யெகோவா பேரரசர்களுக்குப் பாடங்களைக் கற்பித்தபோது
“அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும் அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்.”—தானியேல் 4:37.
“இதோ! தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?” வேதனையிலிருந்த யோபுவினிம் சொல்லப்பட்ட எலிகூவின் இந்த வார்த்தைகள், சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் ஈடிணையற்ற தனிப்பண்புகளில் ஒன்றுக்கு கவனத்தை திருப்புகிறது. மற்றவர்களுக்கு போதிப்பது அல்லது கற்பிப்பது என்பது வருகையில் வேறு எவரையும் அவரோடு ஒப்பிடமுடியாது.—யோபு 36:22.
2 மனிதர்களுக்கும் தேசங்களுக்கும் கடவுள் கற்பிக்க வேண்டியதாயிருந்த காரியங்களில் ஒன்று அவரிடமாக அவர்களுடைய சரியான உறவைப் பற்றிய விஷயமாயிருந்தது. சங்கீதம் 9:19, 20-ல் சங்கீதக்காரனாகிய தாவீதின் வார்த்தைகளில் இது உயர்த்திக் காண்பிக்கப்படுகிறது: “எழுந்தருளும் யெகோவாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள். ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு அவர்களுக்கு பயமுண்டாக்கும், யெகோவாவே.”
3 இந்தப் பாடம் கற்பிக்கப்பட பூமியின் அரசர்களில் ஒருவனாக யெகோவா தேவனால் கருதப்பட்டது மோசேயின் நாளின் பார்வோனாகும். கடவுள் எகிப்தியர்களின் மீது அனுப்பிய வாதைகளின் மூலமாக இதைச் செய்தார். மேலுமாக, அகந்தையுள்ளவனாகிய அந்தப் பார்வோனிடம் யெகோவா சொன்னதாவது: “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும் என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.” (யாத்திராகமம் 9:16) மேலுமாக பேரரசர்களும் ஜனங்களும் ஜாதிகளும் அவரே யெகோவா, பூமியனைத்தின் மேலும் மகா உன்னதமானவர் என்பதை அறிந்துகொள்ளும்படி யெகோவா இதே போன்ற வல்லமையான கிரியைகளைச் செய்வார் என்பதாக யாத்திராகமம் 6:7 முதல் யோவேல் 3:17 வரையாக எழுபதுக்கும் மேற்பட்ட தடவைகள் தம்முடைய வார்த்தையில் சொல்கிறார்.
4 யெகோவா பேரரசர்களுக்கு எவ்விதமாக கற்பித்தார் என்பது பற்றி மனதில் பதியத்தக்க அநேக உதாரணங்கள் தானியேல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த பேரரசர்கள் நேபுகாத்நேச்சார், பெல்ஷாத்சார் மற்றும் தரியு ஆகியோராகும். எப்பொழுது அவர் அவர்களுக்குக் கற்பித்தார்? பெரும்பாலும் பொ.ச.மு.617-க்கும் பொ.ச.மு. 535-க்குமிடைப்பட்ட காலத்தில். எவ்விதமாக? சொப்பனங்களினாலும், அர்த்தஞ்சொல்லுதலினாலும் அவருடைய வல்லமையின் வெளிக்காட்டுதல்களின் மூலமாகவும். யெகோவா தாம் சர்வலோகத்தின் உன்னத பேரரசர் என்பதையும் அவர்கள் வெறுமென அற்ப மனிதர்கள் என்பதையும் இந்த மனித அரசர்களுக்குக் கற்பித்தார். இன்றைய உலகத் தலைவர்களும்கூட கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் இவை.
