“நான் யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்”
என் பரிசுத்த நாமத்தை இனி பரிசுத்த குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் யெகோவா என்பதைத் தேசங்கள் அறிந்துகொள்வார்கள்.”—எசேக்கியேல் 39:7 NW.
யெகோவாவின் பரிசுத்த நாமம் பூர்வீக இஸ்ரவேலரால் பரிசுத்த குலைச்சலாக்கப்பட்டது. இதனை எசேக்கியேல் புத்தகம் தெளிவாக எடுத்துக்காண்பிக்கிறது. ஆனால் கிறிஸ்தவமண்டல மக்களுங்கூட தாங்கள் வணங்குவதாக உரிமைப்பாராட்டும் கடவுளுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகின்றனர்.
2 தம்முடைய நாமம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுவதை சர்வலோக பேரரசர் என்றென்றுமாகப் பொறுத்துக்கொண்டிருப்பாரா? இல்லை, ஏனென்றால் அவர் பின்வருமாறு அறிக்கை செய்திருக்கிறார்: “என் பரிசுத்த நாமத்தை இனி பரிசுத்த குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் தேசங்கள் நான் யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.”(எசேக்கியேல் 39:7, NW. எசேக்கியேல் 38:23-ஐயும் பார்க்கவும்.) இது எதை அர்த்தப்படுத்தும்? எசேக்கியேல் புத்தகத்தின் பின்னான அதிகாரங்களிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
மற்றவர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனங்கள்
3 எருசலேமின் அழிவுக்குப் பின்பு, யூதாவின் துன்பம் கண்டு களிப்படைந்ததற்காக அம்மோனும், யூதாவினிடமாக ஏளனமான மனப்பான்மையை வளர்த்ததற்காக மோவாபும் கண்டனம் செய்யப்பட்டது. ஏதோம் பகைமையை வளர்த்த குற்றத்துக்காகப் பிடிப்பட்டது, மற்றும் பெலிஸ்தர்களின் பழிவாங்கும் ஆவி கடவுளுடைய “உக்கிரமான தண்டனைகளை” வருவிப்பதாயிருந்தது. (எசேக்கியேல் 25:1-17; நீதிமொழிகள் 24:17, 18) எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவில் களிப்புற்றதற்காக தீரு பட்டணம் நேபுகாத்நேச்சாரால் மேற்கொள்ளப்படும். (எசேக்கியேல் 26:1-21) அவள் நிச்சயமாக மூழ்கும் கப்பலைப் போலிருந்தாள். (எசேக்கியேல் 27:1-36) தீருவின் “அதிபதி” அல்லது அரசன் (தெளிவாகவே அதன் அரச பரம்பரை) சாத்தானைப் போன்ற பெருமையின் ஆவியைக் கொண்டிருந்ததால் நீக்கப்பட்டான். (எசேக்கியேல் 28:1-26) எனவே யெகோவாவின் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கக்கூடிய அகந்தை என்னும் பாவத்தன்மையை நாம் நிச்சயமாகவே தவிர்க்க வேண்டும்.—சங்கீதம் 138:6; நீதிமொழிகள் 21:4.
4 எகிப்து 40 வருடங்களுக்கு பாழ்க்கடிப்பை அனுபவிக்கும் என்று எசேக்கியேல் முன்னறிவித்தான். அவளுடைய ஆஸ்தி, தீரு பட்டணம் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட இராணுவ சேவைக்கான நேபுகாத்நேச்சாருக்குக் கிடைத்த கூலியாகும். (எசேக்கியேல் 29:1-21) எகிப்தியர் சிதறடிக்கப்படுவதை கடவுள் நிறைவேற்றும்போது, ‘அவர் யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’ (எசேக்கியேல் 30:1-26) எகிப்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறவனாய், பெருமை கொண்ட பார்வோன் வெட்டப்படப்போகும் வளர்ந்தோங்கிய ஒரு கேதுரு மரத்துக்கு ஒப்பிடப்பட்டான். (எசேக்கியேல் 31:1-18) கடைசியாக, எசேக்கியேல் பார்வோனைக் குறித்தும், எகிப்து ஷியோலுக்குள் செல்வது குறித்தும் புலம்பற்பாட்டு பாடினான்.—எசேக்கியேல் 32:1-32.
