கிரீஸ்—சாம்ராஜ்யம் ஐந்தாவது மகா உலக வல்லரசு
விரைந்து செல்லும், செட்டைகளைக் கொண்ட சிறுத்தையைப் போன்று அலெக்சாந்தர் கிரேக்கு தேசத்திலிருந்து சிறிய ஆசியா (நவீன கால துருக்கி), பலஸ்தீனா, எகிப்து, மற்றும் இந்தியா மட்டுமான மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்தை வெற்றிகொள்ளப் புறப்பட்டான். வித்தியாசமான இந்த வெற்றிவீரனைக் குறித்தும் அவனைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என்பதையும் நீங்கள் மேலுமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
வயது 20 மட்டுமே, இளம் அலெக்சாந்தர் மக்கெதோன் சிங்காசனத்தை சுதந்தரித்தான். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தன்னுடைய தந்தை பிலிப்பின் திட்டத்தின்படி, அலெக்சாந்தர் கிழக்கே இருந்த வல்லமை வாய்ந்த பெர்சியரின் சாம்ராஜ்யத்துக்கு எதிராகப் பழிவாங்கும் எண்ணத்தோடு போர் தொடுக்கிறான். அதை நிறுத்துவதற்கு முன்பு அலெக்சாந்தர் தன்னுடைய நாளின் உலகத்தை வென்றுவிட்டான்.
இந்த இளம் இராணுவ திட்ட நிபுணன் சிறிய ஆசியா, சீரியா, பலஸ்தீனா, எகிப்து, பாபிலோனியா மற்றும் மேதிய-பெர்சியா முழுவதும் பூர்வ இந்தியாவின் வாயில் மட்டும் சுறாவளியாகச் சென்றான்! பூர்வ காலங்களிலேயே மிகப் பெரிய தளபதியாகக் கருதப்பட்டதால் இன்று அவன் மகா அலெக்சாந்தர் என்று அறியப்பட்டிருக்கிறான்.
மிகக் குறுகிய காலத்திலேயே கிரேக்கு தேசம் பைபிள் சரித்திரத்தின் ஐந்தாவது உலக வல்லரசாக—அதற்கு முன் இருந்த வேறு எந்த வல்லரசிலும் பெரியதாக ஆகிவிட்டது. அப்படிப்பட்ட காரியம் எப்படி நடந்தது? அது கடவுளுடைய வார்த்தையுடன் எவ்விதத்தில் சம்பந்தமுடையதாயிருக்கிறது? அது உங்களுக்கு எதைக் குறிக்கிறது?
பைபிள் தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டது
அலெக்சாந்தரின் காலத்துக்கு இருநூறு வருடங்களுக்கு முன்பு பாபிலோன் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தபோது, மேதியரும் பெர்சியரும் இன்னும் உலக வல்லரசாக ஆகாதிருந்தபோது, யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய தானியேலுக்கு எதிர்கால உலக சரித்திரத்தை எடுத்துக்காண்பித்த இரண்டு பெரிய தீர்க்கதரிசன முக்கியத்துவம்கொண்ட தரிசனங்கள் கொடுக்கப்பட்டன. அப்பொழுது, பாபிலோன் வீழ்ச்சியுற்ற பின்னர், தன்னுடைய காலத்துக்கு வெகு காலத்துக்குப் பிறகு சம்பவிக்கப்போகும் மூன்றாவது தீர்க்கதரிசனத்தைப் பெற்றான். தானியேல் அவற்றை எழுதிவைத்தான். ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற ஆரம்பிக்காத இந்தத் தீர்க்கதரிசனங்கள் அலெக்சாந்தருக்கும் அவனுடைய ராஜ்யத்துக்கும் என்ன நடக்கும் என்பது குறித்த திட்டவட்டமான தகவலைக் கொண்டிருக்கிறது.
தானியேலுக்கு என்ன வெளிப்படுத்தப்பட்டது? அந்தத் தீர்க்கதரிசனத்தை நீங்கள் பைபிள் புத்தகமாகிய தானியேலில் காணலாம். இது ஏறக்குறைய பொ. ச. மு. 536-ல் எழுதப்பட்டது. சுருக்கமாகக் குறிப்பிட்டால், ஐந்தாவது உலக வல்லரசாகிய கிரேக்க வல்லரசுக்குப் பொருந்துவதாக அவன் கண்டது இதுவே:
முதல் தீர்க்கதரிசன தரிசனத்தில், கிரேக்க வல்லரசு வேகமாகச் செயல்படுவதற்குத் தகுந்த நிலையிலிருக்கும் சிறுத்தையால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. “அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது. . . . அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.”—தானியேல் 7:6.