5 ஆனால் நவீன நாளில் விமர்சனம் செய்யும் பலர் பைபிள் புத்தகமாகிய தானியேலின் நம்பத்தக்கத்தன்மையை சந்தேகிக்கிறார்களல்லவா? இவ்விதமாக விமர்சனம் செய்பவர்களுக்குப் பதிலளிக்கையில் பைபிள் பண்டிதர் ஒருவர் சரியாகவே சொன்னதாவது: “அது குறித்துக் காட்டும் அற்புதங்களும், அது மெய்யெனக் காட்டும் தீர்க்கதரிசனங்களும் சம காலத்தில் வாழ்ந்த தானியேலால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், நாம் மெய்யான அற்புதங்களையும் மெய்யான தீர்க்கதரிசனத்தையுமே கொண்டிருக்க வேண்டும், இல்லாவிடில் அது முற்றிலும் பொய்யாகவே இருக்க வேண்டும்.” (E.B. புஸ்ஸி எழுதிய தீர்க்கதரிசியாகிய தானியேல், பக்கம் 75) ஏன் மறுபடியும் மறுபடியுமாக இப்புத்தக எழுத்தாளன் “தானியேலாகிய நான்” என்பதாக சொல்வதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் காண்பிக்கிறான்! (தானியேல் 8:15; 9:2; 10:2) இவை அனைத்தும் போலி எழுத்துக்களா? உண்மையென்னவென்றால், 18-ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு முன்னால் தானியேல் புத்தகத்தின் ஆசிரியரைக் குறித்து யூதர்களோ கிறிஸ்தவர்களோ எந்தச் சந்தேகத்தையும் எழுப்பவில்லை. என்றபோதிலும் எந்த நவீன கால பைபிள் பண்டிதரின் கருத்தைக் காட்டிலும் கூடுதலான அதிகாரத்தையுடையதாக இருப்பது தானியேல் புத்தகத்தைப் பற்றிய வேதாகம அத்தாட்சியாகும். இதன் காரணமாக, எசேக்கியேல் புத்தகத்தில் தானியேலின் பெயர் மூன்று தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. (எசேக்கியேல் 14:14, 20; 28:3) எல்லாவற்றைக் காட்டிலும் வெகுவாக நம்பவைப்பது மத்தேயு 24:15, 16-ல் பதிவு செய்யப்பட்டபடி கடவுளுடைய குமாரனாகிய இயேசுவின் வார்த்தைகளாகும்: “பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.”a
மெய்க்கடவுள் யார் என்பதை நேபுகாத்நேச்சார் கற்றுக்கொள்கிறான்
6 ஏசாயா தீர்க்கதரிசி காண்பிக்கிறவிதமாகவே, பாபிலோனிய ராஜாக்கள் மிகவும் பெருமையுள்ள மனிதர்களாக இருந்தார்கள். (ஏசாயா 14:4-23) நேபுகாத்நேச்சார் மிகவும் மதப்பற்றுள்ள ஒரு மனிதனாகவும்கூட இருந்தான். அவனுடைய எழுத்துக்களில் அவன், “பாபிலோனிய கடவுட்களுக்காக அவனுடைய கட்டிட திட்டங்களையும் அக்கறையையும்” பற்றி குறிப்பிடுகிறான். எருசலேமையும் யூதேயா முழுவதையும் கைப்பற்ற முயன்று அதில் சனகெரிப் கேவலமாக தோல்வியடைந்த பின்பு, அவன் இதில் வெற்றி பெற்றிருந்ததால் கட்டுப்படுத்த முடியாத அளவில் அவன் கிளர்ச்சியடைந்தவனாயிருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமேதுமில்லை.
7 தானியேலும் அவனுடைய மூன்று எபிரேயத் தோழர்களும் நேபுகாத்நேச்சாருக்கு முன்பாக வந்து நின்ற பிறகு, அவர்களுடைய கடவுளை மதிப்பதற்கு அவனுக்கு நிச்சயமாகவே காரணமிருந்தது. ஏனென்றால், “ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்.” ஆம், யெகோவாவை தங்களின் கடவுளாக கொண்டிருந்த விவேகமுள்ள மனிதர் மற்ற கடவுட்களை வணங்கிய அனைவரையும் விட மிகவும் மேம்பட்டு விளங்கினார்கள். நேபுகாத்நேச்சார் அந்த உண்மையை கவனிக்க தவறியிருக்க முடியாது.—தானியேல் 1:20.
