யெகோவாவின் பரம இரதத்தோடு இணைந்து செல்லுங்கள்
“அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.”—எசேக்கியேல் 2:7.
1, 2. எசேக்கியேல் என்ன ராஜரீக வண்டியை பார்க்கிறான்? அவன் என்ன சொல்லப்பட்டான்?
யெகோவாவின் இரதம் இப்பொழுது அவருடைய ஊழியர்களுக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறது. விசுவாசக் கண்களினால், அவர்கள் தங்கள் கர்த்தராகிய ஆண்டவரின் ராஜரீக ஊர்தியைக் காண்கிறார்கள். அது மகிமைப்பொருந்தினதாக, பிரமிப்பூட்டுவதாக, கம்பீரமான தோற்றமுடையதாக இருக்கிறது.
2 இதே ராஜரீக வண்டிதானே, சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக, கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்கு முன்பாக வந்து நின்றது. சிங்காசனம்-தாங்கிய இந்த இரதத்திலிருந்து—ஆவி சிருஷ்டிகளடங்கிய கடவுளுடைய பரலோக அமைப்பிலிருந்து—யெகோவா இந்தக் கிளர்ச்சியூட்டும் கட்டளையை எசேக்கியேலுக்குக் கொடுத்தார்: “அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய (யெகோவாவாகிய, NW) ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு. கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறிய வேண்டும்.”—எசேக்கியேல் 2:4, 5.
3. எசேக்கியேலுக்கு என்ன நவீன நாளைய இணைப்பொருத்தம் இருக்கிறது?
3 எசேக்கியேல் பின்வாங்காமல் தெய்வீக கரத்தில் தனியொரு கருவியாக சேவித்து அந்தக் கட்டளையை நிறைவேற்றினான். அதேவிதமாகவே, கடவுள் இப்பொழுது தம்முடைய கட்டுப்பாட்டில் தனியொரு அமைப்பு சார்ந்த கருவியையே கொண்டிருக்கிறார். எசேக்கியேல் வகுப்பாகிய, அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர், இறுதியாக கொடுக்கப்படும் சாட்சி வேலையில் முன்னணியில் இருக்கிறார்கள். “வேறே ஆடு”களான “திரள் கூட்டத்தார்” இவர்களுக்கு ஆதரவாக சுற்றி அணிவகுத்து வருகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 10; யோவான் 10:16) மகத்தான இந்த இரத சவாரியாளர் யெகோவா தேவனின் அரசுரிமையின் கீழ், நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்து வழிநடத்த இவர்கள் சேர்ந்து “ஒரே மந்தை”யாக இருக்கிறார்கள்.
4, 5. கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு எவ்வாறு ஏற்பட்டது? ஏசாயா 60:22-ற்கு இசைவாக, அது எதை அனுபவித்திருக்கிறது?
4 யெகோவாவின் வழிநடத்துதலின் கீழ், உலகளாவிய இந்த அமைப்பு சிறிய ஆரம்பங்களிலிலிருந்து, “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது” என்ற கட்டளையை அறிவிப்பதற்கு ஒரு வலிமையான செயற்கருவியாக வளர்ந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:7) எசேக்கியேல் தானாகவே ஒரு தீர்க்கதரிசியாக எழும்பவோ அல்லது தன்னை தானே நியமித்துக் கொள்ளாமலும் இருந்ததுபோலவே, கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு தன்னைத்தான் உருவாக்கிக்கொள்ளவோ அல்லது நியமித்துக் கொள்ளவோ இல்லை. மனித விருப்பத்தினால் அல்லது முயற்சியினால் அது தோன்றவில்லை. தெய்வீக இரத சவாரியாளர் இந்த அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கடவுளுடைய ஆவியால் அதிகாரமளிக்கப்பட்டு, பரிசுத்த தூதர்களின் ஆதரவோடு யெகோவாவின் மக்கள், “சின்னவன் ஆயிரமாவான்” என்ற அளவுக்கு கிளர்ச்சியூட்டும் வளர்ச்சியை அனுபவித்து வந்திருக்கிறார்கள்.—ஏசாயா 60:22.
