கடவுளுடைய உடன்படிக்கைகளிலிருந்து நீங்கள் நன்மையடைவீர்களா?
“‘உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.’ . . . அந்தப்படி விசுவாச மார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.”—கலாத்தியர் 3:8, 9.
1. பல ஆட்சிகளின் பாதிப்பு குறித்து சரித்திரம் என்ன காண்பிக்கிறது?
“நற்செயலாற்ற விருப்பமுள்ள [அல்லது அறிவுவிளக்கம் பெற்ற] வல்லாட்சியர்” என்று 18-வது நூற்றாண்டில் வாழ்ந்த சில ஐரோப்பிய மன்னர் அழைக்கப்பட்டனர். அவர்கள் ‘மக்களைத் தகப்பனைப்போல் தயவுடன் ஆளுகை செய்யக் கருதினர், ஆனால் அவர்களுடைய திட்டங்கள் தவறின, சீர்த்திருத்தங்கள் தோல்விகண்டன.’a (தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா) இதுதானே விரைவில் ஐரோப்பாவைச் சூழ்ந்த புரட்சிகளுக்கு முக்கிய காரணமாயிருந்தது.
2, 3. யெகோவா எப்படி மனித அரசர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்?
2 எப்படியிருப்பார்கள் என்று திட்டவட்டமாய்க் கூறமுடியாத மனித ஆட்சியாளர்களிலிருந்து யெகோவா எவ்வளவு வித்தியாசப்பட்டவர்! மாற்றத்துக்கான மனிதனின் ஏக்கத்தை நாம் எளிதில் பார்க்கமுடிகிறது. அந்த மாற்றம் கடைசியில் அநீதிக்கும் துயரங்களுக்கும் உண்மையான பரிகாரங்களை ஏற்படுத்தும். ஆனால் கடவுள் இந்தக் காரியத்தைச் செய்வது ஏதோ ஒரு விருப்பு வெறுப்பைச் சார்ந்தது என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. உலகில் மிக அதிகமாக விநியோகிக்கப்பட்டிருக்கும் புத்தகத்தில், விசுவாசமுள்ள மனிதருக்கு நிலையான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதைக் குறித்த தம்முடைய வாக்குறுதிகளைப் பதிவு செய்திருக்கிறார். இந்த ஆசீர்வாதங்கள் தேசம், இனம், கல்வி அல்லது சமுதாய அந்தஸ்து என்ற மக்களுடைய முன் நிலையைச் சாராததாயிருக்கும். (கலாத்தியர் 3:28) ஆனால் நீங்கள் இதை நம்பி செயல்படலாமா?
3 கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின் ஒரு பகுதியை அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கோளாகக் காட்டினான்: “நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்.” பவுல் மேலுமாகக் கூறும்போது, “நமக்கு முன்வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள . . . நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்” என்றான். (எபிரெயர் 6:13-18) இதை நிறைவேற்றுவதற்கான ஆதாரத்தைக் கடவுள் எவ்வளவு ஒழுங்காக அமைத்திருக்கிறார் என்பதைக் கவனிப்பதன் மூலம் அந்த ஆசீர்வாதங்களின்பேரில் நம்முடைய நம்பிக்கையை இன்னும் அதிகமாகப் பலப்படுத்திக் கொள்ளலாம்.
4. தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் எப்படி வித்தியாசமான உடன்படிக்கைகளைப் பயன்படுத்தினார்?
4 “பூமியிலுள்ள சகல ஜாதிகளும்” ஆசீர்வதிக்கப்படுவதற்கு உபகரணமாக இருக்கும் ஒரு வித்தை உட்படுத்தும் ஓர் உடன்படிக்கையைக் கடவுள் ஆபிரகாமுடன் ஏற்படுத்தினார் என்பதை நாம் ஏற்கனவே கவனித்தோம். (ஆதியாகமம் 22:17, 18) இஸ்ரவேலர் மாம்சப் பிரகாரமான வித்தாக இருந்தார்கள், ஆனால் அதைவிட அதிக முக்கியமான ஆவிக்குரிய கருத்தில் இயேசு கிறிஸ்து ஆபிரகாமின் வித்தின் பிரதான பாகமாக இருந்தார். இயேசு பெரிய ஆபிரகாமாகிய யெகோவாவின் குமாரனாக அல்லது வித்தாகவும் ஆனார். “கிறிஸ்துவினுடைய”வர்களாகிய கிறிஸ்தவர்கள் ஆபிரகாமின் வித்தின் இரண்டாவது பாகமாக ஆகின்றனர். (கலாத்தியர் 3:16, 29) ஆபிரகாமிய உடன்படிக்கையை ஏற்படுத்திய பின்பு கடவுள் இஸ்ரவேல் தேசத்தோடு தற்காலிகமாக நியாயப்பிரமாண உடன்படிக்கையைக் கூட சேர்த்தார். இது இஸ்ரவேலரைப் பாவிகள் என்றும் ஒரு நிராந்தர ஆசாரியரும் பரிபூரண பலியும் தேவைப்படுகிறது என்றும் நிரூபித்தது. வித்தின் வம்சாவழியை பாதுகாத்து, அவரை அடையாளங் கண்டுகொள்ள உதவியது. கடவுள் எப்படியாவது ஒரு ராஜ-ஆசாரிய தேசத்தை உண்டுபண்ணுவார் என்பதையும் நியாயப்பிரமாண உடன்படிக்கை காண்பித்தது. நியாயப்பிரமாணம் அமுலிலிருந்தபோதே இஸ்ரவேலில் ஒரு ராஜ வம்சத்தைக் கொண்டிருக்கக் கடவுள் தாவீதுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். பூமியின்மேல் நிரந்தர ராஜரீகத்தையுடைய ஒருவரை தாவீதிய ராஜ்ய உடன்படிக்கை சுட்டிக்காட்டுவதாயுமிருந்தது.
