இயேசுவின் பிறப்பு—உண்மை வரலாறு
உங்கள் நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற பிரசித்தமான ஒரு சம்பவத்தை நினைத்துக்கொள்ளுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வரலாற்று ஆசிரியரால் எழுதப்பட்ட நல்ல ஆதாரமும் அதற்கு உள்ளது. இப்போது யாராவது ஒருவர் உங்களிடம் வந்து இந்தச் சம்பவம் ஒருக்காலும் நிகழவில்லை, இதெல்லாம் கட்டுக்கதை என சொன்னால் என்ன செய்வீர்கள்? அல்லது, உங்கள் தாத்தாவின் பிறப்பையும் அவருடைய ஆரம்பகால வாழ்க்கையையும் பற்றி உங்களுடைய வீட்டார் சொன்ன விஷயங்களையே பொய் என்று யாராவது கூறினால் என்ன செய்வீர்கள்? இரண்டு சந்தர்ப்பங்களிலும், இப்படி சொல்லி முடிக்கும் முன்பே உங்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரலாம். நிச்சயமாகவே இப்படிப்பட்ட விஷயங்களை எடுத்த எடுப்பில் நீங்கள் நம்பிவிட மாட்டீர்கள்!
ஆனால், மத்தேயு மற்றும் லூக்காவால் எழுதப்பட்ட இயேசுவின் பிறப்பைப் பற்றிய சுவிசேஷ பதிவுகளை விமர்சகர்கள் பொதுவாக இன்று ஒதுக்கி விடுகின்றனர். இந்த விவரப்பதிவுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன; இரண்டிலும் அப்பட்டமான பொய்களும் பெரும் வரலாற்று பிழைகளும் இருக்கின்றன என்பதாக சொல்கின்றனர். அது உண்மையாக இருக்க முடியுமா? இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நாமே சுவிசேஷ பதிவுகளை ஆராய்ந்து பார்க்கலாமே. அப்படி ஆராயும்போது அவை நமக்கு எதை போதிக்கின்றன என்பதையும் காண்போம்.
எழுதியதன் நோக்கம்
முதலில் இந்த பைபிள் விவரப்பதிவுகளின் நோக்கத்தை நினைவில் வைத்திருப்பதற்கு இது உதவுகிறது. அவை வாழ்க்கை வரலாறுகள் அல்ல; சுவிசேஷங்கள். இதைப் பகுத்துணருவது முக்கியம். வாழ்க்கை வரலாற்று நூலில், ஆசிரியர் நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதலாம், அவர் சொல்லிக்கொண்டு வரும் விஷயம் எப்படி மிகப் பிரபல்யமான கதாபாத்திரமாக பரிணமித்தது என்பதைக் காட்ட முயற்சி செய்யலாம். இதனால்தான் சில வாழ்க்கை வரலாற்று நூல்கள் பேசக்கூடிய நபரின் வம்சாவளி, பிறப்பு, வளர்ப்பு ஆகியவற்றை விலாவாரியாக விளக்குவதற்கே எண்ணற்ற பக்கங்களை விழுங்கிவிடுகின்றன. சுவிசேஷங்களின் விஷயம் வேறு. நான்கு சுவிசேஷ பதிவுகளில், மத்தேயு, லூக்கா ஆகிய இரண்டு மாத்திரமே இயேசுவின் பிறப்பையும் குழந்தைப் பருவத்தையும் சொல்லுகிற சுவிசேஷங்கள். ஆனால், இயேசு எப்படி ஒரு மனிதராக வளர்ந்தார் என்பதை காண்பிப்பது அவற்றின் நோக்கம் அல்ல. இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பே ஒரு ஆவி சிருஷ்டியாக வாழ்ந்தார் என்பதை இயேசுவை பின்பற்றியவர்கள் அறிந்திருந்ததை நினைவிற்கொள்ளுங்கள். (யோவான் 8:23, 58) ஆகவே மத்தேயுவும் லூக்காவும், இயேசு எப்படிப்பட்ட மனிதரானார் என்பதை விளக்கும் நோக்கத்துடன் அவரது மழலைப் பருவத்தை சொல்லவில்லை. மாறாக, தாங்கள் என்ன நோக்கத்தோடு சுவிசேஷங்களை எழுதினார்களோ அத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையே விவரித்தனர்.
