கவனித்துக் கேளுங்கள்—யெகோவாவின் காவற்காரன் பேசுகிறான்!
“உன்னை இஸ்ரவேல் வீட்டாருக்குக் காவலாளனாக வைத்தேன், . . . நீ என் நாமத்திலே அவர்களை எச்சரிக்க வேண்டும்.”—எசேக்கியேல் 3:17
யெகோவாவின் காவற்காரன் இப்பொழுது கடவுளுடைய செய்தியைப் பேசிக்கொண்டிருக்கிறான். நீங்கள் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய ஜீவன் அந்தச் செய்திக்கு நீங்கள் போற்றுதலுடன் பிரதிபலிப்பதன் பேரிலும் உங்கள் செயலின் பேரிலும் சார்ந்திருக்கிறது. விரைவில் யெகோவா இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை அழித்து தம்முடைய மக்களைப் பாதுகாப்பதன் மூலம் தம்முடைய புனிதமான நாமத்தைப் பரிசுத்தப்படுத்தும்போது ‘தேசங்கள் யெகோவாவை அறிந்துகொள்வார்கள்.’ பாதுகாக்கப்படும் மக்களுடன் நீங்களும் இருக்க எதிர்பார்க்கிறீர்களா? (எசேக்கியேல் 36:23; 39:7; 2 பேதுரு 3:8-13) நீங்களும் இருக்கலாம், ஆனால் யெகோவாவின் “காவற்காரன்” பேசும்போது நீங்கள் கவனமாக செவிகொடுத்துக் கேட்டால் மட்டுமே அது கூடிய காரியமாக இருக்கும்.
2 கடவுளுடைய தீர்க்கதரிசிகளுக்குச் செவிகொடுக்க தவறினது பொ.ச.மு. 607-ல் யூதா ராஜ்யத்துக்கு அழிவைக் கொண்டுவந்தது. பாபிலோனியரின் கரங்களால் ஏற்பட்ட அந்தப் பாழ்க்கடிப்பில் எதிரி நாடுகள் பூரித்தன. ஆனால் பொ.ச.மு. 537-ல் உண்மையுள்ள யூதர்கள் தங்களுடைய தாயகத்துக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை யெகோவா செய்தபோது அவருடைய நாமம் எவ்வளவாக மகிமைப்படுத்தப்பட்டது!
3 பாழ்க்கடிப்பும் திரும்ப நிலைநாட்டப்படுதலும் ஆகிய இந்த இரண்டுமே யெகோவாவின் காவற்காரனாகிய எசேக்கியேலால் முன்னறிவிக்கப்பட்டது. இவனுடைய பெயரைத் தாங்கியதும் அவனால் ஏறக்குறைய பொ.ச.மு. 591-ல் பாபிலோனில் முடிக்கப்பட்டதுமான பைபிள் புத்தகத்தில் அடங்கிய காரியங்கள் (1) எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்ட வேலை; (2) தீர்க்கதரிசன நடிப்புகள்; (3) இஸ்ரவேலுக்கு எதிரான செய்திகள்; (4) எருசலேமின் நியாயத்தீர்ப்பு முன்னறிவிப்புகள்; (5) பிற தேசங்களுக்கு எதிரான தீர்க்கதரிசனங்கள்; (6) திரும்ப நிலைநாட்டப்படுவது குறித்த வாக்குறுதிகள்; (7) மாகோகின் கோகுக்கு எதிராக ஒரு தீர்க்கதரிசனம்; மற்றும் (8) கடவுளுடைய பரிசுத்த ஸ்தலத்தின் ஒரு தரிசனம். இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும்போது நீங்கள் இதை வாசிக்கும்படியாக உங்களை அழைக்கிறோம். இப்படிச் செய்யும்போது, இது இன்று நம்மை எப்படி பாதிக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பதோடுகூட யெகோவாவின் “காவற்காரன்” பேசுகையில் நீங்கள் கவனித்துக் கேட்பவர்களாயும் இருப்பீர்கள்.a
கடவுளுடைய காவற்காரன் பொறுப்பளிக்கப்படுகிறான்
4 பொ.ச.மு. 613, தம்மூஸ் 5 அன்று (யூதாவின் அரசன் யோயாக்கீன் பாபிலோனில் சிறையிருப்பிலிருந்த ஐந்தாம் வருடத்தில்) 30 வயது ஆசாரியனாகிய எசேக்கியேல் ஐபிராத்து நதியின் சிறப்பு வாய்ந்த ஒரு கால்வாயாயிருந்த “கேபார் நதியண்டையில்” சிறைப்பட்ட யூதர்களுடன் இருந்தான். தரிசனத்தில், “நான்கு ஜீவன்கள்” உடன் சென்ற யெகோவாவின் உன்னத மகிமை பொருந்திய ரதத்தைக் கண்டான். (எசேக்கியேல் 1:4-10-ஐ வாசிக்கவும்.) ஒவ்வொரு ‘ஜீவனுக்கும்,’ அல்லது செட்டைகளுடைய கேருபீனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. (எசேக்கியேல் 10:1-20; 11:22) இந்தக் கேருபீன்கள் கடவுள் கொடுத்திருக்கும் அன்பு (மனிதன்), நீதி (சிங்கம்), வல்லமை (எருது), மற்றும் ஞானம் (கழுகு) ஆகிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு கேருபீனும் ஒரு பெரிய ‘சக்கரத்துக்குள் அமைந்த சக்கரம்’ பக்கமாக நின்றன, மற்றும் கடவுளுடைய ஆவி அல்லது கிரியை செய்யும் சக்தி அவற்றை எந்தத் திசையிலும் செலுத்த முடிந்தது.—எசேக்கியேல் 1:1-21
