நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கில் தீர்ப்பு நிறைவேற்றப்படுதல்
“ஜாதிகள் . . . யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.”—யோவேல் 3:12.
1. “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே” ஜனங்கள் கூடியிருப்பதை ஏன் யோவேல் காண்கிறார்?
“நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்”! உணர்ச்சியைத் தூண்டும் இந்த வார்த்தைகளை நாம் யோவேல் 3:14-ல் வாசிக்கிறோம். ஏன் இந்த ஜனங்கள் ஒன்றுகூடி வந்திருக்கிறார்கள்? யோவேல் பதிலளிக்கிறார்: “யெகோவாவின் நாள் சமீபமாய் இருக்கிறது.” அது யெகோவா நியாயநிரூபணம் செய்யும் மகா நாள்—கிறிஸ்து இயேசுவால் ஆளப்படும் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் புறக்கணித்திருக்கும் திரளான ஜனங்கள்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் நாள். கடைசியில், வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்திலுள்ள “நான்கு தூதர்கள்” கெட்டியாகப் பிடித்திருந்த “பூமியின் நான்கு காற்றுகளையும்” விட்டுவிடப் போகிறார்கள்; அதன் விளைவாக, “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.”—வெளிப்படுத்துதல் 7:1; மத்தேயு 24:21.
2. (அ) யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான இடம் “யோசபாத்தின் பள்ளத்தாக்கு” என அழைக்கப்படுவது ஏன் பொருத்தமாக இருக்கிறது? (ஆ) தாக்குதலில் இருந்தபோது யோசபாத் எவ்வாறு சரியாக செயல்பட்டார்?
2 யோவேல் 3:12-ல், இந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்படும் இடம் “யோசபாத்தின் பள்ளத்தாக்கு” என்றழைக்கப்படுகிறது. பொருத்தமாகவே, யூதா சரித்திரத்தின் கொந்தளிப்பான காலத்தின்போது, நல்ல ராஜாவாகிய யோசபாத்தின் சார்பாக யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். அவருடைய பெயர், “யெகோவாவே நியாயாதிபதி” என பொருள்படுகிறது. அந்தச் சமயத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்வது, நம்முடைய காலத்தில் நடக்கவிருக்கும் காரியத்தை நன்கு மதித்துணர நமக்கு உதவும். இந்தப் பதிவு 2 நாளாகமம் 20-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. அந்த அதிகாரத்தின் 1-ம் வசனத்தில், “மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்” என்று நாம் வாசிக்கிறோம். யோசபாத் எவ்வாறு செயல்பட்டார்? நெருக்கடியான ஒருசமயத்தில் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் எப்பொழுதும் செய்வதையே அவர் செய்தார். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் சென்று, “எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” என ஊக்கமாக ஜெபித்தார்.—2 நாளாகமம் 20:12.
ஜெபத்திற்கு யெகோவா பதிலளிக்கிறார்
3. பக்கத்து தேசங்களின் கடுந்தாக்குதலை யூதா எதிர்ப்பட்டபோது, யெகோவா அவர்களுக்கு என்ன அறிவுரைகளை வழங்கினார்?
3 ‘யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] முன்பாக நின்றுகொண்டிருக்கையில்,’ யெகோவா தம்முடைய பதிலை கொடுத்தார். (2 நாளாகமம் 20:13) ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ அவர் இன்று பயன்படுத்துவதைப் போலவே, ஜெபத்தைக் கேட்பதில் தலைசிறந்தவராகிய யெகோவா, கூடியிருந்த அந்த ஜனங்களுக்கு தம்முடைய பதிலை அளிப்பதற்கு லேவிய தீர்க்கதரிசியாகிய யகாசியேலுக்கு வல்லமையளித்தார். (மத்தேயு 24:45, NW) நாம் வாசிக்கிறோம்: “நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. . . . இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; . . . நீங்கள் தரித்துநின்று கர்த்தர் [“யெகோவா,” NW] உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் [“யெகோவா,” NW] உங்களோடே இருக்கிறார்.”—2 நாளாகமம் 20:15-17.
