யெகோவா உடன்படிக்கைகளின் கடவுள்
“இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.”—எரேமியா 31:31.
1, 2. (அ) பொ.ச. 33, நிசான் 14 அன்று இரவு என்ன ஆசரிப்பை இயேசு ஆரம்பித்து வைத்தார்? (ஆ) இயேசு, தம் மரணத்தின் சம்பந்தமாக எந்த உடன்படிக்கையை குறிப்பிட்டுக் காட்டினார்?
இயேசு தம் 12 அப்போஸ்தலர்களோடு பஸ்காவை பொ.ச. 33, நிசான் 14, அன்று இரவு ஆசரித்தார். இது அவர்களோடான அவருடைய கடைசி போஜனம் என்பதையும் விரைவில் தம் விரோதிகளின் கைகளில் மரித்துவிடுவார் என்பதையும் அவர் அறிந்திருந்தார்; ஆகவே இயேசு தம்மோடு மிகவும் நெருக்கமாய் இருந்த சீஷர்களிடம் அநேக முக்கியமான விஷயங்களை விளக்குவதற்கு அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்.—யோவான் 13:1–17:26.
2 இந்தச் சமயத்தில்தான், யூதாஸ்காரியோத்தை வெளியே அனுப்பிவிட்ட பின்பு, கிறிஸ்தவர்களுக்கென்று கட்டளையிடப்பட்ட ஒரே வருடாந்தர மத ஆசரிப்பை இயேசு ஆரம்பித்து வைத்தார்—அதுவே அவருடைய மரணத்தின் நினைவு ஆசரிப்பு. பதிவு சொல்கிறது: “அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.” (மத்தேயு 26:26-28) இயேசுவை பின்பற்றுவோர் ஒரு எளிய, கண்ணியமான முறையில் அவருடைய மரணத்தை நினைவுகூர வேண்டியவர்களாய் இருந்தனர். மேலும், இயேசு தம் மரணத்தின் சம்பந்தமாக ஓர் உடன்படிக்கையைப் பற்றி குறிப்பிட்டார். அது லூக்காவின் பதிவிலும் “புதிய உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது.—லூக்கா 22:20.
3. புதிய உடன்படிக்கையைக் குறித்து என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன?
3 புதிய உடன்படிக்கை என்பது என்ன? அது புதிய உடன்படிக்கை என்றால், பழைய உடன்படிக்கை ஒன்று இருப்பதை அர்த்தப்படுத்துகிறதா? வேறு ஏதாவது உடன்படிக்கைகள் அதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றனவா? இவை முக்கியமான கேள்விகள்; ஏனென்றால் இது “பாவமன்னிப்புண்டாகும்படி” சிந்தப்படுகிற உடன்படிக்கைக்குரிய இரத்தமாயிருக்கிறது என்று இயேசு சொன்னார். நம் அனைவருக்கும் அப்படிப்பட்ட மன்னிப்பு மிகவும் கட்டாயமாய் தேவைப்படுகிறது.—ரோமர் 3:23.
ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கை
4. புதிய உடன்படிக்கையை புரிந்துகொள்வதற்கு என்ன பண்டைய வாக்குறுதி நமக்கு உதவிசெய்கிறது?
