கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள், அவரது வாக்குறுதிகளிலிருந்து நன்மை அடையுங்கள்
‘ஆணையிட்டுச் சொல்வதற்குத் தம்மைவிடப் பெரியவர் யாரும் இல்லாததால் கடவுள் தம்மீதே ஆணையிட்டார்.’—எபி. 6:13.
1. யெகோவாவின் வாக்குறுதிகளுக்கும் அபூரண மனிதர்களின் வாக்குறுதிகளுக்கும் என்ன வித்தியாசம்?
யெகோவா தேவன் ‘சத்தியபரர்.’ (சங். 31:5) மனிதர்களோ அபூரணர், அவர்களை நம்ப முடியாது. ஆனால் யெகோவாவை நம்பலாம், அவரால் ‘பொய் சொல்லவே முடியாது.’ (எபி. 6:18; எண்ணாகமம் 23:19-ஐ வாசியுங்கள்.) மனிதகுலத்தின் நன்மைக்காக அவர் கொடுக்கிற வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறுகின்றன. உதாரணத்திற்கு, படைப்பின் சமயத்தில் ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் என்ன செய்யப்போவதாக வாக்குறுதி அளித்தாரோ “அது அப்படியே ஆயிற்று.” ஆறாம் நாளின் முடிவில், “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”—ஆதி. 1:6, 7, 30, 31.
2. கடவுளுடைய ஓய்வுநாள் என்பது என்ன, அதை அவர் பரிசுத்தமாக்கியது நமக்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறது?
2 யெகோவா தேவன் தம்முடைய படைப்புகளையெல்லாம் பார்வையிட்ட பிறகு, ஏழாம் நாள் ஆரம்பித்ததாக அறிவித்தார். அது கடவுளுடைய ஓய்வுநாள்; அந்த நாள் வெறும் 24 மணிநேர நாளல்ல, பூமிக்குரிய படைப்பு வேலையிலிருந்து அவர் ஓய்ந்திருக்கிற நீண்ட காலப்பகுதியாகும். (ஆதி. 2:2) கடவுளுடைய அந்த ஓய்வுநாள் இன்னும் முடிவடையவில்லை. (எபி. 4:9, 10) அது எப்போது ஆரம்பமானதென்று பைபிள் துல்லியமாகக் குறிப்பிடாவிட்டாலும், சுமார் 6,000 ஆண்டுகளுக்குமுன், ஏவாள் படைக்கப்பட்டு சிறிது காலத்திற்குப்பின், ஆரம்பமானதாகத் தெரிகிறது. வெகு சீக்கிரத்தில் இயேசு கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சி பூமியில் தொடங்கப்போகிறது; அப்போது, பரிபூரண மனிதர்கள் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கம் நிறைவேறும். (ஆதி. 1:27, 28; வெளி. 20:6) அப்படிப்பட்ட சந்தோஷமான எதிர்காலம் வருமென்று நீங்கள் நிச்சயமாய் இருக்க முடியுமா? முடியும்! ஏனென்றால், “தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” இந்த வார்த்தைகள், எதிர்பாரா பிரச்சினைகள் வந்தாலும் அவருடைய நோக்கம் ஓய்வுநாளின் முடிவில் நிறைவேறும் என்ற உத்தரவாதத்தை அளிக்கின்றன.—ஆதி. 2:3.
3. (அ) கடவுளுடைய ஓய்வுநாள் ஆரம்பமான பிறகு என்ன கலகம் வெடித்தது? (ஆ) அந்தக் கலகத்தை ஒடுக்க யெகோவா என்ன வாக்குறுதியை அளித்தார்?
