யெகோவா—காலங்கள் மற்றும் நேரங்களின் கடவுள்
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு.”—பிரசங்கி 3:1.
1, 2. (எ) என்ன விதங்களில் மனிதர்கள் நேரத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாயிருக்கிறார்கள்? (பி) நாம் நேரத்தை அறிந்துக்கொள்ள நமக்கு எந்த வழியும் இல்லாதிருந்தால், இன்று வாழ்க்கைக்கு பெரும்பாலும் என்ன நேரிடக்கூடும்?
அன்றாட வாழ்க்கையில் நாம் நேரத்தைக் குறித்து மிகவும் உண்ர்வுள்ளவர்களாக இருக்கிறோம். உதாரணமாக, மாலை நேரம் என்பதை கடிகாரம் காட்டும்போது, சூரியன் மறைவதையும் வானம் கருமையாவதையும் நாம் பார்த்து இரவு நேரம் நெருங்கிவிட்டது என்பதை தெரிந்துகொள்கிறோம். மேலுமாக பூமியின் சில பகுதிகளில், இலையுதிர்காலத்தின் பிற்பகுதி என்பதை நாட்காட்டி காட்டும்போது, வாரந்தோறும் வெப்பம் குறைவதையும் மரங்களிலிருந்து இலைகள் உதிர்வதையும் நாம் பார்த்து, குளிர்காலம் அருகாமையில் இருக்கிறது என்பதை நாம் உறுதி செய்துகொள்கிறோம். என்ன காலம் அல்லது நேரம் என்பதற்குரிய அடையாளங்கள் கடிகாரங்களும் நாட்காட்டிகளும் நமக்குச் சொல்வதை உறுதிசெய்கின்றன.
2 காலங்களையும் நேரங்களையும் வேறுபடுத்தி காண இயலாமல் இருப்பது, இன்று வாழ்க்கையை பெரும்பாலும் குழப்பத்துக்குள்ளாக்கிவிடும். உதாரணமாக கால அட்டவணையை தயாரிக்கும் பொருட்டு, நேரத்தை அறிந்துகொள்ள எந்த வழியும் இல்லாதிருந்தால், நூற்றுக்கணக்கான விமானங்கள் அதிக விமான போக்குவரத்துடைய ஒரு விமான நிலையத்தில் இறங்க முயலுவதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்! நேரத்தை அறிந்துக்கொள்ள எந்த வழியும் இல்லாதிருந்தால், லட்சக்கணக்கான ஆட்கள் கால அட்டவணையின்படி வேலைக்குச் செல்ல முயலுவதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்!
3. காலங்களையும் நேரங்களையும் ஆரம்பித்து வைத்தவர் யார்?
3 காலங்களையும் நேரங்களையும் ஆரம்பித்து வைத்தவர் யார்? சர்வலோகத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனே. ஆதியாகமம் 1:14 சொல்லுகிறது: “பின்பு தேவன்: ‘பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்கத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சூடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது’ என்றார்.”
அதிக முக்கியமான காலங்களும் நேரங்களும்
4-6. (எ) மனித நடவடிக்கைகளுக்கு காலங்கள் அல்லது நேரங்களை தெரிந்துக்கொள்வதைக் காட்டிலும் எது அதிக முக்கியமாக இருக்கிறது? ஏன்? (பி) என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
4 காலத்தை அல்லது நேரத்தை அறிந்து கொள்வது மனித நடவடிக்கைகளுக்கு முக்கியமாக இருந்தபோதிலும், இன்னும் அதிக முக்கியமான ஏதோ ஒன்று இருக்கிறது: கடவுளுடைய நோக்குநிலையில் இது என்ன காலமாக அல்லது நேரமாக இருக்கிறது? பிரசங்கி 3:1 சொல்லுகிறது: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” மனித நோக்கு நிலையிலிருந்து இது உண்மையாக இருந்தாலும், கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து அது இன்னும் அதிகமாக அவ்விதமாக இருக்கிறது. அவர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு திட்டவட்டமான காலங்களையும் நேரங்களையும் உடையவராக இருக்கிறார். இந்த உண்மைக்கு இசைவாக நம்முடைய வாழ்க்கையை வாழவில்லையென்றால் கடிகாரங்கள் அல்லது நாட்காட்டிகளுக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை சீராக அமைத்துக் கொண்டாலும் முடிவில் அது வீணானதாகவே இருக்கும்.