4 நாம் புதிய உடன்படிக்கையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்திற்கு முன் ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்போது, ஆபிராம் (பின்னர் ஆபிரகாம்), ஆபிராமின் மனைவி சாராய் (பின்னர் சாராள்) உட்பட தேராகுவும் அவருடைய குடும்பத்தாரும் ஊர் என்னும் கல்தேயருடைய செழிப்பான பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு வட மெசொப்பொத்தாமியாவிலுள்ள ஆரான் வரை பயணப்பட்டு வந்து அங்கே குடியேறினர். தேராகு மரிக்கும்வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். பின்னர், யெகோவா கட்டளையிட்டபடி, 75 வயதாயிருந்த ஆபிரகாம் கூடாரங்களில் நாடோடி வாழ்க்கை வாழ்வதற்கென்று ஐபிராத்து நதியைக் கடந்து தென்மேற்காக பயணப்பட்டு கானான் தேசத்தை சென்றடைந்தார். (ஆதியாகமம் 11:31–12:1, 4, 5; அப்போஸ்தலர் 7:2-5) அது பொ.ச.மு. 1943-ல் நடந்தது. ஆபிரகாம் ஆரானில் இருக்கும்போதே யெகோவா அவரிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.” பின்னர், ஆபிரகாம் கானானுக்கு வந்து சேர்ந்தபோது, யெகோவா கூடுதலாக சொன்னார்: “உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்.”—ஆதியாகமம் 12:2, 3, 7.
5. யெகோவா ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி எந்த அதிமுக்கியமான தீர்க்கதரிசனத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது?
5 ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி, யெகோவாவின் வாக்குறுதிகளில் மற்றொன்றோடு சம்பந்தப்பட்டிருந்தது. உண்மையில், அது மனித சரித்திரத்தில் ஆபிரகாமை ஒரு முக்கியத்துவம்வாய்ந்த நபராக, பதிவுசெய்யப்பட்ட முதல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் ஒரு இணைப்பாளராக ஆக்கியது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபிறகு, யெகோவா அவர்கள் இருவர் மீதும் தண்டனைத் தீர்ப்பைக் கூறினார், அதே சமயத்தில் ஏவாளை தவறாக வழிநடத்தியிருந்த சாத்தானை நோக்கி இவ்வாறு சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) சாத்தானின் கிரியைகளை அழிக்கப்போகும் வித்து அந்த முற்பிதாவின் வம்சாவளியில் தோன்றுவார் என்று யெகோவா ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை குறிப்பிட்டுக் காட்டியது.
6. (அ) யெகோவா ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி யார் மூலமாய் நிறைவேற்றப்படும்? (ஆ) ஆபிரகாமிய உடன்படிக்கை என்பது என்ன?
6 யெகோவாவின் வாக்குறுதி ஒரு வித்தோடு சம்பந்தப்பட்டிருந்ததால், அந்த வித்து வருவதற்கு ஆபிரகாமுக்கு ஒரு குமாரன் தேவைப்பட்டான். ஆனால், அவரும் சாராளும் வயதானவர்களாயும் பிள்ளைகள் இல்லாதவர்களாயும் இருந்தனர். ஆனால், இறுதியில் யெகோவா அவர்களை ஆசீர்வதித்து, அற்புதமாய் அவர்களுடைய பிள்ளை பிறப்பிக்கிற சக்தியை மீண்டும் புதுப்பித்தார். சாராள், ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்னும் ஒரு குமாரனை பெற்றெடுத்தார், இவ்வாறு வித்தைப் பற்றிய வாக்குறுதியை உயிர்த்துடிப்புடன் வைத்தார். (ஆதியாகமம் 17:15-17; 21:1-7) பல வருடங்களுக்குப் பின், தான் மிகவும் நேசித்த குமாரனாகிய ஈசாக்கை மனமுவந்து பலியாக கொடுக்குமளவுக்கு ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்த பிறகு, யெகோவா மறுபடியும் தம் வாக்குறுதியை ஆபிரகாமிடம் சொன்னார்: “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், பூமியிலுள்ள சகல ஜாதிகளும் உன் சந்ததியின் ஆசீர்வாதத்தைச் சொல்லித் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள் என்றும் என்பேரில் ஆணையிட்டேன்.” (ஆதியாகமம் 22:15-18, திருத்திய மொழிபெயர்ப்பு) விரிவாக்கப்பட்ட இந்த வாக்குறுதி பெரும்பாலும் ஆபிரகாமிய உடன்படிக்கை என்றழைக்கப்படுகிறது; பிற்பாடு வரும் புதிய உடன்படிக்கையோடு மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கும்.
