மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது
பகுதி 8 இரும்பும் களிமண்ணிலுமான ஓர் அரசியல் கூட்டு
தேசீயப்பற்று: மற்ற எல்லா தேசங்களுக்கு மேலாக ஒரு தேசத்தை உயர்த்தும் ஒரு தேச விழிப்புணர்ச்சியின் உணர்வு. அதன் பண்பாடு, அக்கறைகள் ஆகியவற்றின் வளர்ச்சியை மற்ற தேசங்களின் வளர்ச்சிக்கு முன்பாக வைப்பது; முதன் முதல் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் தெளிவாகி ஆனால் 20-ம் நூற்றாண்டில் அதன் உச்சக்கட்டத்தையடைந்த ஒரு கொள்கை.
நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு உதவியற்றுத் தடுமாறிக்கொண்டிருக்கும் மனித அரசாங்கங்கள் மனித சமுதாயத்திற்கு நிலையான தன்மையைக் கொண்டுவரத் தவறிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின், தேசீய பாதுகாப்பு ஆலோசகர் பிகினியப் பெஸன்ஸ்கியின் பிரகாரம், நிலைமை விரைவில் மாறாது.
“பிரிந்துகொண்டிருக்கும் நம்முடைய உலகம்” என்ற தலைப்பைக்கொண்ட, 1985-ல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, மற்ற உலக தலைவர்களோடு பெஸன்ஸ்கியும், பத்திரிகை நிருபர் ஜார்ஜ் ஆன்னெ கேயரினால் பேட்டிக் காணப்பட்டார். அதில் பெஸன்ஸ்கி இவ்வாறு கூறியதாக அவள் குறிப்பிட்டாள்: “சர்வதேச நிலையற்றத் தன்மையை உண்டாக்கக்கூடிய காரணங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுறவிற்காக வேலைசெய்யும் சக்திகளின் மீது குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன. சமூகக் கலகம், அரசியல் அமைதிகுலைவு, பொருளாதார நெருக்கடி, சர்வதேச உட்பூசல்கள் இவையாவும் இந்த நூற்றாண்டின் எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் பரவலாக ஆகக்கூடும் என்பது உலகப் போக்கைப்பற்றிய எந்தவொரு நடுநிலையான ஆராய்ச்சியின் தவிர்க்கமுடியாத முடிவு.”
உண்மையிலேயே ஒரு நம்பிக்கையற்ற முன்னுரைத்தல், ஆனால் பைபிள் மாணாக்கர்களை அதிர்ச்சியுறவைக்கும் ஒன்றாக இல்லை. இதே நிலைமை தான் வெகு காலத்திற்கு முன்பு முன்னறிவிக்கப்பட்டது. எப்போது? எங்கே?
சொப்பனத்தினால் கலக்கமடைந்து
பொ.ச.மு. 624 முதல் 582 வரை பாபிலோனின் ராஜாவாயிருந்த நேபுகாத்நேச்சார், ஒரு சொப்பனத்தினால் கலக்கமடைந்தான். அதில் பசும்பொன்னாலான ஒரு தலையும், வெள்ளியாலான மார்புகளும் புயங்களும், வெண்கலத்தாலான வயிறும் தொடகளும், இரும்பாலான கால்களும், பாதி இரும்பும் பாதி களிமண்ணினாலான பாதங்களும் கொண்ட ஒரு பெரிய சிலையை அவன் கண்டான். கடவுளுடைய தீர்க்கதரிசி தானியேல் அந்தச் சிலையின் உட்கருத்தை நேபுகாத்நேச்சாருக்கு விளக்கினார்: “ராஜாவே, . . . பொன்னான அந்தத் தலை நீரே. உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும்.” ஆகையால், தெளிவாகவே, அந்தச் சிலை மனித அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டிருந்தது.—தானியேல் 2:37-39.
