவிக்குரிய பரதீஸுக்குள் கொண்டுவந்தார். இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் பிரதிபலித்து, தங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவிடத்தில் திரும்பினார்கள். பின்னர், 1931-ல் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தனர். உண்மையில், யெகோவாவுடைய பார்வையில் அவர்கள் மிகவும் நல்ல அத்திப்பழங்களுள்ள ஒரு கூடையைப்போல ஆனார்கள் என்று இப்போது சொல்லப்படலாம்.
8. இராஜ்ய செய்தியின் அத்திப்பழத்தைப் போன்ற மதுரத்தை எவ்வாறு யெகோவாவின் சாட்சிகள் எங்கும் பிரஸ்தாபித்திருக்கிறார்கள்?
8 மேலும் யெகோவாவின் சாட்சிகள் தங்களை மகா பாபிலோனிலிருந்து விடுதலைசெய்ததற்கான கடவுளுடைய தகுதியற்ற தயவின் நோக்கத்தைத் தவறவிடவில்லை. அவர்கள் ராஜ்ய நற்செய்தியின் அத்திப்பழம் போன்ற மதுரத்தை தங்களுக்கே வைத்துக்கொண்டிருக்கவில்லை; ஆனால், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று மத்தேயு 24:14-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க அவர்கள் அதை எங்கும் பிரஸ்தாபித்திருக்கிறார்கள். அதன் விளைவு? ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாய் இல்லாத 47,00,000-க்கும் அதிகமான செம்மறியாட்டைப்போன்றவர்கள் மகா பாபிலோனிலிருந்து பிரிந்து வந்திருக்கிறார்கள்!
தரிசனத்தின் கெட்ட அத்திப்பழங்கள்
9. எரேமியாவுடைய தரிசனத்தின் கெட்ட அத்திப்பழங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டவர்கள் யார், அவர்களுக்கு என்ன சம்பவிக்கவிருந்தது?
9 ஆனால் எரேமியாவின் தரிசனத்திலுள்ள கெட்ட அத்திப்பழங்களுள்ள அந்தக் கூடையைப் பற்றியதென்ன? எரேமியா 24-ம் அதிகாரம், 8 முதல் 10 வசனங்களில் காணப்படும் யெகோவாவின் வார்த்தைகளின்மேல் இப்போது எரேமியா தன் கவனத்தை ஊன்றவைக்கிறார்: “புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்தத் தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு, அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைத்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகுமட்டும், அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
10. யெகோவா ஏன் சிதேக்கியாவை ‘கெட்ட அத்திப்பழமாக’ மதிப்பிட்டார்?
10 ஆகவே சிதேக்கியா உண்மையிலேயே யெகோவாவுடைய பார்வையில் ‘கெட்ட அத்திப்பழமாக’ ஆனான். அவன் யெகோவாவுடைய நாமத்தில் நேபுகாத்நேச்சார் அரசனோடு செய்திருந்த உண்மைத்தன்மைக்குரிய உறுதிமொழியை மீறி அந்த அரசனுக்கு விரோதமாகக் கலகஞ்செய்ததுமட்டுமல்லாமல், எரேமியாவின் மூலம் அவனுக்கு யெகோவா காட்டிய இரக்கத்தையும் முற்றிலுமாக நிராகரித்திருந்தான். உண்மையில், எரேமியாவைக் காவலில் வைக்கும் அளவுவரையாகக்கூட சென்றான்! அந்த அரசனின் மனநிலையை எஸ்றா இவ்வாறு 2 நாளாகமம் 36:12-ல் தொகுத்துரைப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை: “தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் . . . தன்னைத் தாழ்த்தவில்லை.” யெகோவாவின் பார்வையில் சிதேக்கியாவும் எருசலேமிலுள்ள மீதியானோரும் கெட்ட, அழுகிப்போன அத்திப்பழங்களுள்ள கூடையைப்போல இருந்தார்கள்!
நம்முடைய நாளின் அழுகிப்போன அடையாளப்பூர்வமான அத்திப்பழங்கள்
11, 12. இன்று கெட்ட அத்திப்பழங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறவர்கள் யார், அவர்களுக்கு என்ன சம்பவிக்கும்?
