அதிகாரம் மூன்று
சோதனையிலும் யெகோவாவிற்கு உண்மையாயிருத்தல்!
தானியேல் தீர்க்கதரிசன புத்தக அரங்கின் திரை விலக, காட்சி ஆரம்பமாகிறது. பின்னணி: சர்வதேச அளவில் திருப்புக்கட்டங்கள் ஏற்பட்ட சமயம். அசீரியாவின் தலைநகரான நினிவே சமீபத்தில்தான் கைப்பற்றப்பட்டிருக்கிறது. யூதாவின் தெற்கே வல்லமை இழந்து நாதியில்லாமல் கிடக்கிறது எகிப்து. அதிகார ஏணியின் உச்சியில் இடம்பிடிக்க, உலக வல்லரசாய் உருவாகிக்கொண்டிருக்கிறது பாபிலோன்.
2 பொ.ச.மு. 625-ல் எகிப்திய பார்வோன் நேகோ, தெற்கே பாபிலோனிய ஆக்கிரமிப்பை தடுக்கும் இறுதி முயற்சியில் முழு மூச்சாய் இறங்கினார். அதற்காக ஐப்பிராத்து நதியின் வட கரையோரமாய் அமைந்திருந்த கர்கேமிசுக்கு படையெடுத்துச் சென்றார். கர்கேமிசு யுத்தம் என பிற்பாடு அழைக்கப்பட்ட அது தீர்வான, சரித்திர முக்கியத்துவம் பெற்ற சம்பவமாயிற்று. பட்டத்து இளவரசரான நேபுகாத்நேச்சார் தலைமையில் வந்த பாபிலோனிய படை, பார்வோன் நேகோவின் படைகளை வீழ்த்தி சின்னாபின்னமாக்கியது. (எரேமியா 46:2) நேபுகாத்நேச்சார் சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடினார். சிரியாவையும் பலஸ்தீனாவையும் ஒரே வீச்சில் வீழ்த்தி, பல காரணங்களை முன்னிட்டு இப்பகுதியில் எகிப்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது தகப்பன் நபோபொலாசாரின் சாவினால்தான் அவரது மும்முரமான போர் நடவடிக்கை தற்காலிகமாக நின்றது.
3 அதற்கடுத்த வருடம், நேபுகாத்நேச்சார் பாபிலோனின் ராஜாவாக, சிரியாவிலும் பலஸ்தீனாவிலும் மீண்டும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்தக் காலப்பகுதியில்தான் முதன்முறையாக அவர் எருசலேமுக்கு வந்தார். பைபிள் சொல்கிறது: “அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.”—2 இராஜாக்கள் 24:1.
எருசலேமில் நேபுகாத்நேச்சார்
4 “மூன்று வருஷம்” என்ற பதம் நமக்கு விசேஷ அக்கறைக்குரியது. ஏனெனில் தானியேலின் ஆரம்ப வார்த்தைகள் சொல்கின்றன: ‘யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றுகை போட்டான்.’ (தானியேல் 1:1) பொ.ச.மு. 628 முதல் 618 வரை அரசாண்ட யோயாக்கீமின் அந்த முழு ஆட்சிக் காலத்தின் மூன்றாம் வருடத்தில், நேபுகாத்நேச்சார் ‘பாபிலோனின் ராஜாவாக’ முடிசூட்டப்படவே இல்லை. அப்போது அவர் பட்டத்து இளவரசராகவே இருந்தார். பொ.ச.மு. 620-ல் நேபுகாத்நேச்சார் யோயாக்கீமை கப்பம் கட்டும்படி வற்புறுத்தினார். ஆனால் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, யோயாக்கீம் கலகம் செய்தார். இவ்வாறு, பொ.ச.மு. 618-ல், அதாவது யோயாக்கீம் பாபிலோனின்கீழ் சிற்றரசராய் சேவித்த மூன்றாம் வருடத்தில், கலகம் செய்த அவரை தண்டிக்க ராஜா நேபுகாத்நேச்சார் இரண்டாவது முறை எருசலேமுக்கு வந்தார்.
5 இவ்வாறு நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டபோது, “ஆண்டவர், யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.” (தானியேல் 1:2) இந்த முற்றுகையின் ஆரம்ப காலத்தில் யோயாக்கீம் சதிசெய்து கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கலகத்தில் உயிரை இழந்திருக்கலாம். (எரேமியா 22:18, 19) பொ.ச.மு. 618-ல் அவரது 18 வயது மகனான யோயாக்கீன் அரியணையில் ஏறினார். ஆனால் அவரது ஆட்சி வெறும் மூன்று மாதம், பத்து நாட்களே நீடித்தது. பொ.ச.மு. 617-ல் அவர் சரணடைந்தார்.—2 இராஜாக்கள் 24:10-15-ஐ ஒப்பிடுக.
6 நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்த பரிசுத்த பாத்திரங்களை கொள்ளைப் பொருட்களாக எடுத்துச் சென்றார். ‘அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய [மார்டுக், அல்லது எபிரெயுவில் மெரொதாக் என்ற தேவனுடைய] பண்டசாலைக்குள் [“பொக்கிஷசாலைக்குள்,” NW] வைத்தார்.’ (தானியேல் 1:2; எரேமியா 50:2) நேபுகாத்நேச்சார் மார்டுக் ஆலயத்தைப் பற்றி இவ்வாறு சொன்னதாய் ஒரு பாபிலோனிய கல்வெட்டும் குறிப்பிடுகிறது: “வெள்ளியையும் பொன்னையும் விலையுயர்ந்த ரத்தினங்களையும் அங்கே வைத்தேன் . . . என் ராஜ்யத்தின் பொக்கிஷசாலையை அங்கே ஏற்படுத்தினேன்.” பெல்ஷாத்சார் ராஜாவின் காலத்தைச் சிந்திக்கையில் மறுபடியும் இந்தப் பரிசுத்த பாத்திரங்களைப் பற்றி வாசிப்போம்.—தானியேல் 5:1-4.