காவற்காரனின் கடமை
5 ஒரு காவற்காரனாக தன்னுடைய கடமை என்ன என்பது குறித்து எசேக்கியேலுக்கு நினைவுபடுத்தப்பட்டது. (எசேக்கியேல் 33:1-7) உண்மைதான், தன்னுடைய கடமையைச் செய்து துன்மார்க்கனை எச்சரித்தால் மட்டுமே ஒரு ஆவிக்குரிய காவற்காரனைக் கடவுள் அங்கீகரிக்கிறார். (எசேக்கியேல் 33:8, 9-ஐ வாசிக்கவும்.) எனவே எசேக்கியேலைப் போலவே, அபிஷேகம்பண்ணப்பட்ட “காவற்காரன்” வகுப்பு தெய்வீக எச்சரிப்புகளைத் தைரியமாக அறிவிக்கிறது. துன்மார்க்கனுடைய மரணத்தில் தேவன் பிரியமாயிருப்பதில்லையாதலால், அவர்கள் எச்சரிப்புகளுக்குச் செவிகொடுத்து ‘ஜீவப்பிரமாணங்களில் நடந்தால்,’ அவர்களுடைய கடந்தகால பதிவை அவர் அவர்களுக்கு விரோதமாகக் கொள்ள மாட்டார். எசேக்கியேலின் நாட்களில், அந்தப் பிரமாணங்களில் நடப்பது அவற்றைக் கைக்கொள்ளுவதாகும், ஆனால் இப்பொழுதோ கிறிஸ்துவின் மீட்கும்பொருளை ஏற்பதையும், அவரைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பதையும் அர்த்தப்படுத்தியது (1 பேதுரு 2:21) கடவுள் மக்களை தண்டிப்பது அல்லது பலனளிப்பது சம்பந்தமாக எந்தவித ஊழலும் உட்படவில்லை, மற்றும் “மிகுந்த உபத்திரவத்தினுடே” காக்கப்படுவது அவருடைய பிரமாணங்களுக்கு இசைவாக நடப்பதைப் பொருத்தது.—எசேக்கியேல் 33:10-20; மத்தேயு 24:21.
6 பொ.ச.மு. 607-ன் முடிவுக்கு அண்மையில், சிறைப்பட்டிருந்த ஒருவன் எருசலேமின் அழிவைக் குறித்து அறிவித்தான், மற்றும் எசேக்கியேல் யெகோவாவின் செய்தியை மீண்டும் சொன்னான். (எசேக்கியேல் 33:21-29) சிறைப்பட்டிருந்தவர்கள் எப்படி பிரதிபலித்தனர்? (எசேக்கியேல் 33:30-33-ஐ வாசிக்கவும்.) சிறைப்பட்டிருந்த அந்த யூதர்களுக்கு எசேக்கியேல் ‘இன்பமான காதல் பாட்டு பாடுகிறவனாக’ இருந்தான். இன்று அநேகர் அந்த யூதர்களைப்போல இருக்கின்றனர். அபிஷேகம்பண்ணப்பட்டவர்களும் அவர்களுடைய தோழர்களும் வீடுவீடாகச் சந்திக்கும்போது, இந்த மக்கள் ராஜ்ய செய்தியின் ஒலியை அநுபவித்துக் கேட்கிறார்கள், ஆனால் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு இது ஓர் இன்பமான காதல் பாட்டு போல இருக்கிறது, ஆனால் அவர்கள் யெகோவாவுக்கு ஓர் ஒப்புக்கொடுத்தலைச் செய்வதில்லை, அவர்கள் “மிகுந்த உபத்திரவத்தை” தப்பிப்பிழைக்க மாட்டார்கள்.
யெகோவாவின் ஓரே “மேய்ப்பர்”
7 எருசலேமின் வீழ்ச்சிக்குப் பின்பு எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு செய்தியில், தம்முடைய பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிய அரசு சார்ந்த “இஸ்ரவேலின் மேய்ப்பர்களைக்” கண்டனம் செய்தார். அந்த வார்த்தைகள் கிறிஸ்தவமண்டல ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு நன்றாகப் பொருந்துகிறது! (எசேக்கியேல் 34:1-6-ஐ வாசிக்கவும்.) நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவைப் போன்றிராமல், கிறிஸ்தவமண்டல அரசியல் அதிபதிகள் “ஆடுகளைக்” கொண்டு தங்களைப் பொருளாதார விதத்தில் புஷ்டியாக்கிக்கொள்கின்றனர். (யோவான் 10:9-15) ஆனால் யூதா பாழாக்கப்பட்ட சமயத்தில் அந்தத் தன்னல மேய்ப்பர்களை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டதன் மூலம் தம்முடைய ஆடுகளை மீட்டது போல, மிகுந்த உபத்திரவத்தின்போது கிறிஸ்தவமண்டல ஆட்சியாளர்களை அவர்களுடைய அதிகாரத்திலிருந்து விலக்கிவிடுவதன் மூலம் மீண்டும் தம்முடைய ஆடுகளை மீட்டருளுவார். (வெளிப்படுத்துதல் 16:14-16; 19:11-21). பொ.ச. 1919-ல் ஆவிக்குரிய இஸ்ரவேலில் மீதியானோரை மகா பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொள்ள பெரிய கோரேசாகிய இயேசு கிறிஸ்துவைப் பயன்படுத்திய போது அவர்களிடம் அன்பு காண்பித்தது போல, பொ.ச.மு. 537-ல் பாபிலோனிலிருந்து தம்முடைய மக்களை மீட்கும் போதும் அந்தத் தன்மையைக் காண்பித்தார்.—எசேக்கியேல் 34:7-14.
