பைபிளை கடவுள் ஏவினது எப்படி?
வரலாற்றில் வேறு எந்தச் சமயத்திலும் இருந்ததைவிட செய்தித்தொடர்பு இன்று மிகவும் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கிறது. தொலைபேசிகள், ஃபேக்ஸ் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள்—கிட்டத்தட்ட உலகின் எந்த மூலைமுடுக்குக்கும் செய்திகளை உடனடியாகவே அனுப்பும் ஒரு காலத்தைக் குறித்து பல வருடங்களுக்கு முன்பாக யார்தான் கற்பனை செய்து பார்த்திருக்க முடியும்?
ஆனால், மனிதன் வெற்றிபெற முடியாத, மனதை மிகவும் கவரும் ஒரு வகையான செய்தித்தொடர்பு—கடவுளின் ஏவுதலாகும். யெகோவா தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை உருவாக்குவதற்கு சுமார் 40 மனித எழுத்தாளர்களை ஏவினார். மனிதர்களுக்கு செய்தித்தொடர்பு கொள்வதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் இருப்பதைப் போலவே, யெகோவா வேதவாக்கியங்களை ஏவுவதற்கு பல்வேறு செய்தித்தொடர்பு முறைகளைக் கையாண்டார்.
சொல்வதை எழுதுதல். கடவுள் வெளிப்படுத்தின திட்டவட்டமான செய்திகள் பின்னால் பைபிளில் பதிவுசெய்யப்பட்டன. a உதாரணமாக நியாயப்பிரமாணத்தில் அடங்கிய சட்டதிட்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். “இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலரோடும் உடன்படிக்கைபண்ணினேன்” என்பதாக யெகோவா மோசேயிடம் சொன்னார். (யாத்திராகமம் 34:27) “தேவதூதரைக்கொண்டு” சொல்லப்பட்ட இந்த ‘வார்த்தைகளை’ மோசே எழுதினார்; இவற்றை இப்பொழுது யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய பைபிள் புத்தகங்களில் காணலாம்.—அப்போஸ்தலர் 7:53.
ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், ஆமோஸ், நாகூம், மீகா ஆகியோர் உள்ளிட்ட மற்ற அநேக தீர்க்கதரிசிகள் தேவதூதர்கள் மூலமாக கடவுளிடமிருந்து திட்டவட்டமான செய்திகளைப் பெற்றுக்கொண்டார்கள். சிலசமயங்களில் இந்த மனிதர்கள், “கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறது என்னவென்றால்” என்ற சொற்றொடரோடு தங்கள் அறிவிப்புகளை ஆரம்பித்தனர். (ஏசாயா 37:7; எரேமியா 2:2; எசேக்கியேல் 11:6; ஆமோஸ் 1:3; மீகா 2:3; நாகூம் 1:12) பின்னர் அவர்கள் கடவுள் சொன்னதை எழுத்தில் வடித்தார்கள்.
தரிசனங்களும் சொப்பனங்களும் மெய்மறந்த நிலைகளும். தரிசனம் என்பது ஒருவர் விழித்திருக்கும்போது பொதுவாக ஏதாவதொரு அசாதாரணமான வழிமூலத்தின் மூலமாக காணும் ஒரு தோற்றமாக, ஒரு காட்சியாக அல்லது அந்த நபரின் மனதில் பெறப்படும் ஒரு செய்தியாக இருக்கிறது. உதாரணமாக, பேதுருவும் யாக்கோபும் யோவானும் “விழித்துக்” கொண்டிருந்தபோதே இயேசுவின் மறுரூப தரிசனத்தைக் கண்டார்கள். (லூக்கா 9:28-36; 2 பேதுரு 1:16-21) சில சந்தர்ப்பங்களில் செய்தி ஒரு சொப்பனத்தில், அல்லது ஒரு இரவுநேர கனவில் அறிவிக்கப்பட்டது; அவர் உறங்கிக்கொண்டிருக்கையில் பெற்றுக்கொள்பவரின் அடிமனதில் அது பதியவைக்கப்பட்டது. இவ்விதமாக தானியேல், “நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள்”—அல்லது மொழிபெயர்ப்பாளர் ரோனால்ட் ஏ. நாக்ஸ் மொழிபெயர்க்கும் விதமாக “நான் படுத்துக்கொண்டு என்னுடைய கனவில் நான் கவனித்துக்கொண்டிருந்தபோது”—என்று எழுதினார்.—தானியேல் 4:10.