இளைஞர்களில் இரத்தினங்கள்
7 யெகோவாவின் ஆலயத்துப் பொக்கிஷங்கள் மட்டுமே பாபிலோனுக்கு எடுத்து வரப்படவில்லை. பதிவு சொல்கிறது: “அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் [“பிள்ளைகளை,” NW] கொண்டுவர . . . ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.”—தானியேல் 1:3, 4.
8 யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? “அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்” என பைபிள் சொல்கிறது. (தானியேல் 1:6) தானியேலையும் அவரது நண்பர்களையும் பற்றி தெளிவான பின்னணி இல்லாவிட்டாலும், இந்த வசனம் கொஞ்சம் விவரமளிக்கிறது. உதாரணத்திற்கு, அவர்கள் அரச கோத்திரமான ‘யூதாவின் புத்திரர்கள்’ என வாசிக்கிறோம். அவர்கள் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களோ இல்லையோ, சற்று செல்வாக்குள்ள முக்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று நம்பலாம். உடலிலும் மனதிலும் எந்தக் குறையும் இல்லாததோடு, அவர்கள் ஞானத்திலும் அறிவிலும் விவேகத்திலும் சிறந்து விளங்கினர். அதுவும் ‘பிள்ளைகள்’ என அழைக்கப்படும் வயதிலேயே, ஒருவேளை வாலிபப் பிராயத்தின் ஆரம்பத்திலேயே இந்தளவு தேறியிருந்தார்கள். தானியேலும் அவரது நண்பர்களும் எருசலேமின் இளைஞர்களில் தலைசிறந்தவர்களாய்—இரத்தினங்களாய்—இருந்திருக்க வேண்டும்.
9 இந்த வாலிபர்களது பெற்றோர்களைப் பற்றி பதிவு எதுவும் சொல்வதில்லை. இருந்தாலும் அவர்கள் பெற்றோருக்குரிய கடமைகளைச் சரிவர செய்த, தெய்வபக்தியுள்ள நபர்கள் என்பது தெளிவாய்த் தெரிகிறது. அச்சமயத்தில் எருசலேமில், முக்கியமாக “ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும்” ஒழுக்கமும் ஆன்மீகமும் சீரழிந்திருந்தது. இதை வைத்துப் பார்க்கும்போது, தானியேலும் அவரது நண்பர்களும் காட்டிய அருமையான குணங்கள் தற்செயலாக தோன்றியிருக்க முடியாது என்பது தெளிவாகிறது. மகன்கள் தூர தேசத்திற்கு கொண்டுசெல்லப்படுவதைப் பார்த்து, பெற்ற மனங்கள் துடிதுடித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் விளைவை மாத்திரம் அவர்கள் அறிந்திருந்தால், எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார்கள்! பெற்றோர் பிள்ளைகளை யெகோவாவிற்கேற்ற ‘சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பது’ எவ்வளவு முக்கியம்!—எபேசியர் 6:4.
மனதை மாற்ற முயற்சி
10 உடனடியாக, நாடுகடத்தப்பட்ட இந்த இளம் வாலிபர்களின் மனதை மாற்றும் முயற்சி ஆரம்பமானது. பாபிலோனிய அமைப்புமுறைக்கு ஏற்றவாறு இந்த எபிரெய இளைஞர்களை முழுமையாய் மாற்ற, அவர்களுக்கு “கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்க” ராஜா தன் பிரதானிகளுக்குக் கட்டளையிட்டார். (தானியேல் 1:4) இது சாதாரண கல்வியே அல்ல. த இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இக்கல்வியை இவ்வாறு விளக்குகிறது: “அது சுமேரிய, அக்காதிய, அரமிய மொழிகளையும் . . . மற்ற மொழிகளையும், அம்மொழிகளில் எழுதப்பட்ட ஏராளமான புத்தகங்களையும் பற்றிய படிப்பு.” ‘ஏராளமான புத்தகங்கள்’ சரித்திரம், கணிதம், வானவியல் போன்றவை. இருந்தாலும், “சகுனம், சோதிடம் சம்பந்தப்பட்ட மத புத்தகங்களே . . . முக்கிய பங்கு வகித்தன.”
11 பாபிலோனிய அரண்மனை வாழ்வின் பழக்கவழக்கங்களையும் கலாச்சாரங்களையும் இந்த எபிரெய வாலிபர்களின் ரத்தத்தில் கலக்க, “ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.” (தானியேல் 1:5) மேலும், “பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.” (தானியேல் 1:7) பைபிள் காலங்களில், ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவத்தைக் குறிக்க அவருக்கு புதிய பெயரளிப்பது பொதுவான வழக்கம். உதாரணத்திற்கு, ஆபிராமுக்கு ஆபிரகாம் என்றும் சாராய்க்கு சாராள் என்றும் யெகோவா பெயர் வைத்தார். (ஆதியாகமம் 17:5, 15, 16) மனிதரின் விஷயத்தில், அதிகாரமும் ஆதிக்கமும் உள்ள ஒருவரால் மட்டுமே மற்றொருவருடைய பெயரை மாற்ற முடியும். யோசேப்பு எகிப்தின் உணவு மந்திரியானபோது பார்வோன் அவருக்கு சாப்நாத்பன்னேயா என்று பெயரிட்டார்.—ஆதியாகமம் 41:44, 45; ஒப்பிடுக: 2 இராஜாக்கள் 23:34; 24:17.
