மகிழ்ச்சியான உலகிற்கு திறவுகோல்
“இந்த இரு ஆயிரமாண்டுகளில் மட்டுமல்ல, மனித சரித்திரத்திலேயே பெரும் செல்வாக்கு பெற்ற ஒரே நபர் நசரேயனாகிய இயேசுவே” என கூறியது டைம் பத்திரிகை. இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் நல்மனம் படைத்த ஆயிரக்கணக்கானோர் அவருடைய மேன்மையை மட்டுமல்ல, பிறர்மீது அவர் காட்டிய கரிசனையையும் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே, அவரை அவர்கள் ராஜாவாக்க விரும்பியதில் ஆச்சரியமில்லை. (யோவான் 6:10, 14, 15) ஆனாலும், முந்தைய கட்டுரையில் பார்த்தபடி, அரசியலில் தலையிட இயேசு மறுத்தார்.
குறைந்தபட்சம் மூன்று அம்சங்களின் அடிப்படையில் இயேசு மறுப்பு தெரிவித்தார்: மனித ஆட்சி உட்பட, மனிதரின் சுய தீர்மானத்தைக் குறித்ததில் தம் பிதாவின் கருத்துக்கள்; எவ்வளவு கஷ்டப்பட்டு சிறந்த ஆட்சியை அமைத்தாலும் அதற்கு எதிராக வல்லமையுடைய மறைவான சக்திகள் செயல்படுகின்றன என்பதை இயேசு அறிந்திருந்தது; முழு பூமியையும் ஆளுவதற்கு பரலோக அரசாங்கத்தை ஸ்தாபிப்பதைப் பற்றிய கடவுளின் நோக்கம். இந்த மூன்று குறிப்புகளையும் இன்னும் நுணுக்கமாக ஆராய்கையில், இவ்வுலகை மேம்படுத்துவதற்கு மனிதர் எடுக்கும் முயற்சிகளெல்லாம் ஏன் தோல்வியடைந்திருக்கின்றன என்பதற்குரிய காரணத்தை நாம் காண்போம். எவ்வாறு வெற்றி கிடைக்கும் என்பதையும் காண்போம்.
மனிதர் தங்களைத் தாங்களே ஆள முடியுமா?
மனிதரை கடவுள் படைத்தபோது, விலங்கினங்கள் மீது அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். (ஆதியாகமம் 1:26) ஆனால் மனிதரோ கடவுளுடைய அரசதிகாரத்தின் கீழ் இருந்தார்கள். ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சமாகிய’ ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை சாப்பிடாமல் கீழ்ப்படிதலோடு தங்களை விலக்கிக்கொள்வதன் மூலம் கடவுளுக்கு கீழ்ப்பட்டிருப்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 2:17) ஆனால் வருத்தகரமான விஷயம் என்னவென்றால், ஆதாமும் ஏவாளும் தங்கள் சுயாதீனத்தை துஷ்பிரயோகம் செய்து கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். விலக்கப்பட்ட கனியை சாப்பிட்டது வெறுமனே ஒரு திருட்டு அல்ல; கடவுளுடைய அரசதிகாரத்திற்கு எதிராக செய்த கலகமாகும். ஆதாமும் ஏவாளும் “ஒழுக்கநெறி விஷயத்தில் முழு சுதந்திரத்தைக் கேட்பதன் மூலம் தான் ஒரு சிருஷ்டி என்ற நிலையை மனிதன் ஒத்துக்கொள்ள மறுக்கிறான். . . . அந்த முதல் பாவம் கடவுளுடைய அரசதிகாரத்தின் மீது செய்யப்பட்ட ஒரு தாக்குதலாக இருந்தது” என ஆதியாகமம் 2:17-ன் அடிக்குறிப்பில் த நியூ ஜெரூசலம் பைபிள் குறிப்பிடுகிறது.
முக்கியமான ஒழுக்கநெறி விவாதங்கள் இதில் உட்பட்டிருந்ததால், ஆதாம் ஏவாளையும் அவர்களுடைய சந்ததியாரையும் தங்களுடைய சொந்த வழியில் செல்ல கடவுள் அனுமதித்தார்; நன்மை எது தீமை எது என்பதற்குரிய தராதரங்களை தாங்களே வகுத்துக்கொண்டார்கள். (சங்கீதம் 147:19, 20; ரோமர் 2:14) சுருங்கச் சொன்னால், சுய தீர்மானத்துடன்கூடிய மனிதனின் ஆட்சி அது முதற்கொண்டே ஆரம்பமானது. ஆனால், அது வெற்றியடைந்திருக்கிறதா? ஆயிரக்கணக்கான வருட அனுபவத்திலிருந்து பார்த்தால், இல்லை என்றே நாம் சொல்ல முடியும்! ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டிருக்கிறான்’ என பிரசங்கி 8:9 குறிப்பிடுகிறது. மனிதருடைய சுயாட்சியைப் பற்றிய இந்த வருத்தகரமான பதிவு, எரேமியா 10:23-ல் சொல்லப்பட்டது எவ்வளவு உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” படைப்பாளரின் உதவியின்றி வெற்றிகரமாக ஆளும் திறமை மனிதருக்கு இல்லை என்பதையே சரித்திரம் நிரூபித்திருக்கிறது.
இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இயேசுவும் ஒப்புக்கொண்டார். கடவுளுடைய உதவியின்றி சுயமாக செயல்படுவதை அவர் அறவே வெறுத்தார். ‘நான் என் சுயமாய் ஒன்றும் செய்யவில்லை,’ என்றும் ‘[கடவுளுக்குப்] பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என்றும் அவர் கூறினார். (யோவான் 4:34; 8:28, 29) ஆகவே, மனிதரிடமிருந்து ஆட்சியைப் பெற கடவுளிடமிருந்து எந்த ஒப்புதலையும் பெறாததால் அதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என இயேசு சற்றும் எண்ணிப்பார்க்கவில்லை. என்றபோதிலும், அவர் சக மனிதருக்கு உதவிசெய்ய தயங்கினார் என இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அன்றும் வருங்காலத்திலும் ஜனங்கள் அதிக மகிழ்ச்சியைக் கண்டடைய தம்மால் முடிந்தமட்டும் உதவினார். மனிதகுலத்திற்காக தம் உயிரையும் கொடுத்தார். (மத்தேயு 5:3-11; 7:24-27; யோவான் 3:16) ஆனால், மனிதவர்க்கத்தின்மீது கடவுள் தமது அரசதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்குரிய காலம் உட்பட, “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்பதை இயேசு அறிந்திருந்தார். (பிரசங்கி 3:1; மத்தேயு 24:14, 21, 22, 36-39) இருந்தாலும், ஏதேனில் ஒரு பாம்பின் மூலம் தீய ஆவி சிருஷ்டி பேசியபோது நம் ஆதி பெற்றோர் அதற்கு அடிபணிந்தனர் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இது, இயேசு ஏன் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்பதற்குரிய இரண்டாவது காரணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இந்த உலகின் மறைவான ஆட்சியாளன்
ஒரு வணக்கச் செயலுக்கு பதிலீடாக “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” இயேசுவுக்கு தருவதற்கு சாத்தான் முன்வந்தான் என பைபிள் நமக்குக் கூறுகிறது. (மத்தேயு 4:8-10) சுருங்கச் சொன்னால், உலகம் முழுவதையும் ஆளும் உரிமை இயேசுவுக்கு முன் வைக்கப்பட்டது—பிசாசின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டால். இயேசு இந்த சோதனைக்குள் வீழ்ந்துவிடவில்லை. இருந்தாலும், இது உண்மையில் சோதனையாகத்தான் இருந்ததா? இப்படிப்பட்ட உயர்ந்த ஸ்தானத்தை சாத்தானால் அளிக்க முடியுமா? முடியும், ஏனெனில் இயேசுதாமே பிசாசை “இந்த உலகத்தின் அதிபதி” என அழைத்தார்; அப்போஸ்தலன் பவுல் அவனை ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ என குறிப்பிட்டார்.—யோவான் 14:30; 2 கொரிந்தியர் 4:4; எபேசியர் 6:12.
மனிதருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிசாசுக்கு துளிகூட இல்லை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே, சாத்தானை ‘கொலைபாதகன்’ என்றும் “பொய்களுக்கும் எல்லா தவறுகளுக்கும் பிதா” என்றும் அவர் குறிப்பிட்டார். (யோவான் 8:44, தி ஆம்பிளிஃபைட் பைபிள்) இப்படிப்பட்ட ஒரு பொல்லாத ஆவி ஆளின் ‘அதிகாரத்திற்குள் கிடக்கிற’ ஓர் உலகம் ஒருபோதும் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. (1 யோவான் 5:19, NW) ஆனால் பிசாசு இந்த அதிகாரத்தை என்றென்றும் பெற முடியாது. இப்போது வல்லமையுள்ள ஆவி சிருஷ்டியாக இருக்கும் இயேசு, விரைவில் சாத்தானை அகற்றி அவனுடைய அதிகாரத்தை முற்றிலும் நீக்கிப்போடுவார்.—எபிரெயர் 2:14; வெளிப்படுத்துதல் 20:1-3.
