அதிகாரம் ஆறு
வானளாவ உயர்ந்த மரத்தின் புதிரை விடுவித்தல்
நேபுகாத்நேச்சாரை உலக ஆட்சியாளராகும்படி யெகோவா அனுமதித்தார். செல்வ செழிப்பு, பல்சுவை விருந்து, வசந்த மாளிகை என ஆசைப்பட்ட அனைத்தையும் அனுபவித்து, பாபிலோனை அரசாண்டு வந்தார். ஆனால் இவர் வாழ்விலும் திடீரென வந்தது தாழ்வு. புத்தி சுயாதீனம் இழந்து, மிருகத்தைப்போல் நடந்துகொள்ள ஆரம்பித்தார் நேபுகாத்நேச்சார்! இனி அரண்மனை சாப்பாடும் இல்லை, மாளிகை வாசமும் இல்லை. அங்கிருந்து விரட்டப்பட்ட அவர் காடுகளில் அலைந்து திரிந்து, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார். அவருக்கு ஏன் இந்தக் கதி? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கென்ன பயன்?—ஒப்பிடுக: யோபு 12:17-19; பிரசங்கி 6:1, 2.
உன்னதமானவரை மகிமைப்படுத்துகிறார் ராஜா
2 பித்துப் பிடித்திருந்த நேபுகாத்நேச்சார், புத்தி தெளிந்த கொஞ்ச நாட்களுக்குள் தனக்கு நேரிட்டதைப் பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க செய்தியை தன் பேரரசு முழுவதும் அனுப்பினார். இச்சம்பவங்களை திருத்தமாக பதிவுசெய்யும்படி தீர்க்கதரிசியாகிய தானியேலை யெகோவா ஏவினார். இவைதான் ஆரம்ப வார்த்தைகள்: “ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது. உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது. அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.”—தானியேல் 4:1-3.
3 நேபுகாத்நேச்சாரின் குடிமக்கள் ‘பூமி எங்கும் குடியிருந்தார்கள்.’ பைபிள் பதிவு குறிப்பிடும் உலகின் பெரும்பாலான இடங்கள் அவரது சாம்ராஜ்யத்தின் கீழிருந்தன. தானியேலின் கடவுளுடைய “ராஜ்யம் நித்திய ராஜ்யம்” என்றார் ராஜா. பாபிலோனிய சாம்ராஜ்யம் எங்கும் யெகோவாவிற்கு எப்பேர்ப்பட்ட புகழ் முழக்கம்! மேலும், கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே நித்தியமான, “என்றென்றைக்கும் நிற்கும்” ராஜ்யம் என நேபுகாத்நேச்சாருக்கு உணர்த்தப்பட்டது இது இரண்டாவது முறை.—தானியேல் 2:44.
4 “உன்னதமான தேவன்” என்ன “அடையாளங்களையும் அற்புதங்களையும்” நிகழ்த்தினார்? ராஜாவே தன் சொந்த அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்: “நேபுகாத்நேச்சாராகிய நான் என் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து என் அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன். நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.” (தானியேல் 4:4, 5) சலனம் உண்டாக்கிய இந்தச் சொப்பனத்தைக் குறித்து பாபிலோன் ராஜா என்ன செய்தார்?
5 நேபுகாத்நேச்சார் பாபிலோனிய ஞானிகளையெல்லாம் வரவழைத்து தான் கண்ட சொப்பனத்தைச் சொன்னார். அவர்களோ திக்குமுக்காடிப்போய் விட்டார்கள்! சொப்பனத்தை அவர்களால் விளக்கவே முடியவில்லை. பதிவு தொடர்கிறது: ‘கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னேன்.’ (தானியேல் 4:6-8) தானியேலின் அரசவைப் பெயர் பெல்தெஷாத்சார்; ‘என் தேவன்’ என ராஜா அழைத்த பொய்க் கடவுள், பேல், நேபோ அல்லது மார்டுக்காக இருந்திருக்கலாம். பல கடவுட்களை நம்பிவந்த நேபுகாத்நேச்சார், தானியேலை ‘பரிசுத்த தேவர்களின் ஆவியையுடையவராய்’ கருதினார். தானியேல் பாபிலோனின் ஞானவான்கள் அனைவருக்கும் பிரதான அதிகாரியாய் இருந்ததால் அவரை ராஜா ‘சாஸ்திரிகளின் [“மந்திரவாதிகளின்,” NW] அதிபதி’ என அழைத்தார். (தானியேல் 2:48; 4:9; ஒப்பிடுக: தானியேல் 1:20.) நிச்சயமாகவே உத்தமமுள்ள தானியேல் மந்திரவித்தையில் ஈடுபட்டு யெகோவாவின் வணக்கத்தை துறக்கவில்லை.—லேவியராகமம் 19:26, NW; உபாகமம் 18:10-12.