12 தானியேலையும் அவரது மூன்று எபிரெய நண்பர்களையும் பொறுத்தவரை, பெயர் மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்களது பெற்றோர் வைத்த பெயர்கள் யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருந்தன. “தானியேல்” என்பதன் அர்த்தம் “கடவுளே என் நியாயாதிபதி.” “அனனியா” என்றால் “யெகோவா தயவுகாட்டியிருக்கிறார்” என அர்த்தம். “மீஷாவேல்” என்றால் “கடவுளுக்கு நிகர் யார்?” என அர்த்தம். “அசரியா” என்பதற்கு “யெகோவா உதவியிருக்கிறார்” என அர்த்தம். யெகோவா தேவனின் துணையோடு, அவரது உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரர்களாய் தங்கள் மகன்கள் வளர்வதைப் பார்ப்பதே அந்தப் பெற்றோர்களின் எல்லையற்ற ஆசை என்பதில் சந்தேகமில்லை.
13 இருந்தாலும் இந்த நான்கு எபிரெயர்களுக்கும் கொடுக்கப்பட்ட புதிய பெயர்கள் பொய் கடவுட்களோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. அப்படிப்பட்ட கடவுட்கள் உண்மை தேவனை பணிய வைத்துவிட்டதாக காட்டுவதற்கே இப்படி செய்யப்பட்டது. இந்த வாலிபர்களின் விசுவாசத்தைக் கவிழ்க்க என்னே ஒரு சதிச்செயல்!
14 தானியேலின் பெயர் பெல்தெஷாத்சார் என மாற்றப்பட்டது, அதற்கு “ராஜாவின் உயிரைக் காத்திடு” என அர்த்தம். அத்தாட்சியின்படி இது, பாபிலோனின் முக்கிய தெய்வமாகிய பெல் அல்லது மார்டுக்கிற்காக ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தின் சுருக்கம். தானியேலுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததில் நேபுகாத்நேச்சாருக்கு பங்கு இருந்ததோ இல்லையோ, அது ‘[தன்] தேவனுடைய நாமத்தின்படி’ இருந்ததைக் குறித்து பெருமைப்பட்டுக்கொண்டார். (தானியேல் 4:8) அனனியாவிற்கு சாத்ராக் என்ற பெயர் தரப்பட்டது; சில நிபுணர்களின்படி இது “ஆக்கூவின் கட்டளை” என அர்த்தப்படுத்தும் கூட்டுப் பெயர். ஆக்கூ என்பது சுமேரியக் கடவுளின் பெயர் என்பது சுவாரஸ்யமளிக்கும் விஷயம். மீஷாவேலுக்கு மேஷாக் (ஒருவேளை, மிஷாஆக்கூ) என பெயரிடப்பட்டது. “கடவுளுக்கு நிகர் யார்?” என்பது, “ஆக்கூவுக்கு நிகர் யார்?” என இவ்வாறு தந்திரமாய் திரிக்கப்பட்டது. அசரியாவின் பாபிலோனிய பெயர் ஆபேத்நேகோ; அதன் அர்த்தம் “நேகோவின் ஊழியன்.” “நேகோ” என்பது “நேபோ” என்பதன் திரிபு. நேபோ என்பது ஒரு கடவுளின் பெயர். இப்பெயரின் அடிப்படையிலேயே அநேக பாபிலோனிய ஆட்சியாளர்களுக்கு பெயரிருந்தன.
யெகோவாவிற்கு உத்தமத்தைக் காக்க உறுதி
15 பாபிலோனிய பெயர்களை சூட்டி, அந்நாட்டு கல்வியைத் திணித்து, விசேஷ உணவருந்த வற்புறுத்தியதன் நோக்கம், தானியேலையும் மூன்று இளம் எபிரெயர்களையும் பாபிலோனிய வாழ்க்கை முறையோடு ஒன்றரக் கலப்பதற்காக மட்டுமே அல்ல. அவர்களது சொந்த கடவுளான யெகோவாவிடமிருந்தும் அவர்களது மத பயிற்றுவிப்பிலிருந்தும் வளர்ப்பு சூழலிலிருந்தும் பிரிப்பதற்காகவுமே. இவ்வளவு அழுத்தங்களையும் சோதனைகளையும் இந்த வாலிபர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்?
16 ஏவப்பட்டு எழுதப்பட்ட பதிவு சொல்கிறது: ‘தானியேல், ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான்.’ (தானியேல் 1:8அ) தானியேலைப் பற்றியே இது குறிப்பிடுகிறது என்றாலும், அவரது தீர்மானத்தை அவரது மூன்று நண்பர்களும் ஆதரித்தார்கள் என்பதை அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தெளிவாய் காட்டுகின்றன. ‘இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான்’ என்ற வார்த்தைகள், தானியேலின் பெற்றோர்களும் மற்றவர்களும் அவருக்கு போதித்தது அவரது இருதயத்தைச் சென்றெட்டியிருந்ததைக் காட்டுகின்றன. அதேவிதமான பயிற்றுவிப்புதான் மற்ற மூன்று எபிரெயர்களும் தீர்மானம் எடுக்க உதவியது என்பதில் சந்தேகமில்லை. பிள்ளைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும், அறியாப் பருவம் என நாம் நினைத்தாலும், அவர்களைப் பயிற்றுவிப்பது எவ்வளவு பயன்மிக்கது என்பதற்கு இது தெளிவான எடுத்துக்காட்டு.—நீதிமொழிகள் 22:6; 2 தீமோத்தேயு 3:14, 15.