5 ரதத்தை ஓட்டுகிறவர் யெகோவாவை மகத்துவமாக பிரதிநிதித்துவம் செய்கிறவராக இருந்தார். (எசேக்கியேல் 1:22-28-ஐ வாசிக்கவும்.) இந்த ரதம் கடவுளுடைய தேவதூதர்கள் அடங்கிய அமைப்பை எவ்வளவு பொருத்தமாக பிரதிநிதித்துவம் செய்கிறது! (சங்கீதம் 18:10; 103:20, 21; தானியேல் 7:9, 10) இந்த ஜீவன்கள் மீது ஆதிக்கமுடையவராய் தம்முடைய நோக்கத்திற்கு இசைவாக அவர்களைப் பயன்படுத்தும் கருத்தில் யெகோவா இதை ஓட்டுகிறார். உடன் காணப்படும் வானவில் போன்று ரதத்தை ஓட்டுகிறவர் அமைதலாக இருந்தார், ஆனால் எசேக்கியேல் அதிக கிளர்ச்சியடைந்தான். தம்முடைய பரலோக தேவதூதர் கூட்டத்தின் உன்னத அமைப்பாளராக யெகோவாவின் மகிமையையும் வல்லமையையும் காண்பித்திடும் இந்த மகத்துவமான காட்சி அவருடைய பூமிக்குரிய அமைப்பின் பாகமாக அவரைச் சேவிக்கும் சிலாக்கியத்திற்கு நாம் மனத்தாழ்மையுடன் நன்றியுள்ளவர்களாயிருக்க நம்மைத் தூண்டிட வேண்டும்.
6 “மனுபுத்திரன்” என்று அழைக்கப்படுவதன் மூலம் அவனுடைய மனுஷீகமும் தாழ்ந்த நிலையும் நினைவுபடுத்தப்பட்டது என்றாலும், எசேக்கியேல் யெகோவாவின் தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டான். (எசேக்கியேல் 2:1-5-ஐ வாசிக்கவும்.) எசேக்கியேல் “கலகக்கார ஜாதியிடம்” அதாவது இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜ்யங்களிடம் செல்வான். முதலாவதாக, அவன் தெய்வீக கட்டளையின்பேரில் புலம்பல்கள் நிரம்பிய ஒரு சுருளைப் புசித்தான், ஆனால் அது தேனைப்போல் தித்திப்பாயிருந்தது, ஏனென்றால் அவன் கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருப்பதற்கு நன்றியுள்ளவனாயிருந்தான். அதுபோன்று, அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய உடன் ஊழியர்களும் யெகோவாவுக்கு சாட்சிகளாயிருப்பதில் இனிமை இருப்பதைக் காண்கிறார்கள். எசேக்கியேல் தங்களுடைய காரியத்திலேயே கண்ணோட்டமாயிருக்கும் கடின இருதயமுள்ள மக்களிடையே தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டியதாயிருந்தது, ஆனாலும் அவர்களுடைய முகங்களைப்போல இவனுடைய முகத்தையும் உறுதிபெறச் செய்து, இவனுடைய நெற்றியை வைரம் போல கடினமடையச் செய்திருக்கிறார். அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் தைரியமாக தீர்க்கதரிசனம் உரைப்பவனாயிருப்பான். கடினமான சூழ்நிலைகளில் கடவுள் எசேக்கியேலை நிலைநிறுத்தியது போல, எந்த ஒரு பிராந்தியத்திலும் தைரியமாக சாட்சி கொடுக்க அவர் நமக்கு உதவி செய்வார் என்பதை அறிவது நம் இருதயத்தை மகிழ்விப்பதாய் இருக்கிறது.—எசேக்கியேல் 2:6-3:11.
7 அந்தச் சுருளைச் சாப்பிட்டது அதன் செய்திக்கு இசைவாக எசேக்கியேலில் ‘ஆவியின் உக்கிரத்தை’ ஏற்படுத்தியது. தெலாபீபிலே அவன் அந்தச் செய்தியை ஜீரணிப்பவனாய் ‘ஏழு நாள் பிரமித்தவனாய்த்’ தங்கினான். (எசேக்கியேல் 3:12-15) ஆழ்ந்த ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு நாம் தியானித்து ஊக்கமாய்ப் படிப்பவர்களாய் இருக்க வேண்டும். அறிவிப்பதற்கு ஒரு செய்தியை உடையவனாய் எசேக்கியேல் கடவுளுடைய காவற்காரனாக அனுப்பப்படுகிறான். (எசேக்கியேல் 3:16-21-ஐ வாசிக்கவும்.) நியாயப்பிரமாணத்தை மீறிய இஸ்ரவேலர் தெய்வீக ஆக்கினைத்தீர்ப்பை எதிர்ப்படுகிறார்கள் என்று புதிதாக நியமிக்கப்பட்ட காவற்காரன் எச்சரிக்க வேண்டியதாயிருந்தது.
