அதிகாரம் 3
“கடவுள் எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார்”
முக்கியக் குறிப்பு: எசேக்கியேல் பார்த்த பரலோக ரதத்தைப் பற்றிய தரிசனத்தின் ஒரு கண்ணோட்டம்
1-3. (அ) தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்ததையும் கேட்டதையும் விவரியுங்கள். (ஆரம்பப் படம்.) (ஆ) அந்தத் தரிசனத்தைப் பார்க்க எது அவருக்கு உதவியது? அந்தத் தரிசனம் அவரை என்ன செய்ய வைத்தது?
பரந்து விரிந்த ஒரு மணல்வெளியில் எசேக்கியேல் நின்றுகொண்டிருக்கிறார். தூரத்தில், ஏதோ ஒன்று தெரிகிறது. கண்களைச் சுருக்கி உற்றுப் பார்க்கிறார். அதைப் பார்க்கப் பார்க்க, ஆச்சரியத்தில் அவருடைய கண்கள் அகல விரிகின்றன. அங்கே அடிவானத்தில் ஒரு பயங்கர சூறாவளி உருவாகிக்கொண்டிருக்கிறது. அது வடக்கிலிருந்து சுழன்று வந்து அவர்மேல் மோதுகிறது. அப்போது ஒரு பெரிய மேகம் திரண்டு வருகிறது. அந்த மேகத்துக்குள் பளீர் பளீரென்று மின்னல்கள் வெட்டுகின்றன. உருக்கப்பட்ட தங்கத்தையும் வெள்ளியையும் போல அது தகதகக்கிறது. எசேக்கியேலை நோக்கி அது வேக வேகமாக உருண்டு வருகிறது. அது நெருங்க நெருங்க, ஒரு சத்தமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. கடந்துபோகும் ஒரு பெரிய படையின் முழக்கம்போல் அது இருக்கிறது.—எசே. 1:4, 24.
2 இதுபோன்ற நெஞ்சைவிட்டு நீங்காத பல தரிசனங்கள் எசேக்கியேலுக்குக் கிடைக்கின்றன. சுமார் 30 வயதில் இந்த முதல் தரிசனத்தை அவர் பார்க்கிறார். அப்போது ‘யெகோவாவின் சக்தியால் நிரப்பப்பட்டதை’ அவர் உணருகிறார். ஈடிணையில்லாத அந்த சக்தியின் உதவியால், அவர் பார்க்கப்போகிற காட்சிகளும், கேட்கப்போகிற சத்தங்களும் அவரைப் பிரமிப்பில் ஆழ்த்தும். சொல்லப்போனால், இன்றைய படத்தயாரிப்பாளர்கள் உருவாக்குகிற எந்தவொரு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (special-effects) திரைப்படமும் அவற்றுக்கு முன்னால் நிற்கக்கூட முடியாது. அந்தத் தரிசனத்தைப் பார்த்து எசேக்கியேல் மலைத்துப்போய், சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்தே விடுகிறார்.—எசே. 1:3, 28.
3 எசேக்கியேலை வியக்க வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே யெகோவா அதை அவருக்குக் காட்டவில்லை. எசேக்கியேலும், இன்றுள்ள யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், அந்த முதல் தரிசனத்திலும், எசேக்கியேல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிற மற்ற சிலிர்ப்பூட்டும் தரிசனங்களிலும் இருக்கின்றன. அதனால், எசேக்கியேல் பார்ப்பதையும் கேட்பதையும் நாம் இப்போது உன்னிப்பாகக் கவனிக்கலாம்.
தரிசனத்தின் சூழமைவு
4, 5. எசேக்கியேல் பார்த்த தரிசனத்தின் சூழமைவு என்ன?
4 எசேக்கியேல் 1:1-3-ஐ வாசியுங்கள். முதலில் இந்தத் தரிசனத்தின் சூழமைவைப் பார்க்கலாம். கி.மு. 613-ஆம் வருஷத்தில் அவருக்கு அந்தத் தரிசனம் கிடைத்தது. போன அதிகாரத்தில் பார்த்தபடி, எசேக்கியேல் அப்போது பாபிலோனில் இருந்தார். தன்னோடு சிறைபிடித்துக் கொண்டுவரப்பட்ட மக்களோடுகூட கேபார் ஆற்றுக்குப் பக்கத்தில் வாழ்ந்தார். இந்த ஆறு, போக்குவரத்துக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட கால்வாயாக இருந்திருக்கலாம். யூப்ரடிஸ் ஆற்றிலிருந்து இது பிரிந்து ஓடி, பின்பு வேறொரு இடத்தில் மறுபடியும் இணைந்தது.
