யெகோவா நியாயத்தன்மை உடையவர்!
“பரத்திலிருந்து வரும் ஞானம் . . . நியாயத்தன்மை உள்ளது.”—யாக்கோபு 3:17, NW.
1. எவ்வாறு சிலர் கடவுளை நியாயத்தன்மை இல்லாதவராகச் சித்தரித்திருக்கின்றனர், கடவுளைப்பற்றி அப்படிப்பட்ட ஒரு கருத்தைக்குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
நீங்கள் என்ன வகையான கடவுளை வழிபடுகிறீர்கள்? வளைந்துகொடுக்காத, கண்டிப்பான நியாயத்தைக் கேட்கும், கடுமையான, தம்முடைய மனோபாவத்தில் கட்டுறுதியான இயல்புடைய ஒரு கடவுளாக நீங்கள் அவரை நம்புகிறீர்களா? புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதியாகிய ஜான் கால்வினுக்கு, கடவுள் அப்படிப்பட்டவராகத் தோன்றியிருக்கவேண்டும். ஒவ்வொரு தனி நபரைக் குறித்தும் “நித்தியமான, மாறாத திட்டம்” ஒன்றைக் கடவுள் வைத்திருக்கிறார் என்று கால்வின் வலியுறுத்தினார்; மகிழ்ச்சியுடன் என்றென்றுமாக அவர் வாழ்வாரா அல்லது எரிநரகத்தில் என்றைக்குமாக வதைக்கப்படுவாரா என்று ஒவ்வொருவருக்கும் முன்நிர்ணயம்செய்து வைத்திருப்பதாகச் சொன்னார். எண்ணிப்பாருங்கள்: இது உண்மையாக இருந்தால், உங்களால் செய்ய முடிந்த எதுவும், நீங்கள் எவ்வளவு கடினமாக முயன்றாலும் சரி, உங்களையும் உங்கள் எதிர்காலத்தையும் பற்றிய கடவுளுடைய நீடித்து நிலைக்கும் உறுதியான திட்டத்தை மாற்றாது. அப்படிப்பட்ட நியாயத்தன்மையற்ற ஒரு கடவுளிடமாக நீங்கள் கவர்ந்திழுக்கப்படுவீர்களா?—யாக்கோபு 4:8-ஐ ஒப்பிடவும்.
2, 3. (அ) மனித நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் நியாயமற்றத்தன்மையை நாம் எவ்வாறு விளக்கக்கூடும்? (ஆ) யெகோவாவின் பரம ரதத்தைப்பற்றிய எசேக்கியேலின் தரிசனம் எப்படி அவருடைய மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்துகிறது?
2 பைபிளின் கடவுள் குறிப்பிடத்தக்கவிதத்தில் நியாயத்தன்மை உள்ளவர் என்று அறிவதில் நாம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறோம்! கட்டுறுதியான, வளைந்துகொடுக்காத போக்கைக் கொண்டிருப்பது கடவுள் அல்ல, ஆனால் தங்கள் சொந்த அபூரணங்களால் கட்டுப்பட்டிருக்கும் மனிதரே ஆவர். எளிதில் கட்டுப்படுத்த முடியாத சரக்கு ரயில்களைப் போல மனித அமைப்புகள் இருக்கலாம். ஒரு பெரிய சரக்கு ரயில், தடத்திலுள்ள ஒரு தடங்கலை நோக்கி போய்க்கொண்டிருக்கையில் அதைத் திருப்புவது கூடாதகாரியம், நிறுத்துவதும் கடினமான காரியம். சில ரயில்கள் அவ்வளவு அதிக முன்னோக்க இயக்கவிசையைக் கொண்டிருப்பதால், பிரேக்குகள் போடப்பட்டதற்குப்பின் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்றே நிற்கின்றன! அதேவிதமாகவே, பெரிய எண்ணெய்க் கப்பல் ஒன்று, எஞ்சின்கள் நிறுத்தப்பட்டபின் இன்னும் எட்டு கிலோமீட்டர் முன்சென்றே நிற்கிறது. அவை எதிர்த்திசைக்குத் திருப்பப்பட்டாலும், இன்னும் மூன்று கிலோமீட்டருக்கு நகர்ந்துகொண்டிருக்கக்கூடும்! ஆனால் இவ்விரண்டையும்விட மிக அதிகளவில் பிரமிக்கவைக்கும் ஒரு வாகனத்தை, கடவுளுடைய அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றை இப்போது கவனியுங்கள்.
