பதிமூன்றாம் அதிகாரம்
தவறுகளிலிருந்து பாடம் கற்றார்
1, 2. (அ) யோனா செய்த தவறினால் அவருக்கும் கப்பலில் இருந்த மற்றவர்களுக்கும் என்ன சம்பவித்தது? (ஆ) யோனாவின் அனுபவம் நமக்கு என்ன கற்பிக்கிறது?
நாலாபக்கத்திலிருந்து வரும் சத்தம் யோனாவின் காதைப் பிளக்கிறது. பாய்மரக் கப்பலின் கயிறுகளை உலுக்கும் பலத்த காற்றின் பேரிரைச்சல் ஒருபக்கம். ராட்சத அலைகள் மரக்கப்பலின் இருபுறங்களிலும் மோதுவதால் எழும்புகிற பயங்கர கிறீச்சொலி மறுபக்கம். கப்பல் மூழ்கிவிடாமல் இருப்பதற்காகப் போராடுகிற மாலுமிகளுடைய கூச்சல் கூப்பாடு இன்னொரு பக்கம். ஆனால் எல்லாவற்றையும்விட இவர்களுடைய சத்தத்தைத்தான் யோனாவால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இவர்கள் எல்லோரும் நிச்சயம் சாகப்போகிறார்கள், அதுவும் தன்னால்தான், என்பது அவருக்கு நன்றாகத் தெரிகிறது!
2 இப்படிப்பட்ட இக்கட்டான நிலை யோனாவுக்கு ஏன் வந்தது? அவருடைய கடவுளான யெகோவாவுக்கு விரோதமாக மாபெரும் தவறு செய்திருந்தார். என்ன தவறு செய்திருந்தார்? அது சரிசெய்யவே முடியாத தவறா? இதற்கான பதில்களிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, கடவுள்மீது உண்மையான விசுவாசம் வைத்திருப்பவர்கள்கூட தவறுகள் செய்துவிடலாம்... அவற்றை அவர்கள் சரிசெய்துவிடலாம்... என்பதை யோனாவின் அனுபவம் நமக்குக் கற்பிக்கிறது.
கலிலேயாவைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசி
3-5. (அ) யோனா என்ற பெயரைக் கேட்டதும் பொதுவாக எதுதான் மக்களுடைய மனதுக்கு வருகிறது? (ஆ) யோனாவின் பின்னணியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? (அடிக்குறிப்பையும் காண்க.) (இ) ஒரு தீர்க்கதரிசியாகச் சேவை செய்வது யோனாவுக்கு ஏன் சுலபமாகவோ சந்தோஷமாகவே இல்லை?
3 யோனா என்ற பெயரைக் கேட்டதும் அவர் செய்த தவறுகள்தான்... கீழ்ப்படியாமல் போனது, பிடிவாதம் பிடித்தது போன்ற தவறுகள்தான்... பலருடைய கண்முன் வந்து நிற்கும். ஆனால், யோனாவிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஒன்றை நினைவில் வையுங்கள்: தீர்க்கதரிசியாகச் சேவைசெய்ய யோனாவை யெகோவா தேவன்தான் தேர்ந்தெடுத்தார். யோனா உண்மையற்றவராக, அநீதியுள்ளவராக இருந்திருந்தால், இத்தகைய பொறுப்பான வேலைக்கு யெகோவா அவரைத் தேர்ந்தெடுத்திருப்பாரா?