4. தம்முடைய ஜனங்கள் எதிரியின் சவாலை எதிர்ப்பட்டபோது, செயலற்றவர்களாய் இல்லாமல் என்ன விதத்தில் சுறுசுறுப்பாய் இருக்கும்படி யெகோவா எதிர்பார்த்தார்?
4 ஒன்றும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்துகொண்டு, அற்புதகரமான மீட்புக்காக காத்திருப்பதைக் காட்டிலும் யோசபாத் ராஜாவிடமும் தம்முடைய ஜனங்களிடமும் யெகோவா அதிகத்தை எதிர்பார்த்தார். விரோதியின் சவாலை சமாளிப்பதில் அவர்கள் முதலாவதாக முன்முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. ராஜாவும் ‘யூதாவிலுள்ள அனைவரும், அவர்கள் குழந்தைகளும் அவர்கள் பெண்ஜாதிகளும் அவர்கள் குமாரருங்கூட’ கீழ்ப்படிதலோடு அதிகாலையிலேயே எழுந்து, படையெடுத்துவரும் கூட்டத்தாரை எதிர்ப்படுவதற்காக அணிவரிசையாக செல்வதன் மூலம் பலமான விசுவாசத்தைக் காண்பித்தார்கள். போகிற வழியில், ராஜா தொடர்ந்து அவர்களுக்கு தேவராஜ்ய அறிவுரைகளையும் உற்சாகத்தையும் கொடுத்தார்; “உங்கள் தேவனாகிய கர்த்தரை [“யெகோவாவை,” NW] நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள்” என்று சொல்லி அவர்களை உந்துவித்தார். (2 நாளாகமம் 20:20) யெகோவாவில் விசுவாசம்! அவருடைய தீர்க்கதரிசிகளில் விசுவாசம்! அதில்தான் வெற்றிக்கான திறவுகோலே உள்ளது. அதைப் போலவே இன்றைக்கும் நாம் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக தொடர்ந்து முன்னேறுகையில், அவர் நம்முடைய விசுவாசத்தை வெற்றிசிறக்கப் பண்ணுவாரா என்று ஒருபோதும் சந்தேகப்படாமல் இருப்போமாக!
5. யெகோவாவை துதிக்கையில் இன்று எவ்வாறு யெகோவாவின் ஜனங்கள் சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள்?
5 யோசபாத் நாளிலிருந்த யூதேயர்களைப் போலவே, நாம் ‘யெகோவாவுக்கு துதி செலுத்த வேண்டும், அவருடைய அன்பான தயை என்றென்றும் உள்ளது.’ நாம் எவ்வாறு இந்தத் துதியை செலுத்துகிறோம்? நம்முடைய வைராக்கியமான பிரசங்க வேலையின் மூலமே! அந்த யூதேயர்கள் ‘சந்தோஷமாய் ஆர்ப்பரித்து துதிசெய்யத் தொடங்கினதைப்’ போலவே, நாமும் நம்முடைய விசுவாசத்திற்கான கிரியைகளை அதிகரிக்கிறோம். (2 நாளாகமம் 20:21, 22, NW) ஆம், யெகோவா தம்முடைய விரோதிகளுக்கு எதிராக செயல்பட ஆரம்பிப்பதற்கு தயாராகையில் நாமும் அதேபோன்ற உண்மையான விசுவாசத்தைக் காண்பிப்போமாக! சாலை நெடுந்தொலைவாக தோன்றுகிறபோதிலும், இன்று பூமியில் கொந்தளிப்பான கலவரமிக்க பகுதிகளில் வெற்றிசிறக்கும் அவருடைய ஜனங்களைப் போலவே, நாமும் சகித்திருக்கவும் விசுவாசத்தில் சுறுசுறுப்பாயிருக்கவும் திடதீர்மானமாய் இருப்போமாக. துன்புறுத்துதல், வன்முறை, பஞ்சம், மோசமான பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில தேசங்களில், 1998 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம் (ஆங்கிலம்) அறிக்கை செய்கிறபடி, கடவுளுடைய விசுவாசமுள்ள ஊழியர்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்து வருகிறார்கள்.
யெகோவா தம் ஜனங்களை காப்பாற்றுகிறார்
6. இன்று உண்மைப் பற்றுறுதியுடன் இருக்க பலமான விசுவாசம் எவ்வாறு நமக்கு உதவுகிறது?