யெகோவாவினால் மெய்மறக்கும்படியாகச் செய்யப்பட்டிருந்த ஒரு நபர், கிடைக்கக்கூடிய அத்தாட்சியின்படி, ஓரளவு விழித்துக்கொண்டிருந்தாலும் ஆழ்ந்து, கருத்தூன்றிய நிலையில் முழுமையாக ஒன்றிப்போய்விட்டிருந்தார். (அப்போஸ்தலர் 10:9-16-ஐ ஒப்பிடுக.) பைபிளில் “மெய்மறந்த நிலை” (எக்ஸ்டாஸிஸ்) என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ‘ஒதுக்கி வைப்பதை அல்லது இடம்பெயர்தலை’ அர்த்தப்படுத்துகிறது. இயல்பான நிலையிலிருந்து மனதை திருப்புகிற ஒரு கருத்தை அது கொடுக்கிறது. இதன் காரணமாக, மெய்மறந்த நிலையிலிருக்கும் ஒரு நபர் தரிசனத்தை முழுமையாக கிரகித்துக்கொண்டிருக்கையில் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களை அறியாதவராக இருப்பார். அப்போஸ்தலனாகிய பவுல் “பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்ட”போது இப்படிப்பட்ட ஒரு மெய்மறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 12:2-4.
கடவுளிடமிருந்து வந்த செய்திகளை அப்படியே கேட்டு எழுதியவர்களிலிருந்து வேறுபட்டவர்களாக, தரிசனங்களை அல்லது சொப்பனங்களைப் பெற்றுக்கொண்டவர்களும் அல்லது மெய்மறந்த நிலையை அனுபவித்தவர்களுமான பைபிள் எழுத்தாளர்கள் அநேகமாக தாங்கள் கண்டதை தங்களுடைய சொந்த வார்த்தைகளில் விவரிப்பதற்கு ஓரளவு சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தனர். ஆபகூக்கிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: “நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.”—ஆபகூக் 2:2.
சொல்வதைக் கேட்டு எழுதப்பட்ட பகுதிகளைவிட பைபிளின் இந்தப் பகுதிகள் ஏதோவொரு வகையில் முழுமையாக ஏவப்படவில்லை என்பதை இது அர்த்தப்படுத்துமா? இல்லவே இல்லை. தம்முடைய ஆவியின் மூலமாக யெகோவா ஒவ்வொரு எழுத்தாளரின் மனதிற்குள்ளும் தம்முடைய செய்தியை உறுதியாக பதிய செய்தார்; ஆகவே, மனிதனுடைய எண்ணங்களல்ல, கடவுளுடைய எண்ணங்களே தெரிவிக்கப்பட்டன. பொருத்தமான வார்த்தைகளைத் தெரிவுசெய்வதற்கு எழுத்தாளரை யெகோவா அனுமதித்தபோதிலும், இன்றியமையாத எந்தத் தகவலும் விட்டுவிடப்படாதபடிக்கு எழுத்தாளரின் மனதையும் இருதயத்தையும் வழிநடத்தினார்; ஆகவே, முடிவில் இந்த வார்த்தைகள் சரியாகவே கடவுளுடையதாக கருதப்பட்டன.—1 தெசலோனிக்கேயர் 2:13.
தெய்வீக வெளிப்படுத்துதல். வெறும் மனித திறமைக்கு வெகு அப்பாற்பட்டதாக இருக்கும் தீர்க்கதரிசனம்—முன்கூட்டியே வெளிப்படுத்தப்பட்டும் எழுதப்பட்டுமுள்ள வரலாறு—பைபிளில் அடங்கியிருக்கிறது. ஒரு உதாரணம், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட “கிரேக்கு தேசத்தின் ராஜா” மகா அலெக்ஸாண்டரின் எழுச்சியும் வீழ்ச்சியுமாகும்! (தானியேல் 8:1-8, 20-22) மனித கண்களால் ஒருபோதும் காணப்படாத சம்பவங்களையும்கூட பைபிள் வெளிப்படுத்துகிறது. வானம் மற்றும் பூமியின் படைப்பு இதற்கு ஒரு உதாரணமாகும். (ஆதியாகமம் 1:1-27; 2:7, 8) மேலுமாக பைபிள் புத்தகமாகிய யோபுவில் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்ற பரலோகத்தில் நடைபெற்ற சம்பாஷணைகள் அடங்கியுள்ளன.—யோபு 1:6-12; 2:1-6.