8 யெகோவா நேபுகாத்நேச்சார் ராஜாவுக்குக் கற்பிக்க இன்னும் அதிகத்தைக் கொண்டிருந்தார். தானியேல் 2-ம் அதிகாரத்தில் அடுத்த பாடம் பதிவு செய்யப்பட்டிக்கிறது. ராஜா ஒரு பயங்கரமான சொப்பனத்தைக் காணவும் பின்னர் அதை அவன் மறந்துவிடவும் கடவுள் செய்தார். இந்தக் கனவு பாபிலோனிய அரசனை வெகுவாக கலங்கும்படி செய்தது. சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் அவனுக்குச் சொல்வதற்கு அவனுடைய ஞானிகள் அனைவரையும் அவன் வரவழைத்திருந்தான். நிச்சயமாகவே அவர்களால் சொப்பனத்தையே வெளிப்படுத்த முடியவில்லை, அதற்கு அர்த்தஞ் சொல்வதைப்பற்றி கேட்கவே தேவையில்லை. இதன் மூலமாக, விசேஷமான அறிவு எதுவும் தங்களுக்கில்லாததை அவர்கள் சாதுரியமாக ஒப்புக்கொண்டார்கள். இது ராஜாவை அதிகமாக கோபங்கொள்ளச் செய்ததால் அனைவரையும் கொலை செய்யும்படி அவன் கட்டளையிட்டான். தானியேலுக்கும் அவனுடைய தோழர்களுக்கும் ராஜாவின் கட்டளை அறிவிக்கப்பட்ட போது, தானியேல் தனக்குக் காலத் தவணைக் கொடுக்கும்படி விண்ணப்பம் பண்ணி, அதைப் பெற்றுக்கொண்டான். பின்னர் அவனும் அவனுடைய மூன்று தோழர்களும் இதற்காக ஊக்கமாக ஜெபிக்க, யெகோவா சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் தானியேலுக்கு வெளிப்படுத்தினார்.—தானியேல் 2:16–20.
9 ராஜாவுக்கு முன்பாக தானியேல் கொண்டுவரப்பட்ட போது நேபுகாத்நேச்சார் அவனிடமாக கேட்டதாவது: “நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா?” அவனுடைய சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தின் இரகசியத்தையும் ஞானிகளால் சொல்ல முடியாமல் போனதை பெருமையுள்ள பேரரசனுக்கு நினைப்பூட்டியபின்பு, தானியேல் சொன்னதாவது: “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசி நாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குக் தெரிவித்திருக்கிறார்.” தொடர்ந்து தானியேல், ராஜா சொப்பனத்தில் கண்ட பெரிய சிலையைப் பற்றியும் அதன் அர்த்தத்தையும் ராஜாவுக்குச் சொன்னான். ராஜா வெகுவாக இதனால் கவரப்பட்டவனாய் அவன் அறிவித்ததாவது: “நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால் மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.” இவ்விதமாக தாமே ஒரே மெய் கடவுள் என்பதை யெகோவா நேபுகாத்நேச்சாருக்குக் கற்பித்தார்.—தானியேல் 2:26, 28, 47.