17 ஏன் அந்த எபிரெய வாலிபர்கள், போஜனத்தையும் திராட்சரசத்தையும் மாத்திரம் மறுத்து, மற்ற ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்? ‘தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று’ தானியேல் மனதில் தீர்மானித்ததே இதற்கான தெளிவான பதில். பாபிலோனிய பெயர் சூட்டப்படுவதும், “கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும்” கற்றுக்கொள்வதும் ஆட்சேபணைக்குரியது என்றாலும், அவை ஒருவரை தீட்டுப்படுத்தும் என சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மோசேயின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டிருந்தாலும்’ தொடர்ந்து யெகோவாவிற்கு உத்தமமாய் இருந்தார். அவரது தாய் தந்தை வளர்த்த விதமே, அவரது வாழ்க்கையென்னும் கட்டடத்திற்கு அசைக்க முடியாத அஸ்திவாரமாயிற்று. இதனால், ‘விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டான்.’—அப்போஸ்தலர் 7:22; எபிரெயர் 11:24, 25.
18 பாபிலோனிய ராஜாவின் போஜனங்கள் எந்த விதத்தில் அந்த நான்கு வாலிபர்களையும் தீட்டுப்படுத்தும்? முதலாவதாக, மோசேயின் நியாயப்பிரமாணம் தடைசெய்த பதார்த்தங்கள் அப்போஜனத்தில் இருந்திருக்கலாம். உதாரணத்திற்கு, நியாயப்பிரமாணத்தின்படி இஸ்ரவேலர்கள் சாப்பிடக்கூடாத அசுத்த மிருகங்களை பாபிலோனியர்கள் சாப்பிட்டார்கள். (லேவியராகமம் 11:1-31; 20:24-26; உபாகமம் 14:3-20) இரண்டாவதாக, இரத்தத்தை நீக்கிவிட்டு இறைச்சி சாப்பிடும் பழக்கம் பாபிலோனியர்களுக்கு இல்லை. இவ்வாறு இரத்தத்தோடு மாம்சத்தைப் புசிப்பது யெகோவாவின் சட்டத்திற்கு எதிரான பாதகம். (ஆதியாகமம் 9:1, 3, 4; லேவியராகமம் 17:10-12; உபாகமம் 12:23-25) மூன்றாவதாக, பொய் வணக்கத்தார், விருந்தின்போது விக்கிரகங்களுக்கு படைத்துவிட்டுதான் உணவு அருந்துவார்கள். யெகோவாவின் வணக்கத்தாருக்கு சிறிதும் சம்பந்தமில்லாத செயல்களாயிற்றே இவை! (1 கொரிந்தியர் 10:20-22-ஐ ஒப்பிடுக.) இறுதியாக, கொழுப்புமிக்க பதார்த்தங்களையும் மதுபானங்களையும் தினந்தினம் அருந்தினால் வாலிபர்கள் என்ன, எல்லாருடைய உடல்நலமும்தான் கெட்டுப்போகும்.
19 எதைச் செய்ய வேண்டுமென தெரிந்திருப்பது அவசியம்தான். ஆனால் அழுத்தங்கள் அல்லது சோதனைகள் வரும்போது துணிந்து அதைச் செய்வதே அதைவிட அவசியம். பெற்றோர்களும் நண்பர்களும் தொலைவில் இருக்கிறார்கள், இங்கு என்ன செய்தாலும் அவர்களுக்குத் தெரியவா போகிறது என தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் மனக்கணக்கு போட்டிருக்கலாம். இது ராஜாவே கொடுத்த கட்டளை என்பதால் கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழியேயில்லை எனவும் சாக்கு சொல்லியிருக்கலாம். அதுமட்டுமல்ல, மற்ற வாலிபர்கள் அந்த ஏற்பாடுகளுக்கு மறுபேச்சில்லாமல் கீழ்ப்படிந்தார்கள், அதைக் கஷ்டமாக நினைக்காமல் அரிய வாய்ப்பாகக்கூட கருதினார்கள்! ஆனால் அப்படிப்பட்ட தவறான சிந்தை, இரகசிய பாவம் என்ற படுகுழியில் ஒருவரை சுலபமாய் தள்ளிவிடும். அநேக வாலிபர்களுக்கு இது ஒரு கண்ணி. ‘யெகோவாவின் கண்கள் எல்லாவிடங்களிலும்’ பார்க்கிறது என்றும், “ஒவ்வொரு செய்கையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், கடவுள் நியாய விசாரணைக்குக் கொண்டுவருவார்” என்றும் அந்த எபிரெய வாலிபர்கள் அறிந்திருந்தனர். (நீதிமொழிகள் 15:3; பிரசங்கி 12:14; திருத்திய மொழிபெயர்ப்பு.) இந்த உண்மையுள்ள இளைஞர்களின் போக்கு நம் அனைவருக்கும் பாடமாய் இருக்கட்டும்.