5 இது ஏன் இப்படி இருக்கிறது? ஏனென்றால் யெகோவா பூமிக்கும் அதன் மீதுள்ள மனிதர்களுக்கும் ஒரு நோக்கத்தையுடையவராக இருக்கிறார்; மற்றபடி அவர் அவற்றை சிருஷ்டித்திருக்க மாட்டார். அந்த நோக்கத்தோடு நம்முடைய வாழ்க்கையை நாம் ஒத்திசைவாக்கவில்லையென்றால் நாம் அதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டோம். அவருடைய நோக்கம், கால அட்டவணையின்படி சரியாக நிறைவேற்றப்படுவது நிச்சயமாகும். அவர் இவ்விதமாக அறிவிக்கிறார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்பிகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.
6 ஆகவே நாம் இவ்விதமாக கேட்பது அவசியமாயிருக்கிறது. யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் இது என்ன காலமாக அல்லது நேரமாக இருக்கிறது? அவருடைய கால அட்டவணையில் இவ்வுலகத்தின் ஜாதிகளும் ஜனங்களும் எவ்விதமாக பொருந்துகிறார்கள்? ஆம் நீங்கள் எவ்விதமாக பொருந்துகிறீர்கள்? கடவுளுடைய நோக்கத்துக்கும் கால அட்டவணைக்கும் இசைவாக நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை திட்டமிட்டிருக்கிறீர்களா?
இந்த உலகம் கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதா?
7. மதப்பற்றுள்ள அநேக ஆட்கள் கொண்டிருக்கும் கருத்து என்ன? ஆனால் அது ஏன் அர்த்தமற்றதாக இருக்கிறது?
7 அநேக ஆட்கள், அவர்கள் கடவுளை நம்புவதாகச் சொல்வதன் காரணமாக கடவுளுடைய நோக்கத்தில் தாங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த நோக்கம் என்ன என்பதை கடவுளுடைய சொந்த வார்த்தையிலிருந்து உங்களுக்கு காண்பிக்கும்படியாக நீங்கள் அவர்களைக் கேட்கும்போது அதை அவர்களால் செய்ய முடியவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த வழியில் செல்லுகிறார்கள். ஆனாலும்கூட எவ்விதமாவது கடவுள் தங்களுக்கு உதவியாக இருப்பார் என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அநேக உலகத் தலைவர்களும்கூட நூற்றாண்டுகளினூடே இதேபோன்ற மனநிலையை காண்பித்திருக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் என்னவாக இருப்பினும், கடவுள் அவர்களின் மூலமாக தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி வருவதாக அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களும்கூட அந்த நோக்கம் என்ன என்பதை சொல்ல இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
8. இந்த உலகின் ஆட்சியாளர்களையும் ஜனங்களையும் சிருஷ்டிகர் ஆதரித்துக் கொண்ருக்கக்கூடும் என்று நினைப்பது ஏன் நியாயமற்றதாக இருக்கிறது?