7. ஆபிரகாமின் வித்து எவ்வாறு எண்ணிக்கையில் அதிகரிக்க ஆரம்பித்தது, எகிப்தில் குடியிருப்பதற்கு என்ன சூழ்நிலைகள் அவர்களை வழிநடத்தின?
7 காலப்போக்கில் ஈசாக்குக்கு ஏசா, யாக்கோபு என்ற இரட்டை பிள்ளைகள் பிறந்தனர். யெகோவா, வாக்குப்பண்ணப்பட்ட வித்தின் முற்பிதாவாக யாக்கோபை தேர்ந்தெடுத்தார். (ஆதியாகமம் 28:10-15; ரோமர் 9:10-13) யாக்கோபுக்கு 12 குமாரர்கள் இருந்தனர். ஆபிரகாமின் வித்து அதிகரிக்க ஆரம்பிப்பதற்கு இதுவே சமயமாயிருந்தது என்பது தெளிவாய் தெரிந்தது. யாக்கோபின் குமாரர்கள் பெரியவர்களாகி, அவர்களில் அநேகர் தங்கள் சொந்த குடும்பங்களோடு இருக்கையில், எகிப்துக்குச் செல்லும்படி ஒரு பஞ்சம் அவர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தியது. அங்கே யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு கடவுளுடைய செயலால் அவர்களுக்கு வழியை ஆயத்தம் செய்திருந்தார். (ஆதியாகமம் 45:5-13; 46:26, 27) சில வருடங்களுக்குப் பிறகு கானானில் ஏற்பட்ட பஞ்சம் நீங்கியது. ஆனால், யாக்கோபின் குடும்பத்தார் முதலில் விருந்தினராகவும், பின்னர் அடிமைகளாகவும் எகிப்திலேயே தங்கிவிட்டனர். ஆபிரகாம் ஐபிராத்தை கடந்து 430 வருடங்கள் ஆனபின்பே பொ.ச.மு. 1513-ல் மோசே யாக்கோபின் சந்ததியாரை எகிப்திலிருந்து விடுதலைக்கு வழிநடத்தினார். (யாத்திராகமம் 1:8-14; 12:40, 41; கலாத்தியர் 3:16, 17) யெகோவா இப்போது ஆபிரகாமோடு செய்த தம்முடைய உடன்படிக்கைக்கு விசேஷ கவனம் செலுத்துவார்.—யாத்திராகமம் 2:24; 6:2-5.
“பழைய உடன்படிக்கை”
8. சீனாயில் யாக்கோபின் சந்ததியோடு யெகோவா என்ன உடன்படிக்கை செய்தார், ஆபிரகாமிய உடன்படிக்கையோடு இதற்கு என்ன சம்பந்தம் இருந்தது?
8 யாக்கோபும் அவருடைய குமாரரும் எகிப்தில் குடியேறியபோது கூட்டுக்குடும்பமாக இருந்தனர், ஆனால், அவர்களுடைய சந்ததியார் எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது பல ஜாதியான ஜனங்கள் அடங்கிய பெரிய தொகுதியாக இருந்தனர். (யாத்திராகமம் 1:5-7; 12:37, 38) யெகோவா அவர்களை கானானுக்கு அழைத்து வருவதற்கு முன்பு, தென்திசை நோக்கி அரேபியாவிலுள்ள ஓரேப் (அல்லது சீனாய்) என்றழைக்கப்பட்ட ஒரு மலையடிவாரத்திற்கு வழிநடத்தினார். அங்கே அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தார். இது “புதிய உடன்படிக்கை”யின் சம்பந்தமாக “பழைய உடன்படிக்கை” என்று அழைக்கப்படலாயிற்று. (2 கொரிந்தியர் 3:14, NW) பழைய உடன்படிக்கையின் மூலம், ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையின் அடையாளப்பூர்வ நிறைவேற்றத்தை யெகோவா செயல்படுத்தினார்.
