நாரை ஓர் “உத்தமப்” பறவை
ஸ்பெய்னிலுள்ள “விழித்தெழு!” நிருபர்
நாரை—வசந்தம், குழந்தைகள் மற்றும் அதிர்ஷ்டத்தின் வரவை முன்னறிவிக்கும் பாரம்பரியப் பறவை—காலாகாலமாக மனிதனின் புராணக் கதைகளிலும் நேசத்திலும் ஒரு விசேஷ இடத்தைப் பெற்றுவந்திருக்கிறது. பறப்பதில் அதன் நயம், மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளில் குடியேறும் தனிவிருப்பம், மற்றும் விவசாயத்திற்கு ஊறுவிளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அதன் பயனுள்ள பாகம் போன்ற இவ்வனைத்துக் காரியங்களும் அதற்கு இந்தப் பிரபல இடத்தை அளித்திருக்கிறது.
ஆனால் அதில் காணப்படும் மிக அருமையான தன்மை ஒருவேளை அதன் உண்மைத்தன்மை—ஒவ்வொரு ஆண்டும் தன் கூட்டிற்குத் திரும்பிவருவதன் மூலம் அது உண்மையாயிருக்கிறது, தன் துணைக்கு உண்மையாயிருக்கிறது, துணையோடு ஓர் ஆயுள் பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. உண்மையில் பார்க்கப்போனால், எபிரெய மொழியில் அதன் பெயருக்குப் பொருள் “உத்தமமுள்ளது” அல்லது “அன்பான தயைப் பொருந்தியது” ஏனென்றால், தன்னுடைய துணையைப் பாசத்துடன் நடத்துவதில் தனிப்பட்டு விளங்கும் ஒரு பிராணி என்று தால்முது விளக்குகிறது.
இந்தப் பிரபல பறவைக்கு நன்றி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், நாரை ஆலந்து தேசத்தில் பாதுகாக்கப்பட்ட பறவை இனமாக இருந்தது; பழக்கப்படுத்தப்பட்ட நாரைகள் ஹேக் நகரின் மீன் அங்காடியைச் சுற்றிச் சிறகடித்துக்கொண்டிருந்ததாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் அது ஜெர்மனியின் தேசிய பறவையாக ஆக்கப்பட்டது. தற்காலத்தில் அநேக ஐரோப்பிய நகரங்களில் இந்த நட்பு மிகுந்த பறவைகள் தங்களுடைய வீட்டுக் கூரையின் மீது கூடு கட்டுவதற்கென இப்பொழுது மேடைகள் கட்டப்படுகின்றன. நாரைகள் வரவேற்கப்படும் அயலகத்தாராவர்!
வருவதும், போவதும்
சில ஐரோப்பிய நாரைகள் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே மேற்கு ஐரோப்பாவில் பனிக்காலத்தைச் செலவழிக்கின்றன, மற்றவை தென் ஆப்பிரிக்கா மட்டும் பயணப்படுகின்றன. தாங்கள் தெற்கே மேற்கொள்ளும் அந்த நீண்ட தூர பயணத்தை ஆகஸ்ட் மாதத்தில் துவங்குகின்றன. அவை பலமாகப் பறந்துசெல்லும் பறவைகளல்ல, எனவே தங்கள் பயணத்தை வித்தியாசமான கட்டங்களில் மேற்கொள்கின்றன. அவை வெவ்வேறு அளவிலான தொகுதிகளாகப் பயணம்செய்வதை விரும்புகின்றன, பெரும்பாலும் தங்களுடைய பயணத்தைத் துவங்குவதற்கு முன்பு குறிப்பிட்ட இடத்திலுள்ள எல்லா நாரைகளுமே ஓரிடத்தில் ஒன்றுசேருகின்றன. வடக்கே திரும்பும் பறவைகளில் இவை சீக்கிரமாகத் திரும்பும் இனமாக இருப்பதால் தங்களுடைய கூடுகளுக்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் திரும்பிவிடுகின்றன.
