கர்த்தருடைய நாள் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்தும்?
“நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைச் செய்யும்.”—சங்கீதம் 110:2.
இயேசு 1914-ல் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக பதவியில் அமர்த்தப்பட்டார், கர்த்தருடைய நாள் ஆரம்பமானது. உடனடியாகவே, புதிய ராஜா பிசாசாகிய சாத்தானிடமிருந்தும் இங்கே பூமியில் அவனுடைய ஏஜென்டுகளிடமிருந்தும் உக்கிரமான எதிர்ப்பை எதிர்ப்பட்டார். (சங்கீதம் 2:1–6) ஆகவே கர்த்தருடைய நாளின் இந்த ஆரம்ப வருடங்கள், போராட்டமான ஒரு காலமாக, இயேசு ‘தம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைச் செய்து’வந்திருக்கும் காலமாக இருந்திருக்கிறது.—சங்கீதம் 110:2
2 புதிய ராஜாவின் வெற்றிகள் மனகிளர்ச்சியை உண்டுபண்ணுவதாக இருந்திருக்கிறது. 1914-க்குப் பின்பு, சாத்தான் புதிதாகப் பிறந்த ராஜ்யத்தை “பட்சித்துப் போட” முயற்சித்தான். ஆனால் மாறாக அவன் அவமானப்படத்தக்கதாக பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். (வெளிப்படுத்துதல் 12:1–12) பின்பு அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் மீதியானோரோடு ‘யுத்தம் பண்ணி’னான். ஆனால் 1919-ல் அவர்கள் ‘காலூன்றி நிற்பதை’யோ அல்லது இயேசு கிறிஸ்துவின் கைகளிலிருந்து “சிறு புஸ்தகத்தை” ஏற்றுக் கொள்வதையோ தடைசெய்ய இயலாதவனாக இருந்தான். (வெளிப்படுத்துதல் 10:8–11; 11:11, 12; 12:17) அவன் 1,44,000 பேரில் கடைசியானவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவதையும் “இரவும் பகலும் அவருடைய [யெகோவாவின்] ஆலயத்திலே” அவரை சேவிக்கும் எல்லா ஜாதிகளிலிருந்தும் வரும் திரள் கூட்டத்தார் கூட்டிச்சேர்க்கப்படுவதை தடை செய்வதிலும் அவன் அதேவிதமாகவே திறமையற்றவனாக இருந்திருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 7:1–3, 9–15.
3 ஆம் 1914 முதற்கொண்டு இயேசு ‘ஜெயிக்கிறவராக புறப்பட்டு போயிருக்கிறார்.’ என்றபோதிலும் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும். இயேசு இன்னும் ஜெயித்து முடிக்க வேண்டும். அவர் சாத்தானுடைய காரிய உலக ஒழுங்கின் எல்லாத் தடயங்களையும் நீக்கிவிடுவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 6:1, 2; 19:11–21) மிக முக்கியமான இந்தச் செயல் தனிப்பட்டவர்களாக நமக்கு எதை அர்த்தப்படுத்தும்?