9. (அ) யெகோவா ஆபிரகாமிய உடன்படிக்கையின் மூலம் என்ன நான்கு காரியங்களை வாக்குறுதி அளித்தார்? (ஆ) இஸ்ரவேலோடு யெகோவாவின் உடன்படிக்கை என்ன கூடுதலான எதிர்பார்ப்புகள் கிடைக்கும்படி செய்தது, என்ன நிபந்தனையின் பேரில்?
9 யெகோவா இந்த உடன்படிக்கையின் விதிகளை இஸ்ரவேலருக்கு விளக்கினார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.” (யாத்திராகமம் 19:5, 6) ஆபிரகாமின் வித்து (1) ஒரு பெரிய ஜனமாக ஆகும், (2) அதனுடைய சத்துருக்கள்மீது வெற்றி சிறக்கும், (3) கானான் தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளும், (4) சகல ஜனங்களுக்கும் ஆசீர்வாதங்களை அருள வழிவகையாய் இருக்கும் என்று யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். இஸ்ரவேலர் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால், “ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய்” ஆவதன் மூலம் அவருடைய விசேஷித்த ஜனங்களாக இந்த ஆசீர்வாதங்களை அவர்கள் தாமே சுதந்தரித்துக்கொள்ளலாம் என்பதை அவர் இப்போது வெளிப்படுத்தினார். இந்த உடன்படிக்கைக்குள் பிரவேசிக்க இஸ்ரவேலர் ஒப்புக்கொண்டனரா? அவர்கள் எல்லாரும் ஏகமாய்: “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம்” என்று பதிலளித்தார்கள்.—யாத்திராகமம் 19:8, தி.மொ.
10. யெகோவா எவ்வாறு இஸ்ரவேலரை ஒரு தேசமாக ஒழுங்கமைத்தார், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்த்தார்?
10 எனவே, யெகோவா இஸ்ரவேலரை ஒரு தேசமாக ஒழுங்கமைத்தார். வணக்கம், சமுதாய வாழ்க்கை போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு அவர்களுக்கு சட்டங்களை கொடுத்தார். அவர் அவர்களுக்கு வாசஸ்தலத்தையும் (பின்னர் எருசலேமில் ஓர் ஆலயத்தையும்) பரிசுத்த சேவை செய்வதற்காக வாசஸ்தலத்திலே ஒரு ஆசாரியத்துவத்தையும்கூட ஏற்பாடு செய்தார். உடன்படிக்கையை கைக்கொள்வது என்பது, யெகோவாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதையும், விசேஷமாக, அவரை மட்டுமே வணங்குவதையும் அர்த்தப்படுத்தியது. அந்தச் சட்டங்களுக்கு மையமாக அமைந்திருந்த பத்துக் கட்டளைகளின் முதல் கட்டளை: “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.”—யாத்திராகமம் 20:2, 3.
நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மூலம் ஆசீர்வாதங்கள்
11, 12. பழைய உடன்படிக்கையிலிருந்த வாக்குறுதிகள் என்ன வழிகளில் இஸ்ரவேலிடமாக நிறைவேறின?
11 நியாயப்பிரமாண உடன்படிக்கையில் இருந்த வாக்குறுதிகள் இஸ்ரவேலிடமாக நிறைவேறினவா? இஸ்ரவேல் ‘பரிசுத்த ஜாதியாய்’ ஆனதா? ஆதாமின் சந்ததியாராக, இஸ்ரவேலர் பாவிகளாய் இருந்தனர். (ரோமர் 5:12) அப்படியிருந்தாலும், நியாயப்பிரமாணத்தின்கீழ், அவர்களுடைய பாவங்களை மூடுவதற்கு பலிகள் செலுத்தப்பட்டன. வருடாந்தர பாவநிவாரண நாளின்போது அளிக்கப்பட்ட பலிகளைக் குறித்து யெகோவா இவ்வாறு சொன்னார்: “கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.” (லேவியராகமம் 16:30) ஆகையால், உண்மையாய் இருந்தால், இஸ்ரவேல் பரிசுத்த ஜனமாய் யெகோவாவின் சேவைக்காக சுத்திகரிக்கப்பட்டதாய் இருக்கும். ஆனால், நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து பலிகளை தொடர்ந்து செலுத்துவதன் பேரிலேயே இந்தச் சுத்தமான நிலை சார்ந்திருந்தது.