கடவுள் நேரடியாக எழுத்தாளருக்கு வெளிப்படுத்தாத பட்சத்தில், இப்படிப்பட்ட சம்பவங்களை கடவுள் எவரோ ஒருவருக்கு தெரிவிக்க, இவ்வாறு அவை வாய்மொழியான அல்லது எழுதப்பட்ட வரலாறாக ஆயின; பைபிள் பதிவின் ஒரு பாகமாக ஆகும்வரையில் இவை ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட்டுவந்தன. (பக்கம் 7-ல் உள்ள பெட்டியைக் காண்க.) எப்படியிருந்தாலும், இப்படிப்பட்ட எல்லா தகவலுக்கும் யெகோவாவே மூலகாரணராக இருந்தார் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம். எழுத்தாளர்களின் பதிவுகள் பிழைகள், மிகைப்படுத்துதல்கள் அல்லது கட்டுக்கதைகள் ஆகியவற்றால் கறைபடாதபடிக்கு அவர் அவர்களை வழிநடத்தினார். தீர்க்கதரிசனத்தைக் குறித்து பேதுரு இவ்வாறு எழுதினார்: “தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே வழிநடத்தப்பட்டு பேசினார்கள்.” b—2 பேதுரு 1:21, NW.
வெகுஜாக்கிரதையான முயற்சி தேவைப்பட்டது
பைபிள் எழுத்தாளர்கள் “பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு” பேசினபோதிலும் அவர்களுடைய பங்கில் கவனமாக சிந்தித்து எழுதுவது தேவைப்பட்டது. உதாரணமாக சாலொமோன் “கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க . . . வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.”—பிரசங்கி 12:9, 10.
சில பைபிள் எழுத்தாளர்கள் தங்கள் தகவலுக்கு ஆதாரம் சேகரிக்க கணிசமாக ஆய்வுசெய்ய வேண்டியதாக இருந்தது. உதாரணமாக லூக்கா தன்னுடைய சுவிசேஷப் பதிவைக் குறித்து இவ்வாறு எழுதினார்: ‘அவற்றை ஒழுங்காய் எழுதுவதற்காக ஆதிமுதல் எல்லாவற்றையும் நான் திட்டமாய் விசாரித்தறிந்தேன்.’ நம்பகமான வரலாற்று ஆவணங்களைக் கண்டுபிடிக்கவும், இன்னும் உயிர்வாழ்ந்துகொண்டிருந்த சீஷர்களையும் ஒருவேளை இயேசுவின் தாயாகிய மரியாள் போன்ற நம்பத்தகுந்த சாட்சிகளைப் பேட்டி காணவும் செய்து, இவ்விதமாக கடவுளின் ஆவி லூக்காவின் முயற்சிகளை நிச்சயமாகவே ஆசீர்வதித்தது. பின்னர் கடவுளுடைய ஆவி தகவலை திருத்தமாக பதிவுசெய்வதற்கு லூக்காவை வழிநடத்தியது.—லூக்கா 1:1-4.
லூக்காவின் சுவிசேஷத்திலிருந்து வித்தியாசமாக, யோவானின் சுவிசேஷம் இயேசு மரித்து சுமார் 65 ஆண்டுகளான பின்பு நேரில் கண்ட சாட்சியின் ஒரு பதிவாக இருந்தது. காலம் கடந்துசென்றதன் காரணமாக நினைவாற்றல் குறைந்துவிடாதபடிக்கு யெகோவாவின் ஆவி அவருடைய நினைவாற்றலைக் கூர்மையாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது இயேசு தம்மைப் பின்பற்றினோருக்கு கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்றதாகவே இருக்கும்: “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”—யோவான் 14:26.