இரண்டாவது தீர்க்கதரிசன தரிசனத்தில், “மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா . . . தேசத்தின் மீதெங்கும் சென்றது.” அதனுடைய வேகம் அவ்வளவாக இருந்ததால் “நிலத்திலே கால் பாவாமல்” சென்றது. அது “மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்களைக்” குறிக்கும் இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடாமட்டும் வந்தது. அந்த வெள்ளாட்டுக்கடா இந்த “ஆட்டுக்கடாவின் மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது.” “ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா,” என்று தானியேலுக்குச் சொல்லப்பட்டது.—தானியேல் 8:5–8, 20, 21.
மூன்றாவது காரியத்தில், “பெர்சியா [ராஜா] . . . கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான். ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.”—தானியேல் 11:2, 3.
அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் காரியங்கள் எதைக் குறிக்கிறது? இந்தக் காரியங்கள் தானியேல் சொன்னவிதமாகவே நடந்தனவா? அதை நாம் பார்க்கலாம்.
தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றமடைந்தது
பொ. ச. மு. 334-ம் ஆண்டின் இளவேனிற் காலத்தில் அலெக்சாந்தர் ஆசியாவை டார்டனெல்லாஸில் (பூர்வ ஹேலஸ்பான்ட்) ஏறக்குறைய 30,000 காலாட்படையினருடனும் 5,000 குதிரைப் படையினருடனும் நுழைந்தான். நான்கு செட்டைகளுடைய சிறுத்தை அல்லது நிலத்தில் கால் பாவாமல் சென்ற வெள்ளாட்டுக்கடாவைப் போன்ற வேகத்தில் பெர்சியா சாம்ராஜ்யத்தை—தன்னுடைய ராஜ்யத்தைவிட 50 மடங்கு பெரியதான சாம்ராஜ்யத்தை அவன் கைப்பற்றினான்! அவன் “பிரபலமாய் எழும்பி தனக்கு இஷ்டமானபடிச் செய்வானா?” சரித்திரம் பதில் சொல்லுகிறது.
சிறிய ஆசியாவின் வடமேற்கு முனையிலுள்ள ஒரேனிக்கஸ் நதியருகேதான் (நவீன துருக்கி) அலெக்சாந்தர் பெர்சியருக்கு எதிரான தன்னுடைய முதல் போரில் வெற்றி பெற்றான். அந்தக் குளிர்காலத்தில்தான் சிறிய ஆசியாவின் மேற்கு பகுதியைக் கைப்பற்றினான். அதைத் தொடர்ந்த இலையுதிர் காலத்தில் சிறிய ஆசியாவின் தென்கிழக்குப்பகுதியிலுள்ள இசுஸில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் வீரர்களைக் கொண்டிருந்த பெர்சிய சேனையை முழு அளவில் தோற்கடித்தான். அப்பொழுது பெர்சியாவின் மகா அரசன் தரியு III தன்னுடைய குடும்பத்தை அலெக்சாந்தரிடம் கைவிட்டவனாக தப்பியோடினான்.
பின்வாங்கிச் செல்லும் பெர்சியரைப் பின்தொடருவதற்குப் பதிலாக, அலெக்சாந்தர் தென்திசையாக மத்தியதரைக் கடலோரமாகச் சென்று வல்லமை வாய்ந்த பெர்சியர் பயன்படுத்திய கப்பல்தளத்தைக் கைப்பற்றினான். தீரு பட்டணத் தீவு ஏழு மாதங்களாக எதிர்த்துவந்தது. கடைசியில் நேபுகாத்நேச்சார் அழித்த நகரத்தின் இடிபாடுகளைக் கொண்டு அலெக்சாந்தர் அந்தத் தீவு பட்டணத்திற்குச் செல்ல ஒரு பாதையை அமைத்தான். அந்தப் பாதை இன்றும் பழுதுபட்ட நிலையில் இருக்கின்றது. இது தீரு பட்டணத்தின் மண்ணைக் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள் என்ற எசேக்கியேலின் தீர்க்கதரிசன நிறைவேற்றத்துக்கு அத்தாட்சியாக நிற்கிறது.—எசேக்கியேல் 26:4, 12.