12 இஸ்ரவேல் ‘ஆசாரிய ராஜ்யமாக’ ஆனதா? ஆரம்பத்திலிருந்தே அது யெகோவாவை பரலோக ராஜாவாக உடைய ஒரு ராஜ்யமாக இருந்தது. (ஏசாயா 33:22) மேலும், நியாயப்பிரமாண உடன்படிக்கையில் மனித அரசாட்சிக்கான ஏற்பாடுகள் அடங்கியிருந்தன, ஆகையால் பின்னர் யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்த ராஜாக்கள் எருசலேமிலிருந்து ஆட்சி செய்தனர். (உபாகமம் 17:14-17, 20) ஆனால், இஸ்ரவேல் ஆசாரிய ராஜ்யமாக இருந்ததா? வாசஸ்தலத்திலேயே பரிசுத்த சேவை செய்துவந்த ஆசாரியத்துவம் அங்கு இருந்தது. இஸ்ரவேலருக்கும் இஸ்ரவேலரல்லாதவருக்கும் வாசஸ்தலம் (பின்னர் ஆலயம்) மெய் வணக்கத்தின் மையமாய் இருந்தது. மனிதவர்க்கத்துக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் ஒரே வழிவகையாய் அந்தத் தேசம் இருந்தது. (2 நாளாகமம் 6:32, 33; ரோமர் 3:1, 2) வெறும் லேவிய ஆசாரியர்கள் மட்டுமல்ல, எல்லா உண்மையுள்ள இஸ்ரவேலரும் யெகோவாவுக்கு ‘சாட்சிகளாய்’ இருந்தனர். இஸ்ரவேல் யெகோவாவுக்கு ‘தாசனாய்’ இருந்தது, அவருடைய ‘துதியை சொல்லிவருவதற்காக’ ஏற்படுத்தப்பட்டது. (ஏசாயா 43:10, 21) யெகோவா தம் மக்களின் சார்பாக நடப்பித்த வல்லமைமிக்க செயல்களைக் கண்டு அநேக மனத்தாழ்மையுள்ள புறஜாதியார் மெய்வணக்கத்தினிடமாக கவர்ந்திழுக்கப்பட்டனர். அவர்கள் யூதமதத்துக்கு மாறினார்கள். (யோசுவா 2:9-13) ஆனால், ஒரு கோத்திரத்தார் மட்டுமே அபிஷேகம்செய்யப்பட்ட ஆசாரியர்களாக சேவித்தனர்.
இஸ்ரவேலில் யூதமதத்துக்கு மாறியவர்கள்
13, 14. (அ) யூதமதத்துக்கு மாறியவர்கள் நியாயப்பிரமாண உடன்படிக்கையில் பங்கெடுக்கவில்லை என்று ஏன் சொல்லப்படலாம்? (ஆ) யூதமதத்துக்கு மாறியவர்கள் எவ்வாறு நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் வந்தனர்?
