எரேமியா—கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளின் விரும்பப்படாத தீர்க்கதரிசி
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் ஜூன் 12 துவங்கி அக்டோபர் 16, 1988 வரையுள்ள வாரங்களுக்கு வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதிகள், எரேமியா புத்தகத்திலிருந்து அட்டவணையிடப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு கட்டுரைகளும் இதைத் தொடர்ந்து ஜூன் 1988 வெளியீட்டில் காணப்படும் மூன்றாவது கட்டுரையும் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை விளங்கிக்கொள்ள சிறந்த பின்னணி விஷயங்களைக் கொடுக்கின்றன.
“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாகுமுன்னே உன்னை அறிந்திருந்தேன் . . . உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்.”—எரேமியா 1:5
“தீர்க்கதரிசிகளின் கூட்டத்திலும்கூட, எரேமியா குறிப்பிடத்தக்கவனாய் உயர்ந்து நிற்கிறான்.” பைபிள் கல்விமானின் இந்தக் குறிப்பு, யூதாவுக்கும் ஜாதிகளுக்கும் தீர்க்கதரிசியாக சேவிக்கும்படியாக எரேமியா முதல் முறையாக யெகோவாவிடமிருந்து தன்னுடைய பொறுப்பை பெற்றுக்கொண்டபோது அவன் தன்னைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயத்துக்கு நேர் எதிர்மாறாக இருக்கின்றது. அவன், “ஆ, யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறு பிள்ளையாயிருக்கிறேன்” என்று பதிலளித்தான். எரேமியா தன்னுடைய இளமையைக் குறித்து மிகவும் உணர்வுள்ளவனாக இருந்தான். பகைமை உணர்ச்சிகளைக் கொண்ட ஜாதிகளை எதிர்படும் சவால் மிகப் பெரியதாக அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. யெகோவா வேறுவிதமாக நினைத்தார்.—எரேமியா 1:6.
2 யெகோவா பொறுப்பேற்றுக்கொண்டிருந்த ஒருசில மனிதர்களின் பிறப்புகளில் எரேமியா ஒருவனாக இருந்தான் என்பது, இளைஞனான எரேமியாவோடு யெகோவா கொண்டிருந்த சம்பாஷணையிலிருந்து தெளிவாக இருக்கிறது. அவன் கருக்கொண்ட சமயம் முதற்கொண்டு எரேமியாவில் அவர் பிரத்தியேகமாக அக்கறையை எடுத்துக்கொள்ள காரணமென்ன? ஏனென்றால் அவனுக்கு ஒரு விசேஷித்த வேலையை யெகோவா தம்முடைய மனதில் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அவரால் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணினேன்.” (எரேமியா 1:5) பின்பு அவர் அந்த இளைஞனுக்கு இவ்விதமாகக் கட்டளையிட்டார்: “‘நான் சிறியபிள்ளை’யென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்; ‘உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்’ என்று யெகோவா சொன்னார்.” இங்கே அரை மனதோடு தன்னுடைய வேலையை அணுகுவதற்கு அவனுக்கு இடமில்லை. மாறாக, இது தைரியத்தையும் யெகோவாவில் நம்பிக்கையையும் தேவைப்படுத்தியது.—எரேமியா 1:7, 8.
3 கடவுளிடமிருந்து நேரடியாக இப்படிப்பட்ட ஒரு பொறுப்பை பெற்றுக்கொண்டபோது இந்த இளைஞன் எத்தனை உணர்ச்சிவசப்பட்டு அல்லது ஒருவேளை திணறிப்போய்விட்டிருக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட ஒரு பொறுப்பு! “பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும் நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் “ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின் மேலும் ஏற்படுத்தினேன்.” பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் மத்திபத்தில் யூதாவில் நிலவிய பின்னணியில் இந்த வார்த்தைகள் இந்த இளம் தீர்க்கதரிசியின் மீது மிகப்பெரிய உத்தரவாதத்தைத் திணிப்பதாக இருந்தது. பரிசுத்த நகரமாகிய எருசலேமையும் அதன் ஆலயத்தையும் ஒரு மந்திரக் கவசத்தைப்போல நம்பியிருந்த பெருமையும், தன்னிறைவுமுள்ள ஒரு தேசத்தை அவன் எதிர்பட வேண்டியதாக இருந்தது. அவன் எருசலேமில் தன்னுடைய 40 ஆண்டு தீர்க்கதரிசன ஊழிய காலத்தை முடிக்கையில், ஐந்து வித்தியாசமான ராஜாக்களின் (யோசியா, யோவாகாஸ், யோயாக்கீம், யோயாகீன், சிதேக்கியா) ஆட்சி காலத்தின்போது தன்னுடைய செய்தியை அறிவிக்க வேண்டியவனாக இருந்தான். யூதாவுக்கும் பாபிலோனிய தேசங்களுக்கும் அவன் விரும்பப்படாத கண்டனம் தெரிவிக்கும் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்க வேண்டியவனாக இருந்தான்.—எரேமியா 1:10; 51:41-64.
