யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
தானியேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
“தா னியேல் புத்தகம், பைபிளில் உள்ள மிகவும் சுவாரஸ்யமூட்டுகிற புத்தகங்களில் ஒன்றாகும். . . . காலத்தால் சிதையாத உண்மைகள் இதன் ஏடுகளில் நிறைந்துள்ளன” என்று ஹோல்மன் இல்லஸ்ட்ரேட்டட் பைபிள் டிக்ஷ்னரி குறிப்பிடுகிறது. தானியேலின் பதிவு, பொ.ச.மு. 618-ல் நடந்த ஒரு சம்பவத்தோடு ஆரம்பமாகிறது; அச்சமயத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டு, ‘இஸ்ரவேல் புத்திரரில் சிலரை’ பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்கிறார். (தானியேல் 1:1-3) அவ்வாறு சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவரே தானியேல்; அப்போது அவர் பருவ வயதில் இருந்திருக்கலாம். இப்புத்தகத்தை எழுதி முடிக்கிற சமயத்திலும் அவர் பாபிலோனில்தான் இருக்கிறார். இப்போது ஏறக்குறைய 100 வயதை எட்டியிருக்கும் தானியேல், கடவுளிடமிருந்து இந்த வாக்குறுதியைப் பெறுகிறார்: “நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்.”—தானியேல் 12:13.
தானியேல் புத்தகத்தின் முதல் பகுதி, காலவரிசைப்படியும் வேறொரு நபர் சொல்வது போலவும் எழுதப்பட்டுள்ளது; அதன் கடைசி பகுதி, தானியேலே சொல்வதுபோல் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை எழுதியவர் தானியேல். இது தீர்க்கதரிசனங்கள் பொதிந்த ஒரு புத்தகமாகும்; உதாரணமாக, உலக வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் குறித்த தீர்க்கதரிசனங்கள், மேசியா தோன்றும் காலக்கட்டம், நம் நாட்களில் நிகழ்கிற சம்பவங்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இதில் உள்ளன.a இந்த வயதான தீர்க்கதரிசி, தன் நீண்ட வாழ்நாட் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து நடந்த சம்பவங்களை விவரிக்கிறார்; இப்பதிவு கடவுளுக்கு உத்தமமாய் நடக்கிற ஆண்களாயும் பெண்களாயும் திகழ நம்மை உந்துவிக்கிறது. தானியேல் புத்தகத்திலுள்ள செய்தி ஜீவனும் வல்லமையும் உள்ளது.—எபிரெயர் 4:12.
காலவரிசைப்படி நடந்த சம்பவங்கள் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள்
வருடம் பொ.ச.மு. 617. தானியேலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற அவரது மூன்று இளம் நண்பர்களும் பாபிலோன் அரண்மனையில் இருக்கிறார்கள். அந்த மூன்று ஆண்டுகளில் பாபிலோனின் பழக்கவழக்கங்களும் கலாச்சாரங்களும் கற்பிக்கப்பட்டபோதிலும் அவர்கள் கடவுளுக்கு உத்தமமாய் நடக்கிறார்கள். சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு, நேபுகாத்நேச்சார் ராஜா புதிர் நிறைந்த ஒரு கனவைக் காண்கிறார். அந்தக் கனவையும் அதன் அர்த்தத்தையும் தானியேல் விடுவிக்கிறார். ‘தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாய் இருக்கிறவர்’ யெகோவாவே என அந்த ராஜா ஒப்புக்கொள்கிறார். (தானியேல் 2:47) என்றாலும், தான் கற்ற இப்பாடத்தை அவர் சீக்கிரத்திலேயே மறந்துவிடுகிறார். தானியேலின் மூன்று நண்பர்கள், ஒரு மாபெரும் சிலையை வணங்க மறுப்பதால் ராஜாவின் கட்டளைப்படி அக்கினிச் சூளையிலே போடப்படுகிறார்கள். மெய்க் கடவுள் அவர்கள் மூவரையும் காப்பாற்றுகிறார்; அதனால், “இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை” என்பதை நேபுகாத்நேச்சார் வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்.—தானியேல் 3:29.