10 எபிரேயர்களின் கடவுளுடைய அறிவும் ஞானமும் நேபுகாத்நேச்சார் ராஜாவின் மனதை சந்தேகமின்றி வெகுவாக கவர்ந்திருந்த போதிலும் அவனுக்குக் கற்றுக்கொள்ள இன்னும் அதிகமிருந்தது. அவனுடைய மேட்டிமையில் அவன் ஒரு பொற்சிலையை பண்ணுவித்து தூரா சமவெளியில் நிறுத்தியிருந்தான். இந்தச் சிலை அறுபது முழ உயரமும் ஆறு முழ அகலமுமாயிருந்தது. இது வெளிப்படுத்துதல் 13:18-ல் குறிப்பிடப்பட்ட சாத்தானுடைய “மூர்க்க மிருகத்தின்” இலக்கமான 666-ஐ நமது நினைவுக்குக் கொண்டுவருகிறது. (ஒரு முழம் என்பது ஒன்றரை அடியாக [0.5மீ] இருப்பதால் சிலை சுமார் 90 அடி [27மீட்டர்] உயரமும் சுமார் 9 அடி [2.7 மீட்டர்] அகலமுமுடையதாக இருந்தது.) தன்னுடைய நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி ராஜா அழைத்தனுப்பி, கீதவாக்கியங்களின் சத்தம் கேட்கும் போது அனைவரும் தாழ விழுந்து சிலையை பணிந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான். பொறாமை கொண்டிருந்த சில கல்தேய உத்தியோகஸ்தர்கள் அங்கிருந்த மூன்று எபிரேயர்கள் அந்த சடங்கில் பங்குகொள்ளாதிருப்பதைக் கவனித்த போது அவர்களைப் பற்றி ராஜாவிடம் புகார் செய்தார்கள்.—தானியேல் 3:1, 2.
11 இது நேபுகாத்நேச்சாருக்கு மிகவும் வினைமையான ஒரு காரியமாகும். ஏனென்றால் ஒரு சமயம் தன்னைப்பற்றி “பேர் போன தெய்வங்களுக்குப் பக்தியை ஜனங்களில் ஏற்படுத்தியவன்” என்பதாக பெருமையடித்துக் கொண்டிருந்தான். இதன் காரணமாக நேபுகாத்நேச்சாரின் பேரரசருக்குரிய மாட்சிமையும் அவனுடைய மத உணர்ச்சிகளும் அவமதிக்கப்பட்டன. கோபத்திலும் ஆத்திரத்திலும் பிரதிபலிக்கிறவனாக கர்வம் கொண்ட பேரரசன் மூன்று எபிரேயர்களுக்குப் பின்வரும் இந்த எச்சரிக்கையோடு மற்றொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தான்: “பணிந்துக் கொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப் போகிற தேவன் யார்?” ஆம், அவர்களுடைய கடவுள் அவருடைய ஊழியர்களை அற்பமான பேரரசர்களின் கைக்கு நிச்சயமாகவே தப்புவிக்க வல்லவராயிருப்பதையும் எபிரேயர்களின் கடவுளைப் போல விடுவிக்கக் கூடிய வேறொரு கடவுள் இல்லை என்பதையும் நேபுகாத்நேச்சார் அறிந்துகொள்ள வேண்டியதாக இருந்தது.—தானியேல் 3:15.
விருட்சத்தைப் பற்றிய கனவு
12 அந்தப் பாடங்களைக் கற்றுக் கொள்வது உங்களை எவ்விதமாக பாதித்திருக்கும்? நேபுகாத்நேச்சாருக்கு அவனுடைய நிலையை உணர்ந்துகொள்வதற்கு இந்த மூன்று பாடங்களும் போதுமானதாக இல்லாததுபோல் தெரிகிறது. ஆகவே யெகோவா அவனுக்கு இன்னும் மற்றொரு பாடத்தை கற்பிக்க வேண்டியதாயிற்று. மறுபடியுமாக ஒரு சொப்பனம் இதில் உட்பட்டிருந்தது. மறுபடியுமாக பாபிலோனிய ஞானிகள் ஒருவராலும் அதற்கு அர்த்தஞ் சொல்ல முடியவில்லை. கடைசியாக தானியேல் அழைக்கப்பட்டான். ஏழு வருடங்கள் ராஜா “வெளியின் மிருகங்களோடே” சஞ்சரித்து அதற்குப் பின் அவனுக்கு அவனுடைய புத்தி திரும்பி வரும் என்ற சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்கு அவன் சொல்லக்கூடியவனாக இருந்தான்.—தானியேல் 4:1-37.