எரேமியாவைக் குறித்து நாம் ஏன் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
4 ஆனால், இங்கு பொ.ச. 20-ம் நூற்றாண்டின் முடிவிலிருக்கும் நமக்கும் அக்காலத்தில் நடந்த அந்தச் சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று நாம் கேட்கலாம். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதிய கடிதத்தில் இஸ்ரவேலரின் சரித்திரத்தில் சிலவற்றைப்பற்றி விமர்சிக்கையில், பதிலைக் கொடுக்கிறான். அவன் எழுதினான்: “அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. . . . உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.”—1 கொரிந்தியர் 10:6, 11.
5 இஸ்ரவேலிலும் யூதாவிலும் நடந்தேறிய சம்பவங்கள் இந்த முடிவு காலத்தின்போது மெய் கிறிஸ்தவ சபைக்கு எச்சரிப்பூட்டும் உதாரணங்களாக சேவிக்கின்றன. (எரேமியா 51:6-8 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 18:2, 4 ஒப்பிடவும்.) ஆகவே எரேமியாவின் தீர்க்கதரிசன ஊழியமும் எருசலேமுக்கு நேரிட்ட சம்பவங்களும் இன்று யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆழமான உட்பொருளை உடையவையாக இருக்கின்றன. பின்வரும் கட்டுரைகளில் நாம் பார்க்கப்போகிறபடி, விசேஷமாக கிறிஸ்தவ மண்டலத்தின் மத்தியில் அவர்களுடைய நடவடிக்கைகளின் சம்பந்தமாக இது இவ்விதமாக இருக்கிறது.
கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை எரேமியா தைரியமாக பிரகடனம் செய்கிறான்
6 எரேமியாவை அவனுடைய மிகப்பெரிய பொறுப்புக்காக பெலப்படுத்துவதற்காக, யெகோவா மேலுமாக அவனுக்கு இவ்விதமாக உறுதியளித்திருந்தார்: “நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல் . . . நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு. இதோ தேசமனைத்துக்கும் யூதாவின் ராஜாக்களுக்கும் அதின் பிரபுக்களுக்கும் அதின் ஆசாரியர்களுக்கும் தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையத்தினம் அரணிப்பான பட்டணமாக்கினேன்.” யூதாவின் அரசர்களையும் ஆசாரியர்களையும் எதிர்பட தயாராக இருக்கும் பொருட்டு எரேமியா அரணிப்பான ஒரு பட்டணம் போல இருக்க வேண்டியதாக இருந்ததில் சந்தேகமில்லை. மேலும் ஜனங்களிடம் விரும்பப்படாத மற்றும் சவாலான ஒரு செய்தியை எடுத்துச் செல்வது அவனுக்குச் சுலபமான வேலையாக இருக்கப்போவதில்லை.—எரேமியா 1:17, 18.
7 “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்” என்று யெகோவா எச்சரித்தார். “ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்.” (எரேமியா 1:19) இப்பொழுது, யூதர்களும் அவர்களுடைய அரசர்களும் இந்தத் தீர்க்கதரிசிக்கு விரோதமாக யுத்தம் பண்ண ஏன் விரும்புவார்கள்? ஏனென்றால் அவனுடைய செய்தி அவர்களுடைய தன்னிறைவையும் அவர்களுடைய புற ஆசார வணக்க முறையையும் தாக்கியது. எரேமியா இதை நேரடியாகச் சொல்ல தவறவில்லை: “யெகோவாவுடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது. அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை. அவர்களில் சிறியோர் முதல், பெரியோர் மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள் முதல் ஆசாரியர்கள் [தார்மீக மற்றும் ஆவிக்குரிய மதிப்பீடுகளின் பாதுகாவலராக இருந்திருக்க வேண்டியவர்கள்] மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.”—எரேமியா 6:10, 13.