மகா பாபிலோன் பகிரங்கமாக நிர்வாணமாக்கப்படுகிறது
4 சாத்தானிய உலகின் முடிவு பொய் மதத்தின் முடிவோடு ஆரம்பமாகிறது. வெளிப்படுத்துதல், கிறிஸ்தவமண்டலம் உட்பட முழு பொய் மத உலகப் பேரரசை, பூமியின் ராஜாக்களோடு உறவாடி, தன்னுடைய வேசித்தனத்தால் மனிதவர்க்கத்தை வெறிக்கச் செய்திருக்கும் ஒரு வேசியாக, மகா பாபிலோனாக விவரிக்கிறது. அவளும்கூட குடித்து வெறித்திருக்கிறாள்—அருவருப்பாக—இரத்தத்தைக் குடித்து, கடவுளுடைய ஊழியர்களுடைய இரத்தத்தைக் குடித்து வெறித்திருக்கிறாள். (வெளிப்படுத்துதல் 17:1–6) அருவருப்பான இந்தப் பழைய வேசியின் முடிவையும்கூட வெளிப்படுத்துதல் விவரிக்கிறது. இது எதைக் குறிக்கும் என்பதை நல்ல விதத்தில் புரிந்துகொள்ள நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன்பு ஏழாவது நூற்றாண்டில் வாழ்ந்துவந்த மற்றொரு மதசம்பந்தமான வேசிக்கு என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
5 அந்த வேசி எருசலேம் நகரமாக இருந்தது. அவள் பூமியின் மீது யெகோவாவின் வணக்கத்துக்கு மையமாக இருப்பதாக கருதப்பட்டாள். ஆனால் கடவுள் அவளிடம் சொன்னார்: “நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாயி”ருக்கிறாய். (எசேக்கியேல் 22:4) அவள் ஆவிக்குரிய பிரகாரமாக தூய்மையானவளாகவும்கூட கருதப்பட்டாள். ஆனால் தேசங்களோடு ஒப்பந்தங்கள் செய்துகொள்வதன் மூலம் அவள் தன்னை வேசியாக்கிக் கொண்டிருந்தாள். “உனக்கு விரோதமாய் நான் எவ்வளவு உக்கிர கோபம் நிறைந்திருக்கிறேன்” என்று யெகோவா அவளிடம் சொன்னார். “வெட்கங் கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்”தாய்!—எசேக்கியேல் 16:30; 23:1–21; யாக்கோபு 4:4.
6 அப்படியென்றால் இந்த வேசியின் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பை சிந்தித்துப் பாருங்கள்: “இதோ நீ சம்போகம் பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும் நான் கூடிவரச் செய்து . . . ,அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்கார ஆபரணங்களை எடுத்துக் கொண்டு உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக விட்டுப்போய் . . . உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்துப் போடுவார்கள்.” (எசேக்கியேல் 16:37, 39, 41; 23:25–30) என்ன சம்பவித்தது என்பதை சரித்திரம் பதிவு செய்கிறது. பாபிலோனியர்கள் பொ.ச.மு. 607-ல் வந்து எருசலேமை கொள்ளையடித்தார்கள். அவளுடைய மக்களும் அவளுடைய செல்வாக்கும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நகரம் அழிக்கப்பட்டு, ஆலயம் எரிக்கப்பட்டு தேசம் பாழாக்கப்பட்டது.—2 நாளாகமம் 36:17–21.
7 இதே போன்ற ஒரு காரியம் மகா பாபிலோனுக்குச் சம்பவிக்கும். வெளிப்படுத்துதல் எச்சரிப்பதாவது: “இவர்கள் [மகா பாபிலோன் ஆவிக்குரிய வேசித்தனஞ் செய்திருக்கும் நவீன நாளைய “ராஜாக்கள்” அல்லது அரசர்கள்] அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:2, 16) பூர்வ எருசலேமின் உதாரணத்திலிருந்து இது எதை அர்த்தப்படுத்தும் என்பதை நாம் அறிவோம். பொய் மதமானது, ஒரு சமயம் அவளை ‘நேசித்த’ தேசீய அரசாங்கங்களால் அழிக்கப்படும். அவளுடைய செல்வம் அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு அவள் எரிக்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்படுவாள். அருவருப்பான ஓர் அமைப்புக்குப் பொருத்தமான ஒரு முடிவு!
வானங்கள் இருண்டன
8 மகா பாபிலோனின் அழிவை அடுத்து, நாம் இயேசு முன்னறிவித்த “மிகுந்த உபத்திரவத்திற்குள்” பிரவேசித்திருப்போம். (மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 7:14) அந்தச் சமயத்தைக் குறித்துப் பேசுகையில், வெளிப்படுத்துதல் சொல்வதாவது: “பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.” (வெளிப்படுத்துதல் 6:12, 13) இது எசேக்கியேல் “இஸ்ரவேல் தேசத்திலே” “பூமியும் அதிரும்” என்பதாக முன்னறிவித்த மகா பூமியதிர்ச்சியாக இருக்கிறது. (எசேக்கியேல் 38:18, 19; யோவேல் 3:14–16) அது இந்தப் பொல்லாத ஒழுங்கு முறையின் முடிவான அழிவாக இருக்கிறது. சொல்லர்த்தமான சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஏதாவது சம்பவிக்குமா?