அவற்றின் அளவு பெரியவையாதலால்—இரண்டு இறக்கைகள் சேர்ந்து ஏறக்குறைய ஆறு அடி அகலமுடையவை—மற்றும் அவை நம்பத்தகுந்த இனமாதலால், இடம்விட்டு இடம் பயணம் செய்யும் நாரைகள் மக்கள் கவனத்தை ஈர்ப்பதாயிருக்கின்றன. திரளான பறவைக் கூட்டங்கள் சரியாக இளவேனிற்காலத்திலும் வசந்தகாலத்திலும் பலஸ்தீனாவைக் கடப்பதுண்டு. ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே, தீர்க்கதரிசியாகிய எரேமியா இந்த உண்மைக்குக் கவனத்தைத் திருப்புகிறவனாய் நாரை பயணம்செய்யவேண்டிய “தன் வேளையை அறியும்” என்று சரியாக விளக்கினான்.—எரேமியா 8:7.
அவை ஒவ்வொரு ஆண்டும் பயணம் செய்யும் தூரம்—சில நாரைகள் ஒரு சுற்றுக்கு பத்தாயிரத்துக்கும் அதிகமான மைல்கள்—குறிப்பிடத்தக்கது, அவை பெரும்பகுதிப் பயணத்தில் மிதவலாகச் செல்வதை நோக்குமிடத்து அது அவ்விதமாக இருக்கிறது. உருவில் பெரிய மாம்சப்பட்சினிப் பறவைகளைப்போல உயரச் செல்வதற்கு அவை மேல்நோக்கி எழும் வெப்பக்காற்றோட்டத்தைச் சார்ந்திருக்கின்றன; அதற்குப் பின்பு அவை வெகு தூரத்திற்கு முயற்சியின்றி மிதவலாகப் பயணம்செய்ய தங்களுடைய அகன்ற இறக்கைகளைப் பயன்படுத்துகின்றன. எப்போதாவது மாத்திரமே இறக்கைகளை அடித்துக்கொள்கின்றன.
நாரையின் இடம்பெயர்ந்து செல்லும் தன்மையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் அவை மத்தியதரைக்கடற் பகுதியைக் கடப்பதாகும். அவை மேல்காற்று இல்லாத தண்ணீர்களுக்கு மேல் பறந்துசெல்வதை விரும்புவதில்லை. இப்படியாக ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் ஆயிரக்கணக்கான நாரைகள் தண்ணீர்களுக்கு மேல் மிகக் குறுகிய தூரத்தையுடைய இரு முனைகளை (ஜிப்ரால்டர் மற்றும் போஸ்பரஸ் கடற்கால்) கடந்திட ஓரிடத்தில் ஒன்றாகக் கூடிவருகின்றன. ஆச்சரியமென்னவென்றால், ஸ்பய்னையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் ஒன்பது மைல் தண்ணீர்ப் பகுதியைக் கடப்பது ஐந்து மணிநேரத்தையே எடுத்தாலும் சஹாரா பாலைவனப் பிரதேசத்தைக் கடக்கும் நீண்ட பயணத்தைவிட அதிகக் களைப்பை ஏற்படுத்துவதாயுமிருக்கின்றன.
அசாதாரணமான கூடு
நாரைகள் தங்களுடைய கூடுகளை மேன்மையான இடங்களில், உதாரணமாக உயர்ந்த ஒரு மரத்தின் உச்சியில் கட்டுகின்றன; என்றபோதிலும் சிலசமயங்களில் நவீன காலத்தில் அவற்றிற்கு ஈடான மின்சாரக் கம்பங்களிலும் கட்டுவதுண்டு. பைபிள் காலங்களில், அவை அநேக சமயங்களில் தங்களுடைய “வீட்டை” தேவதாரு விருட்சங்களில் கட்டின.—சங்கீதம் 104:17.