6 யூதாவை சூழ்ந்திருந்த தேவபக்தியற்ற தேசங்கள் கடவுளுடைய ஜனங்களை அப்படியே விழுங்க முயற்சிசெய்தன, ஆனால் முன்மாதிரியான விசுவாசத்தோடு யெகோவாவின் துதிகளைப் பாடுவதன் மூலம் அவருடைய ஊழியர்கள் பிரதிபலித்தார்கள். அதே போன்ற விசுவாசத்தை இன்று நாம் காண்பிக்கலாம். யெகோவாவுக்குத் துதியுண்டாக்கும் கிரியைகளால் நம்முடைய வாழ்க்கையை நிரப்புவதன்மூலம், சாத்தானுடைய தந்திரமான ஊடுருவும் கண்ணிகளுக்கு கொஞ்சமும் இடமளிக்காமல் நம்முடைய ஆவிக்குரிய ஆயுதத்தை பலப்படுத்துகிறோம். (எபேசியர் 6:11) நம்மைச் சுற்றியுள்ள மாண்டுகொண்டிருக்கும் உலகின் குணங்களைப் பிரதிபலிக்கும் கீழ்த்தரமான பொழுதுபோக்கு, பொருளாசை, அக்கறையின்மை ஆகியவற்றால் கவனம் சிதறடிக்கப்படும் சோதனையை பலமான விசுவாசம் மேற்கொண்டுவிடும். ‘ஏற்ற சமயத்தில்’ அளிக்கப்படும் ஆவிக்குரிய உணவால் நாம் தொடர்ந்து போஷிக்கப்படுகையில், வெல்லமுடியாத இந்த விசுவாசம் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யுடன் உண்மைப் பற்றுறுதியோடு தொடர்ந்து சேவிக்க வைக்கும்.—மத்தேயு 24:45, NW.
7. யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கு எதிராக வந்த பல்வேறு தாக்குதல்களுக்கு எவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?
7 பைபிள் அடிப்படையிலான நம்முடைய நம்பிக்கை, மத்தேயு 24:48-51-ல் சொல்லப்பட்டுள்ள ‘பொல்லாத அடிமையின்’ மனப்பான்மையை வெளிப்படுத்துகிறவர்களால் தூண்டப்படும் பகைமையான பிரச்சாரங்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கும். குறிப்பிடத்தக்க முறையில் இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதன்மூலம், விசுவாச துரோகிகள் இன்று பல தேசங்களில் சுறுசுறுப்பாக பொய்களை விதைத்து பிரச்சாரம் செய்துவருகிறார்கள்; தேசங்களில் அதிகார ஸ்தானங்களில் உள்ள சிலருடன் சேர்ந்து சதியும்கூட செய்கிறார்கள். பிலிப்பியர் 1:7-ல் (NW) விவரிக்கப்பட்டுள்ளபடி, ‘நற்செய்தியை ஆதரித்து அதை சட்டப்பூர்வமாய் நிலைநாட்டுவதன் மூலம்’ பொருத்தமான சந்தர்ப்பத்தில் யெகோவாவின் சாட்சிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, செப்டம்பர் 26, 1996 அன்று, கிரீஸில் நடந்த வழக்கில், ஸ்ட்ராஸ்பர்கிலுள்ள மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள், “யெகோவாவின் சாட்சிகள், ‘அறியப்பட்ட மதம்’ என்ற வரையறைக்குள் வருகிறார்கள்” என ஏகமனதாக மீண்டும் உறுதிசெய்தனர்; அதாவது, கருத்து, மனச்சாட்சி, நம்பிக்கை ஆகியவற்றிற்கான சுயாதீனத்தையும் தங்களுடைய விசுவாசத்தை தெரியப்படுத்துவதற்கான உரிமையையும் அனுபவிப்பதற்கு உரிமையுள்ளவர்கள் என்பதை உறுதிசெய்தனர். விசுவாச துரோகிகளுக்கோ கடவுளுடைய நியாயத்தீர்ப்பு இவ்வாறு சொல்கிறது: “நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.”—2 பேதுரு 2:22.
8. யோசபாத்தின் நாளில், யெகோவா எவ்வாறு தம்முடைய ஜனங்களின் விரோதிகளுக்கு எதிராக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார்?