5. தீர்மானிக்கப்பட வேண்டிய என்ன கேள்விகள் அல்லது பிரச்னைகள் இன்னும் இருந்தன?
5 என்றபோதிலும் இந்த உடன்படிக்கைகள் முழுமை பெறாத அல்லது விளக்கம் தேவைப்பட்ட அம்சங்களை அல்லது நோக்கங்களைக் கொண்டிருந்தது. உதாரணமாக வரும் வித்து தாவீதின் வம்சவழியில் ஓர் அரசராக இருக்கவேண்டுமானால், அவர் எப்படி முன்னாள் ஆசாரியர்களைவிட அதிகத்தை நிறைவேற்றும் ஒரு நிரந்தர ஆசாரியராக இருக்க முடியும்? (எபிரெயர் 5:1; 7:13, 14) இந்த அரசன் வரம்புகொண்ட பூமிக்குரிய பிரதேசத்தைவிட அதிகத்தை ஆள முடியுமா? வித்தின் இரண்டாவது பாகம் பெரிய ஆபிரகாமின் குடும்பத்திலிருப்பதற்கு எப்படித் தகுதிபெறக்கூடும்? அவர்கள் அவ்வாறு தகுதிபெற்றாலுங்கூட அதன் அங்கத்தினரில் பெரும்பான்மையினர் தாவீதின் வம்சத்தினராயில்லாதிருப்பதால், அவர்கள் ஆளுகைக்கு எந்தப் பிரதேசத்தையுடையவர்களாயிருப்பார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகைளில் கூடுதலான உடன்படிக்கைகள் மூலம் கடவுள் எப்படிச் சட்டமுறையான படிகளை மேற்கொண்டு நம்முடைய நித்திய ஆசீர்வாதத்திற்கான வழியை திறந்து வைத்தார் என்பதைப் பார்ப்போம்.
ஒரு பரலோக ஆசாரியருக்கான உடன்படிக்கை
6, 7. (எ) சங்கீதம் 110:4-ன்படி கடவுள் கூடுதலாக வேறு என்ன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்? (பி) கூடசேர்க்கப்பட்ட இந்த உடன்படிக்கையை நாம் புரிந்துகொள்ள என்ன பின்னணித் தகவல்கள் நமக்கு உதவியாயிருக்கின்றன?
6 நியாயப்பிரமாண உடன்படிக்கையின் செயல் நோக்கத்திற்குள்ளாகவே, கடவுள் தாவீதுடன் ஒரு சந்ததிக்கான (வித்துக்கான) உடன்படிக்கை செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவர் ஒரு பூமிக்குரிய பிரதேசத்தின் மீது நிரந்தரமாக ஆளுகை செய்வார். ஆனால் நிலையான ஓர் ஆசாரியர் வருவார் என்றும் யெகோவா தாவீதுக்கு வெளிப்படுத்தினார். தாவீது பின்வருமாறு எழுதினான்: “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நீர் என்றென்றும் ஆசாரியரே என்று யெகோவா ஆணையிட்டார்.” (சங்கீதம் 110:4, தி.மொ.) யெகோவாவுக்கும் வரும் அந்த ஆசாரியருக்கும் இடையிலான ஒரு தனிப்பட்ட உடன்படிக்கையைக் குறித்த கடவுள் ஆணையிட்ட அந்த வார்த்தைக்குப் பின்னால் இருந்தது என்ன?