யோனாவிடம் குறைகளைவிட நிறைகளே அதிகம்
4 யோனாவின் பின்னணியைப் பற்றி பைபிள் நமக்கு சிற்சில தகவல்களைத் தருகிறது. (2 இராஜாக்கள் 14:25-ஐ வாசியுங்கள்.) இவர் காத்தேப்பேர் என்னும் நகரத்தைச் சேர்ந்தவர். இந்நகரம் நாசரேத்திலிருந்து நான்கே கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது; சுமார் 800 வருடங்களுக்குப் பிறகு இயேசு கிறிஸ்து வளர்ந்தது இந்த நாசரேத்தில்தான்.a இரண்டாம் யெரொபெயாம் ராஜா இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தை ஆட்சி செய்துவருகிற காலத்தில்தான் யோனா தீர்க்கதரிசியாகச் சேவை செய்கிறார். எலியா தீர்க்கதரிசி இறந்து வெகு காலம் ஆகிவிட்டது; எலியாவுக்குப் பின்வந்த எலிசா தீர்க்கதரிசியும் யெரொபெயாமுடைய அப்பாவின் ஆட்சிக் காலத்தில் இறந்துவிட்டார். பாகால் வழிபாட்டை ஒழித்துக்கட்ட யெகோவா இந்தத் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தியிருந்தபோதிலும், மறுபடியும் இஸ்ரவேலர் அந்த வழிபாட்டில் வேண்டுமென்றே ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது, இஸ்ரவேல் தேசம் ‘யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவருகிற’ ராஜாவின் கைகளில் இருக்கிறது. (2 இரா. 14:24) எனவே, யெகோவாவுக்குச் சேவை செய்வது யோனாவுக்குச் சுலபமாகவோ சந்தோஷமாகவோ இல்லை. ஆனாலும் அவர் உண்மையோடு யெகோவாவுக்குச் சேவை செய்துவருகிறார்.
5 ஒருநாள் யோனாவின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழ்கிறது. யெகோவா அவருக்கு ஒரு வேலையைக் கொடுக்கிறார். அது மிக மிகக் கஷ்டமான வேலையென யோனா நினைக்கிறார். அப்படி என்ன வேலையை யெகோவா அவருக்குக் கொடுக்கிறார்?
“நீ எழுந்து . . . நினிவேக்குப் போ”
6. யோனாவுக்கு யெகோவா தந்த வேலை என்ன, அது ஏன் அவருக்குப் பெரும் கஷ்டமாகத் தெரிந்திருக்கலாம்?
6 “நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது” என்று யோனாவிடம் யெகோவா சொன்னார். (யோனா 1:2) இந்த வேலை ஏன் யோனாவுக்கு அவ்வளவு கஷ்டமாகத் தெரிந்திருக்கலாம்? இதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. நினிவே நகரம் கிழக்கே சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது; இந்த இடத்திற்கு நடந்து செல்ல சுமார் ஒரு மாத காலம் எடுக்கலாம். இத்தகைய நடைப்பயணத்தில் வரப்போகிற கஷ்டங்கள்கூட யோனாவுக்குப் பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனால், மூர்க்கத்தனத்திற்கும் மிருகத்தனத்திற்கும் பேர்போன அசீரியர்களுக்கு யெகோவாவின் தண்டனைத்தீர்ப்பை அறிவிப்பதுதான் அவருக்குக் கஷ்டமாகத் தெரிந்தது. கடவுளுடைய சொந்த ஜனங்களே அவருடைய பேச்சைக் கேட்டு நடக்காத பட்சத்தில், பொய் மதத்தவர் அவருடைய பேச்சைக் கேட்பார்கள் என்று யோனாவால் எதிர்பார்க்க முடியுமா? பரந்து விரிந்த நினிவே நகரில், ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட நகரில், தனியொரு ஆளாக யெகோவாவின் வேலையை யோனாவால் செய்துமுடிக்க முடியுமா?—நாகூ. 3:1, 7.
7, 8. (அ) யெகோவா கொடுத்த வேலையை விட்டுவிட்டு ஓடுவதில் யோனா எந்தளவு உறுதியாய் இருந்தார்? (ஆ) யோனா ஒரு கோழை என நாம் ஏன் முடிவுகட்டிவிடக் கூடாது?