வானளாவ உயர்ந்த மரம்
6 பாபிலோன் ராஜாவை பயமுறுத்திய அந்தச் சொப்பனம் என்ன? நேபுகாத்நேச்சார் சொன்னார், “என் படுக்கையிலே நான் கண்ட தரிசனங்கள் இவைகளே: இதோ பூமியின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு மரத்தைக் கண்டேன். அந்த மரம் வளர்ந்து பலத்தது, அது உயரமாகி வானபரியந்தம் எட்டினது, பூமியின் கடைமுனைமட்டும் தெரிந்தது. அதின் இலைகள் நேர்த்தியானவை, அதின் கனி ஏராளம், சகல பிராணிகளுக்கும் அதில் ஆகாரமிருந்தது; அதின் கீழே காட்டுமிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கின; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பறவைகள் தங்கின; மாமிசமான யாவும் அதினால் போஷிக்கப்பட்டன.” (தானியேல் 4:10-12, தி.மொ.) லீபனோனின் உயர்ந்தோங்கிய தேவதாரு மரங்களை நேபுகாத்நேச்சார் மிகவும் விரும்பினார், அவற்றைப் பார்க்கச் சென்றார், அவற்றின் மரத்துண்டுகள் சிலவற்றை பாபிலோனுக்கு எடுத்தும்வந்தார் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்தச் சொப்பனத்தில் கண்ட மரத்தைப் போல் அவர் எங்குமே பார்த்தது கிடையாது. “பூமியின் மத்தியிலே” முக்கிய இடத்தில் அமைந்திருந்த இதை, பூமியின் எப்பகுதியிலிருந்தும் பார்க்க முடிந்தது; மாமிசமான எல்லாவற்றிற்கும் உணவளிக்கும் அளவுக்கு இதில் கனிகள் காய்த்துக் குலுங்கின.
7 சொப்பனம் அதோடு முடிந்துவிடவில்லை. நேபுகாத்நேச்சார் தொடர்ந்து சொன்னார்: “நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன். அவன் உரத்த சத்தமிட்டு: இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும். ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.”—தானியேல் 4:13-15.
8 நல்ல ஆவிகள், கெட்ட ஆவிகள் பற்றி பாபிலோனியர்களுக்கு சொந்த கருத்துக்கள் இருந்தன. ஆனால் வானத்திலிருந்து இறங்கிய இந்தக் ‘காவலாளன்’ யார்? “பரிசுத்தவான்” என அழைக்கப்பட்ட அவர், கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்த நீதியுள்ள தூதர். (சங்கீதம் 103:20, 21-ஐ ஒப்பிடுக.) நேபுகாத்நேச்சாரை வாட்டியெடுத்த கேள்விகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! ஏன் இந்த மரத்தை வெட்டவேண்டும்? இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வேர்களாகிய அடிமரத்தை வளரவிடாமல் செய்வதால் என்ன லாபம்? வெறும் அடிமரத்தின் பயனென்ன?
9 காவலாளன் தொடர்ந்து சொன்னவற்றைக் கேட்டு நேபுகாத்நேச்சார் முழுமையாய் குழம்பிப்போயிருப்பார்: “அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது.” (தானியேல் 4:16, 17) ஒரு மரத்திற்கு மனித இதயம் எங்கேயாவது இருக்குமா? அதைவிட, மிருக இதயத்தை எப்படி ஒரு மரத்திற்குக் கொடுக்க முடியும்? “ஏழு காலங்கள்” என்பது என்ன? “மனுஷருடைய ராஜ்ய” ஆட்சிக்கும் இவை எல்லாவற்றிற்கும் என்ன சம்பந்தம்? நிச்சயமாகவே நேபுகாத்நேச்சார் பதில்களைத் தெரிந்துகொள்ள துடித்தார்.
ராஜாவுக்கு கெட்ட செய்தி
10 சொப்பனத்தில் சொல்லப்பட்டதைக் கேட்டவுடன் தானியேல் ஒரு விநாடி திகைத்துப்போனார், பின் கலக்கமுற்றார். நேபுகாத்நேச்சாரின் தூண்டுதலால் தானியேல் சொப்பனத்தை இவ்வாறு விளக்கினார்: ‘என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது. நீர் கண்ட விருட்சம் [மரம்] வளர்ந்து பலத்தது, . . . அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.’ (தானியேல் 4:18-22) பைபிளில், மரங்கள் நபர்களையும், ஆட்சியாளர்களையும், ராஜ்யங்களையும் அடையாளப்படுத்தலாம். (சங்கீதம் 1:3; எரேமியா 17:7, 8; எசேக்கியேல், அதிகாரம் 31) சொப்பனத்தில் கண்ட வானளாவிய மரத்தைப் போல் நேபுகாத்நேச்சார் உலக வல்லரசின் அதிபதியாக ‘வளர்ந்து பலமடைந்தார்.’ இருந்தாலும் அந்த மாபெரும் மரம், ‘பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கும் கர்த்தத்துவத்தை’ பிரதிநிதித்துவம் செய்கிறது. அது மனிதவர்க்கம் முழுவதையும் உட்படுத்தும். ஆகவே அந்த மரம் முக்கியமாய் பூமி சம்பந்தமான யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையை அடையாளப்படுத்துகிறது.—தானியேல் 4:17.