11 இப்போது இன்றைய உலகத்தைச் சுற்றிப்பாருங்கள். கெட்ட அத்திப்பழங்களுள்ள அடையாளப்பூர்வமான ஒரு கூடையை நம்மால் கண்டுபிடிக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நம்முடைய நாளை எரேமியாவுடையதோடு ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் நாம் உண்மைகளைச் சிந்திக்கலாம். இந்த 20-ம் நூற்றாண்டில் யெகோவா, மகா உபத்திரவத்தில் வரவிருக்கும் தம்முடைய கோபாக்கினையைக்குறித்து தேசங்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கும்படி எரேமியா வகுப்பாராகிய அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் தேசத் தொகுதிகளை தம்முடைய நாமத்துக்குரிய மகிமையைக் கொடுக்கும்படியும், தம்மை ஆவியோடும் உண்மையோடும் வணங்கும்படியும், மேலும் ஆட்சிசெய்யக்கூடிய தம் குமாரனாகிய கிறிஸ்து இயேசுவைப் பூமியின் உரிமையுள்ள அரசராக ஏற்கும்படியும் துரிதப்படுத்தியிருக்கிறார். பிரதிபலிப்பு என்னவாக இருந்திருக்கிறது? எரேமியாவின் நாளில் இருந்ததைப்போலவே இருக்கிறது. தேசத்தார் யெகோவாவின் பார்வையில் தீமையானதைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
12 ஆனால் இந்தக் கலகத்தனமான மனநிலையைத் தூண்டிவிடுபவர்கள் யார்? கடவுளுடைய ஊழியர்களாய் சேவிப்பதற்கு அவர்களுக்கிருக்கும் அதிகாரத்தைக் கேள்விக்கிடமாக்குவதன் மூலம் இந்த எரேமியாவைப்போன்ற கடவுளுடைய தூதுவர்களைத் தொடர்ந்து பரிகசிப்பவர்கள் யார்? கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து நிந்திப்பவர்கள் யார்? இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய பெரும்பாலான துன்புறுத்தலுக்கும் பின்னால் இருந்துவருகிறது யார்? எல்லாரும் பார்க்கக்கூடிய விதத்தில் பதில் தெளிவாயிருக்கிறது—அது கிறிஸ்தவமண்டலமே, விசேஷமாக மதகுருமார்! நாம் முந்தின கட்டுரையில் சிந்தித்தக் கிறிஸ்தவமண்டலத்தின் எல்லா அழுகிப்போன, கெட்ட பலன்களையும் சற்று பாருங்கள். ஆம், இன்று பூமியில் உண்மையிலேயே கெட்ட அத்திப்பழங்களுள்ள அடையாளப்பூர்வமானக் கூடை ஒன்று இருக்கிறது. உண்மையில், அவை ‘புசிக்க முடியாதபடி கெட்டவை’ என்று யெகோவா சொல்லுகிறார். எரேமியா மூலம் யெகோவா சொன்ன வார்த்தைகள் நம்முடைய நாள் வரையாக எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன: ‘அவர்கள் நிர்மூலமாக்கப்படுவார்கள்’! கிறிஸ்தவமண்டலத்துக்கு எதிராக யெகோவாவின் உக்கிரம் தணியாதிருக்கும்.
நமக்கு ஓர் எச்சரிப்பிற்குரிய பாடம்
13. 1 கொரிந்தியர் 10:11-ல் காணப்படும் பவுலின் வார்த்தைகளின் நோக்கில், அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளின் தரிசனத்தை நாம் எப்படி புரிந்துகொள்ளவேண்டும்?
13 ஏவப்பட்டு எழுதப்பட்ட எரேமியாவின் எச்சரிப்புச் செய்தியின் கருத்துகளை நாம் ஆராய்ந்துபார்க்கும்போது, 1 கொரிந்தியர் 10:11-ல் உள்ள அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் நம்முடைய காதுகளில் தொனிக்கின்றன: “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.” அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைப்பற்றிய தரிசனத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட எச்சரிப்பைத் தனிப்பட்டவர்களாக நாம் கவனத்தில் கொண்டிருக்கிறோமா? நாம் கலந்தாராய்ந்திருப்பது, இஸ்ரவேலுக்குச் சம்பவித்தக் காரியங்களின் முக்கியமானப் பாகமாக இருந்து, நமக்கு எச்சரிக்கையளிக்கும் உதாரணமாக இருக்கிறது.
14. இஸ்ரவேல் எவ்வாறு யெகோவாவின் கரிசனையான கவனிப்பிற்குப் பிரதிபலித்தது?
14 கடைசியாக, 2 சாமுவேல் 7:10-ல் காணப்பட்டுள்ளபடி, இஸ்ரவேலைக் குறித்து தாவீது ராஜாவிடம் சொல்லப்பட்ட யெகோவாவின் வார்த்தைகளைத் திரும்ப நினைவுப்படுத்திக்கொள்ளலாம்: “நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, . . . அவர்களை நாட்டினேன்.” யெகோவா தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலை எல்லா விதத்திலும் கரிசனையோடு கவனித்து வந்தார். தங்கள் வாழ்க்கையில் நல்ல கனிகளைக் கொடுப்பதற்கு இஸ்ரவேலர்களுக்கு எல்லா காரணமும் இருந்தது. அவர்கள் யெகோவாவுடைய தெய்வீக போதனைக்கு மட்டும் செவிகொடுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டியதாய் இருந்தது. ஆனாலும் அவர்களில் ஒருசிலரே அவ்வாறு செய்தனர். என்றாலும், பெரும்பான்மையர் மிகவும் முரட்டாட்டமுள்ளவர்களாயும் ஏறுமாறானவர்களாயும் இருந்ததால், அவர்கள் கெட்ட, அழுகிப்போன கனிகளைப் பிறப்பித்தார்கள்.