8 யோசபாத்தின் நாளில், தம்முடைய ஜனங்களுக்குத் தீங்கிழைக்க விரும்பியவர்களுக்கு எதிராக யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். நாம் வாசிக்கிறோம்: “யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் [“யெகோவா,” NW] எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைதேசக் குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.” (2 நாளாகமம் 20:22, 23) யூதேயர்கள் அந்த இடத்திற்கு பெராக்காவின் பள்ளத்தாக்கு என்று பெயரிட்டார்கள், பெராக்கா என்பதன் அர்த்தம் “ஆசீர்வாதம்” என்பதாகும். நவீன காலங்களிலும்கூட, யெகோவா தம்முடைய விரோதிகளுக்கு எதிராக கொண்டுவரும் நியாயத்தீர்ப்பு அவருடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தில் விளைவடையும்.
9, 10. யெகோவாவின் பாதகமான நியாயத்தீர்ப்புக்கு யார் பாத்திரவான்களாய் காண்பித்திருக்கிறார்கள்?
9 நாம் ஒருவேளை இவ்வாறு கேட்கலாம்: நவீன காலங்களில் யெகோவாவிடமிருந்து பாதகமான நியாயத்தீர்ப்பை யார் பெறப்போகிறார்கள்? இந்தக் கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கு நாம் யோவேல் தீர்க்கதரிசனத்திற்குத் திரும்ப வேண்டும். ‘ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண் குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரயமாகக் கொடுக்கும்’ தம்முடைய ஜனங்களின் விரோதிகளைப் பற்றி யோவேல் 3:3 பேசுகிறது. ஆம், கடவுளுடைய ஊழியர்களை மிக கீழ்த்தரமாக, அவர்களுடைய பிள்ளைகள் வேசிப்பணையத்துக்கு மேல் அல்லது ஒரு குவளை திராட்சரச விலைக்கு மேல் ஒன்றும் லாயக்கற்றவர்கள் என அவர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்கள் கட்டாயம் பதில்சொல்லியே ஆகவேண்டும்.
10 அதேபோலவே, ஆவிக்குரிய விபச்சாரம் செய்கிறவர்களும்கூட நியாயத்தீர்ப்புக்குப் பாத்திரராக இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 17:3-6) யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவதற்கும் அவர்களுடைய வேலையைத் தடைசெய்வதற்கும் அரசியல் அதிகாரங்களை செல்வாக்கு செலுத்துகிறவர்களே முக்கியமாக கண்டிக்கப்படத்தக்கவர்கள். சமீப காலங்களில் கிழக்கு ஐரோப்பாவில் மக்களைத் தூண்டிவிடும் மதத் தலைவர்கள் சிலர் இவ்விதமாகத்தான் செய்துவந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அநீதியான ஆட்களுக்கு எதிராக செயல்படுவதற்கு தாம் எடுத்திருக்கும் திடதீர்மானத்தை யெகோவா தெரிவிக்கிறார்.—யோவேல் 3:4-8.
“யுத்தத்தைப் பரிசுத்தம்பண்ணுங்கள்!”
11. யெகோவா எவ்வாறு தம்முடைய விரோதிகளை போருக்கு சவாலிடுகிறார்?
