கடவுளுடன் நடவுங்கள், நன்மையை அறுவடை செய்யுங்கள்
“அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்.”—ஓசியா 8:7.
1. யெகோவாவுடன் நாம் எப்படி நடக்க முடியும்?
ஆபத்தான ஒரு பாதையில் நடந்து செல்லும்போது அனுபவமிக்க வழிகாட்டி துணைக்கு வந்தால் பாதுகாப்பாக இருக்கும். நாமே தனியாக செல்வதைவிட அவரோடு செல்வது ஞானமானது. சில விதங்களில், நம்முடைய சூழ்நிலையும் இப்படித்தான் இருக்கிறது. தற்போதைய பொல்லாத உலகம் எனும் பரந்த வனாந்தரம் வழியாக நம்மை வழிநடத்திச் செல்ல யெகோவா முன்வந்திருக்கிறார். நாமே தனியாக நடந்து செல்லாமல் அவரோடு நடந்து செல்வது ஞானமானது. கடவுளுடன் நாம் எப்படி நடக்க முடியும்? அவருடைய வார்த்தையின் வாயிலாக அவர் தரும் வழிநடத்துதலை பின்பற்றுவதன் மூலமே.
2. இந்தக் கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
2 ஓசியா 1 முதல் 5 வரையான அதிகாரங்களில் உள்ள தீர்க்கதரிசன நாடகத்தை முந்தைய கட்டுரையில் நாம் சிந்தித்தோம். கடவுளுடன் நடக்க உதவும் பாடங்கள் அந்நாடகத்தில் இருப்பதை நாம் பார்த்தோம். இப்பொழுது, 6 முதல் 9 வரையான அதிகாரங்களில் உள்ள சிறப்பு குறிப்புகள் சிலவற்றை நாம் சிந்திக்கலாம். முதலில், இந்த நான்கு அதிகாரங்களைப் பற்றிய சுருக்கமான ஒரு கண்ணோட்டத்துடன் ஆரம்பிக்கலாம்.
சுருக்கமான ஒரு கண்ணோட்டம்
3. ஓசியா 6 முதல் 9 அதிகாரங்களில் உள்ளவற்றை சுருக்கமாக விவரிக்கவும்.
3 முக்கியமாய் பத்துக் கோத்திர வட ராஜ்யமான இஸ்ரவேலுக்கு தீர்க்கதரிசனம் உரைப்பதற்காகவே ஓசியாவை யெகோவா அனுப்பினார். அத்தேசம்—செல்வாக்குமிக்க கோத்திரமாகிய எப்பிராயீமின் பெயரிலும் அழைக்கப்பட்ட அத்தேசம்—யெகோவாவைவிட்டு தூரமாக விலகிச் சென்றுவிட்டது. அதன் ஜனங்கள் யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, பொல்லாத காரியங்களை செய்து துரோகிகளாக மாறியதை 6 முதல் 9 வரையான அதிகாரங்கள் காட்டுகின்றன. (ஓசியா 6:7) அவர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக அந்நிய தேசத்தாருடைய நட்பை நாடினார்கள். அவர்கள் தொடர்ந்து பொல்லாப்பை விதைத்ததால் பொல்லாப்பையே அறுவடை செய்வார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்களுக்கு தண்டனைத் தீர்ப்பு சீக்கிரத்தில் வரவிருந்தது. ஆனால், இதயத்திற்கு இதமளிக்கும் செய்தியும் ஓசியா தீர்க்கதரிசனத்தில் உள்ளது. உண்மையாக மனந்திரும்பியதைச் செயலில் காட்டினால் யெகோவாவிடம் திரும்பி இரக்கம் பெற முடியுமென அந்த ஜனங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
4. ஓசியா தீர்க்கதரிசனத்திலிருந்து என்ன நடைமுறையான பாடங்களை சிந்திக்கப் போகிறோம்?
