வேறு மொழி சபையில் சேவை செய்பவர்களே, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
“உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.” —சங். 119:11.
1-3. (அ) நாம் எப்போதும் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? (ஆ) புது மொழியைக் கற்றுக்கொள்கிறவர்களுக்கு என்னென்ன சவால்கள் இருக்கின்றன, இதனால் என்னென்ன கேள்விகள் வருகின்றன? (ஆரம்பப் படம்)
“எல்லாத் தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும்” நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்கிறார்கள். (வெளி. 14:6) நீங்களும் வேறொரு மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் மிஷனரியாகவோ தேவை அதிகமுள்ள வேறொரு நாட்டிலோ சேவை செய்கிறீர்களா? அல்லது சொந்த நாட்டிலேயே வேறொரு மொழி பேசும் சபைக்குப் போக ஆரம்பித்திருக்கிறீர்களா?
2 கடவுளுடைய ஊழியர்கள் எல்லாரும் அவரவர்களுடைய ஆன்மீக நலனுக்கும் அவரவர்களுடைய குடும்பத்தின் ஆன்மீக நலனுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். (மத். 5:3) நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் மும்முரமாக இருப்பதால், அர்த்தமுள்ள விதத்தில் தனிப்பட்ட படிப்பு படிப்பதற்கு, சில சமயங்களில் நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால், வேறொரு மொழி பேசும் சபையில் சேவை செய்கிறவர்களுக்கு இதைத் தவிர மற்ற சவால்களும் இருக்கின்றன.
3 வேறொரு மொழி பேசும் சபையில் சேவை செய்கிறவர்கள் ஒரு புது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதோடு, கடவுளுடைய ஆழமான காரியங்களையும் தவறாமல் படிக்க வேண்டியிருக்கிறது. (1 கொ. 2:10) அந்தச் சபையில் பேசப்படும் மொழி அவர்களுக்கு முழுமையாகப் புரியவில்லை என்றால், அவர்களால் எப்படி ஆழமான காரியங்களைப் படிக்க முடியும்? அதோடு, வேறொரு மொழி பேசும் சபையில் இருக்கிற கிறிஸ்தவ பெற்றோர், பைபிள் சத்தியங்கள் தங்களுடைய பிள்ளைகளின் இதயத்தைத் தொடுகிறதா என்று ஏன் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்?
யெகோவாவோடு இருக்கிற பந்தத்துக்கு வரும் பாதிப்பு
4. யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தம் பாதிக்கப்பட எது காரணமாக இருக்கலாம்? உதாரணம் கொடுங்கள்.
4 வேறொரு மொழியில் சொல்லப்படும் பைபிள் போதனைகள் நமக்குப் புரியவில்லை என்றால், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தம் பாதிக்கப்படலாம். நெகேமியாவின் காலத்தில் நடந்ததைக் கவனியுங்கள். அவர் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, சில பிள்ளைகளால் எபிரெய மொழியில் பேச முடியாமல் இருந்ததைக் கவனித்தார். (நெகேமியா 13:23, 24-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய வார்த்தையை இந்தப் பிள்ளைகளால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததால், யெகோவாவோடு அந்தப் பிள்ளைகளுக்கு இருந்த பந்தம் பலவீனமானது.—நெ. 8:2, 8.
5, 6. வேறொரு மொழி பேசும் சபையில் இருக்கிற கிறிஸ்தவ பெற்றோர் சிலர் எதைக் கவனித்திருக்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன?
5 வேறொரு மொழி பேசும் சபையில் இருக்கிற கிறிஸ்தவ பெற்றோர் சிலர், யெகோவாவோடு தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கிற பந்தம் பலவீனமாகி விட்டதைக் கவனித்திருக்கிறார்கள். சபையில் சொல்லப்படுகிற விஷயங்கள் அவர்களுக்கு முழுமையாகப் புரியாததால், அவை அவர்களுடைய இதயத்தைத் தொடுவதில்லை. பத்ரோ என்ற சகோதரர் ஆஸ்திரேலியாவிலிருந்து தென் அமெரிக்காவுக்குக் குடிமாறியிருந்தார். “ஆன்மீக விஷயங்களை பத்தி பேசுறதுல, உள்ளமும் உணர்ச்சிகளும் உட்பட்டிருக்கணும்” என்று அவர் சொல்கிறார்.[1] (பின்குறிப்பு)—லூக். 24:32.