3 ஆனால், கடவுளுடைய ஓய்வுநாள் ஆரம்பமான பிறகு ஒரு கலகம் வெடித்தது. தேவதூதர்களில் ஒருவனாக இருந்த சாத்தான், கடவுளுக்குச் சேர வேண்டிய வணக்கத்தைத் தட்டிப்பறிக்க முயன்றான். அதற்காக, முதன்முதலில் ஒரு பொய்யைச் சொல்லி ஏவாளை ஏமாற்றினான்; அவள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனாள். (1 தீ. 2:14) தன் கணவனையும் கீழ்ப்படியாமல்போகும்படி செய்தாள். (ஆதி. 3:1-6) அண்டசராசரத்திலேயே இதற்குமுன் இப்படியொரு மோசமான கலகம் நடந்ததில்லை. கடவுள் பொய் சொல்வதாக சாத்தான் குற்றம்சாட்டிய அந்தச் சமயத்தில்கூட, தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்பதை ஆணையிட்டு உறுதிப்படுத்த வேண்டுமென அவர் நினைக்கவில்லை. மாறாக, அந்தக் கலகம் ஒடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார், அதைத் தீர்க்கதரிசனமாகத் தெரிவித்தார்: “உனக்கும் [சாத்தானுக்கும்] ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் [வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியானவர்] உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—ஆதி. 3:15; வெளி. 12:9.
ஆணையிட்டுக் கொடுக்கும் முறை—சட்டப்பூர்வ முறை
4, 5. ஆபிரகாம் என்ன சட்டப்பூர்வ முறையைப் பயன்படுத்தினார்?
4 ஒரு விஷயம் நிஜமென்பதை நிரூபிப்பதற்கு ஆணையிட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் அதுவரை யாருக்குமே இருக்கவில்லை. காரணம், கடவுளால் பரிபூரணமாகப் படைக்கப்பட்ட அனைவருமே அவரை நேசித்தார்கள், அவரைப் பின்பற்றினார்கள், எப்போதும் உண்மை பேசினார்கள், ஒருவர்மீது ஒருவர் முழு நம்பிக்கை வைத்தார்கள்; எனவே, ஆணையிட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால், முதல் தம்பதியர் எப்போது பாவம் செய்து அபூரணர் ஆனார்களோ அப்போதே நிலைமை தலைகீழாக மாறியது. காலப்போக்கில், பொய்யும் பித்தலாட்டமும் மனிதரிடையே சர்வ சகஜமானது; அதனால், முக்கியமான விஷயங்களை உண்மையென நிரூபிப்பதற்கு ஆணையிட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
5 அப்படி ஆணையிட்டுக் கொடுப்பது பூர்வ காலத்தில் ஒரு சட்டப்பூர்வ முறையாக இருந்தது; இந்த முறையை, ஆபிரகாம் குறைந்தது மூன்று தடவை பயன்படுத்தினார். (ஆதி. 21:22-24; 24:2-4, 9) உதாரணத்திற்கு, ஏலாமின் ராஜாவையும் அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துவிட்டு ஆபிரகாம் திரும்பிவந்த சமயத்தில் என்ன நடந்ததென்று பார்க்கலாம். சாலேம் மற்றும் சோதோமின் ராஜாக்கள் ஆபிரகாமை வழியில் சந்தித்தார்கள். சாலேமின் ராஜாவான மெல்கிசேதேக்கு ‘உன்னதமான தேவனுடைய ஆசாரியனாகவும்’ இருந்தார். அவர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார்; ஆபிரகாமுக்கு வெற்றியைத் தந்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். (ஆதி. 14:17-20) பின்பு சோதோமின் ராஜா, எதிரி படையிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்றிய ஆபிரகாமுக்குப் பரிசளிக்க விரும்பியபோது, ஆபிரகாம் அவரிடம் இவ்வாறு ஆணையிட்டுச் சொன்னார்: ‘ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய யெகோவாவுக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.’—ஆதி. 14:21-23.
ஆபிரகாமுக்கு யெகோவா ஆணையிட்டுக் கொடுத்த வாக்குறுதி
6. (அ) ஆபிரகாம் நமக்கு என்ன முன்மாதிரி வைத்தார்? (ஆ) ஆபிரகாம் கீழ்ப்படிந்ததால் நாம் எப்படி நன்மை அடைவோம்?
