அதிகாரம் 19
“இந்த ஆறு எங்கே பாய்ந்தோடினாலும் அங்கே இருக்கிறவை . . . பிழைக்கும்”
முக்கியக் குறிப்பு: ஆலயத்திலிருந்து பாய்ந்தோடும் ஆறு பற்றிய தரிசனத்தின் நிறைவேற்றம்—பூர்வ காலத்திலும், நம் காலத்திலும், எதிர்காலத்திலும்
1, 2. எசேக்கியேல் 47:1-12-ன்படி எசேக்கியேல் எதைப் பார்க்கிறார், எதைத் தெரிந்துகொள்கிறார்? (ஆரம்பப் படம்.)
ஆலயத்தைப் பற்றிய தரிசனத்தில், வியக்க வைக்கும் இன்னொரு விஷயத்தை எசேக்கியேல் பார்க்கிறார். ஆம், ஆலயத்திலிருந்து ஒரு ஆறு பாய்ந்தோடுவதைப் பார்க்கிறார். அந்தத் தெளிந்த தண்ணீர் ஓடுகிற பாதையில் எசேக்கியேல் போவதைக் கற்பனை செய்து பாருங்கள். (எசேக்கியேல் 47:1-12-ஐ வாசியுங்கள்.) அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வாசலறையிலிருந்து லேசாக ஓட ஆரம்பித்து, ஆலய வளாகத்தின் கிழக்கு வாசல் வழியாக வெளியே வருகிறது. ஆலயத்தை எசேக்கியேலுக்குச் சுற்றிக்காட்டிய தேவதூதர், அந்த ஆறு போகும் திசையில் அவரைக் கூட்டிக்கொண்டுப் போகிறார். அப்படிப் போகும்போது தூரத்தை அளந்துகொண்டே போகிறார். ஒரு குறிப்பிட்ட தூரத்தை அளந்த ஒவ்வொரு முறையும், அந்த இடத்தில் ஆற்றைக் கடக்கும்படி எசேக்கியேலிடம் சொல்கிறார். ஒவ்வொரு முறை ஆற்றைக் கடக்கும்போதும், நீர்மட்டம் படு வேகமாக உயர்ந்திருப்பதை எசேக்கியேல் கவனிக்கிறார். கடைசியில், நீந்தினால் மட்டுமே கடக்க முடிகிற அளவுக்கு அது பெருக்கெடுத்து ஓடுகிறது.
2 அந்த ஆறு சவக்கடலில் கலப்பதையும், உயிரினங்களே இல்லாத உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றுவதையும் பற்றி எசேக்கியேல் தெரிந்துகொள்கிறார். அதோடு, அந்த ஆறு கடலில் எங்கெல்லாம் பாய்ந்தோடுகிறதோ, அங்கெல்லாம் மீன்கள் ஏராளமாகப் பெருகுவதையும் தெரிந்துகொள்கிறார். ஆற்றின் கரைகளில் எல்லா விதமான மரங்களும் வளர்வதை எசேக்கியேல் பார்க்கிறார். அவை ஒவ்வொரு மாதமும் சத்துள்ள புதிய கனிகளைத் தருகின்றன. அவற்றின் இலைகள் குணப்படுத்துகின்றன. இதையெல்லாம் பார்த்தபோது எசேக்கியேலுக்கு நிம்மதியும் நம்பிக்கையும் கிடைத்திருக்கும். தரிசனத்தில் காட்டப்பட்ட இந்த விஷயங்கள் எசேக்கியேலுக்கும் அவரோடு சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களுக்கும் எதைத் தெரியப்படுத்தின? இன்று நமக்கு எதைத் தெரியப்படுத்துகின்றன?
தரிசனத்தில் காட்டப்பட்ட ஆறு, சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு எதைத் தெரியப்படுத்தியது?
3. தரிசனத்தில் காட்டப்பட்டது நிஜமான ஆறு அல்ல என்பதை பூர்வ கால யூதர்கள் எதை வைத்துப் புரிந்திருப்பார்கள்?
