அதிகாரம் எட்டு
சிங்கங்களிடமிருந்து காப்பாற்றப்படுதல்!
பாபிலோன் வீழ்ந்துவிட்டது! நூற்றாண்டு காலமாய் உலக வல்லரசாக அது அனுபவித்துவந்த சீர்சிறப்பு சில மணிநேரத்தில் சீரழிக்கப்பட்டது. மேதிய பெர்சியர்களின் புதிய சகாப்தம் துவங்கியது. பெல்ஷாத்சாரின் அரியணையைக் கைப்பற்றிய மேதியனாகிய தரியு, தன் பரந்த சாம்ராஜ்யத்தை சீரமைக்கும் சவாலை இப்போது சந்தித்தார்.
2 தரியு முதல் காரியமாக 120 தேசாதிபதிகளை நியமித்தார். சிலசமயம் ராஜாவின் உறவினர்களிலிருந்தே இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும், ஒவ்வொரு தேசாதிபதியும் ஒரு பெரிய மாகாணத்தின் அல்லது சாம்ராஜ்யத்தின் ஒரு சிறிய உட்பிரிவை ஆளுபவராக இருந்தார். (தானியேல் 6:1) வரி வசூலிப்பதும், அரசவைக்கு கப்பம் கட்டுவதும் அவர்களது பணிகளில் சில. அவ்வப்போது ராஜாவின் பிரதிநிதி அவர்களைச் சந்தித்து சோதனை நடத்தினாலும், தேசாதிபதிக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது. தேசாதிபதி (satrap) என்பதற்கு “ராஜ்யத்தின் பாதுகாவலர்” என அர்த்தம். அவர் தனது மாகாணத்தின் சிற்றரசராய் எல்லா அதிகாரத்தோடும் செயல்பட்டார்; சக்கரவர்த்திக்குரிய அதிகாரம் ஒன்றுதான் அவருக்கு இல்லை எனலாம்.
3 இந்தப் புதிய அரசில் தானியேல் என்ன பங்கு வகிப்பார்? மேதியனாகிய தரியு, 90 வயதைத் தாண்டிய இந்த யூத தீர்க்கதரிசிக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவிடுவாரா? நிச்சயமாக மாட்டார்! பாபிலோனின் அழிவைப் பற்றி தானியேல் திருத்தமாக முன்னறிவித்திருந்தார் என்பதையும் அது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியின் உதவியால் மட்டுமே முடியும் என்பதையும் தரியு நிச்சயமாகவே அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த பல்வேறு தொகுதியினரை கையாளுவதில் தானியேல் பல வருட அனுபவம் பெற்றிருந்தார். தரியு, தான் புதிதாய் கைப்பற்றிய நகரின் மக்களோடு சுமூகமான உறவை வைத்துக்கொள்ளவே விரும்பினார். ஆகவே அவர் தானியேலைப் போல் ஞானமும் அனுபவமும் உள்ள ஒருவரையே தனது வலதுகையாக்க விரும்பியிருப்பார். அப்படியென்றால் அவருக்கு என்ன பதவி அளிப்பார்?
4 நாடுகடத்தப்பட்ட யூதனாகிய தானியேலை தரியு தேசாதிபதியாக நியமித்திருந்தால், அதுவே ஆச்சரியமான விஷயமாய் இருந்திருக்கும். அப்படியென்றால், தேசாதிபதிகளையே மேற்பார்வையிடும் மூன்று பிரதானிகளில் ஒருவராக தானியேலை நியமிப்பதாய் தரியு அறிவித்தபோது ஏற்பட்டிருக்கும் சலசலப்பை கற்பனை செய்து பாருங்கள்! அதுமட்டுமல்ல, தானியேல் உடன் பிரதானிகளைக் காட்டிலும் சிறந்தவராய், “எப்போதும் தனித்து விளங்கினார்.” சொல்லப்போனால் அவரிடம் “அசாதாரண ஆவி” இருந்தது. தரியு அவருக்கு பிரதான அமைச்சர் பதவியையும் கொடுக்க நினைத்தார்.—தானியேல் 6:2, 3, NW.