4 ஓசியா தீர்க்கதரிசனத்தின் இந்த நான்கு அதிகாரங்களிலிருந்து கடவுளுடன் நடக்க உதவும் கூடுதலான வழிநடத்துதலை நாம் பெறலாம். நடைமுறையான நான்கு பாடங்களை நாம் சிந்திக்கலாம்: (1) உண்மையான மனந்திரும்புதல் வெறும் வார்த்தைகளில் அல்ல, செயல்களில் காட்டப்படுகிறது; (2) பலிகள் மட்டுமே கடவுளை பிரியப்படுத்திவிடாது; (3) யெகோவாவின் வணக்கத்தார் அவரைவிட்டு விலகிச்செல்கையில் அவர் வருத்தப்படுகிறார்; (4) நன்மையை அறுவடை செய்வதற்கு, நன்மையை விதைக்க வேண்டும்.
உண்மையான மனந்திரும்புதல் எப்படிக் காட்டப்படுகிறது
5. ஓசியா 6:1-3-ன் சாராம்சம் என்ன?
5 மனந்திரும்புதலையும் இரக்கத்தையும் பற்றி ஓசியா தீர்க்கதரிசனம் நமக்கு நிறைய விஷயங்களைக் கற்பிக்கிறது. ஓசியா 6:1-3-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம் போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப் போலவும், பூமியின் மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்.”
6-8. இஸ்ரவேலருடைய மனந்திரும்புதலில் என்ன தவறு இருந்தது?
6 இந்த வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகளைச் சொன்னது யார்? விசுவாசமற்ற இஸ்ரவேலர் சொன்னதாகச் சிலர் கூறுகின்றனர். கீழ்ப்படியாத அந்த ஜனங்கள் மனந்திரும்பியது போல் நடித்ததாகவும் கடவுளுடைய இரக்கத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மற்றவர்களோ, ஓசியா தீர்க்கதரிசிதான் சொன்னார் என்றும் யெகோவாவிடம் திரும்பிவரும்படி ஜனங்களிடம் அவர் கெஞ்சினார் என்றும் கூறுகின்றனர். இதைச் சொன்னவர் யாராக இருந்தாலும் சரி, முக்கியமான கேள்வி என்னவென்றால், பத்துக் கோத்திர இஸ்ரவேலர் உண்மையான மனந்திரும்புதலை காண்பித்து யெகோவாவிடம் திரும்பினார்களா? இல்லை என்பதே பதில். ஓசியா மூலம் யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி [“அன்புள்ள தயவு,” NW] காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது.” (ஓசியா 6:4) கடவுளுடைய ஜனங்களின் ஆன்மீக நிலை மோசமடைந்ததற்கு வருந்தத்தக்க என்னே ஓர் அத்தாட்சி! சூரியன் உதித்ததும் மறைந்துவிடும் பனி போல், அவர்களுடைய அன்புள்ள தயவு, அதாவது பற்றுமாறா அன்பு, ஏறக்குறைய முற்றிலும் மறைந்துபோயிருந்தது. மனந்திரும்பியதாக அந்த ஜனங்கள் சொல்லிக்கொண்டாலும், இரக்கம் காட்டுவதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் யெகோவா காணவில்லை. அதற்குக் காரணம் என்ன?
7 இஸ்ரவேல் இருதயப்பூர்வமாக மனந்திரும்பவில்லை. தம் ஜனங்கள் மீது யெகோவா வெறுப்படைந்திருப்பதைப் பற்றி ஓசியா 7:14 கூறுகிறது: “அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை.” 16-ம் வசனம் மேலும் இவ்வாறு கூறுகிறது: “திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல”—அதாவது, “உயர்ந்த வணக்கத்திடம் அல்ல.” (NW அடிக்குறிப்பு) யெகோவாவுடன் தங்கள் உறவை புதுப்பிப்பதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்து, அவருடைய உயர்ந்த வணக்கத்திடம் திரும்பிவர அவர்களுக்கு விருப்பமில்லை. சொல்லப்போனால், கடவுளுடன் நடக்க அவர்கள் உண்மையில் விரும்பவில்லை!