3 தரிசனத்தில் காட்டப்பட்டது நிஜமான ஆறு அல்ல என்பது சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். இந்தத் தரிசனம், 200-க்கும் அதிகமான வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட இன்னொரு தீர்க்கதரிசனத்தை அவர்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும். தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமாக, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் யோவேல் சொன்ன தீர்க்கதரிசனம் அது. (யோவேல் 3:18-ஐ வாசியுங்கள்.) யோவேலின் தீர்க்கதரிசனத்தை அந்த யூதர்கள் வாசித்தபோது, மலைகளிலிருந்து நிஜமாகவே “தித்திப்பான திராட்சமது சொட்டும்” என்றோ “குன்றுகளில் பால் வழிந்தோடும்” என்றோ “யெகோவாவின் வீட்டிலிருந்து நீரூற்று” பாயும் என்றோ எதிர்பார்க்கவில்லை. அதே போல, எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள ஆறுகூட நிஜமான ஆறு அல்ல என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.a அப்படியானால், அந்தத் தரிசனத்தின் மூலம் அவர்களுக்கு யெகோவா எதைத் தெரியப்படுத்தினார்? அந்தத் தரிசனத்திலுள்ள சில விஷயங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள பைபிள் உதவுகிறது. இப்போது அந்தத் தரிசனத்தின் மூலம் யெகோவா கொடுக்கிற தெளிவான, அன்பான மூன்று வாக்குறுதிகளைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.
4. (அ) யெகோவாவிடமிருந்து என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ள யூதர்களுக்கு அந்தத் தரிசனம் எப்படி உதவியது? (ஆ) யெகோவா தன்னுடைய மக்களை ஆசீர்வதிப்பார் என்பதைக் குறிப்பதற்கு “ஆறு” மற்றும் “தண்ணீர்” ஆகிய வார்த்தைகளை பைபிள் எப்படிப் பயன்படுத்துகிறது? (“யெகோவாவிடமிருந்து வருகிற ஆசீர்வாதங்களைத் தரும் ஆறுகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
4 ஆசீர்வாதங்களைத் தரும் ஆறு. பைபிளில் ஆறுகள், தண்ணீர் ஆகிய வார்த்தைகள் யெகோவாவிடமிருந்து வருகிற உயிரளிக்கும் ஆசீர்வாதங்களுக்கு அடையாளமாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எசேக்கியேலின் தரிசனமும், கடவுளுடைய ஆலயத்திலிருந்து ஒரு ஆறு ஓடிவருவதைப் பற்றிச் சொல்கிறது. தூய வணக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் உயிரளிக்கும் ஆன்மீக ஆசீர்வாதங்களை யெகோவா கொடுப்பார் என்பதைப் புரிந்துகொள்ள கடவுளுடைய மக்களுக்கு அந்தத் தரிசனம் உதவியிருக்கும். அவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? குருமார்கள் மூலமாக திரும்பவும் ஆன்மீகப் போதனைகள் கிடைக்கும். ஆலயத்தில் பலிகள் செலுத்தப்படுவதால், பாவங்களுக்குப் பரிகாரம் கிடைக்கும். (எசே. 44:15, 23; 45:17) அதனால், அவர்கள் கடவுளுடைய ஆலயத்திலிருந்து ஓடிவரும் தூய்மையான தண்ணீரால் கழுவப்பட்டவர்களைப் போலத் திரும்பவும் சுத்தமான ஜனங்களாக ஆவார்கள்.
5. கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எல்லாருக்கும் எப்போதுமே போதுமான அளவுக்குக் கிடைக்குமா என்ற சந்தேகத்தைத் தரிசனத்தில் காட்டப்பட்ட ஆறு எப்படிப் போக்கியது?
5 கடவுளுடைய ஆசீர்வாதங்கள் அவர்கள் எல்லாருக்கும் எப்போதுமே போதுமான அளவுக்குக் கிடைக்குமா? இப்படி ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால், அந்தத் தரிசனம் அதைப் போக்கியிருக்கும். ஏனென்றால், அந்தத் தரிசனத்தில் லேசாக ஓட ஆரம்பித்த தண்ணீர், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலேயே அற்புதமான விதத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் காட்டப்பட்டது. (எசே. 47:3-5) அப்படியானால், யூதர்களுடைய தாய்நாடு திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறிய பிறகு, அங்கே மக்கள்தொகை எவ்வளவு அதிகமானாலும் சரி, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக்கு யெகோவாவின் ஆசீர்வாதங்களும் அதிகமாகும். ஆசீர்வாதங்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் கிடைக்கும் என்பதையே அந்த ஆறு அடையாளப்படுத்துகிறது.