5 சிறைபிடிக்கப்பட்ட மக்களின் சொந்த ஊரான எருசலேம், பாபிலோனிலிருந்து சுமார் 800 கி.மீ. தூரத்தில் இருந்தது.a எருசலேம் ஆலயத்தில் எசேக்கியேலின் அப்பா ஒரு குருவாக சேவை செய்திருந்தார். ஆனால் அந்த ஆலயம் இப்போது பொய் வணக்கத்தாலும் சிலை வழிபாட்டாலும் கறைபட்டுவிட்டது. தாவீதும் சாலொமோனும் ஆட்சி செய்த காலத்தில் சீரும்சிறப்புமாக இருந்த எருசலேம் நகரம், இப்போது சீரழிந்துவிட்டது. உண்மையில்லாமல் நடந்துகொண்ட யோயாக்கீன் ராஜா, சிறைபிடிக்கப்பட்ட மக்களில் ஒருவராக பாபிலோனில் இருந்தார். அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட சிதேக்கியா ராஜா ரொம்ப மோசமானவராக இருந்தார். பாபிலோன் ராஜாவால் ஆட்டிவைக்கப்பட்ட பொம்மையைப் போலத்தான் அவர் இருந்தார்.—2 ரா. 24:8-12, 17, 19.
6, 7. எசேக்கியேல் ஏன் ரொம்ப வேதனைப்பட்டிருப்பார்?
6 சிறைபிடிக்கப்பட்டு அவரோடிருந்த மக்கள், இந்தச் சம்பவங்களை எல்லாம் நினைத்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களுடைய விசுவாசத்தை இழந்துகொண்டிருந்தார்கள். விசுவாசமுள்ள எசேக்கியேல் இதைப் பார்த்து ரொம்ப வேதனைப்பட்டிருப்பார். அந்த மக்களில் சிலர், ‘யெகோவா நம்மை ஒரேயடியாக கைவிட்டுவிட்டாரா? எக்கச்சக்கமான பொய்க் கடவுள்களை வணங்குகிற இந்தப் பொல்லாத பாபிலோன் சாம்ராஜ்யம், தூய வணக்கத்தையும் யெகோவாவின் ஆட்சியையும் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழித்துவிடுமா?’ என்றெல்லாம் யோசித்திருக்கலாம்.
7 இதை மனதில் வைத்து உங்களுடைய தனிப்பட்ட படிப்பில், எசேக்கியேல் பார்த்த முதல் தரிசனத்திலுள்ள தத்ரூபமான விவரங்களை வாசியுங்கள். (எசே. 1:4-28) அப்படி வாசிக்கும்போது, எசேக்கியேலின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அவர் பார்த்தவற்றைப் பார்ப்பது போலவும் அவர் கேட்டவற்றை கேட்பது போலவும் கற்பனை செய்யுங்கள்.
ஒரு அசாதாரண ரதம்
8. தரிசனத்தில் எசேக்கியேல் எதைப் பார்த்தார், அது எதை அடையாளப்படுத்தியது?
8 எசேக்கியேல் எதைப் பார்த்தார்? பிரமிக்க வைக்கும் ஒரு பிரமாண்டமான ரதத்தைப் பார்த்தார். அதற்கு நான்கு மாபெரும் சக்கரங்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றின் பக்கத்திலும் அசாதாரணமான நான்கு ஜீவன்கள் இருந்தன. அந்த ஜீவன்களைக் கேருபீன்கள் என்று எசேக்கியேல் பிற்பாடு சொல்கிறார். (எசே. 10:1) அவற்றுக்கு மேலாக ஒரு தளம் பரந்து விரிந்திருந்தது. அது பனிக்கட்டி போல இருந்தது. அந்தத் தளத்துக்கு மேல் மகிமையால் நிறைந்த கடவுளுடைய சிம்மாசனம் இருந்தது. அதில் யெகோவா உட்கார்ந்திருந்தார். இந்த ரதம் எதை அடையாளப்படுத்துகிறது? இது யெகோவாவின் மகத்தான அமைப்பின் பரலோக பாகத்தை அடையாளப்படுத்துகிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? அதற்கான மூன்று காரணங்களை இப்போது பார்க்கலாம்.
9. யெகோவா தன்னுடைய பரலோக ஜீவன்களின் ஆட்சியாளராக இருக்கிறார் என்பதை அந்த ரதத்தைப் பற்றிய விவரிப்பு எப்படிக் காட்டுகிறது?
