யெகோவாவின் பரம இரதம் முன்செல்கிறது
“அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன்.”—எசேக்கியேல் 10:13.
1. யெகோவா என்ன பயண முறையைக் கொண்டிருக்கிறார்?
நேர்த்தியான விமானங்கள் உள்ள இந்நாட்களில், உலகத் தலைவர்கள் பயண ஆற்றலில் உச்சநிலையை அனுபவித்து மகிழ்வதாக உணரக்கூடும். என்றபோதிலும் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக, எந்த ஒரு பொறியாளரும் எக்காலத்திலும் பார்த்திராத உயர்தரமான பயணமுறையை தாம் கொண்டிருப்பதை யெகோவா தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார். அது வியப்பூட்டும் மிகப் பெரிய ஓர் இரதமாகும்! பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் இரதம் போன்ற ஒரு வாகனத்தில் சவாரி செய்வது விநோதமாகத் தோன்றுகிறதா? இல்லை, ஏனென்றால் யெகோவாவின் பரம இரதம் மனிதன் எண்ணிப் பார்க்கக்கூடிய எதிலிருந்தும் வெகுவாக வித்தியாசப்பட்டதாயிருக்கிறது.
2. எசேக்கியேல் அதிகாரம் 1 யெகோவாவின் பரம இரதத்தை எவ்வாறு குறிப்பிடுகிறது, தீர்க்கதரிசி முதலாவதாக யாரிடமாக நம்முடைய கவனத்தை இழுக்கிறான்?
2 எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் முதலாம் அதிகாரத்தில், யெகோவா பிரமாண்டமான பரம இரதம் ஒன்றில் சவாரி செய்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அச்சத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தும் இந்த நான்கு சக்கர வாகனம், தானாக இயங்குகிறதாகவும், ஆச்சரியமான காரியங்களைச் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. பண்டைய பாபிலோனின் ஒரு வாய்க்கால் அருகே எசேக்கியேல் இருக்கையில் இந்தப் பரம இரதத்தைப் பொ.ச.மு. 613-ல் கண்டான். தீர்க்கதரிசி முதலாவதாக யெகோவாவின் பரம இரதத்தில் பணிபுரிகிறவர்களிடமாக நம்முடைய கவனத்தை இழுக்கிறான். நாம் வாசிக்கையில், எசேக்கியேல் கண்டதைக் கற்பனை செய்ய நாம் முயற்சி செய்வோம்.
நான்கு ஜீவன்கள்
3. நான்கு கேருபீன்களின் ஒவ்வொரு முகத்தாலும் சுட்டிக்காட்டப்படுவது என்ன?
3 எசேக்கியேல் அறிவிக்கிறான்: “இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும் . . . உண்டாயிருந்தது. அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின.” (எசேக்கியேல் 1:4, 5) இந்த நான்கு ஜீவன்கள் அல்லது கேருபீன்கள் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன. அவைகளுக்கு யெகோவாவின் நீதியைச் சுட்டிக்காட்டும் சிங்க முகமும், கடவுளுடைய வல்லமையைப் பிரதிநிதித்துவம் செய்யும் எருது முகமும், அவருடைய ஞானத்துக்கு அடையாளமாக இருக்கும் கழுகு முகமும் இருந்தன. யெகோவாவின் அன்பைக் குறிப்பிடும் மனுஷ முகமும்கூட அவைகளுக்கு இருந்தன.—உபாகமம் 32:4; யோபு 12:13; ஏசாயா 40:26; எசேக்கியேல் 1:10; 1 யோவான் 4:8.
4. கேருபீன்கள் ஏன் நான்கு முகங்களைக் கொண்டிருந்தன? கேருபீன்களின் வேகம் எதற்கு ஒப்பாக இருந்தது?