6. (அ) நம்பிக்கையூட்டும் என்ன வாக்குறுதியை இந்தத் தரிசனம் கொடுத்தது? (ஆ) இந்தத் தரிசனம் என்ன எச்சரிப்பையும் கொடுத்தது? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
6 உயிரளிக்கும் தண்ணீர். எசேக்கியேலின் தரிசனத்தில், அந்த ஆறு சவக்கடலுக்குள் பாய்ந்தோடி அதிலுள்ள பெரும்பகுதி தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது. பெருங்கடலில், அதாவது மத்தியதரைக் கடலில், இருப்பதைப் போல இங்கும் வகை வகையான மீன்கள் பெருகும் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். சவக் கடலின் கரையோரத்தில், தூர தூரமாக இருந்த இரண்டு நகரங்களுக்கு இடையிலிருந்த பகுதிகளில் மீன்பிடித் தொழில் செழித்தது. அந்தத் தேவதூதர், “இந்த ஆறு எங்கே பாய்ந்தோடினாலும் அங்கே இருக்கிறவையெல்லாம் உயிர் பிழைக்கும்” என்று சொன்னார். அப்படியானால், யெகோவாவின் ஆலயத்திலிருந்து ஓடிவந்த தண்ணீர் சவக் கடலின் எல்லா பகுதிகளையும் எட்டியது என்று அர்த்தமா? இல்லை. சில சதுப்பு நிலங்கள், உயிரளிக்கும் இந்தத் தண்ணீர் எட்ட முடியாதபடி இருந்தன என்று அந்தத் தேவதூதர் சொன்னார். அந்த இடங்கள் “உப்பு நிலங்களாகவே” விடப்பட்டன.b (எசே. 47:8-11) தூய வணக்கம், மக்களுக்கு ஆன்மீக விதத்தில் உயிரளித்து அவர்களைச் செழிப்பாக வாழ வைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் வாக்குறுதியை இந்தத் தரிசனம் கொடுத்தது. அதேசமயத்தில், எல்லாருமே யெகோவாவின் ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், குணமடையவும் மாட்டார்கள் என்ற முன்னறிவிப்பையும் இது கொடுத்தது.
7. ஆற்றின் கரைகளில் இருந்த மரங்கள், சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு என்ன நம்பிக்கையை அளித்தன?
7 உணவளிக்கிற, குணமளிக்கிற மரங்கள். ஆற்றின் கரைகளில் இருந்த மரங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவை, இந்தத் தரிசனத்திலுள்ள காட்சிக்கு அழகு சேர்க்கின்றன. அந்த மரங்களுக்கு தீர்க்கதரிசன அர்த்தமும் இருக்கிறது. எசேக்கியேலும் அவரோடிருந்த மக்களும், அந்த மரங்களிலிருந்து ஒவ்வொரு மாதமும் கிடைக்கப் போகிற சுவையான புதிய கனிகளைப் பற்றிக் கண்டிப்பாக யோசித்துப் பார்த்திருப்பார்கள். அந்த அருமையான காட்சி, ஆன்மீக விதத்தில் யெகோவா உணவளிப்பார் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு அளித்தது. அந்த மரங்களின் இலைகள் ‘மருந்தாகப் பயன்படும்’ என்றும் அந்தத் தரிசனத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். (எசே. 47:12) சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிற எல்லாரும் ஆன்மீக விதத்தில் குணமடைவதுதான் ரொம்ப முக்கியம் என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால் அவர்களைக் குணமாக்கப்போவதாக அவர் உறுதியளித்தார். அதை அவர் எப்படிச் செய்தார் என்பது, திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமான மற்ற தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்தில் அதைப் பார்த்தோம்.
8. எசேக்கியேலின் தரிசனம் பெரியளவில் நிறைவேறும் என்பதை எது காட்டுகிறது?
8 ஒன்பதாம் அதிகாரத்தில் பார்த்தபடி, தாய்நாட்டுக்குத் திரும்பியவர்கள், அந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை ஓரளவுக்கு மட்டுமே அனுபவித்தார்கள். அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போனதற்கு அந்த மக்கள்தான் காரணம். ஏனென்றால், அவர்கள் திரும்பவும் கெட்டதைச் செய்ய ஆரம்பித்தார்கள், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனார்கள், தூய வணக்கத்தை விட்டுவிட்டார்கள். அப்படியிருக்கும்போது அவர்களை யெகோவா எப்படி முழுமையாக ஆசீர்வதிப்பார்? தங்களோடிருந்த யூதர்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து உண்மையுள்ள மற்ற யூதர்கள் வேதனைப்பட்டார்கள், சோர்ந்துபோனார்கள். ஆனாலும், யெகோவாவை உண்மையோடு வணங்கியவர்கள், அவருடைய வாக்குறுதிகள் ஒருபோதும் பொய்த்துப்போகாது என்றும், அவை நிச்சயம் நிறைவேறும் என்றும் அறிந்திருந்தார்கள். (யோசுவா 23:14-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், எசேக்கியேலின் தரிசனம் ஒருநாள் கண்டிப்பாக பெரியளவில் நிறைவேறும். எப்போது?