15. இன்றைய ஆவிக்குரிய இஸ்ரவேலரும் அவர்களுடைய செம்மறியாட்டைப் போன்ற தோழர்களும் யெகோவாவின் பரிவிரக்கத்திற்கு எப்படி பிரதிபலித்திருக்கின்றனர்?
15 அப்படியானால், நம்முடைய நாளைப்பற்றியென்ன? யெகோவா ஆவிக்குரிய இஸ்ரவேலாகிய தம்முடைய மீதியானோரிடமும் அவர்களுடைய செம்மறியாட்டைப்போன்ற தோழர்களிடமும் மிகுந்த பரிவிரக்கத்தைக் காட்டியிருக்கிறார். ஆவிக்குரிய விடுவிப்பை 1919-ல் பெற்றது முதற்கொண்டு அவருடைய பார்வை அவர்கள்மீது தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. ஏசாயா மூலம் அவர் முன்னறிவித்தபடி, அவர்கள் தினந்தோறும் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய போதகராகிய யெகோவா தேவனிடத்திலிருந்து தெய்வீக அறிவுரையைப் பெற்றுவருகிறார்கள். (ஏசாயா 54:13) அவருடைய அருமையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வழிநடத்தப்பட்டுவருகிற இந்தத் தெய்வீக போதனை அவர்களுக்குள் மிகுந்த சமாதானத்தைக் கொண்டிருப்பதில் பலனடைந்து, யெகோவாவோடு ஒரு நெருங்கிய உறவுக்குள் அவர்களைச் சீராக கொண்டுவந்துமிருக்கிறது. யெகோவாவைப்பற்றி அறிந்துகொள்ளவும், அவருக்குச் செவிகொடுத்து கேட்கவும், நம்முடைய வாழ்க்கையில் நல்ல கனிகளைத் தொடர்ந்து பிறப்பிக்கவும்—யெகோவாவுக்குத் துதியைக் கொண்டுவரும் கனிகளைக் கொடுக்கவும்—இது நம்மெல்லாருக்கும் என்னே ஒரு சிறந்த ஆவிக்குரிய சூழலைக் கொடுக்கிறது! அது நம்முடைய உயிரையே குறிக்கிறது!
16. அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைப் பற்றிய தரிசனத்தைக் குறித்ததில் நாம் ஒவ்வொருவரும் என்ன தனிப்பட்ட பொருத்திப் பிரயோகிப்பைச் செய்யலாம்?
16 கடவுள் இவ்வளவெல்லாம் தகுதியற்ற தயவைக் காட்டியபோதிலும், பண்டைய யூதாவிலிருந்த அநேகர் செய்ததுபோல, சிலர் இன்னும் கலகஞ்செய்கிறவர்களாயும் கடின இருதயமுள்ளவர்களாயும் மாறுகிறவர்களாய், கெட்ட, அழுகிப்போன கனிகளைத் தங்களுடைய வாழ்க்கையில் பிறப்பிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள். இது எவ்வளவு வருந்தத்தக்கது! அத்திப்பழங்களுள்ள இந்த இரண்டு கூடைகளோடு அவற்றின் நல்ல மற்றும் கெட்ட கனிகளின் மூலம் தெளிவாக நம்முடைய கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட எச்சரிப்புப் பாடத்தைக் குறித்து நம்மில் எவருமே கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. விசுவாசத்துரோக கிறிஸ்தவமண்டலத்துக்கு எதிராக யெகோவாவின் தகுதியான நியாயத்தீர்ப்பு விரைந்து வரும்போது, அப்போஸ்தலன் பவுலின் புத்திமதியை நாம் மனதில் ஏற்போமாக: “சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து . . . கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்”வோமாக.—கொலோசெயர் 1:10.
மறுபார்வையிடுதல் “கனிகள்—நல்லதும் கெட்டதும்” மற்றும் “ஜாதிகளோடு யெகோவாவுக்குள்ள வழக்கு” என்பதில் பாராக்கள் 1-4
◻ நல்ல அத்திப்பழங்களுள்ள கூடை எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது?
◻ தரிசனத்தின் கெட்ட அத்திப்பழங்களுள்ள கூடை எவ்வாறு தெளிவாகி இருக்கிறது?
◻ எரேமியாவின் செய்தி நமக்கு என்ன எச்சரிப்பு பாடத்தைக் கொடுக்கிறது?
◻ பொ.ச.மு. 607 மற்றும் பொ.ச. 1914 ஆகிய வருடங்களின் முக்கியத்துவம் என்ன?
[பக்கம் 15-ன் படம்]
நல்ல அத்திப்பழங்களைப்போல கடவுளுடைய மக்கள் மதுரமான ராஜ்ய செய்தியைக் கொண்டுவந்திருக்கின்றனர்
[பக்கம் 15-ன் படம்]
கெட்ட அத்திப்பழங்களுள்ள கூடையைப் போல் இருப்பதாக கிறிஸ்தவமண்டலம் நிரூபித்திருக்கிறது