ஆனால் அவை நூற்றாண்டுகளாக ஐரோப்பா முழுவதும் வீட்டுக் கூரைகளிலும், சர்ச்சுகளிலும், புகைக்கூண்டுகளிலும் தங்கள் கூடுகளை விரும்பத்தக்க இடமாகக் கண்டு கட்டிவந்தன. ஆண் பறவையும் பெண் பறவையும் சேர்ந்து பொறுமையோடே கூடுகளைக் கட்டுகின்றன. அவை அசாதாரணமான அமைப்பைக்கொண்டவை, எந்த நேரமும் விழுந்துவிடக்கூடியதாகக் காணப்படும். ஆனால் தோற்றம் வஞ்சிப்பவை, ஏனென்றால் அந்தப் பெரிய கூடுகள் கடுமையான புயலின்போதுகூட கழன்று கீழே விழுந்துவிடுவது அரிது. அந்தக் கூடுகளைக் கட்டிய நாரைகள் ஒவ்வொரு ஆண்டும் திரும்பிவரும்போது தங்களுடைய கூட்டைப் பழுதுபார்ப்பதற்கு ஒரு வாரம் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன அல்லது குறைந்தளவே பழுதுபார்க்கின்ற அளவுக்கு அவை நிலைந்திருக்கக்கூடிவை.
இந்தப் பழுதுபார்க்கும் வேலையைப் பொதுவாக அந்த இரண்டு நாரைகளும் தங்கள் குளிர்கால வீட்டிலிருந்து திரும்பிவந்தவுடன் ஒன்றுசேர்ந்து செய்கின்றன. கடைசியில், இந்தப் பழுதுபார்க்கும் வேலைதானே கூட்டிற்குச் சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது—அதனுடைய சொந்த எடையாலேயே மடிந்துவிடுகிறது. அந்தச் சமயத்திற்குள் அந்தக் கூட்டின் உயரம் ஏழு அடியாகவும் விட்டத்தில் மூன்று அல்லது அதற்கும் அதிகமான அடிகளைக் கொண்டதாகவும் இருக்கக்கூடும்.
ஒவ்வொரு வசந்த காலத்திலும் தங்களுடைய பெற்றோர் திரும்பிவருவதுபோன்று அவற்றின் பிள்ளைகளும் கூடியமட்டும் தாங்கள் பிறந்த இடத்திற்கு மிக அண்மையிலேயே தங்கள் கூடுகளுக்கான இடத்தைத் தெரிந்துகொள்கின்றன. இப்படியாக, சில பழைய கட்டிடங்கள் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பெரிய கூடுகளுக்கு இடமளிக்கின்றன, இவையனைத்துமே முதல் ஜோடியின் சந்ததியினரின் குடியிருப்பாகின்றன.
நாரையின் தற்போதைய நிலை
அநேக ஐரோப்பிய நகரங்களில் நாரைகள் வரவேற்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் எதிர்காலம் இருண்டு காணப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தில் ஏறக்குறைய 500 கூடுகள் இருந்தன, ஆனால் இப்பொழுது விரல்விட்டு எண்ணக்கூடியளவில்தான் இருக்கின்றன. சுவீடன், ஹாலந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனியிலிருந்தும் இப்படிப்பட்ட அறிக்கைதான் கொடுக்கப்படுகிறது, இவ்விடங்களிலும் இவற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்குமளவுக்கு குறைந்துகொண்டுவருகின்றன. ஸ்பய்னில் இப்பறவைகள் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறபோதிலும், அவை குடிகொள்ளும் கூடுகளின் எண்ணிக்கையோ கடந்த பத்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிட்டன. ஐரோப்பா முழுவதுமே அவற்றின் தொக 10,000 முதல் 20,000 ஜோடிகள் எனக் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மனிதனின் மிக விருப்பத்திற்குரிய பறவைகளில் ஒன்றாகிய இந்நாரைகளுக்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன?