3 யெகோவா, ஆவிக்குரிய சிருஷ்டிகளாலான தம்முடைய பரலோக அமைப்பைச் சித்தரித்த ஒரு காட்சியை தமது தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்கு 2,600-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன் அளித்தார். வியப்பூட்டும் பரிமாணங்களை உடைய ஒரு ரதமாக, எப்போதும் யெகோவாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவருடைய சொந்த “வாகனமாக” அது இருந்தது. அது இயங்கியவிதமே மிகவும் அக்கறைக்குரியதாக இருந்தது. பிரமாண்டமான சக்கரங்கள் நான்கு பக்கங்களைக் கொண்டவையாயும் கண்கள் நிறைந்தவையாயும் இருந்தன. ஆகவே அவை நிறுத்தாமலோ திரும்பாமலோ எங்கும் பார்க்கவும் உடனடியாக திசை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. மேலும் இந்தப் பிரமாண்டமான வாகனம் ஒரு எண்ணெய்க் கப்பலையோ ஒரு சரக்கு ரயிலையோ போல தட்டுத்தடுமாறிச் செல்லவேண்டி இருக்கவில்லை. செங்கோண திருப்பங்களை எடுத்துக்கூட அது மின்னல் வேகத்தில் செல்ல முடியும்! (எசேக்கியேல் 1:1, 14-28) யெகோவாவுடைய ரதம், மனிதனின் படைப்பான, அமைப்பில் குறைவுபட்ட இயந்திரங்களிலிருந்து எப்படி வேறுபட்டிருக்கிறதோ, அவ்வாறே யெகோவாவும் கால்வின் பிரசங்கித்த கடவுளிலிருந்து வேறுபட்டிருக்கிறார். அவர் தன்னை முற்றிலும் மாற்றியமைத்துக்கொள்ளத்தக்கவர். யெகோவாவுடைய ஆளுமையின் இந்த அம்சத்தை மதித்துணருவது, நாம் மாற்றியமைத்துக்கொள்ளத்தக்க தன்மையில் நிலைத்திருக்கவும் நியாயத்தன்மையற்றவர்களாகும் கண்ணியைத் தவிர்க்கவும் உதவி செய்யவேண்டும்.
யெகோவா—இப்பிரபஞ்சத்திலேயே தன்னை மிகவும் மாற்றியமைத்துக்கொள்ளத்தக்கவர்
4. (அ) யெகோவாவின் பெயர்தானே, எந்தவிதத்தில் அவர் ஒரு மாற்றியமைத்துக்கொள்ளும் கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறது? (ஆ) யெகோவா தேவனுக்குப் பொருத்தப்பட்ட சில பதவிப்பெயர்கள் யாவை, அவை ஏன் பொருத்தமானவையாய் இருக்கின்றன?
4 யெகோவாவுடைய பெயர்தானே அவருடைய மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையை உள்ளடக்குகிறது. “யெகோவா” என்றால் “ஆகும்படி செய்கிறவர்” என்பது சொல்லர்த்தமான பொருள். யெகோவா தம்முடைய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேறும்படி செய்கிறவர் என்பதை இது தெளிவாகவே அர்த்தப்படுத்துகிறது. மோசே கடவுளுடைய பெயரைக் கேட்டபோது, யெகோவா அதன் அர்த்தத்தைக் குறித்து இவ்விதமாக விளக்கினார்: “நான் என்னவாக நிரூபிப்பேனோ அவ்வாறே நிரூபிப்பேன்.” (யாத்திராகமம் 3:14, NW) ராதர்ஹாமின் மொழிபெயர்ப்பு இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்கிறது: “நான் என்னவாக விரும்பினாலும் அவ்வாறாவேன்.” யெகோவா தம்முடைய நீதியான நோக்கங்களையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு என்ன தேவைப்படுகிறதோ அதற்காகத் தம்மை நிரூபிப்பவராக அல்லது அதற்கேற்றபடி ஆவதைத் தெரிந்துகொள்கிறார். இதன் காரணமாக, அவர் சிருஷ்டிகர், பிதா, சர்வலோக பேரரசர், மேய்ப்பர், சேனைகளின் யெகோவா, ஜெபத்தைக் கேட்கிறவர், நியாயாதிபதி, மிகச் சிறந்த போதகர், மீட்பர் என்பதுபோன்ற கவரத்தக்க அடுக்குவரிசையான பதவிப்பெயர்களைக் கொண்டிருக்கிறார். தம்முடைய அன்பான நோக்கங்களை நடப்பிப்பதற்காக இவையெல்லாமாகவும் இவற்றிற்கதிகமாகவும் ஆகும்படி தம்மைச் செய்வித்திருக்கிறார்.—ஏசாயா 8:13; 30:20, NW; 40:28; 41:14; சங்கீதம் 23:1; 65:2; 73:28, NW; 89:26; நியாயாதிபதிகள் 11:27; புதிய உலக மொழிபெயர்ப்பு, பிற்சேர்க்கை 1J-ஐயும் பார்க்கவும்.
5. யெகோவாவின் மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மை, அவருடைய இயல்போ தராதரங்களோ மாறுவதை அர்த்தப்படுத்துவதாக நாம் ஏன் முடிவுக்கு வரக்கூடாது?