13 அப்படி யூதமதத்துக்கு மாறியவர்களின் நிலை என்னவாய் இருந்தது? யெகோவா இஸ்ரவேலோடு மட்டும்தான் தம் உடன்படிக்கையை செய்தார்; “பல ஜாதியான ஜனங்கள்,” அங்கிருந்தபோதிலும் அதில் பங்கெடுப்பவர்களாக குறிப்பிடப்படவில்லை. (யாத்திராகமம் 12:38; 19:3, 7, 8) இஸ்ரவேலரின் தலைப்பிள்ளைகளுக்கு மீட்கும் தொகை கணக்கிடப்பட்டபோது அவர்களுடைய தலைப்பிள்ளைகள் சேர்க்கப்படவில்லை. (எண்ணாகமம் 3:44-51) பல பத்தாண்டுகளுக்குப் பிறகு கானான் தேசம் இஸ்ரவேல கோத்திரத்தாருக்கு இடையே பிரிக்கப்பட்டபோது, இஸ்ரவேலரல்லாத விசுவாசத்தாருக்கு எதுவுமே ஒதுக்கிவைக்கப்படவில்லை. (ஆதியாகமம் 12:7; யோசுவா 13:1-14) ஏன்? ஏனென்றால் நியாயப்பிரமாண உடன்படிக்கை யூதமதத்துக்கு மாறியவர்களோடு செய்யப்படவில்லை. ஆனால், யூதமதத்துக்கு மாறிய ஆண்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து விருத்தசேதனம் செய்யப்பட்டனர். அவர்கள் அதன் கட்டளைகளைக் கடைப்பிடித்தனர், அதன் ஏற்பாடுகளிலிருந்து பயனடைந்தனர். யூதமதத்துக்கு மாறியவர்களும் இஸ்ரவேலரும் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் வந்தனர்.—யாத்திராகமம் 12:48, 49; எண்ணாகமம் 15:14-16; ரோமர் 3:19.
14 உதாரணமாக, யூதமதத்துக்கு மாறிய ஒருவர் கைப்பிசகாய் எவரையாவது கொன்றுவிட்டால், அவரும் ஒரு இஸ்ரவேலனைப் போலவே அடைக்கலப் பட்டணத்துக்கு ஓடிப்போகலாம். (எண்ணாகமம் 35:15, 22-25; யோசுவா 20:9) பாவநிவாரண நாளின்போது, “இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும்” ஒரு பலி செலுத்தப்பட்டது. சபையின் ஒரு பாகமாக, யூதமதத்துக்கு மாறியவர்கள் அந்த நடவடிக்கைகளில் பங்குகொண்டு செலுத்தப்பட்ட பலியிலிருந்து பயனடைந்தனர். (லேவியராகமம் 16:7-10, 15, 17, 29; உபாகமம் 23:7, 8) நியாயப்பிரமாணத்தின்கீழ் இஸ்ரவேலரோடு யூதமதத்துக்கு மாறியவர்கள் அவ்வளவு நெருக்கமான கூட்டுறவு வைத்திருந்ததால், பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று, முதலாவது “பரலோகராஜ்யத்தின் திறவுகோல்” யூதர்கள் சார்பாக பயன்படுத்தப்பட்டபோது யூதமதத்துக்கு மாறியவர்களும் பயனடைந்தனர். அதன் விளைவாக, ‘யூதமதத்துக்கு மாறிய அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலா’ கிறிஸ்தவராக ஆனார். எருசலேம் சபையின் தேவைகளை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ‘நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரில்’ அவரும் ஒருவராக இருந்தார்.—மத்தேயு 16:19; அப்போஸ்தலர் 2:5-10; 6:3-6; 8:26-39.
ஆபிரகாமின் வித்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
15, 16. யெகோவா ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை எவ்வாறு நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் நிறைவேறியது?