5 சுமார் 40,00,000 அதிகமான யெகோவாவின் சாட்சிகள் 212 தேசங்களில் ராஜ்ய செய்தியை அறிவித்து வருகிறார்கள். வட்டாரங்களாகவும் மாவட்டங்களாகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் 63,000-க்கும் மேற்பட்ட சபைகளில் அவர்கள் தொகுதிகளாக சேர்ந்திருக்கிறார்கள். தலைமைக் காரியாலய அமைப்பின் மையமாக இருக்கும் ஆளும் குழுவின் வழிநடத்தலின் கீழ் விரிவான கிளைக்காரியாலய அலுவலங்களும் அச்சு வசதிகளும் இயங்கிவருகின்றன. ஒரே ஆளைப் போன்றே, அனைவரும் நற்செய்தியை பிரசங்கித்துக்கொண்டும், பிரதிபலிக்கிறவர்களுக்குக் கல்வி புகட்டிக்கொண்டும், கூடுமிடங்களைக் கட்டிக் கொண்டும் அனைவரும் முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றனர். ஆம், யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு, பரம இரதத்தோடும் அதன் சவாரியாளரோடும் இணைந்து சென்றுக்கொண்டிருக்கிறது.
6. யெகோவாவின் காணக்கூடிய அமைப்போடு இணைந்து செல்வது எதை உட்படுத்துகிறது?
6 நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தால், கடவுளுடைய காணக்கூடிய அமைப்போடு இணைந்து செல்கிறீர்களா? இவ்விதமாகச் செய்வது என்பது வெறுமென கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராவதும் ஊழியத்தில் நேரத்தை செலவழிப்பதுமான ஒரு காரியமாக இருக்காது. அடிப்படையில் இணைந்து செல்வது முன்னேற்றத்தோடும் ஆவிக்குரிய வளர்ச்சியோடும் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. உடன்பாடான நோக்குநிலையை உடையவர்களாய் இருப்பதையும், சரியான காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தல் அமைத்துக்கொண்டிருப்பதையும், காலத்தோடொட்டிய வளர்ச்சியைக் காண்பிப்பதையும் இது உட்படுத்துகிறது. யெகோவாவின் பரம இரதத்தோடு நாம் இணைந்து சென்று கொண்டிருக்கிறோமென்றால், நம்முடைய வாழ்க்கை நாம் அறிவிக்கும் செய்திக்கு இசைவாக இருக்கிறது.
7. கடவுளுடைய தீர்க்கதரிசியாக, எசேக்கியேலின் நடத்தையை ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
7 இணைந்து செல்லும் விஷயத்தில், யெகோவாவின் நவீன–நாளைய ஊழியர்கள் எசேக்கியேலின் முன்மாதிரியிலிருந்து அதிகத்தை கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக யெகோவாவினால் ஒரு தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டபோதிலும், எசேக்கியேலுக்கும் உணர்ச்சிகளும், கவலைகளும், தேவைகளும் இருந்தன. உதாரணமாக, ஒப்பிடுகையில் விவாகமான ஓர் இளைஞனாக, அவன் தன் மனைவியை மரணத்தில் இழந்த துக்கத்தை அனுபவித்தான். என்றபோதிலும் யெகோவாவின் தீர்க்கதரிசியாக, தன் வேலையை அவன் ஒருபோதும் மறந்துவிடவில்லை. மற்ற விஷயங்களிலும்கூட எசேக்கியேல் தன்னை எவ்விதமாக நடத்திக்கொண்டான் என்பதை சிந்திப்பதன் மூலம், கடவுளுடைய காணக்கூடிய அமைப்போடு இணைந்துசெல்வதற்கு நாம் நம்மை பலப்படுத்திக் கொள்ளக்கூடும். இது அவருடைய காணக்கூடாத அமைப்போடு இணைந்து செல்ல நமக்கு உதவி செய்கிறது.