4 ஒவ்வொரு கேருபீனும் நான்கு திசைகளில் ஒரு திசையை நோக்கிய முகத்தைக் கொண்டிருந்தது. ஆகவே, கேருபீன்கள் பாதையை உடனடியாக மாற்றிக்கொண்டு விரும்பிய திசையில் பார்த்துக் கொண்டிருந்த முகத்தைப் பின்பற்ற முடியும். ஆனால் அவைகளின் வேகம் எதற்கு ஒப்பாக இருந்தது? ஏன், அவை மின்னல் வேகத்தில் செல்ல முடியும்! (எசேக்கியேல் 1:14) மனிதன் உண்டுபண்ணின எந்த வாகனமும் அந்த வேகத்தை எய்தியதே இல்லை.
5. எசேக்கியேல் எவ்விதமாக இரதத்தின் சக்கரங்களையும் அவைகளின் விளிம்புகளையும் வருணிக்கிறான்?
5 திடீரென்று இரதத்தின் சக்கரம் பார்வைக்குத் தெரிகிறது. அவை எத்தனை விநோதமாக இருக்கின்றன! வசனங்கள் 16 மற்றும் 18 சொல்வதாவது: “அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமா போல் இருந்தது. அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.” ஒவ்வொரு கேருபீனுக்கும் அருகே ஒரு சக்கரம் இருப்பது நான்கு தொடர்புடைய இடங்களில் நான்கு சக்கரங்களில் விளைவடையும். சக்கரம் ஒளி ஊடுருவக்கூடிய அல்லது ஒளி கசியக்கூடிய மஞ்சள் அல்லது பச்சைக் கல்லான படிகப்பச்சைப் போல் மின்னியது. இது இந்த மகிமையான காட்சிக்கு ஒளியையும் அழகையும் கூட்டுகிறது. சக்கரங்களின் விளிம்புகளைச் சுற்றிலும் “கண்களால் நிறைந்திருந்ததன்” காரணமாக, அவை வெறுமென ஏதாவது ஒரு திசையில் குருட்டுத்தனமாகப் போய்க்கொண்டில்லை. சக்கரங்கள் அளவிடமுடியாத உயரமாக இருந்தன, இவ்விதமாக அவற்றின் அச்சின் மீது, ஒரே ஒரு சுழற்சியிலேயே அவை மிக அதிகமான தூரத்தைக் கடக்கக்கூடியதாக இருந்தன. நான்கு கேருபீன்களைப் போல, அவை மின்னலைப் போல் வேகமாகச் செல்லக்கூடும்.
சக்கரத்துக்குள் சக்கரம்
6. (எ) இரதங்கள் சக்கரத்துக்குள் சக்கரத்தைக் கொண்டிருந்தது எவ்வாறு? (பி) சக்கரங்கள் தங்கள் இயக்கத்தின் திசையை எதற்கு இசைவாகக் கொண்டிருந்தன?
6 வேறு ஏதோ ஒன்று அசாதாரணமாக இருந்தது. ஒவ்வொரு சக்கரத்துக்குள்ளும் ஒரு சக்கரம் இருந்தது—அதே விட்டத்தைக் கொண்டதாய்க் குறுக்காக பொருந்துவதாய் இருந்தது. இவ்விதமாக இருந்தால் மாத்திரமே சக்கரங்கள், “நாலு பக்கங்களிலும் ஓடு”வதாகச் சொல்லப்படக்கூடும். (வசனம் 17) ஒவ்வொரு திசையையும் சக்கரத்தின் ஒரு பக்கம் நோக்கிக்கொண்டிருப்பதன் காரணமாக சக்கரங்கள் உடனடியாக திசையை மாற்றிக்கொள்ள முடியும். சக்கரங்கள் தங்கள் அசைவின் திசையை நான்கு கேருபீன்களுடையதற்கு இசைவாக கொண்டிருந்தன. சக்திவாய்ந்த ஒரு விமானம் தண்ணீரின் மீது மிதந்து செல்கையில் அதை ஒரு காற்று திண்டு பிடித்திருப்பதற்கு ஒப்பாக, நான்கு சக்கரங்களின் மீது கடவுளுடைய இரதத்தின் உடற்பகுதி கண்ணுக்குப் புலப்படாத ஒரு பலத்தினால் சவாரி செய்ய முடியும்.
7. சக்கரங்களுக்கு வல்லமையின் ஊற்றுமூலம் என்னவாக இருந்தது?