8 ஒரு மதத்தைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் மற்றும் ஜனங்கள் உட்பட, இந்த உலகத்தை கடவுள் ஆதரிக்கிறார் என்பதை பைபிள் காண்பிக்கிறதா? இதை சிந்தித்துப் பாருங்கள்: கடவுளுடைய வல்லமை பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு பால்மண்டலத்திலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்ட, கோடிக்கணக்கான பால் மண்டலங்களோடும்கூட அவர் இந்த அகிலாண்டத்தை சிருஷ்டித்தார். (சங்கீதம் 147:4) மேலுமாக கடவுளுக்கு எல்லையற்ற ஞானம் இருக்கிறது. கடவுள், அவருடைய வல்லமையோடும், ஞானத்தோடும் தேசங்களை ஆதரித்துக் கொண்டிருப்பாரேயானால், இத்தனை அநேக நூற்றாண்டுகளாக, அவர்கள் இத்தனை வன்முறையையும் யுத்தங்களையும் அநீதிகளையும் கஷ்டங்களையும் அனுபவித்திருப்பார்களா? ஒரு தேசத்து தேசீயத் தலைவர்களும் அவர்களுடைய லட்சக்கணக்கான ஆட்களும் யுத்தத்துக்குச் சென்று, தாங்களும்கூட கடவுளால் வழிநடத்தப்படுவதாக உரிமைப் பாராட்டிக்கொள்ளும் மற்ற தேசீயத் தலைவர்களையும் லட்சக்கணக்கான அவர்களுடைய ஜனங்களையும் கொல்லும்படியாக கடவுள் கட்டளையிடுவாரா? அது நியாயமாக இருக்கிறதா?
9. அவருடைய உண்மையுள்ள ஊழியர்களின் ஆவிக்குரிய நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதாக கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது?
9 பைபிள் 1 கொரிந்தியர் 14:33-ல் “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல் சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்” என்று சொல்லுகிறது. மேலுமாக உண்மையில் தம்முடைய ஜனமாக இருப்பவர்களிடம் யெகோவா இவ்விதமாகச் சொல்லுகிறார். “நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.” (1 கொரிந்தியர் 1:10) கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் எவராவது இந்த தராதரத்திற்கிசைவாக இல்லையென்றால் அப்பொழுது என்ன? ரோமர் 16:17 இவ்விதமாக புத்திமதி கூறுகிறது: “நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளை . . . உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து அவர்களை விட்டு விலக வேண்டும்.” ஆகவே கடவுள் இந்த தேசங்களையும் மதத்தலைவர்களையும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களையும் ஆதரிக்கவில்லை என்பதற்கு தேசீய பிரிவினைகளும் மத வேறுபாடுகளும் சண்டைகளும் தெளிவான அத்தாட்சிகளாக இருக்கின்றன.
10, 11. இந்த உலகத்தின் ஆட்சியாளர்களையும் ஜனங்களையும் ஆதரிப்பது யார் என்பதை என்ன வேதவசனங்கள் காண்பிக்கின்றன?
10 அப்படியென்றால் அவர்களை ஆதரிப்பது யார்? ஒன்று யோவான் அதிகாரம் 3 வசனங்கள் 10-12 இவ்விதமாகச் சொல்லுகிறது: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்.” மேலுமாக, ஒன்று யோவான் அதிகாரம் 4 வசனம் 20 இவ்விதமாகச் சொல்லுகிறது: “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும் தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்?” ஆகவே யோவான் 13:35-ல் இயேசு இந்த விதியைக் கொடுத்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.”