11 அடுத்ததாக, தேசங்களுக்கு மத்தியில் ஒரு சவாலை அறிவிப்பதற்கு யெகோவா தம்முடைய ஜனங்களை அழைப்பதை நாம் வாசிக்கிறோம்: “யுத்தத்தைப் பரிசுத்தம்பண்ணுங்கள்! பலவான்களை எழுப்புங்கள்! போர் வீரர் அனைவரும் முன்னேறி அருகே வரட்டும்!” (யோவேல் 3:9, NW) இது ஓர் ஒப்பற்ற யுத்தத்திற்கான—நீதியுள்ள யுத்தத்திற்கான—பிரகடனம். யெகோவாவின் உண்மைப் பற்றுறுதியுள்ள சாட்சிகள் பொய் பிரச்சாரத்திற்கு பதிலளிக்கையில், ஆவிக்குரிய போராயுதங்களை சார்ந்திருந்து சத்தியத்தினால் பொய்யை முறியடிக்கிறார்கள். (2 கொரிந்தியர் 10:4; எபேசியர் 6:17) விரைவில், ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தை’ கடவுள் பரிசுத்தப்படுத்துவார். அது கடவுளுடைய அரசதிகாரத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் பூமியிலிருந்து அழித்துவிடும். பூமியிலுள்ள அவருடைய ஜனங்களுக்கு மாம்சப்பிரகாரமான விதத்தில் எந்தவித பங்கும் இதில் இருக்காது. சொல்லர்த்தமாகவும் அடையாளப்பூர்வமாகவும் அவர்கள் ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்திருக்கிறார்கள்.’ (ஏசாயா 2:4) மாறாக, அதற்கு நேர் எதிரானதை செய்யும்படி எதிரி தேசங்களுக்கு யெகோவா சவாலிடுகிறார்: “உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்.” (யோவேல் 3:10) தங்களுடைய முழு போர்க்கருவிகளையும் நவீன போராயுதங்களையும் யுத்தத்தில் பயன்படுத்தும்படி அவர்களுக்கு அழைப்புவிடுகிறார். ஆனால் தேசங்கள் வெற்றிபெற முடியாது, ஏனென்றால் அந்த யுத்தமும் வெற்றியும் யெகோவாவுடையது!
12, 13. (அ) பனிப்போர் முடிவடைந்தபோதிலும், இன்னும் போரை விரும்புவோர் என எவ்வாறு அநேக தேசங்கள் தங்களை காண்பித்திருக்கின்றன? (ஆ) எதற்கு தேசங்கள் ஆயத்தமாக இல்லை?
12 1990-களின் ஆரம்பத்தில், பனிப்போர் முடிவடைந்துவிட்டது என தேசங்கள் அறிவித்தன. இதை கவனிக்கையில், ஐக்கிய நாடுகள் தங்களுடைய பிரதான இலக்காகிய சமாதானத்தையும் பாதுகாப்பையும் அடைந்திருக்கிறதா? நிச்சயமாகவே இல்லை! புருண்டி, காங்கோ மக்கள் குடியரசு, ஈராக், லைபீரியா, ருவாண்டா, சோமாலியா, முன்னாள் யுகோஸ்லாவியா ஆகிய நாடுகளில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் நமக்கு என்ன சொல்கின்றன? எரேமியா 6:14-ல் உள்ள வார்த்தைகளில் சொல்லப்போனால், “சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
13 சில இடங்களில் நேரடியான போர் நின்றுவிட்டபோதிலும், ஐநா-வின் உறுப்பின நாடுகள், அதிநவீன போர்க்கருவிகளை ஏராளமாய் தயாரிப்பதில் இன்னும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. சில நாடுகள் தொடர்ந்து அணு ஆயுதங்களை குவித்து வருகின்றன. மற்ற நாடுகள் ஒட்டுமொத்த அழிவிற்காக ரசாயன அல்லது நுண்ணுயிர் சார்ந்த போராயுதங்களை உற்பத்தி செய்கின்றன. அர்மகெதோன் என்றழைக்கப்படும் அடையாளப்பூர்வமான இடத்தில் அத்தேசங்கள் கூடிவருகையில், அவர் இவ்வாறு சவாலிடுகிறார்: “பலவீனனும் தன்னை பலவான் என்று சொல்வானாக. சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்.” யோவேல் பின்பு தன்னுடைய சொந்த வேண்டுகோளுடன் குறுக்கிடுகிறார்: ‘கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.’—யோவேல் 3:10, 11.
யெகோவா தம் சொந்த ஜனங்களை பாதுகாக்கிறார்
14. யெகோவாவின் பராக்கிரமசாலிகள் யார்?