வேலை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது
8. தன்னுடைய வேலையின் சம்பந்தமாக எசேக்கியேல் என்ன முன்மாதிரியை வைத்தான்?
8 தன் வேலையை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றுவதன் மூலம் எசேக்கியேல் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தான். என்றபோதிலும் அதை நிறைவேற்றுவதற்கு கீழ்ப்படிதலும் தைரியமும் அவசியமாயிருந்தது. ஏனென்றால் நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார். கலக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும்சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.”—எசேக்கியேல் 2:6–8.
9. என்ன செய்வதால் மட்டுமே எசேக்கியேல் இரத்தப்பழிக்கு நீங்கலாக இருப்பான்?
9 எசேக்கியேல் ஆர்வமில்லாதவனாக அல்லது பயப்படுகிறவனாக இல்லை, அவனுடைய வேலையை நிறைவேற்ற எப்போதும் அவனை தூண்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவன் யெகோவாவின் வார்த்தைகளை மனமுவந்தும் தைரியமாகவும் பேசினால் மட்டுமே இரத்தப்பழிக்கு நீங்கலாக இருப்பான். எசேக்கியேல் இவ்விதமாகச் சொல்லப்பட்டான்: “நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.”—எசேக்கியேல் 3:19.
10. எசேக்கியேல் வகுப்பார் எவ்விதமாக தீர்க்கதரிசியைப் போல இருப்பதை நிரூபித்திருக்கின்றனர்?
10 எசேக்கியேலின் விஷயத்தில் இருந்தது போலவே, அபிஷேகம் பண்ணப்பட்ட எசேக்கியேல் வகுப்பார், கடவுளால் கொடுக்கப்பட்ட தங்கள் வேலையை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றி வருகிறார்கள். நாம் யெகோவாவின் சாட்சிளாக இருந்தால், நம்முடைய ஜீவனும் மற்றவர்களுடைய ஜீவன்களும் நம்முடைய கீழ்ப்படிதலின் பேரில் சார்ந்திருக்கிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும். (1 தீமோத்தேயு 4:15, 16) ஒவ்வொரு சாட்சியும் யெகோவாவின் அமைப்போடு இணைந்து செல்ல வேண்டும். கடவுள் நம்மை அவருடைய இரதத்தில் கட்டி நம்மை இழுத்துச் செல்லமாட்டார். அக்கறையின்மையும் பிளவுபட்ட இருதயமும் இரத சவாரியாளரின் மதிப்பைக் குறைக்கிறது. ஆகவே தெய்வீக அக்கறைகளை நம்முடைய வாழ்க்கையின் மையத்தில் வைக்கும்படியாக யெகோவாவின் அமைப்பு நம்மை அறிவுறுத்துகிறது. இப்படிப்பட்ட அறிவுரைகளுக்கு எப்போதும் செவிசாய்ப்பது, கடவுளுடைய அமைப்போடு நம்மை இணையாக வைத்து, நம்முடைய பரிசுத்த ஊழியத்தை பழக்கமாகவும், இயந்திரத்தன்மையிலும் செய்வற்கும் மேலாக உயர்த்துகிறது. நிச்சயமாகவே, மொத்தமாக யெகோவாவின் மக்கள் குறிப்பிடத்தக்க பக்தியை வெளிகாட்டுகிறார்கள். நம்முடைய தனிப்பட்ட கடமை நம்முடைய வேகத்தைக் காத்துக்கொள்வதாக இருக்கிறது.
கடவுளுடைய வார்த்தை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
11. கடவுளுடைய வார்த்தையின் சம்பந்தமாக எசேக்கியேல் என்ன முன்மாதிரியை வைத்தான்?