9 எசேக்கியேல், இஸ்ரவேலுக்குத் தெற்கே இருந்த தேசமாகிய எகிப்துக்கு வர இருந்த வீழ்ச்சியைக் குறித்து எச்சரிப்பவனாய் பின்வருமாறு சொன்னான்: “‘உன்னை [பார்வோன்] நான் அணைத்துப் போடுகையில், வானத்தை மூடி அதின் நட்சத்திரங்களை இருண்டு போகப் பண்ணுவேன். சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும். நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகப் பண்ணி, உன் தேசத்தின் மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன்’ என்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.”—எசேக்கியேல் 32:7, 8.
10 பார்வோனும் அவனுடைய சேனையும் வீழ்ச்சியடைந்த போது, சொல்லர்த்தமான வானங்கள் இருண்டு போகவில்லை. ஆனால் எகிப்தின் எதிர்காலம் மிகவும் இருண்டுவிட்டது. பைபிள் பண்டிதர் C. F. கீல் குறிப்பிடுகிறபடி, “[பார்வோனின் வீழ்ச்சியின்] விளைவாக ஏற்பட்ட இருள், முழுவதுமாக நம்பிக்கையற்ற சந்தர்ப்ப நிலைமைகளுக்கு அடையாள அர்த்தமுள்ளதாயிருந்தது. தனித்தியங்கும் உலக வல்லரசாக என்றுமாக முடிவுக்கு வந்துவிட்ட எகிப்து ஒன்றன் பின் ஒன்றாக ஓர் உலக வல்லரசால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது! இன்று பூர்வ பாபிலோனிய உலக வல்லரசின் பெரும்பாலான ஆட்சிப் பகுதி அராபிய தேசத்தால் ஆளப்பட்டு வருகிறது.
11 ஆனால் கீல் எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தில் கூடுதலான கருத்தைக் கண்டார். அவர் எழுதுகிறார்: “இந்த உலக வல்லரசு [எகிப்து] கவிழ்ந்தது, கடைசி நியாயத்தீர்ப்பு நாளில் தேவபக்தியற்ற ஒவ்வொரு உலக வல்லரசும் கவிழ்க்கப்படும் என்பதற்கு முன்னறிகுறியாகவும் முற்செயலாகவும் இருக்கிறது.” இது அடிப்படைக் கருத்தில் உண்மையாக இருக்கிறது. வெளிப்படுத்துதல் காண்பிக்கிறபடியே, மிகுந்த உபத்திரவத்தில் தேவ பக்தியற்ற மனிதவர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் எகிப்தினுடையதைப் போன்று இருண்டதாக இருக்கும். பகலில் சூரியன் வெளிச்சம் கொடாதிருப்பது போலவும், இரவு கால மேகத்தில் சந்திரனிலிருந்து எந்த கதகதப்பான வெளிச்சமும் கனிவாக மினுமினுக்கும் நட்சத்திரங்களும் இல்லாதது போலவும் இருக்கும். வெள்ளைக் குதிரை மீது சவாரி செய்பவர் ஜெயித்து முடிக்கையில் யெகோவாவின் ராஜாவை கனம் பண்ண மறுப்பவர்கள் கனத்துக்குரிய வகையில் புதைக்கப்படாமலும் கூட அழிந்துப் போவர். (வெளிப்படுத்துதல் 19:11, 17–21; எசேக்கியேல் 39:4, 17–19) தேவபக்தியற்ற மனிதர்கள், “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: ‘நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும் ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும்’” என்று சொல்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.—வெளிப்படுத்துதல் 6:16, 17; மத்தேயு 24:30.
நடந்துகொண்டிருக்கும் போர்!