8 இஸ்ரவேலருடைய மனந்திரும்புதலில் மற்றொரு பிரச்சினையும் இருந்தது. அந்த ஜனங்கள் தொடர்ந்து பாவம் செய்து வந்தார்கள்—சொல்லப்போனால், ஏமாற்றுதல், கொலை, கொள்ளை, விக்கிரக வழிபாடு, ஞானமற்ற விதமாக மற்ற தேசங்களோடு நட்புறவு வைத்தல் போன்ற பலவித பாவங்களைச் செய்து வந்தார்கள். அவர்களுக்குள் தீய ஆசைகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால், ஓசியா 7:4-ல், அப்பம் சுடுகிறவனுடைய ‘அடுப்பிற்கு’ அவர்கள் ஒப்பிடப்படுகிறார்கள். வருந்தத்தக்க இத்தகைய ஆன்மீக நிலையை கவனிக்கையில், இரக்கம் பெற அவர்கள் தகுதியானவர்களாக இருந்தார்களா? இல்லவே இல்லை! யெகோவா “அவர்களுடைய அக்கிரமத்தை . . . நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்” என ஓசியா கூறுகிறார். (ஓசியா 9:9) அவர்களுக்கு இரக்கம் கிடைக்காது!
9. மனந்திரும்புதலையும் இரக்கத்தையும் பற்றி ஓசியாவின் வார்த்தைகள் என்ன கற்பிக்கின்றன?
9 மனந்திரும்புதலையும் இரக்கத்தையும் பற்றி ஓசியாவின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவாவின் இரக்கத்திலிருந்து பயனடைய இருதயப்பூர்வமான மனந்திரும்புதலை காட்ட வேண்டும் என்று உண்மையற்ற இஸ்ரவேலரின் எச்சரிக்கும் உதாரணம் நமக்கு கற்பிக்கிறது. அத்தகைய மனந்திரும்புதல் எவ்வாறு காட்டப்படுகிறது? கண்ணீரோ வெறும் வார்த்தைகளோ யெகோவாவை ஏமாற்றிவிட முடியாது. உண்மையான மனந்திரும்புதலை செயல்களில் காட்ட வேண்டும். தவறிழைத்தவர் இரக்கம் பெறுவதற்காக தனது தவறான வழியை முற்றிலும் விட்டுவிட்டு யெகோவாவின் உயர்ந்த வணக்கத்தின் உன்னத தராதரங்களுக்கு இசைவாக தனது வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும்.
பலிகள் மட்டுமே யெகோவாவை பிரியப்படுத்திவிடாது
10, 11. இஸ்ரவேலருடைய விஷயத்தில் காட்டப்பட்டுள்ளபடி, பலிகள் மட்டுமே யெகோவாவை ஏன் பிரியப்படுத்திவிடாது?
10 யெகோவாவுடன் நடக்க உதவும் இரண்டாவது பாடத்தைப் பற்றி இப்போது நாம் சிந்திக்கலாம். வெறும் பலிகள் மட்டுமே கடவுளைப் பிரியப்படுத்திவிடாது என்பதே அந்தப் பாடம். ஓசியா 6:6 இவ்வாறு கூறுகிறது: “பலியை அல்ல இரக்கத்தையும் [“அன்புள்ள தயவையும்,” NW], தகன பலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.” யெகோவா அன்புள்ள தயவையும், அதாவது இருதயத்தின் குணமான பற்றுமாறா அன்பையும், அவரைப் பற்றி அறியும் அறிவையும் விரும்புகிறார் என்பதைக் கவனியுங்கள். ஆனால், “‘பலியையும்’ ‘தகன பலிகளையும்’ யெகோவா விரும்பவில்லை என அந்த வசனம் ஏன் சொல்கிறது? மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, அவை அவசியமாய் இருந்தன, அல்லவா?” என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம்.