8 உண்மைதான் பலிகளைச் செலுத்துவதில் தேசத்தை அவர்கள் முன்நின்று நடத்தினார்கள். அவர்கள் மெய் வணக்கத்தைக் கண்மூடித்தனமாக கடைபிடித்து வந்தார்கள்; ஆனால் அவர்களுடைய இருதயங்களோ அதில் இருக்கவில்லை. நல்நடத்தையைக் காட்டிலும் சடங்குகளே அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. அதே சமயம், யூத மதத் தலைவர்கள், சமாதானமில்லாதிருந்தும், “சமாதானம் சமாதானம்” என்று சொல்லி ஜனங்களை ஒருவித பொய்யான பாதுகாப்புணர்வுக்குள் அமைதிபடுத்திக் கொண்டிருந்தார்கள். (எரேமியா 6:14; 8:11) ஆம், ஜனங்கள் கடவுளோடு சமாதானமாயிருப்பதாகச் சொல்லி அவர்களை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். பரிசுத்த நகரத்தையும் அதன் ஆலயத்தையும் உடைமையாகக் கொண்ட யெகோவாவின் இரட்சிக்கப்பட்ட ஜனமாக இருப்பதால், கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் யெகோவா நிலைமையை அவ்விதமாகவே கருதினாரா?
9 யெகோவா எரேமியாவை ஆலய வாசலில் அனைவரும் காணும் வகையில் நின்றுகொண்டு, அங்கே பணிந்துகொள்ள பிரவேசிக்கிறவர்களிடத்தில் செய்தியை அறிவிக்கும்படியாகக் கட்டளையிட்டார். அவன் அவர்களிடம் பின்வருமாறு சொல்ல வேண்டியவனாக இருந்தான்: “யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய் வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள் . . . ஒன்றுக்கும் உதவாத பொய் வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.” அவர்கள் தங்களுடைய ஆலயத்தைக் குறித்து பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தபோது, யூதர்கள் விசுவாசித்து நடவாமல் தரிசித்து நடந்துகொண்டிருந்தார்கள். ஏற்கெனவே யெகோவாவின் இந்த எச்சரிப்பான வார்த்தைகளை அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள்: “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்கு எங்கே ஆலயத்தைக் கட்டமுடியும்?” அவர்களுடைய ஆலயம் எத்தனை மகிமைப் பொருந்தினதாக இருந்தபோதிலும் இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தின் ஆண்டவராகிய யெகோவா அதற்குள் சிறைவாசம் செய்ய அவர் நிச்சயமாகவே அடைத்து வைக்கப்பட்டவராக இல்லை.—எரேமியா 7:1-8; ஏசாயா 66:1, NW.
10 எரேமியா தொடர்ந்து வெளிப்படையாக வேதனைத்தரும் கண்டன செய்தியை அறிவித்து வந்தான்: “நீங்கள் திருடி கொலைசெய்து விபசாரம் பண்ணி, பொய்யாணையிட்டு பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, . . . இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக ‘விடுதலை பெற்றிருக்கிறோ’மென்று சொல்வீர்களோ?” ‘தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக’ யூதர்கள் அவர்கள் தங்களுடைய பலிகளை ஆலயத்தில் செலுத்திக்கொண்டிருந்த வரையில், எந்தவிதமான நடத்தையையும் கடவுள் பொறுத்துக்கொள்வார் என்பதாக நினைத்தார்கள். என்றபோதிலும் தன்னுடைய கெட்டுப்போன ஒரே பிள்ளைக்கு அதிக சலுகைக் காட்டும் ஒரு உணர்ச்சிவயப்பட்ட தகப்பனாக அவரை அவர்கள் கருதியிருந்தால், அவர்கள் கடுமையாக விழிப்பூட்டப்படுவது அவர்களுக்குக் காத்திருந்தது.—எரேமியா 7:9, 10; யாத்திராகமம் 19:5, 6.