8 கடவுள் தம்முடைய ஆடுகளைத் தயவாகக் கவனிக்கிறார். (எசேக்கியேல் 34:15, 16-ஐ வாசிக்கவும்.) ஒரு ‘புஷ்டியான ஆடு’ இன்று கடவுளுடைய மந்தையை ஒடுக்குமானால், யெகோவா அவனை இப்பொழுது சபைநீக்கம் மூலமும், “மிகுந்த உபத்திரவத்தில்” அழிப்பதன் மூலமும் அவனைப் “போஷித்திடுவார்.” 1914-ல் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோர் மீது“ஒரே மேய்ப்பராகிய” இயேசு கிறிஸ்துவை ஏற்படுத்தினார். 1935 முதல் “வேறே ஆடுகளின்” “திரள் கூட்டம்” கூட்டிச்சேர்க்கப்படும் வேலையை நடத்திவந்திருக்கிறார். ‘யெகோவாவின் மேய்ச்சலின் ஆடுகளாகிய’ அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுடன் சேர்ந்து இப்பொழுது சேவிக்கின்றனர். கடவுளையும் கிறிஸ்துவையும் போல கிறிஸ்தவ உடன் மேய்ப்பர்கள் இந்த எல்லா ஆடுகளையும் தயவாக நடத்தி வரவேண்டும்.—எசேக்கியேல் 34:17-31; வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16; சங்கீதம் 23:1-4; அப்போஸ்தலர் 20:28-30
ஓர் “ஏதேன் தோட்டம்”
9 பாழ்க்கடிப்பிலிருந்த யூதா மற்றும் இஸ்ரவேல் தேசத்தை மீண்டும் எண்ணிப்பாருங்கள். 70 ஆண்டுகளுக்கு குடியிருப்பின்றி இருப்பதன் மூலம் அது ஓய்ந்திருக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்திருந்ததால், ஏதோமும் மற்ற தேசங்களும் அந்தப் பிராந்தியத்தை ஆக்கிரமிக்காதபடிக்குக் கடவுள் தடை செய்தார். (2 நாளாகமம் 36:19-21; தானியேல் 9:2) உண்மையில், முன்னறிவிக்கப்பட்டபடி, ஏதோமும் அதன் சேயீர் மலைப்பிரதேசமுங்கூட பாழ்க்கடிப்பிற்குள் வந்தது, பொ.ச.மு. 602-601-ல் பாபிலோனியரின் அடிமைத்தனத்துக்குள் வந்தது.—எசேக்கியேல் 35:1-36:5; எரேமியா 25:15-26.
10 பொ.ச.மு. 537-ல் மீதியானோர் யூதாவுக்குத் திரும்ப கொண்டுவரப்பட்டு நிலைநாட்டப்பட்ட காரியம் நம்முடைய நாளுக்குரிய கிளர்ச்சி மிகுந்த சம்பவங்களைக் குறிப்பிட்டுக் காண்பித்தது. 1919-ல் “இஸ்ரவேல் மலைகள்” அல்லது யெகோவாவின் அபிஷேகம்பண்ணப்பட்ட சாட்சிகளின் ஆவிக்குரிய பிரதேசம் ஆவிக்குரிய புத்துயிர் பெற்ற மீதியானோரால் மீண்டும் குடியேற்றப்பட ஆரம்பித்தது. (எசேக்கியேல் 36:6-15) கடவுள் அவர்களை மத அசுத்தத்திலிருந்து சுத்திகரித்து அவர்களில் “புதிதான ஆவியை” வைத்து தம்முடைய பரிசுத்த ஆவியின் கனியைப் பிறப்பிக்கச் செய்தார். (கலாத்தியர் 5:22, 23) தம்முடைய மக்களைச் சிட்சித்ததைக் கண்டு உலக மக்கள் யெகோவாவின் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, அவர் மீதியானோரை அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார்.—எசேக்கியேல் 36:16-32.
11 மீதியானோர் யூதாவுக்குத் திரும்பிய பின்பு, பாழ்க்கடிப்பிலிருந்த அந்தத் தேசம் மிகுந்த பலன்தரும் ஒரு “ஏதேன் தோட்டமாக” மாற்றப்பட்டது. (எசேக்கியேல் 36:33-36-ஐ வாசிக்கவும்.) அதுபோல 1919 முதற்கொண்டு, ஒரு சமயத்தில் பாழாக்கப்பட்ட நிலையிலிருந்த அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோரின் பிரதேசத்தை யெகோவா மிகுந்த பலன் தரும் ஆவிக்குரிய பரதீஸாக மாற்றியிருக்கிறார் இது இப்பொழுது “திரள் கூட்டத்”தாருடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஆவிக்குரிய பரதீஸ் பரிசுத்த மக்களால் குடியேற்றப்பட்டிருப்பதால், ஒப்புக்கொடுத்திருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளப் பிரயாசப்படுவானாக.—எசேக்கியேல் 36:37, 38.