9 யெகோவா தன்னுடைய பரலோக ஜீவன்களின் ஆட்சியாளராக இருக்கிறார். இந்தத் தரிசனத்தில், யெகோவாவின் சிம்மாசனம் அந்தக் கேருபீன்களுக்கு மேலாக இருப்பதைக் கவனியுங்கள். பைபிளின் மற்ற இடங்களிலும், அதே போல கேருபீன்களுக்கு மேலாக அல்லது கேருபீன்களின் மத்தியில் யெகோவா உட்கார்ந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (2 ராஜாக்கள் 19:15-ஐ வாசியுங்கள்; யாத். 25:22; சங். 80:1) அவர் நிஜமாகவே கேருபீன்களின் மேல் உட்கார்ந்திருப்பதில்லை. சொல்லப்போனால், சக்தி படைத்த அந்தக் கேருபீன்கள் ஒன்றும் அவரைத் தூக்கிக்கொண்டு போகவேண்டிய அவசியமில்லை! ஒரு நிஜ ரதத்தில் அவர் சவாரி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை! தன்னுடைய பேரரசாட்சிக்கு ஆதரவு தருகிற அந்தக் கேருபீன்களை பிரபஞ்சத்திலுள்ள எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் அனுப்பி யெகோவாவினால் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற முடியும். யெகோவாவின் பரிசுத்தமான எல்லா தேவதூதர்களையும் போல அவருடைய ஊழியர்களான இவர்களும் அவருடைய தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். (சங். 104:4) இந்த அர்த்தத்தில்தான் யெகோவா அந்தக் கேருபீன்கள்மீது “சவாரி செய்கிறார்.” அவர்கள் எல்லாருமே ஒன்றுசேர்ந்து ஒரு மாபெரும் ரதத்தைப் போல் இருக்கிறார்கள். அவர்களுடைய உன்னத ஆட்சியாளராக யெகோவா அவர்களை வழிநடத்துகிறார்.
10. அந்த ரதம் நான்கு கேருபீன்களை மட்டுமே அடையாளப்படுத்துவதில்லை என்று ஏன் சொல்லலாம்?
10 அந்த ரதம் கேருபீன்களை மட்டுமே அடையாளப்படுத்துவதில்லை. எசேக்கியேல் அந்தத் தரிசனத்தில் நான்கு கேருபீன்களைப் பார்த்தார். பைபிளில் நான்கு என்ற எண்ணிக்கை பெரும்பாலும் முழுமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அந்த நான்கு கேருபீன்கள், யெகோவாவின் உண்மையுள்ள எல்லா தூதர்களையும் அடையாளப்படுத்துகிறார்கள். தரிசனத்தில் காட்டப்பட்ட அந்தச் சக்கரங்கள் முழுக்க கண்கள் இருப்பதோடு கேருபீன்களுடைய உடலிலும் கண்கள் நிறைந்திருப்பதைக் கவனியுங்கள். இது, வெறுமனே அந்த நான்கு கேருபீன்கள் மட்டுமல்ல, இன்னும் எக்கச்சக்கமான தேவதூதர்கள் அதிக விழிப்போடு இருப்பதைக் காட்டுகிறது. அந்த ரதம் எவ்வளவு பிரமாண்டமானது என்பதை எசேக்கியேலின் விவரிப்பிலிருந்து தெரிந்துகொள்கிறோம். சொல்லப்போனால், பிரமிக்க வைக்கும் அந்தக் கேருபீன்கள்கூட அந்த ரதத்துக்கு முன்னால் சின்ன உருவமாகத் தெரிந்தார்கள். (எசே. 1:18, 22; 10:12) அப்படியென்றால், யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகம் ரொம்ப ரொம்பப் பெரியது என்பதும், அங்கே நான்கு கேருபீன்கள் மட்டுமல்ல எக்கச்சக்கமான தேவதூதர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
11. பரலோகத்தைப் பற்றி என்ன தரிசனத்தை தானியேல் பார்த்தார்? இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
11 பரலோகத்தைப் பற்றி தானியேல் பார்த்த இதேபோன்ற தரிசனம். சிறைபிடிக்கப்பட்ட தானியேல் நீண்ட காலமாக பாபிலோன் நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கும் பரலோகத்தைப் பற்றிய ஒரு தரிசனம் காட்டப்பட்டது. அந்தத் தரிசனத்தில் காட்டப்பட்ட யெகோவாவின் சிம்மாசனத்துக்கும் சக்கரங்கள் இருந்தன. தானியேல் பார்த்த தரிசனம், தேவதூதர்கள் அடங்கிய யெகோவாவின் பரலோகக் குடும்பம் எவ்வளவு பெரியது என்பதைக் காட்டியது. “ஆயிரமாயிரம்” தூதர்கள்... “கோடானுகோடி” தூதர்கள்... யெகோவாவுக்கு முன்னால் நிற்பதை தானியேல் பார்த்தார். அவர்கள் பரலோக நீதிமன்றத்தில், தங்களுக்கென்று நியமிக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்தார்கள். (தானி. 7:9, 10, 13-18) இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள ரதம், மகிமையுள்ள இந்த எல்லா தேவதூதர்களையும் அடையாளப்படுத்துகிறது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.
12. எசேக்கியேல் பார்த்த தரிசனத்தைப் போன்ற பைபிள் பதிவுகளைப் படிப்பது நமக்கு எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்?