7 இப்படிப்பட்ட எண்ணங்கள் யோனாவின் மனத்திரையில் ஓடியதா இல்லையா என்பது நமக்கு உறுதியாகத் தெரியாது, ஆனால் அவர் ஓடிப்போனார் என்பது மட்டும் நமக்கு உறுதியாகத் தெரியும். கிழக்கு நோக்கிப் போகும்படி யெகோவா அவரிடம் சொன்னார்; அவரோ மேற்கு நோக்கிப் போகத் தீர்மானித்தார், அதுவும் எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போக நினைத்தார். கரையோரமிருக்கிற யோப்பா என்ற துறைமுகப் பட்டணத்திற்குப் போய் தர்ஷீசுக்குச் செல்கிற கப்பலில் ஏறினார். இந்த தர்ஷீஸ், ஸ்பெயின் நாட்டில் இருந்ததாக அறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர் போக நினைத்த இடம் நினிவேயிலிருந்து சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. பெருங்கடலின் மறுகோடியிலிருக்கிற அந்த இடத்துக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுக்கலாம்! அப்படி ஒரு வருட காலம் பயணித்தாலும் பரவாயில்லை, யெகோவா கொடுத்த வேலையைச் செய்யக்கூடாது என்பதில் யோனா உறுதியாய் இருந்தார்.—யோனா 1:3-ஐ வாசியுங்கள்.
8 இதற்காக, யோனா ஒரு கோழை என நாம் முடிவுகட்டிவிடலாமா? அவசரப்பட்டு அந்த முடிவுக்கு வரக்கூடாது. ஏனென்றால், யோனாவுக்கு அசாத்திய தைரியம் இருந்தது, அதைத்தான் பின்னால் நாம் பார்க்கப்போகிறோம். அதேசமயத்தில், நம்மைப் போலவே யோனாவும் ஓர் அபூரணர்தான், ஏராளமான குறைகளோடு போராடிக்கொண்டிருந்தார். (சங். 51:5) நம்மில் யாரைத்தான் பயம் ஆட்டிப்படைக்கவில்லை?
9. யெகோவா தரும் வேலையைக் குறித்து சில சமயங்களில் நாம் எப்படி உணரலாம், இப்படிப்பட்ட சமயங்களில் எந்த உண்மையை நாம் நினைவில்கொள்ள வேண்டும்?
9 கடவுள் நம்மிடம் கேட்கும் விஷயம் கடினமானதாய், ஏன் செய்யவே முடியாததாய்கூட, சிலசமயம் நமக்குத் தோன்றலாம். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதுகூட நமக்குப் பெரும் சவாலாக இருக்கலாம். (மத். 24:14) ஆனால், இயேசு சொன்ன கருத்தாழமிக்க ஓர் உண்மையை... “கடவுளால் [அதாவது, கடவுளுடைய உதவியால்] எல்லாமே முடியும்” என்ற உண்மையை... நாம் மறந்துவிடக் கூடாது. (மாற். 10:27) இந்த உண்மையைச் சிலசமயங்களில் நாம் மறந்துவிடுவது போல்தான் யோனாவும் மறந்திருப்பார். ஆனால், யோனா ஓடிப்போனதால் வந்த விளைவு என்ன?
திசைமாறிச் சென்ற தீர்க்கதரிசியை யெகோவா திருத்துகிறார்
10, 11. (அ) கரையைவிட்டுக் கப்பல் சென்றபோது யோனா என்ன நினைத்திருக்கலாம்? (அ) கப்பலுக்கும் மாலுமிகளுக்கும் என்ன ஆபத்து வந்தது?
10 இதைக் கொஞ்சம் கற்பனை செய்வோம்: யோனா அந்தக் கப்பலில் (ஒருவேளை பொனீஷிய சரக்குக் கப்பலில்) சௌகரியமான ஒரு இடத்தில் உட்காருகிறார். துறைமுகத்திலிருந்து கப்பலைக் கிளப்ப கப்பல் தலைவனும் மாலுமிகளும் அரக்கப்பரக்க வேலை செய்வதை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். கடைசியில் கப்பல் கிளம்புகிறது... கரை மெல்ல மெல்ல கண்ணைவிட்டு மறைகிறது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று நினைத்து அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கலாம். ஆனால், திடீரென வானிலை மாறியது.