11 கடவுளுடைய மெய்யான ஊழியர்கள் மத்தியிலிருக்க வேண்டிய அன்புக்கும் ஐக்கியத்துக்கும், பல நூற்றாண்டுகளாக தலைவர்களும் பொதுவில் ஜனங்களும் பின்பற்றி வந்திருக்கும் போக்குக்குமிடையே ஏதாவது ஒற்றுமையை உங்களால் காண முடிகிறதா? நம்முடைய நூற்றாண்டில் மட்டுமே, மதப்பற்றுள்ள ஆட்கள், மற்ற மதப்பற்றுள்ள ஆட்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறார்கள். அநேக சமயங்களில், ஒருவரையொருவர் கொலை செய்து கொள்பவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். கடவுள் அவர்களை ஆதரிக்கவில்லை என்பதற்கு இது நிச்சயமான அத்தாட்சியாக இருக்கிறது. மாறாக, கடவுளுடைய வார்த்தை காண்பிக்கிறபடியே அவர்களை ஆதரிப்பவன் பிசாசாகிய சாத்தானேயன்றி வேறொருவனுமில்லை, அதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய யோவான் இவ்விதமாகச் சொல்ல முடிந்தது: “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 5:19) ஆம், சாத்தான் “இப்பிரபஞ்சத்தின் தேவனா”யிருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4) இவ்வுலகத்தின் தலைவர்கள் மற்றும் ஜனங்களின் பின்னாலிருக்கும் சக்தி அவனே. இவர்களுடையச் செயல்கள் இந்த மனிதர்கள் தேவனால் உண்டானவர்கள் அல்ல என்பதை காண்பிக்கின்றன.
சாந்த குணமுள்ளவர்களுக்கு யெகோவாவின் நோக்கம்
12, 13. இந்த பூமிக்கும் மனிதர்களுக்குமான கடவுளுடைய நோக்கம் என்னவாக இருக்கிறது?
12 என்றபோதிலும், யெகோவா மனிதர்களை சிருஷ்டித்தபோது, முழு பூமியும் ஏதேன் தோட்டத்தைப்போல பரதீஸாக மாறி பரிபூரணமான, ஐக்கியப்பட்ட சந்தோஷமுள்ள ஆட்களால் குடியிருக்கப்பட வேண்டும் என்பதாக நோக்கங் கொண்டிருந்தார். (ஆதியாகமம் 1:26-28; 2:15; ஏசாயா 45:18) கலகம் செய்த மனிதர்களாலும் பொல்லாத ஆவி சிருஷ்டிகளாலும் அந்த நோக்கம் அழிந்துவிடவில்லை. மேலும் யெகோவா காலங்கள் மற்றும் நேரங்களின் கடவுளாக இருப்பதன் காரணமாக, அவருடைய நோக்கம் அதற்காக அவர் குறித்திருக்கும் நியமிக்கப்பட்ட காலத்தில் நிறைவேறும். வரையறுக்கப்பட்ட நேரத்துக்கும் அப்பால், தம்மீது சார்ந்திராத மனித ஆட்சி தம்முடைய நோக்கத்துக்கு எதிராக செயல்படுவதை அவர் அனுமதிக்கமாட்டார்.
13 பூமிக்கான யெகோவாவின் நோக்கத்தில் இயேசுவுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவரில் ஓரளவு விசுவாசத்தைக் காண்பித்த குற்றவாளியிடம் அவர் இவ்விதமாகச் சொன்னார்: நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.” (லூக்கா 23:43) வரப்போகும் பூமிக்குரிய பரதீஸைக் குறித்து அவ்வாறு சொன்னார். முன்னொரு சமயம், இயேசு இவ்விதமாகச் சொல்லியிருந்தார்: “சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.” (மத்தேயு 5:5) இங்கே இயேசு சங்கீதம் 37:11-லுள்ள கருத்தை குறிப்பிட்டு பேசியிருக்க வேண்டும்: “சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”
14. என்ன விதமான ஆட்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்?
14 பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளப்போகும் இவர்கள் யார்? சங்கீதம் 37:34 சொல்லுகிறது: “நீ யெகோவாவுக்குக் காத்திருந்து அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார், துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய். மேலும் வசனங்கள் 37 மற்றும் 38 இவ்விதமாகச் சொல்லுகிறது: “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டு போவதே துன்மார்க்கரின் முடிவு” ஆகவே பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளப்போகும் ஆட்கள் யெகோவாவை அறிந்துகொண்டு, அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதன் காரணமாக உத்தமர்களாகவும் செம்மையானவர்களாகவும் அவரால் கருதப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். 1 யோவான் 2:17 அறிவிக்கிற விதமாகவே: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”
15. உலகின் பயனுள்ள மிகப் பெரிய மாற்றங்கள் நடந்தேறுவதற்கு என்ன இன்றியமையாத ஒரு காரியம் சம்பவிக்க வேண்டும்?