நேபுகாத்நேச்சார் அர்த்தம்பொதிந்த மற்றொரு கனவைக் காண்கிறார். அவர் பிரமாண்டமான ஒரு மரத்தைக் காண்கிறார், அது வெட்டப்பட்டு வளரவிடாமல் செய்யப்படுகிறது. அந்தக் கனவின் அர்த்தத்தை தானியேல் விடுவிக்கிறார். நேபுகாத்நேச்சார் பைத்தியம் பிடித்தவராகி பிற்பாடு புத்தி தெளிந்தபோது இக்கனவு ஓரளவு நிறைவேறுகிறது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, பெல்ஷாத்சார் ராஜா தன் பிரபுக்களுக்காக ஒரு பெரிய விருந்து செய்கிறார்; அப்போது, யெகோவாவை அவமதிக்கும் விதமாக அவரது ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த பாத்திரங்களை அவர் பயன்படுத்துகிறார். அந்த ராத்திரியிலே பெல்ஷாத்சார் கொல்லப்படுகிறார்; மேதியனாகிய தரியு ஆட்சியைக் கைப்பற்றுகிறார். (தானியேல் 5:30, 31) தரியுவின் ஆட்சிக் காலத்தில், பொறாமைபிடித்த அதிகாரிகள் தானியேலைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களது சூழ்ச்சித்திட்டத்திற்கு இலக்காகும் 90 வயதைத் தாண்டிய இந்த வயதான தீர்க்கதரிசியை யெகோவா ‘சிங்கங்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.’—தானியேல் 6:27.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:11-15—யூத இளைஞர்கள் நால்வரின் முகம் களையுள்ளதாக ஆனதற்கு சைவ உணவுதான் காரணமா? இல்லை. எப்படிப்பட்ட உணவைச் சாப்பிட்டாலும் சரி, வெறும் பத்தே நாட்களில் அப்படிப்பட்ட மாற்றம் வந்துவிடாது. அந்த இளம் எபிரெயர்களின் முகம் களையுள்ளதாய் ஆனதற்கான புகழ் யெகோவாவையே சேரும். அவரை நம்பியதால் அவர்களுக்குக் கிடைத்த பலன் அது.—நீதிமொழிகள் 10:22.
2:1—பெரிய சிலையைப் பற்றிய கனவை நேபுகாத்நேச்சார் எப்போது கண்டார்? “நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே” என பதிவு சொல்கிறது. அவர் பொ.ச.மு. 624-ல் பாபிலோனின் ராஜாவாக அரியணை ஏறினார். அப்படியானால், அவருடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டு பொ.ச.மு. 623-ல், அதாவது யூதாவை அவர் கைப்பற்றியதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும். அந்தச் சமயத்தில், இந்தக் கனவுக்கு அர்த்தம் சொல்வதற்கு தானியேல் பாபிலோனில் இருக்கவில்லை. ஆகவே, இந்த ‘இரண்டாம் வருஷம்’ பொ.ச.மு. 607-லிருந்து கணக்கிடப்படுகிறது; அந்த வருடத்தில்தான் பாபிலோன் ராஜா எருசலேமை அழித்து உலக ஆட்சியாளராக ஆனார்.
2:32, 39—எவ்விதத்தில் வெள்ளிக்கு ஒப்பான ராஜ்யம் பொன்னாலான தலையைவிடவும், வெண்கலத்திற்கு [“செம்பிற்கு,” NW] ஒப்பான ராஜ்யம் வெள்ளிக்கு ஒப்பான ராஜ்யத்தைவிடவும் குறைந்த மதிப்புள்ளதாய் இருந்தது? அச்சிலையின் வெள்ளியினாலான பாகம் மேதிய-பெர்சிய வல்லரசை அடையாளம் காட்டுகிறது. இது பொன்னாலான தலையாகிய பாபிலோனைவிட மதிப்புக் குறைவானதாய் இருந்தது. ஏனெனில், யூதாவைக் கவிழ்த்துப்போடும் சிறப்பு அதற்குக் கிடைக்கவில்லை. அதற்குப் பின்வந்த வல்லரசாகிய கிரீஸ், செம்பினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. வெள்ளியைவிட செம்பு தரம் குறைந்ததுபோல் கிரீஸும் மேதிய-பெர்சியாவைவிட தரம் குறைந்ததாய் இருந்தது. கிரேக்க பேரரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட எல்லை பரந்து விரிந்ததாய் இருந்தபோதிலும் மேதிய-பெர்சிய வல்லரசைப்போல் கடவுளுடைய மக்களை சிறையிருப்பிலிருந்து விடுவிக்கும் பாக்கியத்தை அது பெற்றிருக்கவில்லை.