6 சொந்த மொழியில் வாசிக்கும்போது நமக்கு இருக்கிற ஈடுபாடு வேறொரு மொழியில் வாசிக்கும்போது இருக்காது. அதுவும், அந்த மொழியில் நம்மால் பேச முடியவில்லை என்றால் நாம் சோர்ந்துவிடுவோம், யெகோவாவை வணங்குவதிலும் நம் ஆர்வம் குறைந்துவிடும். அதனால், வேறு மொழி பேசும் சபையில் சேவை செய்கிற ஆசை நமக்கு இருந்தால், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்.—மத். 4:4.
யெகோவாவோடு இருந்த பந்தத்தைக் காத்துக்கொண்டார்கள்
7. பாபிலோனியர்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும் மதத்தையும் தானியேலிடத்தில் எப்படித் திணிக்கப் பார்த்தார்கள்?
7 தானியேலும் அவருடைய நண்பர்களும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த சமயத்தில், பாபிலோனியர்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும் மதத்தையும் அவர்களிடத்தில் திணிக்கப் பார்த்தார்கள். அதற்காக, ‘கல்தேயரின் பாஷையை’ அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அதுமட்டும் இல்லாமல், அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க நியமிக்கப்பட்டிருந்த அரண்மனையின் முக்கிய அதிகாரி, அவர்களுக்குப் பாபிலோனிய பெயர்களை வைத்தார். (தானி. 1:3-7) தானியேலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பெல் என்ற பெயர், பாபிலோனின் முக்கிய கடவுளைக் குறித்தது. தானியேலின் கடவுளான யெகோவாவைவிட அந்தப் பாபிலோனிய கடவுள்தான் அதிக சக்தி வாய்ந்தது என்று தானியேலை நம்ப வைக்க நேபுகாத்நேச்சார் ராஜா நினைத்திருக்கலாம்.—தானி. 4:8.
8. வேறொரு நாட்டில் இருந்தபோதும், யெகோவாவோடு இருந்த பந்தத்தைத் தானியேலால் எப்படிப் பலப்படுத்த முடிந்தது?
8 ராஜா சாப்பிடுகிற உணவு தானியேலுக்குக் கொடுக்கப்பட்டபோது, ‘தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது’ என்று தானியேல் ‘தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டார்.’ (தானி. 1:8) தானியேல் தன்னுடைய தாய் மொழியில் ‘பரிசுத்த புத்தகங்களை’ தவறாமல் படித்ததால்தான் வேறொரு நாட்டில் இருந்தபோதிலும் யெகோவாவோடு இருந்த பந்தத்தை அவரால் காத்துக்கொள்ள முடிந்தது. (தானி. 9:2, NW அடிக்குறிப்பு) அவர் பாபிலோனுக்கு வந்து சுமார் 70 வருடங்கள் ஆகியிருந்தாலும், தானியேல் என்ற எபிரெய பெயரால் அவர் அறியப்பட்டிருந்தார்.—தானி. 5:13.
9. கடவுளுடைய வார்த்தை 119-ஆம் சங்கீதத்தின் எழுத்தாளர்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
9 அரண்மனையில் இருந்தவர்கள் தனக்கு விரோதமாகப் பேசியதை 119-ஆம் சங்கீதத்தின் எழுத்தாளர் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்குத் தேவையான பலத்தைக் கடவுளுடைய வார்த்தை அவருக்குத் தந்தது. அதனால், அவர் மற்றவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தார். (சங். 119:23, 61) கடவுளுடைய வார்த்தைகள் தன் இதயத்தை ஆழமாகத் தொட அவர் அனுமதித்தார்.—சங்கீதம் 119:11, 46-ஐ வாசியுங்கள்.
யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
10, 11. (அ) என்ன குறிக்கோளோடு நாம் கடவுளுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும்? (ஆ) அந்தக் குறிக்கோளை எப்படி அடையலாம்? உதாரணம் கொடுங்கள்.