7 நான்கு கேருபீன்களின் எல்லா இயக்கங்களுக்கும் இசைவாக அமைத்துக் கொள்ள சக்கரங்கள் எங்கிருந்து வல்லமையைப் பெற்றுக் கொள்கின்றன? சர்வ வல்ல கடவுளுடைய பரிசுத்த ஆவியிலிருந்து. வசனம் 20 சொல்கிறது: “ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; . . . ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.” கேருபீன்களுக்குள் இருக்கும் அதே கடவுளுடைய காணக்கூடாத கிரியை நடப்பிக்கும் சக்தி அந்தச் சக்கரங்களில் இருந்தன.
8. சக்கரங்களுக்கு என்ன பெயர் கொடுக்கப்பட்டது? ஏன்?
8 சக்கரங்கள் “சக்கரவேலை” என்ற பதத்தால் குறிப்பிடப்பட்டன. (எசேக்கியேல் 10:13, NW) பொருத்தமாகவே ஒவ்வொரு சக்கரமும் செய்யும் வேலை இதைத் தெளிவுபடுத்தியது. அது நெடுக உருண்டோடுகிறது அல்லது சுழலுகிறது. பரம இரதத்தின் இந்தப் பகுதியை இவ்விதமாக குறிப்பிடுவது பரம இரதம் முன்செல்லும் வேகத்துக்கு கவனத்தை இழுக்கிறது. அதன் சக்கரங்கள் அத்தனை வேகமாக சுழன்றாலும், அவை கண்களால் நிறைந்திருந்ததால், அவை எப்போதும் தங்கள் வழியைப் பார்த்துக்கொள்ள முடியும்.
9. இரதத்தின் அதிவேகமாகச் செல்லும் நான்கு சக்கரங்களுக்கு மேல் இருந்ததை எசேக்கியேல் எவ்விதமாக வருணித்தான்?
9 ஆனால் இப்பொழுது அந்தப் பயங்கரமான உயரமுள்ள அதி–வேகமாகச் செல்லும் நான்கு சக்கரங்களின் மேல் என்ன இருக்கிறது என்று நோட்டமிட்டு பார்ப்போம். எசேக்கியேல் அதிகாரம் 1-ல் வசனம் 22 சொல்லுகிறது: “ஜீவனுடைய தலைகளின் மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப் பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.” மண்டலம் திடப்பொருளாக இருந்தபோதிலும் “வச்சிரப் பிரகாசத்தைப்” போல் ஒளி கசியக்கூடியதாக இருந்தது. சூரிய ஒளியில் ஆயிரக்கணக்கான வைரக்கற்கள் ஜொலிப்பது போல அது இருந்தது. நிச்சயமாகவே வியப்பூட்டுகிறது!
மகிமைப் பொருந்திய இரத சவாரியாளர்
10. (எ) சிங்காசனமும் சிங்காசனத்தின் மேல் இருப்பவரும் எவ்விதமாக வருணிக்கப்பட்டிருக்கிறார்கள்? (பி) இரதத்தின் சவாரியாளர் மகிமையில் சூழப்பட்டிருக்கும் உண்மையால் என்ன சுட்டிக்காட்டப்படுகிறது?