11 நேபுகாத்நேச்சாருக்கு அடி சறுக்கும் காலம்—அவமானத்திற்குரிய காலம்—காத்திருந்தது. இதைப் பற்றி தானியேல் தொடர்ந்து சொன்னதாவது: “இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே. ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் [“தீர்மானத்தின்படி நடக்கவிருப்பதும் இதுவே,” NW].” (தானியேல் 4:23, 24) அதிகாரம்படைத்த ராஜாவிடம் இந்தச் செய்தியை சொல்வதற்கு கண்டிப்பாக துணிச்சல் வேண்டியிருந்தது!
12 நேபுகாத்நேச்சாருக்கு என்ன நடக்கவிருந்தது? தானியேல் தொடர்ந்தார்: “மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்து கொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.” (தானியேல் 4:24, 25) இதைக் கேட்ட நேபுகாத்நேச்சாருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! அரசவை அதிகாரிகளே அவரை ‘மனுஷரினின்று தள்ளிவிடுவார்கள்.’ ஒருவேளை இளகிய மனமுள்ள மேய்ப்பர்கள் அவருக்கு தஞ்சம் அளிப்பார்களா? இல்லை. ஏனென்றால் நேபுகாத்நேச்சார் ‘வெளியின் மிருகங்களோடே’ சஞ்சரித்து புல்லைத் தின்பாரென்று கடவுள் சொல்லியிருந்தார்.
13 மரம் வெட்டி வீழ்த்தப்பட்டதுபோல் நேபுகாத்நேச்சார் உலக ஆட்சிபீடத்திலிருந்து தள்ளப்படுவார். ஆனால் கொஞ்ச காலத்திற்குத்தான். அதை தானியேல் விளக்கினார்: “ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும் [‘மீண்டும் கிடைக்கும்,’ பொ.மொ.].” (தானியேல் 4:26) நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தில் அடிமரம் வளராதபடி விலங்கிடப்பட்டாலும் வெட்டப்படாமல் விட்டுவைக்கப்பட்டது. அதேவிதமாய் பாபிலோன் ராஜாவின் “அடிமரம்” அழியாது, ஆனால் ‘ஏழு காலங்களுக்கு’ அது வளராதபடி விலங்கிடப்படும். உலக ஆட்சியாளராக அவரது நிலைமை விலங்கிடப்பட்ட அடிமரம் போன்றிருக்கும். ஏழு காலங்கள் முடியும்வரை அது பாதுகாப்பாய் வைக்கப்படும். அந்தக் காலப்பகுதியில் பாபிலோனின் அரசராக எவரும் நேபுகாத்நேச்சாரின் இடத்தை கைப்பற்றாதபடி யெகோவா பார்த்துக்கொள்வார். எனினும் ஏவில்-மெரொதாக் என்ற அவரது மகன் தற்காலிக அரசராக சேவித்திருக்கலாம்.
14 நேபுகாத்நேச்சாரைப் பற்றி சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை கருத்தில்கொண்டு தானியேல் இவ்வாறு தைரியமாக அறிவுறுத்தினார்: “ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம்.” (தானியேல் 4:27) நேபுகாத்நேச்சார் பாவமுள்ள போக்கை விட்டொழித்தால், அதாவது அகந்தையையும் ஒடுக்குதலையும் விட்டொழித்தால் ஒருவேளை அவருக்கு இந்தளவு கேடு நடக்காமல் இருக்கலாம். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்கூட, அசீரியாவின் தலைநகரான நினிவேயின் மக்களை அழிக்க யெகோவா தீர்மானித்திருந்தபோதும், ராஜாவும் பொதுமக்களும் மனந்திரும்பியதால் அவர் அவர்களை அழிக்கவில்லையே! (யோனா 3:4, 10; லூக்கா 11:32) தலைக்கனம் பிடித்த நேபுகாத்நேச்சார் என்ன செய்வார்? தன் போக்கை மாற்றிக்கொள்வாரா?