தானியேலின் காலத்திற்கு முன், பைபிளின் ஆசிரியருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலர்களை எகிப்து, அசீரியா ஆகிய இவையிரண்டும் ஒடுக்கின. (யாத்திராகமம் 19:5) பைபிளின் சூழமைவில், இது அவற்றை உலக வல்லரசுகளாக, ஆக்கியது. உண்மையிலேயே, பைபிள் சொல்லக்கூடிய ஏழு வல்லரசுகளில் முதலாவதாக இருந்தது. (வெளிப்படுத்தின விசேஷம் 17:10) பிறகு, தானியேலின் நாளில், பாபிலோன் எருசலேமைக் கவிழ்த்து, இஸ்ரவேலரைச் சிறைப்பிடித்துச் சென்றது. இவ்வாறு பாபிலோன் இந்த உலக வல்லரசுகளில் மூன்றாவதாகி, பொருத்தமாகவே இதில் “பொன்னான தலை” என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேதிய-பெர்சிய, கிரேக்க, ரோம, இறுதியாக, ஆங்கில அமெரிக்க பேரரசுகளை இனி வரவிருக்கும் உலக வல்லரசுகளாக பைபிளும் உலக வரலாறும் அடையாளப்படுத்துகின்றன.a
இந்தத் தேசங்கள் பைபிளினால் உலக வல்லரசுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன, ஏனென்றால் அவை கடவுளுடைய ஜனங்களோடு தொடர்பு கொண்டு, கடவுளுடைய ஊழியர்கள் ஆதரித்து வந்த தெய்வீக ஆட்சியை எதிர்த்தும் வந்தன. இவ்வாறு, நேபுகாத்நேச்சாரால் காணப்பட்ட அந்தச் சிலையானது, எவ்வாறு மனித ஆட்சி, அவனுடைய ராஜ்யம் முடிவடைந்த பின்னும், தெய்வீக அரசுரிமைக்கு எதிராக செலுத்தப்பட்டு வருகிறது என்பதை நன்கு படமாகக்காட்டியது. அந்தச் சிலையின் வெவ்வேறு பாகங்களால் படமாகக் காட்டப்பட்ட இந்த வல்லரசுகளின் தொடர்ச்சி அதன் தலையிலிருந்து தொடங்கி கீழ்நோக்கிச் சென்றன. நியாயமாகவே, பிறகு, அந்த கால்களும் பாதங்களும், தானியேல் விவரித்தபடி “முடிவு காலத்தில்” இருக்கும் மனித ஆட்சியின் இறுதி வெளிக்காட்டுதல்களை அடையாளமாகக் காட்டுகின்றன. பிறகு நாம், என்ன எதிர்ப்பார்க்க வேண்டும்?—தானியேல் 2:41, 42; 12:4.
‘பத்துக் கால்விரல்கள்’
தனி ஓர் உலக வல்லரசால் மாத்திரம் ஒடுக்கப்படுவதற்கு, கடவுளின் ஊழியர்கள் ஒருபோதும் ஒரு தேசம் அல்லது ஒரு பகுதியின் எல்லைக்குட்பட்டவர்களாக இல்லை. (அப். 1:8; 10:34, 35) அனைத்து நாடுகளின் அங்கத்தினர்களாகவும், ஒவ்வொரு வகை மனித அரசாங்கத்தின் பிரஜைகளாகவும், முடிவு காலம் ஆரம்பமாகிவிட்டது, மனித ஆட்சி செழித்தோங்கிய அதன் காலம் முடிவுக்கு வந்தது—விரைவில் தெய்வீக ஆட்சியினால் மாற்றீடு செய்யப்படும் என்று அவர்கள் வைராக்கியத்தோடு அறிவிக்கிறார்கள்.b இவ்வாறு, அவர்கள் அறிவிக்கும் தைரியமுள்ள செய்தி இப்பொழுதிருக்கும் எல்லா அரசியல் வல்லரசுகளுக்கும் எதிராகவுள்ளது. பொருத்தமாகவே, பைபிளில் உபயோகிக்கப்பட்டிருக்கும் எண் “பத்து” பூமிக்குரிய காரியங்களின் முழுமைத் தன்மையைக் குறித்துக் காட்டுகிறது. எனவே முடிவு காலத்தில், அரசியல் மனித ஆட்சி முழுவதும், ஐக்கியப்பட்டு தெய்வீக அரசுரிமைக்கு எதிராக இருக்கிறது, என்பதையே அந்தச் சிலையின் ‘பத்துக் கால்விரல்கள்’ பிரதிநிதித்துவம் செய்கின்றன.