14 யெகோவாவின் பராக்கிரமசாலிகள் யார்? பைபிளில் சுமார் 283 தடவைகள், “சேனைகளின் யெகோவா” என மெய்க் கடவுள் அழைக்கப்பட்டிருக்கிறார். (2 இராஜாக்கள் 3:14, NW) இந்த சேனைகள், யெகோவா செய்யச் சொன்னதை உடனடியாக செய்ய காத்திருக்கும் பரலோகத்திலுள்ள தேவதூதர் கூட்டத்தினர். எலிசாவைப் பிடிப்பதற்கு சீரியர்கள் முயற்சி செய்தபோது, அவர்கள் ஏன் வெற்றிபெற மாட்டார்கள் என்பதை எலிசாவின் வேலைக்காரனுக்கு காண்பிப்பதற்கு யெகோவா கடைசியாக அவனுடைய கண்களைத் திறந்தார்: “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிற[து].” (2 இராஜாக்கள் 6:17) ‘பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை’ தம்முடைய பிதாவிடத்தில் வேண்டி கேட்டிருக்க முடியும் என இயேசு சொன்னார். (மத்தேயு 26:53) அர்மகெதோனில் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு இயேசு சவாரிசெய்து வருவதை விவரிக்கையில், வெளிப்படுத்துதல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.” (வெளிப்படுத்துதல் 19:14, 15) அடையாளப்பூர்வமான அந்த மதுவுள்ள ஆலை “தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலை” என தெளிவான வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 14:17-20.
15. தேசங்களுக்கு எதிராக யெகோவாவின் போரை யோவேல் எவ்வாறு விவரிக்கிறார்?
15 அப்படியானால், கடவுளுடைய சொந்த பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணும்படி யோவேல் செய்த விண்ணப்பத்திற்கு யெகோவா எவ்வாறு பதிலளிக்கிறார்? இவ்வாறு வர்ணனையில் பதிலளிக்கிறார்: “ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன். பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது. நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] நாள் சமீபமாயிருக்கிறது. சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும். கர்த்தர் [“யெகோவா,” NW] சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்.”—யோவேல் 3:12-16.
16. யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் ஆட்கள் மத்தியில் யார் உட்பட்டிருப்பர்?
16 “யெகோவாவே நியாயாதிபதி” என்று யோசபாத்தின் பெயர் அர்த்தப்படுத்துவது எவ்வளவு நிச்சயமோ, நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் நம்முடைய தேவனாகிய யெகோவா தம்மை முழுமையாக நிரூபிக்கப்போவதும் அவ்வளவு நிச்சயம். பாதகமான நியாயத்தீர்ப்பைப் பெறுகிறவர்களை, ‘நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே உள்ள திரள்திரளான ஜனங்கள்’ என அந்தத் தீர்க்கதரிசனம் விவரிக்கிறது. பொய் மதத்தை ஆதரிக்கும் மீதியானோர் எவரும் அந்தத் திரளான ஜனங்கள் மத்தியில் இருப்பார்கள். சங்கீதம் இரண்டாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருப்பவர்களும்—ஜாதிகள், ஜனங்கள், பூமியின் ராஜாக்கள், அதிகாரிகள் ஆகியோரும்—அதில் இருப்பார்கள்; இவர்கள் ‘யெகோவாவை பயத்தோடு சேவிப்பதற்குப்’ பதிலாக சீர்கேடான இந்த உலக ஒழுங்குமுறையைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ‘குமாரனை முத்தஞ்செய்ய’ இவர்கள் மறுக்கிறார்கள். (சங்கீதம் 2:1, 2, 11, 12) இயேசுவை யெகோவாவின் துணை அரசராக அவர்கள் ஏற்றுக்கொள்கிறதில்லை. மேலும், அழிவுக்காக குறிக்கப்பட்டிருக்கும் கூட்டத்தாரில், ‘வெள்ளாடுகள்’ என மகிமை பொருந்திய ராஜா தீர்ப்புசெய்யும் ஜனங்கள் எல்லாரும் இருப்பார்கள். (மத்தேயு 25:33, 41) பரலோக எருசலேமிலிருந்து கெர்ச்சிப்பதற்குரிய யெகோவாவின் சரியான நேரம் வரும்போது, அரசருக்கெல்லாம் அரசராய் விளங்கும் அவருடைய துணை அரசர் அந்த நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற சவாரி செய்வார். நிச்சயமாகவே வானமும் பூமியும் அசையும்! என்றபோதிலும், “கர்த்தர் [“யெகோவா,” NW] தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்” என நமக்கு உறுதியளிக்கப்படுகிறது!—யோவேல் 3:16.