ஐக்கியம் திரும்ப நிலைநாட்டப்பட்டது
12 பாபிலோனிய சிறையிருப்பில், யூதர்கள் ஏறக்குறைய செத்துப்போன ஒரு தேசமாக, வயல்வெளியிலிருக்கும் வெறும் எலும்புகளாக இருந்தது. (எசேக்கியேல் 37:1-4) ஆனால் எசேக்கியேல் அடுத்ததாகப் பார்த்தது என்ன? (எசேக்கியேல் 37:5-10-ஐ வாசிக்கவும்.) அந்த எலும்புகள் மீண்டும் தசைநாண்களாலும், மாம்சத்தாலும், புறத்தோலாலும் உடுத்துவிக்கப்பட்டு ஜீவ சுவாசத்தால் உயிர்ப்பிக்கப்பட்டன. (எசேக்கியேல் 37:11-14) கடவுள் யூதா தேசத்தை உயிர்த்தெழுப்பினார், அப்பொழுது இஸ்ரவேலின் சகல கோத்திரத்தையும் சேர்ந்த 42,360 பேரும் இஸ்ரவேலரல்லாத 7,500 பேரும் யூதாவில் மீண்டும் குடியேறி, எருசலேமையும் அதன் ஆலயத்தையும் புதுப்பித்து, தங்களுடைய தாயகத்தில் உண்மை வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். (எஸ்றா 1:1-4; 2:64, 65) அதுபோல, துன்புறுத்தப்பட்ட ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோர் 1918-ல் அந்த உலர்ந்த எலும்புகள் போலாகிவிட்டனர்—தங்களுடைய வெளியரங்கமாக சாட்சி கொடுக்கும் வேலையைக் குறித்ததில் கொல்லப்பட்டிருந்தார்கள். ஆனால் 1919-ல் யெகோவா அவர்களை ராஜ்ய பிரஸ்தாபிகளாக அவர்களுக்குப் புத்துயிரளித்தார். (வெளிப்படுத்துதல் 11:7-12) இந்த இணைவுபொருத்தம், அபிஷேகம்பண்ணப்பட்ட இவர்களும் இவர்களுடைய கூட்டாளிகளும் யெகோவா இன்று பயன்படுத்திவரும் தம்முடைய பூமிக்குரிய அமைப்பாக இருக்கிறார்கள் என்பதில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்திடவேண்டும்.—1975 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 87-125-ஐப் பார்க்கவும்.
13 யெகோவாவின் பூர்வீக மக்களிடையே அமைப்புக்குரிய ஐக்கியம் திரும்ப நிலைநாட்டப்படுதல் எவ்விதம் விளக்கப்பட்டது? (எசேக்கியேல் 37:15-20-ஐ வாசிக்கவும்.) இரண்டு கோல்கள் இணைக்கப்படுவதற்கு ஒரு நவீன நாளைய இணைவுபொருத்தம் உண்டு (ஒரு கோல் இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்துக்கும், மற்றொன்று பத்து கோத்திர இஸ்ரவேலுக்கும் குறிக்கப்பட்டன). முதல் உலக மகா யுத்தத்தின் போது பேராசைக்கொண்ட மனிதர் கடவுளுடைய மக்களின் ஐக்கியத்தை முறிக்க முயன்றனர், ஆனால் 1919-ல் உண்மையாயிருந்த அபிஷேகம்பண்ணப்பட்ட ஆட்கள் தங்களுடைய “ஒரே ராஜா”வும் “ஒரே மேய்ப்பரு”மாகிய கிறிஸ்துவின்கீழ் ஐக்கியத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள். மேலும், யூதாவுக்குத் திரும்பிய 7,500-க்கும் அதிகமாயிருந்த இஸ்ரவேலரல்லாத மக்களைப்போல, “திரள் கூட்டத்”தைச் சேர்ந்தவர்கள் இப்பொழுது அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோருடன் ஐக்கியமாயிருக்கின்றனர். ஆவிக்குரிய பரதீஸில் இருப்பதும், நம்முடைய “ஒரே ராஜா”வின் கீழ் யெகோவாவை ஐக்கியத்துடன் சேவிப்பதும் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது!—எசேக்கியேல் 37:21-28.
கோகு தாக்குகிறான்!