அவற்றை எழுதுகையில் அவர்களுடைய நோக்கம் என்ன? “சுவிசேஷம்” என்ற வார்த்தையின் பொருள் “நற்செய்தி.” இருவரும் அதே செய்தியையே, அதாவது இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட வித்து, அல்லது கிறிஸ்து; மனிதவர்க்கத்தின் பாவங்களுக்காக மரித்தார்; பின்பு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற செய்தியையே தெரிவித்தனர். ஆனால் அந்த இரண்டு எழுத்தாளர்களின் பின்னணியும் முற்றிலும் வெவ்வேறானவை. இருவரும் வித்தியாசமான வாசகர்களுக்கு எழுதினார்கள். வரி வசூலிப்பவராகிய மத்தேயு, பெரும்பாலும் யூதர்களை மனதில் வைத்து தன் விவரப்பதிவை எழுதினார். மருத்துவராகிய லூக்கா, ‘மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவுக்கு’ எழுதினார்; இவர் ஓரளவு உயர்ந்த ஸ்தானத்தை வகித்திருக்கலாம். அதோடு இந்த எழுத்தாளர் யூதர்களையும் புறஜாதியாரையும் மனதில் வைத்து எழுதினார். (லூக்கா 1:1-3) இரண்டு எழுத்தாளருமே அவரவருடைய வாசகருக்கு பொருத்தமாயும் நம்பச்செய்வதாயும் இருந்த சம்பவங்களையே தெரிந்தெடுத்தார்கள். இதனால், இயேசுவின் சம்பந்தமாக நிறைவேறிய எபிரெய வேதாகம தீர்க்கதரிசனங்களை மத்தேயுவின் பதிவு வலியுறுத்துகிறது. மறுபட்சத்தில் லூக்காவோ, யூதரல்லாத வாசகர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் பாரம்பரிய வரலாற்று அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்.
அவர்களுடைய விவரப்பதிவுகள் வித்தியாசப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் விமர்சகர்கள் கூறுகிறபடி, அவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதில்லை. அவை ஒன்றையொன்று பூர்த்திசெய்து, ஒரு தெளிவான விவரப்பதிவை உருவாக்குவதற்கு மிக நேர்த்தியான விதத்தில் ஒன்றுக்கொன்று கச்சிதமாக பொருந்துகின்றன.
பெத்லகேமில் இயேசுவின் பிறப்பு
இயேசுவின் பிறப்பை பற்றிய வியத்தகு அற்புதத்தை, அதாவது அவர் ஒரு கன்னிகைக்குப் பிறந்ததை மத்தேயுவும் லூக்காவும் பதிவுசெய்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏசாயா உரைத்த தீர்க்கதரிசனத்தை இந்த அற்புதம் நிறைவேற்றியது என மத்தேயு காட்டுகிறார். (ஏசாயா 7:14; மத்தேயு 1:22, 23) இயேசு பெத்லகேமில் பிறந்தார், ஏனெனில் குடிமதிப்பு எழுதுவதை இராயன் ஆரம்பித்து வைத்ததால் யோசேப்பும் மரியாளும் அங்குசெல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர் என்பதை லூக்கா விளக்குகிறார். (பக்கம் 7-ல் உள்ள பெட்டியைக் காண்க.) இயேசு பெத்லகேமில் பிறந்தது குறிப்பிடத்தக்கது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, எருசலேமுக்கு அருகிலுள்ள சாதாரணமான இந்த நகரத்திலிருந்து மேசியா தோன்றுவார் என்பதை மீகா தீர்க்கதரிசி முன்னறிவித்திருந்தார்.—மீகா 5:2.
இயேசு பிறந்த இரவு, அவருடைய பிறப்பிடத்தைப் பற்றிய காட்சிகளுக்கு ஆதாரமாய் புகழ்பெற்றதாகி விட்டது. ஆனால், உண்மையான கதை வழக்கமாக சித்தரித்துக் காண்பிக்கப்படுவதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. குடிமதிப்பு எழுதுவதற்காக மரியாளும் யோசேப்பும் பெத்லகேமுக்குப் போனார்கள் என்று சரித்திராசிரியர் லூக்கா சொல்கிறார். அந்த முக்கியமான இரவில் மந்தைகளுடன் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்ததை அவரும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு சம்பவங்களையும் வைத்து, டிசம்பரில் இயேசு பிறந்திருக்க முடியாது என்று அநேக பைபிள் ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்திருக்கின்றனர். கலகம் பண்ணும் மனச்சாய்வுள்ள இந்த யூதர்களை குளிரும் மழையுமான இச்சமயத்தில் தங்களுடைய சொந்த ஊருக்குப் போகும்படி இராயன் கட்டாயப்படுத்துவது சாத்தியமில்லாதது, கலகத்தனமான அந்த மக்களை அது இன்னும் கோபமூட்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதைப்போலவே, இப்படிப்பட்ட கடும் சீதோஷ்ணத்தில் மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளுடன் வயல்வெளியில் தங்கியிருப்பதும் சாத்தியமில்லாதது.—லூக்கா 2:8-14.