11 நியாயப்பிரமாணத்தின்படி பலிகளும் காணிக்கைகளும் அவசியமாய் இருந்தன, ஆனால் ஓசியாவின் காலத்தில் வாழ்ந்தவர்களிடம் மிகப் பெரிய தவறு இருந்தது. இஸ்ரவேலர் சிலர், அப்படிப்பட்ட காணிக்கைகளை வெறும் கடமைக்காக வெளிப்புற பக்தியோடு செலுத்தி வந்திருக்கலாம். அதோடு, அவர்கள் தொடர்ந்து பாவமும் செய்து வந்தார்கள். அவர்களுடைய இருதயத்தில் பற்றுமாறா அன்பு இல்லை என்பதையே தங்களுடைய பாவத்தின் மூலம் சுட்டிக்காட்டினார்கள். தேவனை அறியும் அறிவை வெறுத்து ஒதுக்கியதையும் அவர்கள் காண்பித்தார்கள், ஏனென்றால் அந்த அறிவிற்கு இசைவாக அவர்கள் வாழவில்லை. அந்த ஜனங்களின் இருதயநிலை சரியாக இல்லாமலும் அவர்கள் சரியான வழியில் வாழாமலும் இருந்தால், அவர்கள் செலுத்திய பலிகளுக்கு என்ன மதிப்பு? அவர்களுடைய பலிகள் கடவுளின் பார்வையில் அருவருப்பாகவே இருந்தன.
12. இன்று வாழும் ஜனங்களுக்கு ஓசியா 6:6 தரும் எச்சரிப்பு என்ன?
12 இன்று சர்ச்சுக்குப் போகும் அநேகருக்கு ஓசியாவின் வார்த்தைகள் ஓர் எச்சரிப்பாக இருக்கின்றன. மத சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் என்ற உருவில் கடவுளுக்கு அவர்கள் காணிக்கைகள் செலுத்துகிறார்கள். ஆனால் அவர்களுடைய வழிபாட்டிற்கும் அன்றாட நடத்தைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவதற்கும், அந்த அறிவுக்கு இசைவாக வாழ்ந்து, கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பதற்கும் அவர்களுடைய இருதயம் தூண்டவில்லை என்றால் இத்தகைய ஜனங்கள் உண்மையில் கடவுளைப் பிரியப்படுத்துகிறார்களா? மத சடங்குகள் மட்டுமே கடவுளைப் பிரியப்படுத்திவிடும் என ஒருவரும் நினைக்காதிருப்பார்களாக. யெகோவாவின் வார்த்தைக்கு இசைவாக உண்மையுடன் வாழ்வதை விட்டுவிட்டு, வெறுமனே வெளிப் பார்வைக்கு வழிபட்டு அவருடைய தயவைப் பெற நினைப்போரை அவர் கொஞ்சமும் விரும்புவதில்லை.—2 தீமோத்தேயு 3:5.
13. எப்படிப்பட்ட பலிகளை நாம் செலுத்துகிறோம், ஆனால் அவற்றின் மதிப்பைக் குறித்து எதை மனதிற்கொள்ள வேண்டும்?