17, 18. மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைப்போராக அடையாளம் காட்டப்படுவோர் யார், அவர்கள் என்ன நிலைமையை அனுபவிப்பார்கள்?
17 மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைக்கிற ‘திரளான கூட்டத்தினரை’ வெளிப்படுத்துதல் 7:9-17 அடையாளம் காட்டுகிறது; இவர்கள் இயேசுவினுடைய இரத்தத்தின் மீட்கும் வல்லமையில் விசுவாசம் வைக்கிறவர்கள். யெகோவாவின் நாளில் இவர்கள் பாதுகாப்பைக் கண்டடைவார்கள்; அதேசமயத்தில் யோவேல் தீர்க்கதரிசனத்திலுள்ள திரளான ஜனங்கள் நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே பாதகமான தீர்ப்பைப் பெறுவார்கள். தப்பிப்பிழைப்போரிடம் யோவேல் சொல்கிறார்: “என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே”—அதாவது, யெகோவாவின் பரலோக வாசஸ்தலத்திலே—“வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்.”—யோவேல் 3:17அ.
18 கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ஆட்சிப்பகுதி “பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக் கடந்துபோவதில்லை” என அந்தத் தீர்க்கதரிசனம் பின்பு நமக்கு அறிவிக்கிறது. (யோவேல் 3:17ஆ) அந்தப் பரலோக ராஜ்யத்தின் பரலோக மற்றும் பூமிக்குரிய பகுதியில், அந்நியர் யாரும் இருக்கமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அனைவரும் தூய்மையான வணக்கத்தில் ஐக்கியப்படுத்தப்படுவார்கள்.
19. இன்று கடவுளுடைய ஜனங்கள் அனுபவிக்கும் பரதீஸிய மகிழ்ச்சியை யோவேல் எவ்வாறு விவரிக்கிறார்?
19 இப்பொழுதும்கூட, பூமியிலுள்ள யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் சமாதானம் பொங்கிவழிகிறது. அவர்கள் 230-க்கும் அதிகமான நாடுகளிலும் ஏறக்குறைய 300 வித்தியாசமான மொழிகளிலும் அவருடைய நியாயத்தீர்ப்புகளை ஒற்றுமையாக அறிவித்துவருகிறார்கள். அவர்களுடைய செழுமையைப் பற்றி யோவேல் அழகாக தீர்க்கதரிசனம் உரைக்கிறார்: “அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும்.” (யோவேல் 3:18) ஆம், தம்மைத் துதிக்கும் பூமியிலுள்ள ஆட்கள்மீது வழிந்தோடும் சந்தோஷ ஆசீர்வாதங்களையும் செழிப்பையும் பெருக்கெடுத்துவரும் அருமையான சத்திய நீரையும் யெகோவா தொடர்ந்து பொழிவார். யெகோவாவின் அரசதிகாரம், நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே முழுவதுமாக நிரூபிக்கப்பட்டிருக்கும், மீட்கப்பட்ட தம்முடைய ஜனங்கள் மத்தியில் அவர் என்றென்றும் வாசம்பண்ணுகையில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
◻ யோசபாத்தின் நாளில் யெகோவா எவ்வாறு தம்முடைய ஜனங்களை காப்பாற்றினார்?
◻ ‘நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கில்’ அழிக்கப்படுவதற்கு யாரை யெகோவா பாத்திரவான்களாக நியாயந்தீர்க்கிறார்?
◻ கடவுளுடைய பராக்கிரமசாலிகள் யார், இறுதி யுத்தத்தில் அவர்கள் என்ன பாகத்தை வகிப்பார்கள்?
◻ உண்மையுள்ள வணக்கத்தார் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்?
[பக்கம் 21-ன் படம்]
யூதாவுக்கு இவ்வாறு சொல்லப்பட்டது: ‘பயப்படாமல் இருங்கள், யுத்தம் பண்ணுவது நீங்கள் அல்ல, தேவனே’
[பக்கம் 23-ன் படம்]
‘தங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாக அடிக்கும்படி’ விரோதிகளுக்கு யெகோவா சவாலிடுகிறார்
[பக்கம் 24-ன் படம்]
மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும் திரள் கூட்டத்தை பைபிள் அடையாளம் காட்டுகிறது