வீரமும் விடாமுயற்சியும் வீண்போகவில்லை
20 தீட்டுப்படுத்தும் காரியங்களை தவிர்ப்பதென மனதில் உறுதிபூண்ட தானியேல், அதற்கேற்ப செயல்படவும் ஆரம்பித்தார். அவர், ‘தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டார் [“வேண்டிக்கொண்டே இருந்தார்,” NW].’ (தானியேல் 1:8ஆ) “வேண்டிக்கொண்டே இருந்தார்”—அழுத்தம்திருத்தமாக வாசிக்கவேண்டிய வார்த்தைகள் இவை. ஆம், சோதனைகளைத் தாங்கவும் பலவீனங்களை மேற்கொள்ளவும் விரும்பினால், தளராத முயற்சி தேவை.—கலாத்தியர் 6:9.
21 தானியேலின் விஷயத்தில், தளராத முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. “தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.” (தானியேல் 1:9) ஆக, யெகோவாவின் ஆசீர்வாதத்தாலேயே எல்லாம் நல்லபடியாக நடந்தது, தானியேலும் அவரது நண்பர்களும் இனியவர்களாய் இருந்ததாலோ அறிவாளிகளாய் இருந்ததாலோ அல்ல. கண்டிப்பாக இந்த எபிரெய நீதிமொழியை தானியேல் நினைத்துப் பார்த்திருப்பார்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:5, 6) இந்த ஆலோசனையைப் பின்பற்றியதற்கு தக்க சன்மானம் கிடைக்காமல் போகவில்லை.
22 முதலில் பிரதானிகளின் தலைவன் ஆட்சேபித்தான். “உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காண வேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.” (தானியேல் 1:10) அவன் சொன்ன சொல்லிலும் காட்டிய பயத்திலும் நியாயம் இருந்ததுதான். ராஜா நேபுகாத்நேச்சாருக்குக் கீழ்ப்படியாமல் போவதா?! அவரது கட்டளைக்கு எதிராக நடந்தால் தன் தலைக்கே ஆபத்து வரும் என்பதை உணர்ந்தான் அந்தத் தலைவன். இப்போது தானியேல் என்ன செய்வார்?
23 இங்குதான் விவேகமும் ஞானமும் கைகொடுத்தன. “சாந்தமான பதில் கோபத்தை அகற்றும், கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பிவிடும்” என்ற நீதிமொழியை இளம் தானியேல் ஒருவேளை நினைத்துப் பார்த்திருப்பார். (நீதிமொழிகள் 15:1, தி.மொ.) கேட்டது கிடைக்கவேண்டுமென ஒற்றைக்காலில் நின்று, மற்றவர்களின் ஆத்திரத்தைக் கிளப்பி, அவர்கள் கையாலேயே கொல்லப்படுவதற்குப் பதிலாக தானியேல் விஷயத்தை அப்போதைக்கு விட்டுவிட்டார். அதன்பின் சரியான சமயத்தில் ‘விசாரணைக்காரனை’ அணுகினார். இவர் ராஜாவுக்கு நேரடியாக கணக்குக்கொடுக்க வேண்டிய பொறுப்பில் இல்லாததால் சற்று வளைந்துகொடுக்க மனமுள்ளவராய் இருந்திருக்கலாம்.—தானியேல் 1:11.
பத்துநாள் சோதனை நடத்த கோரிக்கை
24 ஒரு சோதனை நடத்தும்படி தானியேல் விசாரணைக்காரனிடம் கேட்டுக்கொண்டார்: “பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும்.”—தானியேல் 1:12, 13.
25 பத்து நாட்கள் ‘மரக்கறியும் தண்ணீருமே’ கதியென்று இருந்தால், மற்ற வாலிபர்களது முகங்களைப் பார்க்கிலும் இவர்களது முகங்கள் ‘வாடிப்போய்’ காணப்படுமோ? “மரக்கறி” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “விதைகள்” என்பதாகும். சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இதை “பயறு” என குறிப்பிடுகின்றன. பயறு என்பது, “(பட்டானி, பீன்ஸ், துவரை போன்ற) பல்வேறு முழுப் பருப்புகள்” என பொதுவாய் விளக்கப்படுகிறது. அந்த வசனத்தின் சூழமைவைப் பார்த்தால் வெறுமனே முழுப் பருப்புகள் மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதாய் தெரியவில்லை என சில வல்லுநர்கள் சொல்கின்றனர். இது சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் சொல்கிறது: “கொழுப்புமிகுந்த பதார்த்தங்களும் இறைச்சிகளும் நிறைந்த அரண்மனை சாப்பாட்டிற்குப் பதிலாக எளியோரின் சாதாரண காய்கறி உணவையே தானியேலும் அவரது நண்பர்களும் கேட்டனர்.” ஆகவே மரக்கறிகள் என சொல்கையில் பீன்ஸ், வெள்ளறிக்காய், வெள்ளைப்பூண்டு, லீக் (leek) என்ற ஒருவகை வெங்காயம், துவரை, பூசணி, வெங்காயம், வெவ்வேறு தானியங்களிலிருந்து செய்யப்பட்ட ரொட்டி ஆகிய சத்துள்ள உணவுகளாய் இருந்திருக்கலாம். இதைப்போய் எவராவது சத்து இல்லாத சாப்பாடு என சொல்வார்களா? விசாரணைக்காரனுக்கு விவரம் புரிந்திருக்கவேண்டும். ஆகவே இறுதியில் “அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.” (தானியேல் 1:14) அதன் விளைவென்ன?