13 பலிகள் மட்டுமே கடவுளைப் பிரியப்படுத்திவிடாது என்பதை உண்மைக் கிறிஸ்தவர்களான நாமும் நினைவில் வைக்கிறோம். யெகோவாவுக்கு மிருக பலிகளை நாம் செலுத்துவதில்லை என்பது உண்மைதான். என்றாலும், “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை” செலுத்துகிறோம். (எபிரெயர் 13:15) அத்தகைய ஆவிக்குரிய பலிகளைக் கடவுளுக்குச் செலுத்தி, ஓசியாவின் நாட்களில் வாழ்ந்த பாவமுள்ள இஸ்ரவேலரைப் போல் செய்த தவறை சரிக்கட்டிவிடலாம் என்று நாம் நினைக்காதிருப்பது முக்கியம். இரகசியமாக பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட ஓர் இளம் பெண்ணின் உதாரணத்தைக் கவனியுங்கள். பிற்பாடு அவள் இவ்வாறு ஒத்துக்கொண்டாள்: “செய்த தவறை சரிக்கட்டிவிடலாம் என்று நினைத்து வெளி ஊழியத்தில் நான் அதிகமாக ஈடுபட்டேன்.” வழிதவறிய இஸ்ரவேலர் செய்ய நினைத்ததைப் போலவே அது இருந்தது. என்றாலும், சரியான உள்நோக்கமும் தெய்வீக நடத்தையும் இருந்தால் மட்டுமே நம்முடைய ஸ்தோத்திர பலியை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்.
தமது ஊழியர்கள் தம்மை விட்டுச்செல்லும்போது யெகோவா வேதனைப்படுகிறார்
14. கடவுளுடைய உணர்ச்சிகளைப் பற்றி ஓசியா தீர்க்கதரிசனம் எதை வெளிப்படுத்துகிறது?
14 யெகோவாவின் வணக்கத்தார் அவரைவிட்டு விலகிச்செல்கையில் அவர் எப்படி உணருகிறார் என்பதே ஓசியா 6 முதல் 9 அதிகாரங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மூன்றாவது பாடமாகும். யெகோவாவுக்கு பலமான உணர்ச்சிகளும் மென்மையான உணர்ச்சிகளும் உள்ளன. பாவங்களை விட்டு மனந்திரும்புகிறவர்களைக் குறித்து அவர் சந்தோஷப்படுகிறார், அவர்கள்மீது இரக்கம் காட்டுகிறார். ஆனால் தமது ஜனங்கள் மனந்திரும்பாதபோது, கடுமையான அதேசமயத்தில் உறுதியான நடவடிக்கை அவர் எடுக்கிறார். நம்முடைய நலனில் கடவுளுக்கு ஆழ்ந்த அக்கறை இருப்பதால், நாம் அவருடன் உண்மையாக நடக்கும்போது அவர் அகமகிழ்கிறார். “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்” என சங்கீதம் 149:4 கூறுகிறது. ஆனால் தமது ஊழியர்கள் உண்மையற்றவர்களாக ஆகும்போது கடவுள் எப்படி உணருகிறார்?
15. ஓசியா 6:7-ன்படி, இஸ்ரவேலர் சிலர் எப்படி நடந்துகொண்டார்கள்?
15 உண்மையற்ற இஸ்ரவேலரைப் பற்றி யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “அவர்களோ ஆதாமைப் போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்.” (ஓசியா 6:7) ‘துரோகம் பண்ணு’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, “ஏமாற்று, உண்மையற்ற விதமாக (நடந்துகொள்)” என்றும் அர்த்தப்படுகிறது. தங்கள் திருமண துணைக்கு துரோகம் செய்த இஸ்ரவேலரின் மோசமான நடத்தையை விவரிக்க மல்கியா 2:10-16-லும் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓசியா 6:7-ல் இந்த வார்த்தை உபயோகிக்கப்பட்டிருப்பது, திருமண உறவில் இருப்பதைப் போல, இஸ்ரவேலர் யெகோவாவோடு நெருங்கிய, தனிப்பட்ட உறவை அனுபவித்ததையும், ஆனால் அவர்கள்மீது அவர் வைத்திருந்த அன்பை அவர்கள் மீறிவிட்டதையும் அந்த வார்த்தை சுட்டிக்காட்டுவதாக ஒரு புத்தகம் கூறுகிறது.
16, 17. (அ) இஸ்ரவேலுடன் கடவுள் செய்திருந்த உடன்படிக்கைக்கு அத்தேசம் எப்படி நடந்துகொண்டது? (ஆ) நம்முடைய செயல்களைக் குறித்து நாம் எதை மனதிற்கொள்ள வேண்டும்?