11 “என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம், உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ?” என்ற அழிவுக்குரிய கேள்வி எழுப்பப்படும் வகையில் யூதாவின் வணக்கம் யெகோவாவின் பார்வையில் அத்தனை இழிவாக தாழ்த்தப்பட்டுபோனது. சுமார் 700 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலைமை இதைவிட மேலானதாக இருக்கவில்லை. எரேமியாவைவிடப் பெரியவரான, மற்றொரு தீர்க்கதரிசியாகிய இயேசு அவருடைய காலத்தில் மீண்டும் கட்டப்பட்டிருந்த ஆலயத்தில் ஜனங்கள் செய்துவந்த துணிச்சலான செயல்களையும் வியாபாரத்தையும் கண்டனம் செய்ய இதே வார்த்தைகளையே பயன்படுத்தினார். நாம் பார்க்கப்போகும் விதமாகவே, கிறிஸ்தவ மண்டலத்தில் இன்று நிலைமை இதைவிட மேலானதாக இல்லை.—எரேமியா 7:10; மத்தேயு 16:14; மாற்கு 11:15-17.
காவல்காரன் அசட்டை செய்யப்படுகிறான் அழிவு முன்னறிவிக்கப்படுகிறது
12 இஸ்ரவேலையும் யூதாவையும் அவர்களுடைய தவறான போக்கைக் குறித்து எச்சரிக்க கடவுள் பயன்படுத்திய முதல் தீர்க்கதரிசியாக எரேமியா எவ்விதத்திலும் இருக்கவில்லை. இதற்கு முந்திய நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளின்போது தீர்க்கதரிசிகளாகிய ஏசாயா, மீகா, ஓசியா மற்றும் ஓபேத் ஜனங்களை எச்சரிக்க காவல்காரர்களாக அனுப்பப்பட்டிருந்தார்கள். (ஏசாயா 1:1; மீகா 1:1; ஓசியா 1:1; 2 நாளாகமம் 28:6-9) பெரும்பான்மையர் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்? “நான் உங்கள் மேல் காவலாளரையும் வைத்து, ‘எக்காள சத்தத்துக்குச் செவி கொடுங்கள்’ என்றும் சொன்னேன்; அவர்களோ ‘நாங்கள் கேட்க மாட்டோம்’ என்கிறார்கள்.” (எரேமியா 6:17; 7:13, 25, 26) அதேவிதமாகவே அவர்கள் எரேமியாவுக்குச் செவிகொடுக்க மறுத்தார்கள். அதற்குப் பதிலாக அவனை அவர்கள் துன்புறுத்தி அவன் வாயை அடைத்துவிட முயற்சி செய்தார்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய அகந்தைக்காகவும் அவநம்பிக்கைக்காகவும் விலையை செலுத்தியே ஆக வேண்டும் என்று யெகோவா முடிவு செய்தார்.—எரேமியா 20:1, 2; 26:8, 11; 37:15; 38:6.
13 தம்முடைய தூதுவர்களை தேசம் தள்ளிவிட்டதற்கு பிரதிபலிப்பாக, யெகோவா பூமியின் தேசங்களுக்கு ஒரு அழைப்பை விடுத்தார்: “ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள். பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்து விடுகிறார்கள்; அவர்கள் மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப் பண்ணுவேன்.” தேசம் ஏன் தீங்கை அனுபவிக்கும்? தவறான எண்ணங்களின் அடிப்படையில் அவர்கள் செய்யும் தவறான செயல்களுக்காகவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைகளையும் நியாய பிரமாணத்தையும் தள்ளி விட்டு தங்களின் சொந்த சுயநலமான மாம்சபிரகாரமான விருப்பங்களைச் செய்து வந்தார்கள்.—எரேமியா 6:18, 19; ஏசாயா 55:8, 9; 59:7.
14 யெகோவாவின் கோபத்தை வருவித்துக்கொள்ள அவர்கள் யூதாவில் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? “வானராக்கினிக்கு” பலியிட அவர்கள் பணியாரங்களைச் சுட்டுக் கொண்டிருந்தார்கள். யெகோவாவுக்கு மனதை மனமடிவுண்டாக்க பானபலிகளை வார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே யெகோவா கேட்கிறார்: “அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள்?” (எரேமியா 7:18, 19, புதிய சர்வ தேசீய மொழிபெயர்ப்பு) என்றபோதிலும் அவர்களுடைய தூஷணமான தவறுகள் இன்னும் கீழ்த்தரமாகவும் சென்றது—யெகோவாவின் நாமம் தரிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் அவர்கள் அருவருப்பான விக்கிரகங்களை வைத்தார்கள். எருசலேமுக்கு வெளியே, இன்னோம் பள்ளத்தாக்கிலே “தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக” பலிபீடங்களைக் கட்டினார்கள். மெய் வணக்கத்தை அவர்கள் இப்படியெல்லாம் அவமதித்ததற்காக அவர்கள் என்ன விலையை செலுத்துவார்கள்?—எரேமியா 7:30, 31.