5 மற்ற பிரதானிகளும் தேசாதிபதிகளும் கோபத்தால் குமுறியிருப்பார்கள். தானியேல் தங்கள்மீது அதிகாரம் செலுத்துவார் என்ற நினைப்பை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. தானியேல் என்ன மேதியனா, பெர்சியனா, அல்லது அரச குடும்பத்தைத்தான் சேர்ந்தவனா, எதுவுமேயில்லையே! சொந்த நாட்டவரை, ஏன் சொந்த குடும்பத்தாரைக்கூட புறக்கணித்து ஒரு அயல்நாட்டவனை இந்தளவு சிறப்பிப்பதற்கு தரியுவினால் எப்படி முடிந்தது? அவர் செய்தது அநியாயமாய் தோன்றியிருக்கலாம். அதுமட்டுமின்றி, தானியேல் உத்தமராய் இருந்தது தங்கள் மோசடிகளுக்கும் ஊழல்களுக்கும் முட்டுக்கட்டையாய் இருப்பதாக தேசாதிபதிகள் நினைத்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. இருந்தாலும் தரியுவிடம் இதைக் குறித்து பேச பிரதானிகளும் தேசாதிபதிகளும் துணியவில்லை. ஏனெனில், தரியு தானியேல்மீது மிகுந்த மதிப்பு மரியாதை வைத்திருந்தாரே!
6 ஆகவே பொறாமைபிடித்த இந்த அரசியல்வாதிகள் ஒன்றுகூடி சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் “அரசைக் கண்காணிப்பதில் தானியேலின்மீது குற்றம்சாட்ட வகை தேடினார்கள்.” அவர் தன் பொறுப்புகளைக் கையாண்ட விதத்தில் ஏதேனும் தவறு இருந்ததா? அல்லது நேர்மையற்றவராக இருந்தாரா? பிரதானிகளும் தேசாதிபதிகளும் எவ்வளவு முயன்றும் தானியேல் பொறுப்பாற்றிய விதத்தில் எந்தக் குற்றம் குறையையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. “இந்தத் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் தவிர வேறெதிலும் அவர்மீது குற்றம் காணமுடியாது” என்றார்கள். ஆகவே இந்த நயவஞ்சகர்கள் ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள். இத்திட்டத்தால் தானியேலை ஒரேயடியாக ஒழித்துக்கட்டிவிடலாம் என நினைத்தார்கள்.—தானியேல் 6:4, 5, பொ.மொ.
கொலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
7 தரியுவைப் பார்த்துப் பேச பிரதானிகளும் தேசாதிபதிகளும் ‘கூட்டமாய் உள்ளே நுழைந்தனர்.’ இதற்குப் பயன்படுத்தப்பட்ட அரமிய சொற்றொடர், பயங்கர அமளியை அர்த்தப்படுத்துகிறது. அப்படியென்றால் மிக அவசரமான விஷயத்தை தரியுவிடம் தெரிவிப்பதற்காக வந்திருப்பதுபோல் இவர்கள் காட்டிக்கொண்டார்கள். உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று இவர்கள் பங்கில் உறுதியாகச் சொன்னால் ராஜா மறுவார்த்தை சொல்லமாட்டார் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆகவே இப்படி நேரடியாக விஷயத்தைப் போட்டு உடைத்தார்கள்: ‘எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியில a போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்ய வேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் [“பண்ணியிருக்கிறார்கள்,” NW].’—தானியேல் 6:6, 7.
8 மெசப்பொத்தேமியாவில் ராஜாக்கள் பொதுவாக தெய்வங்களாய் வணங்கப்பட்டதை சரித்திர பதிவுகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஆகவே தரியு இந்த ஆலோசனையைக் கேட்டு பூரிப்படைந்திருப்பார் என்பது நிச்சயம். இதனால் உண்டாகவிருந்த நன்மையையும் அவர் யோசித்துப் பார்த்திருப்பார். பாபிலோனில் வசித்தவர்களுக்கு தரியு அயல்நாட்டவர், புதியவர் என்பதை நினைவில் வையுங்கள். இந்தப் புதிய சட்டம் அவர் ராஜா என்பதை நிலைநாட்டும். மேலும் இவரது புதிய அரசுக்கு ராஜபக்தியையும் ஆதரவையும் காட்ட பாபிலோனில் வசித்த திரளான ஜனங்களை அது உற்சாகப்படுத்தும். இருந்தாலும் பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜாவின் நலனைக் கருதி இந்த ஆலோசனையை வழங்கவேயில்லை. உண்மையில் அவர்களது உள்நோக்கம் தானியேலை சிக்கலில் மாட்டிவிடுவதே. ஏனெனில், மேல் அறையிலே ஜன்னல்கள் திறந்திருக்க, தினம் மூன்று வேளை அவர் கடவுளிடம் ஜெபிப்பது வழக்கம் என அவர்களுக்குத் தெரியும்.