11 காற்றின் கோரதாண்டவம் கடலையே கடைந்தெடுத்தது. அலைகள் சீற்றத்துடன் சீறியெழுந்தன. வானுயர எழும்பிய அலைகளுக்கு முன்னால் நவீனகால கப்பல்கள்கூட சிறு தக்கைபோல்தான் இருக்கும். அப்படியிருக்க, காகிதக் கப்பல்போல் தள்ளாடுகிற இந்தச் சின்னஞ்சிறு மரக்கப்பல் மூழ்க எவ்வளவு நேரமாகும்? ‘யெகோவா சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்’ என யோனா பின்னர் எழுதினார்; ஆனால், இது யெகோவாவின் செயல் என அவருக்கு அப்போதே தெரிந்திருந்ததா என்பது நமக்குத் தெரியாது. மாலுமிகள் ஒவ்வொருவரும் தங்கள்தங்கள் தெய்வங்களை நோக்கி மன்றாடுவதை யோனா பார்த்தார்; என்றாலும் அவற்றால் அவர்களைக் காப்பாற்ற முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். (லேவி. 19:4) “கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது” என அவர் பின்னர் எழுதினார். (யோனா 1:4, பொ.மொ.) ஆனால், யெகோவா சொன்னதைக் கேட்காமல் ஓடிப்போய்விட்டு, எப்படி அவரிடமே உதவிகேட்டு ஜெபம் செய்ய முடியும்?
12. (அ) புயல் சீறியபோது யோனா கவலையில்லாமல் தூங்கினார் என ஏன் தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது? (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) இதற்கெல்லாம் யோனாதான் காரணமென்பதை யெகோவா எப்படிச் சுட்டிக்காட்டினார்?
12 தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை யோனா உணர்ந்து, கப்பலின் கீழ்த்தளத்திற்குச் சென்று ஓர் இடத்தில் படுத்துக்கொண்டார். அங்கே ஆழ்ந்து தூங்கிவிட்டார்.b தூங்கிக் கொண்டிருந்த யோனாவைக் கப்பல் தலைவன் தட்டியெழுப்பி, அவரிடமும் தன்னுடைய தெய்வத்தை நோக்கி மன்றாடச் சொன்னார். இது சாதாரண புயல்காற்று அல்ல... இதற்குப் பின்னால் ஏதோவொரு சக்தி இருக்கிறது... என்பதை மாலுமிகள் புரிந்துகொண்டார்கள், இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க உடனே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். ஒவ்வொருவருடைய பெயரும் விடுபட விடுபட யோனாவின் நெஞ்சம் படபடத்திருக்கும். சீக்கிரத்திலேயே குட்டு வெளிப்பட்டுவிட்டது. புயல் காற்றாகட்டும் சீட்டுக் குலுக்கலாகட்டும் இரண்டுக்கும் பின்னால் யெகோவா செயல்பட்டு, யோனாதான் குற்றவாளி என்பதைச் சுட்டிக்காட்டினார்.—யோனா 1:5-7-ஐ வாசியுங்கள்.
13. (அ) மாலுமிகளிடம் யோனா எதை ஒப்புக்கொண்டார்? (ஆ) என்ன செய்யும்படி மாலுமிகளிடம் யோனா சொன்னார், ஏன்?
