உங்கள் எதிர்காலம்—அது நட்சத்திரங்களில் எழுதப்பட்டிருக்கிறதா?
பூர்வ பாபிலோன் நகரில் அது ஒரு அக்டோபர் மாத காலைப் பொழுதாக இருக்கிறது. உயரமான ஒரு பாபிலோனிய கோயில் உச்சியிலிருந்து ஒரு பூசாரி கீழ் வானத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அடையாளத்தைப் பார்க்கிறார்! பொழுது புலரும் சமயத்தில் விருச்சிக நட்சத்திரக்கூட்டம் கீழாக மெதுவாக மறைவதற்கு முன்பாக கொஞ்ச நேரம் மேலெழுந்து தோன்றுகிறது.
மூடநம்பிக்கைகளுள்ள பாபிலோனியர்களுக்கு, இது விசேஷ அர்த்தமுள்ளதாக இருந்தது. அவர்களுடைய வானோக்கிகள் ஒருசில நட்சத்திரக் கூட்டங்களின் நட்சத்திரங்கள், தோற்றத்தில் பெரிய சுருண்ட வாலையுடைய தேளைப் போன்றிருப்பதை வெகு காலமாகவே கவனித்து வந்திருந்தார்கள். ஆகவே இது விருச்சிகம் என்பதாக பெயரிடப்பட்டது. இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு உண்மையில் தேளின் குணங்கள் இருக்க வேண்டும் என்பதாக அவர்கள் கற்பனைச் செய்து கொண்டார்கள். தேள் இரவில் நடமாடும் ஜந்துவாக இருப்பதன் காரணமாக, விருச்சிகம், இருளுக்கு பொருத்தமான சின்னமாக கருதப்பட்டது. ஒவ்வொரு அக்டோபரிலும் பொழுது புலரும் நேரத்தில் அதன் தோற்றம், குளிர் காலத்தின் வருகைக்கு அறிகுறியாக இருந்தது.
சோதிடத்தைப் பற்றிய உண்மை என்ற தம்முடைய புத்தகத்தில் டாக்டர் மைக்கல் காக்குலின் இவ்விதமாக விளக்குகிறார்: “பூமியில் நடமாடும் தேளை அவர்கள் வானத்தில் இருப்பதாக கற்பனைச் செய்து, இது, முறையே, அந்த நட்சத்திரக் கூட்டத்தின் கீழ் பிறப்பவர்கள் மீது செல்வாக்கைச் செலுத்துவதாக கருதினார்கள். சோதிடத்தில் இது போன்ற புரட்டுகள் இன்னும் தொடர்ந்து இருந்து வருகிறது. பிறப்பின் சமயத்தில் சூரியன் விருச்சகத்தினுள் செல்லுமேயானால் ஒரு தேளின் குணங்களில்—ஆபத்தான வலியச் சென்று தாக்கும் இயல்புள்ள, பயங்கரமான கொட்டும் ஒரு துணிவுள்ள பூச்சியின் (சிலந்தி பேரினம்) குணங்களில் சிலவற்றை அது புதிதாக பிறந்த குழுந்தைக்கு அருளுகிறது.”
அது விஞ்ஞான பூர்வமாக இருக்கிறதா?
சூரியன் இனிமேலும் அக்டோபர் மாத விருச்சகத்தோடு தோன்றுவதில்லை. நூற்றாண்டுகளினூடாக, நட்சத்திரக் கூட்டங்களோடு பூமியின் தொடர்பு மாறிவிட்டிருக்கிறது. இப்பொழுது அக்டோபர் மாதம் சூரியன் துலாமின் நட்சத்திரக் கூட்டங்களுக்கு அருகே செல்லுகிறது. இது அழகு அமைதி போன்ற குணங்களை அருளுவதாகச் சொல்லப்படுகிறது. விருச்சகத்திலிருந்து எத்தனை வித்தியாசமாக இது இருக்கிறது!
அண்மைக் கால இந்த வின்ணுலக மாற்றங்களைக் கிழக்கத்திய சோதிடர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கும்போது, மேற்கேயுள்ள அவர்களுடைய கூட்டாளிகள் இதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே அவர்களுடைய முன்னறிவிப்புகள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வானுல கால அட்டவணையின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் H.J. ஐஸ்நெக்கும் D.K.B. நையார்ஸும் இதைக் குறித்து, “குறிப்பிட்ட ஏதோ ஒரு விளக்கத்தில் மேற்கத்திய சோதிடர்கள் சொல்வது சரியாக இருந்தால், அதில் கிழக்கத்திய சோதிடர்கள் தவறாக இருக்க வேண்டும், அல்லது இது தலைகீழாக இருக்க வேண்டும். என்றபோதிலும் இரு சாராருமே இதில் வெகுவாக வெற்றியடைந்திருப்பதாக உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள்” என்று சொல்லுகிறார்கள்.