சில சந்தர்ப்பங்களில் பைபிள் எழுத்தாளர்கள் நேரில் கண்ட முற்காலத்திய வரலாற்று எழுத்தாளர்களின் ஆவணங்களிலிருந்து செய்திகளைச் சேகரித்து எழுதினர்; இந்த வரலாற்று எழுத்தாளர்கள் அனைவரும் ஏவப்பட்டு எழுதவில்லை. ஒன்று இராஜாக்கள், இரண்டு இராஜாக்கள் ஆகிய புத்தகங்களை எரேமியா பெரும்பாலும் இந்த விதத்தில்தான் தொகுத்தார். (2 இராஜாக்கள் 1:18) ஆவியின் ஏவுதலால் எழுதப்படாத, 14 ஏடுகளிலிருந்தாவது எஸ்றா ஒன்று நாளாகமம், இரண்டு நாளாகமம் ஆகிய புத்தகங்களுக்கு மேற்கோள்கள் எடுத்தார்; இதில் “தாவீதுராஜாவின் நாளாகமக் கணக்”கும் “யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தக”மும் அடங்கும். (1 நாளாகமம் 27:24; 2 நாளாகமம் 16:11) மோசே, “கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தி”லிருந்துகூட—கடவுளுடைய மக்களின் யுத்தங்களைப் பற்றிய நம்பத்தகுந்த ஒரு பதிவிலிருந்து—மேற்கோள் காண்பித்தார்.—எண்ணாகமம் 21:14, 15.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பரிசுத்த ஆவி சுறுசுறுப்பாக செயல்பட்டது, பைபிள் எழுத்தாளர்களை நம்பத்தகுந்த தகவலை மாத்திரமே தெரிவுசெய்ய தூண்டியது; இவை பின்னர் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் பதிவின் பாகமாக ஆயின.
நடைமுறையான ஆலோசனை—யாரிடமிருந்து?
புத்திக்கூர்மையுள்ள தனிப்பட்டவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஏராளமான, நடைமுறைக்குப் பயனுள்ள ஆலோசனையைப் பைபிள் தன்னுள் கொண்டிருக்கிறது. உதாரணமாக, சாலொமோன் இவ்விதமாக எழுதினார்: “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை, இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.” (பிரசங்கி 2:24) பவுல் திருமணத்தைக் குறித்து “[தன்] அபிப்பிராயத்தைத்” தெரியப்படுத்திய பின்னர் “என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்” என்பதாக கூடுதலாக சொன்னார். (1 கொரிந்தியர் 7:25, 39, 40) பவுலுக்கு நிச்சயமாகவே கடவுளுடைய ஆவி இருந்தது, ஏனென்றால் ‘தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே’ பவுல் எழுதியதாக அப்போஸ்தலன் பேதுரு சொல்கிறார். (2 பேதுரு 3:15, 16) இவ்வாறாக, கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்பட்டு அவர் தன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.
பைபிள் எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட தனிப்பட்ட உறுதியான நம்பிக்கைகளை வெளிப்படுத்திய சமயங்களில், தங்களிடம் இருந்த வேதவாக்கியங்களைப் படித்தும் அவற்றை பொருத்தியுமே அவ்விதமாகச் செய்தனர். அவர்களுடைய எழுத்துக்கள் கடவுளுடைய சிந்தனைக்கு இசைவாக இருந்தன என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர்கள் பதிவு செய்தவை கடவுளுடைய வார்த்தையின் பாகமாக ஆயின.
தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தவர்களின் கூற்றுகளைப் பைபிள் தன்னுள் கொண்டிருப்பது உண்மையே. (யோபு 15:15-ஐ 42:7-வுடன் ஒப்பிடுக.) கடவுளுடைய ஊழியர்களின் கடும் துயரமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திய சில கூற்றுகளும்கூட இதில் உள்ளன; ஆனால் அவர்கள் ஏன் அவ்விதமாக உணர்ந்தார்கள் என்பதற்கான எல்லா நுட்ப விவரங்களும் இல்லை. c இப்படிப்பட்ட தனிப்பட்ட கூற்றுகளைச் சொல்கிறபோது, திருத்தமான ஒரு பதிவை உண்டுபண்ணும்படியாக எழுத்தாளர் இன்னும் கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்பட்டார்; இவ்விதமாக தவறான நியாயங்காட்டுதல்களை அடையாளம் கண்டுகொண்டு வெளிப்படுத்த அவை உதவிசெய்கின்றன. மேலுமாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழுத்தாளரின் சிந்தனை நியாயமானதா என்பதைச் சூழமைவு எந்த ஒரு பகுத்துணர்வுள்ள வாசகருக்கும் தெளிவுபடுத்துகிறது.