7 மெல்கிசேதேக் பூர்வ சாலேமில் அரசனாயிருந்தான். பின்னால் எருசலேம் (“சாலேம்” என்ற பெயர் தழுவியது) நகரம் கட்டப்பட்ட அந்த இடத்தில்தான் இருந்தது. அவனோடு ஆபிரகாமின் தொடர்பு குறித்த பதிவு அவன் “உன்னதமான தேவனை” வணங்கிய ஓர் அரசன் என்பதை எடுத்துக் காட்டுகிறது. (ஆதியாகமம் 14:17-20) என்றபோதிலும், மெல்கிசேதேக் ஓர் ஆசாரியனாகவும் இருந்தான், இப்படியாக ஒரு தனித்தன்மைவாய்ந்தவன் என்று சங்கீதம் 110:4-லுள்ள கடவுளுடைய கூற்று காண்பிக்கிறது. அவன் அரசனாகவும் ஆசாரியனாகவும் இருந்தான். பின்னால் தங்களுக்குத் தேவனால் ஏற்படுத்தப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்றிய தாவீதிய அரசர்களும் லேவிய ஆசாரியரும் சேவித்த அதே இடத்திலே இவனும் சேவித்தான்.
8. மெல்கிசேதேக் முறைமையின்படியாய், ஓர் ஆசாரியருக்கான உடன்படிக்கை யாருடன் செய்யப்பட்டது? பலன் என்ன?
8 மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஓர் ஆசாரியனுக்கான உடன்படிக்கை சம்பந்தமாகப் பவுல் நமக்குக் கூடுதல் விவரங்கள் அளிக்கிறான். உதாரணமாக, இயேசு கிறிஸ்து “மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்,” என்று அவன் கூறுகிறான். (எபிரெயர் 5:4-10; 6:20; 7:17, 21, 22) மெல்கிசேதேக் மானிட பெற்றோரையுடையவனாயிருந்தான் என்றாலும் அவன் வந்த வம்சவரலாறு குறித்த எந்தப் பதிவும் இல்லை. எனவே, மெல்கிசேதேக் முதல் பதிவு செய்யப்பட்ட ஒரு வம்சாவழியின் அடிப்படையில் ஆசாரிய ஸ்தானத்தை சுதந்தரித்துக் கொள்வதற்குப் பதிலாக இயேசுவின் நியமனம் நேரடியாகக் கடவுளிடமிருந்தே வந்தது. இயேசுவின் ஆசாரியத்துவம் எந்த ஒரு வாரிசுக்கும் கடத்தப்படாது, ஏனென்றால் ‘அவர் என்றென்றைக்கும் ஆசாரியராக நிலைத்திருக்கிறார்.’ இப்படியிருப்பதற்குக் காரணம், அவருடைய ஆசாரிய சேவையின் நன்மைகள் நித்தியமானவை. “தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களை . . . முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறவரும்” விசுவாசமுள்ள ஆட்களை நித்தியத்துக்கும் போதித்து வழிநடத்துகிறவருமான ஓர் ஆசாரியரைக் கொண்டிருப்பதில் நாம் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்படலாம்.—எபிரெயர் 7:1-3, 15-17, 23-25.
9, 10. கடவுளுடைய நோக்கம் எப்படி நிறைவேறும் என்பது குறித்த நம்முடைய தெளிந்துணர்வை இந்த ஐந்தாவது உடன்படிக்கையைப் பற்றிய அறிவு எவ்விதத்தில் விரிவுபடுத்தும்?
9 மற்றொரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், ராஜா-ஆசாரியராக இயேசுவின் பங்கு பூமிக்குரிய பிரதேசத்துக்கு அப்பால் செல்கிறது. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஓர் ஆசாரியனுக்கான இந்த உடன்படிக்கையைக் குறிப்பிட்ட அதே சந்தர்ப்பத்தில் தாவீது பின்வருமாறு எழுதினான். “யெகோவா என் ஆண்டவரிடம்: ‘நான் உமது சத்துருக்களை உமது பாதபடியாக்கிப் போடுமட்டும் நீர் என் வலது பாரிசத்தில் உட்காரும்’ என்றார்.” எனவே இயேசு—தாவீதின் ஆண்டவர்—பரலோகத்தில் யெகோவா தேவனுடன் ஓர் இடத்தைக் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. இது அவர் பரலோகத்துக்கு ஏறிச்சென்றபோது நிறைவேறியது. பரலோகத்திலிருந்து கிறிஸ்து தம்முடைய பிதாவுடன் சேர்ந்து பகைவர்களைக் கீழ்ப்படித்திடவும் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றிடவும் அதிகாரம் செலுத்தக்கூடும்.—சங்கீதம் 110:1, 2, தி.மொ.; அப்போஸ்தலர் 2:33-36; எபிரெயர் 1:3; 8:1; 12:2.
