அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தனர்
தானியேல் கடவுளை இடைவிடாமல் சேவித்தார்
திடீரென ஒரே இரவுக்குள் வரலாற்று நிகழ்ச்சிகளின் போக்கு மாற்றமடைவது அரிது. இருப்பினும், பொ.ச.மு. 539-ல் அதுவே நடந்தது; அப்போது பாபிலோனிய பேரரசு ஒருசில மணிநேரங்களுக்குள் மேதியர்களாலும் பெர்சியர்களாலும் தோற்கடிக்கப்பட்டது. அந்த வருடத்துக்குள்ளாக, யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய தானியேல் பாபிலோனில் ஏறக்குறைய 80 வருடங்களாக நாடுகடத்தப்பட்ட யூதனாக வாழ்ந்துகொண்டிருந்தார். தானியேல் 90-க்கும் மேற்பட்ட வயதாயிருக்கையில், கடவுளுக்கு தன் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதில் மிகப்பெரிய சோதனைகளில் ஒன்றை எதிர்ப்படவிருந்தார்.
பாபிலோனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தானியேலுக்கு காரியங்கள் ஆரம்பத்தில் கஷ்டமின்றி சுமூகமாக சென்றன. 62 வயதாயிருந்த மேதியனாகிய தரியு புதிய அரசனாக இருந்தார், அவர் தானியேலுக்கு அன்புடன் ஆதரவு காட்டினார். தரியு அரசனாக ஆனபோது, 120 தேசாதிபதிகளை நியமித்து மூன்று மனிதரை உயர் அதிகாரிகளின் நிலைக்கு உயர்த்த வேண்டியது அவர் முதலாவது செய்ய வேண்டிய செயல்களில் ஒன்றாக இருந்தது.a அவ்வாறு ஆதரவு காட்டப்பட்ட மூன்று மனிதரில் தானியேல் ஒருவர். தானியேலுக்கு இருந்த அசாதாரணமான ஆற்றலை கண்டுணர்ந்து பிரதமர் பதவியையும்கூட கொடுப்பதற்கு தரியு மிகவும் ஆவலுடையவராய் இருந்தார்! இருந்தபோதிலும், அரசனின் திட்டங்களை திடீரென்று மாற்றிய ஏதோவொன்று அப்போதுதானே நடந்தது.
ஒரு தந்திரமான திட்டம்
தேசாதிபதிகள் அடங்கிய ஒரு பெரிய தொகுதியோடு சேர்ந்து தானியேலின் உடன் உயர் அதிகாரிகள் சதி செய்யும் எண்ணத்தோடு ராஜாவை அணுகினர். பின்வரும் ஒப்பந்தத்தைச் செய்து ஒரு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்று அவர்கள் தரியுவை கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்: ‘எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட வேண்டும்.’ (தானியேல் 6:7) இந்த மனிதர்கள் தங்கள் பற்றுறுதியை அவருக்கு காண்பிக்கிறார்கள் என்று தரியுவுக்கு தோன்றியிருக்கலாம். அந்த ராஜ்யத்துக்கு அவர் தலைவராய் இருக்கும் ஸ்தானத்தை வலுவூட்டுவதற்கு இந்தக் கட்டளை அந்நியராயிருக்கும் இவருக்கு உதவும் என்றும்கூட அவர் சிந்தித்திருக்கலாம்.
இருப்பினும், உயர் அதிகாரிகளும் தேசாதிபதிகளும் ராஜாவுக்கு சாதகமாக இந்த அரச கட்டளையை எடுத்துக் கூறவில்லை. அவர்கள் “தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.” ஆகையால் இந்தத் தந்திரமுள்ள மனிதர்கள் இவ்வாறு விவாதித்தனர்: “நாம் இந்தத் தானியேலை அவனுடைய தேவனைப் பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது.” (தானியேல் 6:4, 5) தானியேல் யெகோவாவிடம் தினந்தோறும் ஜெபித்தார் என்பதை அறிந்து அவர்கள் இதை மரண தண்டனையாக ஆக்குவதற்கு முனைந்தார்கள்.
ஒருவேளை உயர் அதிகாரிகளும் தேசாதிபதிகளும் தானியேலிடமாக பகைமை வைத்திருந்திருக்கலாம், ஏனென்றால் அவர் ‘பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவராயிருந்தார்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவரை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தார்.’ (தானியேல் 6:3) ஒருவேளை ஊழல் மற்றும் நேர்மையற்ற ஆதாயம் ஆகியவற்றுக்கு எதிராக தானியேலின் நேர்மை வரவேற்கப்படாத தடையை ஏற்படுத்தியிருக்கலாம். சூழ்நிலை எதுவாக இருப்பினும், இந்த மனிதர் ராஜாவை நம்பவைத்து, கட்டளைப்பத்திரத்துக்கு கையெழுத்திடும்படி செய்து, ‘மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்’ பாகமாக அதை ஆக்கினர்.—தானியேல் 6:8, 9.