15 ஆனால் அந்த மாற்றங்கள் நடந்தேறுவதற்கு இப்பொழுதுள்ள நிலைமைகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்படுவது அவசியமாக இருக்கும். ஒரு காரியமானது, பூமியில் தற்போதுள்ள எல்லா ஆட்சிகளும் நீக்கப்படுவதை அது அர்த்தப்படுத்த வேண்டும். ஏனென்றால் மனித ஆட்சி ஒருபோதும் விரும்பத்தக்க நிலைமைகளை கொண்டுவந்ததில்லை. ஆனால் பூமியை அசைவிக்கும் இந்த மாற்றங்களைச் செய்ய யெகோவா திறமையுள்ளவராகவே இருக்கிறார். உதாரணமாக பைபிள் சொல்லுகிறது: “காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர் அவரே; அவரே ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறார்.”—தானியேல் 2:21, தி.மொ.
எதிர்ப்பவர்களை அகற்றுவது
16, 17. (எ) யெகோவா தம்முடைய நோக்கத்தை எதிர்த்த பார்வோனை எவ்விதமாக கையாண்டார்? (பி) யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை எவ்விதமாக உறுதி செய்யப்பட்டது?
16 யெகோவா வல்லமை வாய்ந்த அரசர்களுக்கும் அரச குலங்களுக்கும் விசேஷமாக அவருடைய நோக்கங்களில் குறுக்கிட முயற்சித்திருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் என்ன செய்திருக்கிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்களும் அவர்களுடைய சாம்ராஜ்யங்களும் காற்றில் புழுதியைப் போல முறிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, கடவுளுடைய ஜனங்களை அடிமைகளாக வைத்துக் கொண்டிருந்த எகிப்தின் பார்வோன் இருந்தான். ஆனால் யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு ஒரு நோக்கத்தைக் கொண்டவராக இருந்தார். அவர்களை அனுப்பிவிடும்படியாக பார்வோனிடம் சொல்ல அவர் மோசேயை அனுப்பினார். அதற்கு பார்வோன் அகந்தையோடு இவ்விதமாகச் சொன்னான்: “நான் யெகோவாவின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?” மேலுமாக அவன்: “நான் யெகோவாவை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை” என்றான்.—யாத்திராகமம் 5:2.
17 பார்வோனுக்கு அவனுடைய மனதை மாற்றிக்கொள்ள யெகோவா அநேக சந்தர்ப்பங்களைக் கொடுத்தார். என்றபோதிலும் ஒவ்வொரு சமயமும் யாத்திராகமம் 11:10 சொல்லுகிற விதமாகவே, பார்வோன் ‘இருதயத்தைக் கடினப்படுத்திக்’ கொண்டான். ஆனால் யெகோவாவிடம் எதிர்த்து வெல்ல முடியாத வல்லமை இருக்கிறது.அவர் குறித்திருந்த அந்த காலம் வந்தபோது அவர் பார்வோனையும் அவனுடைய படைகளையும் சிவந்த சமுத்திரத்தில் மூழ்க்கடித்து மாளச் செய்தார். யாத்திராகமம் 14:28 சொல்லுகிறது: “அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.” மறுபட்சத்தில், யெகோவாவின் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். மேலுமாக இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, யெகோவா உண்மையுள்ள ஆபிரகாமிடம் சொல்லியிருந்த அந்த 400 வருட காலத்தின் முடிவிலே, யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை முன்னறிவித்திருந்தபடியே சரியான சமயத்தில் நடந்தேறியது.
18. பாபிலோனின் நேபுகாத்நேச்சாரை யெகோவா என்ன செய்தார்? ஏன்?