10 சபை பொறுப்புகளிலும் மற்ற வேலைகளிலும் நாம் மும்முரமாக இருந்தாலும், தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப வழிபாட்டுக்கும் நேரம் ஒதுக்குவது ரொம்ப முக்கியம். (எபே. 5:15, 16) ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்களைப் படித்துவிட வேண்டும் என்பதோ பதில் சொல்வதற்காகக் கூட்டங்களுக்குத் தயாரிக்க வேண்டும் என்பதோ நம்முடைய குறிக்கோளாக இருக்கக் கூடாது. கடவுளுடைய வார்த்தை நம் இதயத்தைத் தொட வேண்டும், நம் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
11 அந்தக் குறிக்கோளை அடைய, நாம் சமநிலையோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம் படிக்கும்போது மற்றவர்களுடைய தேவைகளைப் பற்றி மட்டுமே யோசிக்கக் கூடாது, நம்முடைய தேவைகளைப் பற்றியும் யோசித்துப் பார்க்க வேண்டும். (பிலி. 1:9, 10) பொதுவாக, ஊழியத்துக்கும் கூட்டங்களுக்கும் தயாரிக்கும்போது, அல்லது பேச்சு கொடுப்பதற்காகத் தயாரிக்கும்போது, அந்த விஷயங்கள் நமக்கு எப்படிப் பொருந்துகின்றன என்று நாம் யோசிக்க மாட்டோம். இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். சாப்பாடு பரிமாறுவதற்கு முன்பு சமையல் செய்பவர் அதை ருசி பார்ப்பார். ஆனால், ருசி பார்த்த சாப்பாட்டை வைத்து மட்டுமே அவரால் உயிர் வாழ முடியாது. அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், சத்தான உணவை தனக்காகத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதேபோல், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தை நாம் பலப்படுத்த வேண்டுமென்றால், நாம் தவறாமல் பைபிள் படிக்க வேண்டும். அப்படி ஆழமாகப் படித்தால், நம்முடைய ஆன்மீகத் தேவைகளை நாம் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
12, 13. வேறு மொழி பேசும் சபையில் இருப்பவர்களுக்குத் தங்கள் தாய் மொழியில் தவறாமல் படிப்பது எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?
12 வேறு மொழி பேசும் சபையில் சேவை செய்யும் நிறைய பேர், தங்கள் “சொந்த மொழிகளில்” பைபிளைத் தவறாமல் படிக்கிறார்கள். அப்படிப் படிப்பதால் அவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைத்திருக்கின்றன. (அப். 2:8) கூட்டங்களில் கேட்கிற விஷயங்களை வைத்து மட்டுமே தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியாது என்பது வேறொரு நாட்டில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் மிஷனரிகளுக்கும் தெரியும்.
13 எட்டு வருடங்களாகப் பெர்சிய மொழியைக் கற்றுக்கொண்டிருக்கும் ஆலன் இப்படிச் சொல்கிறார்: “நான் பெர்சிய மொழியில கூட்டங்களுக்கு தயாரிக்குறப்போ என்னோட கவனமெல்லாம் அந்த மொழியிலதான் இருக்கும். என்னோட யோசனை எல்லாம் அதுலயே இருக்கிறதுனால நான் படிக்கிற ஆன்மீக விஷயங்கள் என்னோட இதயத்தை தொடுறது இல்ல. அதனால, பைபிளையும் மத்த பிரசுரங்களையும் தவறாம என்னோட தாய் மொழியில படிக்கிறதுக்கு நேரம் ஒதுக்குறேன்.”
பிள்ளைகளின் இதயத்தைத் தொடுங்கள்
14. பெற்றோர் எதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும், ஏன்?