4:8, 9—தானியேல் தானே ஒரு மந்திரவாதியாக ஆனாரா? இல்லை. “சாஸ்திரிகளின் [அதாவது, மந்திரவாதிகளின்] அதிபதி” என்ற வார்த்தை, “சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாக” தானியேல் வகித்த ஸ்தானத்தையே குறிக்கிறது.—தானியேல் 2:48.
4:10, 11, 20-22—நேபுகாத்நேச்சார் கனவில் கண்ட அந்தப் பிரமாண்டமான மரம் எதைப் பிரதிநிதித்துவம் செய்தது? முதலாவதாக, அந்த மரம் உலக வல்லரசின் ஆட்சியாளராக நேபுகாத்நேச்சாரையே பிரதிநிதித்துவம் செய்தது. என்றாலும், அந்த ஆட்சி ‘பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியது’ என சொல்லப்பட்டிருப்பதால், அந்த மரம் மிக உன்னதமான ஒன்றை அர்த்தப்படுத்த வேண்டும். இந்தக் கனவை, மனிதகுலத்தின்மீது ‘உன்னதமானவராய்’ இருக்கிறவரின் ஆட்சியோடு தானியேல் 4:17 சம்பந்தப்படுத்துகிறது. அப்படியானால், அந்த மரம், முக்கியமாக பூமியோடு சம்பந்தப்பட்ட யெகோவாவின் சர்வலோக பேரரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆகவே, அந்தக் கனவு இரண்டு நிறைவேற்றங்களைக் கொண்டது; ஒன்று நேபுகாத்நேச்சாரின் அரசாட்சி, மற்றொன்று யெகோவாவின் பேரரசாட்சி.
4:16, 23, 25, 32, 33—“ஏழு காலங்கள்” எவ்வளவு நீண்டவை? “ஏழு காலங்கள்,” வெறுமனே ஏழு நாட்களைவிட அதிகமான காலப்பகுதியைக் குறித்ததென நேபுகாத்நேச்சாரின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காட்டுகின்றன. அவருடைய விஷயத்தில், இந்தக் காலங்கள் வருடத்திற்கு 360 நாட்களைக்கொண்ட ஏழு வருடங்களை, அதாவது 2,520 நாட்களைக் குறித்தன. பெரிய நிறைவேற்றமாக, இந்த “ஏழு காலங்கள்” 2,520 வருடங்களைக் குறித்தன. (எசேக்கியேல் 4:6, 7) இவை, பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்ட சமயத்தில் தொடங்கி, பொ.ச. 1914-ல் பரலோக ராஜாவாக இயேசு அரியணை ஏறியதுடன் முற்றுப்பெற்றன.—லூக்கா 21:24.
6:6-10—ஏதேனும் குறிப்பிட்ட நிலையில் இருந்தவாறு யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டிய அவசியம் இல்லையென்பதால், 30 நாட்களுக்கு தானியேல் இரகசியமாக ஜெபிப்பது ஞானமான செயலாக இருந்திருக்கும் அல்லவா? தானியேல் ஒரு நாளில் மூன்று முறை ஜெபித்ததை எல்லாரும் அறிந்திருந்தார்கள். அதனால்தான் சூழ்ச்சி செய்தவர்கள், அவர் ஜெபிப்பதைத் தடைசெய்வதற்கான சட்டத்தைப் பிறப்பிக்கத் திட்டமிட்டார்கள். ஜெபம் செய்வதற்கான தன் வழக்கத்தை அவர் மாற்றியிருந்தால், மற்றவர்கள் பார்வையில் அவர் விட்டுகொடுத்ததுபோல் இருக்கும்; அதோடு யெகோவாவுக்கு முழுமையான பக்தி செலுத்தாததைக் காட்டியிருக்கும்.
நமக்குப் பாடம்:
1:3-8. யெகோவாவுக்கு உண்மையாய் இருப்பதில் தானியேலும் அவருடைய நண்பர்களும் காட்டிய உறுதி, பெற்றோரிடமிருந்து அவர்கள் பெற்ற பயிற்றுவிப்பின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது. தேவபயமுள்ள பெற்றோர் ஆன்மீக காரியங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதோடு பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக்கொடுக்கும்போது, பள்ளியிலோ வேறு இடத்திலோ எத்தகைய சோதனைகளும் அழுத்தங்களும் வந்தாலும் அவற்றை அவர்களால் எதிர்த்து நிற்கமுடியும்.