12 ஆனால் இக்கால கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன? ஆம் அவர்கள் சாத்தானுக்கும் வெள்ளை குதிரை மீது சவாரி செய்பவருக்குமிடையே நடைபெறும் இடைவிடாத போரினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட வகையில் இயேசுவினிடத்தில் சாத்தான் வெற்றிப் பெற இயலாததன் காரணமாக அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானவர்கள் மீதும்—அதிக சமீபத்தில்—அவர்களைச் சுற்றி கூடிவந்துள்ள வேறே ஆடுகளின் திரள் கூட்டத்தார் மீதும் தன்னுடைய உக்கிரத்தை முழு ஆற்றலுடன் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறான். இயேசு எச்சரித்த விதமாகவே, இவர்கள் “[அவருடைய] நாமத்தினிமித்தம் சகல ஜனங்களாலும் பகைக்கப்பட்டு” வந்திருக்கிறார்கள். (மத்தேயு 24:9) சாத்தான் இவர்களுக்கு எதிராக போராட்ட கும்பலைத்தூண்டி தொல்லைக் கொடுப்பது, காவலில் வைப்பது, வேதனைக் கொடுப்பது, கொலை செய்வது உட்பட தன் கைவசமுள்ள எல்லாக் கருவிகளையும் பயன்படுத்தி வந்திருக்கிறான்.—2 தீமோத்தேயு 3:12.
13 சாத்தான் தந்திரமான சூழ்ச்சியையும்கூட திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தியிருக்கிறான். (எபேசியர் 6:11) “ஐசுவரியத்தின் மயக்கத்தை”ப் பயன்படுத்தி, சிலரை அவர்களுடைய பரிசுத்த சேவையில் சோர்வடையவோ அல்லது அதை விட்டுவிடவோ அவன் தூண்டியிருக்கிறான். (மத்தேயு 13:22; 1 தீமோத்தேயு 6:9, 10) மற்றவர்களை அவன் அசுத்தத்திடமாகவும் ஒழுக்கயீனத்திடமாகவும் கவர்ச்சியூட்டி இழுத்திருக்கிறான். (1 கொரிந்தியர் 5:1, 2) அநேகர் “லவுகீக கவலைகளின்” பெரும் அழுத்தத்தின் கீழ் இருக்கிறார்கள். சாத்தான் அவர்களை ‘பாரமடையச் செய்வதற்கு’ இதை அனுகூலப்படுத்திக் கொள்கிறான். (லூக்கா 21:34) மற்றவர்களுடைய விஷயத்தில் “முக்கியமான காரியங்களிலிருந்து” அவர்களை திசைத்திருப்ப ஆளுமை மோதல்களை அல்லது கலகத்தனமான மனசாய்வுகளைப் பயன்படுத்தியிருக்கிறான்.—பிலிப்பியர் 1:10; 1 கொரிந்தியர் 1:11, 12; யாக்கோபு 4:1–3.
14 ஆகவே கிறிஸ்தவர்கள், கர்த்தருடைய நாளின் போது சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது அவசியமாக இருந்திருக்கிறது. சிலர் தோல்வியடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தோல்வியும் சாத்தானுக்கு ஒரு சிறிய வெற்றியாக இருந்திருக்கிறது. (1 பேதுரு 5:8) ஆனால் அநேகர் இயேசுவின் வாக்குறுதிக்குச் செவி கொடுத்திருக்கிறார்கள்: “முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) யெகோவாவின் உதவியோடு அவர்கள் ஜெயங்கொண்டு அவருடைய இருதயத்துக்குச் சந்தோஷத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 27:11; 1 யோவான் 2:13, 14.
15 நிச்சயமாகவே நம்மில் எவரும் நாம் விலகிச் செல்வதைக் காணும் மனநிறைவை சாத்தானுக்குக் கொடுக்க விரும்ப மாட்டோம்! ஆகவே பவுலின் புத்திமதியைப் பின்பற்றி சத்தியத்தையும் நீதியையும் விசுவாசத்தையும் ஆயுதங்களாக தரித்துக் கொண்டு வைராக்கியத்தோடு நற்செய்தியைப் பிரசங்கித்து, நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக் கொள்ள நாம் படித்துக் கொண்டிருப்போமாக. நாம் எப்போதும் ஜெபத்திலும்கூட தரித்திருந்து விழிப்புள்ளவர்களாயிருப்போமாக. இந்த விதத்தில் நாம் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருப்”போம். (1 கொரிந்தியர் 1:8; எபேசியர் 6:10–18; 1 தெசலோனிக்கேயர் 5:17; 1 பேதுரு 4:7) மாறாக கர்த்தருடைய நாள் நமக்கு மிகுதியான ஆசீர்வாதங்களின் ஊற்றுமூலமாக இருக்கும்.