16 இஸ்ரவேல் தேசத்தோடு உடன்படிக்கை செய்திருப்பதால் அதை தமது மனைவியாக அடையாள அர்த்தத்தில் யெகோவா குறிப்பிட்டார். ஆகவே, அவருடைய ஜனங்கள் அந்த உடன்படிக்கையை மீறியபோது அவர்கள் விபசாரம் செய்தது போலவே இருந்தது. உண்மையுள்ள ஒரு கணவனைப் போல் கடவுள் இருந்தார், ஆனால் அவருடைய ஜனங்களோ அவரை கைவிட்டார்களே!
17 நம்மைப் பற்றியென்ன? நாம் அவரோடு நடக்கிறோமா இல்லையா என்பதில் கடவுள் அக்கறை கொள்கிறார். “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதையும் நம்முடைய செயல்கள் அவருடைய உணர்ச்சிகளைப் பாதிக்கின்றன என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும். (1 யோவான் 4:16) நாம் தவறான பாதையில் சென்றால், யெகோவாவுக்கு வேதனையை உண்டாக்குகிறோம், அது உண்மையிலேயே அவருக்கு கோபமூட்டும். இதை நாம் நினைவில் வைத்திருப்பது, சோதனைக்கு அடிபணியாதிருக்க பலமான ஒரு தடையாக இருக்கும்.
நன்மையை அறுவடை செய்வது எப்படி
18, 19. ஓசியா 8:7-ல் என்ன நியமத்தை நாம் காண்கிறோம், அந்த நியமம் இஸ்ரவேலருடைய விஷயத்தில் எப்படி நிஜமானது?
18 ஓசியாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து கற்றுக்கொள்ளும் நான்காவது பாடத்தை சிந்திக்கலாம், நன்மையை எப்படி அறுவடை செய்யலாம் என்பதுதான் அந்தப் பாடம். இஸ்ரவேலரையும் அவர்களுடைய முட்டாள்தனத்தையும் அவர்களுடைய உண்மையற்ற நடத்தை வீணானது என்பதையும் பற்றி ஓசியா இவ்வாறு எழுதுகிறார்: “அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்.” (ஓசியா 8:7) நாம் நினைவில் வைக்க வேண்டிய ஒரு நியமத்தை இங்கு காண்கிறோம்: நாம் இப்போது என்ன செய்கிறோம் என்பதற்கும் பிற்காலத்தில் நமக்கு என்ன சம்பவிக்கும் என்பதற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. உண்மையற்ற இஸ்ரவேலர் விஷயத்தில் இந்த நியமம் எப்படி நிஜமானது?
19 தொடர்ந்து பாவம் செய்ததன் மூலம் அந்த இஸ்ரவேலர் தீமையை விதைத்து வந்தார்கள். தீய விளைவுகள் ஏதுமின்றி அவர்களால் தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியுமா? தண்டனைத் தீர்ப்பிலிருந்து அவர்கள் நிச்சயம் தப்பிக்கவே முடியாது. ஓசியா 8:13 இவ்வாறு கூறுகிறது: ‘அவர்களுடைய அக்கிரமத்தை அவர் [யெகோவா] நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிப்பார்.’ ஓசியா 9:17-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.” இஸ்ரவேலர் செய்த பாவங்களுக்காக யெகோவா அவர்களை விசாரிப்பார். அவர்கள் பொல்லாப்பை விதைத்ததால் பொல்லாப்பையே அறுவடை செய்வார்கள். பொ.ச.மு. 740-ல் பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலை அசீரியர்கள் கைப்பற்றி அதன் குடிமக்களை கைதிகளாக கொண்டு சென்றபோது, அவர்களுக்கு எதிரான கடவுளின் தண்டனைத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.
20. இஸ்ரவேலருடைய அனுபவம் நமக்கு எதைக் கற்பிக்கிறது?
20 இஸ்ரவேலருடைய அனுபவம் நமக்கு ஓர் அடிப்படை உண்மையை கற்பிக்கிறது: நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். கடவுளுடைய வார்த்தை நம்மை இவ்வாறு எச்சரிக்கிறது: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) நாம் தீமையை விதைத்தால் தீமையையே அறுவடை செய்வோம். உதாரணமாக, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்வோர் மோசமான விளைவுகளையே அறுவடை செய்வார்கள். மனந்திரும்பாத பாவிக்கு சோகமான விளைவே ஏற்படும்.
21. நன்மையை நாம் எப்படி அறுவடை செய்யலாம்?
21 அப்படியென்றால், நாம் எவ்வாறு நன்மையை அறுவடை செய்யலாம்? ஓர் எளிய உதாரணத்தின் உதவியோடு இந்தக் கேள்விக்கு பதிலளிக்கலாம். ஒரு விவசாயி நெல்லை அறுவடை செய்ய விரும்பினால், அவர் கோதுமையை விதைப்பாரா? நிச்சயம் மாட்டார்! எதை அறுவடை செய்ய விரும்புகிறாரோ அதையே அவர் விதைக்க வேண்டும். அதைப் போலவே, நாம் நன்மையை அறுவடை செய்ய விரும்பினால் நன்மையையே விதைக்க வேண்டும். நன்மையையே தொடர்ந்து அறுவடை செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? இப்போது சந்தோஷமான, திருப்தியான வாழ்க்கையையும் கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவ எதிர்பார்ப்பையும் பெற விரும்புகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் கடவுளுடன் நடந்து, அவருடைய நீதியுள்ள தராதரங்களுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் தொடர்ந்து நன்மையையே விதைக்க வேண்டும்.
22. ஓசியா 6 முதல் 9 வரையான அதிகாரங்களில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?
22 கடவுளுடன் நடக்க உதவும் நான்கு பாடங்களை ஓசியா 6 முதல் 9 அதிகாரங்களிலிருந்து நாம் கற்றிருக்கிறோம்: (1) உண்மையான மனந்திரும்புதல் செயல்களில் காட்டப்படுகிறது; (2) பலிகள் மட்டுமே கடவுளைப் பிரியப்படுத்திவிடாது; (3) யெகோவாவின் வணக்கத்தார் அவரைவிட்டு பிரிந்துசெல்கையில் அவர் வருத்தப்படுகிறார்; (4) நன்மையை அறுவடை செய்வதற்கு, நன்மையை நாம் விதைக்க வேண்டும். இந்த பைபிள் புத்தகத்தின் கடைசி ஐந்து அதிகாரங்களில் உள்ள தகவல் கடவுளுடன் நடப்பதற்கு நமக்கு எப்படி உதவும்?
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• உண்மையான மனந்திரும்புதல் எப்படி காட்டப்படுகிறது?
• ஏன் பலிகள் மட்டுமே நம் பரம பிதாவை பிரியப்படுத்திவிடாது?
• தமது வணக்கத்தார் தம்மை விட்டுச்செல்கையில் கடவுள் எப்படி உணருகிறார்?
• நன்மையை அறுவடை செய்ய நாம் எதை விதைக்க வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
காலைநேர மேகங்களைப் போல, இஸ்ரவேலின் பற்றுமாறா அன்பு மறைந்துபோனது
[பக்கம் 23-ன் படம்]
இஸ்ரவேலின் தீய ஆசைகள் ஓர் அடுப்பைப் போல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன
[பக்கம் 24-ன் படம்]
தமது ஜனங்களுடைய பலிகளை யெகோவா ஏன் ஒதுக்கித் தள்ளிவிட்டார்?
[பக்கம் 25-ன் படம்]
நன்மையை அறுவடை செய்ய, நன்மையை நாம் விதைக்க வேண்டும்