9 ஜெபம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை, பாபிலோனிலிருந்த எல்லா மதத்தினருக்கும் ஒரு பிரச்சினையாக இருந்ததா? இல்லை, ஏனெனில் இந்தத் தடை ஒரு மாதத்திற்கு மட்டுமே அமலில் இருந்தது. அடுத்ததாக, சிறிது காலம் கடவுளுக்குப் பதிலாக ஒரு மனிதனை வணங்குவது இணங்கிவிட்டதற்கு சமமென புறமதத்தினர் கருதவில்லை. பைபிள் அறிஞர் ஒருவர் குறிப்பிடுவதாவது: “விக்கிரகாராதனையில் ஊறிப்போயிருந்த அந்தத் தேசத்திற்கு மன்னர் வணக்கம் என்பது பழக்கம் இல்லாத செயல் அல்ல. ஆகவே வெற்றிவீரரான மேதிய தரியுவை தெய்வமாய் வணங்க சொன்னபோது பாபிலோனியன் மறுபேச்சின்றி உடனடியாக கீழ்ப்படிந்தான். யூதன் மட்டுமே கீழ்ப்படிய மறுத்தான்.”
10 எப்படியோ, தரியுவைப் பார்க்க சென்றவர்கள், ‘மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே, அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி . . . கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும்’ என அவரை தூண்டினார்கள். (தானியேல் 6:8) பண்டைய கிழக்கத்திய நாடுகளில் ராஜாவின் சட்டம் பொதுவாக வேதவாக்காய் கருதப்பட்டது. அவர் தவறே செய்யாதவர் என்ற கருத்து நிலவியது. அப்பாவி மக்கள் இறப்பதற்கு ஒரு சட்டம் காரணமாக இருந்தாலும், அச்சட்டத்தை நீக்க முடியாது!
11 தானியேலைப் பற்றிய யோசனையே இல்லாமல் தரியு இந்த கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். (தானியேல் 6:9) இவ்வாறு தன்னை அறியாமல், தனக்கு மிகவும் பிரியமான அதிகாரியின் மரண சாஸனத்திலேயே கையெழுத்திட்டார். இந்தச் சாஸனத்தால் தானியேல் பாதிப்பிற்குள்ளாவது நிச்சயம்.
கடும் தீர்ப்பளிக்கவேண்டிய கட்டாயத்தில் தரியு
12 ஜெபத்திற்குத் தடைவிதித்த சட்டத்தைப் பற்றி தானியேல் விரைவில் அறிந்துகொண்டார். உடனடியாக தன் வீட்டிற்குள் சென்று, எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்கும் மேலறைக்குள் நுழைந்தார். b அங்கே “தான் முன் செய்துவந்தபடியே” கடவுளிடம் ஜெபிக்க ஆரம்பித்தார். தனிமையில் இருப்பதாக தானியேல் நினைத்திருக்கலாம், ஆனாலும் சதிகாரர்கள் அவரை கண்காணித்துக் கொண்டிருந்தனர். தரியுவைச் சந்திக்கச் சென்ற அதே வேகத்தில் திடீரென அவர்கள் “உள்ளே திரண்டுவந்தனர்” (NW). இப்போது கண்கூடாகப் பார்த்துவிட்டார்கள்—தானியேல் ‘தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம் செய்துகொண்டிருந்தார்.’ (தானியேல் 6:10, 11) தானியேலை ராஜாவிடம் காட்டிக்கொடுப்பதற்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும் அந்தப் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும்.
13 தானியேலின் எதிரிகள் தரியுவிடம் தந்திரமாய், “எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம் பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள்.” அதற்குத் தரியு, “அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே” என்றார். இப்போது சதிகாரர்கள் உடனடியாக விஷயத்திற்கு வந்து, “சிறைபிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான் என்றார்கள்.”—தானியேல் 6:12, 13.