13 உடனே எல்லாவற்றையும் அந்த மாலுமிகளிடம் யோனா சொல்லிவிடுகிறார். தான் சர்வவல்ல கடவுளான யெகோவாவின் ஊழியர் என்று சொல்கிறார். அவர் கொடுத்த வேலைக்குப் பயந்ததாலேயே ஓடிப்போவதாகவும், தான் அவரைக் கோபப்படுத்திவிட்டதாலேயே இப்படிப்பட்ட ஆபத்து எல்லோருக்கும் வந்திருப்பதாகவும் சொல்கிறார். அதைக் கேட்ட அந்த மாலுமிகள் திகிலடைகிறார்கள்; அவர்களுடைய கண்களில் பீதி தெரிவதை யோனா காண்கிறார். கப்பலையும் தங்களையும் காப்பாற்ற அவரை என்ன செய்ய வேண்டுமென அவர்கள் கேட்கிறார்கள். அவர் என்ன சொல்கிறார்? கொந்தளிக்கும் கடலில், குளிர்ந்த நீரில் மூழ்கப்போவதை நினைத்து யோனா நடுநடுங்கி இருக்கலாம். ஆனால், தன்னால் எல்லோரையும் காப்பாற்ற முடியும் என்பதை அறிந்தும் அவர்களை இந்தக் கடலுக்கு இரையாக்க அவருக்கு எப்படி மனம் வரும்? அதனால் அவர்களிடம், “நீங்கள் என்னைத் தூக்கி கடலில் எறிந்துவிடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்; நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்” என்று சொல்கிறார்.—யோனா 1:12, பொ.மொ.
14, 15. (அ) நாம் எவ்வாறு யோனாவின் விசுவாசத்தைப் பின்பற்றலாம்? (ஆ) யோனாவின் வேண்டுகோளுக்கு மாலுமிகள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
14 இப்படிச் சொல்கிறவர் ஒரு கோழையாக இருந்திருப்பாரா? அந்த இக்கட்டான சமயத்தில், யோனா காட்டிய தைரியத்தையும் தன்னலமற்ற மனப்பான்மையையும் கண்டு யெகோவாவின் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கும். யோனாவுக்கு இருந்த அசைக்க முடியாத விசுவாசத்தை அவருடைய வார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன. யோனாவின் விசுவாசத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? நம்முடைய நலனைவிட மற்றவர்களுடைய நலனை முதலிடத்தில் வைப்பதன் மூலம் பின்பற்றலாம். (யோவா. 13:34, 35) உடல் ரீதியிலோ உணர்ச்சி ரீதியிலோ ஆன்மீக ரீதியிலோ ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால், தன்னலம் கருதாமல் உதவ முன்வருகிறோமா? அப்படிச் செய்யும்போது யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்!
15 யோனா சொன்னதைக் கேட்டு ஒருவேளை அந்த மாலுமிகளும் மனம் நெகிழ்ந்துபோயிருக்கலாம்; அதனால்தான் யோனாவைக் கடலில் தூக்கிப்போட முதலில் மறுக்கிறார்கள். புயல் காற்றில் கப்பலைச் செலுத்த தங்களால் முடிந்தவரை போராடுகிறார்கள், ஆனால் ஒரு பயனும் இல்லை. புயலின் சீற்றம் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. இப்போது, தங்களுக்கு வேறு வழியே இல்லை என்பதை மாலுமிகள் புரிந்துகொள்கிறார்கள். யோனாவின் கடவுளாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், தங்கள்மீது கருணை காட்டச் சொல்லிக் கெஞ்சுகிறார்கள், கடைசியில் யோனாவைத் தூக்கி கடலில் வீசுகிறார்கள்.—யோனா 1:13-15.
கருணை பெறுகிறார், காப்பாற்றப்படுகிறார்
16, 17. கப்பலிலிருந்து வெளியே வீசப்பட்டதும் யோனாவுக்கு என்ன நடந்தது என்பதை விவரியுங்கள். (படங்களையும் காண்க.)
16 தூக்கி வீசப்பட்ட யோனா... சீறியெழும் அலைகளுக்குள் விழுகிறார். தண்ணீரில் தத்தளிக்கிறார், திக்குமுக்காடுகிறார். அலைகளும் நுரைகளும் நாலாபக்கமும் தெறிக்க, நீரைக் கிழித்துக்கொண்டு கப்பல் வேகமாகக் கடந்துபோவதைப் பார்க்கிறார். ராட்சத அலைகள் அவர்மீது மோதி அப்படியே அவரைக் கடலுக்குள் அமிழ்த்துகின்றன. கீழே போகப் போக அவருடைய நம்பிக்கையும் மூழ்கிக்கொண்டே போகிறது.