முன்னறிவிக்கப்பட்ட இந்தக் காலப்பகுதியின் தொடக்கத்தில் அரசியல் நிலைமை என்னவாக இருந்தது? ஐரோப்பிய தேசங்கள் பூமியின் நிலப்பரப்பில் 35 சதவீதத்தை 1800-ம் ஆண்டில் கட்டுப்படுத்தின, ஆனால் 1914-க்குள் இந்த எண் 84 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது! “1914-ன் யுத்தத்தின் முடிவில், பல பெரிய வல்லரசுகள் உலகை பிரித்துக்கொண்டது பெரும்பாலும் முடிவுற்றதாகத் தோன்றிற்று” என்பதாக கால்லின்ஸ் உலக வரலாற்றின் அட்லஸ் குறிப்பிடுகிறது. உண்மையில், இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர், ஹியூ ப்ரோகன், “விரைவில் முழு உலகமும் ஆறு வல்லரசுகளால் ஆட்சி செய்யப்படும்” எனத்தோன்றியதாகச் சொல்கிறார்.
ஆயினும், சொல்லர்த்தமாக, “ஆறு வல்லரசுகளுக்கு” கூட சமமாகாத உலக அரசாங்கங்களின் முழுமையை படமாக்க ‘பத்துக் கால்விரல்களை’ பயன்படுத்துவது நியாயமில்லாததாகத் தோன்றலாம். எனவே தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, அந்தப் ‘பத்துக் கால்விரல்கள்’ உண்மையில் கவனிக்கத்தக்கதாய் ஆக வேண்டுமானால், 1914-ல் நிலவியிருந்த அரசியல் நிலைமை மாறியிருக்க வேண்டும்.
எக்காலத்திலும் உலகம் கண்டுள்ளவற்றுள் மிகப்பெரிதான, பிரிட்டன் பேரரசு 1900-கள் தொடங்கியபோது பூமியில் நாலில் ஒரு பகுதி ஆட்களை ஆட்சி செய்தது. மற்ற ஐரோப்பிய பேரரசுகள் இன்னும் லட்சக்கணக்கான ஜனங்களை கட்டுப்படுத்தின. ஆனால் முதல் உலகயுத்தம் தேசீயப்பற்றிற்கான வெற்றியில் விளைவடைந்தது. ஏல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியராகிய பால் கென்னடி விளக்குகிறார்: “பிராந்திய-நீதி நிர்வாக அளவில், ஐரோப்பாவில் கவனிக்கத்தக்க பெரிய மாற்றம், முன்பு ஹேப்ஸ்பர்க், ரோமேனோவ், மற்றும் ஹோஹென்சோலன் பேரரசின் பாகமாயிருந்த தேசங்களுக்கு பதிலாக—போலந்து, செக்கோஸ்லேவாக்கியா, ஆஸ்ட்ரியா, ஹங்கேரி, யுகோஸ்லாவியா, பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, மற்றும் லித்துவேனியா, போன்ற தேசீய-அரசுத் தொகுதிகளின் தோற்றமேயாகும்.”
இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பிறகு, இந்தப் போக்கு துரிதப்படுத்தப்பட்டது. தேசீயப்பற்று முழுசக்தியுடன் வெடித்தது. குறிப்பாக 1950-களின் இடைக் காலத்திற்குப் பிறகு, இந்தப் போக்கு மாற்ற முடியாததாயிருந்தது. ஐந்து நூற்றாண்டுகளாக இருந்து வந்த ஐரோப்பாவின் விரிவடைதல் தகர்ந்துபோன குடியேற்றப்பேரரசின் இடிமானத்தில் முடிவடைந்து கொண்டிருந்தது. ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் மத்தியக்கிழக்கிலும் தேசங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது.