26 “பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.” (தானியேல் 1:15) இதனால் கொழுப்புமிக்க அசைவ உணவைவிட காய்கறி உணவு மேலானதென அர்த்தமாகாது. எந்த விதமான உணவாக இருந்தாலும், பத்தே நாட்களில் எந்த வித்தியாசமும் தெரியாது, ஆனால் யெகோவாவிற்கு தம் நோக்கத்தை நிறைவேற்ற அந்தப் பத்து நாட்களே அதிகம். “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என அவரது வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 10:22) அந்த நான்கு எபிரெய இளைஞர்களும் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தார்கள், அவரும் அவர்களைக் கைவிடவேயில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயேசு கிறிஸ்து 40 நாட்களாக உணவில்லாமல் சமாளித்தார். இதைப் பற்றி சொல்கையில் உபாகமம் 8:3-ஐ மேற்கோள் காட்டினார்: “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” இதற்குக் கன கச்சித உதாரணமாய், தானியேலையும் அவரது நண்பர்களையும் சொல்லலாம்.
போஜனத்திற்கும் திராட்சரசத்திற்கும் பதிலாக விவேகமும் ஞானமும்
27 அந்தப் பத்து நாட்கள் வெறும் ஒரு பரீட்சைதான், ஆனால் பரீட்சையின் முடிவோ அபாரம். “ஆகவே [விசாரிப்புக்காரனான] மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.” (தானியேல் 1:16) பயிற்சி பெற்ற மற்ற இளைஞர்கள் தானியேலையும் அவரது நண்பர்களையும் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என சொல்ல வேண்டியதேயில்லை. ராஜ விருந்தைப் போய் வேண்டாமென்று சொல்லி தினமும் காய்கறி சாப்பிடுவது அவர்களுக்கு முட்டாள்தனமாய் தோன்றியிருக்கும். ஆனால் மாபெரும் சோதனைகளும் பரீட்சைகளும் நெருங்கிக்கொண்டிருந்தன. ஆகவே எபிரெய இளைஞர்கள் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு உஷாராய், விழித்திருக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவின் மீது நம்பிக்கை வைத்தால் மட்டுமே விசுவாசப் பரீட்சையில் அவர்களால் தேர்ச்சிபெற முடியும்.—யோசுவா 1:7-ஐ ஒப்பிடுக.
28 யெகோவா இந்த வாலிபர்களுக்குத் துணைபுரிந்தார் என்பது அடுத்த வசனத்திலிருந்து தெளிவாக தெரிகிறது: “இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.” (தானியேல் 1:17) வரவிருந்த சோதனைகளை மேற்கொள்ள, அவர்களுக்கு சரீர பலத்தையும் ஆரோக்கியத்தையும்விட அதிகம் தேவைப்பட்டது. “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், பக்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கு . . . தப்புவிக்கப்படுவாய்.” (நீதிமொழிகள் 2:10-12, 15) சோதனைகளைத் தாங்கிக்கொள்ளும்படி இந்த உண்மையுள்ள நான்கு வாலிபர்களையும் பக்குவப்படுத்த, இவற்றைத்தான் யெகோவா அருளினார்.
29 ‘தானியேல் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவரானார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக அவர் ஞானதிருஷ்டி பெற்றுவிட்டார் என அர்த்தமல்ல. சுவாரஸ்யமளிக்கும் விஷயம்: முக்கியமான எபிரெய தீர்க்கதரிசிகளில் ஒருவராக தானியேல் கருதப்பட்டாலும், “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது,” “சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” போன்ற வாக்கியங்களை எழுதும்படி அவர் ஏவப்படவில்லை. (ஏசாயா 28:16; எரேமியா 6:9) இருந்தாலும், யெகோவாவின் நோக்கங்களை தெரியப்படுத்திய தரிசனங்களையும் சொப்பனங்களையும் அவரது பரிசுத்த ஆவியின் உதவியால்தான் தானியேல் புரிந்துகொண்டார், அவற்றை விளக்கவும் செய்தார்.
கடைசிக்கட்ட சோதனை
30 மூன்று வருட கல்வியும் பயிற்றுவிப்பும் முடிவுக்கு வந்தன. அடுத்து வந்தது கடைசிக்கட்ட சோதனை—ராஜா இவர்களை நேரடியாக பேட்டிகாண்பார். “அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.” (தானியேல் 1:18) இந்த நான்கு வாலிபர்களும் ராஜாவுக்குப் பதில்சொல்ல வேண்டிய கட்டம். பாபிலோனிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமல் யெகோவாவின் சட்டங்களைப் பற்றியிருப்பதால் அவர்களுக்கு உண்மையிலேயே நன்மை கிட்டுமா?
31 “ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.” (தானியேல் 1:19) கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை சரியே என்பது முற்றும் முழுமையாய் நிரூபணமாகிவிட்டது! தங்கள் விசுவாசத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு உணவருந்தியது பைத்தியக்காரத்தனமே அல்ல. சின்ன விஷயங்களாக தோன்றியவற்றிலும் உண்மையோடிருந்ததால் தானியேலும் அவரது நண்பர்களும் பெரும் ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள். ‘ராஜசமுகத்தில் நிற்கும்’ அரிய வாய்ப்பைப் பெறுவதிலேயே, பயிற்சி பெற்ற எல்லா இளைஞர்களும் குறியாக இருந்தார்கள். இந்த நான்கு எபிரெய வாலிபர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனரா என பைபிள் சொல்வதில்லை. எப்படியிருந்தாலும், விசுவாசத்தினால் “மிகுந்த பலன்” கண்டார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.—சங்கீதம் 19:11.