அந்த ஆறு இன்று பாய்ந்தோடுகிறது!
9. ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனம் எப்போது பெரியளவில் நிறைவேறும்?
9 ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தீர்க்கதரிசனம், “கடைசி நாட்களில்,” அதாவது தூய வணக்கம் இதுவரை இல்லாதளவுக்கு உயர்த்தப்படும் சமயத்தில், பெரியளவில் நிறைவேறும். இதைப் பற்றி 14-ஆம் அதிகாரத்தில் பார்த்தோம். (ஏசா. 2:2) தரிசனத்தில் காட்டப்பட்ட ஆற்றைப் பற்றிய விஷயம் இப்போதே எப்படி நிறைவேறி வருகிறது?
10, 11. (அ) இன்று ஆறுபோல் என்னென்ன ஆசீர்வாதங்கள் நம்மை நோக்கிப் பாய்ந்தோடி வருகின்றன? (ஆ) கடைசி நாட்களில், கடவுளுடைய மக்களின் அதிகரிப்புக்கு ஏற்றபடி அவருடைய ஆசீர்வாதங்களும் எப்படி அதிகரித்திருக்கின்றன?
10 ஆசீர்வாதங்களைத் தரும் ஆறு. யெகோவாவின் ஆலயத்திலிருந்து ஓடிவரும் தண்ணீர், இன்று நாம் அனுபவிக்கிற என்னென்ன ஆசீர்வாதங்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது? நாம் ஆன்மீக விதத்தில் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருப்பதற்காக யெகோவா கொடுக்கிற எல்லாவற்றையும் அது நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அவற்றில் மிக முக்கியமானது, கிறிஸ்துவின் மீட்புப் பலி. அது நம்மைச் சுத்தப்படுத்தி, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு வழிசெய்கிறது. கடவுளுடைய வார்த்தையிலுள்ள தூய்மையான சத்தியங்கள்கூட, உயிரளிக்கிற, சுத்தப்படுத்துகிற தண்ணீரைப் போல இருக்கின்றன. (எபே. 5:25-27) நம்முடைய காலத்தில் இந்த ஆசீர்வாதங்கள் எப்படி ஆறாகப் பாய்ந்தோடியிருக்கின்றன?
11 1919-ல் யெகோவாவின் ஊழியர்கள், சில ஆயிரம் பேர்தான் இருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான ஆன்மீக உணவு கிடைத்தபோது அவர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள். வருஷங்கள் போகப் போக, அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. இன்று கடவுளுடைய மக்களின் எண்ணிக்கை 80 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இந்த அதிகரிப்புக்கு ஏற்றபடி சத்தியம் என்ற தூய்மையான தண்ணீரின் அளவு அதிகரித்திருக்கிறதா? நிச்சயமாக! பைபிளிலுள்ள ஏராளமான சத்தியங்களுக்கு இன்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டில், கோடிக்கணக்கான பைபிள்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் கடவுளுடைய மக்களுக்குக் கிடைத்திருக்கின்றன. தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆறு படு வேகமாக விரிவடைந்துகொண்டே போனதுபோல, தூய்மையான சத்தியங்களும் மிகப் பரவலாக கிடைக்கின்றன. உலகம் முழுவதுமுள்ள மக்களின் ஆன்மீகத் தாகத்தைத் தீர்க்குமளவுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. பல காலமாக, அச்சடிக்கப்பட்ட பைபிள் பிரசுரங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துவந்தன. இப்போதோ, jw.org வெப்சைட் மூலமாக இப்படிப்பட்ட பிரசுரங்கள் எலக்ட்ரானிக் வடிவில் 900-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன! சத்தியம் என்ற இந்தத் தண்ணீர் நல்மனமுள்ள மக்களுக்கு எப்படி உதவுகிறது?