13 இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களிலிருந்து சொப்பனம் நேபுகாத்நேச்சாரின் அறிவை தெறிவுறச் செய்வதில் தோல்வியடைந்துவிட்டது என்பதை தெளிவாகக் காண்பிக்கிறது. இதன் காரணமாக சுமார் ஓராண்டுக்குப் பின்னர் ராஜா தன் அரண்மனை மேல் உலாவிக்கொண்டிருக்கும் போது அவன் பெருமையுடன் வீம்பாக பேசியதாவது: “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால் என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?” என்னே ஒரு இறுமாப்பு! அந்நேரமே, அவனுடைய ராஜ்யம் அவனை விட்டு நீங்கும் என்றும் “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைச் செய்கிறார்” என்பதை அறிந்துகொள்ளும் வரையாக ஏழு காலங்களுக்கு அவன் வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பான் என்றும் பரலோகத்திலிருந்து வந்த ஒரு குரல் மேட்டிமையுள்ள அரசனுக்குச் சொல்வது கேட்டது.—தானியேல் 4:30-32.
14 அந்த ஏழு காலங்கள் அல்லது ஆண்டுகளுக்கு நேபுகாத்நேச்சார் மிருகத்தைப் போல வாழ்ந்துவிட்ட பின்பு, யெகோவா அவனுடைய அறிவாற்றலை அவனுக்குத் திருப்பிக் கொடுக்க, அவன் ‘அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை’ என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. அதற்கும் மேலாக, கூடுதலாக தன்னுடைய பாடத்தைக் கற்றுக்கொண்டதை பாபிலோனிய அரசன் பின்வருமாறு சொல்வதன் மூலம் காண்பித்தான்: “ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும் அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களை”—ராஜா செய்திருந்ததுப் போல—“தாழ்த்த அவராலே ஆகும்.” மறுபடியும் மறுபடியுமாக அரசுரிமையைப் பற்றிய பிரச்னையை யெகோவா தீர்த்து வைத்த செயல் முறையைப்பற்றிய இப்படிப்பட்ட எல்லா அத்தாட்சியும், இந்தப் பதிவுகள் எவரோ ஒருவரின் கற்பனை செய்தியாக இல்லாமல் மெய் சரித்திரத்தைப் பதிவு செய்ய கடவுளால் ஏவப்பட்ட எழுத்தாளரின் புத்தகமாக இருப்பதற்குப் பலமான நுணுக்க விவரங்களடங்கிய அத்தாட்சியாக இருக்கிறதல்லவா?—தானியேல் 4:35, 37.
பெல்ஷாத்சார் சுவரின் மீது கையெழுத்தைக் காண்கிறான்
15 யெகோவாவால் கற்பிக்கப்பட வேண்டிய தேவையிலிருந்த மற்றொரு பேரரசன் பெல்ஷாத்சார். அவன் நபோனிடஸ் ராஜாவின் குமாரனும் உடன் ஆட்சியாளனுமாயிருந்தான். நபோனிடஸ் நேபுகாத்நேச்சாரின் வாரிசாக பின்தொடர்ந்தவன். பெரிய ஒரு விருந்தின்போது எருசலேமில் யெகோவாவின் ஆலயத்திலிருந்து அவனுடைய பாட்டன் எடுத்துவந்திருந்த பொற்பாத்திரங்களில், அவனும் அவனுடைய பிரபுக்களும் அவன் மனைவிகளும் அவன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிடும் அளவு பெல்ஷாத்சார் துணிச்சல் கொண்டான். ஆகவே “அவர்கள் திராட்சரசம் குடித்து பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.”—தானியேல் 5:3, 4.