14 பிரதானிகளும் தேசாதிபதிகளும் தானியேலை ‘சிறைபிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரர்’ என சொன்னது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில், தரியு மிக உயர்ந்த பதவியில் அமர்த்தியிருந்த அந்தத் தானியேல் வெறும் ஒரு யூத அடிமையே என்பதை வலியுறுத்த விரும்பினார்கள் எனத் தெரிகிறது. தானியேலை ராஜா எவ்வளவுதான் உயர்வாக மதித்தாலும் சட்டத்தை மீறுமளவுக்கு அவருக்கு உரிமை இல்லை என்பது அவர்களது கருத்து!
15 இவ்வளவு சாமர்த்தியமாக துப்பறிந்து வந்ததற்காக ராஜா தங்களுக்கு வெகுமதியளிப்பார் என பிரதானிகளும் தேசாதிபதிகளும் ஒருவேளை நினைத்திருக்கலாம். அப்படி நினைத்திருந்தால், அவர்களுக்கு ஆச்சரியம்தான் காத்திருந்தது. அவர்கள் சொன்னதைக் கேட்ட தரியு மிகவும் சஞ்சலமடைந்தார். தானியேல்மீது கடுங்கோபம்கொண்டு, அவரை சிங்கங்களின் கெபியில் தூக்கிப்போட உடனடியாக ஆணையிடுவதற்குப் பதிலாக, அவரை எப்படியாவது காப்பாற்றுவதற்காக நாள் முழுவதும் பிரயாசப்பட்டார். ஆனால் அவர் எண்ணம் கைகூடவில்லை. விரைவில் திரும்பிய வெட்கமில்லாத சதிகாரர்கள் தானியேலைக் கொல்லும்படி வற்புறுத்தினார்கள்.—தானியேல் 6:14, 15.
16 விஷயம் தன் கைமீறிப்போனதை உணர்ந்தார் தரியு. சட்டத்தை ரத்து செய்யவும் முடியவில்லை, தானியேல் “அத்துமீறியதை” மன்னிக்கவும் முடியவில்லை. தரியுவால் தானியேலிடம் சொல்ல முடிந்ததெல்லாம், “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்” என்பதுதான். தானியேலின் கடவுளை தரியு மதித்ததாக தெரிகிறது. பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றி முன்னறிவிக்கும் ஆற்றலை தானியேலுக்கு வழங்கியது யெகோவாவே. மற்ற பிரதானிகளிலிருந்து தானியேலை வேறுபடுத்திக் காட்ட கடவுள் அவருக்கு ‘அசாதாரண ஆவியையும்’ கொடுத்தார். பல பத்தாண்டுகளுக்கு முன் யெகோவா, மூன்று எபிரெய வாலிபர்களை அக்கினிச் சூளையிலிருந்து காப்பாற்றியதையும் தரியு ஒருவேளை அறிந்திருக்கலாம். இப்போதும் யெகோவா தானியேலை காப்பாற்றுவார் என ராஜா நம்பினார். ஏனெனில் தான் கையெழுத்திட்ட சாஸனத்தை மாற்ற முடியாத இக்கட்டான நிலையில் இருந்தார். ஆக, தானியேல் சிங்கங்களின் கெபியில் தள்ளப்பட்டார். c அடுத்ததாக, “ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.”—தானியேல் 6:16, 17.
தலைகீழ் மாற்றங்கள்
17 மனமொடிந்துபோன தரியு மாளிகைக்குத் திரும்பினார். அவர் கீதவாத்தியக்காரர்கள் எவரையும் தனக்குமுன் வரவிடவில்லை, ஏனெனில் உல்லாசமாயிருக்க அவர் மனம் இடங்கொடுக்கவில்லை. அதற்கு மாறாக தரியு பட்டினியோடு ராத்திரி முழுவதும் கண் விழித்திருந்தார். ‘அவருக்கு நித்திரையும் வராமற்போயிற்று.’ விடிந்தபோது, தரியு சிங்கங்களின் கெபிக்கு விரைந்தார். சோகமான குரலில் இப்படிச் சத்தமிட்டார்: “தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா”? (தானியேல் 6:18-20) என்ன ஆச்சரியம், கேட்ட கேள்விக்கு பதில் வந்தது! ராஜா நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.
18 “ராஜாவே நீர் என்றும் வாழ்க.” இவ்வாறு தானியேல் ராஜாவை மரியாதையோடு வாழ்த்தி, அவர்மேல் தனக்கு கோபதாபம் இல்லை என்பதைக் காட்டினார். தனக்கு நேரிட்ட துன்பத்திற்கு உண்மையான காரணம் தரியு அல்ல, ஆனால் பொறாமைபிடித்த பிரதானிகளும் தேசாதிபதிகளுமே என்பதை அவர் அறிந்திருந்தார். (ஒப்பிடுக: மத்தேயு 5:44; அப்போஸ்தலர் 7:60.) தானியேல் தொடர்ந்து சொன்னதாவது: “சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை.”—தானியேல் 6:21, 22.