10 எனவே இந்த ஐந்தாவது உடன்படிக்கையைக் குறித்து அறிவதன் மூலம் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் யெகோவாவின் ஒழுங்கான, முழுமையான வழியைக் குறித்த விரிவான நோக்குநிலையை நாம் கொண்டிருக்க முடிகிறது. வித்தின் பிரதான பாகம் பரலோகத்தில் ஆசாரியராகவும் இருப்பார் என்பதையும் ராஜா-ஆசாரியராக அவருடைய அதிகாரம் சர்வலோக அளவில் செலுத்தப்படக்கூடியது என்பதையும் அது உறுதிப்படுத்துகிறது.—1 பேதுரு 3:22.
புதிய உடன்படிக்கையும் வித்தின் இரண்டாவது பாகமும்
11. வித்தின் இரண்டாவது பாகம் குறித்து என்ன சிக்கல்கள் இருந்தன?
11 நான் முன்னதாக ஆபிரகாமிய உடன்படிக்கையைக் கவனித்தபோது, இயேசு பிறப்பு உரிமைப்படி வித்தின் பிரதான பகுதியாக இருந்தார் என்பதை கவனித்தோம். அவர் நேரடியாக முற்பிதாவாகிய ஆபிரகாமின் சந்ததியில் வந்தார். பரிபூரண மனிதனாக அவர் பெரிய ஆபிரகாமின் அங்கீகாரம் பெற்ற மகனாக இருந்தார். அப்படியிருக்க, ஆபிரகாமின் வித்தின் இரண்டாவது பாகமாகும் சிலாக்கியமுடைய மனிதர்களை, “வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிற”வர்களைப் பற்றியதென்ன? (கலாத்தியர் 3:29) அபூரணராக இருப்பதால், பாவம் செய்த ஆதாமின் குடும்பத்தின் பாகமாக இருப்பதால், பெரிய ஆபிரகாமாகிய யெகோவாவின் குடும்பத்திலிருக்க தகுதியற்றவர்களாயிருப்பார்கள். அபூரணம் என்ற தடை எப்படி மேற்கொள்ளப்படலாம்? அது மனிதரால் முடியாதது, ஆனால் கடவுளால் முடியாததல்ல.—மத்தேயு 19:25, 26.
12, 13. (எ) கடவுள் எப்படி இன்னொரு உடன்படிக்கையைக் குறித்து முன்னறிவித்தார்? (பி) இந்த உடன்படிக்கையின் எந்த விசேஷ அம்சங்கள் நம்முடைய கவனத்தைப் பெறுகிறது?
12 நியாயப்பிரமாணம் நடைமுறையில் இருக்கும்போதே கடவுள் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் இப்படியாக முன்னறிவித்தார்: “அப்பொழுது இஸ்ரவேல் வீட்டாரோடும் யூதா வீட்டாரோடும் புது உடன்படிக்கை செய்வேன். நான் அவர்கள் பிதாக்களோடே செய்த உடன்படிக்கை போன்றதல்ல . . . ‘என் உடன்படிக்கையை அவர்கள் மீறிப்போட்டார்களே’ . . . என் பிரமாணத்தை நான் அவர்கள் உள்ளத்திலே எழுதுவேன். நான் அவர்கள் கடவுளாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாய் இருப்பார்கள். இனி எவனும் . . . ‘யெகோவாவை அறிந்துகொள்ளுங்கள்’ எனச் சொல்வதில்லை. அவர்கள் எல்லாரும் . . . என்னை அறிந்துகொள்வார்கள். . . . நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னிப்பேன், அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.”—எரேமியா 31:31-34, NW.
13 இந்தப் புதிய உடன்படிக்கையின் ஓர் அம்சம் பாவ மன்னிப்பு என்பதைக் கவனியுங்கள். தெளிவாகவே நியாயப்பிரமாணத்தின் கீழ் மிருக பலிகளின் ஏற்பாட்டைப் “போன்றல்ல.” இதன்பேரில் இயேசு தாம் மரித்த அந்த நாளில்தானே கூடுதல் விளக்கம் அளித்தார். நியாயப்பிரமாணம் தேவைப்படுத்திய பஸ்காவைக் கொண்டாடுவதில் தம்முடைய சீஷர்களைச் சேர்ந்துகொண்ட கிறிஸ்து, கர்த்தருடைய இராப் போஜனத்தை நிறுவினார். இந்த வருடாந்தர ஆசரிப்பு, பரிமாறிக்கொள்ளப்பட்ட திராட்சரசத்தை உட்படுத்தியது. அதைக் குறித்து இயேசு சொன்னார்: “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.”—லூக்கா 22:14-20.