12. (அ) பைபிள் சத்தியங்கள் மக்களுக்கு எந்தெந்த விதங்களில் உதவியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? (ஆ) இன்று அந்தத் தரிசனம் பொருத்தமான என்ன எச்சரிப்பைக் கொடுக்கிறது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
12 உயிரளிக்கும் தண்ணீர். “இந்த ஆறு எங்கே பாய்ந்தோடினாலும் அங்கே இருக்கிறவையெல்லாம் உயிர் பிழைக்கும்” என்று எசேக்கியேலிடம் தேவதூதர் சொன்னார். திரும்ப நிலைநாட்டப்பட்ட ஆன்மீகத் தேசத்துக்கு வந்திருக்கிற எல்லாருக்கும் எந்த விதத்தில் சத்தியம் என்ற தண்ணீர் எட்டியிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். லட்சக்கணக்கான மக்கள் பைபிள் சத்தியங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சத்தியங்கள் அவர்களுக்கு உயிரளித்திருக்கின்றன, ஆன்மீக விதத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவியிருக்கின்றன. ஆனால், அப்படிப்பட்ட சத்தியங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எல்லாருக்குமே இருக்காது என்ற பொருத்தமான ஒரு எச்சரிப்பையும் அந்தத் தரிசனம் கொடுக்கிறது. எசேக்கியேலின் தரிசனத்தில் காட்டப்பட்ட சதுப்பு நிலங்களைப் போன்ற இதயமுள்ளவர்கள், ஒரு கட்டத்தில் சத்தியத்தைக் ஏற்றுக்கொள்வதையும் அதன்படி நடப்பதையும் நிறுத்திவிடுகிறார்கள்.c நாம் ஒருபோதும் இப்படிப்பட்டவர்களைப் போல் ஆகிவிடக் கூடாது.—உபாகமம் 10:16-18-ஐ வாசியுங்கள்.
13. தரிசனத்தில் காட்டப்பட்ட மரங்கள் என்ன விஷயங்களை நமக்குக் கற்றுத்தருகின்றன?
13 உணவளிக்கிற, குணமளிக்கிற மரங்கள். ஆற்றின் கரைகளில் உள்ள மரங்கள், உற்சாகமூட்டும் என்ன விஷயங்களை நமக்குக் கற்றுத்தருகின்றன? அந்த மரங்கள் ஒவ்வொரு மாதமும் சுவையான புதிய கனிகளைக் கொடுக்கும் என்றும், அவற்றின் இலைகள் குணப்படுத்தும் என்றும் பார்த்தோம். (எசே. 47:12) நாம் வணங்குகிற கடவுள், நமக்கு முக்கியமாகத் தேவைப்படுகிற ஆன்மீக உணவைத் தாராளமாகத் தருகிறார் என்பதையும், ஆன்மீக விதத்தில் நம்மைக் குணப்படுத்துகிறார் என்பதையும் இவை ஞாபகப்படுத்துகின்றன. இன்று உலக மக்கள் ஆன்மீக விதத்தில் வியாதியாலும் பட்டினியாலும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், யெகோவா தன்னுடைய மக்களுக்கு எந்தளவுக்கு உணவளிக்கிறார் என்பதை யோசித்துப்பாருங்கள். நம்முடைய பிரசுரங்களிலுள்ள ஒரு கட்டுரையைப் படித்த பிறகு... ஒரு மாநாட்டில் கடைசிப் பாடலைப் பாடிய பிறகு... ஒரு வீடியோவை அல்லது பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு... ‘எவ்வளவு அருமையான ஆன்மீக உணவை யெகோவா கொடுத்திருக்கிறார்!’ என்று நினைத்திருக்கிறீர்களா? ஆம், நமக்கு ஆன்மீக உணவு ஏராளமாகக் கிடைக்கிறது. (ஏசா. 65:13, 14) நமக்குக் கிடைக்கும் ஆன்மீக உணவு, ஆன்மீக விதத்தில் ஆரோக்கியமாக இருக்க நமக்கு உதவுகிறதா? கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கிற அருமையான ஆலோசனைகள், ஆன்மீக விதத்தில் நம்மைப் பலவீனமாக்குகிற ஒழுக்கக்கேடு, பேராசை, விசுவாசக் குறைவு போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கிறிஸ்தவர் ஒருவர் மோசமான பாவத்தைச் செய்து ஆன்மீக விதத்தில் வியாதிப்படும்போது அதிலிருந்து மீண்டுவருவதற்கும் யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். (யாக்கோபு 5:14-ஐ வாசியுங்கள்.) எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள மரங்கள் சுட்டிக்காட்டுவதுபோல நாம் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான்!
14, 15. (அ) குணமடையாத சதுப்பு நிலங்களிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆ) தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆறு, இன்று நமக்கு எப்படி நன்மை அளிக்கிறது?