14 அடுத்து, திடீர் திருப்பங்களுடைய ஒரு சம்பவம் முன்னறிவிக்கப்பட்டது. கடவுளுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி அவருடைய மக்களை அழித்திடும் நம்பிக்கையுடன் மாகோகின் கோகு யெகோவாவின் “ஸ்திரீயை” அல்லது பரலோக அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியாயிருப்பவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும். (வெளிப்படுத்துதல் 12:1-17) கோகு “இந்த உலகத்தின் அதிபதி,” பிசாசாகிய சாத்தான். கோகு என்ற இந்தப் பெயரை, 1914-ல் ராஜ்ய பிறப்பைத் தொடர்ந்து தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதற்குப் பின்பு பெற்றான். (யோவான் 12:31) “மாகோகின் தேசம்” என்பது பூமிக்கு அருகாமையில் கோகும் அவனுடைய பேய்களும் வைக்கப்பட்டிருக்கும் இடமாகும். மத எதிர்ப்பு சக்திகள் கிறிஸ்தவமண்டலத்தையும் மகா பாபிலோனின் மற்ற பகுதியையும் அழித்தப்பிறகு, தற்காப்பின்றி இருப்பதாகக் தோன்றும் ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோருக்கும் அவர்களுடைய ஒப்புக்கொடுத்த கூட்டாளிகளுக்கும் எதிராக யெகோவா கோகைக் கூட்டிவருவார்.—எசேக்கியேல் 38:1-17; வெளிப்படுத்துதல் 17:12-14.
15 கோகு யெகோவாவின் சாட்சிகளைத் தாக்கும்போது என்ன நடக்கும்? (எசேக்கியேல் 38:18-23-ஐ வாசிக்கவும்.) யெகோவா தம்முடைய மக்களை மீட்டருள்வார்! நீர்ப்பெருக்கை ஏற்படுத்திடும் மழை மேகங்களின் திரளும், பெரிய கற்களைப் பொழியும் கடுமையான கல்மழையும், ஜுவாலித்தெரியும் அக்கினியும், கொடிதாய்ப் பரவும் கொள்ளைநோயுமே அவருடைய ஆயுதங்களாக இருக்கும். ஒரே குழப்பத்தில், கோகின் சேனைகள் தங்களுடைய பட்டயங்களை ஒருவருக்கொருவர் எதிராகப் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் கடவுள் அவர்களை நிர்மூலமாக்குவதற்கு முன்பாக ‘அவர் யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படிச்’ செய்யப்படுவார்கள்.
16 சாத்தானும் அவனுடைய பேய்களும் அபிஸில் போடப்படும்போது, “மாகோகு தேசம்,” பூமியில் அவர்களுடைய தாழ்த்தப்பட்ட இடம், என்றும் இராமற்போகும். (வெளிப்படுத்துதல் 20:1-3) கோகின் யுத்தத் தளவாடங்கள் அவ்வளவு அதிகமாக இருக்குமாதலால் அவற்றை நீக்கிப்போடுவதற்கு சில காலம் எடுக்கும். கோகின் கூட்டத்தாருடைய அடக்கம் செய்யப்படாத பிரேதங்களில் பறவைகளும் மிருகங்களும் திருப்திகாணும். இந்த அனைத்து காரியங்களைப் பற்றியும் அறிந்திருப்பது நம்மை எவ்விதம் பாதித்திட வேண்டும்? ஏன், கோகின் தாக்குதல் அண்மையிலிருக்கிறது, ஆனால் யெகோவா தம்முடைய மக்களை மீட்டருள்வார் என்பதைக் கற்றறிவது நம்முடைய விசுவாசத்தை அதிகரித்திட வேண்டும், அதோடுகூட, இந்தச் சம்பவங்கள், வெகுகாலமாகப் பரிசுத்தகுலைச்சலாக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய நாமம் பரிசுத்தப்படுவதில் விளைவடையும் என்பதில் நம்மைக் களிகூரச்செய்யும்!—எசேக்கியேல் 39:1-29.
யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தைப் பாருங்கள்!
17 பொ.ச.மு. 593-ல், எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டு 14-ம் ஆண்டில், எசேக்கியேலுக்கு யெகோவாவின் வணக்கத்துக்கான ஒரு புதிய ஆலயத்தின் தரிசனம் கொடுக்கப்பட்டது. தீர்க்கதரிசியை வழிநடத்திய தேவதூதனால் அளிக்கப்பட்டபோது, அது பிரமாண்டமானதாக இருந்தது. (எசேக்கியேல் 40:1-48:35) இந்த ஆலயம் “யெகோவாவால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்”துக்குப் படமாயிருந்தது, மற்றும் “பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகளாக” இருந்தது. தம்முடைய மீட்கும் பலியின் கிரயத்தைக் கடவுளுக்குச் செலுத்துவதற்காக பொ.ச.மு. 33-ல் இயேசு கிறிஸ்து மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள், “பரலோகத்திலேதானே” பிரவேசித்தார். (எபிரெயர் 8:2; 9:23, 24) தரிசனத்தில் காணப்பட்ட இந்த ஆலயம், உண்மை வணக்கம் கோகின் தாக்குதலைக் கடந்து நிலைநிற்கும் என்பதை நிரூபிக்கிறது. யெகோவாவின் நாமத்தை நேசிப்பவர்களுக்கு என்னே ஆறுதல்!