15 ஆபிரகாமின் சந்ததியார் ஒரு தேசமாக நியாயப்பிரமாணத்தின்கீழ் ஒழுங்கமைக்கப்பட்டதால், அந்த முற்பிதாவுக்கு தாம் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். பொ.ச.மு. 1473-ல் மோசேக்குப் பின்வந்த யோசுவா இஸ்ரவேலரை கானானுக்குள் வழிநடத்தினார். அதைப் பின்தொடர்ந்து கோத்திரங்கள் மத்தியில் தேசம் பிரிக்கப்பட்டதானது, ஆபிரகாமின் வித்திற்கு தேசத்தை கொடுப்பேன் என்று யெகோவா அளித்த வாக்குறுதியை நிறைவேற செய்தது. இஸ்ரவேலர் உண்மையுள்ளவர்களாய் இருந்தபோது, அவர்களுடைய சத்துருக்கள்மீது வெற்றி தருவதாக தாம் அளித்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார். இது விசேஷமாக தாவீது ராஜாவின் ஆட்சியின்போது உண்மையாய் இருந்தது. தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் காலத்திற்குள், ஆபிரகாமிய உடன்படிக்கையின் மூன்றாவது அம்சம் நிறைவேறியது. “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:20.
16 ஆபிரகாமின் வித்தாகிய இஸ்ரவேலின் மூலம் சகல ஜனங்களும் எவ்வாறு தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்? ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இஸ்ரவேல் யெகோவாவின் விசேஷித்த ஜனமாய் இருந்தது, தேசங்களின் மத்தியில் யெகோவாவின் பிரதிநிதியாக இருந்தது. இஸ்ரவேல் கானானுக்குள் அணிவகுத்துச் செல்வதற்கு சற்றுமுன்பு மோசே இவ்வாறு சொன்னார்: “ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்.” (உபாகமம் 32:43) அநேக புறஜாதியார் செவிசாய்த்தார்கள். ஏற்கெனவே இஸ்ரவேலரைப் பின்பற்றி “பல ஜாதியான ஜனங்கள்” எகிப்திலிருந்து வெளியே வந்தனர், வனாந்தரத்தில் யெகோவாவின் வல்லமையை நேரில் பார்த்தனர், களிகூரும்படி மோசே கொடுத்த அழைப்பை கேட்டனர். (யாத்திராகமம் 12:37, 38) பின்னர், மோவாபிய பெண் ரூத் இஸ்ரவேலனாயிருந்த போவாஸை திருமணம் செய்துகொண்டு மேசியாவின் மூதாதையாக ஆனார். (ரூத் 4:13-22) அநேக இயற்கையான இஸ்ரவேலர்கள் உண்மையற்றவர்களாய் இருந்தபோது, கேனியனான யோனதாபும் அவருடைய சந்ததியாரும் எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்கும் சரியான நியமங்களை கடைப்பிடிப்பதன் மூலம் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டனர். (2 இராஜாக்கள் 10:15-17; எரேமியா 35:1-19; 38:7-13) பெர்சிய பேரரசில், அநேக புறஜாதியார் யூதமதத்துக்கு மாறினார்கள், இஸ்ரவேலரோடு சேர்ந்து அதனுடைய விரோதிக்கு எதிராக யுத்தம் செய்தார்கள்.—எஸ்தர் 8:17, NW அடிக்குறிப்பு.
ஒரு புதிய உடன்படிக்கை தேவைப்படுகிறது
17. (அ) யெகோவா இஸ்ரவேலின் வடக்கு மற்றும் தெற்கு ராஜ்யத்தை ஏன் நிராகரித்தார்? (ஆ) யூதர்கள் முழுமையாக நிராகரிக்கப்படுவதற்கு எது வழிநடத்தியது?