14. வித்தின் இரண்டாவது பாகத்தை உண்டுபண்ணுவதில் இந்தப் புதிய உடன்படிக்கை ஏன் முக்கியமானது?
14 எனவே புதிய உடன்படிக்கை இயேசுவின் இரத்தத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பரிபூரண பலியின் அடிப்படையில் கடவுள் எல்லாக் காலத்துக்குமாக ‘அக்கிரமத்தையும் பாவத்தையும் மன்னிக்கக்’கூடியவராயிருப்பார். அது எதைக் குறிக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்! ஆதாமின் குடும்பத்திலுள்ள தேவ பக்தியுள்ள மனிதரின் பாவங்களை முழுவதுமாக மன்னிக்க முடிந்தவராகக், கடவுள் அவர்களைப் பாவமற்றவர்களாக நோக்கி, அவர்களைப் பெரிய ஆபிரகாமின் ஆவிக்குரிய பிள்ளைகளாகப் பிறப்பித்திடவும், பின்பு பரிசுத்த ஆவியால் அபிஷேகம்பண்ணவும் முடியும். (ரோமர் 8:14-17) இப்படியாக இயேசுவின் பலியால் உறுதிப்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கை, தம்முடைய சீஷர்கள் ஆபிரகாமின் வித்தின் இரண்டாவது பாகமாவதைக் கூடிய காரியமாக்குகிறது. பவுல் பின்வருமாறு எழுதினார்: “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது [இயேசுவின்] மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைப் பண்ணும்படிக்கு அப்படியானார். ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு [வித்துக்கு, NW] உதவியாகக் கைகொடுத்தார்.”—எபிரெயர் 2:14-16; 9:14.
15. புதிய உடன்படிக்கைக்குள் வரும் சாரார் யாவர்?
15 இயேசு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும் அதை உறுதிப்படுத்தும் பலியாகவும் இருப்பவராதலால், அந்த உடன்படிக்கைக்குள் வரும் சாரார் யாவர்? கடவுள் இந்த உடன்படிக்கையை “இஸ்ரவேல் வீட்டாரோடு செய்வார் என்று எரேமியா முன்னறிவித்தான். எந்த இஸ்ரவேல்? நியாயப்பிரமாணத்தின் கீழ் விருத்தசேதனம் செய்துகொண்ட மாம்சப் பிரகாரமான இஸ்ரவேல் அல்ல. ஏனென்றால் புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கையை செயலற்றதாக்கிவிட்டது. (எபிரெயர் 8:7, 13; பக்கம் 32-ஐப் பார்க்கவும்.) இப்பொழுது கடவுள் யூதர்களுடனும் புறஜாதியாருடனும் தொடர்புகொள்வார். அவர்கள், அடையாள அர்த்தத்தில் விசுவாசத்தினாலே ‘ஆவியின்படி இருதயத்தில் விருத்தசேதனம் செய்தவர்கள்.’ புதிய உடன்படிக்கையில் இருப்பவர்கள் ‘அவருடைய பிரமாணங்களை மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருப்பார்கள்.’ (ரோமர் 2:28, 29; எபிரெயர் 8:10) அப்படிப்பட்ட ஆவிக்குரிய யூதர்களைப் பவுல் “தேவனுடைய இஸ்ரவேல்” என்பதாக அழைக்கிறான்.—கலாத்தியர் 6:16; யாக்கோபு 1:1.
16. யாத்திராகமம் 19:6 குறிப்பிடும் காரியத்தை நிறைவேற்றுவதில் புதிய உடன்படிக்கை எப்படி உதவுகிறது?
16 கடவுள் இப்பொழுது ஆவிக்குரிய இஸ்ரவேலுடன் தொடர்பு கொண்டிருப்பதால், வாய்ப்பு என்னும் கதவு திறந்தது. கடவுள் நியாயப்பிரமாணத்தை நிறுவினபோது, இஸ்ரவேல் புத்திரர் தமக்கு “ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாக” ஆவது குறித்து பேசியிருக்கிறார். (யாத்திராகமம் 19:6) உண்மை என்னவெனில், அவர்கள் அனைவருமே ராஜா-ஆசாரியராயிருக்கும் ஒரு ஜாதியாக அல்லது தேசமாக ஒருகாலும் ஆக முடியாது. ஆகவும் இல்லை. ஆனால் ஆபிரகாமின் வித்தின் இரண்டாவது பாகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட யூதர்களும் புறஜாதியாரும் ராஜா-ஆசாரியராகக்கூடும்.b அப்போஸ்தலனாகிய பேதுரு இதை உறுதிப்படுத்தினான். அப்படிப்பட்டவர்களிடம் அவன் சொல்லுகிறான்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய ‘புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும்’ இருக்கிறீர்கள்.” அவர்களுக்கு “மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரம்” வைக்கப்பட்டிருக்கிறது என்றும் எழுதினான்.—1 பேதுரு 1:4; 2:9, 10.