சொப்பனத்தின் முதல் நிறைவேற்றம்
15 நேபுகாத்நேச்சார் கர்வத்தை விட்டொழிக்கவில்லை. மரத்தைப் பற்றி சொப்பனம் கண்டு 12 மாதங்கள் கழித்து, தனது அரண்மனை மாடியில் நடந்தவாறே, “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என பெருமையாய் சொல்லிக்கொண்டார். (தானியேல் 4:28-30) பாபிலோன் (பாபேல்) தோன்றியதற்கு நிம்ரோது காரணம், ஆனால் அது செழித்தோங்கியதற்கு நேபுகாத்நேச்சாரே காரணம். (ஆதியாகமம் 10:8-10) க்யூனிஃபார்ம் கல்வெட்டு ஒன்றில் அவர் இவ்வாறு பெருமை பேசுவதாய் சொல்லப்பட்டிருக்கிறது: “நபோபொலாசாரின் மகனான நேபுகாத்நேச்சார் அல்லவோ நான், பாபிலோனுக்கே ராஜா, எசாஜிலாவையும் எசிடாவையும் புதுப்பித்தவன். . . . எசாஜிலா, பாபிலோனின் அரண்களை வலுவாக்கி, என் ஆட்சியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கச் செய்திருக்கிறேன்.” (புதைபொருளும் பைபிளும் [ஆங்கிலம்], 1949-ல் ஜார்ஜ் ஏ. பார்டன் எழுதியது, பக்கங்கள் 478-9) மற்றொரு கல்வெட்டு, அவர் சுமார் 20 ஆலயங்களை புதுப்பித்ததாக அல்லது இடித்துக் கட்டியதாக சொல்கிறது. த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்வதாவது: “நேபுகாத்நேச்சாரின் ஆட்சியில், பாபிலோன் பூர்வ உலகின் எழில் கொஞ்சும் நகரமாக கொடிகட்டி பறந்தது. நேபுகாத்நேச்சாரின் சொந்த பதிவுகளில், தனது போர் நடவடிக்கைகளைப் பற்றி அரிதாகவே குறிப்பிட்டிருக்கும் அவர், தனது கட்டுமானத் திட்டங்களையும் பாபிலோனிய தெய்வங்கள்மேல் காட்டிய பக்தியையும் பற்றி எழுதியிருக்கிறார். பூர்வ உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை நேபுகாத்நேச்சார் கட்டியிருக்கலாம்.”
16 நேபுகாத்நேச்சார் பெருமையடித்துக்கொண்டாலும், செருக்கில் சறுக்கிவிழவிருந்தார். ஏவப்பட்ட எழுத்துக்கள் சொல்கின்றன: “இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது.”—தானியேல் 4:31, 32.
17 அந்நொடியே நேபுகாத்நேச்சாரின் புத்தி கலங்கிவிட்டது. மனுஷரிடமிருந்து தள்ளப்பட்டு, “மாடுகளைப்போல்” புல்லை மேய்ந்தார். அவர் வெளியே மிருகங்களோடு, கிட்டத்தட்ட பரதீஸ் போன்ற பச்சைப் பசேலென்ற சுற்றுப்புறத்தில், குளுகுளுவென்ற இதமான காற்று வாங்கியவாறு சாவகாசமாய் உட்கார்ந்துகொண்டு பொழுதைக் கழிக்கவில்லை. பாபிலோனிய இடிபாடுகள் உள்ள நவீன-நாளைய ஈராக்கில் கோடைக்கால சீதோஷணம் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லும், குளிர்காலத்திலோ உறை நிலைக்கும் கீழே செல்லும். கேட்க நாதியில்லாமல், பஞ்ச பூதங்களின் உபாதையால் நேபுகாத்நேச்சாரின் நீண்ட சடை முடி கழுகின் இறக்கைகள்போலவும், அவரது கை கால் நகங்கள் வெட்டப்படாமல் பட்சியின் நகங்கள்போலவும் வளர்ந்தன. (தானியேல் 4:33) தலைக்கனம் பிடித்த உலக அரசருக்கு எப்பேர்ப்பட்ட தலைக்குனிவு!
18 நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தில், அந்த மாபெரும் மரம் வெட்டப்பட்டு, அடிமரம் வளராதபடி ஏழு காலங்களுக்கு விலங்கிடப்பட்டது. அதேவிதமாய் யெகோவா நேபுகாத்நேச்சாரை பித்தனாக்கியபோது அவர் “சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்.” (தானியேல் 5:20) இதனால் ராஜாவின் மனித இதயம் காளை மாட்டின் இதயத்திற்கு ஒப்பானது. இருந்தாலும் ஏழு காலங்கள் முடியும்வரை கடவுள் நேபுகாத்நேச்சாரின் அரியணையை அவருக்காக பாதுகாத்தார். ஏவில்-மெரொதாக் ஒருவேளை தற்காலிக அரசராக பணியாற்றியிருக்கலாம். தானியேலோ “பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும்” செயலாற்றினார். அவரது மூன்று எபிரெய நண்பர்களும் மாகாணத்துக் காரியங்களை தொடர்ந்து நிர்வகித்து வந்தார்கள். (தானியேல் 1:11-19; 2:48, 49; 3:30) ‘உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்’ என்ற பாடத்தை நேபுகாத்நேச்சார் கற்றுக்கொண்டு, புத்தி தெளிந்தவராய் மீண்டும் அரியணை ஏறும் நாளுக்காக அந்த நான்கு எபிரெயர்களும் காத்திருந்தனர்.
நேபுகாத்நேச்சார் இயல்புக்குத் திரும்புகிறார்
19 ஏழு காலங்களின் முடிவில் யெகோவா நேபுகாத்நேச்சாரின் பித்தத்தைத் தெளியவைத்தார். உன்னதமான கடவுளின் மகிமையைப் புரிந்துகொண்ட ராஜா இப்படிச் சொன்னார்: “அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை.” (தானியேல் 4:34, 35) மனுஷருடைய ராஜ்யத்தில் உன்னதமானவரே சர்வலோகப் பேரரசர் என்பதை ஒருவழியாக நேபுகாத்நேச்சார் புரிந்துகொண்டார்.