8 ஒரு காவற்காரனாக எசேக்கியேல் தவறுவானாகில் மரணத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்காக யெகோவா அவனிடம் கணக்கு கேட்பார். அவன் கடிந்துகொள்ளுதலை நிறைவேற்றும் காரியத்தை விரும்பாதவர்கள் அவனை அடையாள அர்த்தமுள்ள கயிறுகளால் கட்டுகிறவர்களாயிருந்தாலும், அவன் தைரியமாகக் கடவுளுடைய செய்தியை அறிவிப்பான். (எசேக்கியேல் 3:22-27) நம்முடைய நாட்களில், கிறிஸ்தவமண்டலம் செவிகொடுக்க தவறி, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முற்படுகிறது. ஆனால் 1919 முதல் இந்த அபிஷேகம்பண்ணப்பட்ட ஆட்கள் யெகோவாவின் “காவற்காரனாக” இந்த ஒழுங்குமுறையின் “முடிவுகாலத்”துக்கான அவருடைய செய்தியைத் தைரியமாக அறிவித்து வந்திருக்கின்றனர். (தானியேல் 12:4) இந்த வேலையில் அவர்களோடு கூட்டுறவு கொள்பவர்கள்தான் இயேசுவின் “வேறே ஆடுகளைச்” சேர்ந்த அதிகரித்துக்கொண்டிருக்கும் “திரள் கூட்டம்.” (வெளிப்படுத்துதல் 7:9, 10; யோவான் 10:16) “காவற்கார” வகுப்பு கடவுளுடைய செய்தியைத் தொடர்ந்து அறிவித்து வருவதால் அபிஷேகம்பண்ணப்பட்ட மற்றும் “திரள் கூட்டத்தைச்” சேர்ந்த ஒவ்வொருவரும் ஒரு ஒழுங்கான பிரஸ்தாபியாக அதை அறிவித்துவர விரும்புவார்கள்.
நடிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள்
9 அடுத்து எசேக்கியேல் மனத்தாழ்மையாகவும் தைரியமாகவும் தீர்க்கதரிசனங்களைச் சைகை மூலம் நடித்துக் காண்பித்தான். இவ்வாறு கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளைத் தாழ்மையோடும் தைரியத்தோடும் நிறைவேற்றுவதற்கு நம்மைத் தூண்டும்படியாக நமக்கு ஒரு முன்மாதிரியை வைத்தான். பாபிலோனியரின் முற்றுகையைக் குறிப்பிட்டுக் காட்ட தான் எருசலேமின் படத்தை வரைந்திருந்த ஒரு செங்கலைப் பார்த்தபடி படுக்க வேண்டியதாயிருந்தது. இஸ்ரவேலின் பத்து-கோத்திர வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கும் பொருட்டு, எசேக்கியேல் 390 நாட்களுக்குத் தன் இடது பக்கமாய்ப் படுக்க வேண்டும், பின்பு யூதாவின் இரண்டு-கோத்திர வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கும் பொருட்டு தன் வலது பக்கமாய் 40 நாட்கள் படுக்க வேண்டும். ஒரு நாள் ஒரு வருடத்தைக் குறித்தது. எனவே அந்த 390 வருடங்கள் இஸ்ரவேல் ஸ்தாபிக்கப்பட்ட பொ.ச.மு. 997 முதல் எருசலேம் அழிக்கப்பட்ட பொ.ச.மு. 607 வரை தொடர்ந்தது. யூதாவின் 40 வருடங்கள் எரேமியா நியமிக்கப்பட்ட வருடமாகிய பொ.ச.மு. 647 முதல் யூதா பாழாக்கப்பட்ட வருடமாகிய பொ.ச.மு. 607 வரை தொடர்ந்தது.—எசேக்கியேல் 4:1-8; எரேமியா 1:1-3.
10 அடுத்ததாக எசேக்கியேல் முற்றுகையின் பாதிப்புகளை நடித்துக் காட்டினான். பஞ்சத்தைக் குறிப்பிட அவன் எட்டு அவுன்ஸ் உணவிலும் அரைக்கால் காலன் தண்ணீரிலுமே ஒவ்வொரு நாளையும் கழித்தான். அவனுடைய அப்பம் (நியாயப்பிரமாணத்தை மீறும் விதத்தில் கோதுமையும் வாற்கோதுமையும் பெரும்பயிறும் சிறுபயிறும் தினையும் கம்பும் கலந்து செய்யப்பட்டது) அசுத்தமாயிருந்தது. (லேவியராகமம் 19:19) எருசலேமின் குடிகள் கடுமையான வறுமையை அனுபவிப்பர் என்று இந்தச் செயல் காண்பித்தது; கடுமையான சூழ்நிலையிலும் யெகோவா எசேக்கியேலைப் போஷித்துப் பராமரித்து வந்தது போல நாமும் எல்லா வகையான கஷ்டங்களின்மத்தியிலும் உண்மையுள்ளவர்களாக இருந்து நம்முடைய பிரசங்க வேலையை நிறைவேற்ற கடவுள் நமக்கு உதவி செய்வார் என்பதை அறிவது நம் இருதயத்துக்கு எவ்வளவு இதமளிப்பதாய் இருக்கிறது!—எசேக்கியேல் 4:9-17.