யூதா விளைவை அனுபவிக்கிறது
15 பொ.ச.மு. 632-ற்குள், அசீரியா கல்தேயர் மற்றும் மேதியர்களின் கைகளுக்குள் விழுந்துபோனது, மற்றும் எகிப்து யூதாவுக்குத் தென்புறத்திலுள்ள ஒரு சிறிய வல்லரசாக தாழ்த்தப்பட்டுவிட்டது. யூதாவுக்கு உண்மையான ஆபத்து வடக்கே இருந்தே வரவேண்டும். இதன் காரணமாக எரேமியா தன்னுடைய உடன் யூதர்களுக்கு இந்தத் துர்செய்தியைக் கொடுக்க வேண்டியவனாக இருந்தான்! “இதோ வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வருகிறது . . . அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள் . . . சீயோன் குமாரத்தியே அவர்கள் உனக்கு விரோதமாக யுத்த சந்நத்தராய் . . . வருவார்கள்.” அந்தச் சமயத்தில் பாபிலோன் வளர்ந்து வந்த உலக வல்லரசாக இருந்தது. உண்மையற்ற யூதாவை தண்டிப்பதற்கு இதுவே கடவுளின் கருவியாக இருக்கும்.—எரேமியா 6:22, 23; 25:8, 9.
16 தன்னுடைய தேசத்தாரின் சார்பாக எரேமியா மன்றாடுவதில் ஏதாவது பிரயோஜனமிருக்குமா? மெய் வணக்கத்தில் ஒருவேளை ஒத்திணங்கிப் போகமுடியுமா? யெகோவா பாதி அளவுகளை ஏற்றுக்கொண்டு தம்முடைய ஜனங்களை மன்னித்துவிடுவாரா? யெகோவாவின் நிலைநிற்கை தெளிவாக இருந்தது. குறைத்த பட்சம் மூன்று சமயங்களிலாவது அவர் எரேமியாவிடம் பின்வருமாறு கட்டளையிட்டார்: “நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம் . . . நான் உனக்கு செவிகொடுப்பதில்லை.” இதற்கு இணையாக ஒரு நிறைவேற்றத்தில், நாம் விரைவில் பார்க்கபோகிறபடி இந்தக் கண்டிப்பான எச்சரிப்பு கிறிஸ்தவ மண்டலத்துக்குப் பொல்லாப்பு வர இருப்பதைத் தெரிவிப்பதாக இருக்கிறது.—எரேமியா 7:16; 11:14; 14:11.
17 யூதாவுக்குக் காரியங்கள் எவ்விதமாக நேரிட்டன? எரேமியாவின் மூலமாக யெகோவா முன்னறிவித்த விதமாகவே சரியாக நடந்தன. யோயாக்கீம் ராஜாவின் ஆட்சிகாலத்தில், யூதா, வல்லரசாகிய பாபிலோனுக்கு அடிமை தேசமாக ஆனது. மூன்று வருடங்களுக்குப் பின்பு யோயாக்கீம் கலகம் செய்தான். முட்டாள்தனமான இந்தச் செயல், எருசலேம் நகரத்தை முற்றுகையிட்ட பாபிலோனியர்களின் கையில், இன்னும் அதிகமாக அவமதிக்கப்பட வழிநடத்தியது. இந்தச் சமயத்திற்குள், யோயாக்கீம் மரித்துவிட்டிருந்தான். அவனுக்குப் பின் அவனுடைய குமாரன் யோயாக்கீன் ராஜாவானான். பாபிலோனிய முற்றுகை யூதாவை தலைவணங்கச் செய்தது. யோயாக்கீனும் அரச குடும்பம் முழுவதும், யூத சமுதாயத்தில் மேல் மட்டத்திலிருந்த மற்றவர்களும்கூட பாபிலோனுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.—2 இராஜாக்கள் 24:5-17.