மகத்தான ஊழிய சிலாக்கியங்கள்
16 வெளிப்படுத்துதல் 10:3, 4-ல் யோவான் “ஏழு இடிகள்” சத்தமிட்டு முழங்கினதை தான் கேட்டதாகச் சொல்கிறான். அவன் தான் கேட்டதை எழுதவேண்டுமென்றிருந்தான், ஆனால் அவன் சொல்கிறான்: “‘ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைப் போடு’ என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.” இப்படிப்பட்ட தகவல் வெளியிடப்படுவதற்கு அது இன்னும் காலமாக இருக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. மாறாக, யோவான் சிறு புஸ்தகத்தை வாங்கி அதைப் புசிக்கும்படியாகச் சொல்லப்பட்டான். ஏழாவது இடி, யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய முழுமையான கருத்தை பிரதிநிதித்துவம் செய்வதாகத் தெரிகிறது. (சங்கீதம் 29:3; யோவான் 12:28, 29; வெளிப்படுத்துதல் 4:5) 1919-ல் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் சிறு புஸ்தகத்தை அடையாள அர்த்தத்தில் புசித்த போது யெகோவாவின் நோக்கங்களை முழுமையாக புரிந்துகொள்வதற்குரிய காலமாக அது இருக்கவில்லை. (தானியேல் 12:8, 9 ஒப்பிடவும்.) ஆனால் அவர்களுக்கிருந்த புரிந்துகொள்ளுதலை வைத்துக் கொண்டு அவர்கள் துன்பங்களைச் சகித்து தைரியமாக முன்னோக்கி சென்று கூடுதலான விளக்கத்துக்குப் பாத்திரராகத் தங்களை நிரூபித்தார்கள்.
17 பின்னர் வருடங்களினூடாக அவர்களுக்கு யெகோவாவின் சித்தத்தைப்பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதல் படிப்படியாக அருளப்பட்டது. உதாரணமாக இயேசுவின் உவமையிலுள்ள செம்மறியாடுகள், அர்மகெதோனுக்கு முன்னரே பிரிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். (மத்தேயு 25:31–46) 1914-ல் ராஜ்ய பிறப்பு வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தின் நிறைவேற்றமாக இருந்ததை அவர்கள் கண்டார்கள். யெகோவாவின் நாமத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக மதித்துணரவும் வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தின் திரள் கூட்டத்தார் உண்மையில் யார் என்பதைக் கற்றுணரவும் செய்தார்கள். படிப்படியான இந்த வெளிப்படுத்துதல்கள் கடவுளுடைய மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கையைக் கொடுத்தன!—நீதிமொழிகள் 4:18; 2 பேதுரு 1:19.