20 நேபுகாத்நேச்சார் மீண்டும் அரியணையில் ஏறியபோது, கனவில் கண்ட மரத்தின் அடிமரத்தினுடைய விலங்கு நீக்கப்பட்டது எனலாம். பழைய நிலைமைக்கே திரும்பியதைப் பற்றி அவர் சொன்னார்: “அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள் [“ஆவலோடு தேடிவந்தார்கள்,” NW]; என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.” (தானியேல் 4:36) பித்துப்பிடித்த ராஜாவை கேவலப்படுத்திய அரசவை அதிகாரிகளும்கூட இப்போது அவர் எள் என்றால் எண்ணெய்யாக நிற்க, அவரை “ஆவலோடு தேடிவந்தார்கள்.”
21 உன்னதமானவர் நிகழ்த்திய “அடையாளங்களையும் அற்புதங்களையும்” என்னென்பது! இயல்புக்குத் திரும்பிய பாபிலோன் ராஜா இப்படிச் சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை: “நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்.” (தானியேல் 4:2, 37) இவ்வாறு புறமதத்தானாகிய நேபுகாத்நேச்சார் ஒப்புக்கொண்டாலும் அவர் யெகோவாவின் பக்தனாக மாறவில்லை.
சரித்திர அத்தாட்சி உண்டா?
22 நேபுகாத்நேச்சாருக்குப் பிடித்த பைத்தியம் லைகான்த்ரோப்பி (lycanthropy) என்பது சிலரின் கருத்து. ஒரு மருத்துவ அகராதி சொல்கிறது: “லைகான்த்ரோப்பி என்பது . . . [லைகாஸ்], லூபஸ் மற்றும் [ஆன்த்ரோபாஸ்], ஹோமோ என்பவற்றிலிருந்து வந்த வார்த்தை. அவற்றிற்கு முறையே ஓநாய் மற்றும் மனிதன் என அர்த்தம். இவ்வியாதியுள்ளவர்கள் தாங்கள் ஒரு மிருகமாய் மாறிவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள். அசல் அந்த மிருகத்தைப் போலவே குரலெழுப்புவார்கள், அதைப் போலவே கத்துவார்கள், நடந்துகொள்வார்கள். பொதுவாய் இப்படிப்பட்டவர்கள் தாங்கள் ஓநாயாய், நாயாய், பூனையாய், சிலசமயம் நேபுகாத்நேச்சாரைப்போல, ஒரு மாடாய் மாறிவிட்டதாகவும் கற்பனை செய்துகொள்வார்கள். (Dictionnaire des sciences médicales, par une société de médicins et de chirurgiens, பாரிஸ், 1818, தொகுதி 29, பக்கம் 246) லைகான்த்ரோப்பியின் அறிகுறிகள் நேபுகாத்நேச்சாரின் பித்துப்பிடித்த நிலைக்கு ஒத்திருக்கின்றன. இருந்தாலும் இவர் புத்தி சுவாதீனமிழந்தது தெய்வ தண்டனை என்பதால், அதை எந்த குறிப்பிட்ட வியாதியோடும் சம்பந்தப்படுத்த முடியாது.
23 அறிஞரான ஜான் ஈ. கோல்டிங்கே, நேபுகாத்நேச்சாருக்கு பித்துப் பிடித்து பின் புத்தி தெளிந்த சம்பவத்தைப் பற்றி பல இணையான குறிப்புகளைச் சொல்கிறார். உதாரணத்திற்கு அவர் குறிப்பிடுகிறார்: “நேபுகாத்நேச்சாருக்கு ஏதோ மனக் கோளாறு இருந்ததாகவும், அவர் பாபிலோனை புறக்கணித்து அதைவிட்டு சென்றதாகவும் ஆப்புவடிவ எழுத்துக்கள்கொண்ட புத்தகசுருள் துண்டு ஒன்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது.” “பாபிலோனிய யோபு” என்ற ஆவணத்தைப் பற்றி சொல்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடவுளால் தண்டிக்கப்படுதல், வியாதிப்படுதல், அவமானமடைதல், பயங்கரமான கனவின் அர்த்தத்தைத் தேடுதல், மரத்தைப் போல் வீழ்த்தப்படுதல், வெளியே துரத்தப்படுதல், புல்லை மேய்தல், புத்தி சுவாதீனத்தை இழத்தல், மாட்டைப் போலாகுதல், மார்டுக்கினால் மழையில் நனைதல், நகங்கள் உருக்குலைதல், முடி நீண்டு வளருதல், விலங்கிடப்படுதல், பின் மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்புதல், இதற்காக தெய்வத்தைத் துதித்தல் ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த ஆவணம் அத்தாட்சி அளிக்கிறது.”