11 கடவுளுடைய வார்த்தையை இருதயத்துக்குள் ஏற்றுக்கொள்வதிலும்கூட எசேக்கியேல் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தான். கட்டளையின் பேரில் அவன் கடவுளால் கொடுக்கப்பட்ட சுருளை அல்லது புஸ்தகத்தை புசித்தான். “அது என் வாய்க்குத் தேனைப் போல் தித்திப்பாயிருந்தது” என்று எசேக்கியேல் சொன்னான். புஸ்தகச் சுருள் “புலம்பல்களும், தவிப்பும், ஐயோ”வும் நிறைந்ததாக இருந்தபோதிலும் அது எசேக்கியேலுக்கு தித்திப்பாயிருந்தது, ஏனென்றால் அவன் யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்யும் கனத்தை மதித்துணர்ந்தான். கடவுளால் கொடுக்கப்பட்ட தன் வேலையை நிறைவேற்றுவது தீர்க்கதரிசிக்கு இனிமையான ஓர் அனுபவமாக இருந்தது. கடவுள் அவனுக்குச் சொன்னார்: “மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ என் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொள்.” (எசேக்கியேல் 2:9–3:3, 10) இந்தத் தரிசனங்கள், அவன் பங்கேற்கும்படியாக கடவுள் அனுமதித்திருந்தவற்றைக் குறித்து வெகுவாக உணர்வுள்ளவனாகச் செய்து யெகோவாவோடு அவனுடைய உறவை பலப்படுத்தியது.
12. இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலான தீர்க்கதரிசன பணியில் எசேக்கியேல் என்ன செய்தான்?
12 எசேக்கியேல் பல்வேறு நோக்கங்களுக்காகவும் பார்வையாளர்களுக்காகவும் தரிசனங்களும் செய்திகளும் கொடுக்கப்பட்டான். அவன் கவனமாய் செவிசாய்த்து பின்னர் சொன்னபடி பேசவும் செயல்படவும் வேண்டும். புதிய தகவல்களும் செயல்முறைகளும் அவனுடைய சுமார் 22 ஆண்டுகால தீர்க்கதரிசன பணிக்காலத்தின் போது அவனுக்கு படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டன. சில சமயங்களில் எசேக்கியேல் திட்டவட்டமான சொல்வடிவில் செய்தியை பேசினான். மற்ற சமயங்களில் சைகை மூலம் பேசினான். உதாரணமாக எருசலேமை அடையாளப்படுத்தும் வகையில் செங்கலுக்கு முன்னால் படுத்துக்கிடந்தான். (எசேக்கியேல் 4:1–8) தன்னுடைய மனைவியின் மரணத்துக்கு அவனுடைய பிரதிபலிப்பு போன்ற சொந்த விஷயங்களில் அவனுடைய முன்மாதிரியும்கூட ஒரு செய்தியை கொண்டிருந்தது. (எசேக்கியேல் 24:15–19) அவன் நிகழ்காலத்துக்குரியவனாக இருந்து, எப்போதும் சரியான செய்தியை அளித்து, சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுகிறவனாக இருக்க வேண்டும். எசேக்கியேல் யெகோவாவோடு மிக நெருக்கமான, படிப்படியாக வளருகிற ஒரு செயல்முறையான உறவில் பிணைக்கப்பட்டிருந்தான்.
13. யெகோவாவோடு நாம் எவ்விதமாக நெருங்கிய ஓர் உறவை வளர்த்துக்கொள்ளலாம்?
13 அதேவிதமாகவே, யெகோவாவோடு அவருடைய உடன்வேலையாட்களாக ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளவும் காத்துக் கொள்ளவும் நாம் கடவுளுடைய வார்த்தையை நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். (1 கொரிந்தியர் 3:9) இந்த விஷயத்தில், கடவுளுடைய காணக்கூடிய அமைப்போடு இணைந்து செல்வது, ஏற்றவேளையில் அளிக்கப்படும் ஆவிக்குரிய உணவுக்கு இணையாகச் செல்வதைத் தேவைப்படுத்துகிறது. (மத்தேயு 24:45–47) “சுத்தமான பாஷை” இடைவிடாது விரிவாகிக்கொண்டே இருக்கிறது. (செப்பனியா 3:9) காலத்தோடொட்டிய வளர்ச்சியுடையவர்களாய் இருந்தால் மாத்திரமே, இரத சவாரியாளரின் கட்டளைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிதலுடன் நாம் பிரதிபலிக்க முடியும்.