தனக்குச் சரணடைந்த எருசலேமை விட்டுவிட்டு அலெக்சாந்தர் தெற்கே புறப்பட்டு காசாவைக் கைப்பற்றி “பிரபலமாய் ஆண்டு” தன் எல்லையை விஸ்தரித்து, எகிப்தில் “தனக்கு இஷ்டமானபடி” செய்தான். அங்கு அவன் மீட்பராக வரவேற்கப்பட்டான். மோப் பட்டணத்தில் அவன் அபிஸ் காளைக்குப் பலி செலுத்தி அந்த ஆசாரியர்களின் பிரியத்தைப் பெற்றான். அவன் அலெக்சாந்திரியா என்ற பட்டணத்தையும் அமைத்தான். இது அத்தேனே போன்று கல்விக்கு மையமாகப் புகழ்பெற்றது, இன்றும் அவனுடைய பெயரைத் தாங்கியிருக்கிறது.
பிலிப்புவின் எல்லாத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டும் அதற்கும் அதிமாகவும் செய்யப்பட்டது, ஆனால் அலெக்சாந்தர் தொடர்ந்தான். வேகமாக முன்செல்லும் அந்த வெள்ளாட்டுக்கடா போன்று அவன் வடகிழக்காகத் திரும்பி பலஸ்தீனா வழியாய் மேலே டைக்ரிஸ் நதி நோக்கிச் சென்றான். அங்கு பொ. ச. மு. 331-ம் வருடத்தில், அசீரியாவின் தலைநகராகிய பாழடைந்த நினிவேக்கு அண்மையில் காகமேலாவில் பெர்சியரைத் தாக்கினான். அலெக்சாந்தரின் 47,000 மனிதர் 10,00,000 பேர் கொண்ட மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்ட பெர்சியாவின் சேனையை முறியடித்தனர். தரியு தப்பிச்சென்றான், ஆனால் பின்னால் தன்னுடைய சொந்த மக்களாலேயே கொல்லப்பட்டான்.
வெற்றியில் பூரித்த அலெக்சாந்தர் தெற்கே திரும்பி, பெர்சியாவின் குளிர்கால தலைநகராயிருந்த பாபிலோனையும் கைப்பற்றினான். சூசா மற்றும் பெர்சிபொலிஸ் தலைநகரங்களையும் கைப்பற்றி, பெர்சியரின் கருவூலத்தைக் கைப்பற்றி சஷ்டாவின் மகா அரண்மனையை எரித்தான். கடைசியாக, அக்மேதாவிலுள்ள தலைநகரும் விழுந்தது. இந்தத் துரிதமான வெற்றி வீரன் பெர்சியாவின் மற்ற பகுதியையும் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவந்து, நவீன நாளைய பாக்கிஸ்தானிலுள்ள சிந்து நதி வரை சென்றான். கிரீஸ் பைபிள் சரித்திரத்தில் உலக வல்லரசுகளில் ஐந்தாவதாக இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
அலெக்சாந்தரின் வெற்றிகள் அப்பெரிய பகுதி முழுவதுமே கிரேக்க மொழியையும் கலாச்சாரத்தையும் பரப்பியது. வெற்றி கொள்ளப்பட்ட நாடுகள் கிரேக்க குடியேற்ற நாடுகளானதால், பொதுவாகப் பேசப்பட்ட கொய்னி கிரேக்கு அந்த நாளின் சர்வதேச மொழியானது. பின்னால் பைபிளின் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைப் பதிவு செய்வதற்கு இந்த மொழிதான் பயன்படுத்தப்பட்டது.
அலெக்சாந்தரின் ராஜ்யம் பிளவுபட்டது
அலெக்சாந்தர் பாபிலோனைத் தன் தலைநகராகக் கட்டுவதற்கு விரும்பினான். ஆனால் இது நடக்காது. ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடாவுக்கு ஒரு பெரிய கொம்பு இருப்பதாக தீர்க்கதரிசனங்கள் விவரித்தன. இதைக் குறித்து தானியேலிடம் பின்வருமாறு சொல்லப்பட்டது:
“அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலு கொம்புகள் முளைத்தெழும்பினது. . . . ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.”—தானியேல் 8:8, 21, 22.
“அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல, அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.”—தானியேல் 11:4.
பைபிள் முன்னறிவித்தபடி, அலெக்சாந்தர் உலகத்தின் மீது ஆளுகை செய்தது மிகக் குறுகிய காலமாயிருந்தது. தன்னுடைய வெற்றிகரமான வாழ்க்கையின் உச்சிலிருந்தபோது, 32 வயதில்தானே அலெக்சாந்தரின் கண்மூடித்தனமான வெற்றிகள் முடிவுக்கு வந்தது. மலேரியா காய்ச்சல் ஏற்பட்டிருக்க, அவன் தொடர்ந்து விருந்துண்டுகொண்டும் வெறித்துக்கொண்டும் இருக்கத் திடீரென்று பொ. ச. மு. 323-ல் பாபிலோனில் மரித்தான். அவனுடைய உடல் எகிப்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அலெக்சாந்திரியாவில் அடக்கம்செய்யப்பட்டது. “முதலாம் ராஜா”வைக் குறித்த “பெரிய கொம்பு” முறிக்கப்பட்டது. அதற்குப் பின் அவனுடைய சாம்ராஜ்யத்துக்கு என்ன ஏற்பட்டது?
அவனுடைய ராஜ்யம் பிரிக்கப்படும், “ஆனாலும் அவனுடைய சந்ததியாருக்கு அல்ல,” என்று தீர்க்கதரிசனம் சொன்னது. அலெக்சாந்தரின் திறமையற்ற சகோதரன் பிலிப்பு அரிதாஸ் ஒரு குறுகிய காலத்துக்கு ஆட்சி செய்தான், ஆனால் அவன் கொல்லப்பட்டான். அதுபோலவே அலெக்சாந்தரின் சொந்த மகன் அலெக்சாந்தர் (அலெள) மற்றும் முறைகேடாகப் பிறந்த மகன் ஹெராக்ளஸ் (ஹெர்க்குலஸ்) என்பவர்களும் கொல்லப்பட்டார்கள். இப்படியாக மிகுந்த இரத்தஞ்சிந்திய மகா அலெக்சாந்தரின் வம்சம் அழிந்தது.
மேலும் “அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது,” என்றும் அவனுடைய ராஜ்யம் “வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும், ஆனாலும் . . . அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல” என்று முன்னுரைக்கப்பட்டது. இது நடந்ததா?
காலப்போக்கில், அலெக்சாந்தரின் பெரிய ராஜ்யம் அவனுடைய நான்கு தளபதிகளுக்கிடையே பிரிக்கப்பட்டது: (1) தளபதி காஸாண்டர்—மக்கெதோனியா மற்றும் கிரேக்கு தேசங்கள். (2) தளபதி லைஸிமாக்கஸ்—சிறிய ஆசியா மற்றும் ஐரோப்பிய திரேஸ். (3) தளபதி செலூக்கஸ் நிக்கேட்டர்—பாபிலோனியா, மேதியா, சீரியா, பெர்சியா மற்றும் சிந்து நதி வரையிலுமான கிழக்கு மாநிலங்கள். (4) தளபதி டாலமி லாகஸ்—எகிப்து, லிபியா, மற்றும் பலஸ்தீனா. முன்னறிவிக்கப்பட்டதுபோல் அலெக்சாந்தரின் ஒரே பெரிய ராஜ்யத்திலிருந்து நான்கு ஹெலனிக் அல்லது கிரேக்க ராஜ்யங்கள் எழும்பின.a
இவற்றில் அதிக காலம் நிலைநின்ற ராஜ்யம் எகிப்திலிருந்த டாலமிய ராஜ்யம். அது பொ.ச.மு. 30-ல் ரோமின் அதிகாரத்துக்குள்ளானது. இப்படியாக ரோம் கிரேக்கு ராஜ்யத்தின் இடத்தை எடுத்து மகா உலக வல்லரசுகளில் ஆறாவது வல்லரசாக ஆனது.