தி நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது: இந்த “வளர்ச்சியானது கடந்த 2,000 ஆண்டுகளாக அரசியல் எண்ணங்களில் மேலோங்கியிருந்த கருத்துக்களுக்கு எதிராக அமைந்தது. இதுவரை மனிதன் பொதுவானதையும், முழு உலகத்திற்கானதையும் பொதுவாக வலியுறுத்தி, ஒற்றுமையை விரும்பத்தக்க இலக்காக கருதினான்,” அப்படியிருக்க, இப்பொழுது தேசீயப்பற்று தேசீய வேற்றுமைகளை வலியுறுத்திற்று. ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக அது பிரிவினைக்கு வழிவகுத்தது.
இரும்பும் களிமண்ணும்
பைபிள் அந்தச் சிலையின் கால்களும் பாதங்களும் “பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக” இருப்பதாக விவரிப்பதையும், மேலும் “அந்த ராஜ்யம் பிரிக்கப்படும், . . . ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும் . . . அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக் கொள்ளாதிருப்பார்கள்,” (தானியேல் 2:33, 41-43) என்று கூறுவதையும் கவனியுங்கள். ஒற்றுமையாய் ஒட்டிக்கொண்டிருத்தலில் உள்ள இந்தக் குறைபாடானது, குடியேற்ற அந்தஸ்திலிருந்து விடுபடுவது தொடர்ந்தபோதும், தேசீயப்பற்று செழித்தோங்கியபோதும், மேலும் வளரும் நாடுகள் வல்லமையடைந்தபோதும் தெளிவானது. பூகோளம் அரசியல் பிரிவினைக்குள் வேகமாக நழுவிக்கொண்டிருந்தது.
அந்தச் சிலையின் கால்களிலும் பாதங்களிலுமுள்ள இரும்பும் களிமண்ணுமாகிய ஒன்றுசேராத கலவைக்கு ஒப்பாக, சில அரசாங்கங்கள் இரும்பைப்போன்று—ஆட்சியாதிக்கம் அல்லது கொடுங்கோன்மையாகவும்—மற்றவைகள் களிமண்ணைப்போன்று—வளைந்து கொடுக்கக்கூடிய அல்லது குடியாட்சியாகவும் இருந்திருக்கின்றன. புரிந்துகொள்ளக்கூடிய விதமாகவே, ஓர் உலக ஒற்றுமையில் அவர்கள் ஒட்டிக்கொண்டிருக்க முடியாமலிருந்திருக்கிறார்கள். நம்முடைய நாளில் இதைச் சுட்டிக்காட்டி, unsere welt—Gestern, Heute, Morgen; 1800-2000 (நம்முடைய உலகம்—நேற்று, இன்று, நாளை;1800-2000), என்ற ஜெர்மானிய புத்தகம் சொல்கிறது: “19-ம் நூற்றாண்டுக்குள், பெரும்பாலும் எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் குடியாட்சி சுதந்திரம் பரவியிருந்தது, மேலும் முதல் உலகயுத்தத்தின் முடிவில், சுதந்திரத்தின் நோக்கம் முடிவான வெற்றியை அணுகியதாகத் தோன்றிற்று. . . . ரஷ்யாவில் 1917-ல் நடந்த புரட்சியோடு, சர்வாதிகாராட்சி புதிதாக எழுந்தது. அதிலிருந்து சர்வாதிகாராட்சி மற்றும் குடியாட்சியினிடையேயான கூடியிருத்தல் மற்றும் எதிர்த்தல், 20-ம் நூற்றாண்டை தனிப்படுத்திக்காட்டியிருக்கிறது.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
மக்கள் அதிகாரம்
‘பத்துக் கால்விரல்களின்’ ஆட்சியின்போது, பொதுமக்கள், “மனிதகுலத்தின் சந்ததி,” அரசாங்கத்தில் அதிகப்படியாக ஈடுபடுவார்கள் என்பதையும் கவனியுங்கள். வரலாற்று உண்மைகள் இந்த முன்னுரைத்தலை ஆதரிக்கின்றனவா?—தானியேல் 2:43.