19 தரியுவின் மனசாட்சியை ஈட்டிபோல் தாக்கியிருக்க வேண்டும் அந்த வார்த்தைகள்! சிங்கங்களின் கெபியில் தள்ளப்படுமளவுக்கு தானியேல் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவருக்கு தெரிந்ததே. பிரதானிகளும் தேசாதிபதிகளும் தானியேலைக் கொல்ல சதிசெய்திருப்பதும் தரியுவுக்கு தெள்ளத்தெளிவாய் புரிந்தது. அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக ராஜாவாகிய தன்னையே கைப்பாவையாக்கியதையும் அவர் உணர்ந்தார். தானியேலையும் ஆலோசித்ததுபோல் அல்லவா, ‘ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும்’ இந்த சாஸனம் பிறப்பிக்கப்படுவதை ஆமோதிப்பதாக சொன்னார்கள். தரியு இந்த நயவஞ்சகர்களை பிறகு கவனித்துக்கொள்வார். முதலில் தானியேலை சிங்கங்களின் கெபியிலிருந்து தூக்கிவிட கட்டளையிட்டார். என்னே அற்புதம்! தானியேலின் உடலில் சிறு கீறலும் இல்லை!—தானியேல் 6:23.
20 இப்போது தானியேல் சுகபத்திரமாக இருந்ததால், தரியு மற்ற விஷயங்களுக்கு கவனத்தைத் திருப்பினார். “தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப் போட்டது.” d—தானியேல் 6:24.
21 சதிகாரர்களோடு சேர்த்து அவர்களது மனைவிகளையும் பிள்ளைகளையும்கூட கொன்றுபோடுவது எந்த விதத்தில் நியாயம் என கேட்கத் தோன்றலாம். தீர்க்கதரிசியாகிய மோசே மூலமாக கடவுள் கொடுத்த சட்டம் இப்படிச் சொன்னது: “பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.” (உபாகமம் 24:16) இருந்தாலும் சில பண்டைய கலாச்சாரங்களில், கடும் குற்றத்திற்குத் தண்டனையாக, குற்றவாளியோடு சேர்த்து அவரது குடும்ப அங்கத்தினர்களையும் கொலை செய்வது சகஜமாயிருந்தது. குடும்ப அங்கத்தினர்கள் பிற்பாடு பழிவாங்காமல் இருப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். இருந்தாலும், இந்தப் பிரதானிகள் மற்றும் தேசாதிபதிகளின் குடும்பங்கள் கொல்லப்பட்டதற்கு தானியேல் எந்த விதத்திலும் காரணமல்ல. உண்மையில், இந்தப் பொல்லாதவர்களால் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து வருத்தப்படத்தான் செய்திருப்பார்.
22 சதிகார பிரதானிகளும் தேசாதிபதிகளும் ஒழிந்தனர். தரியு இவ்வாறு பொது அறிவிப்பு செய்தார்: “என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்: அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும். தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்.”—தானியேல் 6:25-27.
கடவுளை இடைவிடாமல் சேவியுங்கள்
23 கடவுளது நவீன நாளைய ஊழியர்களுக்கு தானியேல் சிறந்த உதாரண புருஷர். அவர் எப்போதும் குறை கண்டுபிடிக்க முடியாதபடியே நடந்துகொண்டார். உத்தியோகத்திலும் தானியேல் ‘உண்மையுள்ளவராயிருந்தபடியால் அவர்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.’ (தானியேல் 6:4) அதேவிதமாய் ஒரு கிறிஸ்தவர் தன் உத்தியோகத்தில் முழுமூச்சாய் ஈடுபட வேண்டும். இதற்காக, பணம் சம்பாதிக்க எதையும் செய்பவர்களாய், அல்லது அடுத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு பதவி ஏணியில் ஏறுபவர்களாய் இருக்க வேண்டுமென்பதல்ல. (1 தீமோத்தேயு 6:10) ஒரு கிறிஸ்தவர் தனது உத்தியோகக் கடமைகளை நேர்மையாகவும், “யெகோவாவிற்கென்றே” மனப்பூர்வமாகவும் நிறைவேற்ற வேண்டுமென வேதவசனங்கள் சொல்கின்றன.—கொலோசெயர் 3:22, 23, NW; தீத்து 2:7, 8; எபிரெயர் 13:18.