16 பாபிலோனிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்குரிய கடவுளின் காலம் வந்துவிட்டிருந்தது. ஆகவே அவர் சுவரிலே, விநோதமான எழுத்துக்கள் தோன்றும்படி செய்தார். இந்த அற்புதம் வெகுவாக ராஜாவின் மனஉறுதியை குலைத்துவிட்டதால் அதற்கு அர்த்தஞ் சொல்லும்படியாக ஞானிகள் அனைவரையும் உடனடியாக அழைத்து அனுப்பினான். அவர்கள் ஒருவராலும் கூடாமற் போனது. அப்போது அவனுடைய தாய், நேபுகாத்நேச்சாருக்குச் சொப்பனங்களின் அர்த்தஞ் சொல்லிய தானியேல் கையெழுத்துக்கு அர்த்தஞ் சொல்லக்கூடும் என்பதை அவனுக்கு நினைவுபடுத்தினாள். (தானியேல் 5:10–12) அவன் அழைத்துவரப்பட்டு அவனால் இதைச் செய்யக்கூடுமா என்று கேட்கப்பட்டபோது மனுஷருடைய ராஜ்யத்தில் உன்னதமானவர் ஆளுகை செய்கிறார் என்பதை அகந்தையுள்ளவனாயிருந்த அவனுடைய பாட்டன் தெரிந்துகொள்ளும் பொருட்டு கடவுள் அவனை எவ்விதமாக தாழ்த்தினார் என்பதை அரசனுக்கு தானியேல் நினைப்பூட்டினான்.—தானியேல் 5:20, 21.
17 தானியேல் மேலுமாக பெல்ஷாத்சாருக்குச் சொன்னதாவது: “தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தவில்லை.” (தானியேல் 5:23) பாபிலோனிய அரசனின் ராஜ்யம் முடிவுக்கு வந்தது என்பதையும் அவன் தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டான் என்பதையும் அவனுடைய ராஜ்யம் மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்படப் போவதையும் கையெழுத்து முன்னறிவித்தது. அதே இரவில் தானே யெகோவா அந்த அகந்தையுள்ள அரசனுக்கு மிகவும் தேவைப்பட்ட இந்தப் பாடத்தைக் கற்பித்தப் பின்பு கல்தேயரின் அரசன் கொலை செய்யப்பட்டான்.—தானியேல் 4:23.
18 பெருமையுள்ள பேரரசர்கள் நேபுகாத்நேச்சாருக்கும் பெல்ஷாத்சாருக்கும் யெகோவா அவருடைய அரசுரிமையையும் இரட்சிக்கும் வல்லமையையும் குறித்து பாடங்களைக் கற்பித்தது போலவே அர்மெகதோனில் கடவுள், தாமே உன்னதமான அரசரும் சர்வ வல்லமையுள்ள சர்வலோக பேரரசராகவும் இருப்பதை பூமியின் அரசர்களை அறிந்துகொள்ளச் செய்வார். உங்கள் வாழ்க்கை அப்பொழுது பாதிக்கப்படும். எவ்விதமாக? ஏனென்றால் அந்த சமயத்தில், யெகோவா அக்கினிச்சூளையிலிருந்து எபிரேயர்களை விடுவித்தது போலவே தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களைகூட விடுவிப்பார்.—தானியேல் 3:26-30.
யெகோவாவின் இரட்சிக்கும் வல்லமையைக் குறித்து தரியு கற்றுக் கொள்கிறான்
19 தானியேல் 6-ம் அதிகாரம், யெகோவா பேரரசனாகிய தரியுவுக்கு கடவுளுடைய இரட்சிக்கும் வல்லமையைக் குறித்து ஒரு பாடத்தைக் கற்பித்த மற்றொரு சமயத்தைப் பற்றி பேசுகிறது. அந்த பேரரசனின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு சதி ஆலோசனையின் மூலமாக, தானியேல், ராஜாவினால் சிங்க கெபியினுள் தூக்கி எறியப்பட்டிருந்தான். இவன் மெய்க் கடவுளுக்கு எதிராக தன்னை மேட்டிமையாக உயர்த்திக்கொண்ட ஒருவனல்ல. தரியு தானியேலிடம், அவனுடைய கடவுள் அவனை விடுவிப்பார் என்று உறுதியாககூறிய போதிலும், இதை அவன் முழுமையாக உண்மையில் நம்பாதிருந்தது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. மற்றபடி இராமுழுவதும் நித்திரைப் பண்ணாமலும் கவலையோடுமிருந்து காலமே கிழக்கு வெளுக்கும் போது சிங்கங்களின் கெபிக்குத் தீவிரித்து ஏன் போகப் போகிறான்? அப்போது அவன் கூப்பிட்டு சொன்னதாவது: “தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?”—தானியேல் 6:18-20.