சுருக்கமாகச் சொன்னால், முழு பைபிளும் கடவுளுடைய செய்தியே என்பதில் நாம் நம்பிக்கையோடிருக்கலாம். ஆம், அதில் அடங்கியுள்ள அனைத்தும் அவருடைய நோக்கத்துக்கு இசைவாக இருந்து, அவரைச் சேவிக்க விரும்புகிறவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கும் அறிவுரையை அளிப்பதை யெகோவா நிச்சயப்படுத்திக் கொண்டார்.—ரோமர் 15:4.
மனித எழுத்தாளர்கள்—ஏன்?
பைபிளை எழுத யெகோவா மனிதர்களைப் பயன்படுத்தியிருப்பது அவருடைய மகா ஞானத்தைக் காட்டுகிறது. இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்: எழுதும் இந்தக் காரியத்தைக் கடவுள் தேவதூதர்களிடம் ஒப்படைத்திருப்பாரேயானால், பைபிள் இதே முறையில் கவரத்தக்கதாய் இருந்திருக்குமா? ஒரு தேவதூதரின் நோக்குநிலையிலிருந்து கடவுளுடைய பண்புகளையும் செயல்தொடர்புகளையும் வாசிப்பதில் நாம் கிளர்ச்சியடைந்திருப்போம் என்பது உண்மையே. ஆனால் மனித வாடையே அதில் முழுமையாக இல்லாமல் இருந்திருக்குமேயானால், பைபிளின் செய்தியைக் கிரகித்துக்கொள்வது நமக்கு கடினமாக இருந்திருக்கலாம்.
இதை விளக்குவதற்கு: தாவீது ராஜா வேசித்தனம்செய்து, கொலைசெய்தார் எனவும் பின்னர் மனந்திரும்பினார் எனவும் பைபிள் வெறுமனே அறிவிப்பு செய்யலாம். என்றபோதிலும், தாவீது தன்னுடைய செயல்களைக் குறித்து நெஞ்சத்தைப் பிளக்கிற மனவேதனையை வெளிப்படுத்தி யெகோவாவின் மன்னிப்புக்காக மன்றாடிய அவருடைய சொந்த வார்த்தைகளின் பதிவைக் கொண்டிருப்பது எவ்வளவு மேலானதாக இருக்கிறது! “என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது” என்பதாக அவர் எழுதினார். “தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” (சங்கீதம் 51:3, 17) ஆகவே, மனித வாடை அதற்கு கொடுக்கும் கனிவையும் பல்வகை ரசனையையும் கவர்ச்சியையும் பைபிள் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
ஆம், யெகோவா தம்முடைய வார்த்தையை நமக்குக் கொடுப்பதற்கு மிகச் சிறந்த வழியைத் தெரிந்துகொண்டார். பலவீனங்களும் குறைபாடுகளும் உள்ள மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அவர்களுடைய எழுத்துக்களில் எந்தப் பிழைகளும் இல்லாதபடிக்கு பரிசுத்த ஆவியினால் அவர்கள் வழிநடத்தப்பட்டார்கள். இதன் காரணமாக பைபிள் மிக உயர்ந்த மதிப்புள்ளதாக இருக்கிறது. அதன் ஆலோசனை ஆரோக்கியமானதாக, பூமியில் எதிர்கால பரதீஸைப் பற்றிய அதன் தீர்க்கதரிசனங்கள் நம்பத்தகுந்தவையாக உள்ளன.—சங்கீதம் 119:105; 2 பேதுரு 3:13.
கடவுளுடைய வார்த்தையின் ஒரு பகுதியை ஒவ்வொரு நாளும் வாசிப்பதை ஏன் பழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது? பேதுரு எழுதினார்: “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” (1 பேதுரு 2:2) கடவுளால் அது ஏவப்பட்டு எழுதப்பட்டதன் காரணமாக, எல்லா வேதவாக்கியங்களும், “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிரு”ப்பதை நீங்கள் காண்பீர்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17. (பக்கம் 8-ல் தொடர்கிறது)
[அடிக்குறிப்புகள்]
a குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பதில், பத்துக் கற்பனைகள் கொடுக்கப்பட்ட அந்தச் சமயத்தில், தகவல் “தேவனுடைய விரலினால்” நேரடியாக எழுதப்பட்டது. மோசே அதன் பிறகு வெறுமனே அந்த வார்த்தைகளைச் சுருள்களில் அல்லது மற்ற பொருட்களின்மீது பார்த்து எழுதினார்.—யாத்திராகமம் 31:18; உபாகமம் 10:1-5.