5 அப்படியானால், கடவுளுடைய இயல்போ தராதரங்களோ மாறுகின்றன என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை; யாக்கோபு 1:17 குறிப்பிடுகிறபடி, “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” இங்கு ஏதாவது முரண்பாடு இருக்கிறதா? இல்லவே இல்லை. உதாரணமாக, எந்த ஒரு அன்பான பெற்றோர் தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக வெவ்வேறு பாகங்களை வகிக்காமல் இருக்கிறார்? ஒரே ஒரு நாளினூடே, பெற்றோர் ஒருவர், ஒரு ஆலோசகராக, ஒரு சமையற்காரராக, ஒரு வீட்டுப்பராமரிப்பாளராக, ஒரு ஆசிரியராக, ஒரு சிட்சையாளராக, ஒரு நண்பராக, ஒரு மெக்கானிக்காக, ஒரு தாதியாக இருக்கக்கூடும். அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்தப் பாகங்களை வகிக்கும்போது அந்தப் பெற்றோர் தன் ஆளுமையை மாற்றிக்கொள்வதில்லை; அவர் அல்லது அவள் வெறுமனே அப்போதைய தேவைகளுக்குத் தன்னை மாற்றியமைத்துக் கொள்கிறார். மிக மகத்தான அளவில், யெகோவாவைக் குறித்தும் அவ்வாறே இருக்கிறது. தம்முடைய சிருஷ்டிகளுக்குப் பயன்தரும் விதத்தில் அவர் என்னவாகத் தம்மை ஆக்கிக்கொள்ள முடியும் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை. அவருடைய ஞானத்தின் ஆழம் உண்மையிலேயே மலைப்பூட்டுகிறது!—ரோமர் 11:33.
தெய்வீக ஞானத்தின் ஓர் அடையாளக்குறியான நியாயத்தன்மை
6. தெய்வீக ஞானத்தை விவரிக்கையில் யாக்கோபு பயன்படுத்திய கிரேக்க வார்த்தையின் சொல்லர்த்தமான அர்த்தமும் அதன் உட்பொருள்களும் யாவை?
6 மிகச் சிறந்த வகையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய இந்தக் கடவுளின் ஞானத்தை விளக்குவதற்கு சீஷனாகிய யாக்கோபு ஒரு அக்கறைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் எழுதினார்: “பரத்திலிருந்து வரும் ஞானம் . . . நியாயத்தன்மை உள்ளது.” (யாக்கோபு 3:17, NW) அவர் இங்குப் பயன்படுத்திய கிரேக்க வார்த்தையை (எப்பியய்கஸ், [e·pi·ei·kesʹ]) மொழிபெயர்ப்பது கடினம். “சாந்தமான,” “கடுமையற்ற,” “பொறுமையுள்ள,” “அன்பாதரவான,” என்பது போன்ற வார்த்தைகளை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். “நியாயத்தன்மை” என்பதாக புதிய உலக மொழிபெயர்ப்பு இதை மொழிபெயர்க்கிறது; “வளைந்துகொடுக்கிற தன்மை” என்பது அதன் சொல்லர்த்தமான அர்த்தம் என்று குறிப்பிடும் ஒரு அடிக்குறிப்பையும் கொண்டிருக்கிறது.a சட்டத்தை இம்மியும்பிசகாமல் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தாமல் இருப்பதை, மட்டுக்குமீறிய கண்டிப்பாக அல்லது இறுக்கமாக இல்லாமல் இருக்கும் அர்த்தத்தையும் அந்த வார்த்தை உணர்த்துகிறது. அறிஞர் உவில்லியம் பார்க்லி, புதிய ஏற்பாடு வார்த்தைகள் (New Testament Words) என்பதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எப்பியய்கியா (epieikeia) என்பதைப்பற்றிய அடிப்படையான மூலாதாரமான காரியம் என்னவென்றால், அது கடவுளிடம் தொடங்குகிறது. கடவுள் தம்முடைய உரிமைகளை வற்புறுத்தினால், சட்டத்தின் உறுதியான தராதரங்களை மட்டுமே கடவுள் நம்மிடம் பொருத்தினால், நாம் எங்கே நிற்போம்? எப்பியய்கிஸ்-ஆக (epieikēs) இருப்பதற்கும் மற்றவர்களுடன் எப்பியய்கியாவுடன் நடந்துகொள்வதற்கும் கடவுளே தலைசிறந்த மாதிரியாக இருக்கிறார்.”
7. ஏதேன் தோட்டத்தில் யெகோவா எவ்வாறு நியாயத்தன்மையை வெளிக்காட்டினார்?
7 மனிதவர்க்கம் யெகோவாவின் பேரரசுரிமைக்கு விரோதமாக கலகம் செய்த சமயத்தை எண்ணிப்பாருங்கள். அந்த மூன்று கலகக்காரராகிய ஆதாம், ஏவாள், சாத்தான் ஆகியோரை அழித்துவிடுவது கடவுளுக்கு எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும்! மேலும், அவ்வாறு செய்வதன்மூலம் தம்மைத்தாமே எவ்வளவு வேதனையிலிருந்து காத்துக்கொண்டிருக்கக்கூடும்! அவ்வளவு கண்டிப்பான நியாயத்தை வற்புறுத்துவதற்கு அவர் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லையென யார் வாதாடியிருக்க முடியும்? இருந்தபோதிலும், ஒரு உறுதியான, மாற்றியமைக்கப்படமுடியாத நியாயத் தராதரத்திற்குள்ளாக யெகோவா பரத்திற்குரிய தம்முடைய ரதம்போன்ற அமைப்பை ஒருபோதும் பூட்டி வைத்திருப்பதில்லை. ஆகவே மனித குடும்பத்தின்மீதும் மனிதகுலத்தின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான எல்லா எதிர்நோக்குகள்மீதும் அந்த ரதம் இரக்கமற்றவிதத்தில் உருண்டுசென்று நசுக்கிப்போடவில்லை. அதற்கு நேர்மாறாக, யெகோவா மின்னல்போன்ற வேகத்தில் தம்முடைய ரதத்தைச் செயற்படுத்தினார். கலகம் நடந்தவுடனேயே, ஆதாமுடைய எல்லா சந்ததியினருக்கும் இரக்கத்தையும் நம்பிக்கையையும் அளித்த ஒரு நீண்டகால நோக்கத்தை யெகோவா தேவன் எடுத்துரைத்தார்.—ஆதியாகமம் 3:15.