1:10-12. “பிரதானிகளின் தலைவன்” ராஜாவுக்கு ஏன் பயந்தார் என்பதைப் புரிந்துகொண்டதால், தானியேல் அவரை வற்புறுத்தவில்லை. என்றாலும், தானியேல் பிற்பாடு ‘விசாரணைக்காரனை’ அணுகினார். அவர் சற்று வளைந்து கொடுக்கும் சூழ்நிலையில் இருந்திருக்கலாம். கடினமான சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில், இதுபோன்ற நுட்ப அறிவோடும், புரிந்துகொள்ளுதலோடும் ஞானத்தோடும் நாம் செயல்பட வேண்டும்.
2:29, 30. தானியேலைப் போல, புகழ் அனைத்தையும் நாம் யெகோவாவுக்கே சேர்க்க வேண்டும். ஏனெனில், நம் அறிவு, சிறந்த பண்புகள், தனித்திறமைகள் என எதுவானாலும்சரி, அவற்றை பைபிள் கல்வியின் மூலமே நாம் பெற்றிருக்கிறோம்.
3:16-18. இந்த மூன்று எபிரெயர்களும் உணவு சம்பந்தப்பட்ட பிரச்சினையிலேயே விட்டுக்கொடுத்திருந்தார்கள் என்றால், இந்தளவு திடதீர்மானத்தோடு இப்போது பதிலளித்திருக்க முடியாது. நாமும்கூட ‘எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களாய்’ இருக்க முயல வேண்டும்.—1 தீமோத்தேயு 3:11.
4:24-27. நேபுகாத்நேச்சாருக்கு சம்பவிக்கவிருப்பதையும் அவருடைய ‘வாழ்வு நீடித்திருப்பதற்கு’ அவர் என்ன செய்ய வேண்டுமென்பதையும் அறிவித்தபோது தானியேல் விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டினார். கடவுளுடைய ஆக்கினைத் தீர்ப்பின் செய்திகள் அடங்கிய ராஜ்ய செய்தியை அறிவிப்பதற்கு நமக்கும் இப்படிப்பட்ட விசுவாசமும் தைரியமும் தேவை.
5:30, 31. ‘பாபிலோன் மன்னனுக்கு எதிரான ஏளனப் பாடல்’ நிறைவேறியது. (ஏசாயா 14:3, 4, 12-15; பொது மொழிபெயர்ப்பு) பாபிலோனின் அரச பரம்பரைக்கு இருந்த அதே அகம்பாவத்தை உடையவனான பிசாசாகிய சாத்தானும் வெட்கக்கேடான முடிவைச் சந்திப்பான்.—தானியேல் 4:30; 5:2-4, 23.
தானியேலின் தரிசனங்கள் வெளிப்படுத்துவது என்ன?
பொ.ச.மு. 553-ல் தானியேல் முதன்முதலாக கனவில் தரிசனம் காண்கிறார். இப்போது அவர் 70 வயதைக் கடந்துவிட்டிருக்கிறார். அவர் நான்கு பெரிய மிருகங்களைக் காண்கிறார். அவை, அவருடைய காலத்திலிருந்து நம்முடைய காலம் வரையாக அடுத்தடுத்து எழும்பிய உலக வல்லரசுகளைச் சித்தரித்துக் காட்டுகின்றன. பரலோக காட்சியைப் பற்றிய தரிசனத்தில், ‘மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவருக்கு’ ‘நீங்காத நித்திய கர்த்தத்துவம்’ கொடுக்கப்படுவதை அவர் பார்க்கிறார். (தானியேல் 7:13, 14) இரண்டு வருடங்களுக்குப் பிறகு மேதிய-பெர்சியாவையும், கிரீஸையும், ‘மூர்க்க முகமுள்ள ராஜாவாக’ எழும்பப்போகிற ஒன்றையும் பற்றிய ஒரு தரிசனத்தை அவர் காண்கிறார்.—தானியேல் 8:23.