11 அடுத்து ஒரு பட்டயத்தை எடுத்து எசேக்கியேல் தன் தலை முடியையும் தாடியையும் சிரைத்துக்கொண்டான். (எசேக்கியேல் 5:1-4-ஐ வாசிக்கவும்.) பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் மரிப்பவர்கள் தீர்க்கதரிசியின் மூன்றில் ஒரு பங்கு முடியை எருசலேமின் மத்தியில் சுட்டெரித்ததற்கு ஒப்பாவார்கள். யுத்தத்தில் மரிப்பவர்கள் மூன்றில் ஒரு பங்கு பட்டயத்தால் வெட்டப்பட்டதற்கு ஒப்பாவார்கள். அவனுடைய முடியில் மூன்றில் ஒரு பங்கு காற்றிலே தூற்றப்பட்டதற்கு ஒப்பாக தப்பிப்பிழைப்பவர்கள் புறஜாதிகளுக்குள் சிதறுண்டுபோவார்கள். ஆனால் சிறையிருப்பிலிருக்கும் சிலர் காற்றிலே தூற்றப்பட்ட முடியில் கொஞ்சம் எடுக்கப்பட்டு எசேக்கியேலின் வஸ்திரத்தில் முடித்து வைக்கப்பட்டதற்கு ஒப்பாக இருப்பார்கள், அதாவது அவர்கள் அந்த 70 வருட பாழ்க்கடிப்புக்குப் பின்பு யூதாவில் உண்மை வணக்கத்தை மேற்கொள்வார்கள் என்பதைக் காட்டுவதாயிருக்கிறது. (எசேக்கியேல் 5:5-17) யெகோவா இதையும் நடிக்கப்பட்ட மற்ற தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றின உண்மை தானே அவரைத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறவராக நம்பியிருக்க நம்மைத் தூண்டிட வேண்டும்.—ஏசாயா 42:9; 55:11.
முன்னிருப்பது அழிவு!
12 பொ.ச.மு. 613-ல், யூதாவின் விக்கிரகாராதனைக்கார குடிகளுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை எடுத்துக்காட்ட எசேக்கியேல் தேசத்தை நோக்கி பேசினான். (எசேக்கியேல் 6:1-7-ஐ வாசிக்கவும்.) எதிர் தாக்குதல் செய்பவர்கள் பொய் வணக்கத்திற்காக பயன்படுத்திய அவர்களுடைய விக்கிரகத் தோப்புகளையும் தூபக்கலசங்களையும் பலிபீடங்களையும் தகர்த்திடுவர். பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் யுத்தத்தாலும் பாழாக்கப்படப்போகிறது என்ற எண்ணந்தானே ஒருவரை “ஐயோ!” என்று சொல்ல வைக்கும், மற்றும் கையைத் தட்டி காலை உதைத்து இதை அழுத்திக் காண்பிக்கக்கூடும். ஆவிக்குரிய வேசித்தனத்தில் ஈடுபட்டவர்களின் சடலங்கள் விக்கிரக மேடைகளில் சிதறிக்கிடக்கும். எருசலேமுக்குப் படமாயிருக்கும் கிறிஸ்தவமண்டலம் அதையொத்த அழிவை எதிர்ப்படும்போது, தன்னுடைய அழிவு யெகோவாவிடமிருந்து வருகிறது என்பதை அவள் அறிந்துகொள்வாள்.—எசேக்கியேல் 6:8-14.
13 விசுவாசத்திலிருந்து தவறிய யூதாவின் மத ஒழுங்குமுறைக்கு, ‘தேசத்தின் நாலு முனைகளின் மேல் முடிவு வந்துகொண்டிருந்தது.’ கடவுளுடைய கரத்திலிருக்கும் “மிலாறு”—நேபுகாத்நேச்சாரும் அவனுடைய பாபிலோனிய சேனையும்—யெகோவாவின் மக்களுக்கும் அவருடைய ஆலயத்துக்கும் விரோதமாக செயல்பட்டபோது விக்கிரகாராதனைக்காரனின் தலையைத் தீங்கு என்னும் “மாலை” சுற்றிக்கொள்ளும். யூதாவின் வாங்குகிற மற்றும் விற்கிற “திரளான கும்பைச்” சேர்ந்தவர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள், மற்றும் பிழைத்திருக்கமுடிந்தவர்களின் கைகள் சோர்வில் விழுந்துவிடும். அவர்களுடைய பொய் மத ஒழுங்குமுறை வீழ்ச்சியுறும்போது அவர்கள் துக்கத்தால் மொட்டையடித்துக்கொள்வது போன்ற நிலையிலிருப்பார்கள்.—எசேக்கியேல் 7:1-18.