6 ‘என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’ (எசே. 17:16) இப்படி 40-க்கும் அதிகமான முறை யெகோவா ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறார்; பாவத்தில் வீழ்ந்த மனிதகுலம் தம் வாக்குறுதிகளில் நம்பிக்கையோடு இருப்பதற்காகவே அப்படிச் செய்திருக்கிறார். யெகோவா ஆபிரகாமுக்கு ஏராளமான வாக்குறுதிகளை ஆணையிட்டுக் கொடுத்தது அதற்கு மிகச் சிறந்த உதாரணம்; ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் வம்சத்தில்தான் வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியானவர் வருவாரென்பதை அந்த வாக்குறுதிகள் அனைத்தும் உறுதிப்படுத்தின. (ஆதி. 12:1-3, 7; 13:14-17; 15:5, 18, 21; 21:12) அக்காலத்தில், யெகோவா ஆபிரகாமுக்கு ஒரு கடும் சோதனையை முன்வைத்தார்; அவருடைய அன்பு மகனைத் தமக்குப் பலிசெலுத்தும்படி கட்டளையிட்டார். ஆபிரகாம் உடனடியாகக் கீழ்ப்படிந்தார்; தன் மகனைப் பலிசெலுத்த கத்தியை ஓங்கினார், அப்போது ஒரு தேவதூதர் அவரைத் தடுத்தார். உடனே யெகோவா இவ்வாறு ஆணையிட்டுக் கொடுத்தார்: “நீ உன் புத்திரன் என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன்.”—ஆதி. 22:1-3, 9-12, 15-18.
7, 8. (அ) ஆபிரகாமுக்குக் கடவுள் ஏன் ஆணையிட்டுக் கொடுத்தார்? (ஆ) கடவுள் ஆணையிட்டுக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து ‘வேறே ஆடுகள்’ எப்படி நன்மை அடைவார்கள்?
7 தம்முடைய வாக்குறுதிகள் நிறைவேறுமென்று யெகோவா ஏன் ஆபிரகாமிடம் ஆணையிட்டுக் கொடுத்தார்? கிறிஸ்துவோடு சக வாரிசுகளாய், அதாவது வாக்குப்பண்ணப்பட்ட ‘சந்ததியின்’ இரண்டாம் பாகமாய், ஆகவிருந்தோருக்கு நம்பிக்கையூட்டி, அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காகவே ஆணையிட்டுக் கொடுத்தார். (எபிரெயர் 6:13-18-ஐ வாசியுங்கள்; கலா. 3:29) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்கினார்: “கடவுளால் பொய் சொல்லவே முடியாத, மாறாத்தன்மையுள்ள இரண்டு காரியங்களை [அதாவது, அவருடைய வாக்குறுதியையும் அவருடைய ஆணையையும்] வைத்துப் பார்க்கும்போது, . . . நாம், நம்முன் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு மிகுந்த ஊக்கம் பெறுவதற்காகவே [ஓர் ஆணையினால்] அதை உறுதிப்படுத்தினார்.”
8 ஆபிரகாமுக்குக் கடவுள் ஆணையிட்டுக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமே நன்மை அடையப்போவதில்லை. ஆபிரகாமின் “சந்ததி” மூலமாக “பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்று யெகோவா ஆணையிட்டுக் கொடுத்தார். (ஆதி. 22:18) அப்படி ஆசீர்வதிக்கப்படுபவர்களில் “வேறே ஆடுகளும்” அடங்குவர்; பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழப்போகும் நம்பிக்கையை அவர்கள் கண்முன் வைத்திருக்கிறார்கள். (யோவா. 10:16) உங்களுக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமிக்குரிய நம்பிக்கை இருந்தாலும் சரி, கடவுளுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிவதன் மூலம் அந்த நம்பிக்கையை உறுதியாக ‘பற்றிக்கொள்ளுங்கள்.’—எபிரெயர் 6:11, 12-ஐ வாசியுங்கள்.
