வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
அக்டோபர் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | தானியேல் 7-9
“மேசியாவின் வருகையைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசனம் முன்கூட்டியே சொன்னது”
(தானியேல் 9:24) உன் ஜனங்களுக்காகவும் பரிசுத்த நகரத்துக்காகவும் 70 வாரங்களை கடவுள் குறித்திருக்கிறார். அத்துமீறலை முடிவுக்குக் கொண்டுவரவும், பாவங்களை ஒழித்துக்கட்டவும், தவறுகளுக்குப் பரிகாரம் செய்யவும், நீதியை என்றென்றுமாக நிலைநாட்டவும், தரிசனத்துக்கும் தீர்க்கதரிசனத்துக்கும் முத்திரை போடவும், பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதை அபிஷேகம் செய்யவும் அந்த 70 வாரங்களைக் கடவுள் குறித்திருக்கிறார்.
it-2-E பக். 902 பாரா 2
70 வாரங்கள்
அத்துமீறலும் பாவமும் முடிவுக்கு வந்தது. இயேசு இறந்து, மறுபடியும் உயிரோடு எழுப்பப்பட்டு, பிறகு பரலோகத்துக்குப் போனது, ‘அத்துமீறலை முடிவுக்குக் கொண்டுவரவும், பாவங்களை ஒழித்துக்கட்டவும், தவறுகளுக்குப் பரிகாரம் செய்யவும்’ வழிசெய்தது. (தானி 9:24) திருச்சட்ட ஒப்பந்தம், யூதர்கள் பாவிகள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியது, அவர்களைப் பாவிகள் என்று குற்றப்படுத்தியது. அதோடு, ஒப்பந்தத்தை மீறியவர்கள் என்ற சாபத்தையும் அவர்கள்மேல் கொண்டுவந்தது. மோசேயின் திருச்சட்டத்தால் வெட்டவெளிச்சமான அவர்களுடைய பாவங்கள் “பெருகப்பெருக,” மேசியாவின் மூலம் கடவுள் காட்டிய அளவற்ற கருணையும் அதைவிட அதிகமாகப் பெருகியது. (ரோ 5:20) மேசியாவுடைய பலியின் அடிப்படையில், மனம் திருந்திய பாவிகளுடைய அத்துமீறலும், பாவமும், அதற்கான தண்டனையும் நீக்கப்பட்டன.
(தானியேல் 9:25) எருசலேமைப் புதுப்பித்துக் கட்டுவதற்குக் கட்டளை கொடுக்கப்படுகிற சமயத்திலிருந்து 7 வாரங்களும் 62 வாரங்களும் கழித்து தலைவராகிய மேசியா தோன்றுவார். எருசலேம் பொது சதுக்கத்தோடும் அகழியோடும் புதுப்பித்துக் கட்டப்படும். ஆனால், அது நெருக்கடியான காலங்களில் நடக்கும்.
it-2-E பக். 900 பாரா 7
70 வாரங்கள்
‘69 வாரங்களுக்கு’ பிறகு மேசியா தோன்றுகிறார். இங்கே சொல்லப்பட்டிருக்கும் ‘62 வாரங்கள்’ (தானி 9:25), 70 வாரங்களின் ஒரு பாகமாக இருக்கிறது; வரிசைப்படி இரண்டாவதாக வருகிறது. இது, ‘7 வாரங்களின்’ முடிவுக்குப் பிறகு ஆரம்பமாகிறது. அதனால், எருசலேமைப் புதுப்பித்துக் கட்டுவதற்கான “கட்டளை கொடுக்கப்படுகிற சமயத்திலிருந்து” “தலைவராகிய மேசியா” தோன்றும்வரை, 7 “வாரங்களும்” 62 “வாரங்களும்,” அல்லது ‘69 வாரங்கள்’ செல்லும். அதாவது, கி.மு. 455 முதல் கி.பி. 29 வரை, மொத்தம் 483 வருஷங்கள் செல்லும். கி.பி. 29-ன் இலையுதிர் காலத்தில், இயேசு தண்ணீரில் ஞானஸ்நானம் எடுத்தார், கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டார், ‘தலைவராகிய மேசியாவாக’ தன் ஊழியத்தை ஆரம்பித்தார்.—லூ 3:1, 2, 21, 22.