10 இரதத்தின் மேல் சவாரி செய்பவர் எசேக்கியேலிடம் பேசும் பொருட்டு இரதம் நிற்கிறது. மண்டலத்துக்கு மேலே, நீல இரத்தினம் அல்லது ஆழமான நீலம் போல விளங்கும் சிங்காசனத்துக்கு ஒத்த ஒன்று இருக்கிறது. சிங்காசனத்தின் மேல் மனுஷ சாயலுள்ள ஒருவர் இருக்கிறார். மனித உருவானது இந்தத் தெய்வீக வெளிப்பாட்டை மதித்துணருவதற்கு எசேக்கியேலுக்கு உதவிசெய்யும். ஆனால் மனித உருவம் வெள்ளியும் தங்கமும் சேர்ந்த பிரகாசிக்கும் உலோக கலவையான சொகுசாவைப் போன்று ஜொலிக்கும் வண்ணமாக மகிமையினால் சூழப்பட்டிருக்கிறது. என்னே பிரமிக்க வைக்கும் அழகு! இந்த மனிதனைப் போன்ற உருவத்தின் இடுப்பிலிருந்து இந்த நேர்த்தியான மகிமை மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் பரந்து கிடக்கிறது. இவ்விதமாக முழு உருவமும் மகிமையால் சூழப்பட்டிருக்கிறது. யெகோவா விவரிக்கப்பட முடியாத அளவு மகிமைப் பொருந்தினவராக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. மேலுமாக சவாரி செய்பவரோடு அழகான வானவில்லும் உடன்செல்லுகிறது. ஒரு புயலுக்குப் பின் வானவில் தெரிவிக்கும் அமைதியும் சாந்தியும்தான் என்னே! அந்த அமைதியான மனநிலையைக் கொண்டவராய், யெகோவா ஞானம், நீதி, வல்லமை மற்றும் அன்பு என்ற தம்முடைய குணாதிசயங்களைப் பரிபூரண சமநிலையில் வைத்துக்கொள்கிறார்.
11. யெகோவாவின் இரதம் மற்றும் சிங்காசனத்தின் தரிசனத்தால் எசேக்கியேல் எவ்விதமாக பாதிக்கப்பட்டான்?
11 யெகோவாவின் இரதமும் சிங்காசனமும் ஒளியினாலும் அழகான வண்ணங்களாலும் சூழப்பட்டிருக்கின்றன. அந்தகாரம் மற்றும் மாயமந்திரத்தின் பிரபுவாகிய சாத்தானிலிருந்து என்னே மாறுபாடு! இவைகளெல்லாவற்றாலும் எசேக்கியேல் எவ்வாறு பாதிக்கப்பட்டான்? “அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்” என்று அவன் சொல்கிறான். “அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.”—எசேக்கியேல் 1:28.
இரதம் சித்தரித்தது என்ன
12. யெகோவாவின் பரம இரதத்தினால் சித்தரிக்கப்படுவது என்ன?
12 மகத்தான இந்த இரதத்தினால் சித்தரிக்கப்படுவது என்ன? அது யெகோவா தேவனின் பரம அல்லது பரலோக அமைப்பாகும். இது காணக்கூடாத இடத்திலுள்ள அவருடைய எல்லாப் பரிசுத்த ஆவி சிருஷ்டிகள் அடங்கியது—சேராபீன்கள், கேருபீன்கள், தேவதூதர்கள். யெகோவா மகா உன்னத கடவுளாக இருப்பதன் காரணமாக, அவருடைய ஆவி சிருஷ்டிகள் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றன, அவர் பயனுள்ள வகையில் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி தம்முடைய நோக்கத்திற்கிசைவாக அவைகளைப் பயன்படுத்தும் கருத்தில், அவர் அவைகள் மீது சவாரி செய்கிறார்.—சங்கீதம் 103:20.
13 யெகோவா ஓர் இரதத்தின் மேல் சவாரி செய்வது போல இந்த அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தி, அவருடைய ஆவி அதை எங்கெல்லாம் ஏவுகிறதோ, அங்கெல்லாம் செல்லும்படி செய்கிறார். கட்டுப்பாடோ அல்லது புத்திக்கூர்மையான கண்காணிப்போ இல்லாமல் அது கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டில்லை. இந்த அமைப்பு அது செல்ல விரும்பும் எந்தத் திசையிலும் செல்வதற்கு கடவுள் அனுமதிப்பதில்லை. மாறாக, அது அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுகிறது. ஒன்றுசேர்ந்து, அனைத்தும் கடவுளுடைய நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றிட, ஐக்கியமாக முன்செல்லுகின்றன. முன்செல்லும் யெகோவாவின் நான்கு–சக்கர பரம இரதத்தின் இந்தத் தரிசனத்தால் என்னே ஒரு மகத்தான பரலோக அமைப்பு வெளிப்படுத்தப்படுகிறது! இதற்கிசைவாக யெகோவாவின் அமைப்பு நான்கு சதுரமாக, பரிபூரண சமநிலையில் இருப்பதாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
ஒரு காவற்காரனாக நியமிக்கப்படுகிறான்
14. தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் யாருக்குப் படமாக இருக்கிறான்?