12 ‘பார்க்க முடியாத காரியங்களில்’ முழு கவனம் செலுத்துவதுதான் நமக்குப் பாதுகாப்பு என்று யெகோவாவுக்குத் தெரியும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், மனிதர்களான நாம் ‘பார்க்க முடிந்த காரியங்களுக்கே,’ அதாவது அன்றாடத் தேவைகளுக்கே, அதிக கவனம் செலுத்த ஆசைப்படுகிறோம். ஆனால், அவை தற்காலிகமானவை. (2 கொரிந்தியர் 4:18-ஐ வாசியுங்கள்.) சாத்தான் பெரும்பாலும் அப்படிப்பட்ட ஆசையைத் தூண்டிவிடுவதன் மூலம் நம்மை உலகச் சிந்தையுள்ள ஆட்களாக ஆக்கப் பார்க்கிறான். அப்படிப்பட்ட ஆசையை எதிர்த்துப் போராடுவதற்காகத்தான், எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தில் இருக்கிற இதுபோன்ற பதிவுகளை யெகோவா அன்போடு நமக்குக் கொடுத்திருக்கிறார். யெகோவாவுடைய பரலோகக் குடும்பம் எந்தளவு பிரமாண்டமானது என்பதை இவை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.
“சக்கரங்களே!”
13, 14. (அ) தரிசனத்தில் பார்த்த சக்கரங்களை எசேக்கியேல் எப்படி விவரித்தார்? (ஆ) யெகோவாவின் ரதத்துக்குச் சக்கரங்கள் இருப்பது ஏன் பொருத்தமானது?
13 எசேக்கியேல் முதலில், அந்த நான்கு கேருபீன்களைப் பற்றிச் சொல்கிறார். அந்தக் கேருபீன்களும் அவர்களுடைய பிரமிப்பூட்டும் தோற்றமும் யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன கற்றுத்தருகின்றன என்று 4-ஆம் அதிகாரத்தில் பார்ப்போம். ஒவ்வொரு கேருபீனுக்குப் பக்கத்திலும் ஒவ்வொரு சக்கரம் இருந்ததை எசேக்கியேல் பார்த்தார். அவை ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் சதுரத்தின் நான்கு முனைகளில் நிற்பதுபோல் தெரிகிறது. (எசேக்கியேல் 1:16-18-ஐ வாசியுங்கள்.) அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல்லால் (மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் கண்ணாடி போன்ற விலைமதிப்புள்ள கல்) ஆன சக்கரங்கள் போல தெரிந்தன. அதனால், அந்தச் சக்கரங்கள் அழகாக ஜொலித்தன.
14 எசேக்கியேலின் தரிசனம், அந்தச் சக்கரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. சக்கரங்கள் உள்ள சிம்மாசனத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம், இல்லையா? பொதுவாக சிம்மாசனம், ஒரு இடத்தில் நிலையாக இருக்கும். அந்தச் சிம்மாசனத்திலிருந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ஆட்சி செய்ய முடியும். ஆனால், யெகோவாவின் பேரரசாட்சி அப்படிப்பட்டது கிடையாது. அவருடைய ஆட்சிக்கு எல்லையே இல்லை. (நெ. 9:6) இதை எசேக்கியேல் பிற்பாடு புரிந்துகொண்டார். பேரரசரான யெகோவாவினால் எங்கு வேண்டுமானாலும் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்த முடியும்.
15. சக்கரங்களைப் பற்றி எசேக்கியேல் என்ன சொன்னார்?
15 அந்தப் பிரமாண்டமான சக்கரங்களைப் பார்த்து எசேக்கியேல் மலைத்துப்போனார். அதனால்தான், “அந்தச் சக்கரங்களின் உயரத்தைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது” என்று எழுதினார். வானத்தைத் தொடுமளவுக்குப் பெரிதாக இருந்த ஜொலிக்கும் சக்கரங்களை எசேக்கியேல் அண்ணாந்து பார்ப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அந்த நான்கு சக்கரங்களின் “வட்டத்தைச் சுற்றிலும் கண்கள் இருந்தன” என்ற ஆர்வமூட்டும் தகவலையும் அவர் கொடுத்தார். சக்கரங்களின் அசாதாரண வடிவமைப்புதான் அவரை ரொம்பவே ஆச்சரியப்பட வைத்திருக்கும். “அவை ஒவ்வொன்றும், ஒரு சக்கரத்துக்குள் இன்னொரு சக்கரத்தை வைத்தது போல இருந்தன” என்று அவர் விளக்கினார். அது எப்படி இருந்திருக்கும்?
16, 17. (அ) சக்கரங்களுக்குள் சக்கரம் எப்படிப் பொருத்தப்பட்டிருந்தது? (ஆ) இந்தச் சக்கரங்கள் யெகோவாவின் ரதம் போகும் விதத்தைப் பற்றி என்ன சொல்கின்றன?