(தானியேல் 9:26, 27அ) அந்த 62 வாரங்களுக்குப் பின்பு, மேசியா தனக்கென்று எதுவும் இல்லாமல் கொல்லப்படுவார். ஒரு படைத் தலைவரும் அவருடைய வீரர்களும் வந்து நகரத்தையும் பரிசுத்த இடத்தையும் அழிப்பார்கள். வெள்ளத்தால் அதற்கு முடிவு வரும், அந்த முடிவு வரும்வரை போர் நடக்கும். நாசம் செய்ய கடவுள் தீர்மானித்திருக்கிறார். பலருக்காக அவர் ஒரு வாரத்துக்கு ஒப்பந்தத்தை நீடிக்கச் செய்வார். அந்த வாரத்தின் பாதியில், பலிகளுக்கும் காணிக்கைகளுக்கும் முடிவுகட்டுவார்.
it-2-E பக். 901 பாரா 2
70 வாரங்கள்
வாரத்தின் பாதியில் “கொல்லப்படுவார்.” “அந்த 62 வாரங்களுக்குப் பின்பு, மேசியா தனக்கென்று எதுவும் இல்லாமல் கொல்லப்படுவார்” என்று காபிரியேல் தூதர் தானியேலிடம் சொன்னார். (தானி 9:26) 7 வாரங்களும் 62 வாரங்களும் முடிந்த பிறகு ஏதோவொரு சமயத்தில், சொல்லப்போனால், மூன்றரை வருஷங்களுக்குப் பிறகு, கிறிஸ்து சித்திரவதைக் கம்பத்தில் கொல்லப்பட்டார். அவர் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்தார், தன்னையே மீட்புவிலையாக மனிதர்களுக்குத் தந்தார். (ஏசா 53:8) “வாரத்தின்” முதல் பாதிவரை, இயேசு ஊழியம் செய்ததாக அத்தாட்சி காட்டுகிறது. ஒரு சமயம், கி.மு. 32-ன் இலையுதிர் காலத்தில் இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார். அதில், “மூன்று வருஷங்களாக” கனி தராத அத்தி மரத்துக்கு யூத தேசத்தை ஒப்பிட்டு பேசினார். (மத் 17:15-20; 21:18, 19, 43-ஐ ஒப்பிட்டு பாருங்கள்.) தோட்டக்காரர், திராட்சை தோட்டத்தின் சொந்தக்காரரிடம், “எஜமானே, இந்த மரம் இன்னும் ஒரு வருஷம் இருக்கட்டும். இதைச் சுற்றிலும் கொத்திவிட்டு எரு போடுகிறேன். வருங்காலத்தில் இது கனி கொடுத்தால் நல்லது. இல்லையென்றால், இதை வெட்டிப்போடுங்கள்” என்று சொன்னார். (லூ 13:6-9) தன்னுடைய செய்திக்குக் காதுகொடுக்காத அந்தத் தேசத்துக்கு, தான் ஊழியம் செய்த அந்தக் காலப்பகுதியை இயேசு இந்த உதாரணத்தில் குறிப்பிட்டிருக்கலாம். அந்தச் சமயத்தில், அவர் செய்த ஊழியம் சுமார் மூன்று வருஷங்கள் நீடித்தன. இப்போது, நான்காவது வருஷமும் அது தொடர இருந்தது.
it-2-E பக். 901 பாரா 5
70 வாரங்கள்
“வாரத்தின் பாதி,” 7 வருஷங்களின் நடுவில் இருக்கலாம், அல்லது அந்த “வார” வருஷங்களுக்குள் இருக்கும் மூன்றரை வருஷங்களுக்குப் பிறகு இருக்கலாம். 70-வது ‘வாரம்,’ இயேசு ஞானஸ்நானம் எடுத்து, கிறிஸ்துவாக அபிஷேகம் செய்யப்பட்ட வருஷம் கி.பி. 29-ன் இலையுதிர் காலத்தில் ஆரம்பித்தது. அதனால், வாரத்தின் பாதி (மூன்றரை வருஷங்கள்), கி.பி. 33-ன் இளவேனிற்காலம் அல்லது அந்த வருஷத்தின் பஸ்கா சமயம் வரை (நிசான் 14) நீடித்தது. கிரிகோரியன் காலண்டரின்படி, இந்த நாள் கி.பி. 33, ஏப்ரல் 1-ஆக இருந்திருக்கலாம். இயேசு ‘கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்ற,’ அதாவது, ‘இரண்டாவதை நிலைநாட்டுவதற்காக முதலாவதை [திருச்சட்டத்தின்படி கொடுக்கப்படுகிற பலிகளையும் காணிக்கைகளையும்] நீக்கிப்போட’ வந்ததாக அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார். தன் சொந்த உடலைப் பலியாக கொடுத்ததன் மூலம் இயேசு இதை நிறைவேற்றினார்.—எபி 10:1-10.
அக்டோபர் 16-22
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(ஓசியா 2:18) அந்த நாளில், என் ஜனங்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், வானத்துப் பறவைகளோடும், ஊரும் பிராணிகளோடும் ஒரு ஒப்பந்தம் செய்வேன். தேசத்திலிருந்து வில்லையும் வாளையும் போரையும் ஒழித்துக்கட்டுவேன். அவர்களைப் பாதுகாப்பாகப் படுத்துக்கொள்ள செய்வேன்.
g05-E 9/8 பக். 12 பாரா 2
பூமி முழுவதும் சமாதானம் இருக்கும்
பூமியில் ஒரு புது விதமான சமாதானம் இருக்கும். ஏனென்றால், இந்தப் பூமியை எப்படி நன்றாகப் பராமரிப்பது என்று கடவுள் தன் உண்மையுள்ள ஊழியர்களுக்குக் கற்றுக்கொடுப்பார். சொல்லப்போனால், வேட்டையாடும் மிருகங்கள் எல்லாவற்றோடும் கடவுள் ஒரு ‘ஒப்பந்தம் செய்யவார்.’ அப்போது, மிருகங்கள் மனிதர்களோடு சமாதானமாக இருக்கும், அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்.—ஓசியா 2:18; ஆதியாகமம் 1:26-28; ஏசாயா 11:6-8.