நம்மை பாதிக்கும் ஏழு காலங்கள்
24 வானளாவ உயர்ந்தோங்கிய மரம் அடையாளப்படுத்தியபடி, நேபுகாத்நேச்சார் உலக அரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்தார். அம்மரம் பாபிலோனிய ராஜாவுக்கு இருந்ததைக் காட்டிலும் அதிக மகிமைபொருந்திய அரசாட்சியையும் பேரரசுரிமையையும் அடையாளப்படுத்துகிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அது ‘பரலோகத்தின் ராஜாவான’ யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையை, முக்கியமாய் பூமி சம்பந்தப்பட்டதை பிரதிநிதித்துவம் செய்கிறது. பாபிலோனியர்கள் எருசலேமை அழிப்பதற்குமுன், அந்நகரத்து ராஜ்யம் பூமி சம்பந்தப்பட்ட கடவுளின் பேரரசுரிமையை அடையாளப்படுத்தியது. அங்கு தாவீதும் அவரது வம்சத்தாரும் “யெகோவாவின் சிங்காசனத்தில்” அமர்ந்திருந்தனர். (1 நாளாகமம் 29:23, தி.மொ.) பொ.ச.மு. 607-ல் எருசலேமை அழிக்க நேபுகாத்நேச்சாரை பயன்படுத்தியதன் மூலம் கடவுள்தாமே அப்பேரரசுரிமையை வெட்டி வீழ்த்தி, அதற்கு விலங்கிட்டார். தாவீதின் வம்சத்தாரது ஆட்சியின் மூலம் பூமியில் தெய்வீக பேரரசுரிமை செலுத்தப்படுவது ஏழு காலங்களுக்கு தடைசெய்யப்பட்டது. இந்த ஏழு காலங்கள் எவ்வளவு காலம் நீடித்தன? எப்போது ஆரம்பமாகி, எச்சம்பவத்தோடு முடிவடைந்தன?
25 நேபுகாத்நேச்சார் பித்தனாயிருந்தபோது, அவருடைய ‘தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளர்ந்தன.’ (தானியேல் 4:33) இது வெறுமனே ஏழு நாட்களிலோ ஏழு வாரங்களிலோ நடந்துவிடவில்லை. அநேக மொழிபெயர்ப்புகள் இதை “ஏழு காலங்கள்” என்றுதான் சொல்கின்றன. “நியமிக்கப்பட்ட (திட்டவட்டமான) காலங்கள்” அல்லது “காலப் பகுதிகள்” என சில குறிப்பிடுகின்றன. (தானியேல் 4:16, 23, 25, 32) பழைய கிரேக்க (செப்டுவஜின்ட்) ஒன்று, “ஏழு வருடங்கள்” என குறிப்பிடுகிறது. முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியரான ஜோசிஃபஸ் ‘ஏழு காலங்களை’ ‘ஏழு வருடங்களாக’ கணக்கிட்டார். (யூதர்களின் பண்டைய பொருட்கள் [ஆங்கிலம்], புத்தகம் 10, அதிகாரம் 10, பாரா 6) சில எபிரெய அறிஞர்களும் இந்தக் ‘காலங்களை’ ‘வருடங்களாக’ கருதியிருக்கின்றனர். அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன், டுடேஸ் இங்லிஷ் வர்ஷன், ஜேம்ஸ் மொஃபட்டின் மொழிபெயர்ப்பு ஆகியவை “ஏழு வருடங்கள்” என்றே குறிப்பிடுகின்றன.
26 நேபுகாத்நேச்சாரின் “ஏழு காலங்கள்” ஏழு சந்திர ஆண்டுகளை அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு சந்திர ஆண்டில் 360 நாட்கள் உண்டு. அல்லது 30 நாட்கள் கொண்ட 12 சந்திர மாதங்கள் உண்டு. a (ஆதியாகமம் 7:11–8:4; ஒப்பிடுக: வெளிப்படுத்துதல் 12:6, 14.) ஆகவே 360 நாட்களை 7-ஆல் பெருக்கினால் வரும் 2,520 நாட்கள் அடங்கியதே ராஜாவின் “ஏழு காலங்கள்” அல்லது ஏழு வருடங்கள். அவரது சொப்பனத்தின் பெரிய நிறைவேற்றத்தைப் பற்றியென்ன? அந்த தீர்க்கதரிசன “ஏழு காலங்கள்” 2,520 நாட்களை மட்டுமே குறிக்கவில்லை. இது இயேசு சொன்ன வார்த்தைகளில் தெளிவாயிருந்தது: “புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.” (லூக்கா 21:24) பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டு, யூதாவில் கடவுளுடைய மாதிரி ராஜ்யம் முடிவுக்கு வந்தபோது அந்த ‘மிதிக்கப்படுதல்’ ஆரம்பமானது. அது எப்போது முடிவடையும்? ‘எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள்’ வரும்போது; அதாவது அடையாளப்பூர்வ எருசலேமான கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் பூமியில் மீண்டும் யெகோவாவின் பேரரசுரிமை ஸ்தாபிக்கப்படும் காலம் வரும்போது முடிவடையும்.—அப்போஸ்தலர் 3:21.