தெளிவாகவே, அநேக அம்சங்கள் உட்பட்டிருக்கின்றன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை சுற்றுப்புறச்சூழலை மனிதன் அழித்துவருவதுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவிலுள்ள அவற்றின் குளிர்கால தஞ்சங்களில் நாரைகள் உணவுக்காக வேட்டையாடப்படுகின்றன: இது இயற்கையின் சமநிலைக்கு ஏற்படுத்தும் ஒரு பேரழிவாகும், ஏனென்றால் ஆப்பிரிக்காவின் முக்கிய தாவரங்களுக்குக் கேடு விளைவிக்கும் வெட்டுக்கிளித் திரளை ஏராளமாகப் புசிப்பதில் தங்கள் குளிர்காலத்தை இவை செலவழிக்கின்றன. இதற்கிடையில், ஐரோப்பாவில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டுவரும் பூச்சிக்கொல்லிகளால் முட்டைகள் முதிரடைவதில்லை, அதே சமயத்தில் உணவருந்தும் நிலப்பரப்புகள் இழக்கப்படுவதும் ஆண்டுதோறும் வளர்க்கப்படும் நாரைக் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைவதில் விளைவடைகின்றன. மேலும் மின்சாரக் கம்பிகள் பெரிய பறவைகள் பல உயிரிழப்பதற்குக் காரணமாக இருக்கின்றன, மற்றும் பலவற்றின் மரணத்திற்கு பறவை வேட்டையில் மகிழ்ச்சிகாணும் வேட்டைக்காரர்கள் காரணமாக இருக்கின்றனர்.
வனவிலங்குகளைப் பாதுகாக்கும் துறையினர் நாரைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்கின்றனர், ஆனால் வெற்றிகரமான ஒரு திட்டம் என்பது அநேக தேசங்களின் ஒத்துழைப்பில் சார்ந்திருக்கிறது, இதைச் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல. நாரையின் கம்பீரமான இறக்கைகள் நம் வானிலிருந்து மறைந்துபோகாததும், இந்த உத்தமப் பறவையால் வசந்தம் இடைவிடாது முன்னறிவிக்கப்படக்கூடியதுமான ஒரு காலம் இருக்கிறது என்று கடவுளுடைய படைப்பில் பிரியம்கொள்ளும் மக்கள் நம்புகின்றனர். (g90 1/8)
[பக்கம் 14-ன் பெட்டி]
நாரைகளும் குழந்தைகளும்
குழந்தைகள் நாரைகளால் கொண்டுவரப்படுகின்றன என்று பிள்ளைகளிடம் பல நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டுவந்தது, மற்றும் ஒரு குழந்தை பிறப்பின் சமயங்களில் அனுப்பப்படும் வாழ்த்து மடல்களில் நாரைகளின் படங்கள் இன்றும் காணப்படுகின்றன. இந்தக் கதை எங்கே ஆரம்பமானது?
தெளிவாகவே, இந்தக் கருத்து இரண்டு புராணக் கதைகளைச் சார்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு, நாரைகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரே சமயத்தில் காணப்பட்ட அதிசயத்தை மக்கள் கவனித்தனர். குளிர்க்காலத்தில் அவை எகிப்துக்குச் சென்று, ஆண்களாக மாறின என்றும், வசந்தக்காலத்தில் மீண்டும் பறவைகளாக மாறின என்றும் சிலர் நம்பினர் (மனிதரின் குடியிருப்புகளுடன் அவை கொண்டிருந்த நெருங்கிய தொடர்பை இது விளக்குவதாயிருந்தது).
நாரைகள் ஒரு நாளின் பெரும்பகுதியைக் களிப்பான இடங்களில் உணவருந்துவதில் செலவழிப்பது கவனிக்கப்பட்டது, அப்படிப்பட்ட இடங்கள் பிறந்த குழந்தைகளுடைய ஆத்துமாக்களின் உறைவிடங்களாகக் கூறப்பட்டன. நாரைகள் அதிக அக்கறையுடைய பெற்றோராயிருக்கும் பறவைகளாதலால் குழந்தைகள் நாரைகளால் கொண்டுவரப்பட்டன என்று மக்கள் உண்மையையும் கட்டுக்கதையையும் இணைத்திட மக்களுக்கு அளவுகடந்த கற்பனை தேவைப்படவில்லை.