8. (அ) நியாயத்தன்மையைப்பற்றிய கிறிஸ்தவமண்டலத்தின் தவறான நோக்கு எவ்வாறு யெகோவாவின் உண்மையான நியாயத்தன்மையோடு வேறுபட்டதாய் இருக்கிறது? (ஆ) யெகோவா தெய்வீக நியமங்களை விட்டுக்கொடுக்கக்கூடும் என்பதை அவருடைய நியாயத்தன்மை அர்த்தப்படுத்துவதில்லை என்று நாம் ஏன் சொல்லலாம்?
8 என்றாலும், யெகோவாவுடைய நியாயத்தன்மையானது, அவர் தெய்வீக நியமங்களை விட்டுக்கொடுத்துவிடுவார் என்று அர்த்தப்படுத்துவதில்லை. இன்றைய கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள், ஏறுமாறாகச் செல்லும் தங்கள் மந்தைகளின் ஆதரவைப் பெறுவதற்கென்று ஒழுக்கயீனத்தைக் கண்டும் காணாததுபோல் இருப்பதன்மூலம் நியாயத்தன்மையுடன் இருப்பதாய் நினைக்கக்கூடும். (2 தீமோத்தேயு 4:3-ஐ ஒப்பிடவும்.) யெகோவா ஒருபோதும் தம் சொந்த சட்டங்களை மீறுவதுமில்லை, தம்முடைய நியமங்களை விட்டுக்கொடுப்பதுமில்லை. மாறாக, வளைந்துகொடுப்பதற்கும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்வதற்கும் மனமுள்ளவராய் இருப்பதைக் காண்பிக்கிறார்; இவ்விதமாக அந்தக் கொள்கைகள் நியாயமாகவும் இரக்கமாகவும் பொருத்திப் பிரயோகிக்கப்படக்கூடும். தம்முடைய நியாயத்தையும் வல்லமையையும் அவர் செயல்படுத்துகையில், அதைத் தம்முடைய அன்போடும் நியாயத்தன்மையுள்ள ஞானத்தோடும் சமநிலைப்படுத்திக்கொள்ள எப்போதும் கவனமாக இருக்கிறார். யெகோவா நியாயத்தன்மையை வெளிக்காட்டும் மூன்று வழிகளை நாம் ஆராய்வோம்.
“மன்னிப்பதற்குத் தயாராக” இருத்தல்
9, 10. (அ) “மன்னிப்பதற்குத் தயாராக” இருப்பதற்கும் நியாயத்தன்மைக்கும் என்ன தொடர்பிருக்கிறது? (ஆ) மன்னிப்பதற்குத் தயாராக இருக்கும் யெகோவாவின் குணத்திலிருந்து தாவீது எவ்வாறு பயனடைந்தார், ஏன்?
9 தாவீது எழுதினார்: “ஏனென்றால், யெகோவாவே, நீர் நல்லவரும் மன்னிப்பதற்குத் தயாராகவும் இருக்கிறீர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாரிடத்திலும் மிகுந்த அன்பார்ந்த தயை உடையவராகவும் இருக்கிறீர்.” (சங்கீதம் 86:5, NW) எபிரெய வேத எழுத்துக்கள் கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டபோது, “மன்னிப்பதற்குத் தயாராக” என்பதற்கான வார்த்தை எப்பியய்கஸ், அல்லது “நியாயத்தன்மை உள்ள” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டது. உண்மையில், மன்னிப்பதற்குத் தயாராக இருந்து, இரக்கம் காண்பிப்பதே நியாயத்தன்மையை வெளிக்காட்டுவதற்கான முக்கியமான வழியாக இருக்கக்கூடும்.