கடவுள் ஆணையிட்டுக் கொடுத்த மற்ற வாக்குறுதிகள்
9. எகிப்தில் அடிமைகளாயிருந்த ஆபிரகாமின் சந்ததியாருக்குக் கடவுள் எதை ஆணையிட்டுக் கொடுத்தார்?
9 பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, யெகோவா ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்; எகிப்தில் அடிமைகளாயிருந்த ஆபிரகாமின் சந்ததியாரிடம் பேசுவதற்காக மோசேயை அனுப்பியபோது அவற்றை உறுதிப்படுத்தினார். (யாத். 6:6-8) ‘நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே . . . நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைப்பேன், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிற . . . தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவேன் என்று அந்நாளிலே ஆணையிட்டேன்.’—எசே. 20:5, 6.
10. எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்த பின்பு, யெகோவா என்ன வாக்குறுதியை அவர்களுக்கு அளித்தார்?
10 எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்த பின்பு, யெகோவா மற்றொரு வாக்குறுதியை ஆணையிட்டுக் கொடுத்தார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய [அதாவது, குருத்துவ] ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.” (யாத். 19:5, 6) எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஆம், இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்த தனி நபர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், அவருடைய அரசாங்கத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள், மனிதகுலத்திற்கு ஆசீர்வாதமாகத் திகழ்வார்கள். யெகோவா இன்னொரு சமயத்தில், இஸ்ரவேலருக்கு அந்த வாக்குறுதியை அளித்தபோது, ‘உனக்கு ஆணையிட்டுக் கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன்’ என்று சொன்னார்.—எசே. 16:8.
11. தம்முடைய விசேஷ ஜனமாக இருக்க யெகோவா இஸ்ரவேலருக்கு வாய்ப்பு அளித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்?
11 தம்முடைய விசேஷ ஜனமாக இருக்க யெகோவா இஸ்ரவேலருக்கு வாய்ப்பு அளித்தபோது, அதை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை அவர் பலவந்தப்படுத்தவில்லை, தமக்குக் கீழ்ப்படிவதாக ஆணையிட்டுக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, ‘யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம்’ என்று அவர்களாகவே இஷ்டப்பட்டுச் சொன்னார்கள். (யாத். 19:8) அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி யெகோவா மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குத் தெரிவித்தார். முதலாவது, பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார்; அதன்பின், யாத்திராகமம் 20:22-லிருந்து யாத்திராகமம் 23:33 வரை உள்ள இன்னும் பல கட்டளைகளை மோசே மூலமாகத் தெரிவித்தார். அவற்றையெல்லாம் கேட்ட இஸ்ரவேலர் என்ன சொன்னார்கள்? ‘ஜனங்கள் எல்லாரும் ஏக சத்தமாய்: யெகோவா அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.’ (யாத். 24:3) பிற்பாடு மோசே அந்தக் கட்டளைகளை ‘உடன்படிக்கையின் புஸ்தகத்தில்’ எழுதி வைத்தார்; அதன்பின், இஸ்ரவேலர் அனைவரும் மீண்டும் அவற்றைக் கேட்பதற்காகச் சத்தமாய் வாசித்தார். அப்போது, அவர்கள் மூன்றாவது முறையாக, ‘யெகோவா சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்’ என்று உறுதியளித்தார்கள்.—யாத். 24:4, 7, 8.
12. யெகோவா இஸ்ரவேலரோடு யெகோவா உடன்படிக்கை செய்த பின்பு என்ன செய்தார், இஸ்ரவேலர் கடவுளுக்கு வாக்குக் கொடுத்த பின்பு என்ன செய்தார்கள்?