யெகோவா தம் குமாரனுடைய பிறப்பை அறிவிக்க அந்நாளைய மெத்தப்படித்த மேதாவிகளையோ செல்வாக்குள்ள மதத் தலைவர்களையோ தெரிந்தெடுக்கவில்லை, வயல்வெளியில் தங்கியிருந்தவர்களும் அநாகரிகமாய் தோற்றமளித்தவர்களுமான பாமரவர்க்க உழைப்பாளிகளையே தெரிந்தெடுத்தார் என்பதை கவனியுங்கள். ஒருவேளை வேதபாரகர்களும் பரிசேயர்களும் மேய்ப்பர்களுடன் எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்; ஏனெனில் மேய்ப்பர்களுடைய வேலைநேரம் வாய்மொழி சட்டத்தின் சில நுட்ப விவரங்களை கடைப்பிடிக்க முடியாத நிலையில் வைத்தது. ஆனால் தாழ்மையும் பெருமதிப்புமுடைய இப்படிப்பட்ட உண்மையுள்ள மனிதர்களுக்கே கடவுள் தயவுகூர்ந்தார். பெத்லகேமில் மேசியா பிறந்த அந்த இரவிலேயே தேவதூதர்களின் சேனை மேய்ப்பர்களுக்கு அறிவித்தது. இவருக்காகத்தான் கடவுளுடைய ஜனங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காத்திருந்தனர். இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றிய விவரிப்புகளில் மிக அடிக்கடி சொல்லப்பட்டது ‘மூன்று ராஜாக்களைப்’ பற்றி அல்ல, இந்த மேய்ப்பர்களைப் பற்றியே. இவர்கள்தான் மரியாளையும் யோசேப்பையும் சந்தித்து, ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தை மாட்டுக்கொட்டிலில் கிடத்தப்பட்டிருந்ததைப் பார்த்தனர்.—லூக்கா 2:15-20.
சத்தியத்தை மனத்தாழ்மையோடு தேடுவோருக்கு யெகோவா தயவுகூருகிறார்
தம்மை நேசிக்கிற மனத்தாழ்மையுள்ளோருக்கும் அவருடைய நோக்கங்களின் நிறைவேற்றத்தைக் காண்பதில் மிகுந்த அக்கறையுள்ளோருக்கும் கடவுள் தயவுகூருகிறார். இது, இயேசுவின் பிறப்போடு சம்பந்தப்பட்ட சம்பவங்களில் மீண்டும் மீண்டும் வரும் பொருளாகும். குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தில், யோசேப்பும் மரியாளும் நியாயப்பிரமாணத்திற்கு இசைவாக ஆலயத்தில் அவரை ஒப்புக்கொடுத்து, “ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது” பலியாகச் செலுத்துகிறார்கள். (லூக்கா 2:22-24) உண்மையில் நியாயப்பிரமாணத்தின்படி ஒரு ஆட்டுக்குட்டியை பலிசெலுத்த வேண்டும், ஆனால் ஏழ்மையில் வாடுவோர் இந்தக் குறைந்த செலவுள்ள பலியை செலுத்த நியாயப்பிரமாணம் அனுமதித்தது. (லேவியராகமம் 12:1-8) சற்று இதை சிந்தித்துப்பாருங்கள். சர்வலோகத்தின் உன்னத பேரரசராகிய யெகோவா தேவன் தம்முடைய நேச குமாரனை, ஒரேபேறான குமாரனை வளர்ப்பதற்கு, பணக்கார குடும்பத்தை அல்ல, ஆனால் இந்த ஏழை வீட்டாரையே தெரிந்தெடுத்தார். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு—செல்வத்தையோ உயர் கல்வியையோவிட—ஆவிக்குரிய மதிப்பீடுகளை முதலிடத்தில் வைக்கிற வீட்டுச் சூழல்தான் என்பதை இது உங்களுக்கு பளிச்சென்று நினைப்பூட்ட வேண்டும்.