18 அதே சமயத்தில், யெகோவா தம்முடைய பூமிக்குரிய ஊழியர்களிடம் குறிப்பிடத்தக்க சில ஊழிய சிலாக்கியங்களை ஒப்படைத்தார். உன்னதமான ஒரு தரிசனத்தில் யோவான், தூதர்கள் மனிதவர்க்கத்துக்கு நித்திய நற்செய்திகளை அறிவித்து, மகா பாபிலோனின் வீழ்ச்சியை பிரகடனம் செய்து, மிருகத்தின் குறியைப் பெற்றுக் கொள்வதற்கு எதிராக எச்சரிப்பதைக் கண்டான். (வெளிப்படுத்துதல் 14:6–10) தேவதூதர்கள் இந்தத் தெய்வீக ஊழிய சிலாக்கியங்களை நிச்சயமாகவே கண்காணித்து வந்தபோதிலும், மனிதர்களே, பூமியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளே, உண்மையில் மனிதவர்க்கத்திடமாக இந்தச் செய்திகளைப் பேசினார்கள். யோவான் “பூமியின் விளைவை” இயேசு அறுப்பதையும்கூட கண்டான். (வெளிப்படுத்துதல் 14:14–16) ஆனால் பூமியிலுள்ள இயேசுவின் குடிமக்களுடைய ராஜ்ய பிரசங்கிப்பு மற்றும் சீஷராக்கும் வேலையின் மூலமாகவே அவர் இந்த விளைவை அறுவடை செய்திருக்கிறார். (மத்தேயு 24:14; 28:19, 20) இப்படிப்பட்ட இன்றியமையாத முக்கியத்துவமுள்ள ஊழிய சிலாக்கியங்களில் தேவதூதர்களோடும் இயேசு கிறிஸ்துவோடும்கூட பங்கு கொள்வது என்னே ஒரு சிலாக்கியமாக இருக்கிறது! அவ்விதமாகச் செய்கையில் யெகோவாவின் உண்மையுள்ள ஆவிக்குரிய சிருஷ்டிகளாலான மிகப் பெரிய காணக்கூடாத பரலோக அமைப்பிற்கு உண்மையாகவே இசைவாக நாம் இருப்பதை உணருகிறோம்.
தெய்வீக பாதுகாப்பு
19 சாத்தானுடைய உலகம் அதன் முடிவை நெருங்கி வருகையில், அவன் கிறிஸ்தவர்கள் மீது அதிகமதிகமான அழுத்தங்களைக் கொண்டுவருவான். அவனுடைய பகைமையின் உச்சக்கட்டம் எசேக்கியேல் 38 மற்றும் 39-ம் அதிகாரங்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே அவன் தீர்க்கதரிசனமாக மாகோகுவின் கோகு என்பதாக அழைக்கப்படுகிறான். ஆவியால் ஏவப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம் சாத்தான் கடவுளுடைய மக்களை முழுவதுமாக முடிவாக அழித்துவிட முழு வேகத்துடன் தாக்குதல் செய்வான். அவன் வெற்றிப் பெறுவானா? வெளிப்படுத்துதல் பதிலளிக்கிறது: “பத்துக் கொம்புகளும் [நவீன நாளைய “ராஜாக்கள்” அல்லது ஆட்சியாளர்கள்] . . . ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:12, 14) உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தங்களுடைய உன்னதமான, ஜெயங்கொள்கிற ராஜாவுக்கு உண்மையுள்ளவர்களாக 20நிலைத்திருந்தால், அவர்கள் நிச்சயமாக ஜெயங் கொள்வார்கள். கோகுவின் சேனைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடும்.—எசேக்கியேல் 39:3, 4, 17–19; வெளிப்படுத்துதல் 19:17–21.
20 இவ்விதமாக கர்த்தருடைய நாள் கடவுளுடைய மக்களுக்கு இரட்சிப்பை அர்த்தப்படுத்துகிறது. மிகுந்த உபத்திரவத்தின் போது அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் இன்னும் மனிதர்களாக உயிரோடிருப்பவர்களுக்கு அவர்களுடைய பரலோக ஸ்தானம் உறுதியளிக்கப்படும். அவர்கள் தங்களுடைய வாழ்க்கைப் போக்கை உண்மையுடன் முடிப்பதில் அசையாதவர்களாய் உறுதியுடன் இருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:1–3; 2 தீமோத்தேயு 4:6–8) திரள் கூட்டத்தாரும்கூட தப்பிப் பிழைப்பர். இயேசு, “இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” (வெளிப்படுத்துதல் 7:14, 17) உண்மையுள்ள சகிப்புத்தன்மைக்காக என்னே சிறந்த ஒரு வெகுமதி!