17. புதிய உடன்படிக்கை ஏன் நியாயப்பிரமாண உடன்படிக்கையைவிட “விசேஷித்த” உடன்படிக்கையாக இருக்கிறது?
17 அப்படியே, இரண்டாவது பாக வித்தை ஏற்படுத்துவதில் புதிய உடன்படிக்கை அதற்கு முன்னால் இருந்துவந்த ஆபிரகாமின் உடன்படிக்கையுடன் இணைந்து செயல்படுகிறது. யெகோவா தேவனுக்கும் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான புதிய உடன்படிக்கை பெரிய ஆபிரகாமின் ராஜ குடும்ப வழியில் ஒரு ராஜா-ஆசாரிய பரலோக ஜாதி அல்லது தேசம் உருவாவதை அனுமதிக்கிறது. எனவே: “விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கை” என்று பவுல் ஏன் சொன்னான் என்பதைக் காண முடிகிறது. (எபிரெயர் 8:6) அந்த வாக்குத்தத்தங்கள் கடவுளுடைய பிரமாணம் தேவபக்தியுள்ளவர்களின் இருதயங்களில் எழுதப்படும் ஆசீர்வாதத்தையும் உட்படுத்துகிறது; அவர்களுடைய பாவங்கள் மனதிலே நினைக்கப்படுவதுமில்லை; ‘சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் எல்லாரும் யெகோவாவை அறிவார்கள்.’—எபிரெயர் 8:11.
ஒரு ராஜ்யத்துக்கான இயேசுவின் உடன்படிக்கை
18. நாம் இதுவரை சிந்தித்திருக்கும் உடன்படிக்கைகள் என்ன கருத்தில் கடவுளுடைய நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிடவில்லை?
18 நாம் சிந்தித்திருக்கும் ஆறு உடன்படிக்கைகளையும் திரும்ப எண்ணிப் பார்க்கும்போது, யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் சட்டமுறைபடி ஏற்பாடு செய்திருப்பதாகத் தோன்றலாம். என்றாலும் நாம் சிந்தித்தவற்றுடன் சம்பந்தப்படும் மற்றொரு உடன்படிக்கையை பைபிள் நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த முக்கியமான காரியத்தின்பேரில் கூடுதலான அம்சங்களைக் கொடுத்து நிறைவுசெய்திடும் ஓர் உடன்படிக்கை. ‘கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்,’ என்று ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் சரியாகவே எதிர்பார்க்கின்றனர். (2 தீமோத்தேயு 4:18) பரலோகத்தில் அவர் ஒரு ராஜா-ஆசாரிய ஜாதியாக அல்லது தேசமாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய ஆட்சி பிரதேசம் எதுவாக இருக்கும்? அவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறபோது அங்கு கிறிஸ்து ஏற்கனவே ஒரு பரிபூரண பிரதான ஆசாரியராக இருக்கிறார். சர்வலோக ஆட்சி புரிய அவர் அரசாளும் அதிகாரத்துடன் நிற்பார். (சங்கீதம் 2:6-9; வெளிப்படுத்துதல் 11:15) மற்ற ராஜா-ஆசாரியருக்குச் செய்வதற்கு என்ன இருக்கிறது?
19. ஏழாவது முக்கிய உடன்படிக்கை எப்பொழுது, எப்படி செய்யப்பட்டது?
19 பொ.ச. 33, நைசான் 14 அன்று, மாலைப் பொழுதில் இயேசு, கர்த்தருடைய இராப் போஜனத்தைத் துவக்கினார். அப்பொழுது “தம்முடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை”யைக் குறிப்பிட்டபோது, நம் கலந்தாலோசிப்புக்கான மற்றொரு உடன்படிக்கையைக் குறித்து, ஏழாவது உடன்படிக்கையைக் குறித்து பேசினார். அவர் தம்முடைய உத்தம அப்போஸ்தலர்களிடம் சொன்னார்: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனம் பண்ணி இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயத்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்.” (லூக்கா 22:20, 28-30) மெல்கிசேதேக்கின் முறைமையில் ஓர் ஆசாரியராயிருப்பதற்கு பிதா இயேசுவுடன் உடன்படிக்கை செய்ததுபோல, கிறிஸ்து உண்மைத்தவறாத தம்முடைய சீஷர்களுடன் ஒரு தனிப்பட்ட உடன்படிக்கையைச் செய்தார்.