18 அந்த ஆலயத்துக்குப் பல அம்சங்கள் இருந்தன. உதாரணமாக, அதன் வெளிப்புற மற்றும் உட்புற மதில்களில் ஆறு வாசல்கள் இருந்தன. (எசேக்கியேல் 40:6-35) வெளிப்பிரகாரத்தில் முப்பது உணவறைகள் (அநேகமாய் மக்கள் சமாதான பலிகளைப் புசிப்பதற்காக) இருந்தன. (40:17) சர்வாங்கதகன பலிகளை செலுத்துவதற்கான பலிபீடம் உள்பிரகாரத்திலிருந்தது. (43:13-17) மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பலிபீடம், அநேகமாய் தூபவர்க்கம் எரிப்பதற்கான பீடம், ஆலயத்தின் முதல் அறையில் இருந்தது. (41:21, 22) மகா பரிசுத்தஸ்தலம் 20 முழம் சதுரம், ஆலயத்தைச் சுற்றியிருந்த மதில் ஒவ்வொரு பக்கமும் 500 கோல்கள் (5,100 அடி). கடவுளுடைய மகிமையால் நிறைந்திருந்த எப்பேர்ப்பட்ட ஓர் மகத்துவமான வீடு!—எசேக்கியேல் 41:4; 42:16-20; 43:1-7.
19 ஆலயம், பலிகள் மற்றும் ஆசரிப்புகள் சம்பந்தமான அநேக விவரங்கள், கடவுளுடைய அமைப்பிலிருந்து வரும் ஆலோசனைகளைக் கவனமாகப் பின்பற்றவேண்டிய அவசியத்தை நமக்கு வலியுறுத்துகிறது, மற்றும் யெகோவாவையும் அவருடைய வணக்கத்தையும் உயர்த்துவதற்கு எல்லா முயற்சியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை உணர்ந்தவர்களாயிருக்க வேண்டும். (எசேக்கியேல் 45:13-25; 46:12-20) ஆலயத்தில் பணிபுரிந்தவர்கள் கடவுளுடைய உயர்ந்த தராதரத்தைப் பூர்த்திசெய்யவேண்டியவர்களாயிருந்தனர், மற்றும் அவர்கள் மக்களுக்கு ‘பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்குமுள்ள வித்தியாசத்தைக்’ கற்றுக்கொடுக்க வேண்டியதாயிருந்தனர். (எசேக்கியேல் 44:15, 16, 23) யெகோவாவின் மக்களாக நாம் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளும்படி இது நம்மை உந்துவிக்க வேண்டும்.—எபேசியர் 1:3, 4.
20 ஆலயத்திலிருந்து ஒரு நதி பாய்ந்தது. அது சவக் கடலின் உப்பு மிகுந்த நீரை ஆரோக்கியப்படுத்தியது அல்லது இனிப்பாக்கியது, இதனால் அது மீன்களால் நிரம்பிற்று. (எசேக்கியேல் 47:1-11) இந்தத் தண்ணீர் நித்திய ஜீவனுக்கான கடவுளுடைய ஏற்பாட்டை அடையாளப்படுத்துகிறது, இதில் இயேசுவின் பலியும் அடங்கியிருக்கிறது. உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் உட்பட கோகின் தாக்குதலைத் தப்பிப்பிழைப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது போதுமானது. (யோவான் 5:28, 29; 1 யோவான் 2:2; வெளிப்படுத்துதல் 22:1, 2) சவக் கடல் மனிதவர்க்கம் இருந்துவந்திருக்கும் அடிப்படை நிலையை—பாவத்துக்கும் மரணத்துக்கும் சபிக்கப்பட்ட நிலையையும் அதே சமயத்தில் சாத்தானுடைய ஆட்சியையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. இனிப்பாக்கப்பட்ட தண்ணீரையுடைய சவக்கடலிலிருக்கும் ஏராளமான மீன்களைப்போல, மீட்கப்பட்ட மனிதவர்க்கம் மேசியானிய ஆட்சியின் ஆரோக்கியமாக்கப்பட்ட சூழ்நிலைகளில் செழித்தோங்கும்.
21 ஆரோக்கியமடைதல் தரிசனத்தில் காணப்பட்ட நதியின் ஓரமாக வளரும் விருட்சங்கள் அல்லது மரங்களுடனும் தொடர்புடையதாயிருக்கிறது. (எசேக்கியேல் 47:12-ஐ வாசிக்கவும்.) புதிய உலகில், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் பரிபூரண சரீரம் மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை அனுபவிக்கும். ஏன் முடியாது? தரிசனத்தில் காணப்பட்ட கனிதரும் மரங்களின் இலைகள் தொடர்ந்து ஆரோக்கியமளித்திடும் தன்மைகளைக் கொண்டவை. யெகோவாவை அறிந்து அவரைச் சேவிப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதங்கள்!
அப்பொழுது அவர்கள் அறிந்துகொள்வார்கள்!