18 பின்னர் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இருந்தான். அவன் தன்னை ஒரு கடவுளைப்போல கருதி, தன்னுடைய வல்லமையையும் சாதனைகளையும் குறித்து பெருமையாக பேசத் தொடங்கினான். ஆனால் தானியேல் 4:31, “இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று என்று விளம்பினது” என்று குறிப்பிடுகிறது. வசனம் 32 சொல்வது போலவே, “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைச் செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை அறிந்துகொள்ளுமட்டும்” அவன் வெளியின் மிருகங்களைப் போல தாழ்த்தப்படுவான் என்பதாக யெகோவா அவனிடம் சொன்னார். யெகோவா அதற்காக குறித்திருந்த சரியான சமயத்தில் அவ்விதமாகவே நடந்தேறியது.
19. யெகோவாவின் நியாயத்தீர்ப்பு பாபிலோனுக்கும் அதனுடைய அரசன் பெல்ஷாத்சாருக்கும் எதிராக வர காரணம் என்ன?
19 பாபிலோனில் ஆட்சி செய்த கடைசி அரசன் பெல்ஷாத்சாராக இருந்தான். அந்த மிகப் பெரிய பேரரசு வீழ்ச்சியடைவதற்கு அதுவே யெகோவாவின் சமயமாக இருந்தது. ஏன்? ஏனென்றால் பாபிலோனியர்கள், யெகோவாவின் ஜனங்களை கைதிகளாக வைத்துக்கொண்டு யெகோவாவை தூஷித்தார்கள். பெல்ஷாத்சார் தன் பிரபுக்களில் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்தான் என்பதாக தானியேல் அதிகாரம் 4 குறிப்பிடுகிறது. பின்பு பெல்ஷாத்சார், “தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார், [யெகோவாவின்] எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களை . . . கொண்டு வரும்படி கட்டளையிட்டான், . . . அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.” (தானியேல் 5:2, 3) அடுத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள்: “அவர்கள் திராட்ச ரசம் குடித்து, பொன்னும், வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.” (தானியேல் 5:4) யெகோவாவின் வணக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த பாத்திரங்களில் குடிப்பதன் மூலம் அவர்கள் யெகோவாவை இகழ்ந்து அவரை தூஷித்தார்கள். அவர்களுடைய பொய் கடவுட்களை வணங்குவதன் மூலம் அவர்கள் சாத்தானை வணங்கினார்கள்.
20, 21. தானியேல் பெல்ஷாத்சாருக்கு அறிவித்த செய்தி யாது? அது எவ்விதமாக நிறைவேறியது?
20 என்றபோதிலும் அந்த சமயத்தில் எதிர்பாரா அதிர்ச்சியை தந்த ஒரு சம்பவம் நடந்தது. மனுஷ கைவிரல்கள் தோன்றி, அரமனையின் சுவரிலே எழுதுவது காணப்பட்டது. ராஜாவுக்கு அது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்ததால், “ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.” (தானியேல் 5:6) பெல்ஷாத்சாரின் மத ஆலோசகர்கள் ஒருவராலும் எழுத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே அர்த்தத்தை தெரிவிக்கும் பொருட்டு, யெகோவாவின் ஊழியனாகிய தானியேல் அழைக்கப்பட்டான். செய்தி யெகோவாவிடமிருந்து வந்திருப்பதாக தானியேல் ராஜாவுக்கு தெரிவித்தான். அது இதுவே: “தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார். . . . நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய் . . . உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது.—தானியேல் 5:26-28.