20 ஆம், கடவுள் தானியேலை பாதுகாக்கக்கூடியவராக இருந்தார். தரியு ராஜா அவ்வளவு மகிழ்ச்சியடைந்தவனாய் பின்வரும் இந்தக் கட்டளையை பிறப்பித்தான்: “என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்பட வேண்டுமென்று என்னாலே தீர்மானம் பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; . . . தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்.”—தானியேல் 6:26, 27.
21 யெகோவா வைராக்கியமுள்ளவராக, ஆம், தம்முடைய நாமத்துக்குத் தனிப்பட்ட பக்தியை விரும்புகிறதன் காரணமாக தாமே சர்வ வல்லமையுள்ளவர், சர்வலோக பேரரசர், அகந்தையுள்ள அரசர்களைத் தாழ்த்தி தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை விடுவிக்கிறவர் என்பதை இந்த உலகின் வல்லமை வாய்ந்த பேரரசர்களுக்கு யெகோவா எவ்விதமாக கற்பித்தார் என்பது பற்றிய மனதில் பதியத்தக்க உதாரணங்களை உண்மையில் தானியேல் புத்தகத்தின் முதல் ஆறு அதிகாரங்கள் நமக்குத் தருகின்றன. இந்தப் பதிவுகள், யெகோவாவிடம் ஆரோக்கியமான பயத்தையும் யெகோவாவின் சர்வ வல்லமைக்கும் அரசுரிமைக்கும் மரியாதையை நம்மில் ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் ஆவியால் ஏவப்பட்ட இந்தப் பதிவு விசுவாசத்தை வெகுவாக பலப்படுத்துகிறது. ஏனென்றால் இதைத் தொடர்ந்து வரும் கட்டுரை தெளிவாக காண்பிக்கப் போகிற விதமாக, மிகுதியான விசுவாசத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தின யெகோவா தேவனின் ஊழியர்களைப்பற்றிய மிகச் சிறந்த முன்மாதிரிகளைப் பற்றி அவை நமக்குத் தெரிவிக்கின்றன. (w88 12⁄1)
[அடிக்குறிப்புகள்]
a 1986, அக்டோபர் 1, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 3-7 பார்க்கவும்.
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ உலக அரசர்களுக்கு என்ன பாடத்தைக் கற்பிப்பது யெகோவாவுக்கு அவசியமாக இருந்திருக்கிறது?
◻ தானியேல் புத்தகத்தின் நம்பத்தக்கத் தன்மையைப்பற்றி என்ன சொல்லப்படலாம்?
◻ நேபுகாத்நேச்சார் ராஜாவை மேலுமாக தாழ்த்திய அந்தப் பாடம் என்ன?
◻ யெகோவா பேரரசர்களுக்குப் பாடங்களைக் கற்பித்தது நம்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்?
[கேள்விகள்]
1. யெகோவாவின் எந்த தனிப்பண்புக்கு எலிகூ கவனத்தைத் திருப்புகிறான்?
2. 3. (எ) யெகோவா மனிதர்களுக்குக் கற்பிக்க வேண்டியதாகக் கண்ட பாடங்களில் ஒன்று என்ன? (பி) இந்தப் பாடத்தை யெகோவா கற்பிக்க வேண்டியதாயிருந்த மோசேயின் காலத்திலிருந்த ஓர் அரசன் யார்? எதன் மூலமாக அவர் அதைச்செய்தார்? (சி) இந்தப் பாடத்தை மனிதர்களுக்குக் கற்பிப்பது தம்முடைய நோக்கமாயிருப்பதைக் கடவுள் எத்தனை அடிக்கடி தம்முடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறார்?