14 ஆனால் எசேக்கியேல் தீர்க்கதரிசி யாருக்குப் படமாக இருக்கிறான்? ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் தொகுதியே இந்தப் பரம இரதத்தோடு கூட்டுறவு கொண்டுள்ளனர் என்பது சரித்திர உண்மைகளிலிருந்து தெளிவாக இருக்கிறது. இவ்வாறாக, எசேக்கியேல், 1919 முதற்கொண்டு யெகோவாவின் சாட்சிகளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்கே படமாக இருக்கிறான். ஆவிக்குரிய வகையில், கடவுளுடைய பரலோக அமைப்பு, உலகமனைத்துக்கும் யெகோவாவின் சாட்சிகளாக அவர்களுக்கு உயிர்ப்பூட்டுவதற்கு அந்த வருடத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரோடு தொடர்பு கொண்டது. (வெளிப்படுத்துதல் 11:1–12 ஒப்பிடவும்.) அந்த இரதம் போன்ற அமைப்பு இன்றிருப்பது போலவே, அப்போது முதற்கொண்டு முன்சென்று கொண்டிருந்தது. உண்மையில், அதன் முன்னேற்ற சக்கரங்கள் எக்காலத்திலிருந்ததையும்விட வேகமாக சுழன்றுக்கொண்டிருக்கிறது. யெகோவா விரைவாக முன்னோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறார்!
15. இரதத்தின் சவாரியாளரின் குரல் என்ன சொல்லுகிறது? எசேக்கியேல் என்ன பொறுப்பைப் பெற்றுக்கொள்கிறான்?
15 பரம இரதம் தனக்கு முன்பாக வந்து ஏன் நின்றுவிட்டது என்பதை எசேக்கியேல் அறிந்து கொள்ள விரும்பினான். இரதத்தின் மீது அமர்ந்திருந்தவரிடமிருந்து வந்த சப்தத்திலிருந்து அதை அவன் தெரிந்து கொண்டான். வியப்பூட்டும் இந்தக் காட்சியினால் ஆட்கொள்ளப்பட்டு எசேக்கியேல் முகங்குப்புற விழுந்தான். இரதத்தின் சவாரியாளரின் குரல் பேசுகையில் செவிசாய்த்துக் கேளுங்கள்: “மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன்.” (எசேக்கியேல் 2:1) பிறகு யெகோவா காவற்காரனாக இருக்கவும் கலகக்கார இஸ்ரவேல் வீட்டாரை எச்சரிக்கவும் எசேக்கியேலுக்கு பொறுப்பளிக்கிறார். அவன் தெய்வீக நாமத்தில் பேசும்படியாகவும்கூட பொறுப்பளிக்கப்படுகிறான். எசேக்கியேலுடைய பெயருக்கு “கடவுள் பலப்படுத்துகிறார்” என்பது பொருளாகும். ஆகவே எசேக்கியேல் வகுப்பாரை பலப்படுத்தி, கிறிஸ்தவமண்டலத்துக்கு காவற்காரனாக நியமித்து அவர்களை அனுப்பியிருப்பது கடவுளே.
16, 17. (எ) பரம இரதத்தின் தரிசனம் எசேக்கியேலுக்கு எவ்விதமாக பிரயோஜனமாயிருந்தது? (பி) நம்முடைய நாளில், பரம இரத தரிசனத்தின் புரிந்துகொள்ளுதல், எசேக்கியேல் வகுப்பாரையும் திரள் கூட்டத்தாரையும் எவ்விதமாக பாதித்திருக்கிறது?