27 எருசலேம் அழிக்கப்பட்ட வருடமான பொ.ச.மு. 607-லிருந்து சொல்லர்த்தமான 2,520 நாட்களை கூட்டினால் பொ.ச.மு. 600-க்குத்தான் வருவோம். எவ்வித வேதப்பூர்வ முக்கியத்துவமும் இல்லாத ஆண்டு இது. விடுதலைசெய்யப்பட்ட யூதர்கள் மீண்டும் யூதாவிற்கு திரும்பிய வருடமான பொ.ச.மு. 537-ல்கூட, யெகோவாவின் பேரரசுரிமை பூமியில் ஸ்தாபிக்கப்படவில்லை. ஏனெனில், தாவீதின் சிங்காசனத்திற்கு வாரிசான செருபாபேல், பெர்சிய மாகாணமான யூதாவின் ராஜாவாக அல்ல, ஆனால் ஆளுநராக மட்டுமே நியமிக்கப்பட்டார்.
28 “ஏழு காலங்கள்” என்ற பதம் தீர்க்கதரிசன அர்த்தமுள்ளது என்பதால், 2,520 நாட்களை, ‘ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷம்’ என்ற வேதப்பூர்வ நியதியின்படியே கணக்கிடவேண்டும். இந்நியதி, பாபிலோன் எருசலேமை முற்றுகையிடுவதைக் குறித்த தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. (எசேக்கியேல் 4:6, 7; ஒப்பிடுக: எண்ணாகமம் 14:34.) ஆகவே கடவுளுடைய ராஜ்யத்தின் தலையீடு இல்லாமல் புறஜாதி அரசுகள் உலகை ஆதிக்கம்செலுத்திய “ஏழு காலங்கள்,” 2,520 ஆண்டுகள் நீடித்தன. பொ.ச.மு. 607-ல் ஏழாம் சந்திர மாதத்தில் (திஷ்ரி 15) யூதாவும் எருசலேமும் அழிக்கப்பட்டபோது இவை ஆரம்பமாயின. (2 இராஜாக்கள் 25:8, 9, 25, 26) அச்சமயத்திலிருந்து பொ.ச.மு. 1 வரை 606 வருடங்கள் அடங்கும். இது முதற்கொண்டு, மீதமுள்ள 1,914 ஆண்டுகள், பொ.ச. 1914 வரை நீடிக்கும். இவ்வாறு, “ஏழு காலங்கள்” அல்லது 2,520 ஆண்டுகள் திஷ்ரி 15 அதாவது அக்டோபர் 4/5, பொ.ச. 1914-ல் முடிவடைந்தன.
29 அவ்வருடத்தில் “புறஜாதியாரின் காலங்கள்” முடிவடைந்தன. அப்போது கடவுள், ‘மனுஷரில் தாழ்ந்தவரான’ இயேசு கிறிஸ்துவுக்கு அரசுரிமையை அளித்தார்—இவரை எதிரிகள் அந்தளவு தாழ்வாக கருதி கழுமரத்திலேயே அறைந்தார்கள். (தானியேல் 4:17, NW) மேசியானிய ராஜாவுக்கு அரசுரிமை வழங்க யெகோவா தமது சொந்த பேரரசுரிமையின் ‘அடிவேரைச்’ சுற்றியிருந்த இரும்பும் வெண்கலமுமான விலங்கை அகற்றினார். இவ்வாறு, உன்னதக் கடவுள் அடிவேரிலிருந்து ராஜ ‘துளிர்’ வளரும்படி அனுமதித்தார். தாவீதின் மிகப் பெரிய வாரிசாகிய இயேசு கிறிஸ்துவின் பரலோக ராஜ்யத்தின் மூலம் பூமியில் கடவுளுடைய பேரரசுரிமை வெளிக்காட்டப்பட்டது. (ஏசாயா 11:1, 2; யோபு 14:7-9; எசேக்கியேல் 21:27) இப்பேர்ப்பட்ட சந்தோஷமான விளைவுக்காகவும் வானளாவ உயர்ந்த மரத்தின் புதிரை விடுவித்ததற்காகவும் யெகோவாவிற்கு ஓராயிரம் நன்றி!
[அடிக்குறிப்புகள்]
a சராசரி சூரிய வருடத்தைவிட சந்திர வருடத்திற்கு 11 நாட்கள் குறைவு. இந்த இரண்டு நாட்காட்டிகளையும் சரிசமமாக்க, ஒவ்வொரு 19 வருட காலப்பகுதியிலும் குறிப்பிட்ட ஏழு வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பின், இந்த ஒவ்வொரு வருடத்தோடும் ஒரு கூடுதலான மாதம் சேர்க்கப்பட்டது. இப்படி சேர்க்கப்பட்ட மாதங்கள் 29 நாட்கள் கொண்டவை.
நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?
• நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட மாபெரும் மரம் எதை அடையாளப்படுத்தியது?
• மரத்தைப் பற்றிய சொப்பனத்தின் முதல் நிறைவேற்றமாக நேபுகாத்நேச்சாருக்கு நிகழ்ந்தது என்ன?
• சொப்பனம் தன்னில் நிறைவேறிய பிறகு நேபுகாத்நேச்சார் எதை ஒப்புக்கொண்டார்?