17 இந்தச் சமயத்தில் அவருக்குள் அலைமோதிய உணர்ச்சிகளைப் பின்னர் அவர் விவரித்தார். அவருடைய மனத்திரையில் பல காட்சிகள் வந்துபோகின்றன. கீழ்ப்படியாததால் கடவுளுடைய தயவை இழந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்படுகிறார். கடலின் தரைமட்டத்திற்குச் செல்வதுபோல்... மலைகளின் வேர்க்கால்களை நெருங்குவதுபோல்... கடற்பாசிகள் தன்னைச் சுற்றிக்கொள்வதுபோல்... உணருகிறார். இதுதான் தனக்குச் சவக்குழி என எண்ணியிருப்பார்.—யோனா 2:2-6-ஐ வாசியுங்கள்.
18, 19. கடலின் ஆழத்திலிருந்த யோனாவுக்கு என்ன நடந்தது, அவரை எப்படிப்பட்ட உயிரினம் விழுங்கியது, இதற்குப் பின்னாலிருந்தது யார்? (அடிக்குறிப்பையும் காண்க.)
18 திடீரென ஏதோவொன்று வருகிறது—அது பெரிய உருவத்தில்... கறுப்பு நிறத்தில்... இருக்கிறது; அந்த உயிரினம் அவரை நோக்கி நெருங்கி வருகிறது, அவர்மீது பாய்கிறது; தன் பெரிய வாயைத் திறந்து, அப்படியே அவரை விழுங்கிவிடுகிறது!
19 இனி அவ்வளவுதான் என்று யோனா நினைத்திருப்பார். ஆனால், ஓர் அற்புதம் நிகழ்ந்திருப்பதை யோனா புரிந்துகொள்கிறார். அவர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்! அவர் சிதைந்துவிடவோ ஜீரணமாகிவிடவோ இல்லை, அவருக்கு மூச்சுத்திணறல்கூட இல்லை. ஆம், அவர் சவமாய்க் கிடக்க வேண்டிய இடத்தில் சுவாசத்துடன் கிடக்கிறார்! கொஞ்சம் கொஞ்சமாக... அவருக்குள் பிரமிப்பும் பயபக்தியும் ஊடுருவிப் பரவுகிறது. ‘யெகோவாதான் ஒரு பெரிய மீனைத் தேர்ந்தெடுத்து தன்னை விழுங்கச் செய்திருக்கிறார்’ என உணருகிறார்.c—யோனா 1:17, ERV.
20. பெரிய மீனின் வயிற்றில் இருந்தபோது யோனா செய்த ஜெபத்திலிருந்து அவரைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
20 நிமிடங்கள் மணிநேரங்களாய் நீளுகின்றன. கண்களுக்குப் பழக்கமில்லாத கும்மிருட்டில்... நிதானமாய் யோசிக்கவும் யெகோவா தேவனிடம் நிறைய பேசவும் அவருக்கு அதிக நேரம் கிடைக்கிறது. யோனா புத்தகத்தின் இரண்டாம் அதிகாரத்தில் காணப்படும் அவருடைய ஜெபம் அவர் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சங்கீதத்திலுள்ள வசனங்களை அவர் அடிக்கடி குறிப்பிடுகிறார்; ஆகவே, வேதவசனங்களை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார் எனத் தெரிகிறது. நன்றியுணர்வு என்ற அருமையான குணம் அவருடைய ஜெபத்தில் பளிச்சிடுகிறது. ‘நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் யெகோவாவே’ என்று சொல்லி யோனா ஜெபத்தை முடிக்கிறார்.—யோனா 2:9, பொ.மொ.