16 எசேக்கியேல் பார்த்த சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு சக்கரங்கள் இருந்தன. ஒருவேளை, ஒரு சக்கரத்துக்குள் இன்னொரு சக்கரம் செங்கோணத்தில் வைக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான், “திரும்பாமலேயே நான்கு திசைகளிலும் போக அவற்றால் முடிந்தது” என எசேக்கியேல் சொன்னார். இந்தச் சக்கரங்கள் எசேக்கியேல் பார்த்த பரலோக ரதத்தைப் பற்றி என்ன சொல்கின்றன?
17 அந்தளவு உயரமான சக்கரங்கள் ஒருமுறை சுழன்றாலே, அந்த ரதத்தால் அதிகளவு தூரத்தைக் கடக்க முடியும். சொல்லப்போனால், அந்தத் தரிசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அந்த ரதம் மின்னல் வேகத்தில் போனது. (எசே. 1:14) இப்படி நான்கு திசைகளிலும் போகக்கூடிய அசாதாரணமான சக்கரங்களை உருவாக்குவதை பொறியாளர்களால் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாது. இந்த ரதத்தால் அதன் வேகத்தைக் குறைக்காமலேயே, அதுவும் திரும்பாமலேயே, எந்தத் திசையில் வேண்டுமானாலும் போக முடியும். ஆனால், கண்மூடித்தனமாக அப்படிப் போவதில்லை. சக்கரங்களின் வட்டத்தைச் சுற்றிலும் உள்ள கண்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, எல்லா திசைகளிலும் உள்ள எல்லா விஷயங்களையும் அந்த ரதம் முழுமையாக அறிந்திருப்பதைக் காட்டுகின்றன.
18. சக்கரங்களின் உயரமும் அவற்றிலிருக்கும் ஏராளமான கண்களும் எதைக் காட்டுகின்றன?
18 அப்படியானால், தன்னுடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றி எசேக்கியேலுக்கும், விசுவாசமுள்ள எல்லா மக்களுக்கும் யெகோவா என்ன கற்றுக்கொடுக்க விரும்புகிறார்? இதுவரை கவனித்த விஷயங்களைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள். கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகம் மகிமையுள்ளதாகவும், பிரமிப்பூட்டுவதாகவும் இருப்பதை அந்தச் சக்கரங்களின் பளபளப்பும் அவற்றின் உயரமும் காட்டுகின்றன. கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகத்தால் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்பதை அந்தச் சக்கரங்களைச் சுற்றிலுமுள்ள கண்கள் காட்டுகின்றன. யெகோவாவின் கண்கள் எல்லாவற்றையும் பார்க்கின்றன. (நீதி. 15:3; எரே. 23:24) அதுமட்டுமல்ல, கோடிக்கணக்கில் இருக்கிற தன்னுடைய ஊழியர்களான தூதர்களை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் அவரால் அனுப்ப முடியும். அவர்களால் எல்லா விஷயங்களையும் நுணுக்கமாகத் தெரிந்துகொள்ளவும் அவற்றைப் பற்றி தங்கள் பேரரசரிடம் சொல்லவும் முடியும்.—எபிரெயர் 1:13, 14-ஐ வாசியுங்கள்.
19. யெகோவாவுடைய ரதத்தின் வேகமும் அது போகும் விதமும் அவரைப் பற்றியும் அவருடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றியும் நமக்கு என்ன கற்றுத்தருகின்றன?
19 அதுமட்டுமல்ல, அந்த ரதம் படு பயங்கரமான வேகத்தில் போகும் என்றும், சட்டென எந்தத் திசையில் வேண்டுமானாலும் போகும் என்றும் பார்த்தோம். யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்துக்கும் மனித அரசாங்கங்கள்... நிறுவனங்கள்... அமைப்புகள்... ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த மனித அமைப்புகளுக்கு பிரச்சினைகளைத் தீர்க்க வழி தெரியவில்லை, சூழ்நிலைக்கு ஏற்றபடி அவற்றால் மாற்றங்களையும் செய்ய முடியவில்லை. அதனால், அவை வெற்றி பெறாது. கடைசியில் அவை அழிக்கப்படும். ஆனால் யெகோவா நியாயமானவர்... சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்துகொள்பவர்... என்பதை அவருடைய ரதம் காட்டுகிறது. அந்த ரதம் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. தன்னுடைய பெயரின் அர்த்தத்தின்படி, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரால் எப்படி வேண்டுமானாலும் ஆக முடியும். (யாத். 3:13, 14) உதாரணத்துக்கு, தன்னுடைய மக்களுக்காகப் போராடும் மாவீரராக அவரால் உடனடியாக ஆக முடியும். அதேசமயத்தில், பாவங்களை மன்னிக்கிறவராகவும் அவரால் சட்டென மாற முடியும். அதாவது, பாவம் செய்ததால் ரொம்பவே மனமுடைந்து போனவர்களுக்குக்கூட புத்திசொல்லி, மீண்டும் நல்ல நிலைமைக்கு அவரால் கொண்டுவர முடியும்.—சங். 30:5; ஏசா. 66:13.