14 யெகோவாவும் அவருடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் சேனையும் லஞ்சம் பெற்றுக்கொள்கிறவர்கள் அல்ல. (எசேக்கியேல் 7:19-ஐ வாசிக்கவும்.) கல்தேய “பறிகாரர்” பரிசுத்த பாத்திரங்களைக் கைப்பற்றி ஆலயத்தைப் பாழாக்குவதன் மூலம் “அந்தரங்க ஸ்தலம்,” அந்த மகா பரிசுத்த ஸ்தலம் தீட்டுப்படுவதை லஞ்சம் காத்திடமுடியவில்லை. சிதேக்கியா அரசன் கைது செய்யப்பட்ட போதும் லேவிய ஆசாரியர்களில் பிரதானமானவர்கள் கொல்லப்பட்ட போதும் யெகோவா ‘பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணினார்.’ (2 இராஜாக்கள் 25:4-7, 18-21) முற்றுகையிடப்பட்ட எருசலேமிலிருந்த பாவிகளைக், கடவுள், உடன்படிக்கையை மீறினவர்கள் என்று ‘நியாயந்தீர்த்தபோது’ அவர்கள் இன்னல்களைத் தப்ப முடியவில்லை. அதுபோலவே, கிறிஸ்தவமண்டலம் புனிதமாகக் கருதும் காரியங்கள் தீட்டுப்படுத்தப்படும் சமயம் அண்மையிலிருக்க, அவள் மீது கொண்டுவரப்படும் தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து அவள் லஞ்சம் கொடுத்து தப்ப முடியாது. யெகோவாவின் “காவற்காரனுக்கு” செவிகொடுப்பதற்கு அந்த சமயம் அதிக பிந்தியாகிவிடும்.—எசேக்கியேல் 7:20-27.
அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுதல்
15 பொ.ச.மு. 612 ஏலுல் 5-ம் நாளன்று எசேக்கியேல் கடவுளை மகிமையில் தரிசித்த போது, ‘கை போல் தோன்றின ஒன்று அவன் தலைமயிரைப் பிடித்து தூக்கி’ ஏவுதலின் ஆவியால் எருசலேமுக்குக் கொண்டுசெல்லப்பட்டான். உன்னத மகிமைபொருந்திய அந்த ரதமும் அவ்விடத்திற்கு நகர்ந்தது. எசேக்கியேல் அந்தச் சமயத்தில் பார்த்த காரியம் விசுவாச துரோகிகளுக்குச் செவிகொடுப்பது என்ற அந்த எண்ணத்திற்கே இடம்கொடுக்காதபடிச் செய்யவேண்டும். (நீதிமொழிகள் 11:9) ஆலயத்திலே, விசுவாசதுரோக இஸ்ரவேலர் விக்கிரக சம்பந்தமான ஒரு சின்னத்தை (அநேகமாய் ஒரு புனித தோப்பு விக்கிரகத்தை) வணங்கிக்கொண்டிருந்தார்கள். (யாத்திராகமம் 20:2-6) உட் பிரகாரத்தில் பிரவேசிக்கையில், எசேக்கியேல் பார்த்த அக்கிரமம்தான் என்னே! (எசேக்கியேல் 8:10, 11-ஐ வாசிக்கவும்.) அருவருக்கத்தக்க சுவரோவியங்களில் பிரதிநிதித்துவஞ்செய்யப்பட்ட பொய்க் கடவுட்களுக்கு அந்த 70 மூப்பர்கள் தூபங்காட்டிக்கொண்டிருந்த செயல் எவ்வளவு இழிவான ஒன்று!—எசேக்கியேல் 8:1-12.
16 விசுவாசதுரோகம் எந்தளவுக்கு ஆவிக்குரியப்பிரகாரமாய்ச் சாவுக்கேதுவாயிருக்கிறது என்பதை எசேக்கியேலின் தரிசனம் காண்பிக்கிறது. ஏன், இஸ்ரவேல் பெண்கள் பாபிலோனிய தெய்வமும் இனப்பெருக்கத் தேவதையாகிய இஷ்டாரின் காதலனுமாகிய தம்மூஸுக்காக அழுதுக்கொண்டிருப்பதாகப் பேசப்படுகிறது! (உபாகமம் 4:15-19) கடவுளுடைய நாசிக்கு நேராக ஓர் ஆபாசமான கிளையைப் பிடித்தனர், அநேகமாய் அது ஒரு ஆணின் இன உறுப்பின் சின்னமாக இருக்கும். அவர்களுடைய ஜெபங்களுக்கு யெகோவா செவிகொடுக்க மாட்டார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாததுபோல “மிகுந்த உபத்திரவத்தின்”போது கிறிஸ்தவமண்டலம் அவருடைய உதவியை நாடுவதும் வீணாயிருக்கும்!—எசேக்கியேல் 8:13-18; மத்தேயு 24:21.