22 யெகோவாவின் அமைப்போடு நாம் இப்பொழுது ஒத்துழைப்பதன் மூலம், பூமிக்குரிய பரதீஸில் கடவுள் மனிதரைத் தாம் தெரிந்துகொள்ளும் இடத்தில் வைக்கும்போதும் நாம் ஒத்திணங்கிச் செல்லும்படிச் செய்யும். மக்கள் இப்படியாக வைக்கப்படுவார்கள் என்பது, எசேக்கியேல் பார்த்த தரிசனத்தில் நிர்வகிக்கப்படவேண்டிய ஒரு பகுதிக்கு வடக்கேயும் தெற்கேயும் கோத்திரங்களுக்கு இடங்கள் நியமிக்கப்பட்டன என்ற உண்மையிலிருந்து புலனாகிறது. அந்த முப்பகுதி “அர்ப்பிதநிலம்” ஆசாரியராயிராத லேவியரின் ஒரு பகுதியையும் தரிசனத்தில் காண்பிக்கப்பட்ட ஆலயத்தைக் கொண்டிருந்த ஒரு ஆசாரியர் பகுதியையும் உட்படுத்தியது. தென் பகுதியின் மத்தியில் ஒரு கூட்டான “அதிபதியின்” கீழ் சர்வகோத்திர பணிவிடை சேனையைக் கொண்டிருந்த ஒரு நகரம் இருந்தது. இந்தக் கூட்டான “அதிபதி” “புதிய பூமியில்” மேசியாவின் பிரதிநிதிப் பிரபுக்கள்.—எசேக்கியேல் 47:13-48:34; 2 பேதுரு 3:13; சங்கீதம் 45:16.
23 தம்முடைய பரலோக ஆலயத்தில் சிங்காசனத்தில் வீற்றிருப்பவராகக், கடவுள், எசேக்கியேல் தரிசனத்தில் பார்த்த அடையாளப்பூர்வமான நகரத்தை ஆசீர்வதிப்பார். (எசேக்கியேல் 48:35-ஐ வாசிக்கவும்.) அந்தப் பூமிக்குரிய நிர்வாக இருக்கை யெகோவா-ஷம்மா, அல்லது “யெகோவாதாமே அங்கு இருக்கிறார்” என்று பெயர்பெறும். கடவுளிடமாக மாறாத அன்பைத் தொடர்ந்து காண்பித்து வாருங்கள், நீங்கள் பரதீஸில் மீட்கப்பட்ட மனிதகுலத்தின் பாகமாக இருக்கலாம். அப்பொழுது பூமியிலிருக்கும் எவருமே ஆவிக்குரிய இருளில் இருக்கமாட்டார்கள், ஆனால் யெகோவா தாமே ஜீவனுள்ள உண்மையான ஒரே கடவுள் என்பதை எல்லோருமே அறிந்திருப்பார்கள். (ஆபகூக் 2:14) துன்மார்க்கர் அழிக்கப்படும்போது உங்களுடைய விருப்பத்திற்கு எதிராகக் கடவுளுடைய நாமத்தை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்படுவதைத் தவிருங்கள். “நான் யெகோவா என்பதைத் தேசங்கள் அறிந்துகொள்வார்கள்,” என்ற வார்த்தைகளை அவர் நிறைவேற்றும்போது தப்பிப்பிழைப்பவர்களில் நீங்களும் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையைக் காண்பிப்பவர்களாய் விசுவாசத்தில் தரித்திருங்கள்.—எசேக்கியேல் 36:23.
(w88 9⁄15)
பூர்வீக மேய்ப்பர்களைப் போல, யெகோவா தம்முடைய ஆடுகளுக்குக் கனிவான கவனத்தைக் காண்பிக்கிறார். எனவே கிறிஸ்தவ மேய்ப்பர்களும் கடவுளுடைய மந்தையைக் கனிவாக நடத்த வேண்டும்
பரிசுத்த அர்ப்பிதநிலமும் கோத்திரங்களுக்குக் குறிக்கப்பட்ட நிலங்களும்
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
◻எந்த சூழ்நிலையின்கீழ் மட்டுமே யெகோவா ஒரு ஆவிக்குரிய காவற்காரனை அங்கீகரிக்கிறார்?
◻யெகோவா தம்முடைய ஆடுகளை எவ்விதம் நடத்துகிறார்?
◻யூதா தேசம் திரும்ப நிலைநிறுத்தப்படுவது எப்படி விளக்கிக்காட்டப்பட்டது? (எசேக்கியேல் 37:1-14) இதன் நவீன நாளைய இணைவுபொருத்தம் என்ன?
◻மாகோகின் கோகு யார்? அவன் யெகோவாவின் சாட்சிகளைத் தாக்கும்போது என்ன சம்பவிக்கும்?
◻தரிசனத்தில் காணப்பட்ட ஆலயத்திலிருந்து பாயும் தண்ணீர் எதை அடையாளப்படுத்துகிறது?
1, 2. யெகோவா தம்முடைய நாமம் பரிசுத்தகுலைச்சலாவதை என்றென்றுமாகப் பொருத்துக்கொள்ளமாட்டார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
3. (எ) யூதாவின் துன்பங்கள் கண்டு மற்ற தேசங்கள் எவ்விதம் பிரதிபலித்தனர்? (பி) எந்த ஆவிக்காக தீருவின் “அதிபதி” நீக்கப்பட்டான்? இது நம்மை எவ்விதம் பாதிக்க வேண்டும்.?