சோதிடத்தின் நம்பத்தக்க தன்மையை இது மாத்திரமே கேள்விக்குரியாக்கிவிடுகிறது. அதோடுகூட, மனநோய் வல்லுநர் ஒருவர் 3456 தம்பதிகளின் விவாக மற்றும் விவாக ரத்து பதிவுகளை ஆராய்ந்தார். அவர்களுடைய நட்சத்திர பொருத்தம் அவர்களுடைய விவாகத்தின் வெற்றியை அல்லது தோல்வியை எந்த வகையிலும் பாதிப்பதாக இருந்ததா? விஞ்ஞானம் 84 பத்திரிகையின்படி, “பொருத்தமில்லாத நட்சத்திரங்களுள்ளவர்கள், பொருத்தமுள்ள நட்சத்திரங்களுள்ளவர்களைப் போலவே, விவாகம் செய்து, விவாகரத்து செய்து கொண்டவர்களாக இருந்தனர்.”
சூரியனின் அடையாளம், அது மட்டுமே அதிக முக்கியமானதில்லை என்றும் அதைக் கிரகங்களுடைய செல்வாக்கோடு சேர்த்தே ஆராய வேண்டும் என்றும் சொல்லி சோதிடர்கள் இதை மறுக்கிறார்கள். ஆனால் இதுவுங்கூட பிரச்னைகளை உருவாக்குகிறது. ஏனென்றால் பாபிலோனியர்கள் ஐந்து வான்கோள் கடவுட்களை—புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, மற்றும் சனி கோள்களை—மட்டுமே நம்பினார்கள். தொலை நோக்காடி, இன்னும் மூன்று கிரகங்கள்—யூரேனஸ், நெப்டியூன் மற்றும் பூளுட்டோ இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. இது சோதிடர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கிறது. சில சோதிடர்கள், தங்கள் மூதாதையர்கள் தவறாக முன்னுரைத்திருந்தவைகளுக்கு இதை ஒரு காரணமாக காண்பித்தார்கள். ஆனால் மற்றவர்களோ . . . இந்தப் புதிய கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியாததால், இவை மனிதர்களைப் பாதிக்க முடியாது என்பதாக வாதாடுகிறார்கள்,” என்பதாக சோதிடம் என்ற தன்னுடைய புத்தகத்தில் லூயிஸ் மக்நேர் எழுதுகிறார். ஆகவே பெரும்பாலான கிழக்கத்திய சோதிடர்கள் தூரத்திலுள்ள கிரகங்களைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். மேற்கத்திய சோதிடர்கள் அதற்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள்.
ஜாதகம் கணிப்பதற்குத் தெரிந்து கொள்ளும் நேரமுங்கூட கேள்விகளை எழுப்புகின்றன. பெரும்பாலான சோதிடர்கள் பிறக்கும் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் பிறப்பு மூல விதிபடி, பரம்பரைக் குணங்கள், பிறப்பின் சமயத்தில் அல்ல, ஆனால் கருதரிக்கும்போது தானே குழந்தைக்குக் கடத்தப்படுகிறது. சோதிடம்—விஞ்ஞானமா, மூடநம்பிக்கையா என்ற புத்தகத்தின்படி, பூர்வ சோதிடர் டாலமி “கருதரித்த சமயத்தில் இருந்த அதே நட்சத்திரக் கூட்டம்தானே பிறப்பின் சமயத்திலும் இருக்கும் என்பதாகச் சொல்லி, இவ்விதமாக ஊகிப்பதற்கு எந்தக் காரணமுமில்லாதபோதிலும், நேர்த்தியாக தப்பித்துக்கொள்கிறார்.”
விஞ்ஞானிகள் எதிர்தாக்குதல் செய்கிறார்கள்
சோதிடத்தை அதிகமதிகம் பேர் ஏற்றுக்கொள்வது அநேக விஞ்ஞானிகளுக்குக் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1975-ல் நோபல் பரிசு பெற்ற 19 பேரும் மற்ற விஞ்ஞானிகளோடு சேர்ந்து, “சோதிடத்துக்கு எதிர் அறிக்கை—192 பிரபல விஞ்ஞானிகளின் கூற்று” என்ற தலைப்பில் பொது விளம்பர அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அது பின்வருமாறு வாசித்தது:
“பூர்வ காலங்களில் மக்கள் . . . விண்ணுலகிலுள்ள பொருட்களைக் கடவுட்களின் உறைவிடம் அல்லது முன்னறிகுறிகளெனக் கருதி, அவைகளுக்கும் பூமியின் மீது நடைபெறும் சம்பவங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாக இணைத்துப் பேசினார்கள். பூமியிலிருந்துக் கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்குமிடையேயுள்ள மிக அதிகமான தூரத்தைக் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது இந்தத் தூரங்களை மதிப்பிட முடிந்து, அவைகளை நாம் செய்திருப்பதன் காரணமாக, தூரத்திலுள்ள கிரகங்களின் மற்றும் தொலைத்தூரத்திலுள்ள நட்சத்திரங்களின் புவியீர்ப்பு இன்னும் மற்ற பாதிப்புகள் எவ்வளவு மிகச் சிறிதாக இருக்கிறது என்பதை நம்மால் காணமுடிகிறது. பிறப்பின் சமயத்தில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சக்திகள், எந்த வகையிலும் நம்முடைய எதிர்காலங்களை உருப்படுத்தக்கூடும் என்று நினைப்பது பெரிய தவறாகும்.”