24 வணக்கத்தைப் பொறுத்தவரை தானியேல் எதற்கும் இணங்கிப்போகவில்லை. அவர் வழக்கமாக ஜெபம் செய்வது எல்லாருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமல்லாமல், தானியேல் தன் வணக்கத்தில் முழு ஈடுபாடு கொண்டவர் என்பதை பிரதானிகளும் தேசாதிபதிகளும் நன்கு அறிந்திருந்தனர். சொல்லப்போனால், சட்டமே எதிர்த்தாலும் அவர் தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்பினார்கள். இன்று வாழும் கிறிஸ்தவர்களுக்கு என்னே ஒரு சிறந்த முன்மாதிரி! இவர்களும் கடவுளுடைய வணக்கத்திற்கு முதலிடம் கொடுப்பதில் பெயர்பெற்றவர்கள். (மத்தேயு 6:33) இது மற்றவர்களுக்கு பளிச்சென்று தெரியவேண்டும், ஏனெனில் இயேசு தம் சீஷர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”—மத்தேயு 5:16.
25 தானியேல் அந்த 30 நாட்களும் யெகோவாவிடம் இரகசியமாக ஜெபித்து பிரச்சினையை சுலபமாய் தவிர்த்திருக்கலாமே என சிலர் சொல்லலாம். கடவுள் நம் ஜெபத்தைக் கேட்க ஒரு குறிப்பிட்ட தோரணையில் அல்லது முறையில்தான் ஜெபிக்க வேண்டும் என்பதும் இல்லை. அதுமட்டுமல்ல, கடவுளால் நம் இருதயத்தின் நினைவுகளைக்கூட அறிய முடியுமே. (சங்கீதம் 19:14) தானியேல் இந்த உண்மைகளையெல்லாம் அறிந்திருந்தாலும், தன் வழக்கத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்வதே இணங்கிப்போவதற்கு சமம் என நினைத்தார். ஏன்?
26 தானியேல் வழக்கமாக ஜெபம்செய்வது எல்லாருக்கும் தெரிந்திருந்ததால், திடீரென அவர் அதை நிறுத்திவிட்டால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்? தானியேல் மனிதர்களைக் கண்டு அதிகம் பயப்படுகிறார் என்றும், ராஜாவின் கட்டளை யெகோவாவின் சட்டத்தையே ஓரங்கட்டிவிட்டது என்றும் முடிவுசெய்திருப்பார்கள். (சங்கீதம் 118:6) ஆனால் யெகோவாவிற்கு மட்டுமே தன் முழுமையான பக்தி என்பதை தானியேல் செயலில் காட்டினார். (உபாகமம் 6:14, 15, NW; ஏசாயா 42:8) இருந்தாலும் ராஜாவின் சட்டத்தை தானியேல் மதிக்காமல் ஏளனப்படுத்தவில்லை. அதேசமயம் அதற்கு அஞ்சிநடுங்கி இணங்கிவிடவும் இல்லை. தானியேல் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், ராஜா கட்டளை பிறப்பிப்பதற்கு “முன் செய்துவந்தபடியே” தனது மேலறையில் தொடர்ந்து ஜெபம் செய்தார்.
27 இன்றும் கடவுளுடைய ஊழியர்களுக்கு தானியேலின் உதாரணம் படிப்பினை அளிக்கிறது. தங்கள் நாட்டு சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் ‘மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள்.’ (ரோமர் 13:1) இருந்தாலும், மனிதனது சட்டங்கள் கடவுளுடைய சட்டங்களோடு முரண்படுகையில், யெகோவாவின் மக்கள் இயேசுவின் அப்போஸ்தலர்களைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என தைரியமாகச் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 5:29) ஆனால் இதன் மூலம் கிறிஸ்தவர்கள் கலகத்தையோ எதிர்ப்பையோ தூண்டுவதில்லை. அதற்கு மாறாக, எல்லா மனிதரோடும் சமாதானமாய் வாழ்ந்து, ‘எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணுவதே’ அவர்களது குறிக்கோள்.—1 தீமோத்தேயு 2:1, 2; ரோமர் 12:18.