20. யெகோவாவின் ரதம் செயல்படுவதைப் பார்ப்பது நம்மை ஏன் பிரமித்துப்போக வைக்கிறது?
20 எசேக்கியேலின் தரிசனத்தைப் பற்றி இதுவரை சிந்தித்த விஷயங்கள், நம் மனதில் இந்தக் கேள்வியை எழுப்பலாம்: ‘யெகோவாவின் ரதம் செயல்படுவதைப் பார்த்து நான் உண்மையிலேயே பிரமித்துப்போகிறேனா?’ இப்போது, இந்த ரதம் படு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். சில பிரச்சினைகள் நம்மைச் சோர்ந்துபோக வைக்கும்போது, யெகோவாவும், அவருடைய மகனும், தேவதூதர்களும் அதைக் கண்டும்காணாமல் இருக்கிறார்கள் என்று நாம் ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. கடவுள் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய தாமதிக்கிறார் என்றும் நாம் யோசிக்க வேண்டியதில்லை. நிலையில்லாத இந்த உலகத்தில் உருவாகிற புதுப் புது பிரச்சினைகளுக்கு ஏற்றபடி யெகோவாவின் அமைப்பு செயல்படாது என்று நாம் நினைக்கக் கூடாது. யெகோவாவின் அமைப்பு படு வேகமாக முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிறது. பரலோகத்திலிருந்து “சக்கரங்களே!” என்று கூப்பிடும் ஒரு குரல் எசேக்கியேலுக்குக் கேட்டது. அநேகமாக, குறிப்பிட்ட திசையில் போகும்படி சக்கரங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாக அது இருக்கலாம். (எசே. 10:13) யெகோவா தன்னுடைய அமைப்பைச் செயல்பட வைக்கும் விதத்தை யோசித்துப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? ஆனால், அதைவிட யெகோவாவை நினைக்கும்போதுதான் நமக்கு இன்னும் பிரமிப்பாக இருக்கிறது.
எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்
21, 22. அந்த ரதத்தின் பாகங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து செயல்பட எது உதவுகிறது?
21 எசேக்கியேல் இப்போது சக்கரங்களுக்கு மேலே பார்க்கிறார். அங்கே “ஒரு தளம் பரந்து விரிந்திருந்தது. அது கண்களைப் பறிக்கும் பிரகாசமான பனிக்கட்டி போல . . . மின்னியது.” (எசே. 1:22) கேருபீன்களின் தலைகளுக்கு மேல் ரொம்ப உயரத்தில் இருந்த அந்தத் தளம் கண்ணாடிபோல் மின்னியது. இயந்திரங்கள் செயல்படும் விதத்தைப் பற்றித் தெரிந்த ஒருவர் இந்த வசனத்தை வாசித்தால், இந்த ரதம் சம்பந்தமாக அவருடைய மனதில் நிறைய கேள்விகள் வரலாம். உதாரணத்துக்கு, ‘அந்தச் சக்கரங்களுக்கு மேல் உயரத்தில் இருக்கிற தளத்தை எது தாங்கிப் பிடித்திருக்கிறது? சக்கரங்களை ஒன்றோடொன்று இணைப்பதற்கு எதுவும் இல்லாமலேயே அவை எப்படி ஓடுகின்றன?’ என்றெல்லாம் அவர் யோசிக்கலாம். இந்த ரதம் இயற்பியல் சட்டங்களின் அடிப்படையில் செயல்படுவதில்லை. ஏனென்றால், இது அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு ரதம். கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகத்தை இது குறிக்கிறது. இந்த முக்கியமான வார்த்தைகளையும் கவனியுங்கள்: “அந்த ஜீவன்களைத் தூண்டிய சக்தி இந்தச் சக்கரங்களிலும் இருந்தது.” (எசே. 1:20, 21) கேருபீன்களையும் அந்தச் சக்கரங்களையும் செயல்பட வைத்த சக்தி எது?
22 அது கடவுளுடைய சக்திதான் என்பதில் சந்தேகமே இல்லை. அதுதான் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய சக்தி. அந்தச் சக்தியினால்தான், அந்த ரதம் சிறந்த விதத்திலும் ஒழுங்காகவும் செயல்படுகிறது. இப்போது நாமும் எசேக்கியேலோடு சேர்ந்து, அந்த ரதத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்மீது கவனம் செலுத்தலாம்.
விவரிக்கவே முடியாத காட்சிகளைப் பற்றிச் சொல்ல எசேக்கியேல் வார்த்தைகளுக்காகத் திண்டாடினார்
23. யெகோவாவைப் பற்றி விவரிக்க எசேக்கியேல் எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், ஏன்?