• மரத்தைப் பற்றிய தீர்க்கதரிசன சொப்பனத்தின் பெரிய நிறைவேற்றத்தில், “ஏழு காலங்கள்” எவ்வளவு காலம் நீடித்தன, எப்போது ஆரம்பித்து எப்போது முடிந்தன?
[கேள்விகள்]
1. நேபுகாத்நேச்சாருக்கு என்ன நேர்ந்தது, அதனால் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
2, 3. பாபிலோன் ராஜா தன் குடிமக்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்பினார், உன்னதக் கடவுளை எவ்வாறு கருதினார்?
4. நேபுகாத்நேச்சார் விஷயத்தில் யெகோவாவின் ‘அடையாளங்களும் அற்புதங்களும்’ எவ்வாறு ஆரம்பமாயின?
5. நேபுகாத்நேச்சார் தானியேலை எவ்வாறு கருதினார், ஏன்?
6, 7. நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்டதை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?
8. ‘காவலாளன்’ யார்?
9. காவலாளன் என்ன சொன்னார், இதனால் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
10. (அ) வேதாகமத்தில் மரங்கள் எதை அடையாளப்படுத்தக்கூடும்? (ஆ) மாபெரும் மரம் எதை அடையாளப்படுத்துகிறது?
11. ராஜா கண்ட சொப்பனம், அவருக்கு அடி சறுக்கும் காலம் காத்திருந்ததை எப்படி சுட்டிக்காட்டியது?
12. நேபுகாத்நேச்சாருக்கு என்ன நடக்கவிருந்தது?
13. மரத்தைப் பற்றிய சொப்பனம், உலக அரசராக நேபுகாத்நேச்சாருக்கு என்ன நிகழுமென காட்டியது?
14. நேபுகாத்நேச்சாரை என்ன செய்யும்படி தானியேல் அறிவுறுத்தினார்?
15. (அ) நேபுகாத்நேச்சார் தொடர்ந்து எப்படிப்பட்ட குணத்தைக் காட்டினார்? (ஆ) நேபுகாத்நேச்சாரின் நடவடிக்கைகளைப் பற்றி கல்வெட்டுகள் என்ன காட்டுகின்றன?
16. நேபுகாத்நேச்சார் எவ்வாறு செருக்கில் சறுக்கிவிழவிருந்தார்?
17. கர்வம்பிடித்த நேபுகாத்நேச்சாருக்கு என்ன நடந்தது, கொஞ்ச காலத்திற்குள் என்ன நிலைக்கு ஆளானார்?
18. ஏழு காலங்களின்போது பாபிலோனின் அரியணைக்கு என்ன ஏற்பட்டது?
19. யெகோவா, பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் பித்தத்தைத் தெளியவைத்த பிறகு, ராஜா எதை உணர்ந்தார்?
20, 21. (அ) கனவில் கண்ட மரத்தின் அடிமரத்து விலங்கை நீக்கியதற்கு ஒப்பாய் நேபுகாத்நேச்சாருக்கு என்ன நிகழ்ந்தது? (ஆ) நேபுகாத்நேச்சார் எதை ஒப்புக்கொண்டார், இது அவரை யெகோவாவின் பக்தனாக்கியதா?
22. நேபுகாத்நேச்சாரின் பைத்தியத்தை எந்த நோயோடு சிலர் சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கிறார்கள், ஆனால் அவருக்கு அந்நிலை ஏற்பட உண்மையான காரணம் என்ன?
23. நேபுகாத்நேச்சார் புத்தி சுவாதீனமின்றி இருந்தார் என்பதற்கு என்ன சரித்திர அத்தாட்சி உள்ளது?
24. (அ) சொப்பனத்தில் கண்ட மாபெரும் மரம் எதை அடையாளப்படுத்துகிறது? (ஆ) எது ஏழு காலங்களுக்கு தடைசெய்யப்பட்டது, அது எவ்வாறு நடந்தது?
25, 26. (அ) நேபுகாத்நேச்சாரின் விஷயத்தில் “ஏழு காலங்கள்” எவ்வளவு காலம் நீடித்தன, ஏன்? (ஆ) பெரிய நிறைவேற்றத்தில் “ஏழு காலங்கள்” எப்போது, எப்படி ஆரம்பமாயின?
27. பொ.ச.மு. 607-ல் ஆரம்பமான “ஏழு காலங்கள்” 2,520 சொல்லர்த்தமான நாட்களோடு முடிவடையவில்லை என ஏன் சொல்லலாம்?
28. (அ) தீர்க்கதரிசன ‘ஏழு காலங்களின்’ 2,520 நாட்களுக்கு எந்த நியதியைப் பொருத்தவேண்டும்? (ஆ) தீர்க்கதரிசன “ஏழு காலங்கள்” எவ்வளவு காலம் நீடித்தன, எந்தத் தேதிகளில் ஆரம்பமாகி முடிவடைந்தன?
29. ‘மனுஷரில் தாழ்ந்தவர்’ யார், அவருக்கு அரசுரிமை வழங்க யெகோவா என்ன செய்தார்?
[பக்கம் 83-ன் முழுபடம்]
[பக்கம் 91-ன் முழுபடம்]