உலகின் பல பாகங்களிலும் 1920 மற்றும் 1930-களில், குடியாட்சிகள் சர்வாதிகாராட்சிகளினால் மாற்றீடு செய்யப்பட்டிருந்தாலும், முதல் உலகயுத்தத்திற்குச் சற்றுப்பிறகு குடியாட்சி, மக்களாலான அரசாங்கம், மிகவும் பிரபலமாக இருந்தது. இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பிறகு, குடியேற்ற அந்தஸ்திலிருந்து விடுபடுதல் மீண்டும் பல புது குடியாட்சிகளை உருவாக்கியது. ஆயினும், பிறகு, 1960 மற்றும் 1970-களில் பல முன்னாள் குடியேற்றங்கள் அதிக ஆட்சியாதிக்க ஆட்சிமுறைகளை தெரிந்துகொண்டன.
எனினும், 20-ம் நூற்றாண்டில், முடியாட்சிகள் மற்றும் ஏகாதிபத்திய அரசாங்கங்கள், குடியாட்சி அல்லது மக்களின் அரசாங்கங்களினால் மாற்றீடு செய்யப்படுவதே போக்காக இருந்துகொண்டிருந்தது. கடந்த வருடம் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் எழுச்சியை “மக்களுடைய ஆண்டு” என்பதாக டைம் பத்திரிகை விவரித்தது. மற்றும் பெர்லின் மதில் இறுதியில் விழுந்தபோது, Der Spiegel என்ற ஜெர்மானியப் பத்திரிகை அதன் முன்அட்டையை “Das Volk Siegt”—மக்கள் வெற்றியடைகிறார்கள் என்ற வார்த்தைகளால் அலங்கரித்தது!
அதிகப்பேச்சும், குறைந்த செயலும்
அரசியல் சீர்திருத்தத்தை வற்புறுத்திய மக்கள் அதிகாரமுள்ள எல்லா கிழக்கு ஐரோப்பா நாடுகளிலும், பல அரசியல் கட்சிகள் பங்கு பெறும், ஒரு தடைவிலக்கற்ற தேர்தலுக்கான கோரிக்கை இருந்து வந்திருக்கிறது. இப்போதுள்ள தங்களுடைய வடிவத்தில், அரசியல் கட்சிகள், 19-ம் நூற்றாண்டின் போது ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தோன்றின. 20-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து, அவை உலகம் முழுவதும் பரவின. இன்று அவை முன்பு எக்காலத்திலும் இருந்ததைவிட பெரிதாகவும், உறுதியாகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. அவற்றினாலும், தொழிலாளர் சங்கங்கள், உறுப்பினரின் ஆதரவு திரட்டுதல், சூழமைப்புப் பிரிவினர் மற்றும் சொல்லப்படாத மற்ற பிரஜைகளும், மற்றும் சிறப்பு அக்கறைப் பிரிவினர் ஆகியவற்றினாலும், மக்கள் அதிகாரம் இன்று முன்பு எக்காலத்தையும் விட அடிக்கடி மற்றும் அதிக செயலாற்றலுடையதாயிருக்கிறது.
ஆயினும், அரசியல் செயல்முறையில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது போலவே, ஓர் அரசியல் அங்கீகாரம் பெறுவதும் கடினமாகிறது. விவாதத்திற்குட்பட்ட கருத்துக்களும் அக்கறைகளும் கொண்ட ஒரு திரள்கூட்டத்தின் மத்தியில், சிறுபான்மையோர் அரசாங்கங்கள், இக்கட்டுக்குள்ளான, அதிகம் பேசி குறைவாக செயல்படுத்தக்கூடிய அரசாங்கங்கள் விளைவடைகின்றன.