18 பரிசுத்த ஆலயத்துக்கும் அதனுடைய எல்லா விலைமதிப்புள்ள பரிசுத்த அணிகலன்களுக்கும் என்ன நேரிட்டது? அவை நிச்சயமாகவே யூதாவுக்கு அதிருஷ்டதாயத்தாக சேவிக்கவில்லை. நேபுகாத்நேச்சார் “அங்கேயிருந்து யெகோவாவுடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும் ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தில் உண்டாயிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம் உடைத்துப்போட்டான்.” (2 இராஜாக்கள் 24:13) கடைசியாக, எருசலேமில் எஞ்சியிருப்பதன் மேல் ஆட்சி செய்யும்படியாக பாபிலோனால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய சிதேக்கியாவும்கூட அவனுக்கு மேலிருந்த அரசர்களுக்கு விரோதமாக கலகம் செய்தான். அதுவே நேபுகாத்நேச்சாரின் கடைசி பிடிப்பாக இருந்தது. எருசலேம் நகரம் மறுபடியுமாக முற்றுகையிடப்பட்டு பொ.ச.மு. 607-ல் அது நேபுசராதானிடத்தில் வீழ்ச்சி அடைந்து முற்றிலுமாக பாழ்க்கடிக்கப்பட்டது.—எரேமியா 34:1, 21, 22; 52:5-11.
19 ‘தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்துக்கு’ என்னே ஒரு துயரமான படுவீழ்ச்சி! ஆனால் எரேமியாவின் நியாயத்தீர்ப்பு அறிவிப்புகள் எவ்விதமாக உண்மையென நிரூபிக்கப்பட்டன. யூதர்கள் தங்களுக்கு எந்தத் தீங்கும் வர முடியாது என்பதாக நினைத்துக்கொண்டு கற்பனையான ஒரு உலகில் வாழ்ந்துவந்தபோது, “பொல்லாப்பைக் குறித்து சப்தமாகச் சொல்லிக் கொண்டிருந்த” எரேமியா தோல்வியடைந்த ஒரு கனவுகாண்பவனாக இல்லாமல் உண்மையில் நடைமுறையில் பேசுகிறவனாக இருந்திருக்கிறான். (எரேமியா 38:4; “பொல்லாப்பு” என்ற வார்த்தை எரேமியா புத்தகத்தில் சுமார் 64 தடவைகள் இடம் பெறுவதை கவனிக்கவும்) யெகோவாவின் நியாயத்தீர்ப்பு எத்தனை துல்லிபமாக இருந்திருக்கிறது: “தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளாமலும் புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற ஜாதி இதுதான் என்றும் சத்தியம் அழிந்து அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல். நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும் . . . ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.”—எரேமியா 7:28, 34.
20 இத்தகைய அவலமான விதத்தில், பெருமையும் தன்னிறைவுடனுமிருந்த யூதர்கள், கடவுளை வணங்கி வந்ததும் அவரோடு ஒரு விசேஷித்த உறவில் இருந்ததும் அவர்களுடைய இரட்சிப்புக்கு உத்தரவாதமளிக்கவில்லை என்பதை உணர வேண்டியவர்களாக இருந்தனர். தீர்க்கதரிசனம் சொன்ன விதமாகவே: “சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து. அறுப்புக் காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.” (எரேமியா 8:15, 20) யூதாவுக்கு இப்பொழுது கணக்குத் தீர்ப்பு நாளாக இருந்தது. ஆனால் தைரியம் நிறைந்தவனாயிருந்த எரேமியா தீர்க்கதரிசியாக அவனுடைய வாழ்க்கைப் பணியின் காலம் முழுவதிலுமாக பாதுகாக்கப்பட்டு அவனுடைய வேலையை முடிக்க அனுமதிக்கப்பட்டான். நாடுகடத்தப்பட்டிருந்த காலத்தில் அவன் வெட்கங்கெட்ட ஜனத்தோடு பாபிலோனில் அல்ல, ஆனால் எகிப்திலே மரித்தான். 65 வருடங்களுக்கும் மேலாக அவன் தைரியமாகவும் உண்மையுடனும் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவித்து வந்திருக்கிறான்.