தப்பிப்பிழைப்பதற்குக் குறி பெற்றிருத்தல்
17 அடுத்து நாம் ஏழு புருஷரைக் கவனிக்கிறோம்—ஒருவன் சணல் நூல் அங்கி தரித்தவனும் மற்ற ஆறு பேர் வெட்டுகிற ஆயுதங்களைக் கொண்டவர்களாயுமிருக்கின்றனர். (எசேக்கியேல் 9:1-7 வாசிக்கவும்.) அந்த “ஆறு புருஷர்” யெகோவாவின் பரலோக சங்கார சேனையைப் பிரதிநிதித்துவம் செய்தனர். அவர் பூமிக்குரிய பிரதிநிதிகளைப் பயன்படுத்தக்கூடும் என்றாலும், அந்தச் சேனையையே பயன்படுத்துகிறார். ‘சணல்நூல் அங்கிதரித்த மனிதன்’ குறிப்போட்ட ஆட்கள் கடவுளுடைய இரக்கத்தைப் பெறுவார்கள், ஏனென்றால் ஆலயத்தில் செய்யப்பட்ட அருவருப்பான காரியங்களுக்கு அவர்கள் ஆதரவு காண்பிக்கவில்லை. அந்த “ஆறு புருஷர்” நடப்பித்த சங்காரம் 70 விக்கிரகாராதனைக்கார மூப்பர்களிடமிருந்தும் தம்மூஸுக்காக அழுதுகொண்டிருந்த பெண்களிடமிருந்தும் 25 சூரிய வணக்கத்தாரிடமிருந்தும் ஆரம்பமாயின. இவர்களும் கடவுளுக்கு உண்மைதவறிய மற்றவர்களும் பொ.ச.மு. 607-ல் பாபிலோனியரால் கொல்லப்பட்டனர்.
18 ‘சணல்நூல் அங்கிதரித்த மனிதன்’ அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களடங்கிய வகுப்புக்கு ஒரு மாதிரிப்படிவம். கிறிஸ்துவின் “வேறே ஆடுகளைச்” சேர்ந்த “திரள் கூட்டத்தின்” பாகமாக ஆகிறவர்களுக்கு அடையாள அர்த்தமுள்ள குறி போடுவதற்காக அவர்கள் வீடு வீடாகச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட ஆடுகள் கிறிஸ்துவைப்போன்ற ஆள்தன்மையோடுகூடிய ஒப்புக்கொடுத்த, முழுக்காட்டுதல் பெற்றவர்கள் என்பதற்கு அந்தக் “குறி” அத்தாட்சியாக இருக்கிறது. அவர்கள் கிறிஸ்தவமண்டலத்தில் செய்யப்படும் ‘அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிறார்கள்,’ மற்றும் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனை விட்டு வெளியேறிவிட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 18:4,5) அவர்கள் “மிகுந்த உபத்திரவத்தின்”போது கொல்லப்படாது காக்கப்படவேண்டும் என்பதை அந்தக் “குறி” கடவுளுடைய சங்கார சேனைக்கு தெளிவுபடுத்திட வேண்டும். இன்னும் மற்றவர்களுக்குக் குறிபோடும் வேலையில் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களுடன் சேர்ந்து கொள்வதம் மூலம் அவர்கள் அந்தக் குறியைக் காத்துக்கொள்ள முடியும். எனவே, நீங்கள் ‘குறிபெற்றவர்களாய்’ இருப்பீர்களானால் ‘குறிபோடும் வேலையில்’ வைராக்கியமாகப் பங்குகொள்ளுங்கள்.—எசேக்கியேல் 9:8-11.
அக்கினிமயமான அழிவு காத்திருக்கிறது!
19 சணல்நூல் அங்கிதரித்த மனிதன் உன்னத மகிமை பொருந்திய ரதத்தின் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடுக்கச் செல்கிறான். இவை எருசலேமின் மீது எறியப்பட்டது, இப்படியாக அதன் அழிவு கடவுளுடைய கோபாக்கினையின் வெளிக்காட்டாக இருக்கும் என்பதற்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது. (எசேக்கியேல் 10:1-8; புலம்பல் 2:2-4; 4:11) எசேக்கியேலின் நாட்களில் யெகோவாவின் கோபாக்கினை பாபிலோனியர் மூலம் ஊற்றப்பட்டது. (2 நாளாகமம் 36:15-21; எரேமியா 25:9-11) ஆனால் நம்முடைய நாளைப்பற்றியது என்ன? கிறிஸ்தவமண்டலம் மீதும் மகா பாபிலோனின் மற்ற பகுதிகள் மீதும் தெய்வீக கோபாக்கினை ஊற்றப்படும் என்ற கடவுளுடைய கோபாக்கினையின் செய்தியை ‘சணல்நூல் அங்கிதரித்த மனிதனுக்கு’ மாதிரிப்படிவமாக இருக்கும் வகுப்பார் அறிவித்து வருகின்றனர். உண்மைதான், யெகோவாவின் “காவற்காரனுக்கு” செவிகொடுக்க மறுப்பவர்களுக்குத் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கை கிடையாது.—எசாயா 61:1, 2; வெளிப்படுத்துதல் 18:8-10, 20.