21 அன்று இராத்திரியிலே கவனமில்லாமல் திறந்து வைக்கப்பட்டிருந்த கதவுகளின் வழியாக மேதிய பெர்சிய படைகள் பட்டணத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். தானியேல் 5:30 முடிவாக குறிப்பிடுகிற விதமாகவே, “அன்று இராத்திரியிலே பெல்ஷாத்சார் . . . கொலை செய்யப்பட்டான்.” பாபிலோனின் வீழ்ச்சி, யெகோவாவின் ஜனங்கள் அவர்களுடைய சிறைப்பட்ட நிலையின் ஆரம்பத்திலிருந்து சரியாக 70 வருடங்கள் முடிந்தபின்பு, அவர்களுடைய சொந்த தேசத்துக்கு திரும்பி வர அனுமதித்தது. எரேமியா 29:10-ல் வெளிப்படுத்தப்பட்டபடி, அது யெகோவாவின் கால அட்டவணையின்படி துல்லிபமாக இருந்தது.
22, 23. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களை எதிர்த்த ஏரோது ராஜா அகிரிப்பா I எவ்விதமாக யெகோவா கையாண்டார்?
22 முதல் நூற்றாண்டில், ஏரோது ராஜா அகிரிப்பா I ரோம பேரசின் ஒரு பகுதியான பலஸ்தீனாவில் கடைசி அரசனாக இருந்தான். ஏரோது அப்போஸ்தலனாகிய பேதுருவை கைது செய்யச்செய்து, மற்ற கிறிஸ்தவர்களையும் துன்புறுத்தினான். அப்போஸ்தலனாகிய யாக்கோபை கொல்லவும்கூட செய்தான். (அப்போஸ்தலர் 12:1, 2) ஏரோது, ரோம அரங்கில் கொடிய போர்களுக்கும், மற்ற புறமத வேடிக்கை காட்சிகளுக்கும்கூட ஏற்பாடு செய்தவன். இவை அனைத்துமே, அவன் கடவுளை வணங்குவதாக உரிமைப் பாராட்டிக் கொண்டதை பொய்யென நிரூபித்தது.
23 ஆனால் இந்த எதிராளியை தண்டிப்பதற்கு யெகோவாவின் உரிய நேரம் வந்தது. அப்போஸ்தலர் 12:21-23 நமக்கு இவ்விதமாகச் சொல்லுகிறது: “குறித்த நாளிலே ஏரோது ராஜ வஸ்திரம் தரித்துக்கொண்டு சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, இது தேவ சத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? பைபிள் சொல்லுகிறது: “அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுபுழுத்து இறந்தான்.” இது தானியேல் 2:21-ல் குறிப்பிட்டுள்ளபடி, “யெகோவா ராஜாக்களை தள்ளியதற்கு” மற்றொரு உதாரணமாக இருக்கிறது.
24. இத்தகைய சரித்திரப் பூர்வமான உண்மைகள் எதை உறுதி செய்கின்றன?
24 சரித்திரப்பூர்வமான இந்த சம்பவங்கள், யெகோவா தம்முடைய நோக்கங்களுக்கு காலங்களையும் சமயங்களையும் கொண்டிருக்கிறார் என்பதை உறுதி செய்கின்றன. “நீதிவாசமாயிருக்கும்” பரதீஸாக இந்த பூமியை மாற்ற வேண்டும் என்ற தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவருக்கு நிச்சயமாகவே திறமையும் வல்லமையும் இருக்கிறது என்பதையும்கூட அவை காண்பிக்கின்றன.—2 பேதுரு 3:13. (w86 4/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவாவின் காலங்களையும் நேரங்களையும் அறிந்துகொள்வது ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
◻ கடவுள் ஏன் இந்த உலகத்தின் ஆட்சியாளர்களையும் ஜனங்களையும் ஆதரித்துக் கொண்டில்லை?
◻ பூமியின் மீது வர இருக்கும் பரதீஸை என்ன விதமான ஆட்கள் சுதந்தரித்துக் கொள்வார்கள்?
◻ யெகோவா தம்மை எதிர்க்கும் அரசர்களை வீழ்த்துவதற்கு தமக்கிருக்கும் திறமையை எவ்விதமாக காண்பித்திருக்கிறார்?