10 இந்த அம்சத்தில் யெகோவா எவ்வளவு நியாயத்தன்மை உள்ளவராய் இருந்தார் என்று தாவீதுதாமே நன்கு அறிந்திருந்தார். தாவீது பத்சேபாளுடன் விபசாரம்செய்துவிட்டு, அவளுடைய கணவனை கொல்லவும் ஏற்பாடுசெய்தபோது, அவனும் பத்சேபாளும் மரண தண்டனைக்குப் பாத்திரராய் இருந்தனர். (உபாகமம் 22:22; 2 சாமுவேல் 11:2-27) கட்டுறுதியான மனித நியாயாதிபதிகள் அந்த வழக்கைக் கையாண்டிருந்தால், இருவரும் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள். ஆனால் யெகோவா நியாயத்தன்மையை (எப்பியய்கஸ்) காண்பித்தார்; வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷனரி ஆஃப் பிப்லிக்கல் உவர்ட்ஸ் சொல்லுகிறபடி, அது “‘ஒரு வழக்கின் விவரங்களை மனிதாபிமானத்துடனும் நியாயத்தன்மையுடனும்’ பார்க்கக்கூடிய அந்தளவு அன்பாதரவை வெளிப்படுத்துகிறது.” தவறுசெய்தவர்களுடைய உண்மையான மனந்திரும்புதலும் தாவீதுதானே மற்றவர்களுக்காகக் காண்பித்த இரக்கமும், யெகோவாவின் இரக்கமான தீர்மானத்தைச் செல்வாக்கு செலுத்திய உண்மைகளில் அடங்கியிருந்திருக்கவேண்டும். (1 சாமுவேல் 24:4-6; 25:32-35; 26:7-11; மத்தேயு 5:7; யாக்கோபு 2:13) என்றாலும், யாத்திராகமம் 34:4-7-ல் யெகோவா தம்மைக் குறித்து கொடுத்திருக்கும் விளக்கத்திற்கு இசைவாக, யெகோவா தாவீதுக்குச் சிட்சைகொடுப்பார் என்பது நியாயமானதாக இருந்தது. அவர் ஒரு பலமான செய்தியுடன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை தாவீதிடம் அனுப்பினார்; தாவீது யெகோவாவின் வார்த்தையை அவமதித்திருந்தார் என்ற உண்மையை அவருக்குப் பதியவைத்தார். தாவீது மனந்திரும்பினார். அதனால் தன்னுடைய பாவத்திற்காக மரிக்கவில்லை.—2 சாமுவேல் 12:1-14.
11. மனாசேயின் காரியத்தில் மன்னிப்பதற்குத் தயாராக இருந்ததை யெகோவா எவ்வாறு காண்பித்தார்?
11 இந்த விஷயத்தில், யூதாவின் அரசனாகிய மனாசேயின் உதாரணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், தாவீதைப் போலில்லாமல் மனாசே நீண்ட காலத்திற்கு முற்றிலும் பொல்லாதவராக இருந்தார். மனித பலி உட்பட, தேசத்தில் அருவருப்பான மதப் பழக்கங்களை மனாசே முன்னேற்றுவித்து வந்தார். உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய ஏசாயாவை ‘வாளால் அறுபட’ செய்ததற்கும் அவரே பொறுப்புள்ளவராக இருந்திருக்கக்கூடும். (எபிரெயர் 11:37) மனாசேயைத் தண்டிப்பதற்கு, அவர் ஒரு சிறைக்கைதியாக பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்படி யெகோவா அனுமதித்தார். எனினும், மனாசே சிறையில் மனந்திரும்பி, இரக்கத்திற்காகக் கெஞ்சினார். இந்த உண்மையான மனந்திரும்புதலுக்குப் பிரதிபலனாக—இந்த அளவுகடந்த சம்பவத்தில்கூட—யெகோவா “மன்னிப்பதற்குத் தயாராக” இருந்தார்.—2 நாளாகமம் 33:9-13.
புதிய சூழ்நிலைகள் எழும்புகையில் செயற்போக்கை மாற்றுதல்
12, 13. (அ) நினிவேயைக் குறித்ததில், சூழ்நிலையில் என்ன மாற்றம் யெகோவா தம்முடைய போக்கை மாற்றிக்கொள்ள தூண்டுவித்தது? (ஆ) யோனா யெகோவா தேவனைவிட நியாயத்தன்மையில் குறைவுபட்டவராய் இருந்ததை எவ்வாறு நிரூபித்தார்?
12 செய்யப்போவதாக எண்ணியிருந்த ஒரு போக்கை புதிய சூழ்நிலைகள் எழும்புகையில், மாற்றிக்கொள்வதற்கு மனமுள்ளவராய் இருப்பதிலும் யெகோவாவின் நியாயத்தன்மை காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தீர்க்கதரிசியாகிய யோனா, பண்டைய நினிவேயின் தெருக்களின் வழியாக நடந்துசென்றபோது, அவருக்கு கடவுளால் ஏவப்பட்ட செய்தி மிகத் தெளிவானது: அந்தப் பலமான நகரம் 40 நாட்களில் அழிக்கப்பட்டுவிடும். என்றபோதிலும், சூழ்நிலைகள் திடீரென்று மாறின! நினிவேயைச் சேர்ந்தவர்கள் மனந்திரும்பினர்.—யோனா, அதிகாரம் 3.