14, 15. கடவுளுடைய அமைப்பு நிர்ணயித்திருக்கும் வேகத்தோடு இணைந்து செல்ல என்ன பழக்கம் தேவையாக இருக்கிறது?
14 அதற்காக தனிப்பட்ட ஜெபம், சொந்த படிப்பு மற்றும் நற்செய்தியின் பரிசுத்த ஊழியத்தில் பங்கெடுத்தலை ஒரு நல்ல பழக்கமாக கொண்டிருப்பது அவசியமாகும். (ரோமர் 15:16) கடவுளுடைய செய்திகளைக் கொண்ட புஸ்தக சுருளை எசேக்கியேல் புசித்த முன்மாதிரியை நினைவுபடுத்திப் பாருங்கள். எசேக்கியேல் அதன் ஒரு பகுதியை அல்ல, முழுமையாக அதைப் புசித்தான். தன்னுடைய சொந்த சுவையுணர்ச்சிக்கு அதிக விரும்பத்தக்கதாக இருந்திருக்கக்கூடிய துணுக்குகளை அவன் பொறுக்கி தெரிந்தெடுக்கவில்லை. அதேவிதமாக, நம்முடைய சொந்த பைபிள் மற்றும் கிறிஸ்தவ பிரசுரங்களின் படிப்பு, கிடைக்கும் ஆவிக்குரிய உணவோடு இணைந்து செல்ல அது சீராக்கப்பட வேண்டும். ஆழமான சத்தியங்கள் உட்பட ஆவிக்குரிய மேசையில் வைக்கப்படும் அனைத்தையும் நாம் அருந்த வேண்டும்.
15 பலமான உணவின் பொருளை உணர்ந்து கொள்ள நாம் ஜெபசிந்தையோடு முயற்சி செய்கிறோமா? இணைந்து செல்லுதல் நம்முடைய அறிவும் புரிந்துகொள்ளுதலும் மூல உபதேசங்களுக்கு அப்பால் முன்னேறுவதை தேவைப்படுத்துகிறது. ஏனென்றால் நாம் வாசிக்கிறோம்: “பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” (எபிரெயர் 5:13, 14) ஆம், ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வது, கடவுளுடைய அமைப்போடு இணைந்து செல்வதில் இன்றியமையாததாகும்.
அக்கறையின்மை தடையாக இருக்கவில்லை
16, 17. அக்கறையின்மை, பரிகாசம் மற்றும் பிரதிபலிப்பின்மையை எசேக்கியேல் எவ்வாறு கையாண்டான்?
16 கீழ்ப்படிதலுள்ளவனாக, அக்கறையின்மையோ அல்லது பரிகாசமோ தன்னை தடை செய்ய அனுமதியாதிருப்பதன் மூலமும்கூட எசேக்கியேல் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தான். அதேவிதமாகவே, சுத்தமான பாஷையின் வளர்ச்சியோடு இணையாகச் செல்வதன் மூலம், ராஜரீக இரத சவாரியாளரின் கட்டளைக்கு ஏற்ப நாம் இசைவாக இருக்கிறோம். இவ்விதமாக நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய ஆயத்தமாகவும், யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்திகளை நாம் எடுத்துரைக்கையில் ஆட்களின் அக்கறையின்மையால் அல்லது பரிகாசத்தால் தடை செய்யப்படாமல் பலப்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். எசேக்கியேலுக்கு சொன்னது போலவே சில ஆட்கள் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுமுள்ள இருதயமுள்ளவர்களாகவும் இருப்பதன் காரணமாக நம்மை சுறுசுறுப்பாக எதிர்பார்கள் என்றும் யெகோவா நம்மை எச்சரித்திருக்கிறார். மற்றவர்கள் யெகோவாவுக்கு செவிசாய்க்க விரும்பாததன் காரணமாக கேட்கமாட்டார்கள். (எசேக்கியேல் 3:7–9) இன்றும் மற்றவர்கள் எசேக்கியேல் 33:31, 32 சொல்லும்வண்ணமாக மாய்மாலக்காரராக இருப்பார்கள்: “ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது. இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.”
