வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: ஓசியா 1:1-14:9
நம் தேவனாகிய யெகோவா இரக்கமுள்ளவர்
யெகோவா “வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவன்.” (நெகேமியா 9:17) அவர் தன்னுடைய நீதியுள்ள தராதரங்களை உறுதியாக காத்துக்கொள்கிறார், ஆனால் தன்னுடன் நல்லுறவை அனுபவித்துக்களிக்க தவறு செய்தவர்களை மனந்திரும்புவதற்கு அழைக்கிறார். வழுவிப்போகிற இஸ்ரவேலர்களுக்கு ஓசியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்னதிலிருந்து, ஆ, இது எவ்வளவு அழகாக விளக்கப்பட்டிருந்தது!
ஓசியா என்னும் பெயர்கொண்ட புத்தகமானது சமாரிய மாவட்டத்தில் சுமார் 59 வருட அவனுடைய நீண்ட கால சேவைக்குப் பிற்பாடு இந்தத் தீர்க்கதரிசியால் எழுதி முடிக்கப்பட்டது. (சுமார் பொ.ச.மு. 804-லிருந்து பொ.ச.மு 745-ற்கு பின் வரை) யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், ராஜாவாகிய இரண்டாம் எரோபெயாம் என்பவனின் நாட்களிலும், ஓசியா பத்து-கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தான். (ஓசியா 1:1) இஸ்ரவேலர்கள் மனந்திரும்புதலுக்கான அழைப்பை அசட்டை செய்ததினிமித்தம், இந்தத் தேசமானது அசீரியர்களிடம் விழுந்தது, அதன் தலைநகராகிய சமாரியாவானது பொ.ச.மு. 740-ல் அழிக்கப்பட்டது. ஓசியா தீர்க்கதரிசனமானது கடந்த கால நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஜனத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்டாலும், நம் தேவனாகிய யெகோவாவின் இரக்கம் சம்பந்தப்பட்டதில் நமக்குப் பாடங்களைக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரவேலுடைய வழுவிப்போகிற போக்கு
பாவியினுடைய உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலை அடிப்படையாகக் கொண்டே யெகோவா இரக்கங்காட்டுகிறார். (சங்கீதம் 51:17; நீதிமொழிகள் 28:13) ஓசியா தன்னுடைய மனைவியாகிய கோமேருடன் தொடர்பு கொண்டதிலிருந்து, இஸ்ரவேலிடம் தேவன் இரக்கங்காண்பிக்க ஒப்புக்கொண்டதானது தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டது. கட்டளையிட்டபடியே, அவன் “சோர ஸ்திரீயை” தனக்குக் கொண்டான். ஓசியாவுக்கென்று ஒரு குழந்தையை ஈன்றெடுத்த பிற்பாடு, கோமேர் வெளிப்படையாகவே விபசாரத்தில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். என்றாலுங்கூட, இந்தத் தீர்க்கதரிசியானவன் இரக்கங்காட்டுபவனாய் அவளைத் திரும்பவும் மனைவியாக கொண்டான். அதைப்போலவே, இஸ்ரவேலும் பொய் கடவுளாகிய பாகாலுக்குத் தவறாக வழிபாடுகளைச் செய்து கொண்டு அவிசுவாசமுள்ள மனைவியைப் போல் இருந்தது. ஆனால் அவர்கள் தங்கள் ஆவிக்குரிய விபசாரத்திலிருந்து மனந்திரும்புவார்களேயானால் யெகோவா இரக்கங் காட்ட மனமுள்ளவராயிருந்தார்.—1:1-3:5.
தெய்வீக இரக்கத்தை விரும்புகிற பாவிகள், பாவமான தங்கள் போக்கிலிருந்து திரும்பி தேவனுடைய அறிவிற்கிசைய நடக்க வேண்டும். (சங்கீதம் 119:59, 66, 67) இஸ்ரவேலின் குடிகளோடே யெகோவாவுக்கு வழக்கு இருந்தது; அதேனெனில் தேசத்திலே உண்மையும், இரக்கமும், தேவனைப் பற்றிய அறிவும் குறைவுபட்டிருந்தன. அவர்கள் அறிவை வெறுத்ததினால் யெகோவா அவர்களை வெறுத்தார். வழிபாடுகள் நிறைந்த இஸ்ரவேலும் யூதாவும் தண்டனைக்குள்ளாக வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் “ஆபத்தில்” தேவனைக் கருத்தாய் தேடுவார்களென்று முன்சொல்லப்பட்டது.—4:1-5:15.