20. ராஜ்யத்துக்கான உடன்படிக்கை யாருடன் செய்யப்பட்டது? ஏன்? (தானியேல் 7:18; 2 தீமோத்தேயு 2:11-13)
20 அந்தப் 11 அப்போஸ்தலரும் அவருடைய சோதனைகளில் இயேசுவுடன் நிலைத்திருந்தனர். அவர்கள் சிங்காசனங்களில் உட்காருவார்கள் என்று உடன்படிக்கை காண்பித்தது. மேலும், தங்களை உத்தம விசுவாசிகளாக நிரூபிக்கும் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் பரலோக சிங்காசனங்களில் அமர்வார்கள் என்று வெளிப்படுத்துதல் 3:21 நிரூபிக்கிறது. இப்படியாக இந்த உடன்படிக்கை ஆசாரியர்களாகவும் “பூமியின் மேல் அரசாளும் ராஜாக்களாகவும்” ஆளுகை செய்ய இயேசுவின் இரத்தத்தால் பரலோகத்துக்கு மீட்டுக்கொள்ளப்பட்ட 1,44,000 பேருடனும் செய்யப்பட்டது. (வெளிப்படுத்துதல் 1:4-6; 5:9, 10; 20:6) இவர்களோடு இயேசு செய்யும் உடன்படிக்கை அவருடைய பிரதேசத்தைப் பகிர்ந்துகொள்ள அவருடன் இவர்களை ஒன்றுசேர்க்கிறது. ஒரு கருத்தில் இது ஓர் உயர்ந்த குடும்பத்திலிருந்து வரும் மணவாட்டி, அரசாளும் அரசருடன் விவாகத்தில் இணைவது போன்றிருக்கிறது. அப்படியாக அவருடைய ராஜ்ய ஆட்சியைப் பகிர்ந்துகொள்ளும் நிலைக்கு அவள் வருகிறாள்.—யோவான் 3:29; 2 கொரிந்தியர் 11:2; வெளிப்படுத்துதல் 19:7, 8.
21, 22. இந்த உடன்படிக்கைகள் சாதிப்பவற்றால் என்ன ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கலாம்?
21 இது கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு என்ன ஆசீர்வாதங்களைத் திறந்து வைக்கும்? இயேசுவானவரோ அல்லது அந்த 1,44,000 பேரோ “உண்மையிலேயே பிரச்னைகளுக்குப் பரிகாரம் அளிக்க முடியாத” நற்செயலாற்ற விருப்பமாயிருந்த அந்த வல்லாட்சியாளரைப் போல் இருக்க மாட்டார்கள். மாறாக, இயேசு “எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர்” என்று உறுதியளிக்கப்படுகிறோம். எனவே அவர் ஏன் மனித பலவீனங்களைக் குறித்து ‘பரிதபிக்க முடிகிறது,’ மற்றும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுடைய விஷயத்தில் உண்மையாயிருந்தது போன்று “வேறே ஆடுகளும்” கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய சிங்காசனத்தை “பேச்சு சுயாதீனத்துடன்” [NW] ஏன் சேரமுடிகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படியாக அவர்களும் “இரக்கத்தைப் பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவுங்”கூடும்.—எபிரெயர் 4:14-16; யோவான் 10:16.
22 ராஜா-ஆசாரியர்களாக இயேசுவோடு பங்குகொள்ள உடன்பட்டவர்கள் மனிதவர்க்கத்தின் ஆசீர்வாதங்களிலும் பங்குகொள்கின்றனர். பூர்வ லேவிய ஆசாரியர் இஸ்ரவேல் தேசமுழுவதற்கும் நன்மையாயிருந்ததுபோல, பரலோக சிங்காசனங்களில் இயேசுவுடன் சேவிப்பவர்கள் பூமியில் வாழும் எல்லாரையுமே நீதியில் நியாயந்தீர்ப்பார்கள். (லூக்கா 22:30) அந்த ராஜா-ஆசாரியர்கள் ஒரு சமயத்தில் மனிதராக இருந்தனர், எனவே அவர்கள் மனிதவர்க்கத்தின் தேவைகளைக் கண்டு பரிதபிப்பர். இந்த இரண்டாவது பாக வித்து இயேசுவுடன் சேர்ந்து “சகல ஜனமும் ஆசீர்வதிக்கப்படுவதைப்” பார்த்துக்கொள்ளும்.—கலாத்தியர் 3:8.
23. தனிப்பட்ட ஆட்கள் எப்படி இந்த உடன்படிக்கைகளுக்கு இசைந்து செயல்பட வேண்டும்?