32 ‘தன் வேலையில் சாமர்த்தியமுள்ளவன் . . . அரசன்முன் நிற்பானே’ என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:29, தி.மொ.) இவ்வாறு தானியேலும் அனனியாவும் மீஷாவேலும் அசரியாவும் நேபுகாத்நேச்சார் அரசன் முன் நின்றார்கள். அதாவது அவரது அரசவையில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவை எல்லாவற்றின் பின்னணியிலும் யெகோவா இருந்து செயல்பட்டது தெளிவாய் தெரிகிறது. அதாவது, இந்த இளைஞர்கள் மூலம், விசேஷமாய் தானியேல் மூலம் தெய்வீக நோக்கத்தின் முக்கிய அம்சங்கள் தெரிவிக்கப்படும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். நேபுகாத்நேச்சாரின் அரசவையில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டது பாக்கியம் என்றாலும் சர்வலோக ராஜாவான யெகோவாவினால் இப்படி அருமையாக பயன்படுத்தப்படுவது அதைவிட எவ்வளவு பெரிய பாக்கியம்!
33 அரசவையில் இருந்த எல்லா ஆலோசகர்களையும் ஞானிகளையும் விஞ்சுமளவுக்கு இந்த நான்கு எபிரெய வாலிபர்களுக்கு ஞானத்தையும் விவேகத்தையும் யெகோவா அருளினார் என நேபுகாத்நேச்சார் விரைவில் அறிந்துகொண்டார். “ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும்விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.” (தானியேல் 1:20, பொ.மொ.) சிறந்தவர்களாய் இருக்கத்தானே செய்வார்கள். ‘மந்திரவாதிகளும்,’ ‘மாயவித்தைக்காரர்களும்’ பாபிலோனிய மூடநம்பிக்கை சார்ந்த உதவாத கல்வியையே நம்பியிருந்தார்கள், தானியேலும் அவரது நண்பர்களுமோ பரத்திலிருந்து வரும் ஞானத்தில் நம்பிக்கை வைத்தார்கள். அது எங்கே, இது எங்கே, இரண்டையும் ஒப்பிடவே முடியாது, பின் போட்டிக்கு ஏது இடம்?
34 ஆண்டுகள் பல ஓடியிருந்தாலும் நிலைமை ஒன்றும் மாறவில்லை. கிரேக்க தத்துவமும் ரோம சட்டதிட்டங்களும் புழக்கத்திலிருந்த பொ.ச. முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதும்படி ஏவப்பட்டார்: “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக.” (1 கொரிந்தியர் 3:19-21) இன்று, நாம் யெகோவா கற்பித்திருப்பவற்றை உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும். உலகின் பகட்டுகளையும் மினுக்குகளையும் கண்டு மயங்கிவிடக்கூடாது.—1 யோவான் 2:15-17.
இறுதிவரை விசுவாசம்
35 அனனியாவும் மீஷாவேலும் அசரியாவும் காட்டிய உறுதியான விசுவாசத்தை, தானியேல் 3-ஆம் அதிகாரம் தத்ரூபமாய் படம்பிடித்துக் காட்டுகிறது. நேபுகாத்நேச்சார் தூரா சமபூமியில் நிறுத்திய பொற்சிலையை வணங்க மறுத்ததால் இவர்கள் எரிகிற அக்கினிச்சூளையில் போடப்பட்ட சம்பவம் அது. தேவபயமுள்ள இந்த எபிரெயர்கள் மரணம்வரை யெகோவாவிற்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பவுல், “விசுவாசத்தினாலே . . . அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்” என குறிப்பிட்டது இவர்களைப் பற்றியேதான். (எபிரெயர் 11:33, 34) யெகோவாவின் ஊழியர்கள் அனைவருக்கும், இளையோருக்கும்சரி முதியோருக்கும்சரி இவர்கள் தலைசிறந்த உதாரண புருஷர்கள்.
36 தானியேலைப் பற்றி 1-ம் அதிகாரம் கடைசி வசனம் சொல்கிறது: “கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.” பொ.ச.மு. 539-ல் கோரேஸ் பாபிலோனை ஒரே இரவில் வீழ்த்தினார் என சரித்திரம் காட்டுகிறது. தானியேலுக்கிருந்த பேரும் புகழும் கோரேஸின் அவையில் தொடர்ந்து பணியாற்ற காரணமானது என அத்தாட்சி காட்டுகிறது. சொல்லப்போனால், “பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே” யெகோவா முக்கியமான ஒன்றை தானியேலுக்கு வெளிப்படுத்தினார் என தானியேல் 10:1 சொல்கிறது. பொ.ச.மு. 617-ல் பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்படுகையில் அவர் இளைஞரென்றால், அந்தக் கடைசி தரிசனத்தைப் பெற்றபோது அவருக்கு கிட்டத்தட்ட 100 வயதாகியிருக்கும். யெகோவாவை இவ்வளவு நீண்ட காலம் உண்மையோடு சேவிக்கும் என்னே பாக்கியம் பெற்றார்!
37 தானியேல் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரம், நான்கு உண்மையுள்ள வாலிபர்கள் சோதனைகளை வெற்றிகரமாக சமாளித்ததைப் பற்றிய பதிவு மாத்திரமே அல்ல. யெகோவா தமக்கு விருப்பமான எவரை வேண்டுமானாலும் பயன்படுத்தி தம் நோக்கத்தை நிறைவேற்றுவார் என அது காட்டுகிறது. பெருந்துன்பமாய் தோன்றுவதுகூட யெகோவா அனுமதித்தால் பயனுள்ளதாய் மாறலாம் என்பதையும் இப்பதிவு நிரூபிக்கிறது. சிறு விஷயங்களிலும் உண்மையாயிருத்தல் பெரும் வெகுமதியளிக்கும் என்றும் உணர்த்துகிறது.
நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?
• தானியேல் மற்றும் அவரது மூன்று இளம் நண்பர்களின் பின்னணி என்ன?
• சிறந்த விதத்தில் வளர்க்கப்பட்டிருந்த அந்த நான்கு எபிரெய வாலிபர்கள் பாபிலோனில் என்ன சோதனையை சந்தித்தார்கள்?
• நான்கு எபிரெயர்கள் துணிந்து நிலைநிற்கை எடுத்ததற்கு யெகோவா என்ன வெகுமதியளித்தார்?
• தானியேல் மற்றும் அவரது மூன்று நண்பர்களின் உதாரணத்திலிருந்து யெகோவாவின் ஊழியர்கள் இன்று என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
[கேள்விகள்]
1, 2. தானியேல் புத்தகம் எழுதப்படுவதற்கு முன் என்னென்ன முக்கிய சம்பவங்கள் நடந்தன?
3. நேபுகாத்நேச்சார் முதன்முதலில் எருசலேமுக்கு எதிராக படையெடுத்ததன் விளைவு என்ன?
4. “யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே” என தானியேல் 1:1-ல் சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன?
5. நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு எதிராக இரண்டாவது முறை படையெடுத்தபோது என்ன நடந்தது?
6. நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்தின் பரிசுத்த பாத்திரங்களை என்ன செய்தார்?
7, 8. தானியேல் 1:3, 4, 6 வசனங்களிலிருந்து தானியேல் மற்றும் அவரது மூன்று நண்பர்களின் பின்னணியைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?
9. தானியேலுக்கும் அவரது மூன்று நண்பர்களுக்கும் தெய்வபக்தியுள்ள பெற்றோர்கள் இருந்தார்கள் என ஏன் நம்பலாம்?
10. இளம் எபிரெய வாலிபர்களுக்கு என்ன கற்றுத்தரப்பட்டது, என்ன நோக்கத்தோடு?
11. எபிரெய வாலிபர்களை பாபிலோனின் அரண்மனை வாழ்வோடு ஒன்றிப்போகவைக்க என்னென்ன செய்யப்பட்டது?
12, 13. எபிரெய வாலிபர்களின் பெயர் மாற்றம், அவர்களது விசுவாசத்தைக் கவிழ்க்க செய்யப்பட்ட சதிச்செயல் என எப்படிச் சொல்லலாம்?
14. தானியேலுக்கும் அவரது மூன்று நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்ட புதிய பெயர்களின் அர்த்தம் என்ன?
15, 16. தானியேலும் அவரது நண்பர்களும் எதிர்ப்பட்ட அழுத்தங்கள் என்ன, அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?
17. ஏன் அந்த எபிரெய வாலிபர்கள், ராஜாவின் போஜனத்தையும் திராட்சரசத்தையும் மாத்திரம் மறுத்து, மற்ற ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்?
18. பாபிலோனிய ராஜாவின் போஜனம் எந்த விதத்தில் அந்த நான்கு வாலிபர்களையும் தீட்டுப்படுத்தும்?
19. அந்த எபிரெய வாலிபர்கள் என்ன மனக்கணக்கு போட்டிருக்கலாம், ஆனால் சரியான முடிவெடுக்க எது அவர்களுக்கு உதவியது?
20, 21. தானியேல் என்ன நடவடிக்கை எடுத்தார், அதன் விளைவென்ன?
22. பிரதானிகளின் தலைவன் என்ன நியாயமான ஆட்சேபணை தெரிவித்தான்?
23. தானியேல் எவ்வாறு விவேகத்தையும் ஞானத்தையும் காட்டினார்?
24. என்ன சோதனை நடத்தும்படி தானியேல் கேட்டுக்கொண்டார்?
25. தானியேலுக்கும் அவரது மூன்று நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்ட ‘மரக்கறியில்’ என்னென்ன உட்பட்டிருந்தன?
26. பத்துநாள் சோதனையின் முடிவென்ன, ஏன் காரியங்கள் அப்படி நடந்தன?
27, 28. தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் போஜன விஷயத்தில் உறுதியாயிருந்தது, வரவிருந்த பெரும் சோதனைகளை சந்திக்க எவ்விதங்களில் அவர்களைப் பக்குவப்படுத்தியது?
29. தானியேல் ‘சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவரானதற்கு’ காரணம் என்ன?
30, 31. தானியேலும் அவரது நண்பர்களும் எடுத்த தீர்மானம் எவ்வாறு அவர்களுக்கு பயனளித்தது?
32. தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோர் அரசவையில் இருந்தவர்களைக் காட்டிலும் அதிக பாக்கியம் பெற்றிருந்தார்கள் என எப்படிச் சொல்லலாம்?
33, 34. (அ) இளம் எபிரெயர்களைக் கண்டு ராஜா அசந்துபோனது ஏன்? (ஆ) நான்கு எபிரெயர்களின் அனுபவத்திலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
35. தானியேலின் மூன்று நண்பர்களைப் பற்றி என்ன தகவலிருக்கிறது?
36. தானியேல் ஆற்றிய தலைசிறந்த சேவை என்ன?
37. தானியேல் முதலாம் அதிகாரத்தைச் சிந்திப்பதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 30-ன் முழுபடம்]