14 அதேசமயத்தில், குணமடையாத அந்தச் சதுப்பு நிலங்களிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவின் ஆசீர்வாதங்கள் பாய்ந்தோடுவதைத் தடுக்க நாம் விரும்பவே மாட்டோம். ஆன்மீக விதத்தில் வியாதிப்பட்டு கிடக்கிற இந்த உலக மக்களைப் போல் நாமும் குணமடையாமல் இருந்தால் அது ரொம்பவே ஆபத்தானது. (மத். 13:15) ஆனால், ஆசீர்வாதங்களைத் தரும் ஆற்றிலிருந்து நாம் ஏராளமான நன்மைகளைப் பெறுகிறோம். கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியம் என்ற தூய்மையான தண்ணீரை நாம் ஆசை ஆசையாகக் குடிக்கும்போது... ஊழியத்தில் அந்தச் சத்தியங்களை மற்றவர்களிடம் சொல்லும்போது... உண்மையும் விவேகமும் உள்ள அடிமையால் பயிற்றுவிக்கப்பட்ட மூப்பர்களிடமிருந்து அன்பான வழிநடத்துதலையும், ஆறுதலையும், உதவியையும் பெற்றுக்கொள்ளும்போது... எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள ஆறுதான் நம் ஞாபகத்துக்கு வரும். அந்த ஆறு எங்கே பாய்ந்தோடினாலும், அங்கே இருப்பவையெல்லாம் உயிர்பெறுகின்றன, குணமடைகின்றன!
15 தரிசனத்தில் சொல்லப்பட்ட ஆறு எதிர்காலத்திலும் ஓடுமா? வரவிருக்கும் பூஞ்சோலையில் இதுவரை இல்லாதளவுக்கு அது பெருக்கெடுத்து ஓடப்போகிறது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
இந்தத் தரிசனத்தின் நிறைவேற்றம்—பூஞ்சோலையில்!
16, 17. (அ) தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆறு பூஞ்சோலையில் எந்த விதத்தில் இன்னும் விரிவடைந்துகொண்டே போகும்? (ஆ) ஆசீர்வாதங்களைத் தரும் ஆற்றிலிருந்து நாம் எப்படி நன்மை அடைவோம்?
16 பூஞ்சோலையில், குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதைப் பற்றி நீங்கள் கற்பனை செய்திருக்கிறீர்களா? எசேக்கியேலின் தரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஆற்றைப் பற்றிப் படிப்பது, இன்னும் நன்றாகக் கற்பனை செய்துபார்க்க உங்களுக்கு உதவும். எப்படி? அந்தத் தரிசனத்தின் மூலம் யெகோவா கொடுக்கிற தெளிவான, அன்பான மூன்று வாக்குறுதிகளைப் பற்றி மீண்டும் பார்க்கலாம்.
17 ஆசீர்வாதங்களைத் தரும் ஆறு. அடையாள அர்த்தமுள்ள அந்த ஆறு பூஞ்சோலையில் இன்னும் விரிவடைந்துகொண்டே போகும். ஏனென்றால், அது ஆன்மீக விதத்தில் மட்டுமல்ல மற்ற விதங்களிலும் நன்மை அளிக்கும். இயேசுவின் ஆயிர வருஷ ஆட்சியின்போது, மீட்பு விலையிலிருந்து மிகப் பெரியளவில் நன்மை அடைய உண்மையுள்ள மக்களுக்கு கடவுளுடைய அரசாங்கம் உதவும். அவர்கள் படிப்படியாகப் பரிபூரண நிலையை அடைவார்கள். நோய்களே இருக்காது, டாக்டர்களோ நர்ஸ்களோ இருக்க மாட்டார்கள். மருத்துவமனைக்கோ மருத்துவக் காப்பீட்டுக்கோ அவசியம் இருக்காது. அர்மகெதோன் போரிலிருந்து பாதுகாக்கப்படுகிற லட்சக்கணக்கான மக்களை நோக்கி, அதாவது ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைக்கிற ‘திரள்கூட்டமான மக்களை’ நோக்கி, உயிரளிக்கும் தண்ணீர் ஓடிவரும். (வெளி. 7:9, 14) அந்தத் தண்ணீரால் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் ஆரம்பத்திலேயே மலைக்க வைக்குமளவுக்கு இருக்கும். ஆனால், பிற்பாடு கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களோடு ஒப்பிடும்போது அவை ஒரு மெல்லிய நீரோடை போலத்தான் இருக்கும். எசேக்கியேலின் தரிசனத்தில் பார்த்தபடி, நிறைய பேருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக்கு அந்த ஆறு விரிவடைந்துகொண்டே போகும்.
18. ஆயிர வருஷ ஆட்சியின்போது “வாழ்வு தரும் தண்ணீர்” எந்த விதத்தில் பெருக்கெடுத்து ஓடுகிற ஆறாக மாறும்?