கடும்புயற்காற்றை அறுத்தல்!
தவறுசெய்தவர்கள் தேவனுடைய இரக்கத்தை அனுபவிக்க வேண்டுமானால் மனந்திரும்புதலுக்கேதுவான கிரியைகள் அவசியமாயிருக்கின்றன. (அப்போஸ்தலர் 26:20) “நாம் யெகோவாவிடத்தில் திரும்புவோம்” என ஓசியா மன்றாடினான். ஆனால் இஸ்ரவேலின் (பிரதான கோத்திரமாகிய எப்பிராயீம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது) மற்றும் யூதாவின் அன்புள்ள-இரக்கம், “விடியற் காலையில் தோன்றும் பனியைப் போல ஒழிந்து போ”னது. ஜனங்கள் தேவனுடைய உடன்படிக்கையை மீறி, மனந்திரும்புதலுக்கேதுவான கனிகள் ஏதும் பிறப்பிக்கிறவர்களாக இல்லை. “புத்தியில்லாத பேதையான புறாவைப்போல்” எகிப்தியனிடத்திலும் அசீரியனிடத்திலும் உதவி நாடினார்கள். இவ்விதமான அரசியல் நடவடிக்கைகளெல்லாம், குறி வைத்து அம்புகளை எய்ய முடியாத “மோசம்போக்குகிற வில்”லைப்பார்க்கிலும் அதிக நன்மை எதுவும் அவர்களுக்கு செய்யமுடியாது.—6:1-7:16.
நன்மையானதை அறுக்க, யெகோவாவின் இரக்கத்தை நாடித்தேடுகிறவர்கள் நன்மையானதை விதைக்க வேண்டும். (கலாத்தியர் 6:7, 8) இஸ்ரவேலர்கள் நன்மையானதை வெறுத்ததன் காரணமாக, கெட்டவைகள் எவைகளோ அவைகளையே அவர்கள் அறுத்தார்கள். ‘அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்.’ தேவன் “அவர்களுடைய பாவங்களை விசாரிக்”கையில், அவர்கள் அவருடைய இரக்கத்தை அறுக்காமல், கேடான நியாயத்தீர்ப்பையே அறுப்பார்கள். “அவர்கள் அந்நிய ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரி”கிறவர்களாவார்கள். அசீரியர்களுடைய வெற்றியானது இந்த சூழ்நிலைமைக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கும்.—8:1–9:17; உபாகமம் 28:64, 65; 2 இராஜாக்கள் 15:29; 17:1-6, 22, 23; 18:9-12; 1 நாளாகமம் 5:26.
நாம் பரிசுத்த காரியங்களைத் தொடர்ந்து மதித்துணரும்போதுதானே தேவனுடைய இரக்கத்திலிருந்து தொடர்ந்து நன்மையடைந்து கொண்டிருப்போம். (எபிரெயர் 12:14-16) இந்த இஸ்ரவேலர்கள் இவ்விதமான மதித்துணருதலில் குறைவுபட்டார்கள். அவர்கள் நீதியின் விதைகளை விதைத்து, கிருபைக்கிசைய அறுப்பதற்கு மாறாக, அவர்கள் பொல்லாப்பை விதைத்து அநீதியை அறுத்தார்கள். யெகோவா எகிப்திலிருந்து இஸ்ரவேலை குமாரனைப் போல வரவழைத்தார், ஆனால் அவருடைய அன்பானது வஞ்சகத்தில் திருப்பிச் செலுத்தப்பட்டது. “நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டிரு” என யெகோவா அறிவுரை கூறினார். ஆனால், எப்பிராயீமானது மிகுதியான பொல்லாங்கில் ஈடுபட்டு இரக்கத்திற்குப் பதிலாக கடிந்து கொள்ளுதலுக்கு தகுதியுடையதாயிற்று.—10:1-12:14.
யெகோவாவிடத்திற்குத் திரும்புங்கள்
வினைமையான தவறு செய்தவர்களுங்கூட யெகோவாவிடத்திற்குத் திரும்பினால் இரக்கங்காட்டப்படுவார்கள். (சங்கீதம் 145:8, 9) இஸ்ரவேலர்களிடம் தேவனுக்கு இருந்த கனிவான அக்கறையை ஓசியா மறுபடியும் எடுத்துக்காட்டினான். அந்தத் தேசமானது யெகோவாவுக்கு விரோதமாக திரும்பினபோதிலுங்கூட, அவர், முன்னிலைமைக்கு மீண்டும் வர பின்வருமாறு சொல்லி வாக்களித்தார்: “அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” சமாரியாவானது (இஸ்ரவேலானது) கலகத்தன்மையினிமித்தம் துன்பத்தை அனுபவித்தாக வேண்டியிருந்தது. ஆனால் இஸ்ரவேலர்கள், “உதடுகளின் காளைகள்,” என்ற ஆரோக்கியமான வார்த்தைகளினால் தேவனிடத்திற்கு மீண்டும் வர உந்துவிக்கப்பட்டார்கள். யெகோவாவுடைய செம்மையான வழிகளில் நடக்கிற நீதிமான்களும் ஞானவான்களும் அவருடைய இரக்கத்தையும் அன்பையும் அனுபவித்து களிப்பார்கள் என்று மனதுக்கு ஆறுதலூட்டும் கருத்துடன் இந்தத் தீர்க்கதரிசனம் முடிந்தது.—13:1-14:9.
நினைவில் வைக்கவேண்டிய பாடங்கள்: தவறு செய்தவனுடைய உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலை அடிப்படையாகக் கொண்டே யெகோவா இரக்கங்காட்டுகிறார். ஆனால் அவருடைய இரக்கத்தை விரும்புகிற பாவிகள் தேவனுடைய அறிவிற்கிசைய நடந்து மனந்திரும்புதலுக்கேதுவான கிரியைகளைப் பிறப்பிக்க வேண்டும். அவர்கள் நன்மையை விதைத்து பரிசுத்த காரியங்களைத் தொடர்ந்து மதித்துணர வேண்டும். வினைமையான தவறுகளைச் செய்பவர்களுங்கூட நம்பிக்கையோடு உன்னதமானவரிடத்திற்கு திரும்பக்கூடும் என்றறிவதிலிருந்து ஆறுதலை பெறக்கூடும், ஏனென்றால் நம் தேவனாகிய யெகோவா இரக்கமுள்ளவர். (w89 3⁄1)
[பக்கம் 31-ன் பெட்டி]
வேத வசனங்களை ஆராய்தல்
○2:21-23—யெஸ்ரயேல் என்பது “தேவன் விதையை விதைப்பார்” என பொருள் கொள்கிறது. யெகோவா, தானியமும், திராட்சரசமும், எண்ணெயும் இருக்கிற யூதாவிலே உண்மையுள்ள மீந்தவர்களைக் கூட்டிச் சேர்த்து, விதையைப் போல் அவர்களை அங்கு விதைப்பார். தேவையிலுள்ள மீந்தவர்கள் சார்பாக, இவ்விதமான நற்பொருள்கள், தானிய தண்டுகளுக்கும், திராட்சகொடிகளுக்கும், ஒலிவ மரங்களுக்கும் தாதுப் பொருள்களை வெளியிட பூமியைக் கேட்கும். பூமியானது மழைக்காக வானங்களிடம் முறையிடும், அவைகள் தேவையான மழைப்பொழிவைக் கொடுக்க மேகங்களை உருவாக்க தேவனை கேட்கும்.
○5:1—விசுவாசத்துரோக ஆசாரியர்களும் இஸ்ரவேலின் ராஜாக்களும், பொய் வணக்கத்தில் ஈடுபடுவதற்கு ஜனங்களை கவர்ந்திழுத்ததினால், அவர்களுக்கு கண்ணியும், வலையுமாகவும் ஆனார்கள். அநேகமாக, தேபோர் மலையும் (யோர்தானுக்கு மேற்கே உள்ளது) மிஸ்பாவும் (அந்த நதிக்கு கிழக்கிலுள்ள நகரம்) பொய் வணக்கத்துக்குரிய மையங்களாக திகழ்ந்தன. கடவுளுடைய பிரதிகூலமான நியாயத்தீர்ப்பை அனுபவிக்க இருந்த, அவர்களை வழிநடத்துபவர்களுடைய, கெட்ட முன்மாதிரியின் காரணமாக, இஸ்ரவேல் முழுவதும், ஜனங்கள் விக்கிரகாராதனை செய்து வந்தார்கள்.
○7:4-8—தங்களுக்குள் எரிகிற பொல்லாப்பான ஆசைகளின் காரணமாக, தெளிவாகவே, விபசாரக்காரராகிய இஸ்ரவேலர்கள் அப்பஞ்சுடுகிறவனுடைய அடுப்புக்கு அல்லது உளைக்களத்திற்கு ஒப்பிடப்பட்டார்கள். எப்பிராயீமுங்கூட, (இஸ்ரவேலுங்கூட) அவர்களுடைய வழிகளை பின்பற்றி அவர்களுடன் விவாக உறவுகளை நாடுவதன் மூலம் அந்நிய தேசங்களோடு கலந்ததற்காக ஒரு பக்கம் மட்டும் சுடப்பட்ட அப்பம் போல் இருந்தது.
○9:10—மோவாப் சமவெளிகளில் இருந்த பாகால்பேயோரோடு பிணைத்துக் கொண்டவர்களாக இஸ்ரவேலர்கள் ஆனபோது அவர்கள், “இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்”தார்கள். (எண்ணாகமம் 25:1-5) “அது செய்ய தங்களையே பின்வாங்கிக் கொள்வது; அதற்காக தங்களையே பிரித்து வைத்துக்கொள்வது” என்று பொருள்படும் எபிரெய வினைச்சொல்லை இங்கே ஓசியா பயன்படுத்தினான். இஸ்ரவேலர்கள் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்தார்கள், ஆனால், பாகால்பேயோருக்கென்று தங்களையே பிரித்துக் கொண்டார்கள். பத்து கோத்திர ராஜ்யத்திற்குரிய பிரதான பாவமாக பாகால் வணக்கமானது இருந்ததன் காரணமாக இந்தச் செய்தி ஒருவேளை குறிப்பிடப்பட்டிருக்கலாம். (ஓசியா 2:8, 13) இந்த எச்சரிக்கைக்கு நாம் செவிகொடுத்தவர்களாக யெகோவாவுக்கான நம்முடைய ஒப்புக்கொடுத்தலிலிருந்து விலகாதிருப்போமாக.—1 கொரிந்தியர் 10:8, 11.
○10:5—“தேவனுடைய வீடு” என்று பொருள்படும் பெத்தேலுக்கு, மதிப்புக்குறைவான அர்த்தத்தில் பெத்தாவேன் (“தீங்கிழைக்கும் வீடு” என பொருள்படும்) பயன்படுத்தப்பட்டது. பெத்தேலானது தேவனுடைய வீடாக இருந்து வந்தது, ஆனால், அங்கு செயல்படுத்தி வரும் கன்றுக் குட்டி வணக்கத்தின் காரணமாக தீங்கிழைக்கும் வீடாக ஆனது. (1 இராஜாக்கள் 12:28-30) அந்தக் கன்றுக்குட்டி விக்கிரகமானது நாடுகடத்திக் கொண்டு செல்லப்பட்டபோது, ஜனங்கள் அதற்காக பயந்து கிடந்தார்கள். அந்த உயிரற்ற விக்கிரகமானது தன்னை வணங்குபவர்களைப் போல அது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.—சங்கீதம் 115:4-8.
○13:14—யெகோவா, இந்த கீழ்ப்படியாமற் போன இஸ்ரவேலர்களை, அந்தச் சமயத்தில் பாதாளத்தின் வல்லமையிலிருந்து விடுவிப்பதன் மூலமோ அல்லது மரணத்திற்கு நீங்கலாக்கி தப்பவைப்பதன் மூலமோ அவர்களை தண்டியாமல் விட மாட்டார். அவர்கள் இரக்கத்திற்கு தகுதியற்றவர்களானதால் அவர் அவர்களுக்கு மனமாறுதல் ஏதும் காண்பிக்கமாட்டார். ஆனால், தேவன் முடிவிலே என்றென்றும் மரணத்தை விழுங்கி அதன் ஜெயத்தை ஒன்றுமில்லாதபடி செய்வார் என பவுல் அப்போஸ்தலன் காண்பித்தான். இயேசு கிறிஸ்துவை மரணத்திலிருந்தும் பாதாளத்திலிருந்தும் உயிர்த்தெழுப்புவதன் மூலம் யெகோவா அவ்வாறு செய்வதற்கான தன்னுடைய வல்லமையை மெய்ப்பித்துக் காட்டினார், இவ்வாறு தேவனுடைய நினைவில் உள்ள ஆட்கள் ராஜ்ய ஆளுகையில் தன்னுடைய குமாரனின் மூலம் உயிர்த்தெழுப்பப்படுவர் என்ற உறுதிமொழியை அவர் கொடுத்தார்.—யோவான் 5:28, 29.