12 யெகோவா இஸ்ரவேலரோடு செய்த உடன்படிக்கைக்கு இசைய உடனடியாகச் செயல்பட ஆரம்பித்தார்; அதில் தாம் வாக்குறுதி அளித்திருந்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார், அதோடு அபூரண மனிதர்கள் தம்மை அணுகுவதற்காகக் குருத்துவ வகுப்பைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலரோ அவருக்குக் கொடுத்த வாக்கை சீக்கிரத்திலேயே மறந்துபோனார்கள், ‘இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்,’ அதாவது வேதனைப்படுத்தினார்கள். (சங். 78:41) உதாரணத்திற்கு, சீனாய் மலையிலே மோசே கடவுளிடமிருந்து மேலும் பல அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் இஸ்ரவேலர் பொறுமை இழந்தார்கள், கடவுள்மேல் விசுவாசத்தை இழந்தார்கள், மோசே தங்களைக் கைவிட்டுச் சென்றதாகத் தப்புக்கணக்கு போட்டார்கள். எனவே, பொன் கன்றுக்குட்டி ஒன்றைச் செய்து, ‘இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வம் இதுவே’ என்றார்கள். (யாத். 32:1, 4) பின்பு, ‘யெகோவாவுக்குப் பண்டிகை’ என்ற பெயரில் கொண்டாட்டத்தில் இறங்கினார்கள், தாங்கள் உருவாக்கிய அந்தச் சிலைக்குமுன் விழுந்து வணங்கினார்கள், பலிகள் செலுத்தினார்கள். யெகோவா அதைப் பார்த்தபோது மோசேயிடம், “அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்” என்றார். (யாத். 32:5, 6, 8) அப்போதிருந்தே, கடவுளுக்கு வாக்குறுதிகளைக் கொடுப்பதும் அவற்றை மீறுவதும் இஸ்ரவேலரின் வழக்கமாகிப்போனது.—எண். 30:2.
இன்னும் இருமுறை ஆணையிட்டுக் கொடுத்தார்
13. தாவீதிடம் யெகோவா என்ன வாக்குறுதி அளித்தார், வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி பற்றிய வாக்குறுதிதான் அதுவென நமக்கு எப்படித் தெரியும்?
13 தாவீது ராஜாவின் காலத்தில் அவரிடம் யெகோவா மேலும் இரண்டு வாக்குறுதிகளை ஆணையிட்டுக் கொடுத்தார்; தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுடைய நன்மைக்காக அவற்றைக் கொடுத்தார். முதலாவது, தாவீதின் வம்சத்தில் வருபவர்கள்தான் என்றென்றும் அவருடைய சிம்மாசனத்தில் வீற்றிருப்பார்கள் என வாக்குறுதி அளித்தார். (சங். 89:35, 36; 132:11, 12) வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியானவர் தாவீதின் வம்சத்தில் வருவார் என்பதையும், “தாவீதின் மகன்” என அழைக்கப்படுவார் என்பதையும் அந்த வாக்குறுதி அர்த்தப்படுத்தியது. (மத். 1:1; 21:9) தன் வம்சத்தில் வரப்போகிறவர் தன்னைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார் என்பதால் தாவீது அவரை ‘எஜமானர்’ என மனத்தாழ்மையோடு அழைத்தார்.—மத். 22:42-44.
14. வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியைக் குறித்து யெகோவா என்ன வாக்குறுதி அளித்தார், அதிலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
14 இரண்டாவது, தாவீதின் வம்சத்தில் வரவிருந்தவர், ராஜாவாக மட்டுமல்ல மனிதகுலத்தின் தலைமைக் குருவாகவும் செயல்படுவார் என யெகோவா அவரிடம் வாக்குறுதி அளித்தார். இது மிக விசேஷ ஸ்தானமாக இருந்தது; ஏனென்றால், கடவுள் கொடுத்த சட்டத்தின்படி, ராஜாக்கள் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகவும், குருமார்கள் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டியிருந்தது. எனவே, ஒரே சமயத்தில் ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் ஒருவரால் சேவை செய்ய முடியாதிருந்தது. ஆனால், தாவீது தன் வம்சத்தில் வரவிருந்த ராஜாவைப் பற்றி இவ்வாறு முன்னுரைத்தார்: ‘யெகோவா என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.’ (சங். 110:1, 4) இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியான இயேசு கிறிஸ்து இன்று பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்கிறார். அதோடு, மனிதகுலத்தின் தலைமைக் குருவாகவும் சேவை செய்கிறார்; இதன் மூலம் கடவுளுடன் நல்லுறவை அனுபவிக்க மனந்திரும்புகிறவர்களுக்கு உதவுகிறார்.—எபிரெயர் 7:21, 25, 26-ஐ வாசியுங்கள்.