13 மாறுபட்ட சூழ்நிலைகளில், யெகோவாவும் யோனாவும் பிரதிபலித்தவிதத்தை வேறுபடுத்திக் காண்பது நமக்கு போதனையளிப்பதாய் இருக்கிறது. உண்மையில், யெகோவா தம்முடைய பரம ரதத்தின் போக்கை மாற்றியமைத்தார். இந்தத் தருணத்தில், அவர் “யுத்தத்தில் வல்லவர்” என்றிருப்பதற்குப் பதிலாக பாவங்களை மன்னிக்கும் ஒருவராக தம்மை ஆகும்படிச் செய்து தம்மை மாற்றியமைத்துக்கொண்டர். (யாத்திராகமம் 15:3) மறுபட்சத்தில், யோனா சிறிதும் வளைந்துகொடுக்காதவராக இருந்தார். யெகோவாவின் ரதத்திற்கு ஏற்ற வேகத்தில் செல்வதற்கு மாறாக, முன்னர் குறிப்பிடப்பட்ட சரக்கு ரயில் அல்லது பெரிய எண்ணெய்க் கப்பலைப்போல அவர் பெரிதும் செயல்பட்டார். அவர் அழிவுக்குரிய தீர்ப்பை அறிவித்திருந்தார், ஆகவே அது அழிவாகவே இருக்க வேண்டும்! அந்தப் போக்கில் எந்த ஒரு மாற்றமும், நினிவே மக்களின் பார்வையில், தனக்கு அவமானமாக இருக்கும் என்பதாக அவர் ஒருவேளை நினைத்திருக்கலாம். என்றாலும், பொறுமையாக, யெகோவா தம்முடைய பிடிவாதமுள்ள தீர்க்கதரிசிக்கு நியாயத்தன்மையையும் இரக்கத்தையும் பற்றிய நினைவில் நிலைக்கக்கூடிய பாடம் ஒன்றைக் கற்பித்தார்.—யோனா, அதிகாரம் 4.
14. யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலைக் குறித்ததில் ஏன் தம்முடைய செயல்போக்கை மாற்றினார்?
14 மற்ற சமயங்களிலும், ஓரளவிற்குச் சிறிய காரியங்களில்கூட யெகோவா தம் போக்கை மாற்றியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, ஒருமுறை ஒரு தீர்க்கதரிசன நாடகத்தை நடிக்கும்படி யெகோவா தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்குப் பொறுப்பளித்தபோது, மனித மலத்தின் வறட்டிகளை எரித்து எசேக்கியேல் தன்னுடைய உணவைச் சமைக்கவேண்டும் என்ற கட்டளையும் யெகோவாவுடைய கட்டளைகளில் உட்பட்டிருந்தது. இது அந்தத் தீர்க்கதரிசிக்கு மிகக் கடினமான ஒன்றாக இருந்தது; “ஆ, கர்த்தராகிய ஆண்டவரே” என்று கூப்பிட்டு, தனக்கு அவ்வளவு அருவருப்பான ஒன்றை, தான் செய்ய வைக்கப்படாதபடிக்குக் கெஞ்சினார். அந்தத் தீர்க்கதரிசியின் உணர்ச்சிகளை அறிவுக்குப் பொருந்தாதவையென யெகோவா தள்ளிவிடவில்லை; மாறாக, எசேக்கியேல் மாட்டுச்சாணி வறட்டிகளைப் பயன்படுத்த அவர் அனுமதித்தார்; இந்நாள் வரையாக, பல தேசங்களில் இது பொதுவான எரிபொருளாக இருக்கிறது.—எசேக்கியேல் 4:12-15.
15. (அ) மனிதர்களுக்குச் செவிகொடுத்து, பிரதிபலிக்க யெகோவா மனமுள்ளவராய் இருந்திருக்கிறார் என்று என்ன உதாரணங்கள் காண்பிக்கின்றன? (ஆ) இது நமக்கு என்ன பாடத்தைக் கற்பிக்கக்கூடும்?
15 நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் மனத்தாழ்மையைக் குறித்து சிந்திப்பது உள்ளங்கனிய வைக்கிறது அல்லவா? (சங்கீதம் 18:35, NW) அவர் நம்மைவிட மிகப் பெரியளவில் உயர்ந்தவராய் இருக்கிறார்; இருந்தாலும் அவர் அபூரண மனிதருக்குப் பொறுமையாகச் செவிகொடுக்கிறார்; அதற்கேற்றார்போல், சில சமயங்களில் தம்முடைய போக்கைக்கூட மாற்றியமைக்கிறார். சோதோம், கொமோராவின் அழிவைக் குறித்து நீண்ட நேரமாக ஆபிரகாம் தம்மிடம் கெஞ்சும்படி அனுமதித்தார். (ஆதியாகமம் 18:23-33) கலகத்தனமான இஸ்ரவேலரை அழித்துவிட்டு, அதற்குப் பதிலாக மோசேயிலிருந்து ஒரு பலத்த தேசத்தை உருவாக்குவதாக அவர் அளித்த ஆலோசனைக்கு மோசே எதிர்ப்புகளைத் தெரிவிக்கும்படி அவர் அனுமதித்தார். (யாத்திராகமம் 32:7-14; உபாகமம் 9:14, 19; ஒப்பிடவும் ஆமோஸ் 7:1-6.) இதன்மூலம், அவர் தம்முடைய மானிட ஊழியர்களுக்கு ஒரு பரிபூரண முன்மாதிரியை வைத்தார்; நியாயமானதாகவும் சாத்தியமானதாகவும் இருக்கும்போது மற்றவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்பதில் அவர்களும் அதேவிதமாகச் செயல்படும் விருப்ப உணர்வைக் காட்டவேண்டும்.—ஒப்பிடவும் யாக்கோபு 1:19.
அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் நியாயத்தன்மை
16. யெகோவா தம்முடைய அதிகாரத்தைச் செலுத்தும் விதத்தில் எவ்வாறு அநேக மனிதர்களிலிருந்து வித்தியாசப்படுகிறார்?