இப்போது வருடம் பொ.ச.மு. 539. பாபிலோன் வீழ்ச்சியடைந்து விட்டது. மேதியனாகிய தரியு, கல்தேயர்களுடைய ராஜ்யத்தில் ராஜாவாகிவிட்டார். தன்னுடைய தாயகத்தை பழைய நிலைக்கு கொண்டுவரும்படி யெகோவாவிடம் தானியேல் ஜெபிக்கிறார். அவர் ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, மேசியாவின் வருகையைப் பற்றிய “அறிவை [தானியேலுக்கு] உணர்த்தும்படி” காபிரியேல் தூதனை யெகோவா அனுப்புகிறார். (தானியேல் 9:20-25) இப்போது வருடம் பொ.ச.மு. 536/535. இஸ்ரவேலரில் கொஞ்சம் பேர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். ஆனால், ஆலயத்தைக் கட்டும் வேலையில் அவர்களுக்கு எதிர்ப்பு வருகிறது. இது தானியேலை கவலையில் ஆழ்த்துகிறது. இந்த விஷயத்தைக் குறித்து அவர் ஊக்கமாய் ஜெபிக்கிறார், உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஒரு தேவதூதனை யெகோவா தானியேலிடம் அனுப்புகிறார். தானியேலை பலப்படுத்தி, ஊக்குவித்த பிறகு, அந்தத் தேவதூதன் வடதிசை ராஜாவுக்கும் தென்திசை ராஜாவுக்கும் இடையிலான பலப்பரிட்சையைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை விவரிக்கிறார். இந்தப் பலப்பரிட்சை, மகா அலெக்ஸாண்டருடைய ராஜ்யம் அவருடைய நான்கு தளபதிகளால் பங்கிடப்பட்ட காலம்முதல் பெரிய அதிபதியாகிய மிகாவேல் ‘எழும்பும்வரை’ நீடிக்கிறது.—தானியேல் 12:1.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
8:9—‘சிங்கார தேசம்’ எதை அடையாளப்படுத்துகிறது? இந்த ‘சிங்கார தேசம்,’ ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் காலத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் பூமிக்குரிய நிலையை அடையாளப்படுத்துகிறது.
8:25—‘அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவர்’ யார்? “அதிபதி” என மொழிபெயர்க்கப்படுகிற சார் என்ற எபிரெய வார்த்தையின் அடிப்படை அர்த்தம் “தலைவன்” என்பதே. “அதிபதிகளுக்கு அதிபதி” என்ற சிறப்புப் பெயர் யெகோவா தேவனுக்கு மட்டுமே பொருந்துகிறது. ‘பிரதான அதிபதிகளில் ஒருவராகிய மிகாவேல்’ உட்பட அனைத்து தேவதூத அதிபதிகளுக்கும் தலைவர் யெகோவாவே.—தானியேல் 10:13.
9:21—காபிரியேல் தூதனை ‘புருஷன்’ என தானியேல் ஏன் குறிப்பிடுகிறார்? ஏனெனில், தானியேலிடத்தில் காபிரியேல் மனித சாயலில் வந்தார். இதற்கு முந்தின தரிசனத்திலும் அவ்வாறே தானியேலுக்கு அவர் காட்சியளித்தார்.—தானியேல் 8:15-17.
9:27—70 வார வருடங்களின் இறுதிவரையில், அதாவது பொ.ச. 36 வரையில் ‘அநேகருக்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்த’ உடன்படிக்கை எது? பொ.ச. 33-ல் இயேசு கழுமரத்தில் அறையப்பட்டபோது நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. ஆனால், ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை பொ.ச. 36 வரையாக மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரிடத்தில் அமலில் இருக்கும்படி யெகோவா பார்த்துக் கொண்டார்; இதன்மூலம், ஆபிரகாமின் சந்ததியார் என்ற அடிப்படையில் யூதர்கள் விசேஷ தயவைப் பெறுவதற்குக் காலத்தை அனுமதித்தார். ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை, “தேவனுடைய இஸ்ரவேலருக்கு” இன்னும் அமலில் இருந்துவருகிறது.—கலாத்தியர் 3:7-9, 14-18, 29; 6:16.