கடவுளுடைய இஸ்ரவேலர்
15, 16. (அ) எந்த இரண்டு விதமான இஸ்ரவேலரைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது, இன்று எந்த இஸ்ரவேலருக்குக் கடவுளுடைய ஆசீர்வாதம் இருக்கிறது? (ஆ) சத்தியம் செய்வது பற்றி இயேசு தம் சீடர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார்?
15 இஸ்ரவேலர் இயேசு கிறிஸ்துவை நிராகரித்ததால், கடவுளோடுள்ள நல்லுறவையும், ‘குருத்துவ ராஜ்யமாக’ ஆகிற வாய்ப்பையும் இழந்துபோனார்கள். இயேசு சொன்னபடியே, ‘கடவுளுடைய அரசாங்கத்தில் இருக்கிற வாய்ப்பு அவர்களிடமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகிற வேறு மக்களிடம் கொடுக்கப்பட்டது.’ (மத். 21:43) அந்த மக்கள், கி.பி. 33, பெந்தெகோஸ்தே அன்று ஏறக்குறைய 120 சீடர்கள்மீது கடவுளுடைய சக்தி பொழியப்பட்டபோது ஒரு புதிய தேசமாக உருவானார்கள். அவர்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்” என அழைக்கப்பட்டார்கள்; சீக்கிரத்திலேயே, பல்வேறு தேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அந்தப் புதிய தேசத்தின் பாகமானார்கள்.—கலா. 6:16.
16 பூர்வ இஸ்ரவேலரைப் போல் அல்லாமல், கடவுளுடைய இஸ்ரவேலர் தொடர்ந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, நல்ல கனிகளைப் பிறப்பிக்கிறார்கள். அவர்கள் கீழ்ப்படிகிற கட்டளைகளில் ஒன்று சத்தியம் செய்வது பற்றியதாகும். இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில், மக்கள் பொய்யாக ஆணையிட்டுச் சத்தியம் செய்தார்கள், அற்ப விஷயங்களுக்கெல்லாம் சத்தியம் செய்தார்கள். (மத். 23:16-22) அதனால் இயேசு தம் சீடர்களிடம், “நீங்கள் சத்தியமே செய்ய வேண்டாம் . . . நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்; இதற்கு மிஞ்சி சொல்லப்படுகிற எதுவும் பொல்லாதவனிடமிருந்தே வருகிறது” என்று சொன்னார்.—மத். 5:34, 37.
யெகோவாவின் வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறுகின்றன
17. அடுத்த கட்டுரை என்ன கேள்விகளுக்குப் பதிலளிக்கும்?
17 அப்படியானால், சத்தியம் செய்துகொடுப்பது எப்போதுமே தவறா? அதோடு, ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றே இருக்கட்டும் என்பது முக்கியமாக எதைக் குறிக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரை பதிலளிக்கும். கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசித்து, தியானித்தால் எப்போதும் நாம் அவருக்குக் கீழ்ப்படிவோம். அவரும் தாம் ஆணையிட்டுக் கொடுத்த வாக்குறுதிகளின்படியே நம்மை என்றென்றைக்கும் சந்தோஷமாக ஆசீர்வதிப்பார்.
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
யெகோவாவின் வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறுகின்றன
[பக்கம் 24-ன் படம்]
யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறுவதை ஆபிரகாம் சீக்கிரத்தில் பார்க்கப்போகிறார்