இரும்பையும் களிமண்ணையும் போல 1914-லிருந்து பூகோளம் முழுவதுமுள்ள அரசியல் கூட்டானது பலமற்றதாய் இருக்கிறது. உதாரணமாக, அரசாங்க விவகாரங்களில் தெய்வீக வழிநடத்துதலை வேண்டிக்கொண்ட நாட்கள் கடந்து போயின. “இவ்வாறு மேற்கத்திய நாகரிகத்தில் உள்ள மனிதர் முழுவதும் தங்கள்மீதே திரும்ப தூக்கி எறியப்பட்டார்கள், மற்றும் எப்போதும் தங்களை தேவையுள்ளவர்களாகவே காண்கிறார்கள்,” என்று முடிக்கிறது தி கொலம்பியா ஹிஸ்டரி ஆஃப் தி உவோர்ல்ட்.
தன்னம்பிக்கைக்கான வாய்ப்பு இருக்கிறதா?
“ஏன் இந்தத் தனித்தன்மை வாய்ந்த மற்றும் சம்பந்தப்பட்ட வளர்ச்சிகள் எல்லாம் 20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஒன்றுசேர்ந்து சம்பவித்திருக்க வேண்டும்? உலக சீர்குலைவைப்பற்றிய இந்தப் பயமுறுத்தல்கள் ஏன் சரியாகவே மனிதன் அவனுடைய முன் வரலாற்றிலெல்லாம்விட அதிக விஞ்ஞான முன்னேற்றத்தையும் அறிவையும் அடைந்திருக்கும் சகாப்தத்தில் தோன்றியிருக்கின்றன?” பத்திரிகை நிருபர் கேயரினால் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விகள் சிந்தனையைத் தூண்டக்கூடியவையாயிருக்கின்றன. ஆனால் எவராவது பதில்கள் கொண்டிருக்கிறாரா?
ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு, தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா தன்னம்பிக்கையோடு குறிக்கிறது: “நம்முடைய காலத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு நாம் முந்தைய எந்தத் தலைமுறையையும் விட ஒருவேளை நல்ல வாய்ப்பைக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் இன்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1990-களின் தொடக்கத்தில், தன்னம்பிக்கைக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறதா? பனிப்போரின் முடிவு, கீழ்த்திசை மற்றும் மேலைத்திசைகளுக்கு இடையேயான அதிகக் கூட்டுறவு, மற்றும் உலக போரயுதக் குறைப்பில் அடைந்துள்ள கணிசமான முன்னேற்றம் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி, நீங்கள் ‘ஆம்’ என்று சொல்லலாம்,
அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்பதாக பைபிள் முன்னறிவித்தது. பைபிள் வரலாற்றின் ஏழாவது உலக வல்லரசின் ஆட்சியின் போது, தேசங்களை ஒன்றுசேர்க்கும் நோக்கத்திற்காக, அதே காலத்துக்குரிய ஓர் எட்டாம் வல்லரசு குறிப்பிட்ட வகையில் ஸ்தாபிக்கப்படும் என்று அது காட்டிற்று. (வெளிப்படுத்துதல் 17:11) ஆனால் அது வெற்றி பெறுமா? “மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது,” பகுதி 9 பதிலளிக்கும். (g90 11/22)
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் வரலாற்றின் இந்த உலக வல்லரசுகளை ஆங்கில காவற்கோபுரம் 1988 பிப்ரவரி 1 முதல் ஜூன் 1, வரையிலுள்ள தன்னுடைய வெளியீடுகளில் தனித்தனியாக விவரமாக விளக்கியிருக்கிறது.
b பைபிள் பூர்வமான ஆதாரங்களுக்கு, உவாட்ச்டவர் சங்கத்தினால் 1982-ம் ஆண்டு வெளியிடப்பட்ட, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில் 16-ம் மற்றும் 18-ம் அதிகாரங்களைப் பார்க்கவும்.
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
“தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்.”—மத்தேயு 12:25
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
“ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது.” —சங்கீதம் 46:6