16 தனிநபர்கள் அதிகப்படியான அதிகாரத்தைப் பெறுகையில், நியாயத்தன்மையில் குறைவுபட்டவர்களாக ஆவதாகத் தோன்றுவதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? மாறாக, யெகோவா இப்பிரபஞ்சத்திலேயே மிக உயர்வான ஸ்தானத்தை வைத்திருக்கிறார்; இருந்தாலும் நியாயத்தன்மைக்கு அவரே மிகச் சிறந்த மாதிரியாக இருக்கிறார். அவர் நியாயத்தன்மையில் தவறாத வழியில் தம்முடைய அதிகாரத்தைச் செலுத்துகிறார். அநேக மனிதரைப் போல், யெகோவா தம்முடைய அதிகாரத்தைக் குறித்துப் பாதுகாப்பற்றவராக இல்லை; ஆகையால் அவர் அதை இழப்பதற்கு பயந்து காக்கும்படியான கட்டாயத்தில் இருப்பதாக—மற்றவர்களுக்கு ஓரளவு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது ஏதோவொரு விதத்தில் தம்முடையதற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதுபோல்—உணர்வதில்லை. உண்மையில், இப்பிரபஞ்சத்தில் வேறு ஒரே ஒருவர் இருந்தபோது, யெகோவா விரிவான அதிகாரத்தை அவருக்கு அளித்தார். அவர் லோகாஸை (logos) தம்முடைய “கைதேர்ந்த வேலையாளாக,” (NW) வைத்தார்; அப்போதிருந்து இந்த நேசகுமாரனின் மூலமாக எல்லா காரியங்களையும் உண்டாக்கினார். (நீதிமொழிகள் 8:22, 29-31; யோவான் 1:1-3, 14; கொலோசெயர் 1:15-17) பின்னர் அவர் ‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும்’ அவருக்குக் கொடுத்தார்.—மத்தேயு 28:18; யோவான் 5:22.
17, 18. (அ) சோதோம் கொமோராவிற்கு யெகோவா ஏன் தூதர்களை அனுப்பினார்? (ஆ) ஆகாபை ஏய்ப்பதற்கு ஆலோசனைகளைக் கொடுக்கும்படி யெகோவா ஏன் தூதர்களிடம் கேட்டார்?
17 அதேவிதமாக, யெகோவா தாமே சிறந்த விதத்தில் கையாளக்கூடிய சில வேலைகளை தம்முடைய பல சிருஷ்டிகள் செய்யும்படியாக ஒப்படைக்கிறார். உதாரணமாக, அவர் ஆபிரகாமிடம், “நான் [சோதோம் கொமோராவுக்கு] இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்,” என்று சொன்னபோது, தாம் அங்கு நேரடியாகச் செல்வதாக அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, தமக்காக அப்படிப்பட்ட தகவலைச் சேகரிக்க தூதர்களை நியமிப்பதன்மூலம், யெகோவா அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க தெரிந்துகொண்டார். உண்மைகளை அறியும் இந்த வேலையை நடத்த அவர்களுக்கு அதிகாரமளித்து, அவரிடம் திரும்பிவந்து அறிக்கையைக் கொடுக்குமாறு செய்தார்.—ஆதியாகமம் 18:1-3, 20-22.
18 மற்றொரு சந்தர்ப்பத்தில், பொல்லாத அரசனாகிய ஆகாபின்மீது தண்டனையை நிறைவேற்றும்படி யெகோவா தீர்மானித்தபோது, அந்த விசுவாசத்துரோக அரசன் தன்னுடைய உயிரை இழக்கக்கூடிய போரில் சேர்ந்துகொள்ளும்படி அவனை “ஏய்ப்பது,” (NW) எப்படி என்பதைக் குறித்து ஆலோசனைகளை அளிக்கும்படி ஒரு பரலோக கூட்டத்தில் தூதர்களைக் கேட்டார். நிச்சயமாகவே, எல்லா ஞானத்திற்கும் ஊற்றுமூலரான யெகோவாவுக்கு, சிறந்த செயல் போக்கை எடுத்துரைப்பதற்கு உதவி தேவையில்லை! இருந்தாலும், தீர்வுகளை எடுத்துரைப்பதற்கும், அவர் தேர்ந்தெடுத்த ஒன்றின்மீது அதிகாரத்தைச் செலுத்துவதற்குமான சிலாக்கியத்தைத் தூதர்களுக்கு அளித்து அவர்களைக் கண்ணியப்படுத்தினார்.—1 இராஜாக்கள் 22:19-22.
19. (அ) யெகோவா ஏற்படுத்தும் சட்டங்களின் எண்ணிக்கையை அவர் ஏன் வரம்பிற்குள் வைக்கிறார்? (ஆ) யெகோவா நம்மிடமிருந்து காரியங்களை எதிர்பார்ப்பதைக் குறித்ததில் நியாயத்தன்மையுடன் இருப்பதை எவ்வாறு காண்பிக்கிறார்?