23 எசேக்கியேல் 1:26-28-ஐ வாசியுங்கள். இந்தத் தரிசனத்தைப் பற்றி விவரிக்கும்போது, “போல,” “பார்ப்பதற்கு,” “சாயலில்” என்ற வார்த்தைகளை எசேக்கியேல் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, இந்த வசனங்களில் இன்னும் அதிகமான தடவை இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். விவரிக்கவே முடியாத அந்தக் காட்சிகளைப் பற்றிச் சொல்வதற்கு அவர் வார்த்தைகளுக்காகத் திண்டாடுவது போல தெரிகிறது. “நீலமணிக் கல்லைப் போல” ஒன்றை அவர் பார்த்தார். “அது பார்ப்பதற்குச் சிம்மாசனத்தைப் போல இருந்தது.” மிகப் பெரிய ஒரு நீலமணிக் கல், ஒரு சிம்மாசனமாகச் செதுக்கப்பட்டிருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதன் மேல் ஒரு முக்கியமான நபர் உட்கார்ந்திருந்தார். அவர் “மனுஷ சாயலில்” இருந்தார்.
24, 25. (அ) யெகோவாவின் சிம்மாசனத்தைச் சுற்றியுள்ள வானவில் நமக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? (ஆ) விசுவாசமுள்ள மற்றவர்கள் இப்படிப்பட்ட தரிசனங்களைப் பார்த்தபோது எப்படி உணர்ந்திருக்கிறார்கள்?
24 கம்பீரமான அந்த உருவத்தின் இடுப்புக்கு மேலேயும் கீழேயும் யெகோவாவின் மகிமை நெருப்புபோல் பிரகாசித்ததால், அந்த உருவத்தை அவரால் ஓரளவுதான் பார்க்க முடிந்தது. கண்ணைக் கூச வைக்கும் அந்த வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் எசேக்கியேல் தன் கண்களைச் சுருக்கிக்கொள்வதையும், கைகளால் கண்களை மூடிக்கொள்வதையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கடைசியாக, இந்த அருமையான காட்சியை எசேக்கியேல் அந்தத் தரிசனத்தில் பார்க்கிறார்: “அவரைச் சுற்றிலும் ஒரே வெளிச்சமாக இருந்தது. அவரைச் சுற்றியிருந்த பிரகாசமான வெளிச்சம், மழை பெய்யும் நாளில் மேகத்திலே தோன்றுகிற வானவில்லைப் போல இருந்தது.” வானவில்லைப் பார்த்து நீங்கள் எப்போதாவது பூரித்துப்போயிருக்கிறீர்களா? நம் படைப்பாளரின் மகிமையை அது எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகிறது! அதோடு, பெருவெள்ளத்துக்குப் பிறகு யெகோவா செய்த சமாதான ஒப்பந்தத்தையும் வானவில் நமக்கு நினைப்பூட்டலாம். (ஆதி. 9:11-16) அவர் அதிக சக்தி படைத்தவராக இருந்தாலும், அவர் சமாதானத்தின் கடவுளாக இருக்கிறார். (எபி. 13:20) அதனால், அவரை உண்மையோடு வணங்குகிற மக்களிடமும் அந்தச் சமாதானம் இருக்கிறது.
25 யெகோவா தேவனுடைய மகிமையைச் சித்தரித்துக் காட்டும் தரிசனத்தைப் பார்த்தது எசேக்கியேலுக்கு எப்படியிருந்தது? அதைப் பற்றி அவரே இப்படிச் சொல்கிறார்: “அதைப் பார்த்தவுடன் நான் சாஷ்டாங்கமாக விழுந்தேன்.” ஆம், அந்தக் காட்சி அவருக்குள் பிரமிப்பையும் பயபக்தியையும் ஏற்படுத்தியதால் அவர் தரையில் விழுந்தார். யெகோவாவிடமிருந்து தரிசனத்தைப் பெற்றுக்கொண்ட மற்ற தீர்க்கதரிசிகளும் இதேபோல் உணர்ந்திருக்கிறார்கள். அது அவர்களைப் பிரமித்துப்போக வைத்திருக்கும், கடவுளுக்கு முன் தாங்கள் ரொம்பவே அற்பமானவர்கள் என நினைக்க வைத்திருக்கும். (ஏசா. 6:1-5; தானி. 10:8, 9; வெளி. 1:12-17) ஆனால், அவர்களுக்கு யெகோவா வெளிப்படுத்திய விஷயம் பிற்பாடு அவர்களை ரொம்பவே பலப்படுத்தியது. எசேக்கியேலும் நிச்சயம் அப்படித்தான் உணர்ந்திருப்பார். இப்படிப்பட்ட பைபிள் பதிவுகளை வாசிக்கும்போது நாமும் அதேபோல் உணருகிறோமா?
26. எசேக்கியேல் பார்த்த தரிசனம் அவரை எப்படிப் பலப்படுத்தியிருக்கும்?