நமக்குப் பாடம்:
9:1-23; 10:11. தானியேலின் மனத்தாழ்மை, தேவபக்தி, ஆழ்ந்த படிப்பு, இடைவிடாத ஜெபம் ஆகியவையே அவரை யெகோவாவுக்கு ‘மிகவும் பிரியமானவராக’ ஆக்கின. சாகும்வரை கடவுளுக்கு உண்மையோடிருக்கவும் இந்தத் தனித்தன்மைகளே அவருக்குக் கைகொடுத்தன. தானியேலின் முன்மாதிரியைப் பின்பற்ற நாம் தீர்மானமாய் இருப்போமாக.
9:17-19. “நீதி வாசமாயிருக்கும்” புதிய உலகிற்காக நாம் ஜெபிக்கையிலும்கூட, நம்முடைய தனிப்பட்ட பிரச்சினைகளும் கஷ்டங்களும் நீங்க வேண்டுமென்பதில் குறியாக இருக்காமல் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதும் அவருடைய அரசாட்சியே சரியானதென நிரூபிக்கப்படுவதும்தான் முக்கியம் என்பதை நாம் தெரிவிக்க வேண்டும், அல்லவா?—2 பேதுரு 3:13.
10:9-11, 18, 19. தானியேலிடத்தில் வந்த தூதனைப் போலவே நாமும் உதவிக்கரங்களை நீட்டியும், ஆறுதல் சொல்லியும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி பலப்படுத்த வேண்டும்.
12:3. இந்தக் கடைசி நாட்களில் ‘ஞானவான்களாகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘சுடர்களைப்போலப் பிரகாசிக்கிறார்கள்’; இவர்கள் ‘அநேகரை நீதிக்குட்படுத்தியிருக்கிறார்கள்,’ இதில் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த ‘திரள் கூட்டத்தாரும்’ அடங்குவர். (பிலிப்பியர் 2:14; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9.) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் முழுமையான கருத்தில் ‘நட்சத்திரங்களைப்போல பிரகாசிப்பார்கள்.’ அப்போது, பூமியில் வாழும் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு மீட்கும்பொருளின் அனைத்து நன்மைகளையும் வழங்குவதில் கிறிஸ்துவுடன் அவர்கள் சேர்ந்துகொள்வார்கள். ‘வேறே ஆடுகள்’ இந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு ஐக்கியமாய் இருந்து எல்லா வழிகளிலும் அவர்களுக்கு மனப்பூர்வமாய் ஆதரவு அளிக்க வேண்டும்.
யெகோவா ‘தமக்குப் பயப்படுகிறவர்களை ஆசீர்வதிக்கிறார்’
நாம் வணங்கி வருகிற கடவுளைப்பற்றி தானியேல் புத்தகம் நமக்கு என்ன கற்பிக்கிறது? இதிலுள்ள தீர்க்கதரிசனங்களைச் சிந்தித்துப் பாருங்கள். நிறைவேறிய, நிறைவேறவிருக்கிற இத்தீர்க்கதரிசனங்கள் யெகோவா வாக்குத் தவறாதவர் என்பதைத் தத்ரூபமாகச் சித்தரித்துக் காட்டுகின்றன, அல்லவா?—ஏசாயா 55:11.
தானியேல் புத்தகத்திலுள்ள சரித்திர சம்பவங்கள் நம் கடவுளைப்பற்றி எதைத் தெரிவிக்கின்றன? நான்கு எபிரெய இளைஞர்கள் பாபிலோனின் அரண்மனை வாழ்க்கையோடு ஒன்றிவிடாமல் இருந்ததால் ‘எழுத்திலும் ஞானத்திலும் அறிவிலும்’ திறமை பெற்றார்கள். (தானியேல் 1:17) மெய்க் கடவுள் தமது தூதனை அனுப்பி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று பேரையும் அக்கினி சூளையிலிருந்து தப்புவித்தார். தானியேலோ சிங்கக் கெபியிலிருந்து விடுவிக்கப்பட்டார். யெகோவா ‘தம்மை நம்புகிறவர்களுக்குத் துணையும் கேடகமுமாய் இருக்கிறார்’; ‘தமக்குப் பயப்படுகிறவர்களை ஆசீர்வதிக்கிறார்.’—சங்கீதம் 115:9, 13.
[அடிக்குறிப்பு]
a தானியேல் புத்தகத்தை வசனம் வசனமாக கலந்தாலோசிக்க யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தைக் காண்க.
[பக்கம் 18-ன் படம்]
தானியேல் ஏன் ‘மிகவும் பிரியமானவராக’ இருந்தார்?