14 பைபிள் சத்தியம் பிள்ளைகளின் மனதையும் இதயத்தையும் தொடுகிறதா என்று கிறிஸ்தவ பெற்றோர் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். ஸெர்ஸ் என்ற சகோதரரும் அவருடைய மனைவி மியூரியலும் 3 வருடங்களுக்கு மேலாக வேறொரு மொழி சபையில் சேவை செய்கிறார்கள். அவர்களுடைய 17 வயது மகன் ஊழியத்துக்குப் போவதிலும் கூட்டங்களுக்குப் போவதிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பதை அவர்கள் கவனித்தார்கள். “இதுக்கு முன்னாடி அவனோட சொந்த மொழியான பிரென்ச்ல ரொம்ப ஆர்வமா ஊழியம் செஞ்சான். ஆனா, இப்போ வேற மொழியில ஊழியம் செய்றது அவனுக்கு எரிச்சலா இருக்கு” என்று மியூரியல் சொல்கிறார். “இது எங்க மகனோட ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையா இருக்குனு தெரிஞ்சப்போ, எங்க பழைய சபைக்கே திரும்பி போகணும்னு முடிவு செஞ்சோம்” என்று ஸெர்ஸ் சொல்கிறார்.
15. (அ) பிள்ளைகளுக்குப் புரிகிற மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபைக்குத் திரும்பிப் போக வேண்டுமா இல்லையா என்பதைப் பெற்றோர் எப்படித் தீர்மானிக்கலாம்? (ஆ) பெற்றோர் என்ன செய்யும்படி உபாகமம் 6:5-7 சொல்கிறது?
15 தங்கள் பிள்ளைகளுக்கு நன்றாகப் புரிகிற மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபைக்குத் திரும்பிப் போக வேண்டுமா இல்லையா என்பதைப் பெற்றோர் எப்படித் தீர்மானிக்கலாம்? முதலாவதாக, யெகோவாவை நேசிக்கவும் வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ளவும் பிள்ளைகளுக்கு உதவி செய்ய தங்களுக்கு உண்மையிலேயே போதுமான நேரம் இருக்கிறதா என்று பெற்றோர் யோசிக்க வேண்டும். இரண்டாவதாக, வேறு மொழி பேசும் சபைக்குப் போவதற்கோ, அந்த மொழியில் ஊழியம் செய்வதற்கோ பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போகிறதா என்பதைப் பெற்றோர் கவனிக்க வேண்டும். அப்படிப்பட்ட சமயங்களில், தங்கள் பிள்ளைகளுக்கு நன்றாகப் புரிகிற மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபைக்குத் திரும்பிப் போவதைப் பற்றி கிறிஸ்தவ பெற்றோர் யோசித்துப் பார்க்கலாம். பிள்ளைகள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொண்ட பிறகு, வேறு மொழி பேசும் சபைக்கு மறுபடியும் போகலாம்.—உபாகமம் 6:5-7-ஐ வாசியுங்கள்.
16, 17. யெகோவாவைப் பற்றி பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோர்களுக்கு எது உதவி செய்திருக்கிறது?
16 சில பெற்றோர், வேறு மொழி பேசும் சபைக்கோ தொகுதிக்கோ போனாலும் தங்கள் தாய்மொழியில் யெகோவாவைப் பற்றி பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். சார்லஸ் என்பவருக்கு 9 முதல் 13 வயது வரையுள்ள மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் லிங்காலா மொழி பேசும் தொகுதிக்குப் போகிறார்கள். “எங்க பிள்ளைகளுக்கு சொந்த மொழியில படிப்பு எடுக்கவும் குடும்ப வழிபாடு நடத்தவும் நாங்க முடிவு செஞ்சோம். பிள்ளைகள் லிங்காலா மொழிய சந்தோஷமா கத்துக்குறதுக்காக அந்த மொழியிலயே சில பயிற்சிகள் செஞ்சோம். அதோட, அந்த மொழியிலயே விளையாட்டுகளும் விளையாடினோம்” என்று சார்லஸ் சொல்கிறார்.