உலக ஆட்சியாளனாக தன்னுடைய நாட்கள் எண்ணப்பட்டுவிட்டது என்பது சாத்தானுக்கு தெரியும். ஆகவே, நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்கு முன்பு செய்தது போலவே ஜனங்களை சீர்திருத்த முடியாத அளவுக்கு சீரழிக்க மிகத் துணிவுடனும் முழு மூச்சுடனும் செயல்படுகிறான். (ஆதியாகமம் 6:1-5; யூதா 6) “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ” என வெளிப்படுத்துதல் 12:12 கூறுகிறது; ஏனென்றால், “பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” பைபிள் தீர்க்கதரிசனமும் உலக சம்பவங்களும் நாம் அந்த ‘கொஞ்சக்காலத்தின்’ முடிவில் வாழ்கிறோம் என காட்டுகின்றன. (2 தீமோத்தேயு 3:1-5) விடுதலை வெகு சமீபம்.
மகிழ்ச்சியைக் கொண்டுவரும் அரசாங்கம்
அரசியலிலிருந்து இயேசு தம்மை விலக்கிக்கொண்டதற்கு மூன்றாவது காரணம், குறிக்கப்பட்ட காலத்தில் இந்தப் பூமியை ஆளுவதற்காக கடவுள் பரலோக அரசாங்கத்தை ஸ்தாபிப்பார் என்பதை அவர் அறிந்திருந்ததாகும். இந்த அரசாங்கத்தை கடவுளுடைய ராஜ்யம் என பைபிள் அழைக்கிறது; இதுவே இயேசுவுடைய போதனையின் மையப்பொருளாக இருந்தது. (லூக்கா 4:43; வெளிப்படுத்துதல் 11:15) அந்த ராஜ்யம் வருவதற்காக ஜெபிக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் போதித்தார்; அந்த ஆட்சியில் மட்டுமே ‘கடவுளுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படும்.’ (மத்தேயு 6:9, 10) ‘இந்த ராஜ்யம் பூமி முழுவதையும் ஆட்சி செய்யப் போகிறதென்றால் மனித அரசாங்கங்களெல்லாம் என்னவாகும்?’ என நீங்கள் நினைக்கலாம்.
இதற்கு பதில் தானியேல் 2:44-ல் காணப்படுகிறது: ‘அந்த ராஜாக்களின் [தற்கால ஒழுங்குமுறையின் முடிவில் ஆட்சி புரிபவர்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை . . . அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’ கடவுளுடைய ராஜ்யம் ஏன் பூமியிலுள்ள அரசாங்கங்களையெல்லாம் ‘நொறுக்க’ வேண்டும்? ஏனெனில் ஏதேன் தோட்டத்தில் கடவுளுக்கு எதிராக சாத்தான் தூண்டிவிட்ட சுயதீர்மான மனப்பான்மையை இவை விடாப்பிடியாக வற்புறுத்தி வருகின்றன. இந்த மனப்பான்மையை தொடர்ந்து காட்டுபவர்கள் மனிதரின் நல்வாழ்வுக்கு எதிராக செயல்படுவதோடு, படைப்பாளரோடு யுத்தம் செய்யும் நிலையிலும் தங்களை வைத்துக் கொள்கிறார்கள். (சங்கீதம் 2:6-12; வெளிப்படுத்துதல் 16:14, 16) ஆகவே, ‘நாம் கடவுளுடைய ஆட்சியின் பக்கமா அல்லது அதற்கு எதிர் பக்கமா?’ என நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
யாருடைய அரசதிகாரத்தை தெரிந்தெடுப்பீர்கள்?