21 இப்பொழுது கர்த்தருடைய நாள் மகத்தான ஒரு கட்டத்துக்குள் பிரவேசிக்கிறது: கிறிஸ்து இயேசுவின் ஆயிர வருட ஆட்சி. (வெளிப்படுத்துதல் 20:6; 11–15) வெளிப்படுத்துதல், எசேக்கியேல் ஆகிய இரண்டிலுமே முன்னுரைக்கப்பட்டுள்ள ஜீவத்தண்ணீர்கள் நதி யெகோவாவின் சிங்காசனத்திலிருந்து மனிதவர்க்கத்துக்குப் பாய்ந்தோடும். அதைக் குடிப்பவர்கள் படிப்படியாக மனித பரிபூரணத்துக்கு உயர்த்தப்படுவர். (எசேக்கியேல் 47:1–12; வெளிப்படுத்துதல் 22:1, 2) ஹேடீஸ் காலியாக்கப்படும், மரித்த கோடிக்கணக்கானோரும்கூட இந்த நதியிலிருந்து குடிப்பதற்கு வாய்ப்பைப் பெறுவர்.—யோவான் 5:28, 29.
22 ஆயிர வருடங்களின் முடிவிலே மனிதவர்க்கம் பரிபூரணத்துக்கு உயர்த்தப்பட்டுவிட்டிருக்கும். சாத்தான் பூமிக்குரிய காட்சியில் கடைசி முறையாக தோன்றுவதற்கு எத்தனைப் பொருத்தமான சமயம்! மறுபடியுமாக அவன் மனிதவர்க்கத்தை வஞ்சிப்பதற்கு முயற்சி செய்வான். அப்போதும்கூட சிலர் அவனை பின்பற்றிச் செல்வார்கள். இவர்கள் “கோகு என்றும் மாகோகு என்றும்” அழைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தில் காண்பிக்கப்பட்டபடி ‘கோகுவின் சேனையின்’ அதே பொல்லாத ஆவியை விளங்கப் பண்ணுவார்கள். ஆனால் அவர்களுடைய கலகத்தனமான ஆவி அவர்கள் சாத்தானோடும் அவனுடைய பேய்களோடும்கூட அடையாளமான அக்கினிக் கடலில் எறியப்படும்போது, என்றென்றைக்குமாக துடைத்தழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 20:7–10; எசேக்கியேல் 39:11) அந்த முடிவான சோதனையினூடாக உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பவர்களுக்கு உண்மையில் ஆசீர்வாதமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது. பின்னர் பரிபூரணமாக்கப்பட்ட மனித இனம் யெகோவாவின் நீதியுள்ள சர்வலோக அமைப்போடு ஒன்றாகிவிடும். யெகோவா தேவன் தாமே “சகலத்திலும் சகலமுமாயிருப்பார்”!—1 கொரிந்தியர் 15:24, 28; வெளிப்படுத்துதல் 20:5.
23 அப்படியென்றால் நாம் சகித்திருப்போமானால் கற்பனை செய்து காண முடியாத என்ன ஆசீர்வாதங்கள் நமக்கு காத்திருக்கின்றன! கர்த்தருடைய நாள் இப்பொழுது கணிசமான அளவில் முன்னேறிக் கொண்டிருப்பதை நினைவில் வையுங்கள். மகத்தான காரியங்கள் ஏற்கெனவே நிகழ ஆரம்பித்துவிட்டன. அப்படியென்றால் பவுலின் வார்த்தைகள் பொருத்தமாகவே உள்ளன: “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.” (கலாத்தியர் 6:9) இந்தக் கர்த்தருடைய நாளிலே நிச்சயமாகவே நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. நாம் சகித்திருந்தால், இந்த நாள் நம் ஒவ்வொருவருக்கும் நித்திய நன்மைகளைக் கொண்டுவரும். (w88 10⁄15)
உங்களால் விளக்க முடியுமா?
◻ சாத்தானிய உலகினுடைய அழிவின் முதல் கட்டம் என்ன?
◻ இயேசு எவ்விதமாக தம்முடைய சத்துருக்களை “ஜெயங் கொண்டு முடிப்பார்”?
◻ சாத்தான் எவ்விதமாக கர்த்தருடைய நாளின் போது யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாக போர் செய்திருக்கிறான்?
◻ 1919 முதற்கொண்டு என்ன குறிப்பிடத்தக்க ஆசீர்வாதங்களை கடவுளுடைய மக்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள்?
◻ காலத்தின் ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை முன்னிட்டுப் பார்க்கையில், நீங்கள் தனிப்பட்டவராக என்ன செய்ய தீர்மானமாயிருக்கிறீர்கள்?