17 கெவின் என்ற சகோதரருக்கு 5 வயதிலும் 8 வயதிலும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். வேறு மொழி பேசும் சபையில் இவர்கள் இருப்பதால், கூட்டங்களில் சொல்லப்படும் விஷயங்களை அந்தப் பிள்ளைகளால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால், அவர்களுக்கு பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்க அவரும் அவருடைய மனைவியும் கடினமாக முயற்சி செய்கிறார்கள். “நானும் என்னோட மனைவியும் எங்க பிள்ளைகளோடு சேர்ந்து அவங்க தாய் மொழியான பிரென்ச்சில தனிப்பட்ட படிப்பு படிப்போம். மாசத்துல ஒரு தடவ பிரென்ச் மொழி கூட்டத்துக்கு போகணும்னு முடிவு செஞ்சோம். விடுமுறை நாட்கள்ல எங்க சொந்த மொழியில நடக்குற மாநாடுகளுக்கு போவோம்” என்று கெவின் சொல்கிறார்.
18. (அ) பிள்ளைகளுக்கு உதவும் விஷயத்தில் ஞானமான தீர்மானம் எடுக்க ரோமர் 15:1, 2 பெற்றோருக்கு எப்படி உதவும்? (ஆ) சில பெற்றோர் என்ன ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள்? (பின்குறிப்பைப் பாருங்கள்.)
18 தங்கள் பிள்ளைகளின் ஆன்மீக நலனுக்கு எது சிறந்தது என்று ஒவ்வொரு குடும்பமும் தீர்மானிக்க வேண்டும்.[2] (பின்குறிப்பு) (கலா. 6:5) வேறு மொழி பேசும் சபையிலேயே இருப்பதற்கு மியூரியலுக்கும் அவருடைய கணவருக்கும் ஆசை இருந்தது. ஆனாலும், யெகோவாவோடு தங்கள் மகனுக்கு இருக்கிற பந்தத்தை மனதில் வைத்து அந்தச் சபையைவிட்டுப் போக முடிவெடுத்ததாக மியூரியல் சொல்கிறார். (ரோமர் 15:1, 2-ஐ வாசியுங்கள்.) அன்று எடுத்த தீர்மானம் சரிதான் என்று ஸெர்ஸ் நினைக்கிறார். “நாங்க பிரென்ச் மொழி பேசுற சபைக்கு திரும்பி போனதுல இருந்து, எங்க பையன் ஆன்மீக ரீதியில நல்ல முன்னேற்றம் செஞ்சான், ஞானஸ்நானம் எடுத்தான். இப்போ அவன் ஒழுங்கான பயனியரா சேவை செய்றான். வேறு மொழி பேசுற தொகுதிக்கு மறுபடியும் போறத பத்திகூட யோசிச்சுக்கிட்டு இருக்கான்!”
கடவுளுடைய வார்த்தை உங்கள் இதயத்தைத் தொடட்டும்
19, 20. கடவுளுடைய வார்த்தைமீது நமக்கு அன்பு இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்?
19 யெகோவா எல்லா மக்களையும் நேசிக்கிறார். அதனால்தான், “பலதரப்பட்ட ஆட்களும்” சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான மொழிகளில் பைபிள் கிடைக்கும்படி செய்திருக்கிறார். (1 தீ. 2:4) நமக்கு நன்றாகப் புரிகிற மொழியில் பைபிளைப் படிக்கும்போது கடவுளோடு நமக்கு இருக்கிற பந்தம் பலப்படும் என்று அவருக்குத் தெரியும்.
20 யெகோவாவோடு இருக்கிற பந்தம் பலமாக இருப்பதற்கு நாம் எல்லாரும் கடினமாக உழைக்க வேண்டும். நமக்கு நன்றாகப் புரிகிற மொழியில் பைபிளைத் தவறாமல் படித்தால்தான் யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தையும் நம் குடும்பத்தாருக்கு இருக்கிற பந்தத்தையும் நம்மால் காத்துக்கொள்ள முடியும். அதோடு, கடவுளுடைய வார்த்தையை நாம் உண்மையிலேயே நேசிக்கிறோம் என்பதையும் காட்ட முடியும்.—சங். 119:11.
^ [1] (பாரா 5) பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
^ [2] (பாரா 18) உங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் பைபிள் ஆலோசனைகளுக்கு, அக்டோபர் 15, 2002 காவற்கோபுரத்தில் வெளிவந்த “அயல் நாட்டில் பிள்ளைகளை வளர்த்தல்—சுமைகளும் சுகங்களும்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.