ஆட்சியுரிமையை பற்றிய விஷயத்தில் அறிவுப்பூர்வமாக தீர்மானமெடுக்க ஜனங்களுக்கு உதவ, இந்த ஒழுங்குமுறையின் முடிவு வருவதற்கு முன்பாக ‘ராஜ்யத்தினுடைய . . . சுவிசேஷத்தை பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக” பிரசங்கிப்பதற்கு இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பொறுப்பளித்தார். (மத்தேயு 24:14) கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கிக்கிறவர்கள் என உலகம் முழுவதிலும் இன்று அறியப்படுகிறவர்கள் யார்? யெகோவாவின் சாட்சிகள். சொல்லப்போனால், இந்தப் பத்திரிகையின் அட்டை பக்கம் “யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது” என்ற வார்த்தைகளை வெகுகாலமாகவே தாங்கி வந்திருக்கிறது. இன்று 230-க்கும் மேலான நாடுகளில் சுமார் 60 லட்சம் சாட்சிகள் அந்த ராஜ்யத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற ஜனங்களுக்கு உதவி செய்கிறார்கள்.a
ராஜ்யத்தின் குடிமக்களுக்கு ஆசீர்வாதங்கள்
இயேசு எப்போதுமே கடவுளுடைய வழியிலே எல்லாவற்றையும் செய்தார். ஆகவே, சுதந்திர போக்கை தெரிந்துகொண்டு அரசியலின் துணையோடு தற்போதைய ஒழுங்குமுறையை ஆதரிக்கவோ அல்லது சீர்படுத்தவோ முயலுவதற்கு பதிலாக, இந்த உலக பிரச்சினைகளுக்கு ஒரே பரிகாரமான கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்கவே அவர் அரும்பாடு பட்டார். அவருடைய உண்மைப் பற்றுறுதிக்கு பலனாக அந்த ராஜ்யத்தின் அரசராக பரலோகத்தில் மகிமையான சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார். கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால் அவருக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட அருமையான பரிசு அது!—தானியேல் 7:13, 14.
இன்று கடவுளுடைய ராஜ்யத்தை முதலிடத்தில் வைப்பதிலும் அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிவதிலும் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுகிற லட்சக்கணக்கானோரும் அருமையான பரிசை—கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாக வாழும் சிலாக்கியத்தை—அனுபவித்து மகிழ்வார்கள். (மத்தேயு 6:33) ராஜ்யத்தின் அன்பான ஆட்சியின்கீழ் அவர்கள் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் மனித பரிபூரணத்திற்கு உயர்த்தப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 21:3, 4) 1 யோவான் 2:17 இவ்வாறு கூறுகிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” சாத்தானும் அவனைச் சேர்ந்தவர்களும் துடைத்தழிக்கப்படவே, இந்த பூமி தேசப் பிரிவினைகள், ஊழல் நிறைந்த வர்த்தக அமைப்புகள், பொய் மதம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு பூகோள பரதீஸாக மாறும்போது, அதில் நித்தியமாக வாழ்வது எப்பேர்ப்பட்ட ஆனந்தமாக இருக்கும்!—சங்கீதம் 37:29; 72:16.
ஆம், உண்மையில் மகிழ்ச்சியான உலகிற்கு கடவுளுடைய ராஜ்யமே திறவுகோல்; அதை அறிவிக்கிற செய்தியும் பொருத்தமாகவே நற்செய்தி என கூறப்படுகிறது. இதுவரை இந்த நற்செய்தியை நீங்கள் கேட்கவில்லை எனில் அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்கள் வீட்டிற்கு வரும்போது கேட்கலாமே.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பேசுகையில் அரசியலை புகுத்துவதோ அல்லது தடையையோ துன்புறுத்தலையோ எதிர்ப்படுகிற தேசங்களிலும்கூட அந்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக கலகத்தை தூண்டிவிடுவதோ இல்லை. (தீத்து 3:1) மாறாக, இயேசுவும் முதல் நூற்றாண்டு சீஷர்களும் செய்தது போல அவர்களும் அரசியல் சாராத பயனுள்ள ஆன்மீக சேவையை செய்ய முயற்சி செய்கிறார்கள். வித்தியாசப்பட்ட சமுதாயங்களில் வாழும் நல்மனமுடைய ஜனங்கள் குடும்ப பாசம், நேர்மை, ஒழுக்க சுத்தம், நற்செயலுக்கான நெறிமுறைகள் போன்ற பயனுள்ள பைபிள் தராதரங்களை ஏற்றுக்கொள்ள சாட்சிகள் தங்களாலான மட்டும் உதவுகிறார்கள். மிக முக்கியமாக, பைபிள் தராதரங்களை பின்பற்றுவது எப்படி, மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கையாக கடவுளுடைய ராஜ்யத்தை எதிர்பார்ப்பது எப்படி என்பதையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க முயலுகிறார்கள்.
[பக்கம் 5-ன் படம்]
கடவுளின் உதவியின்றி மனிதர் வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியாது என்பதை சரித்திரம் நிரூபிக்கிறது
[பக்கம் 5-ன் படம்]
இந்த “காரிய ஒழுங்குமுறையை” சாத்தான் ஆளுவதால், “உலகத்தின் சகல ராஜ்யங்களையும்” இயேசுவுக்கு அளிக்க அவனால் முடிந்தது
[பக்கம் 7-ன் படங்கள்]
கடவுளுடைய ராஜ்ய ஏற்பாட்டின்கீழ் இந்த உலகம் ஓர் அருமையான இடமாக மாறும் என இயேசு போதித்தார்