17 விளைவு என்னவாக இருக்கும்? வசனம் 33 சொல்லுகிறது: “இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள்.” பிரதிபலிப்பு இல்லாததன் காரணமாக எசேக்கியேல் வேலையை நிறுத்திவிடவில்லை என்பதை அந்த வார்த்தைகள் காண்பிக்கின்றன. மற்றவர்கள் அக்கறையற்றிருந்தது அவனை அக்கறையற்றவனாக்கவில்லை. மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், அவன் கடவுளுக்கு கீழ்ப்படிந்திருந்து தன் வேலையை நிறைவேற்றினான்.
18. என்ன கேள்விகளை நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளலாம்?
18 யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு, அனைவரும் கடவுளுக்குப் பயந்து அவருக்கு மகிமையைச் செலுத்தும்படியான அறிவிப்பை இப்பொழுது தீவிரமாகச் செய்து வருகிறது. ராஜ்ய சாட்சிக்காக தைரியமான நடவடிக்கை எடுப்பதற்காகவும், உங்கள் வாழ்க்கைப் பாணியில் ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பதற்காகவும் நீங்கள் குறைகூறப்படுகையில் நீங்கள் விடாது உறுதியாக இருக்கிறீர்களா? இரத்தம் ஏற்றுக்கொள்ளாததால், தேசீய சின்னங்களை வணங்காமல் இருப்பதால், உலகப்பிரகாரமான விடுமுறை நாட்களை கொண்டாடாமல் இருப்பதால் அழுத்தத்தின் இலக்காக இருக்கும் போது நீங்கள் உறுதியாக நிலைநிற்கிறீர்களா?—மத்தேயு 5:11, 12; 1 பேதுரு 4:4, 5.
19. அறிவுரைகளைப் பொறுத்தமட்டில், யெகோவாவின் பரம இரதத்தோடு நாம் இணைந்து சென்றுகொண்டிருந்தால் நாம் என்ன செய்வோம்?
19 இந்தப் போக்கு எளிய ஒன்றல்ல, ஆனால் முடிவுபரியந்தம் நிலைநிற்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். (மத்தேயு 24:13) யெகோவாவின் உதவியோடு, உலகத்திலுள்ள மக்கள் நம்மை அவர்களைப் போல் மாற்றிவிடவும், இவ்விதமாக யெகோவாவின் பரம இரதத்தோடு இணைந்து செல்லாமல் விலகிவிடச் செய்யவும் அனுமதிக்க மாட்டோம். (எசேக்கியேல் 2:8; ரோமர் 12:21) இரதம் போன்ற தேவதூத அமைப்போடு நாம் இணைந்து சென்றுக்கொண்டிருப்போமானால், கடவுளுடைய காணக்கூடிய அமைப்பின் மூலமாக பெற்றுக்கொள்ளும் அறிவுரைகளையும் போதனைகளையும் உடனடியாக பின்பற்றுவோம். நம்முடைய விசுவாசத்தின் மீது வரும் தாக்குதல்களை எதிர்படவும், ஜீவ வார்த்தையின்பேரில் நம்முடைய பிடிப்பை காத்துக்கொள்வதற்கும் பரம இரதத்தின் ராஜரீக சவாரியாளரின் மேல் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஆவிக்குரிய மெய்மைகளின் மேல் நம்முடைய கண்களை ஊன்ற வைக்கவும் தேவையானவற்றை யெகோவா அளிக்கிறார்.
இணைந்துச் செல்ல தூண்டப்படுதல்
20. இணைந்து செல்ல நம்மை தூண்டுவதற்கு எசேக்கியேல் பதிவு செய்யும் சில காரியங்கள் யாவை?