16 பரம இரதத்தின் தரிசனம் எசேக்கியேலுக்கு அமைதிப்படுத்துவதாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருந்தது, ஆனால் எருசலேமுக்கு வரவிருந்த அழிவைப் பற்றிய எச்சரிக்கையை முழங்குவதற்கு அவனுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கு அவனை தயாரிக்கவும் செய்தது. இதுவே இன்று காவற்கார வகுப்பாரின் விஷயத்திலும் உண்மையாக இருந்திருக்கிறது. முன்செல்லும் யெகோவாவின் பரம இரதத்தின் காட்சியைப் பற்றிய அவர்களுடைய புரிந்துகொள்ளுதல், அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1931-ல் வின்டிகேஷன் (Vindication), புத்தகம் 1-ல் வெளிப்படுத்தப்பட்டபடி, அவர்கள் எசேக்கியேலின் தரிசனத்தைப் பற்றி அதிகத்தை கற்றறிந்தனர். பின்னர் அவர்கள் அத்தனை அறிவுத்தெளிவுள்ள போற்றுதலினால் நிறைந்தவர்களாய், 1931, அக்டோபர் 15 இதழ் முதல் 1950 ஆகஸ்ட் 1 வரையாக காவற்கோபுரம் [ஆங்கிலம்] பத்திரிகையின் அட்டைப்படம் அதன் மேல் வலது பக்கத்தில் எசேக்கியேலின் பரம இரத தரிசனம் பற்றிய ஓர் ஓவியரின் கருத்துப்படத்தைக் கொண்டிருந்தது. எசேக்கியேல் வகுப்பார், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பின் மீது செயல்பட்டு இருக்கிறார்கள். தெய்வீக எச்சரிக்கையை முழங்கிக்கொண்டு ஒரு காவற்காரனாக சேவித்து வந்திருக்கிறார்கள். தம்முடைய பரம இரதத்தின் மீது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் யெகோவாவிடமிருந்து கிறிஸ்தவமண்டலத்துக்கு வரவிருக்கும் பயங்கரமான அழிவுக்கான சமயம் முன்னொருபோதும் இத்தனை சமீபத்தில் இல்லை!
17 இன்று, செம்மறியாடுகளைப் போன்ற “திரள் கூட்டத்தார்” அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரோடு கூட்டுறவுக் கொண்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) அவர்கள் ஒன்றுசேர்ந்து கிறிஸ்தவமண்டலத்தின் மீதும் இந்த முழு சாத்தானிய ஒழுங்கு முறையின் மீதும் வர இருக்கும் அழிவுபற்றிய எச்சரிக்கையை முழங்கிவருகின்றனர். இந்த எச்சரிப்பு வேலை விரைவாக நடைபெற்று வருகிறது, வெளிப்படுத்துதல் 14:6, 7-ல் குறிப்பிட்டிருப்பது போல, தேவதூதர்கள் இதற்கு துணையாக இருந்து வருகிறார்கள்.
பரம இரதத்தோடு முன்செல்லுதல்
18. தேவதூதர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெறுவதற்கு என்ன செய்யப்பட வேண்டும்? நாம் எதற்கு உடனடியாக பிரதிபலிக்க வேண்டும்?
18 யெகோவாவின் பூமிக்குரிய ஊழியர்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பு எச்சரிக்கைகளை அறிவிக்கும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றும் போது கீழ்ப்படிதலுள்ள தேவதூதர்கள் அவர்களுக்கு உதவி செய்து கொண்டு கடவுளுடைய பரலோக அமைப்பின் பாகமாக ஒற்றுமையாக முன்செல்லுகிறார்கள். நாம் தொடர்ந்து கடவுளுடைய இந்த வல்லமைவாய்ந்த தேவதூத ஊழியர்களின் பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் பெற விரும்பினால், நாமும்கூட ஒற்றுமையாக முன்செல்லும் அடையாள அர்த்தமுள்ள சக்கரவேலையோடு இணையாக முன்னேறிச் செல்ல வேண்டும். மேலுமாக, யெகோவாவின் பரம இரதத்தோடு இணையாக முன்செல்லும் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் பாகமாக கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலுக்கு உடனடியாக பிரதிபலிக்கிறவர்களாக இருக்க வேண்டும். (பிலிப்பியர் 2:13 ஒப்பிடவும்.) நாம் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறோமென்றால், பரம இரதம் முன்செல்லும் அதே திசையில் நாம் முன் செல்ல வேண்டும். நாம் நிச்சயமாகவே அதனுடைய நோக்கத்துக்கு எதிராக செயல்படக்கூடாது. நாம் செல்ல வேண்டிய வழியைக் குறித்து நமக்கு அறிவுரை கொடுக்கப்படுகையில், நாம் அதைப் பின்பற்ற வேண்டும். இவ்விதமாக சபை பிரிவினை இல்லாததாக இருக்கும்.—1 கொரிந்தியர் 1:10.