21. மீட்பு பற்றி யோனா என்ன கற்றுக்கொண்டார், என்ன மதிப்புமிக்க பாடத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ளலாம்?
21 எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்த நபரையும் யெகோவாவால் மீட்க முடியும் என்பதை யோனா புரிந்துகொள்கிறார். நினைத்துக்கூட பார்க்க முடியாத ஓர் இடத்தில், மீனின் வயிற்றில், யோனா இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்கிறார். கதிகலங்கிப் போயிருக்கும் தம் ஊழியரை அந்த இடத்தில்கூட யெகோவா கண்ணோக்கிப் பார்த்துக் காப்பாற்றுகிறார். (யோனா 1:17) பெரிய மீனின் வயிற்றில் மூன்று நாள் இரவும் பகலும் இருக்கிற ஒரு நபரை யெகோவாவால் மட்டுமே உயிரோடு... சுகபத்திரமாக... காக்க முடியும். ‘தம்முடைய கையில் நமது சுவாசத்தை வைத்திருக்கிறவர்’ யெகோவாவே என்பதை இன்று நாம் நினைவில் வைப்பது நல்லது. (தானி. 5:23) அவராலேயே நாம் சுவாசிக்கிறோம், பிழைக்கிறோம். இதற்கு நாம் நன்றியுடன் இருக்கிறோமா? அப்படியானால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம், அல்லவா?
22, 23. (அ) நன்றியுணர்வை வெளிக்காட்ட சீக்கிரத்தில் யோனாவுக்கு எப்படிச் சந்தர்ப்பம் கிடைத்தது? (ஆ) நாம் செய்யும் தவறுகளைக் குறித்ததில் யோனாவிடமிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
22 கீழ்ப்படிவதன் மூலம் யெகோவாவுக்கு நன்றிகாட்ட யோனா கற்றுக்கொள்கிறாரா? ஆம், கற்றுக்கொள்கிறார். அந்த மீன் மூன்று நாளுக்குப்பின் யோனாவைக் கரைக்கே கொண்டுவந்து “உலர்ந்த நிலத்தில் கக்கிவிட்டது.” (யோனா 2:10, ERV) கரைவரைகூட யோனா நீந்த வேண்டிய அவசியமில்லாமல் போனதைக் கவனித்தீர்களா? மீன் அவரைக் கக்கிய இடம் எதுவாக இருந்தாலும்சரி, போக வேண்டிய இடத்திற்கு அவர் வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும், தன் நன்றியை வெளிக்காட்ட சீக்கிரத்தில் அவருக்குச் சந்தர்ப்பம் வருகிறது. யோனா 3:1, 2 இவ்வாறு சொல்கிறது: ‘இரண்டாந்தரம் யெகோவாவின் வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்கிறார்.’ யோனா என்ன செய்கிறார்?
23 அவர் கொஞ்சம்கூடத் தயங்குவதில்லை. ‘யோனா எழுந்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போகிறார்.’ (யோனா 3:3) ஆம், இந்த முறை கீழ்ப்படிகிறார். தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த விஷயத்திலும்கூட நாம் யோனாவின் விசுவாசத்தைப் பின்பற்ற வேண்டும். நாம் எல்லோரும் பாவிகள்; நாம் எல்லோரும் தவறுகள் செய்கிறோம். (ரோ. 3:23) ஆனால், நம்பிக்கை இழந்துவிடுகிறோமா? அல்லது, நம்முடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, கீழ்ப்படிதலோடு கடவுளுக்குச் சேவை செய்கிறோமா?
24, 25. (அ) யோனா உயிரோடு இருக்கும்போதே என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றார்? (ஆ) எதிர்காலத்தில் அவருக்கு எப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?