28 தானியேல் கடவுளை ‘இடைவிடாமல் ஆராதிப்பதாய்’ தரியு இரண்டு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார். (தானியேல் 6:16, 20) “இடைவிடாமல்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அரமிய வார்த்தை “வட்டமாய் சுற்றி வருவதை” அர்த்தப்படுத்துகிறது. இது முடிவில்லாத சுழற்சியை அல்லது தொடர்ச்சியான ஒன்றைக் குறிக்கிறது. தானியேலின் உத்தமத்தன்மை அப்படித்தான் இருந்தது. அதன் பாதையை சுலபமாய் கணிக்க முடிந்தது. அதாவது எப்பேர்ப்பட்ட சோதனைகளிலும், தானியேல் என்ன செய்வார் என்ற கேள்விக்கே இடமில்லாதிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் அவர் காட்டிய அதே உறுதியோடு, யெகோவாவிற்கு உத்தமத்தோடும் உண்மையோடும் எப்போதும் நிலைத்திருப்பார் என்பது தெளிவாயிருந்தது.
29 இன்றும் கடவுளது ஊழியர்கள் தானியேலைப் பின்பற்ற விரும்புகிறார்கள். தேவபயமுள்ள பூர்வத்தினரின் உதாரணத்தைக் கவனிக்குமாறு அப்போஸ்தலனாகிய பவுல் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அறிவுரை வழங்கினார். விசுவாசத்தினால் அவர்கள் “நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்” என்றும்; பெரும்பாலும் தானியேலை மனதில்கொண்டு, “சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்” என்றும் சொன்னார். இன்று நாம் யெகோவாவின் ஊழியர்களாக, தானியேலைப் போன்ற விசுவாசத்தையும் இடையறாத பக்தியையும் காட்டி, “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”—எபிரெயர் 11:32, 33; 12:1.
[அடிக்குறிப்புகள்]
a பாபிலோனில் “சிங்கங்களின் கெபி” உண்மையில் இருந்ததற்கு பூர்வ கல்வெட்டுகள் அத்தாட்சி அளிக்கின்றன. கிழக்கத்திய நாட்டு அரசர்கள் பெரும்பாலும் விலங்ககங்களை வைத்திருந்ததாக இவை காட்டுகின்றன.
b மேலறை என்பது, எவரது தொந்தரவுமில்லாமல் தனிமையில் ஓய்வெடுப்பதற்கான தனி அறை.
c சிங்கங்களின் கெபி என்பது, மேற்புறத்தில் ஒரு திறப்பைக் கொண்ட நிலத்தடி கூடமாக இருந்திருக்கலாம். மிருகங்கள் செல்வதற்கு இரும்புக்கம்பி கதவுகளோ வேறு கதவுகளோகூட இருந்திருக்கலாம்.
d “குற்றஞ்சாட்டின” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள அரமிய சொற்றொடரை “பழிதூற்றுதல்” என்றும் சொல்லலாம். தானியேலின் எதிரிகளுக்கு இருந்த கெட்ட நோக்கத்தை இது சுட்டிக்காட்டுகிறது.
நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?
• மேதியனாகிய தரியு ஏன் தானியேலுக்கு உயர்ந்த பதவியளிக்க தீர்மானித்தார்?
• பிரதானிகளும் தேசாதிபதிகளும் என்ன சதித்திட்டம் தீட்டினார்கள், யெகோவா எவ்வாறு தானியேலைக் காப்பாற்றினார்?
• தானியேலின் உத்தம முன்மாதிரியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
[கேள்விகள்]
1, 2. (அ) மேதியனாகிய தரியு, பரந்த தன் சாம்ராஜ்யத்தை எவ்வாறு சீரமைத்தார்? (ஆ) தேசாதிபதிகளின் பணிகளையும் அதிகாரத்தையும் விளக்குக.
3, 4. தரியு ஏன் தானியேலுக்கு சலுகை காட்டினார், அவரை எந்தப் பதவியில் அமர்த்தினார்?
5. தானியேலின் பதவியைக் குறித்து கேள்விப்பட்ட மற்ற பிரதானிகளும் தேசாதிபதிகளும் எப்படி உணர்ந்திருப்பார்கள், ஏன்?
6. தானியேலின் பெயரைக் கெடுக்க பிரதானிகளும் தேசாதிபதிகளும் எவ்வாறு முயன்றனர், அவர்களது முயற்சி ஏன் வீண்போனது?
7. பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜாவிடம் என்ன ஆலோசனையை முன்வைத்தார்கள், எந்த விதத்தில் அதைத் தெரிவித்தார்கள்?
8. (அ) கொடுக்கப்பட்ட ஆலோசனை ஏன் தரியுவுக்கு நல்லதாக தோன்றியது? (ஆ) பிரதானிகள் மற்றும் தேசாதிபதிகளின் உண்மையான உள்நோக்கம் என்ன?
9. ஏன் அந்தப் புதுச் சட்டம் புற மதத்தினரான பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரச்சினையாய் இல்லை?
10. மேதியர்களும் பெர்சியர்களும் ராஜாவின் சட்டத்தை எப்படிக் கருதினார்கள்?
11. தரியுவின் சாஸனம் தானியேலை எவ்வாறு பாதிக்கவிருந்தது?
12. (அ) புதிய சட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட உடனேயே தானியேல் என்ன செய்தார்? (ஆ) தானியேலை யார் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், ஏன்?
13. தானியேலின் எதிரிகள் ராஜாவிடம் எதைத் தெரிவித்தார்கள்?
14. தானியேலை பிரதானிகளும் தேசாதிபதிகளும் ‘சிறைபிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரர்’ என ஏன் குறிப்பிட்டனர்?
15. (அ) பிரதானிகளும் தேசாதிபதிகளும் சொன்னதைக் கேட்ட தரியுவின் பிரதிபலிப்பு என்ன? (ஆ) பிரதானிகளும் தேசாதிபதிகளும் தானியேல்மீது எப்படி மேலும் வெறுப்பை உமிழ்ந்தார்கள்?
16. (அ) தரியு ஏன் தானியேலின் கடவுளை மதித்தார்? (ஆ) தானியேலின் விஷயத்தில் தரியுவுக்கு இருந்த நம்பிக்கை என்ன?
17, 18. (அ) தானியேலைக் குறித்து தரியு மிகவும் வருத்தப்பட்டார் என எது காட்டுகிறது? (ஆ) விடிந்தவுடன் சிங்கங்களின் கெபிக்கு ராஜா விரைந்தபோது என்ன நடந்தது?
19. பிரதானிகளும் தேசாதிபதிகளும் எவ்வாறு தரியுவை ஏமாற்றி, அவரை கைப்பாவையாக்கினர்?
20. கெட்ட நோக்கங்கொண்ட தானியேலின் எதிரிகளுக்கு என்ன நடந்தது?
21. குற்றவாளிகளின் குடும்ப அங்கத்தினர்களைத் தண்டிப்பதில், நியாயப்பிரமாண சட்டத்திற்கும் சில பூர்வ கலாச்சாரங்களின் சட்டத்திற்கும் என்ன வித்தியாசம் இருந்தது?
22. தரியு இப்போது என்ன அறிவிப்பு செய்தார்?
23. உத்தியோக விஷயத்தில் தானியேல் எப்படி உதாரண புருஷராய் திகழ்ந்தார், நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?
24. வணக்க சம்பந்தமாக எவ்வாறு தானியேல் எதற்கும் இணங்கிப்போகவில்லை?
25, 26. (அ) தானியேலின் போக்கைக் குறித்து சிலர் என்ன சொல்லலாம்? (ஆ) வழக்கத்தை மாற்றிக்கொள்வது இணங்கிப்போவதற்கு சமம் என தானியேல் ஏன் கருதினார்?
27. இன்று கடவுளது ஊழியர்கள் பின்வரும் விஷயங்களில் எவ்வாறு தானியேலைப் பின்பற்றலாம்: (அ) மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிவது, (ஆ) மனிதர்களைக் காட்டிலும் அரசராக தேவனுக்கே கீழ்ப்படிவது, (இ) எல்லா மனுஷரோடும் சமாதானமாய் வாழ முயல்வது?
28. தானியேல் எவ்வாறு யெகோவாவை “இடைவிடாமல்” சேவித்தார்?
29. தானியேலின் உத்தமத்திலிருந்து இன்று யெகோவாவின் ஊழியர்கள் எவ்வாறு நன்மையடையலாம்?
[பக்கம் 114-ன் முழுபடம்]
[பக்கம் 121-ன் முழுபடம்]
[பக்கம் 127-ன் படம்]
தானியேல் யெகோவாவை “இடைவிடாமல்” சேவித்தார். நீங்கள்?