20 கடவுளுடைய பரலோக அமைப்பாகிய அந்த உன்னத மகிமை பொருந்திய ரதத்தினிடமாக கவனம் திருப்பப்படுகிறது. ரதத்தின் சக்கரங்களுக்கும் அந்தக் கேருபீன்களுக்கும் இடையே இசைவைக் காணும்போது நாம் கடவுளுடைய பூமிக்குரிய அமைப்போடு முழுவதுமாக ஒத்திசைந்து செல்வதற்கு நாம் தூண்டப்படவேண்டும். நம்முடைய உண்மைத்தவறாமையின் அடிப்படையில் நாம் அதை வஞ்சனையுள்ள ஆட்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும். (எசேக்கியேல் 10:9-22) எசேக்கியேலின் நாட்களில் அப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள், எப்படியெனில் கடவுளுடைய சங்கார சேனைக்கு எதிராக எகிப்திய உதவியுடன் 25 அரசு பிரபுக்கள் சதி செய்வதை அவன் கண்டான். அவர்கள் எருசலேமை ஒரு பானைக்கும், தங்களை அதில் பத்திரமாக இருக்கும் இறைச்சிக்கும் ஒப்பிட்டார்கள். ஆனால் அவர்கள் அப்படி நினைத்தது எவ்வளவு தவறு! “பட்டயமாகிய” பாபிலோனிய “அந்நியர்” சதியாட்களில் சிலரைக் கொன்று மற்றவர்களைச் சிறைப்பிடித்துச் செல்லவேண்டியதாயிருந்தது. இப்படி சம்பவிக்கவேண்டியதாயிருந்ததற்குக் காரணம், தம்முடைய உடன்படிக்கையை மீறினதற்காகக் கடவுள் இஸ்ரவேலரிடம் கணக்கு கேட்பவராயிருந்தார். (எசேக்கியேல் 11:1-13; யாத்திராகமம் 19:1-8; 24:1-7; எரேமியா 52:24-27) கிறிஸ்தவமண்டலம் கடவுளுடன் ஒரு உடன்படிக்கையிலிருப்பதாக உரிமைபாராட்டியும் உலகப்பிரகாரமான உறவுகளில் நம்பிக்கை வைப்பதால், அவள் கடவுளுடைய சங்கார சேனையின் தாக்குதலில் நாசமடைவாள்.
21 பொ.ச.மு. 617-ல் சம்பவித்தது போன்று இஸ்ரவேலர் ‘தேசங்களிலே சிதறடிக்கப்பட்டிருந்தாலும்’ சிறையிருப்பிலிருந்த மனந்திரும்பிய மக்களுக்கு கடவுள் “ஒரு பரிசுத்த ஸ்தலமாக” அல்லது ஓர் அடைக்கலமாக இருந்தார். (எசேக்கியேல் 11:14-16) ஆனால் வேறு என்ன காரியங்களை எதிர்பார்க்கலாம்? (எசேக்கியேல் 11:17-21-ஐ வாசிக்கவும்.) யூதாவின் 70 வருட பாழ்க்கடிப்புக்குப் பின்பு மீதியானோர் சுத்திகரிக்கப்பட்ட “இஸ்ரவேல் தேசத்துக்கு” திரும்ப கொண்டுவரப்பட்டனர். இதற்கு ஒப்பாக, ஒரு பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு, அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோர் 1919-ல் மீட்கப்பட்டு, கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலின்கீழ், ஒருசமயம் பாழ்க்கடிப்பிலிருந்த ஆவிக்குரிய “தேசம்” சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பாதுகாக்கப்படுவதற்காக ‘குறிபெற்றவர்கள்’ திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோருடன்கூட இப்பொழுது தெய்வீக தயவை அநுபவித்துக்களிக்கிறார்கள். கடவுளுடைய “காவற்காரனுக்கு” நீங்கள் தொடர்ந்து செவிகொடுத்து வருவீர்களானால், யெகோவா தம்முடைய பட்டயத்தை உறையிலிருந்து எடுக்கும்போது தப்பிப்பிழைப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். (w88 9⁄15)
[அடிக்குறிப்புகள்]
a நேரம் அநுமதிக்கையில், இந்தக் கட்டுரையிலும் தொடர்ந்துவரும் இரு கட்டுரைகளிலும் தடித்த எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனப்பகுதிகளைச் சபை படிப்பின்போது வாசிக்கச்செய்ய வேண்டும். தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் பைபிள் வாசிப்புப் பகுதியின்பேரில் விசேஷ குறிப்புகளுக்கு எசேக்கியேல் புத்தகத்தின்பேரிலுள்ள இந்தப் படிப்புக் கட்டுரைகளிருந்தும் குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவாவின் “காவற்காரன்” பேசும்போது ஏன் கவனித்துக்கேட்க வேண்டும்?
◻ கடவுளுடைய உன்னத மகிமைபொருந்திய ரதம் எதைப் பிரதிநிதித்துவம் செய்தது?
◻ இன்று யெகோவாவின் “காவற்காரனாக” சேவிப்பது யார்?
◻ எசேக்கியேல் எருசலேமில் கண்ட விசுவாச துரோக செயல்கள் யாவை, மற்றும் இந்தத் தரிசனம் நம்மை எவ்விதம் பாதிக்க வேண்டும்?