24 கீழ்ப்படிதலைக் காட்டிய யோனாவை யெகோவா ஆசீர்வதித்தாரா? ஆம், ஆசீர்வதித்தார். அந்த மாலுமிகள் தப்பிப்பிழைத்தார்கள் என்பதை யோனா பின்னர் அறிந்துகொண்டதாகத் தெரிகிறது. தன்னலம் கருதாமல் யோனா தன்னைக் கடலில் தூக்கிப் போடும்படி சொன்னவுடனேயே புயல் காற்று நின்றுபோனது; அந்தக் கப்பலோட்டிகள் தங்களுடைய பொய்த் தெய்வங்களுக்கு அல்ல, ‘யெகோவாவுக்கே மிகவும் பயந்து’ பலி செலுத்தினார்கள்.—யோனா 1:15, 16.
25 இதைவிடப் பெரிய ஆசீர்வாதம் வெகு காலத்திற்குப்பின் வந்தது. பெரிய மீனின் வயிற்றில் யோனா இருந்த நாட்களை தாம் பிரேதக்குழியில் இருக்கப்போகும் நாட்களோடு இயேசு ஒப்பிட்டுப் பேசினார். (மத்தேயு 12:38-40-ஐ வாசியுங்கள்.) பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் சமயத்தில் யோனா இதைப் பற்றிக் கேள்விப்படும்போது எவ்வளவு பூரித்துப்போவார்! (யோவா. 5:28, 29) உங்களையும் யெகோவா ஆசீர்வதிக்க விரும்புகிறார். யோனாவைப் போல, உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, கீழ்ப்படிதலையும் தன்னலமற்ற மனப்பான்மையையும் காட்டுவீர்களா?
a யோனா கலிலேயாவிலுள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது; ஏனென்றால், இயேசுவைக் குறித்து பரிசேயர் பேசியபோது, “கலிலேயாவிலிருந்து எந்தத் தீர்க்கதரிசியும் தோன்ற மாட்டார் என்பதை வேதவசனங்களில் ஆராய்ந்து பாரும்” என்று ஆணவத்துடன் சொன்னார்கள். (யோவா. 7:52) இந்தச் சாதாரண கலிலேயாவிலிருந்து இதுவரை எந்தத் தீர்க்கதரிசியும் வரவில்லை... இனியும் வரப்போவதில்லை... என பரிசேயர் பொதுப்படையாகச் சொன்னதாக அநேக மொழிபெயர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். அப்படியென்றால், அந்தப் பரிசேயர் சரித்திரத்தையும் தீர்க்கதரிசனத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.—ஏசா. 9:1, 2.
b யோனா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார் என்பதை வலியுறுத்துவதற்கு, அவர் குறட்டைவிட்டதாகக்கூட செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு சொல்கிறது. ஆனால், யோனா கவலையில்லாமல் தூங்கியதாக நாம் முடிவு செய்துவிடக் கூடாது; மனச்சோர்வில் துவண்டுபோனவர்கள் சிலசமயத்தில் தங்களையே அறியாமல் தூங்கிவிடுவார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். கெத்சமனே தோட்டத்தில் இயேசு கடும் துயரத்திலிருந்த சமயத்தில் பேதுருவும் யாக்கோபும் யோவானும் ‘துயரத்தினால் சோர்ந்துபோய்த் தூங்கிக்கொண்டிருந்தார்கள்’ என்பது நம் நினைவுக்கு வரலாம்.—லூக். 22:45.
c ‘மீன்’ என்பதற்கான எபிரெய வார்த்தை, “கடல் மிருகம்” அல்லது “ராட்சத மீன்” என கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டது. எத்தகைய கடல் மிருகம் யோனாவை விழுங்கியது என்பது திட்டவட்டமாய்த் தெரியாவிட்டாலும் முழு மனிதனையே விழுங்கக்கூடிய பெரிய சுறா மீன்கள் மத்தியதரைக் கடலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதைவிடவும் பெரிய சுறா மீன்கள் வேறு இடங்களில் இருக்கின்றன; திமிங்கல வகை சுறா மீன் 45 அடி அல்லது அதைவிடவும் நீண்டதாக இருக்கலாம்!