26 பாபிலோனிலிருந்த கடவுளுடைய மக்களின் பரிதாபமான நிலையைக் குறித்து எசேக்கியேலுக்கு ஏதாவது கவலையோ சந்தேகமோ இருந்திருந்தால், இந்தத் தரிசனம் நிச்சயம் அவரைப் பலப்படுத்தியிருக்கும். கடவுளுக்கு உண்மையாக இருப்பவர்கள் எருசலேமில் இருந்தாலும் சரி, பாபிலோனில் இருந்தாலும் சரி, வேறு எங்கு இருந்தாலும் சரி அது ஒரு பெரிய விஷயமே கிடையாது. ஏனென்றால், அவருடைய மகிமையுள்ள ரதத்தால் சென்றெட்ட முடியாத இடமே இல்லை. இவ்வளவு மகிமையுள்ள பரலோக அமைப்பைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடவுளை, சாத்தானின் கீழிருக்கும் எந்த அரசாங்கத்தாலும் எதிர்த்து நிற்க முடியாது. (சங்கீதம் 118:6-ஐ வாசியுங்கள்.) எசேக்கியேல் பார்த்த அந்தப் பரலோக ரதம் மனிதர்களிடமிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கவில்லை. ஏனென்றால், அதன் சக்கரங்கள் பூமியைத் தொட்டபடிதான் இருந்தன. (எசே. 1:19) சிறையிருப்பிலிருந்த தன்னுடைய உண்மையுள்ள மக்கள்மீது யெகோவாவுக்கு அதிக அக்கறை இருந்ததை இது காட்டுகிறது. அவர்கள் எப்போதுமே தங்களுடைய அன்பான அப்பாவின் அரவணைப்பில் இருந்தார்கள்.
அந்த ரதமும் நீங்களும்
27. எசேக்கியேல் பார்த்த தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
27 எசேக்கியேல் பார்த்த தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவுடைய தூய வணக்கத்தின்மீது சாத்தான் தன்னுடைய தாக்குதலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறான். நாம் தனிமையில் தத்தளிப்பது போலவும், நம் பரலோக அப்பாவாலும் அவருடைய அமைப்பாலும் நமக்கு உதவ முடியாது என்பது போலவும் நம்மை நம்ப வைக்க சாத்தான் ரொம்ப ஆசைப்படுகிறான். அப்படிப்பட்ட எண்ணம் உங்கள் இதயத்திலும் மனதிலும் வர அனுமதிக்காதீர்கள். (சங். 139:7-12) நாமும் எசேக்கியேலைப் போல உணர நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை அவரைப் போல நாம் சாஷ்டாங்கமாக தரையில் விழாமல் இருக்கலாம். ஆனாலும், யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தின் மகிமையை... வல்லமையை... வேகத்தை... சட்டென்று திசையை மாற்றிக்கொள்ளும் அதன் திறனை... சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறும் திறனை... பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம், வாயடைத்து போகிறோம்!
28, 29. கடந்த நூறு வருஷங்களில் யெகோவாவின் ரதம் படு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதை எது காட்டுகிறது?
28 யெகோவாவின் அமைப்புக்கு பூமிக்குரிய ஒரு பாகமும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். அதில் பாவ இயல்புள்ள மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஆனாலும், யெகோவா இந்தப் பூமியில் எதையெல்லாம் சாதித்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். பெரிய பெரிய விஷயங்களைச் செய்வதற்குச் சாதாரண மனிதர்களை யெகோவா தூண்டியிருக்கிறார். அவர்கள் இதை தங்களுடைய சொந்த முயற்சியால் ஒருபோதும் செய்திருக்க முடியாது. (யோவா. 14:12) கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! என்ற புத்தகத்தைப் படிக்கும்போது, நல்ல செய்தியைப் பிரசங்கிக்க கடந்த நூறு வருஷங்களில் கடவுளுடைய மக்கள் எந்தளவு முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். உண்மைக் கிறிஸ்தவர்களைப் பயிற்றுவிப்பதிலும், வழக்குகளில் வெற்றி பெறுவதிலும், கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் யெகோவாவின் அமைப்பு எடுத்திருக்கும் முயற்சிகளைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள்.
29 இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களில் தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை யோசித்துப் பாருங்கள். அப்போது, யெகோவாவின் ரதம் படு வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரியும். இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் பாகமாக இருப்பதும், உன்னதப் பேரரசரைச் சேவிப்பதும் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், இல்லையா?—சங். 84:10.
30. அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
30 எசேக்கியேல் பார்த்த தரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்த அதிகாரத்தில் அந்த நான்கு ஜீவன்களைப் பற்றி, அதாவது கேருபீன்களைப் பற்றி, விலாவாரியாகப் பார்ப்போம். மகிமையுள்ள உன்னதப் பேரரசரான யெகோவா தேவனைப் பற்றி அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
a சிறைபிடிக்கப்பட்டவர்கள் நேர்வழிப் பாதையில் போகாமல் வேறு வழியில் போனதாகத் தெரிகிறது. அதனால், 1,600 கி.மீ. தூரம் அவர்கள் பயணம் செய்திருக்கலாம்.