சோதிடம் தவறு என்பதை விளக்க பூர்வ ஜனங்களின் ஒரு தொகுதிக்கு நவீன விஞ்ஞானம் தேவையாக இருக்கவில்லை என்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. 2500 வருடங்களுக்கு முன்பாக யெகோவா தேவன் இஸ்ரவேல் ஜனத்தாரிடம் பின்வருமாறு சொன்னார்: “புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே. நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்; ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது [மூடநம்பிக்கையாயிருக்கிறது, Byington]” (எரேமியா 10:2, 3) அல்லது புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் சொல்லுகிற விதமாகவே: “வானத்தின் அடையாளங்கள் . . . வெறும் மூச்சாகவே இருக்கிறது.” வேறு வார்த்தைகளில் சொன்னால், சோதிட சின்னங்களுக்கு, உங்களுடைய நுரையீரலிலிருந்து நீங்கள் வெளியே விடும் மூச்சுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம்தானே இருக்கிறது.
ஆனால் சோதிடம் விஞ்ஞான பூர்வமற்றதாக இருந்தால் என்ன? அது தீங்கற்ற ஒரு விளையாட்டாக கருதப்படக்கூடாதா? என்பதாக சிலர் இதற்கு மறுப்புத் தெரிவிக்கலாம். (g86 5/8)
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“பிறப்பின் சமயத்தில் சூரியன் விருச்சிகத்தை நெருங்கிச் செல்லும்போது, தேளின் சில தனிச் சிறப்புப் பண்புகளை—ஆபத்தான, வலியதாக்கும் இயல்புள்ள மற்றும் பயங்கரமான கொட்டும் துணிவுள்ள ஒரு பூச்சின் பண்புகளைப்—புதிதாக பிறந்த குழந்தைக்கு அருளுகிறது என்பதாக நவீன பாட புத்தகங்கள் குறிப்பிடுகின்றன.”
[பக்கம் 5-ன் பெட்டி]
நட்சத்திரங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன?
நட்சத்திரங்கள் மனிதர்களின் வாழ்க்கையில், சக்தியுள்ள செல்வாக்கைச் செலுத்துவதற்கு அவை பூமிக்கு அருகாமையில், ஒரு சில மைல்கள் தொலைவில் இருக்க வேண்டும் என்பதாக பூர்வகால வானோக்கிகள் நினைத்தார்கள். ஆனால் தொலைநோக்காடி கண்டு பிடிக்கப்பட்டபோது அது ஒருபோதும் அவ்விதமாக இருக்க முடியாது என்பது தெளிவானது. ஏனென்றால், மிகவும் ஆற்றல்மிக்க ஒரு தொலை நோக்காடியினூடே பார்த்தபோதிலுங்கூட நட்சத்திரங்கள் ஊசிமுனை அளவே இருந்தன.
1830-ல் ஜெர்மன் தேசத்தைச் சேர்ந்த வான்கணிப்பாளர் ப்ரெட்ரிக் பெஸல், இந்த நட்சத்திரங்களில் சில எவ்வளவு தொலைவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழியை வகுத்தார். எளிய திரிகோண விதியைப் பயன்படுத்தி ‘61 சிக்னி’ என்றழைக்கப்பட்ட நட்சத்திரம் பத்து ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது என்பதை அவர் கண்டுபிடித்தார். (ஒளி ஒரு நொடிக்கு 1,86,000 மைல்கள் [3,00,000 கி.மீ.] வேகத்தில் பிரயாணம் செய்கிறது.) என்றபோதிலும் ‘61 சிக்னி’ அருகாமையிலுள்ள நட்சத்திரங்களில் ஒன்றே ஆகும்!
ஆகவே ஒன்றுக்கொன்று அருகாமையில் இருப்பதாக தோன்றினாலும் ஒரு நட்சத்திரக் கூட்டத்திலுள்ள நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று நூற்றுக்கணக்கான ஒளி வருடங்கள் தொலைவில் இருக்கலாம்! “தற்செயலாகத்தானே நம்முடைய பூமியிலிருந்துப் பார்க்கையில் அவை ஒன்றாகச் சேர்ந்திருப்பதுபோல தெரிகிறது” என்பதாக சோதிடம்—விஞ்ஞானமா மூடநம்பிக்கையா என்ற புத்தகம் சொல்லுகிறது. ஆகவே விருச்சிகம் போன்ற ஒரு நட்சத்திரக்கூட்டம் உங்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும் என்று நம்புவதுப் பகுத்தறிவுக்கு நியாயமாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?
[பக்கம் 4-ன் படம்]
பிரான்ஸிலுள்ள தேசீய அருங்காட்சியகத்தில், விருச்சிக நட்சத்திரக் கூட்டத்தைச் சித்தரிக்கும் பாபிலோனிய சிலை