அந்த ஆலயத்தில், உண்மையும் தாழ்மை குணமுமுள்ள மற்ற இரண்டு பேர் யெகோவாவால் தயவுகூரப்படுகிறார்கள். அதில் ஒருவர், ‘தேவாலயத்தை விட்டு நீங்காத’ 84 வயதுடைய விதவை அன்னாள். (லூக்கா 2:36, 37) மற்றொருவர் உண்மையுள்ள, வயதான மனிதராகிய சிமியோன். இந்த இருவரும் தங்களுக்கு கடவுள் கொடுத்த இந்த சிலாக்கியத்திற்காக, அதாவது தாங்கள் இறப்பதற்கு முன்பு வாக்குப்பண்ணப்பட்ட வித்துவை பார்க்கக் கிடைத்த சிலாக்கியத்திற்காக சந்தோஷப்படுகின்றனர். அந்தப் பிள்ளையைக் குறித்து சிமியோன் ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கிறார். அது நம்பிக்கையூட்டும் தீர்க்கதரிசனம், ஆனால் ஓரளவு கவலையளிக்கும் ஒன்று. இந்த இளம் தாயாகிய மரியாள் தன்னுடைய அருமை மகனுக்காக ஒருநாள் வேதனையால் துடிப்பாள் என அவர் முன்னுரைக்கிறார்.—லூக்கா 2:25-35.
ஆபத்திலிருந்த ஒரு குழந்தை
ஒருபாவமும் அறியாத இந்தப் பச்சிளம் குழந்தை பகைமைக்கு ஆளாகும் என்ற சிமியோனின் தீர்க்கதரிசனம் ஒரு துயரமான நினைப்பூட்டுதல். அவர் சிசுவாக இருக்கும்போதே, இந்தப் பகைமை புகைந்துகொண்டிருக்கிறது. இது எப்படி என்பதை மத்தேயுவின் விவரப்பதிவு விவரிக்கிறது. அநேக மாதங்கள் கடந்துவிட்டன, இப்பொழுது யோசேப்பும் மரியாளும் இயேசுவும் பெத்லகேமிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கின்றனர். அநேக அயல்நாட்டவர்கள் எதிர்பாராமல் அவரை வந்து சந்திக்கின்றனர். இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றி எண்ணற்ற காட்சிகள் வர்ணிக்கிறபோதிலும், இந்த மனிதர்களில் எத்தனை பேர் வந்தார்கள் என்பதை மத்தேயு குறிப்பிடவில்லை. அவர்களை ‘ஞானிகள்’ என்றும் அழைக்கவில்லை, ‘மூன்று ராஜாக்கள்’ என்றும் அழைக்கவில்லை. மாகி என்ற கிரேக்க வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார், அதன் அர்த்தம் “சோதிடர்கள்” என்பதாகும். இங்கே ஏதோ விபரீதம் ஏற்படப்போகிறது என்பதற்கு இதுவே வாசகருக்கு ஒரு துப்புகொடுக்க வேண்டும்; ஏனென்றால் சோதிடம் என்பது கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிற ஒரு கலை, உண்மையுள்ள யூதர்கள் அதை தவிர்ப்பதில் கவனமாய் இருந்தனர்.—உபாகமம் 18:10-12; ஏசாயா 47:13, 14.
இந்த சோதிடர்கள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து கிழக்கிலிருந்து வருகின்றனர். ‘யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவருக்கு’ பரிசுகள் கொண்டுவருகின்றனர். (மத்தேயு 2:2) ஆனால் அந்த நட்சத்திரம் அவர்களை பெத்லகேமுக்கு வழிநடத்துகிறதில்லை. எருசலேமுக்கும் மகா ஏரோதுவினிடத்திற்கும் வழிநடத்திச் செல்கிறது. இளம் இயேசுவுக்குத் தீங்கிழைக்க இப்பேர்ப்பட்ட துணிச்சலும் தைரியமும் உலகிலுள்ள வேறெந்த மனிதனுக்கும் இல்லை. பேராசைபிடித்த இந்தக் கொலைபாதக மனுஷன் தனக்கு அச்சுறுத்தலாய் இருப்பதாக நினைத்த தன் சொந்த குடும்ப அங்கத்தினர்களிலேயே பலபேரை கொலை செய்திருந்தான்.a ‘யூதருடைய [வருங்கால] ராஜா’ பிறந்திருக்கிறார் என்பதை கேள்விப்பட்டவுடனே கலக்கமடைந்து, அவரை பெத்லகேமில் கண்டுபிடிப்பதற்கு சோதிடர்களை அனுப்புகிறான். அவர்கள் செல்கையில், ஏதோ வினோதமான ஒன்று சம்பவிக்கிறது. எருசலேமுக்கு அவர்களை வழிநடத்திச்சென்ற அந்த ‘நட்சத்திரம்’ நகருவதாக தெரிகிறது!—மத்தேயு 2:1-9.