b இங்கே “வழிநடத்தப்பட்டு” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஃபெரோ என்ற கிரேக்க வார்த்தை, காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்ட ஒரு கப்பலை வருணிப்பதற்கு அப்போஸ்தலர் 27:15, 17-ல் வேறொரு வடிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பரிசுத்த ஆவி பைபிள் எழுத்தாளர்களின் ‘போக்கை கட்டுப்படுத்தி இயக்கினது.’ பொய்யான எந்தத் தகவலையும் நிராகரித்துவிடவும் உண்மையாக இருப்பவற்றை மட்டுமே சேர்க்கவும் அவர்களை உந்துவித்தது.
c உதாரணங்களுக்கு, 1 இராஜாக்கள் 19:4-ஐ 14 மற்றும் 18-ம் வசனங்களுடன் ஒப்பிடுக; யோபு 10:1-3; சங்கீதம் 73:12, 13, 21; யோனா 4:1-3, 9; ஆபகூக் 1:1-4, 13.
[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]
மோசே தன்னுடைய தகவலை எங்கிருந்து பெற்றுக்கொண்டார்?
பைபிள் புத்தகமாகிய ஆதியாகமத்தை மோசே எழுதினார்; ஆனால் அவர் பதிவு செய்த எல்லாமே அவர் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே நடந்தவையாகும். அப்படியென்றால் இப்படிப்பட்ட தகவலை அவர் எங்கிருந்து பெற்றுக்கொண்டார்? கடவுளால் நேரடியாக அவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது சில சம்பவங்களைப்பற்றிய தகவல் வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டிருக்கலாம். பூர்வ காலங்களில் மனிதர்கள் நீண்ட வாழ்நாட்காலத்தை உடையவர்களாக இருந்த காரணத்தால் ஆதியாகமத்தில் மோசே பதிவு செய்த பெரும்பாலான விஷயங்கள் ஆதாமிலிருந்து மோசேக்கு ஐந்தே தலைமுறையினர் வழியாக வந்த தொடர்பினால் கடத்தப்பட்டிருக்கலாம்—மெத்தூசலா, சேம், ஈசாக்கு, லேவி, அம்ராம்.
மேலுமாக, மோசே எழுதப்பட்டிருந்த பதிவுகளை வாசித்திருப்பார். இதன் சம்பந்தமாக, கலந்தாலோசிக்கப்படப் போகும் நபரின் பெயரைக் குறிப்பிடுவதற்கு முன்பாக மோசே “வம்சவரலாறு” என்ற சொற்றொடரை அடிக்கடி பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும். (ஆதியாகமம் 6:9; 10:1; 11:10, 27; 25:12, 19; 36:1, 9; 37:2) “வம்சவரலாறு” என்பதாக இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை டோலேதோத் (toh.le.dhohth’) ஏற்கெனவே இருந்துவரும் எழுதப்பட்ட வரலாற்று ஆவணத்தைக் குறிப்பதாக சில கல்விமான்கள் சொல்கிறார்கள்; மோசே தன்னுடைய எழுத்துக்களுக்கு ஆதாரமாக இவற்றைப் பயன்படுத்தினார். நிச்சயமாகவே, இதை தீர்மானமாகச் சொல்வதற்கில்லை.
ஆதியாகமம் புத்தகத்தில் அடங்கியுள்ள தகவல், மேல் கூறப்பட்ட எல்லா மூன்று முறைகளினாலும் பெறப்பட்டிருக்கலாம்—நேரடியான வெளிப்படுத்துதல் மூலமாக கொஞ்சமும், வாய்மொழியாக கடத்தப்பட்டதன் மூலமாக கொஞ்சமும், எழுதப்பட்ட பதிவுகளிலிருந்து கொஞ்சமும் பெறப்பட்டிருக்கலாம். முக்கியமான குறிப்பு என்னவென்றால், யெகோவாவின் ஆவி மோசேயை ஏவியது; ஆகவே அவர் எழுதியது சரியாகவே கடவுளுடைய வார்த்தை என்பதாக கருதப்படலாம்.
[பக்கம் 4-ன் படம்]
பைபிளை எழுதுவதற்கு மனிதர்களை கடவுள் பல விதத்தில் ஏவினார்