4. பார்வோனுக்கும் எகிப்துக்கும் என்ன வைக்கப்பட்டிருந்தது?
5. (எ) எந்த சூழ்நிலையில் மட்டுமே கடவுள் ஒரு ஆவிக்குரிய காவற்காரனை அங்கீகரிக்கிறார்? (பி) ‘ஜீவபிரமாணங்களில் நடப்பது’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
6. இன்று அநேகர் எப்படி எசேக்கியேலின் காலத்தில் சிறையிருப்பிலிருந்த யூதர்களைப்போல் இருக்கின்றனர்?
7. நம்முடைய காலத்தில் யெகோவாவின் என்ன செயல்கள் எசேக்கியேலின் நாட்களில் தம்முடைய ஆடுகளுடனிருந்த தொடர்புகளுக்கு ஒப்பாக இருக்கிறது?
8. ஒரு “புஷ்டியான ஆடு” மந்தையை ஒடுக்குவதாயிருந்தால் யெகோவா என்ன செய்வார்? கிறிஸ்தவ துணை மேய்ப்பர்கள் ஆடுகளை எவ்விதம் நடத்த வேண்டும்?
9. யூதா மற்றும் இஸ்ரவேல் தேசம் ஓய்ந்திருக்க வேண்டும் என்று யெகோவா தீர்மானித்துவிட்டதால், அவர் என்ன செய்தார்?
10. பொ.ச.மு. 537-ல் மீதியானோர் யூதாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டு நிலைநாட்டப்பட்ட காரியம், நம்முடைய நாளில் என்ன சம்பவங்களைக் குறிப்பிட்டுக் காண்பித்தது?
11. எசேக்கியேல் 36:33-36-க்கு இசைவாக, அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோரின் ஆவிக்குரிய பிரதேசம் சம்பந்தமாகக் கடவுள் என்ன செய்திருக்கிறார்?
12. பூர்வீக யூதா தேசம் திரும்ப நிலைநிறுத்தப்பட்டது எசேக்கியேல் 37:1-14-ல் எப்படி விளக்கிக்காட்டப்பட்டது? இது என்ன நவீன நாளைய இணைவுபொருத்தத்தை உடையதாயிருந்தது?
13. யெகோவாவின் பூர்வீக மக்கள் மத்தியில் அமைப்பு சார்ந்த ஐக்கியம் திரும்ப நிலைநாட்டப்பட்ட காரியம் எசேக்கியேல் 37:15-20-ல் எவ்விதம் விளக்கிக்காட்டப்பட்டது? இதற்கு என்ன இணைவுபொருத்தம் இருந்தது?
14. மாகோகின் கோகு யார்? அவன் என்ன நடவடிக்கை எடுப்பான்? (எசேக்கியேல் 38:1-17)
15. கோகு யெகோவாவின் சாட்சிகளைத் தாக்கும்போது என்ன நடக்கும்?
16. (எ) “மாகோகு தேசத்துக்கு” என்ன ஏற்படும்? (பி) கோகை உட்படுத்தும் முன்னறிவிக்கப்பட்ட சம்பவங்களை அறிந்திருப்பதால் நாம் எவ்விதம் பாதிக்கப்பட வேண்டும்?
17. (எ) பொ.ச.மு. 593-ல் எசேக்கியேலுக்கு என்ன தரிசனம் கொடுக்கப்பட்டது? (பி) தரிசனத்தில் காணப்பட்ட ஆலயம் இருப்பது எதற்கு அத்தாட்சியாயிருக்கிறது?
18. தரிசனத்தில் காணப்பட்ட ஆலயத்தின் பதிவு செய்யப்பட்டிருக்கும் சில அம்சங்கள் யாவை?
19. ஆலயத்தின் சில விவரங்களும் அங்கு சேவை செய்கிறவர்கள் கடவுளுடைய தராதரத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற உண்மையும் நம்மை எவ்விதம் பாதிக்க வேண்டும்?
20. (எ) தரிசனத்தில் காணப்பட்ட ஆலயத்திலிருந்து பாய்ந்துவந்த தண்ணீர் அடையாளப்படுத்துவது என்ன? (பி) அடையாள அர்த்தமுள்ள தண்ணீர் என்ன பாதிப்பையுடையதாயிருக்கும்?
21. கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் புதிய உலகில் எதை அனுபவிக்கும் என்று எசேக்கியேல் 47:12 குறிப்பிட்டுக் காட்டுகிறது?
22. பரதீஸில் கடவுள் மனிதரைத் தாம் தெரிந்துகொள்ளும் இடங்களில் வைப்பார் என்று எது காண்பிக்கிறது?
23. பரதீஸில் மீட்கப்பட்ட மனிதகுலத்தின் ஒரு பாகமாக இருப்பதற்கு, நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?