4. தானியேலின் காலத்தில் யெகோவாவால் கற்பிக்கப்பட்ட மூன்று அரசர்கள் யார்? எதன் மூலமாக அவர் கற்பித்தார்?
5. தானியேல் புத்தகத்தின் நம்பத்தக்கதன்மையை சந்தேகிப்பவர்களை எந்த அத்தாட்சியைக் கொண்டு மறுத்து வாதிட முடியும்?
6. பாபிலோனிய ராஜாவின் பெருமையை எது அதிகரித்திருக்கக்கூடும்? தன்னுடைய எழுத்துக்களில் தன்னைப் பற்றி அவன் சொல்வது என்ன?
7. தானியேல் அதிகாரம் ஒன்றில் விவரிக்கப்பட்டுள்ள என்ன அனுபவம் நேபுகாத்நேச்சாருக்கு எபிரேயர்களின் கடவுளை மதிக்க கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்?
8. பாபிலோனிய ஞானிகள், எந்தவிதமான விசேஷமான அறிவுமில்லாதவர்கள் என்பதை யெகோவா எதன் மூலமாக அம்பலப்படுத்தினார்?
9. (எ) நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்துக்கு யாரால் மட்டுமே அர்த்தஞ் சொல்ல முடிந்தது? அதற்கு என்ன அர்த்தத்தை அவன் கொடுத்தான்? (பி)இதன் விளைவாக ராஜா என்ன முடிவுக்கு வந்தான்?
10, 11. (எ) அவனுடைய மகா மேட்டிமையில் நேபுகாத்நேச்சார் ராஜா என்ன செய்தான்? அதைத் தொடர்ந்து என்ன கட்டளையிட்டான்? (பி) ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்ததன் மூலம் மூன்று எபிரேயர்கள் என்ன பிரச்னையை எழுப்பினார்கள்? என்ன விளைவுகளோடு?
12, 13. (எ) தானியேல், நேபுகாத்நேச்சாருக்கு விருட்சம் பற்றிய அவனுடைய சொப்பனத்தின் சம்பந்தமாக கொடுத்த அர்த்தம் என்ன? (பி) சொப்பனத்தின் அர்த்தம் நேபுகாத்நேச்சாரின் அறிவை தெளிவுறச் செய்யவில்லை என்பதை அவன் எப்படிக் காட்டினான்?
14. விருட்சம் பற்றிய சொப்பனம் எவ்விதமாக நிறைவேறியது? நேபுகாத்நேச்சாரின் மீது என்ன பாதிப்பை இது கொண்டிருந்தது?
15. பெல்ஷாத்சார் எவ்விதமாக மெய்க் கடவுளாகிய யெகோவாவை அவமதித்தான்?
16, 17. (எ) எதன் மூலமாக யெகோவா பெல்ஷாத்சாரில் பயத்தை புகட்டினார்? (பி) சுவரின் எழுத்துக்களின் சம்பந்தமாக தானியேல் கொடுத்த அர்த்தம் என்ன? அது எவ்விதமாக உண்மையென நிரூபித்தது?
18. யெகோவா எதன் மூலமாக இன்று தம்முடைய அரசுரிமையையும் இரட்சிக்கும் வல்லமையையும் பற்றி அதே போன்ற பாடங்களை உலக அரசர்களுக்குக் கற்பிப்பார்?
19, 20. தானியேலின் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவம் யெகோவாவின் இரட்சிக்கும் வல்லமையைப் பற்றி தரியுவுக்குக் கற்பித்தது?
21. தானியேல் புத்தகத்தின் முதல் ஆறு அதிகாரங்கள், எதைப்பற்றிய மனதில் பதியத்தக்க உதாரணங்களைக் கொடுக்கின்றன?