அக்டோபர் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஓசியா 8-14
“யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுங்கள்”
(ஓசியா 14:9) ஞானமுள்ளவன் யார்? அவன் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ளட்டும். விவேகமுள்ளவன் யார்? அவன் இவற்றைத் தெரிந்துகொள்ளட்டும். ஏனென்றால், யெகோவாவின் வழிகள் நேர்மையானவை. அந்த வழிகளில் நீதிமான்கள் நடப்பார்கள், ஆனால், குற்றவாளிகள் தடுக்கி விழுவார்கள்.
jd-E பக். 87 பாரா 11
யெகோவாவின் உயர்ந்த தராதரங்களின்படி அவருக்குச் சேவை செய்யுங்கள்.
11 நேர்மையான வழியில் நடப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி ஓசியா 14:9 சொல்கிறது. கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிற விஷயங்களின்படி நடக்கும்போதுதான் நமக்கு ஆசீர்வாதங்களும் நன்மைகளும் கிடைக்கும். ஒரு படைப்பாளராக, நாம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்று கடவுளுக்கு நன்றாகத் தெரியும். அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் நம்முடைய நன்மைக்காகத்தான்! கடவுளோடு நமக்கிருக்கும் பந்தத்தைப் புரிந்துகொள்ள, காரையும் அதன் தயாரிப்பாளரையும் பற்றிய ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு கார் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதன் பாகங்கள் எப்படி ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது என்பதும் அதன் தயாரிப்பாளருக்கு நன்றாகத் தெரியும். காருக்கு எவ்வளவு அடிக்கடி ஆயில் மாற்ற வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். கார் நன்றாக ஓடுகிறது என்று நினைத்துக்கொண்டு, சரியாக ஆயில் மாற்றவில்லை என்றால் என்ன ஆகும்? சீக்கிரத்திலேயே, காரின் என்ஜின் கொஞ்சம் கொஞ்சமாகப் பழுதடைந்து கடைசியில் செயலிழந்துவிடும். மனிதர்களின் விஷயத்திலும் இதுதான் உண்மை. நம் படைப்பாளர் நமக்குக் கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். அதைக் கடைப்பிடித்தால் நமக்குத்தான் நன்மை. (ஏசாயா 48:17, 18) அந்த நன்மைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, அவருடைய தராதரங்களின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க நாம் இன்னும் அதிகமாகத் தூண்டப்படுவோம்.—சங்கீதம் 112:1.
அக்டோபர் 30–நவம்பர் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவேல் 1-3
“உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்”
(யோவேல் 2:28, 29) அதற்குப் பின்பு, பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன். உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள். உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள். அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும் என் சக்தியைப் பொழிவேன்.
jd-E பக். 167 பாரா 4
“எல்லா தேசங்களிலும் இதை அறிவியுங்கள்”
4 இந்த விஷயத்தை வேறொரு நோக்குநிலையிலிருந்து பாருங்கள். பலதரப்பட்ட ஜனங்களும் தீர்க்கதரிசனம் சொல்லும் ஒரு காலத்தைப் பற்றி யோவேல் தீர்க்கதரிசியிடம் கடவுள் இப்படிச் சொன்னார்: “அதற்குப் பின்பு, பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன். உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள். உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள்.” (யோவேல் 2:28-32) கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று, இங்கே சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை, எருசலேமிலிருந்த ஒரு வீட்டின் மாடி அறையில் தங்கியிருந்தவர்கள்மேல் கடவுளுடைய சக்தி பொழியப்பட்டதற்கும், அதைத் தொடர்ந்து “கடவுளுடைய மகத்தான செயல்களை” பற்றி அவர்கள் பிரசங்கித்ததற்கும் பேதுரு பொருத்தினார். (அப்போஸ்தலர் 1:12-14; 2:1-4, 11, 14-21) இப்போது நம்முடைய காலத்தை எடுத்துக்கொள்ளலாம். 20-வது நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே, யோவேல் தீர்க்கதரிசனம் பெரியளவில் நிறைவேறி வருகிறது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரும் “தீர்க்கதரிசனம்” சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது, பரலோகத்தில் இப்போது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உட்பட, “கடவுளுடைய மகத்தான செயல்களை” பற்றி அவர்கள் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.