19. (எ) பரம இரதம் அவைகளின் சக்கரங்களைச் சுற்றிலும் கண்களைக் கொண்டிருப்பது போல, யெகோவாவின் மக்கள் எதற்கு விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும்? (பி) கொந்தளிப்பான இந்தக் காலங்களில் செல்லும் வழி என்னவாக இருக்க வேண்டும்?
19 கடவுளுடைய இரதத்தின் சக்கரங்களைச் சுற்றிலுமுள்ள கண்கள், இடையறாத விழிப்பை குறிப்பிட்டுக் காண்பிக்கின்றன. பரலோக அமைப்பு விழிப்பாயிருப்பது போலவே, நாம் யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பை ஆதரிப்பதற்கு விழிப்பாயிருக்க வேண்டும், சபை அளவிலே, உள்ளூர் மூப்பர்களோடு ஒத்துழைப்பதன் மூலம் அந்த ஆதரவை நாம் காண்பிக்கலாம். (எபிரெயர் 13:17) கொந்தளிப்பான இந்தக் காலங்களில் கிறிஸ்தவர்கள் யெகோவாவின் அமைப்பை மிக நெருக்கமாக பற்றிக் கொண்டிருப்பது அவசியமாகும். சம்பவங்களைக் குறித்து நாம் சொந்தமாக அர்த்தஞ் சொல்ல விரும்ப மாட்டோம், ஏனென்றால் அப்போது நாம் யெகோவாவின் பரம இரதத்தோடு முன்சென்று கொண்டிருக்க மாட்டோம். ‘எந்த வழியில் பரம இரதம் சென்றுக் கொண்டிருக்கிறது?’ என்பதாக நம்மைநாமே கேட்டுக் கொள்வோமாக. நாம் கடவுளுடைய காணக்கூடிய அமைப்போடு முன்னோக்கிச் செல்வோமானால், நாம் காணக்கூடாத அமைப்போடு முன்சென்று கொண்டிருப்போம்.
20. பிலிப்பியர் 3:13–16-ல் அப்போஸ்தலனாகிய பவுல் என்ன நேர்த்தியான புத்திமதியைக் கொடுக்கிறான்?
20 இந்த விஷயத்தைக் குறித்து பவுல் எழுதினான்: “சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை, ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக் கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அது முதல் ஒரே ஒழுங்காய் நடந்து கொண்டு ஒரே சிந்தையாயிருப்போமாக.”—பிலிப்பியர் 3:13–16.
21. என்ன பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் கடவுளுடைய அமைப்போடு ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்வது சாத்தியமாகும்?
21 இங்கே “சீராக” என்ற வார்த்தை விடுபடமுடியாத ஒரு மோசமான பழக்கமாக இல்லை. யெகோவாவின் ஊழியர்கள், ஒரு நேர்த்தியான பழக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்கிறார்கள். தனிப்பட்ட பைபிள் படிப்பில் ஈடுபடுவது, சபை கூட்டங்களில் ஆஜராயிருப்பது, ராஜ்யத்தின் நற்செய்தியை ஒழுங்காகப் பிரசங்கிப்பது, கடவுளுடைய பரலோக அமைப்பின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பது ஆகியவற்றை ஒழுங்காகச் செய்வதாகும். இப்படிப்பட்ட பழக்கம் யெகோவாவின் பரம இரதம் போன்ற அமைப்பின் வழிநடத்துதலை பின்பற்றுவதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறது. நாம் தரித்திருப்பதன் மூலம், அது பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கையின் பரிசாக இருந்தாலும் அல்லது பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனாக இருந்தாலும், நாம் நம்முடைய இலக்கை அடைந்திடுவோம்.