மனிதவர்க்கத்துக்கு முன் ஒளிமயமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன
ஒடுக்குதல் மிகுந்த உலக வல்லரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக என்றுமாய்த் தொடருமா? இல்லை, ஏனென்றால் அவற்றில் கடைசி வல்லரசின் முடிவுக்கு அண்மையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பைபிள் கூறுகிறது.—வெளிப்படுத்துதல் 17:10.
மிருகம்போன்ற இந்த மனித அரசாங்கங்களைப் பார்த்த பின்பு, தானியேல் வித்தியாசமான ஒன்றைப் பார்த்தான். பரலோகங்களின் தரிசனம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அங்கு “நீண்ட ஆயுசுள்ளவர்,” கடவுள் தாமே ராஜ்யத்தை பேராசைக் கொண்ட ஏதோ ஓர் எதிர்கால மனித அரசனிடம் கொடுப்பதை அல்ல, ஆனால் “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவரிடம்”—உயிர்த்தெழுப்பப்பட்ட, பரலோகத்திலுள்ள இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட”தைப் பார்த்தான்!—தானியேல் 7:9, 10, 13.
என்னே முரண்பாடு! போர் மனம்கொண்ட பூமியின் முன்னாள் அரசர்களின் ராஜ்யங்களிலிருந்து பரலோக ராஜ்யமும் அதன் ஆட்சியும் எவ்வளவு வித்தியாசமாயிருந்தது. உயர்த்தப்பட்ட இந்தப் பரலோக “மனுஷ குமாரனைக்” குறித்து தானியேல் பின்வருமாறு சொன்னான்: “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருயை கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.” (தானியேல் 7:14) அது சமாதானமும் நீதியும் மிகுந்த ராஜ்யமாக இருக்கும்.—ஏசாயா 9:6, 7.
மனித ஆட்சியின் பேராசையையும் வன்முறையையும் நாம் திரும்பிப்பார்க்கும்போது, இந்தப் பரலோக ராஜ்யம் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது, அதன் நீதியான பூமி முழுவதுமான ஆட்சி அண்மையிலிருக்கிறது என்பதை நான் அறிவதில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம்!—வெளிப்படுத்துதல் 12:10, 12.
“குறித்தக்காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது, முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.”—ஆபகூக் 2:3. (w88 4⁄15)
[அடிக்குறிப்புகள்]
a அலெக்சாந்தர் சாம்ராஜ்யத்தின் பிளவைப் பின்தொடர்ந்த கொந்தளிப்பான சம்பவங்கள், “வடதிசை ராஜா” “தென்திசை ராஜா” பற்றிய தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. தானியேல் அதிகாரம் 11-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தத் தீர்க்கதரிசனம், உவாட்ச் டவர் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் “உம்முடைய சித்தம் பூமியிலே செய்யப்படுவதாக” (Your Will Be Done on Earth) என்ற ஆங்கில புத்தகம், பக்கங்கள் 229-48-ல் தெளிவாக சிந்திக்கப்படுகிறது.
[பக்கம் 27-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
அலெக்சாந்தருடைய ஆட்சியின் பரப்பளவு
பெல்லா
பெல்லா
சர்தை
மகா கடல்
அலெக்சாந்திரியா
மோப் பட்டணம்
தேபேசு
இசுஸ்
தமஸ்கு
தீரு
எருசலேம்
காகமேலா
ஐபிராத்து நதி
டைக்ரிஸ் நதி
பாபிலோன்
அக்மேதா
சூசான்
பெர்சிபொலிஸ்
அலெக்சாந்திரியா எஸ்சேட்
டாக்ஸில்லா
சிந்து நதி
[பக்கம் 29-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
அலெக்சாந்தர் சாம்ராஜ்யத்தின் பிளவு
பெல்லா
லைஸிமாக்கியா
காஸாண்டர்
லைஸிமாக்கஸ்
மகா கடல்
அலெக்சாந்திரியா
டாலமி லாகஸ்
அந்தியோகியா
செலூக்கஸ் நிக்கேட்டர்
செலுக்கியா
[பக்கம் 28-ன் வரைப்படம்]
நவீன கால அலெக்சாந்திரியாவுக்கு அண்மையிலிருக்கும் கரையோர எல்லை