17 இருப்பினும், கடவுளுடைய வாக்குறுதியின் முழு நிறைவேற்றத்தையும் பெறுவதற்கு கடவுளுடைய விசேஷித்த தேசம் உண்மையுள்ளதாய் இருக்க வேண்டியிருந்தது. அது அப்படி இருக்கவில்லை. மிகவும் விசேஷித்த விதத்தில் விசுவாசத்தை வெளிக்காட்டிய இஸ்ரவேலர் இருந்தனர் என்பது உண்மைதான். (எபிரெயர் 11:32–12:1) இருந்தபோதிலும், அத்தேசம் பல சந்தர்ப்பங்களில் பொருளாதார நன்மைகளுக்காக புறஜாதியாரின் கடவுட்களிடமாக திரும்பியது. (எரேமியா 34:8-16; 44:15-18) தனிப்பட்ட நபர்கள் நியாயப்பிரமாணத்தை தவறாக பொருத்தினர் அல்லது வெறுமனே அதை புறக்கணித்தனர். (நெகேமியா 5:1-5; ஏசாயா 59:2-8; மல்கியா 1:12-14) சாலொமோனின் மரணத்திற்குப் பின், இஸ்ரவேல் வடக்கு ராஜ்யமாகவும் தெற்கு ராஜ்யமாகவும் பிளவுபட்டது. வடக்கு ராஜ்யம் மிகவும் மோசமாய் கலகம் செய்தபோது யெகோவா இவ்வாறு அறிவித்தார்: “நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன்.” (ஓசியா 4:6) தெற்கு ராஜ்யமும்கூட மிகவும் கடுமையாய் தண்டிக்கப்பட்டது, ஏனென்றால் அது உடன்படிக்கைக்கு பொய்யாய் நிரூபித்தது. (எரேமியா 5:29-31) யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்க மறுத்துவிட்டபோது, யெகோவாவும் அதேபோல் அவர்களை ஏற்க மறுத்துவிட்டார். (அப்போஸ்தலர் 3:13-15; ரோமர் 9:31–10:4) இறுதியில், ஆபிரகாமிய உடன்படிக்கையின் முழு நிறைவேற்றத்தையும் செயல்படுத்துவதற்கு யெகோவா ஒரு புதிய ஏற்பாட்டை செய்தார்.—ரோமர் 3:20.
18, 19. ஆபிரகாமிய உடன்படிக்கையை முழுமையான விதத்தில் நிறைவேற்றமடையச் செய்வதற்கு என்ன புதிய ஏற்பாட்டை யெகோவா செய்தார்?
18 புதிய உடன்படிக்கையே அந்தப் புதிய ஏற்பாடு. யெகோவா பின்வருமாறு சொன்னபோது இதை முன்னறிவித்திருந்தார்: “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன் . . . அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—எரேமியா 31:31-33.
19 பொ.ச. 33, நிசான் 14 அன்று இயேசு குறிப்பிட்ட புதிய உடன்படிக்கை இதுவே. அந்தச் சந்தர்ப்பத்தின்போது, அவருடைய சீஷர்களுக்கும் யெகோவாவுக்கும் இடையே இயேசுவை மத்தியஸ்தராக உடைய வாக்குறுதி அளிக்கப்பட்ட உடன்படிக்கை செய்யப்போகும் தறுவாயில் இருக்கிறதென்பதை அவர் வெளிப்படுத்தினார். (1 கொரிந்தியர் 11:25; 1 தீமோத்தேயு 2:5; எபிரெயர் 12:24) இந்தப் புதிய உடன்படிக்கையின் மூலம், யெகோவா ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி மிகவும் மகத்தான, நிலையான நிறைவேற்றத்தை உடையதாயிருக்கும் என்பதை நாம் அடுத்து வரும் கட்டுரையில் காண்போம்.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ ஆபிரகாமிய உடன்படிக்கையில் யெகோவா என்ன வாக்குறுதி அளித்திருந்தார்?
◻ ஆபிரகாமிய உடன்படிக்கையின் நிறைவேற்றத்தை மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலிடமாக யெகோவா எவ்வாறு செயல்படுத்தினார்?
◻ யூதமதத்துக்கு மாறியவர்கள் பழைய உடன்படிக்கையிலிருந்து எவ்வாறு பயனடைந்தனர்?
◻ புதிய உடன்படிக்கை ஒன்று ஏன் தேவைப்பட்டது?
[பக்கம் 9-ன் படம்]
நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மூலம், ஆபிரகாமிய உடன்படிக்கையின் அடையாளப்பூர்வ நிறைவேற்றத்தை யெகோவா செயல்படுத்தினார்