22. (எ) அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரும் வேறே ஆடுகளின் திரளான கூட்டத்தாரும், ஐக்கியமாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதற்கு என்ன செய்யப்பட வேண்டும்? (பி) எது யெகோவாவின் கவனத்தை தப்பிவிடுவதில்லை?
22 யோவான் 10:16 காண்பிப்பது போல, “வேறே ஆடு”களும் எசேக்கியேல் வகுப்பாரும் ஐக்கியமாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பார்கள். இதன் காரணமாக, யெகோவாவின் அமைப்பிலுள்ள அனைவரும் கடவுளுடைய பரம இரதத்தோடு அவர்கள் ஒற்றுமையாக முன்செல்ல வேண்டுமானால், எசேக்கியேல் அதிகாரம் 1-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தரிசனத்தின் முழு கருத்தையும் முக்கியத்துவத்தையும் கிரகித்துக் கொள்ள வேண்டும். அதனுடைய தரிசனம், நாம் காணக்கூடிய மற்றும் காணக்கூடாத கடவுளுடைய அமைப்புக்கு இசைவாக முன்செல்ல வேண்டும் என்பதை மதித்துணருவதற்கு நமக்கு உதவி செய்கிறது. “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” என்பதை மனதில் வையுங்கள். (2 நாளாகமம் 16:9) எந்த ஒரு காரியமும், விசேஷமாக தம்மை சர்வலோக பேரரசராக நியாயநிரூபணம் செய்ய வேண்டும் என்ற அவருடைய நோக்கத்தின் சம்பந்தமாக எதுவும் யெகோவாவின் கவனத்துக்கு தப்பிவிடுவதில்லை.
23. யெகோவாவின் பரம இரதம் முன்சென்றுக்கொண்டிருப்பதால், நாம் என்ன செய்யவேண்டும்?
23 யெகோவாவின் பரம இரதம் இன்று நிச்சயமாகவே முன்சென்று கொண்டிருக்கிறது. விரைவில் அந்த இரதத்தில் சவாரி செய்யும் மகிமைப் பொருந்தினவருக்கு இசைவாக அனைத்தும் மகிமைக்கு கொண்டுவரப்படும்—அனைத்தும் அவரை சர்வலோக பேரரசரான ஆண்டவராக நியாயநிரூபணம் செய்யும். அவருடைய சேராபீன்கள், கேருபீன்கள் மற்றும் தேவதூதர்கள் நம்முடைய மிகப்பெரிய உலகளாவிய பிரசங்க வேலையில் நம்மை ஆதரித்து வருகிறார்கள். அப்படியென்றால் யெகோவாவின் பரலோக அமைப்போடுகூட முன்னோக்கிச் செல்வோமாக. ஆனால் அதிவேகமாகச் செல்லும் அந்தப் பரம இரதத்துக்கு ஈடாக நாம் எவ்விதமாக முன்செல்ல முடியும்? இப்பத்திரிகையின் அடுத்த இதழ் இதைக் கலந்தாலோசிக்கும். (w91 3/15)
நீங்கள் எவ்விதம் பதிலளிப்பீர்கள்?
◻ எசேக்கியேல் கண்ட நான்கு ஜீவன்களால் என்ன குணாதிசயங்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன?
◻ யெகோவாவின் பரம இரதம் எதற்குப் படமாக இருக்கிறது?
◻ கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் யாருக்குப் படமாக இருக்கிறான்?
◻ யெகோவாவின் பரம இரதத்தைப் பற்றிய தெளிவு எவ்வாறு எசேக்கியேல் வகுப்பாரையும் திரள் கூட்டத்தாரையும் பாதித்திருக்கிறது?
13. (எ) யெகோவா தம்முடைய அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஏன் சொல்லப்படலாம்? (பி) முன்செல்லும் யெகோவாவின் நான்கு–சக்கர இரதத்தின் தரிசனம் உங்களை எவ்வாறு பாதிக்கிறது?