20 எசேக்கியேலின் தரிசனம் இணைந்து செல்ல நம்மைத் தூண்ட வேண்டும். அவன் இஸ்ரவேலின் மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவித்தது மட்டுமல்லாமல், ஆனால் மீண்டும் நிலைநாட்டப்படுவது குறித்த தீர்க்கதரிசனங்களையும்கூட பதிவு செய்தான். நியமிக்கப்பட்ட காலத்தில் யெகோவாவின் சிங்காசனத்தின் மேல் ஆட்சி செய்வதற்கு சட்டப்படி உரிமையுள்ளவரை எசேக்கியேல் சுட்டிக் காட்டினான். (எசேக்கியேல் 21:27) ராஜரீக ஊழியனாகிய “தாவீது” கடவுளுடைய மக்களை மீண்டும் கூட்டிச் சேர்த்து அவர்களை மேய்ப்பார். (எசேக்கியேல் 34:23, 24) அவர்கள் மாகோகினால் தாக்கப்பட்டாலும், கடவுள் அவர்களை விடுவிப்பார், அவருடைய சத்துருக்கள் அழிவுக்குள் போகும்போது அவர்கள் ‘யெகோவாவை அறிந்துகொள்ள’ கட்டாயப்படுத்தப்படுவர். (எசேக்கியேல் 38:8–12; 39:4, 7) பின்னர், கடவுளுடைய ஊழியர்கள் ஆவிக்குரிய ஆலயத்தை உட்படுத்தும் ஒரு தூய்மையான வணக்க முறையில் முடிவில்லா வாழ்க்கையை அனுபவித்துக்களிப்பர். பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்ந்துவரும் ஜீவத்தண்ணீர்கள் ஊட்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அவர்களுடைய ஆசீர்வாதத்துக்காக தேசம் சுதந்தரமாக பங்கிட்டு கொடுக்கப்படும்.—எசேக்கியேல் 40:2; 47:9, 12, 21.
21. யெகோவாவின் நவீன–நாளைய சாட்சிகளின் பங்கு ஏன் எசேக்கியேலினுடையதைவிட பெரியதாக இருக்கிறது?
21 இந்தத் தீர்க்கதரிசனங்களை பதிவு செய்வதில் எசேக்கியேல் எவ்வளவு கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும்! என்றபோதிலும், யெகோவாவின் நவீன நாளைய சாட்சிகளின் பங்கு அதைவிடப் பெரியதாகும். அந்தச் சில தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். உண்மையில், ஒரு சில நிறைவேற்றங்களில் நாம் சுறுசுறுப்பாக பங்கு கொள்கிறவர்களாக இருக்கிறோம். இயேசு இப்பொழுது உரிமைக்காரராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்புவதை, நாம் வாழும் விதத்தின் மூலமாக தனிப்பட்டவர்களாக நாம் காண்பிக்கிறோமா? யெகோவா சீக்கிரத்தில் தம்மைப் பரிசுத்தப்படுத்தி, அவருடைய அமைப்போடு இணைந்து செல்கிறவர்களை அவருடைய புதிய உலகிற்குள் கொண்டு செல்வார் என்பதை நாம் தனிப்பட்ட வகையில் உறுதியாக நம்புகிறோமா? (2 பேதுரு 3:13) இப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கை, விசுவாச கிரியைகளோடு சேர்ந்து, நாம் யெகோவாவின் பரம இரதத்தோடு நிச்சயமாகவே இணைந்துசெல்கிறோம் என்பதைக் காண்பிக்கிறது.
தொடர்ந்து இணைந்துசென்றுக்கொண்டிருங்கள்
22. தெளிவான ஆவிக்குரிய நோக்குநிலையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாற்றத்தைத் தவிர்க்க என்ன செய்யப்படலாம்?