[கேள்விகள்]
1–3. (எ) கர்த்தருடைய நாளின் ஆரம்பம் ஏன் போராட்டமான ஒரு காலமாக இருந்திருக்கிறது? இயேசுவின் வெற்றிகளில் சில யாவை? (பி) இயேசு எவ்விதமாக “ஜெயித்து முடிக்கிறவராக” இருப்பார்?
4. வெளிப்படுத்துதலில் பொய் மதம் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது?
5, 6. உண்மையற்ற எருசலேம் ஏன் ஒரு வேசி என்றழைக்கப்பட்டது? இது யெகோவாவின் கரங்களிலிருந்து என்ன நியாயத்தீர்ப்பை அவள் மீது கொண்டு வந்தது?
7. மகா பாபிலோனின் முடிவு என்னவாக இருக்கும்?
8. மிகுந்த உபத்திரவம் மனிதவர்க்கத்துக்கு என்ன விதமான ஒரு காலமாக இருக்கும்?
9, 10. எகிப்தின் விஷயத்தில் எசேக்கியேல் என்ன தீர்க்கதரிசனம் உரைத்தான்? இது எவ்விதமாக நிறைவேறியது?
11. (எ) எகிப்துக்கு நடந்த காரியத்தால் முன்குறித்துக் காட்டப்படும் காரியம் என்ன? (பி) மிகுந்த உபத்திரவத்தின் போது சாத்தானிய உலகத்துக்கு எதிர்காலம் எவ்விதமாக முற்றிலுமாக இருண்டதாக இருக்கும்?
12. கர்த்தருடைய நாளில் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள பகைமையை சாத்தான் எவ்விதமாக வெளிகாட்டியிருக்கிறான்?
13. சாத்தான் எவ்விதமாக கடவுளுடைய ஜனங்களுக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தில் தந்திரமான சூழ்ச்சியை பயன்படுத்தியிருக்கிறான்?
14, 15. சாத்தானுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தில் நாம் எவ்விதமாக ஜெயங்கொள்ளலாம்?
16. யோவான் ஏழு இடிகள் முழங்கினதை எழுதாமல் இருக்கும்படியாக ஏன் சொல்லப்பட்டான்? 1919-ல் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இது எதை அர்த்தப்படுத்தியது?
17. 1919 முதற்கொண்டு வருடங்களினூடாக யெகோவா தம்முடைய மக்களுக்கு அருளியிருக்கும் சில புதிய நுட்பமான விளக்கங்கள் யாவை?
18. என்ன குறிப்பிடத்தக்க ஊழிய சிலாக்கியங்களில் கர்த்தருடைய நாளின் போது யெகோவாவின் மக்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள்? இது நம்முடைய இருதயங்களில் என்ன உணர்வை ஏற்படுத்துகின்றன?
19. (எ) கடவுளுடைய மக்களுக்கு எதிராக சாத்தானுடைய பகைமையின் உச்சக்கட்டம் என்னவாக இருக்கும்? (பி) முடிவான உச்சக்கட்ட மோதலில் யார் ஜெயங்கொள்வார்?
20. கர்த்தருடைய நாள் மிகுந்த உபத்திரவத்தில் உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்?
21. மிகுந்த உபத்திரவத்துக்குப் பின்பு கர்த்தருடைய நாளில் பூமியின் மீது என்ன சம்பவிக்கும்?
22. கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சியின் முடிவில் சிறப்பு வாய்ந்த என்ன சம்பவங்கள் மனிதவர்க்கத்துக்குக் காத்திருக்கின்றன?
23. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தை முன்னிட்டுப் பார்க்கையில், நாம் ஒவ்வொரும் பின்பற்றுவதற்கு பவுலின் என்ன புத்திமதி மிகவும் பொருத்தமாக இருக்கிறது?
[பக்கம் 16-ன் படம்]
பூர்வ எருசலேமுக்கு ஏற்பட்ட கதி, மகா பாபிலோனுக்குச் சீக்கிரத்தில் என்ன சம்பவிக்கும் என்பதைக் காண்பிக்கிறது