19 மற்றவர்கள்மீது தேவையற்ற கட்டுப்பாட்டை வற்புறுத்துவதற்காக யெகோவா தம்முடைய அதிகாரத்தைப் பிரயோகிப்பதில்லை. இதில்கூட அவர் ஒப்பிடப்படமுடியாத நியாயத்தன்மையைக் காண்பிக்கிறார். அவர் ஏற்படுத்தும் சட்டங்களின் எண்ணிக்கையை கவனமாக வரம்புக்குள் வைக்கிறார்; ‘எழுதப்பட்டதற்கு மிஞ்சி சென்று’ தங்கள் சொந்த இஷ்டத்திற்குப் பாரமான சட்டங்களைக் கூட்டுவதிலிருந்து அவருடைய ஊழியர்களைத் தடைசெய்கிறார். (1 கொரிந்தியர் 4:6; அப்போஸ்தலர் 15:29; வேறுபடுத்திப் பார்க்கவும்: மத்தேயு 23:4.) தம்முடைய சிருஷ்டிகளிடமிருந்து கண்மூடித்தனமான கீழ்ப்படிதலை அவர் ஒருபோதும் கேட்பதில்லை; ஆனால் வழக்கமாக, அவர்களை வழிநடத்துவதற்குப் போதுமான தகவலை அவர் கொடுத்து, தெரிவை அவர்கள் முன்வைக்கிறார்; கீழ்ப்படிதலின் பலன்களையும் கீழ்ப்படியாமையின் விளைவுகளையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். (உபாகமம் 30:19, 20) மக்களை குற்றவுணர்வினால், அவமானத்தால், அல்லது பயத்தால் கட்டாயப்படுத்துவதற்கு மாறாக, இருதயங்களைச் சென்றெட்டும்படி அவர் நாடுகிறார்; மக்கள் கட்டாயத்தின் பேரில் அவரைச் சேவிப்பதற்கு மாறாக உண்மையான அன்பினால் அவரைச் சேவிக்கும்படி விரும்புகிறார். (2 கொரிந்தியர் 9:7) முழு ஆத்துமாவோடுகூடிய அப்படிப்பட்ட சேவை அனைத்தும் கடவுளுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது; ஆகவே அவர் நியாயமற்றவிதத்தில் “திருப்திப்படுத்த கடினமானவராக,” (NW) இல்லை.—1 பேதுரு 2:18; நீதிமொழிகள் 27:11; ஒப்பிடவும் மீகா 6:8.
20. யெகோவாவின் நியாயத்தன்மை உங்களில் என்ன உணர்ச்சியை உண்டுபண்ணுகிறது?
20 சிருஷ்டிக்கப்பட்டிருப்பதில் எந்தவொருவரைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை உடைய யெகோவா தேவன், தம்முடைய அதிகாரத்தை ஒருபோதும் நியாயமற்ற முறையில் செலுத்துவதில்லை என்றும், மற்றவர்களை அச்சுறுத்திக் கட்டாயப்படுத்துவதற்குப் பயன்படுத்துவதில்லை என்றும் அறிவது குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறதல்லவா? என்றபோதிலும், ஒப்பிடுகையில் அவ்வளவு சிறியவர்களாய் இருக்கும் மனிதர், ஒருவரை ஒருவர் அடக்கியாளக்கூடிய வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர். (பிரசங்கி 8:9) தெளிவாகவே, நியாயத்தன்மை என்பது ஒரு அருமையான குணம்; யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்கும்படி நம்மை அசைவிக்கும் ஒரு குணம். அது, முறையாக, நாம் இந்தக் குணத்தை நம்மில் வளர்க்க தூண்டுவிக்கும். நாம் எப்படி அவ்வாறு செய்யலாம்? பின்வரும் கட்டுரை இந்தக் காரியத்தைக் கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a 1769-ல் அகராதி தொகுப்பாளரான ஜான் பார்க்கர்ஸ்ட் அந்த வார்த்தையை “வளைந்துகொடுக்கிற தன்மை, அல்லது வளைந்துகொடுக்கும் மனநிலை, கருணை, சாந்தம், பொறுமை,” என்பதாக வரையறுத்தார். மற்ற அறிஞர்களும் “வளைந்துகொடுக்கிற தன்மை” என்பதை ஒரு பொருள்விளக்கமாக அளித்திருக்கின்றனர்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் பெயரும் அவருடைய பரம ரதத்தைப்பற்றிய தரிசனமும் எவ்வாறு அவருடைய மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையை அழுத்திக்காட்டுகின்றன?
◻ நியாயத்தன்மை என்றால் என்ன, அது ஏன் தெய்வீக ஞானத்தின் ஓர் அடையாளக்குறியாக இருக்கிறது?
◻ யெகோவா “மன்னிப்பதற்குத் தயாராக” இருக்கிறார் என்று என்ன வழிகளில் காண்பித்திருக்கிறார்?
◻ செய்யும்படி தீர்மானிக்கப்பட்ட ஒரு செயல்போக்கை ஒருசில சந்தர்ப்பங்களில் மாற்றிக்கொள்வதை யெகோவா ஏன் தெரிந்தெடுத்திருக்கிறார்?
◻ யெகோவா அதிகாரத்தைச் செலுத்தும் விதத்தில் எவ்வாறு நியாயத்தன்மையை வெளிக்காட்டுகிறார்?
[பக்கம் 10-ன் படம்]
பொல்லாத அரசனாகிய மனாசேயை யெகோவா ஏன் மன்னித்தார்?