தானியேல் உறுதியாய் நிலைத்திருக்கிறார்
புதிய கட்டளையைப் பற்றி அறிந்த பின்பு, யெகோவாவிடம் ஜெபிப்பதை தானியேல் நிறுத்திவிட்டாரா? இல்லவே இல்லை! வீட்டின் மேல் அறையிலே முழங்காற்படியிட்டு, “தான் முன் செய்துவந்தபடியே” ஒரு நாளில் மூன்று தடவை கடவுளிடம் ஜெபித்தார். (தானியேல் 6:10) அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கையில், அவருடைய எதிரிகள் “கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள்.” (தானியேல் 6:11) அவர்கள் அந்த விஷயத்தை ராஜாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, அவர் கையெழுத்திட்டிருந்த கட்டளை தானியேலை பாதிக்கும் என்பதை அறிந்து தரியு மிகவும் வேதனைப்பட்டார். “அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்கு மட்டும் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான்,” என்று பதிவு நமக்குச் சொல்கிறது. ஆனால் ராஜாவும்கூட தான் இயற்றிய கட்டளையை மாற்ற முடியவில்லை. ஆகையால் தானியேல் சிங்கங்களின் கெபிக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அது பள்ளமான அல்லது நிலத்திலிருந்து தாழ்வாக இருக்கும் ஒரு இடமாக இருந்திருக்கும். “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்,” என்று ராஜா தானியேலுக்கு உறுதி கூறினார்.—தானியேல் 6:12-16.
இரவு முழுவதும் நித்திரையின்றி உபவாசமிருந்த பிறகு, தரியு கெபிக்கு விரைந்து சென்றார். தானியேல் உயிரோடும் எந்தச் சேதமும் ஏற்படாமலும் இருந்தார்! ராஜா உடனடியாக செயல்பட்டார். பழிதீர்க்கும் வகையில் தானியேலின் எதிரிகளையும் அவர்களுடைய குடும்பத்தினர்களையும் சிங்கங்களின் கெபிக்குள் போட்டார். “என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது,” என்பதையும்கூட தரியு தன் ராஜ்யம் முழுவதும் அறியப்பண்ணினார்.—தானியேல் 6:17-27.
நாம் கற்றுக்கொள்ளும் பாடம்
தானியேல் உண்மைத்தன்மையில் மிகச்சிறந்த முன்மாதிரியாய் இருந்தார். தானியேல் கடவுளை “இடைவிடாமல்” சேவித்தார் என்பதை யெகோவாவை வணங்காத ராஜாவும்கூட கவனித்தார். (தானியேல் 6:16, 20) “இடைவிடாமல்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அரமேய்க் மொழியின் மூல வார்த்தை அடிப்படையில் “வட்டமாகச் செல்” என்பதை அர்த்தப்படுத்துகிறது. அது தொடர்ந்து செல்வதை குறிக்கிறது. யெகோவாவிடமாக தானியேலுக்கு இருந்த முறிக்கமுடியாத உத்தமத்தன்மையை இது எவ்வளவு நன்றாக விவரிக்கிறது!
தானியேலை சிங்கங்களின் கெபிக்குள் போடுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே இடைவிடாது சேவிக்கும் பண்பை அவர் வளர்த்துக்கொண்டு இருந்தார். பாபிலோனில் இளம் கைதியாக இருக்கையில், மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தால் தடைசெய்யப்பட்டிருந்த அல்லது புறமத சடங்கால் கறைப்படுத்தப்பட்டிருந்த உணவையோ அல்லது பானத்தையோ அவர் உட்கொள்ள மறுத்தார். (தானியேல் 1:8) பின்னர், அவர் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் தைரியமாய் கடவுளுடைய செய்தியை அறிவித்தார். (தானியேல் 4:19-25) பாபிலோனின் வீழ்ச்சிக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தானியேல் பயமின்றி பெல்ஷாத்சார் ராஜாவிடம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை அறிவித்தார். (தானியேல் 5:22-28) ஆகையால் தானியேல் சிங்கங்களின் கெபிக்குள் போடப்பட்டபோது, அவர் ஏற்கெனவே நிலைநாட்டியிருந்த உண்மைத்தன்மையுள்ள வாழ்க்கைப்போக்கில் தொடர்ந்து நிலைத்திருந்தார்.
நீங்களும்கூட யெகோவாவை இடைவிடாமல் சேவிக்கலாம். நீங்கள் ஒரு இளம் நபரா? அப்படியென்றால், இந்த உலகின் கெட்ட கூட்டுறவையும் மற்றும் கறைப்படுத்தும் நடத்தையையும் வெறுத்து ஒதுக்குவதன் மூலம் இடைவிடாது சேவிக்கும் பண்பைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வதற்காக இப்போதே செயல்படுங்கள். நீங்கள் கடவுளை கொஞ்ச காலமாக சேவித்துக்கொண்டிருந்தால், உண்மைத்தன்மையுள்ள சகிப்புத்தன்மையான போக்கை காத்துவாருங்கள். பெரும்பாரம் தாங்காமல் விட்டுவிடாதீர்கள்; ஏனென்றால் நாம் எதிர்ப்படும் ஒவ்வொரு சோதனையும் நாம் யெகோவாவை இடைவிடாமல் சேவிப்பதற்கு தீர்மானமாயிருக்கிறோம் என்பதைக் காண்பிப்பதற்கு நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது.—பிலிப்பியர் 4:11-13.
[அடிக்குறிப்பு]
a “தேசாதிபதி” என்ற பதம் (“ராஜ்யத்தை பாதுகாப்பவர்” என்று சொல்லர்த்தமாக பொருள்படுகிறது) மாவட்ட எல்லையின் மீது பிரதான ஆட்சியாளராக சேவிப்பதற்கு பெர்சிய ராஜாவால் நியமிக்கப்பட்ட ஆளுநரை குறிக்கிறது. அவர் ராஜாவின் பொதுப்பணித்துறைக்குரிய பிரதிநிதியாக, வரிகளை வசூலிப்பதற்கும் மன்னரின் அரசவைக்கு கப்பம் செலுத்துவதற்கும் பொறுப்புள்ளவராய் இருந்தார்.