23 மனிதவர்க்கத்துக்கு இருக்கும் அந்த ஆசீர்வாதத்தில் பங்குகொள்ள விரும்பும் எல்லாரும் அப்படிச் செய்ய இப்பொழுது அழைக்கப்படுகின்றனர். (வெளிப்படுத்துதல் 22:17) ஒரு சிறந்த படி, கர்த்தருடைய இராப் போஜனத்தின் ஆசரிப்பில் கலந்துகொள்வதாகும். இது செவ்வாய், ஏப்ரல் 10, 1990 அன்று சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பு நடைபெறும். யெகோவாவின் சாட்சிகளுடைய ஏதாவது ஒரு சபையில் கலந்துகொள்ள இப்பொழுதே திட்டமிடுங்கள். அங்கு தெய்வீக உடன்படிக்கைகளைக் குறித்து ஏராளமாகக் கற்றுக்கொள்வீர்கள், மேலும் அவற்றிலிருந்து நீங்கள் எவ்விதம் நன்மையடையலாம் என்பதையும் காண்பீர்கள். (w89 2/1)
[அடிக்குறிப்புகள்]
a “அதிக துணிச்சல் மிகுந்த சீர்த்திருத்தங்கள்கூட வறுமையில் வாழும் விவசாயிகளையும் அளவுக்கு மிஞ்சிய வாய்ப்புகளுடையவர்களையும் அரசியலிலும் சமுதாயத்திலும் நன்கு பிணைக்கப்பட்டிராத ஒரு நடுத்தர மக்களையும் விட்டுச் சென்றது . . . அறிவுவிளக்கம் பெற்ற வல்லாட்சி முறை அசட்டை செய்யப்படமுடியாத கேள்விகளை எதிர்ப்பட ஆரம்பித்தது என்றாலும், அந்தச் சகாப்தத்தின் அரசியல் மற்றும் பொருளாதார உண்மை நிலைகளில் உண்மையிலேயே பிரச்னைகளுக்கும் பரிகாரம் அளிக்க முடியாதிருந்தது.”—மேற்கத்திய நாகரிகம்—அதன் ஆரம்பமும் முடிவும்: தற்கால சுதந்தரம். (Western Civilization—Its Genesis and Destiny The Modern Heritage).
b இயேசு புதிய உடன்படிக்கையின் இருசாராரிலும் இல்லை. அவர் அதன் மத்தியஸ்தர், மேலும் அவர் மன்னிப்பு தேவைப்படும் பாவமற்றவராக இருக்கிறார். மேலுமாக, அதன் மூலமாக அவர் ஒரு ராஜா-ஆசாரியனாக ஆக அவசியமில்லை, ஏனெனில் அவர் தாவீதிய உடன்படிக்கையின்படி ஒரு ராஜாவாகவும், மெல்கிசேதேக்கைப் போன்ற ஓர் ஆசாரியனாகவும் இருக்கிறார்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ சங்கீதம் 110:4-ல் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கை ஏன் செய்யப்பட்டது? அது சாதித்தது என்ன?
◻ புதிய உடன்படிக்கையில் இருப்பவர்கள் யார்? ஒரு ராஜா-ஆசாரியர் தேசத்தை உண்டுபண்ண அது எப்படி உதவியது?
◻ ஏன் இயேசு தம்மைப் பின்பற்றியவர்களோடு ஒரு தனிப்பட்ட உடன்படிக்கையைச் செய்தார்?
◻ நாம் சிந்தித்த அந்த ஏழு உடன்படிக்கைகள் என்ன?
[பக்கம் 17-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
ஏதேனிய உடன்படிக்கை ஆதியாகமம் 3:15
ஆபிரகாமிய உடன்படிக்கை
நியாயப்பிரமாண உடன்படிக்கை
தாவீதிய ராஜ்ய உடன்படிக்கை
மெல்கிசேதேக் போன்ற ஆசாரியராயிருக்க உடன்படிக்கை
பிரதான வித்து
இரண்டாவது பாக வித்து
நித்திய ஆசீர்வாதங்கள்
[பக்கம் 19-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
ஏதேனிய உடன்படிக்கை ஆதியாகமம் 3:15
ஆபிரகாமிய உடன்படிக்கை
நியாயப்பிரமாண உடன்படிக்கை
புதிய உடன்படிக்கை
தாவீதிய ராஜ்ய உடன்படிக்கை
மெல்கிசேதேக் போன்ற ஆசாரியராயிருக்க உடன்படிக்கை
பிரதான வித்து
பரலோக ராஜ்யத்துக்கான உடன்படிக்கை
இரண்டாவது பாக வித்து
நித்திய ஆசீர்வாதங்கள்