22 ‘கலப்பையின் மேல் நம்முடைய கைகளை வைத்துவிட்ட பின்பு’ உலகம் அளிக்கக்கூடிய எதையும் நாம் ஏக்கத்தோடு பின்னிட்டுப் பார்க்கக்கூடாது. (லூக்கா 9:62; 17:32; தீத்து 2:11–13) பூமியின் மீது பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கும் எந்த ஒரு மனச்சாய்வையும் நாம் கட்டுப்படுத்தி, நம்முடைய கண்களை தெளிவாக ராஜ்யத்தின் மீது ஒருமுகமாக வைக்கக்கடவோம். (மத்தேயு 6:19–22, 33) நம்முடைய வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டு, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பாரங்களை களைந்துவிடுவது யெகோவாவின் அமைப்போடு இணைந்துசெல்ல நமக்கு உதவி செய்யும். (எபிரெயர் 12:1–3) கவனமாற்றம் பரம இரதத்தையும் அதன் சவாரியாளரையும் பற்றிய நம்முடைய காட்சியை மங்கலாக்கிவிடக்கூடும். ஆனால் அவருடைய உதவியோடு எசேக்கியேலைப் போன்றே தெளிவான ஆவிக்குரிய நோக்குநிலையை நாம் காத்துக் கொள்ளலாம்.
23. புதியவர்களுக்காக உண்மையுள்ள சாட்சிகள் என்ன செய்யவேண்டியது அவசியமாயிருக்கிறது?
23 யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய உத்தரவாதத்தில் ஒரு பாகம், அநேக புதியவர்களுக்குக் கடவுளுடைய பரம இரதத்தோடு இணைந்து செல்ல உதவி செய்வதை உட்படுத்துகிறது. 1990-களில் சுமார் 1,00,00,000 பேர் இயேசு கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்த நாளுக்கு ஆஜராயிருந்தனர். இவர்களில் அநேக தனி ஆட்கள் ஒருசில கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்து போய்கொண்டிருந்தாலும், யெகோவாவின் காணக்கூடிய அமைப்போடு முன்னேறிச் செல்வதன் முக்கியத்துவத்தை காண்பது அவசியமாகும். உண்மையுள்ள சாட்சிகளாக நாம் காண்பிக்கும் ஆவியின் மூலமாகவும் நாம் அளிக்கும் உற்சாகத்தின் மூலமாகவும் அவர்களுக்கு உதவி செய்யலாம்.
24. இந்தக் கிளர்ச்சியூட்டும் காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்?
24 இவை கிளர்ச்சியூட்டும் காலங்களாகும். விசுவாசக் கண்களோடு, பரம இரதம் நம் முன்னால் வந்து நிற்பதை நாம் பார்த்திருக்கிறோம். கடைசியில் ஜாதிகள் யெகோவா யார் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு பிரசங்கிக்கும் வேலையை ராஜரீக இரத சவாரியாளர் தம்முடைய காணக்கூடிய அமைப்புக்கு கொடுத்திருக்கிறார். (எசேக்கியேல் 39:7) யெகோவாவின் பரம இரதத்தோடு இணைந்து செல்வதன் மூலம் கடவுளுடைய அரசுரிமையின் நியாயநிரூபணத்திலும் அவருடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்தப்படுத்துவதிலும் பங்கு கொள்வதற்கு இந்த மகத்தான வாய்ப்பை மிக நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். (w91 3/15)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻எசேக்கியேல் தன்னுடைய வேலையைப் பொறுத்தமட்டில் என்ன முன்மாதிரியை வைத்தான்?
◻கடவுளுடைய அமைப்போடு இணைந்துசெல்வது எதை அர்த்தப்படுத்துகிறது?
◻எசேக்கியேல் யெகோவாவின் வார்த்தைகளை எவ்விதமாக கருதினான்?
◻அக்கறையின்மையை கையாளுவதில் நாம் எவ்வாறு எசேக்கியேலின் முன்மாதிரியை பின்பற்றலாம்?
◻அவருடைய பரம இரதத்தோடு இணைந்து செல்வதற்கு யெகோவாவின் ஊழியர்களை எது தூண்ட வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
யெகோவாவின் பரம இரதத்தோடு இணைந்து செல்ல தேவைப்படுவது என்ன?
[பக்கம் 16-ன் படம்]
எசேக்கியேல் கடவுளால் கொடுக்கப்பட்ட சிலாக்கியங்களை மதித்துணர்ந்தான். நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா?