அதிகாரம் 8
கொலைகார ராஜாவிடமிருந்து தப்பிக்கிறார்கள்
இயேசுவின் குடும்பத்தார் எகிப்துக்கு ஓடிப்போகிறார்கள்
யோசேப்பு தன் குடும்பத்தோடு நாசரேத்துக்குப் போகிறார்
யோசேப்பு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்வதற்காக மரியாளை அவசர அவசரமாக எழுப்புகிறார். ஏனென்றால், யெகோவாவின் தூதர் அப்போதுதான் யோசேப்பின் கனவில் வந்து, “எழுந்திரு, பிள்ளையையும் அதன் அம்மாவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போ; நான் சொல்லும்வரை அங்கேயே இரு. ஏனென்றால், பிள்ளையைக் கொல்வதற்காக ஏரோது அதைத் தேடப்போகிறான்” என்று சொல்லியிருந்தார்.—மத்தேயு 2:13.
ராத்திரியோடு ராத்திரியாக, யோசேப்பும் மரியாளும் தங்கள் மகனைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். சரியான நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள். ஏனென்றால், ஜோதிடர்கள் தன்னை ஏமாற்றிய விஷயம் ஏரோதுவின் காதுக்குப் போய்விடுகிறது. இயேசு இருக்கிற இடத்தைத் தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஜோதிடர்களிடம் ஏரோது சொல்லியிருந்தான். ஆனால் அவர்கள் திரும்பிவராமல், நேராக தங்கள் நாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் ஏரோதுவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. இயேசுவை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதனால், பெத்லகேமிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இருக்கிற இரண்டு வயதும் அதற்குக் குறைவான வயதுமுள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லும்படி கட்டளை போடுகிறான். ஜோதிடர்கள் சொன்ன தகவலை வைத்து பிள்ளையின் வயதை அவன் கணக்குப் போட்டிருந்தான்.
கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் அந்தப் பச்சிளம் குழந்தைகளை ஏரோது கொன்றுபோடுகிறான்! எத்தனை ஆண் குழந்தைகளை அவன் கொன்றானோ தெரியவில்லை. ஆனால், பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களின் அழுகையும் ஒப்பாரியும்தான் ஊரெங்கும் கேட்கிறது. கடவுளுடைய தீர்க்கதரிசியான எரேமியா சொன்ன தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறுகிறது.—எரேமியா 31:15.
இதற்குள், யோசேப்பு தன் குடும்பத்தோடு எகிப்துக்குப் போய்விடுகிறார். அங்கேயே அவர்கள் வாழ்கிறார்கள். ஒருநாள் ராத்திரி யெகோவாவின் தூதர் மறுபடியும் யோசேப்பின் கனவில் வந்து, “நீ எழுந்து பிள்ளையையும் அதன் அம்மாவையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; இந்தப் பிள்ளையைக் கொல்லப் பார்த்தவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று சொல்கிறார். (மத்தேயு 2:20) அதனால், குடும்பத்தோடு சொந்த ஊருக்குத் திரும்பிப் போக யோசேப்பு முடிவெடுக்கிறார். கடவுளுடைய மகன் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வரப்படுவார் என்ற தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறுகிறது.—ஓசியா 11:1.
யோசேப்பு தன் குடும்பத்தோடு யூதேயாவுக்குப் போய் பெத்லகேமுக்குப் பக்கத்தில் குடியேற நினைத்திருக்கலாம். ஏனென்றால், எகிப்துக்கு ஓடிப்போவதற்கு முன் அவர்கள் அங்குதான் வாழ்ந்திருந்தார்கள். ஆனால், ஏரோதுவின் மகனான பொல்லாத அர்கெலாயு யூதேயாவை ஆட்சி செய்கிறான் என்று அவர் கேள்விப்படுகிறார். அதோடு, இந்த ஆபத்தைப் பற்றிக் கடவுளும் யோசேப்பின் கனவில் எச்சரிக்கிறார். அதனால், அவர் தன் குடும்பத்தோடு வடக்கே பயணம் செய்து, கலிலேயா பகுதியைச் சேர்ந்த நாசரேத் என்ற நகரத்தில் குடியேறுகிறார். யூதர்களின் வழிபாட்டு மையமாக இருக்கிற எருசலேமிலிருந்து இது கொஞ்சம் தூரமாக இருக்கிறது. இயேசு நாசரேத்தில் வளர்கிறார். இதன் மூலம், “அவர் நாசரேத்தூரார் என அழைக்கப்படுவார்” என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது.—மத்தேயு 2:23.