◻ நவீன நாளைய ‘சணல்நூல் அங்கிதரித்த மனிதன்’ யார், மற்றும் நெற்றிகளில் அவன் இடும் அந்தக் ‘குறி’ என்ன?
[கேள்விகள்]
1. யெகோவாவின் “காவற்காரன்” பேசும்போது நாம் ஏன் கவனித்துப் கேட்க வேண்டும்?
2. கடவுளுடைய தீர்க்கதரிசிகளுக்கு செவிகொடுக்க தவறியது யூதா ராஜ்யத்துக்கு என்ன விளைவை ஏற்படுத்தியது?
3. எசேக்கியேல் புத்தகத்தில் என்ன அடங்கியிருக்கிறது?
4. (எ) எசேக்கியேல் தரிசனத்தில் கண்டது என்ன? (பி) அந்த “ஜீவன்கள்” யார்? அவை என்ன குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன?
5. உன்னத மகிமைப்பொருந்திய ரதம் எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது? அதைக் குறித்த இந்த நோக்குநிலை யெகோவாவின் மக்களை எவ்விதம் பாதிக்க வேண்டும்?
6. (எ) எசேக்கியேல் என்ன நியமிப்பைப் பெற்றான்? (பி) எப்படிப்பட்ட மக்களிடத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டியதாயிருந்தது? கடவுள் அவனிடம் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை அறிவதில் என்ன நன்மை இருக்கிறது?
7. எசேக்கியேல் பெற்ற வேலை அவன் மீது என்ன உத்தரவாதத்தை வைத்தது?
8 இன்று யெகோவாவின் “காவற்காரனாக” சேவிப்பது யார்? அவர்களுடன் கூட்டுறவு கொண்டிருப்பது யார்?
9. (எ) எசேக்கியேல் நமக்கு எப்படி ஒரு முன்மாதிரியை வைத்தான்? (பி) எருசலேம் பாபிலோனால் முற்றுகையிடப்படுவதைக் காண்பிக்க எசேக்கியேல் என்ன செய்தான்? அந்த 390 நாட்களாலும் 40 நாட்களாலும் குறிப்பிடப்பட்டது என்ன?
10. முற்றுகையின் பாதிப்புகளை எசேக்கியேல் எப்படி நடித்துக் காண்பித்தான்? கடவுள் அவனைப் பேணிக்காத்தார் என்ற உண்மையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
11. (எ) எசேக்கியேல் 5:1-4-ல் என்ன செயல்கள் குறிப்பிடப்படுகின்றன? அவற்றின் குறிப்பு என்ன? (பி) எசேக்கியேலின் நடிப்புகளைக் கடவுள் நிறைவேற்றினாரென்ற உண்மை நம்மில் என்ன பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்?
12. (எ) படையெடுத்துவருபவர்கள் என்ன செய்வார்கள் என்று எசேக்கியேல் 6:1-7 குறிப்பிடுகிறது? (பி) எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின்படி, எருசலேமுக்கு மாதிரிப்படிவமாக இருப்பது என்ன? அவளுக்கு என்ன நேரிடும்?
13. யெகோவாவின் கரத்திலிருக்கும் “மிலாறு” என்ன? அதைப் பயன்படுத்துவதன் விளைவு என்னவாக இருக்கும்?
14. லஞ்சம் எருசலேமுக்கு என்ன செய்யமுடியவில்லை? அது கிறிஸ்தவமண்டலத்துக்கு எதைக் குறிப்பிடுகிறது?
15. எசேக்கியேல் எருசலேமில் என்ன பார்த்தான்? இது நம் மீது என்ன பாதிப்பையுடையதாய் இருக்கவேண்டும்?
16. விசுவாசதுரோகத்தின் பாதிப்புகளைக் குறித்து எசேக்கியேலின் தரிசனம் குறிப்பிட்டுப் காண்பிப்பது என்ன?
17. தரிசனத்தில் எந்த ஏழு புருஷர் காணப்பட்டனர்? அவர்கள் என்ன செய்தார்கள்?
18. (எ) நவீன நாளைய ‘சணல்நூல் அங்கிதரித்த மனிதன்’ யார்? (பி) அந்தக் “குறி” என்ன? அதை இப்பொழுது பெற்றிருப்பது யார்? அதைப் பெற்றிருப்பது எதில் விளைவடையும்?
19. நவீன நாளைய ‘சணல்நூல் அங்கி தரித்த மனிதன்’ கிறிஸ்தவமண்டலம் முழுவதுமாக எதை அறிவித்து வருகிறான்?
20. (எ) உன்னத மகிமைப்பொருந்திய ரதத்தின் சக்கரங்களுக்கும் கேருபீன்களுக்கும் இடையே காணப்படும் இசைவு நம்மை எப்படி பாதிக்க வேண்டும்? (பி) சில பிரபுக்கள் என்ன செய்துகொண்டிருந்தனர்? அவர்கள் எருசலேமை எதற்குத் தவறாக ஒப்பிட்டனர்?
21. யூதாவின் 70 வருட பாழ்க்கடிப்பிற்குப் பின்பு என்ன நடந்தது? அதற்கு ஒப்பாக நடந்த என்ன காரியம் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோரைப் பாதித்தது?