இது உண்மையிலேயே வானில் தோன்றிய ஒரு ஒளியா அல்லது ஒரு தரிசனமா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இந்த ‘நட்சத்திரம்’ கடவுளிடமிருந்து வரவில்லை என்பது நமக்குத் தெரியும். தீயநோக்குடன், அந்தப் புறமத வணக்கத்தாரை சரியாக இயேசுவிடம்—ஏழை தச்சனாலும் அவனுடைய மனைவியாலும் பாதுகாக்கப்படுகிற, எதுவும் செய்யமுடியாத நிலையிலிருக்கிற அந்தப் பிள்ளையிடம்—வழிநடத்தியது. ஏரோதுவின் வஞ்சகத்தை அறியாத அந்த சோதிடர்கள், பழிதீர்க்க துடித்துக்கொண்டிருந்த அந்த அரசனிடம் திரும்பிச்சென்று அறிவித்திருக்கலாம், இது அந்தக் குழந்தையின் அழிவுக்கு வழிநடத்தியிருக்கலாம். ஆனால், இப்போது கடவுள் தலையிடுகிறார்; அவர்கள் தங்களுடைய நாட்டிற்கு வேறொரு வழியில் செல்ல கனவின் மூலம் தெரியப்படுத்துகிறார். அப்படியானால், அந்த ‘நட்சத்திரம்’ கடவுளுடைய சத்துருவாகிய சாத்தானால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்; மேசியாவுக்கு தீங்கிழைக்க அவன் எதையும் செய்யத் துணிவான். அந்த ‘நட்சத்திரத்தையும்’ சோதிடர்களையும் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றிய காட்சியில் சித்தரிப்பது எவ்வளவு முரணானது!—மத்தேயு 2:9-12.
ஆனால் இன்னும் சாத்தான் ஓய்ந்தபாடில்லை. அவனுடைய பகடைக்காயான ஏரோது ராஜா பெத்லகேமில் இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொலைசெய்வதற்கு கட்டளை பிறப்பிக்கிறான். ஆனால் யெகோவாவுக்கு எதிரான போரில் சாத்தான் வெல்ல முடியாது. ஒருபாவமும் அறியாத இந்தப் பிள்ளைகள் கொலைசெய்யப்படுவதையும் கடவுள் முன்னரே அறிந்திருந்ததை மத்தேயு குறிப்பிடுகிறார். பாதுகாப்புக்காக எகிப்துக்கு செல்லும்படி யோசேப்பை ஒரு தேவதூதனால் எச்சரிப்பதன் மூலம் யெகோவா மீண்டும் சாத்தானின் திட்டத்தை முறியடிக்கிறார். சிலகாலத்திற்குப் பின்பு யோசேப்பு தன்னுடைய சிறிய குடும்பத்தோடு நாசரேத்தில் குடியேறுகிறார், அங்கே இயேசு தன்னுடைய சகோதர சகோதரிகளுடன் வளர்ந்துவந்தார் என மத்தேயு அறிவிக்கிறார்.—மத்தேயு 2:13-23; 13:55, 56.