18 உயிரளிக்கும் தண்ணீர். ஆயிர வருஷ ஆட்சியின்போது “வாழ்வு தரும் தண்ணீர்” பெருக்கெடுத்து ஓடுகிற ஆறாக மாறும். (வெளி. 22:1) இறந்துபோன கோடிக்கணக்கான மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். பூஞ்சோலை பூமியில் என்றென்றைக்கும் வாழும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். தன்னுடைய அரசாங்கத்தின் மூலம் யெகோவா கொடுக்கும் ஆசீர்வாதங்களில், இறந்துபோய் பல காலமாக மண்ணில் தூங்கிக்கொண்டிருக்கும் எக்கச்சக்கமான ஆட்களை உயிரோடு எழுப்புவதும் அடங்கும். (ஏசா. 26:19) அப்படி உயிரோடு எழுப்பப்படுகிற எல்லாருமே தொடர்ந்து உயிர்வாழ்வார்களா?
19. (அ) பூஞ்சோலை பூமியில், புதிய சத்தியங்கள் கிடைக்கும் என்பதை எது காட்டுகிறது? (ஆ) எதிர்காலத்தில், சிலர் என்ன அர்த்தத்தில் “உப்பு நிலங்களாகவே” விடப்படுவார்கள்?
19 அது அவர்கள் கையில்தான் இருக்கிறது. பூஞ்சோலை பூமியில், புதிய சுருள்கள் திறக்கப்படும். இப்படி யெகோவாவிடமிருந்து கிடைக்கப்போகிற புத்துணர்ச்சியூட்டும் தண்ணீரில் புதிய சத்தியங்கள், அதாவது புதிய போதனைகள், உட்பட்டிருக்கும். அதைப் பற்றி யோசித்துப்பார்ப்பது நம்மைச் சிலிர்க்க வைக்கிறது, இல்லையா? ஆனால், சிலர் அந்தப் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல்போவார்கள். ஆயிர வருஷ ஆட்சியின்போது சிலர் கலகம் செய்யலாம், ஆனால் பூஞ்சோலை பூமியின் அமைதியைக் கெடுக்க அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். (ஏசா. 65:20) எசேக்கியேலின் தரிசனத்தில் காட்டப்பட்ட சதுப்பு நிலங்கள், “உப்பு நிலங்களாகவே” விடப்பட்டது நம் ஞாபகத்துக்கு வரலாம். வாழ்வு தரும் அருமையான தண்ணீரைக் குடிக்க மறுப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! ஆயிர வருஷ ஆட்சிக்குப் பிறகு, ஒரு கலகக்கார கும்பல் சாத்தானின் பக்கம் சேர்ந்துகொள்ளும். யெகோவாவின் நீதியான ஆட்சியை ஒதுக்கித்தள்ளுகிற எல்லாருமே நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—வெளி. 20:7-12.
20. ஆயிர வருஷ ஆட்சியில் நம் நன்மைக்காக செய்யப்படும் எந்த ஏற்பாட்டை, தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த மரங்கள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன?
20 உணவளிக்கிற, குணமளிக்கிற மரங்கள். நாம் யாருமே முடிவில்லாத வாழ்வை இழந்துவிடக் கூடாது என்றுதான் யெகோவா விரும்புகிறார். தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த மரங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இது முடிவில்லாத வாழ்வை நாம் பெற்றுக்கொள்வதற்காக யெகோவா செய்த ஏற்பாட்டைக் குறிக்கிறது. பூஞ்சோலை பூமியில், யெகோவா நம்முடைய ஆன்மீகத் தேவைகளையும் மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்வார். பரலோகத்திலிருந்து, இயேசு கிறிஸ்துவும் 1,44,000 பேரும் ராஜாக்களாக ஆயிரம் வருஷங்களுக்கு பூமியை ஆட்சி செய்வார்கள். இந்த 1,44,000 பேர் குருமார்களாகவும் சேவை செய்வார்கள். கிறிஸ்துவின் மீட்புப் பலியின் மூலமாக உண்மையுள்ள மனிதர்கள் பரிபூரண நிலையை அடைய அவர்கள் உதவுவார்கள். (வெளி. 20:6) சத்தான பழங்களையும் குணமளிக்கிற இலைகளையும் கொண்ட மரங்களைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்துக்கும், அப்போஸ்தலன் யோவான் பதிவு செய்த வேறொரு அருமையான தீர்க்கதரிசனத்துக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 22:1, 2-ஐ வாசியுங்கள்.) யோவான் பார்த்த மரங்களின் இலைகளும் “தேசத்தார் குணமாவதற்கு உதவின.” 1,44,000 பேர் குருமார்களாகச் சேவை செய்யும்போது, கடவுளுக்கு உண்மையாக இருக்கிற கோடிக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
21. தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆற்றைப் பற்றி யோசிக்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்? (“ஒரு மெல்லிய நீரோடை ஆறாகப் பெருக்கெடுக்கிறது!” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
21 தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆற்றைப் பற்றி யோசிக்கும்போது, உங்கள் மனதில் நிம்மதியும் நம்பிக்கையும் பிறக்கவில்லையா? எவ்வளவு அருமையான எதிர்காலம் நமக்காகக் காத்திருக்கிறது! பூஞ்சோலை பூமி எப்படி இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்ப்பதற்காக, ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பே மனதைத் தொடும் தீர்க்கதரிசனங்களை யெகோவா கொடுத்திருக்கிறார். அந்தத் தீர்க்கதரிசனங்கள் பெரியளவில் நிறைவேறும்போது, நாமும் அங்கே வாழ வேண்டும் என்பதற்காக பொறுமையோடு அவர் அழைப்பு கொடுக்கிறார். நீங்கள் அங்கே இருப்பீர்களா? பூஞ்சோலை பூமியில் உங்களுக்குச் சொந்தமாக ஒரு இடம் இருக்குமா என்று நீங்கள் யோசிக்கலாம். எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் முடிவான வார்த்தைகள் நமக்கு எப்படி நம்பிக்கை அளிக்கின்றன என்பதை அடுத்த அதிகாரத்தில் பார்க்கலாம்.
a அதுமட்டுமல்ல, சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் சிலருக்கு தங்களுடைய தாய்நாட்டின் நில அமைப்பு ஞாபகம் இருந்திருக்கும். அதனால், தரிசனத்தில் சொல்லப்பட்ட ஆறு நிஜமானது கிடையாது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால் இந்த ஆறு ரொம்பவே உயரமான ஒரு மலையிலுள்ள ஒரு ஆலயத்திலிருந்து ஓட ஆரம்பித்ததாக அந்தத் தரிசனம் காட்டுகிறது. ஆனால் அதில் விவரிக்கப்பட்டிருக்கும் இடத்தில் அப்படி ஒரு ஆலயமே இல்லை. அதோடு, அந்த ஆறு எந்தத் தடங்கலும் இல்லாமல் நேரடியாக சவக் கடலில் கலந்ததாகத் தரிசனம் சுட்டிக்காட்டுகிறது. நில அமைப்பின்படி பார்த்தால் அதற்கும் வாய்ப்பு இல்லை.
b பொருள்களைப் பதப்படுத்துவதற்குப் பயன்படுகிற உப்பைத் தயாரிப்பது ரொம்பக் காலமாகவே சவக் கடல் பகுதியில் லாபம் தரும் தொழிலாக இருந்தது. அதனால், “உப்பு நிலங்களாகவே இருக்கும்” என்ற வார்த்தைகள் நல்ல கருத்தில் சொல்லப்பட்டதாக விமர்சகர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆனால், அந்தச் சதுப்பு நிலங்கள் ‘நல்ல நிலங்களாக மாறாது’ என்று பைபிள் தெளிவாகச் சொல்வதைக் கவனியுங்கள். யெகோவாவின் ஆலயத்திலிருந்து வருகிற வாழ்வு தரும் தண்ணீர், அந்த நிலங்களை எட்டாததால், அவை நல்ல நிலங்களாக மாறாமல் இருக்கும். அதனால், இந்தப் பதிவில் சதுப்பு நிலங்கள் உப்பு நிலங்களாக விடப்பட்டதென நல்ல கருத்தில் சொல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.—சங். 107:33, 34; எரே. 17:6.
c இதேபோன்ற கருத்தை இழுவலை பற்றிய உவமையில் இயேசு சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். நிறைய மீன்கள் அந்த வலையில் சிக்குகின்றன. ஆனால், அதில் ‘நல்ல மீன்கள்’ மட்டுமல்ல ஆகாத மீன்களும் இருந்தன. அவற்றைத் தூக்கியெறிய வேண்டியிருந்தது. யெகோவாவுடைய அமைப்பிடம் ஈர்க்கப்படுகிற நிறைய பேர், காலப்போக்கில் கடவுளுக்கு உண்மையில்லாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது என்று இந்த உவமையின் மூலம் இயேசு எச்சரித்தார்.—மத். 13:47-50; 2 தீ. 2:20, 21.