21 ஆனால் நாம் இப்பொழுது எரேமியாவின் வாழ்க்கையும் ஊழியமும் நம்முடைய காலங்களில் எவ்விதத்தில் பொருந்துகின்றன என்பதை தெரிந்துகொள்வதில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த இருபதாம் நூற்றாண்டில் எரேமியாவுக்கு ஈடாக யார் இருக்கக்கூடும்? யூதா மற்றும் எருசலேமுக்கு? வடக்கேயிருந்து வரும் ஆபத்து எதற்கு இணையாக இருக்கிறது? பின்வரும் எமது கட்டுரை இந்தக் கேள்விகளை ஆராய இருக்கிறது. (w88 4/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ எரேமியா அவனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு எவ்விதமாக பிரதிபலித்தான்? யெகோவாவின் பதில் என்னவாக இருந்தது?
◻ எரேமியாவின் நாளில் நடந்த சம்பவங்களில் நாம் ஏன் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்?
◻ என்ன மதசம்பந்தமான நிலைமையை எரேமியா கண்டித்தான்? யூதர்கள் எதில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்?
◻ எருசலேம் மற்றும் யூதாவின் இறுதியான முடிவு என்னவாக இருந்தது?
[கேள்விகள்]
1. கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்கையில் எரேமியாவைச் சிலர் எவ்விதமாக கருதுகிறார்கள்? என்றபோதிலும் அவன் தன்னை எவ்விதமாக கருதினான்?
2. யெகோவா எவ்விதமாக எரேமியாவில் நம்பிக்கையை படிப்படியாக புகட்டினார்?
3. எரேமியாவின் பொறுப்பு ஏன் முழுவதும் ஒரு சவாலாக இருந்தது?
4, 5. (எ) எரேமியாவின் நாளில் நடந்த சம்பவங்களில் நாம் ஏன் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்? (ரோமர் 15:4) (பி) என்ன விசேஷித்த பொருத்தம் நமக்கு அக்கறைக்குரியதாக இருக்கிறது?
6. எரேமியாவின் பொறுப்பை அதிக கடினமாக்கியது எது? என்றபோதிலும் என்ன ஊக்குவிப்பை அவன் பெற்றுக்கொண்டான்?
7 யூத அரசர்கள் எரேமியாவை எதிர்த்ததற்குக் காரணம் என்ன?
8. ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் எவ்விதமாக ஜனங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள்?
9. அவர்களுடைய ஆலயத்தின் சம்பந்தமாக எரேமியா அவர்களுக்கு என்ன எச்சரிப்பைக் கொடுத்தான்?
10, 11. (எ) எரேமியா வெளிப்படையாக கண்டனம் செய்திருந்த தேசத்தின் ஆவிக்குரிய நிலைமை எவ்விதமாக இருந்தது? (பி) கிறிஸ்தவ மண்டலத்தின் நிலைமை இதைவிட மேலானதாக இல்லை என்பதை எது காண்பிக்கிறது? (2 தீமோத்தேயு 3:5)
12. யெகோவா அவர்களிடமாக அனுப்பி வைத்த தீர்க்கதரிசிகளுக்கு யூதர்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்?
13. தேசத்தின் மீது கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக இருந்தது என்ன?
14. அவர்களுடைய பொய் வணக்கம் எந்த உச்ச அளவு வரையாகச் சென்றது? (2 நாளாகமம் 33:1-9)
15. ஏரேமியா யூதாவுக்கு என்ன துர்ச் செய்தியைக் கொண்டிருந்தான்?
16. தேசத்தின் சார்பாக எரேமியா மன்றாடுவதில் ஏன் எந்தப் பிரயோஜனமுமில்லை?
17, 18. கடைசியாக யூதாவுக்கு எதிரான கடவுளுடைய நியாயத்தீர்ப்பு எவ்விதமாக நிறைவேற்றப்பட்டது?
19, 20. (எ) முன்னறிவிக்கப்பட்டிருந்த பொல்லாப்பினிடமாக யூதா மற்றும் எரேமியாவின் மனநிலைகள் எவ்விதமாக வித்தியாசப்பட்டிருந்தன? (பி) இருவரின் முடிவும் என்னவாக இருந்தன?
21. மேலுமாக என்ன கேள்விகளில் நாம் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்?
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
எரேமியா யூதர்களின் தலைவர்களுக்கும் ஜனங்களுக்கும் கடவுளின் நியாயத்தீர்ப்புகளை தைரியமாக அறிவித்தான்
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
பெண்கள் “வானராக்கினிக்கு” பணியாரங்களைச் சுட்டார்கள்