கிறிஸ்துவின் பிறப்பு—அது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது
இயேசுவின் பிறப்பையும் அவருடைய ஆரம்பகால குழந்தைப் பருவத்தையும் பற்றிய சம்பவங்களின் சுருக்கத்தைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அநேகர் ஆச்சரியப்படுகிறார்கள். முரண்பாடாக இருப்பதாய் சிலர் அடித்துக் கூறுகிறபோதிலும், விவரப்பதிவுகள் ஒத்திசைவாகவும் திருத்தமாகவும் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். சில சம்பவங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிக்கப்பட்டதை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். பிறப்பிடத்தைப் பற்றிய பாரம்பரிய காட்சிகளில் சித்தரிக்கப்படுவதிலிருந்து சுவிசேஷங்களில் உள்ள முக்கியமான சில அம்சங்கள் குறிப்பிடத்தக்க விதத்தில் வித்தியாசப்பட்டிருப்பதைக் கண்டும் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஒருவேளை எல்லாவற்றையும்விட அதிக ஆச்சரியத்தை உண்டுபண்ணுவது என்னவென்றால், சுவிசேஷ பதிவுகளிலுள்ள முக்கிய குறிப்புகளை பாரம்பரிய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தவறவிட்டுவிடுவதே ஆகும். உதாரணமாக, இயேசுவின் தந்தைக்கு, அதாவது யோசேப்பு அல்ல, ஆனால் யெகோவா தேவனுக்கு அதிக கவனம் கொடுக்கப்படுவதில்லை. தம்முடைய நேச குமாரனை வளர்ப்பதையும் அவருக்குத் தேவையானவற்றை கொடுப்பதையும் யோசேப்பிடமும் மரியாளிடமும் ஒப்படைத்ததன் பேரில் அவருடைய உணர்ச்சிகளை கற்பனை செய்துபாருங்கள். தம்முடைய குமாரன் ஒரு குழந்தையாக இருந்தபோதே பகைமை நிறைந்த ராஜா அவரை கொலைசெய்ய வகைதேடும் ஒரு உலகில் வளர அனுமதித்ததில் பரலோக பிதாவின் கடும் வேதனையை கற்பனை செய்துபாருங்கள்! இந்தப் பலியை கொடுப்பதற்கு யெகோவாவை தூண்டியது மனிதவர்க்கத்திற்கான அவருடைய ஆழ்ந்த அன்பே.—யோவான் 3:16.
உண்மையான இயேசுவை பெரும்பாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஒதுக்கி விடுகின்றனர். தம்முடைய பிறந்த தேதியை எப்பொழுதாவது தம் சீஷர்களுக்கும்கூட சொன்னதாய் எந்தப் பதிவும் இல்லையே. அவருடைய பிறந்தநாளை அவரை பின்பற்றியவர்கள் கொண்டாடியதாகவும் எந்தவொரு அறிகுறியும் இல்லையே.
இயேசுவின் பிறப்பை அல்ல ஆனால் அவருடைய மரணத்தையே—உலக சரித்திரத்தை பாதித்த குறிப்பிடத்தக்க அந்தச் சம்பவத்தையே—நினைவுகூரும்படி அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளையிட்டார். (லூக்கா 22:19, 20) இயேசு தம்மை நினைவுகூரும்படி விரும்பியது மாட்டுக்கொட்டிலில் கிடக்கும் எதுவும் செய்யமுடியாத குழந்தையாக அல்ல, ஏனெனில் இனிமேலும் அவர் அப்படிப்பட்ட நிலையில் இல்லை. அவர் கொலைசெய்யப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, அப்போஸ்தலன் யோவானுக்கு தோன்றிய தரிசனத்தில் யுத்தத்திற்கு சவாரிசெய்யும் பலசாலியான ராஜாவாக காட்சியளித்தார். (வெளிப்படுத்துதல் 19:11-16) இப்படியாகத்தான், அதாவது கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ஆட்சியாளராகத்தான் இன்று நாம் இயேசுவை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் அவர் உலகை மாற்றப்போகும் ஒரு ராஜா.
[அடிக்குறிப்புகள்]
a சொல்லப்போனால், ஏரோதுவின் மகனைவிட ஏரோதுவின் பன்றி பாதுகாப்பாய் இருந்தது என்று அகஸ்து ராயன் குறிப்பிட்டார்.
[பக்கம் 8-ன் பெட்டி]
லூக்கா தவறாக எழுதிவிட்டாரா?
நாசரேத்தில் வளர்ந்து நசரேயன் என்று பொதுவாக அறியப்பட்ட இயேசு, சுமார் 150 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள பெத்லகேமில் எப்படி பிறந்திருக்க முடியும்? லூக்கா விளக்குகிறார்: “அந்நாட்களில் [இயேசு பிறப்பதற்கு முன்பு] உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. (இந்த முதலாம் குடிமதிப்பு எழுதப்படுவது சிரேனியு சீரியாவின் ஆளுநராக இருந்தபோது எடுக்கப்பட்டது;) அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.”—லூக்கா 1:1; 2:1-3.
அப்பட்டமான தவறு, மோசமான தவறு, ஒரு புனைக்கதை என சொல்லி விமர்சகர்கள் இந்தப் பகுதியை பலமாக தாக்குகின்றனர். குடிமதிப்பு எழுதப்பட்டதும் சிரேனியு ஆளுநராக பதவிவகித்ததும் பொ.ச. 6 அல்லது 7 என அவர்கள் பிடிவாதமாக கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரியானால், இது லூக்காவின் பதிவைக் குறித்து பெரும் சந்தேகத்தைக் கிளப்பும், ஏனெனில் இயேசு பொ.ச.மு. 2-ல் பிறந்தார் என்பதை அத்தாட்சிகள் காட்டுகின்றன. ஆனால் இந்த விமர்சகர்கள் இரண்டு முக்கிய உண்மைகளைப் புறக்கணித்து விடுகின்றனர். முதலாவதாக, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை குடிமதிப்பு எழுதப்பட்டதை லூக்கா ஒத்துக்கொள்கிறார்—‘முதலாம் குடிமதிப்பு’ என்று அவர் குறிப்பிடுவதை கவனியுங்கள். மற்றொரு குடிமதிப்பை, அதாவது பிற்பாடு எழுதப்பட்ட ஒரு குடிமதிப்பை பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 5:37) பிற்பாடு எழுதப்பட்ட இந்தக் குடிமதிப்பே சரித்திராசிரியர் ஜொஸிபஸ் விவரித்த ஒன்று. அது பொ.ச. 6-ல் எழுதப்பட்டது. இரண்டாவதாக, சிரேனியு ஆளுநராக பதவி வகித்த அந்தப் பிற்பட்ட தேதியில்தான் இயேசு பிறந்திருக்க வேண்டும் என்றில்லை. ஏன்? ஏனெனில் சிரேனியு அந்த ஸ்தானத்தில் இரண்டு தடவை பணிபுரிந்தார் என்பதை அத்தாட்சி காட்டுகிறது. அவர் முதல் தடவை பதவி வகித்தது பொ.ச.மு. 2-ஐ உள்ளடக்கியது என்பதை அநேக அறிஞர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.
இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று சொல்லிக்கொள்வதற்காகவே குடிமதிப்பு பற்றி கதைகட்டினார் எனவும் அதன்மூலம் மீகா 5:2-ல் உள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறினதாக கூறிக்கொண்டார் எனவும் சில விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த அபிப்பிராயம், வேண்டுமென்றே பொய் சொன்னவர் என்ற முத்திரையை லூக்காமீது குத்துகிறது, ஆனால் சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் புத்தகத்தையும் கவனத்துடன் எழுதிய ஒரு சரித்திராசிரியரைப் பற்றி சொல்லும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை எந்த விமர்சகரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்தவொரு விமர்சகரும் விளக்க முடியாத ஒன்றும் உள்ளது: குடிமதிப்பு எழுதப்பட்டதே ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது! “செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன்” ஆட்சியாளராக இருப்பார் என பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் தீர்க்கதரிசி தானியேல் முன்னறிவித்தார். இது, இஸ்ரவேலில் குடிமதிப்பு எழுதுவதற்கு அகஸ்து ராயனுக்கும் அவனுடைய ஆட்சிக்கும் பொருந்தியதா? இந்த ஆட்சியாளருக்கு அடுத்துவருபவருடைய ஆட்சியின்போது, மேசியா அல்லது ‘உடன்படிக்கையின் தலைவன்’ “முறிக்கப்படுவான்” என்று அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து முன்னறிவிக்கிறது. அகுஸ்து ராயனுக்கு அடுத்து வந்தவரான திபேரியுவின் ஆட்சிக் காலத்தில் இயேசு உண்மையிலேயே ‘முறிக்கப்பட்டார்,’ அதாவது கொல்லப்பட்டார்.—தானியேல் 11:20-22.
[படம்]
அகுஸ்து ராயன் (பொ.ச.மு. 27—பொ.ச. 14)
திபேரியு ராயன் (பொ.ச. 14-37)
[படத்திற்கான நன்றி]
Musée de Normandie, Caen, France
பிரிட்டிஷ் மியூஸியத்தின் உதவியால் போட்டோ எடுக்கப்பட்டது
[பக்கம் 8-ன் படம்]
யெகோவாவின் தூதன் கிறிஸ்துவின் பிறப்பை பற்றிய நற்செய்தியை தாழ்மையான மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்